Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமலே (மானிப்பாய் இந்துக் கல்லூரி)

Featured Replies

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமலே…. (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு மலருக்கு எழுதியது.)

பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செவ்வரத்தை தடியும்;  பாகம் 1/6

11914574_1653771098172840_44416938710741

11899894_1653771128172837_85489644691319
அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
பௌதிக வகுப்பு.
பூபாலசிங்கம் ஆசிரியர் நடாத்திக் கொண்டிருந்தார்.
அங்கு ஏற்கனவே இன்னோர் பூபாலசிங்க மாஸ்டர் இருந்ததனால் இவரை பிசிக்ஸ் பூபாலசிங்கம் என அழைப்பது வழக்கம்.
வீட்டு வேலைகள் செய்யாத மாணவர்களை முழங்காலில் நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளில் அடிப்பதற்காக என்னை செவ்வரத்தை தடி பிடிங்கி வர அனுப்பினார்.
அவரது தமிழும் கொஞ்சம் செந்தமிழாய் இருக்கும்.
மற்ற ஆசிரியர்கள் ”ஜீவா போய் ஒரு தடி எடுத்துக் கொண்டு வா. இவங்களை உரிக்க வேண்டும்” என்று சொல்வதை இவரோ, ”ஜீவகுமாரன் இவர்களை தண்டிப்பதற்காக ஒரு தடி எடுத்து வாரும்” என்பார் – அந்த வகையில் தான் அவரது தமிழ் உச்சரிப்பு இருக்கும்.
பின் வளவில் வரிசையாக நின்ற செவ்வரத்தை மரம் ஒன்றில் இருந்து ஓர் ஆள் உயர தடியைப் பிடுங்கி அதன் கிளைகள்… இலைகளை அகற்றிய பொழுது வழமையான எனது குறும்புத்தனம் எனக்குள் விழித்துக் கொண்டது.
என்னையும விட உயரமான அந்த நீண்ட செவ்வரத்தை தடியின் நுனியில் இருந்த மூன்று செவ்வரத்தை பூக்களை மட்டும் விட்டு விட்டு மிகுதி அனைத்தையும் உருவி விட்டு அந்த தடியை சுவாமிக்கு ஆலவட்டம் பிடிப்பது போல பிடித்துக் கொண்டு வகுப்பினுள் கொண்டு வந்த பொழுது அனைத்து மாணவர்களும் ’கொல்’ எனச் சிரித்தார்கள்.
பூபாலசிங்க மாஸ்டருக்கு முகம் சிவந்தது.
அந்த தடியை வாங்கி அது தும்பு தும்பாக. . .பூக்கள் எல்லாம ; சிதறிப் போக, அவர் பௌதீகத்தில் கற்பிக்கும் தன்வெப்பம்… மறைவெப்பம் அனைத்தையும் என் முதுகில் விளாசித் தள்ளினார்.
முழங்காலில் நின்றிருந்த மாணவர்கள் அன்று தப்பித்தார்கள்.
அதே பூபாலசிங்கம் ஆசிரியர்தான் எனக்கு பௌதிகத்தில் திறமைச் சித்தி கிடைக்க காரணமாய் இருந்தவர் என்பதை என் மனம் இன்றும் நன்றியுடன் எண்ணிக் கொள்ளும்.

11916086_1653771301506153_52085434900239

11896024_1653771304839486_25555796922893


(அடுத்த 5 பாகங்களையும் அடுத்த 5 நாட்களில் ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கின்றேன்)

1010533_1440968102786475_2129107340_n.jp FB  Jeeva Kumaran

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமல்லே…. பாகம் 2/6

அப்புலிங்க மாஸ்டரும் 3 போஸ்க்காட்டுகளும்.

11870749_1654034858146464_37206830397643
கணித ஆசிரியர் அப்புலிங்க மாஸ்டரின் கதைகளைப்பற்றி இந்த மலர் முழுக்க எழுதலாம்.
தலையில் எண்ணை வைக்காமல் பறட்டைத் தலையுடன் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு வேம்பெண்ணை, இலுப்பெண்ணை, ஆமெனக்கெண்ணை என ஒரு எண்ணைக் கலவையை நடுத்தலையில் ஊற்றி தேய்ப்பதன் மூலம் மானிப்பாய் கோயில் பற்றில் இருந்த அனைத்து தாய்மாரின் நல்ல அபிப்பிராயத்தை பெற்றிருந்தவர்.
9ம், 10ம் வகுப்புமாணவர்களுக்கு தூய கணிதமும், பிரயோக கணிதமும் கற்பிப்பது வழமை.
அவரது மாணாக்கர்களாய் வரும் பொழுது அனைத்து மாணவர்களும் ஆளுக்கு 3 தபால் அட்டைகள் வேண்டிக் கொடுக்க வேண்டும். மாணவரின் ஒழுக்கம், நன்மை தீமைகள் என்பன அதன் மூலம் வீட்டுக்கு தெரியப்படுத்தப்படும்.
அவ்வாறே அவராக நடாத்தும் பரீட்சைத் தாள்களுக்கு 25 சதம் கொடுக்க வேண்டும்.
9ம், 10ம் வகுப்பில் தூய கணிதத்தில் திறமையான புள்ளிகள ; எடுத்திருந்தாலும் 10ம் வகுப்பில் முதல் தடவையாக (பங்குனி மாதத்தில்) எனக்கு பிரயோக கணிதத்தில் (Appilied Maths) 18 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது.
அப்புலிங்கமாஸ்டர் எனது விடைத்தாளையே வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதனை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.
அடுத்த நாள் வகுப்புத் தொடங்கியது.
நான் கையை உயர்த்தினேன்.
“என்ன மகனே”
“ஒரு கேள்வி கேட்கலாமா”
“சொல்லு மகனே”
“சேர். . . சோதினைப் பேப்பருக்கு காசு தந்தது நான் தானே”
“ஆம்”
“அப்படியாயின் திருத்திய பேப்பரை என்னிடம் தானே தந்திருகக் வேண்டும்”
சிறிது நேரம் யோசித்தார்.
“தவறுதான். மன்னித்துக் கொள்”
அந்தளவில் சம்பாஷணை முடிந்து வகுப்புத் தொடங்கியிருந்து.
அடுத்த நாள் வீட்டுக்கு ஒரு தபால் அட்டை வந்திருந்தது.
அப்புலிங்க மாஸ்டரே எனது பெற்றாருக்கு போட்டிருந்தார்.
“உங்கள் மகனுக்கும் எனக்கும் இவ்வாறு ஒரு சம்பாஷணை நடந்தது. எனவே தயது செய்து அந்தப் பேப்பரை அவரிடம் கொடுத்து விடுங்கள்” என்று.
மிகுதியை வெள்ளித் திரையில் பாருங்கள் கதைதான் - வீட்டில்.
அடுத்த நாள் அவர் என்னிடம் கேட்டார், ”மகனே… உனது பேப்பர் கிடைத்ததா என்று”
”சேர் பேப்பரும் கிடைத்தது… கொத்து றொட்டியும் கிடைத்தது” என்று பதில் சொன்னேன்.
இந்த சம்பவத்தின் எதிரொலிதான் என்னை மார்கழி மாதச் சோதனையில் 78 புள்ளிகள் பெற வைத்தது.
பி.கு.: சென்ற வருடம் அவர் காலமாகிய பொழுது இந்த பதிவு அவரின் அந்தியெட்டி மலரில் இடம் பெற்றதுடன் எனது கண்ணீர் அஞ்சலியையும் அந்த ஆசானின் காலடிக்கு சமர்ப்பித்து இருந்தேன்.
"நீ போட்டுக் காட்டிய 
X கோடுகளும் Y கோடுகளும் தான்
என் கணனி முன் தினம் தினமும் -
டென்மார்க்கின் நீள அகலங்களை
அளந்து கொண்டு இருக்கின்றேன்!
நிறுவ வேண்டியவற்றை நிறுவிவிட்டு 
நீ போய் விட்டாய்!

11896124_1654034684813148_43504302384447

11889425_1654034981479785_34395402359493

1010533_1440968102786475_2129107340_n.jp FB  Jeeva Kumaran

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமல்லே…. பாகம் 3/6

கந்தையா ஆசிரியரும் கனகம்மா வீட்டுச் சேவல் கோழியும்

11866495_1654316001451683_16470150148244

11892096_1654315958118354_68907442752318

 

வாகீசர் மண்டபத்துக்கும் அதிபரின் அலுவலகத்துக்கும் இடையில் அமைந்திருந்த அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு உயரமான மேசையும் கதிரையும் இருப்பதை உங்களில் அதிகம் பேர் ஞாபகம் வைத்து இருக்கலாம்.
அதேவேளை தமிழ், சைவசமயம் கற்பிக்கும் கந்தையா ஆசிரியரையும் யாரும் மறக்க முடியாது.
யாழ் மாகாணத்திலேயே சிறந்த அறிவாளி.
இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பப்படும் சைவ நற்சிந்தனையில் அவரின் உரைகளைக் கேட்க முடியும்.
ஆனால் அவரின் முதுமைத் தோற்றம் மாணவர்களுக்கு கொஞ்சம் இளக்காரம்.
ஆதலால் மாணவரின் சின்ன சின்ன சேட்டைகளுக்கு அவர் ஆளாவதுண்டு.
அவ்வாறே ஒரு நாள் பாடசாலை தொடங்க முதல் காலையில் வகுப்புக்கு வந்த பொழுது சங்கரப்பிள்ளை வீதியில் வசித்து வந்த கனகம்மா வீட்டுச் சேவல் கோழி எங்கள் வகுப்புக்குள் வழி தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டது.
நாங்கள் நாலைந்து பேராய் சேர்ந்து பிடித்து விட்டோம். அடுத்து என்ன செய்யலாம் எனப் பல விதமான யோசனைகள்.
சேவலை முடித்து விட்டு இரவு பாணும் வேண்டி சாப்பிடுவோமா. . .றவுக்கைச் சந்தையில் விற்றுவிட்டு களவாக படத்துக் போவேமா என்றது வரை பல பிரேணைகள் முன்வைக்கப்பட்டு பயம் காரணமாக அவை கை விடப்பட்டன.
இறுதியாக. . . முதல் பாடம் கந்தையா மாஸ்டரின் பாடம் எனப் தால் அந்தச் சேவலை அந்த உயரமான மேசையுள் வைத்து மூடி விடுவோம் என முடிவெடுத்தோம்.
செயல் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மணி அடித்தது.
வகுப்புககுள் ஆசிரியர் வந்தார்.
எல்லோரும் வலு அடக்கமாகமாகவும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதைபதப்பிலும் அமைதியாக இருந்தோம் – ஆளை ஆள் பார்த்து மெதுவாக சிரித்தபடி. கந்தையா ஆசிரியர் அந்த உயரமான கதிரையில் அமர்ந்து கொண்டு,
“மொனிற்றர் இடாப்பு எங்கே” என்றார்.
“மேசைக்குள் தான் இருக்கு Sir”
கந்தையா மாஸ்டர் மேசையைத் திறக்க அடைத்து வைந்திருந்த சேவல் எழுந்து பாய்ந்து போய் வகுப்பின் அரைச்சுவரில் நின்று கூவத் தொடங்கியது.
எல்லோரும் ‘கொல்’ எனச் சிரிக்க அவரின் முகத்தில் தோன்றிய அவமான உணர்வு இன்றும் என் மனதில் படிந்து என்னைத் தண்டித்துக் கொண்டிருக்கிறது.
இதை அவர் அதிபருக்கு றிப்போட் செய்திருந்தால் எங்களில் நாலு பேர் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்போம்.
ஆனால் அதை அவர் செய்யவில்லை.
அந்தப் பொறுமையும் மன்னிக்கும் குணமும் தான் கந்தையா மாஸ்டர்.
அனைத்தையும் மறந்து... இறுதிப் பொதுப்பரீட்சை நெருங்கி வரும் பொழுது.. மாலையில் பஸ்சுக்கு காத்திருக்கும் பொழுது… சென்ற ஆண்டு இந்த இடத்தில் கேள்விகள் வந்தது… அதற்கு முதல் இந்த இடத்தில் கேள்விகள் வந்தது.. எனவே இந்த ஆண்டு இந்த இடத்தில் இதுதான் வரும் என கணிப்பிட்டு சொல்லும் அவரின் கணிப்பு தப்பாது.
அந்த உன்னத ஆசான் இன்று இல்லாவிட்டாலும்,,, அவர் தந்த தமிழ்தான் நான் வெளியிட்ட நூல்களும் உங்களுடன் இப்பொழுது அளவளவாகிக் கொண்டிருக்கும் என் எழுத்துகளும்.
அந்த ஆசிரியர் எங்களில் வைத்திருந்த அன்பை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை.
NO CHANCE!
அவரை நினைத்தால் எப்போதும் கண்கள் கலங்கும்.
இதனை பதிவேற்றும் இந்த தருணத்தில் அது நடந்து கொண்டிருக்கிறது.
Sir,
நாங்கள் உங்களுக்கு நல்ல மாணவர்கள் இல்லை! - ஆனால்
நீங்கள் எங்களுக்கு மிக நல்ல ஆசிரியர்.

11885082_1654315954785021_21771661252439

11895976_1654315998118350_47023194119853

1010533_1440968102786475_2129107340_n.jp FB  Jeeva Kumaran

  • தொடங்கியவர்

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமல்லே…. பாகம் 4/6

அதிபர் பேராயிரவரும் கண்ணப்ப நாயனாரும்;

11935007_1654634594753157_22552608240922


அதிபர் பேராயிரவர் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன பல விடயங்களுக்கு இப்பொழுது தான்அர்த்தம் புரிகிறது.
அப்பொழுது அவர் சொன்ன பல விடயங்களுக்கு விளக்கத்தை புரிந்து கொள்ளாத காரணத்தாலோ என்னவோ அவர் பல பரிகசிப்புக்குள்ளானவர். அதனை யாவரும் அறிவார். அதற்காக அவரைப் பரிகசித்தவர்கள் நிச்சயம் மனம் வருந்த வேண்டும்.

இது அவரின் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று.

அப்பொழுது சரஸ்வதி பூஜை நடக்கும் பொழுது வில்லுப்பாட்டுகள் நடைபெறும்.
அந்த வில்லுப்பாட்டினுள் சில ஆசிரியர்களின்
கதைகளையும் இழுத்துவிடுவதுண்டு – இன்றும் சில முகநூல் நண்பர்களும் இலக்கிய வாதிகளும் தம் படைப்பகளில் மற்றவர்களின்; சொந்தப் பிரச்சனைகளை இழுத்து விடுவது போல!
இது திரு பேராயிரவருக்குத் தெரியும்.
இதனால் வில்லுப்பாட்டின் பிரதி அதிபருக்கு கொடுத்து அது அங்கீகரிக்கப்பட்ட பின்புதான் சரஸ்வதி பூஜையில் பாடமுடியும் என விதிமுறை கொண்டு வரப்பட்டது.
இதற்கு சில வகுப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமில்லாது தாம் சரஸ்வதிபூஜையை பகிஷ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்து விட்டார்கள்.
அதிபரோ பகிஷ்கரிப்பதற்கு மாணவர்களுக்கு உரிமை உண்டு .
.ரஷ்யா, சீனாவிலும் மாணவர்கள் போராட்டம் நடாத்தி பல விடயங்களைச் சாதித்தார்கள். . . ஆனால் கடவுளுக்கு கட்டாயம் படைக்கும் பொருட்களை படைக்க வேண்டும். . . சரஸ்வதிபூஜையை பகிஸ்கரியுங்கள். . .ஆனால் சரஸ்வதியை பகிஸ்கரியாதீர்கள் எனச் சொல்லி விட்டு அவர் அதனை அத்துடன் விட்டு விட்டார்.
ஆனால் மாணவர்கள் விடவில்லை.
சம்பவதினம் வந்தது.
வாகீசர் மண்டபம் கூடியிருந்தது.
மேடையில் அதிபர், ஐயர், ஐயருக்கு உதவியாக பாடசாலையில் பணியாற்றும் பாலா என்ற ஊழியர்.
ஐயர் பூஜை செய்து கொண்டே படையலுக்கு கொண்டுவரப்பட்டிருந்த தட்டங்களுக்கு தண்ணீர் தெளிக்கத் தொடங்க பாலா ஒவ்வோர் தட்டங்களில் இருந்த வாழை இலையை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.
அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது.
குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் படையல் தட்டில் பாடசாலைக்கு முன்னால் சாப்பாட்டுக் கடை நடாத்தி வரும் கந்தையா கடையில் இருந்து வாங்கப்பட்டிருந்த பெரிய மரவள்ளிக் கிழங்கு போண்டா, வெஸ்லி தியேட்டருக்கு பக்கத்து சாப்பாட்டுப் கடையில் இருந்து வாங்கப்பட்டிருந்த மட்டின் கொத்து படைக்கப்பட்டிருந்தது. பாலா அந்த தட்டை உடனேயே அகற்றி விட்டார்.
பூஜை முடிய சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிபரின் அறைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
முதலில் ஆளுக்கு 2 பிரம்படி விழுந்தது.
”அடிக்க வேண்டாம் சேர்” என ஒரு மாணவன் சொன்ன பொழுது அவர் சொன்னது ”நான் உங்களை அடிக்காவிட்டால் உங்கள் பெற்றார் வந்து எனககு அடிப்பார்கள். இப்போ விழுவது ஆளுக்கு 2. ஆனால் நான் வேண்டுவது என்றால் 2 தர ஐந்து 10 வாங்க வேண்டும்” என்றார்.
பின்பு கதிரையில் போயிருந்து கேட்டார்.
“எதுக்காக இப்படிச் செய்தனீர்கள்”
”கண்ணப்ப நாயனாரே இறைச்சி படைக்கும் பொழுது நாங்கள் செயத் து என்ன பிழை” என்று கேட்டார்கள்.
”சரி. . .நாளைக்கு அப்பா-அம்மாமாரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். . கதைப்போம்” என மேசையில் இருந்து எழுந்தார்.
”ஏன் சேர் . . .இதுக்கை எங்கடை அப்பா அம்மாவை இழுக்கிறியள்”
”உங்களுக்கு கல்யாணம் நடக்கும் பொழுது உங்களுக்கு வரும் பெண்களை கன்னிகாதானம் செய்து முதலில் உங்களிடம் தர நீங்கள் ஐயரின் முன்னிலையில் உங்கள் பெற்றோருரின் கையில் தானே கொடுக்கின்றீர்கள். அப்பிடித்தான் ஐயரும் அர்ச்சனைத் தட்டையும் காளாத்தியையும் உங்கள் பெ ற் றாரிடம் கொடுக்க விரும்புகிறார்”

அடிக்கு அடி என்பது இதுதான் – Every action has a reaction.
பாடசாலையில் கணித மாணவர்களுக்கும் உயிரியல் மாணவர்களுக்கும் நடந்த ஒரு பிரச்சனை கல்விக் கந்தோர் வரை கொண்டு செல்லப்பட்டிருந்தது. அதில் கையெழுத்திட்ட 43 மாணவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் பாடசாலையை விட்டு விலகும் போது அதிபரின் கையெழுத்துடன் தரும் நற்சாட்சிப் பத்திரத்தில் என் புகழ் பாடியிருந்தார்.
" ஜீவகுமாரன் படித்த வகுப்புகளில் எல்லாம் அவர் தான் என்ஜின் பெட்டி" என்ற வாசகம் இருந்தது.
கையெழுத்து வைக்கமுன்பு கேட்டார் -
“வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா என்று”
அவர் அதிபர் என்பதனைத் தாண்டி முழுமையான நல்ல மனிதர் என்பதனை நான் புரிந்த நாள் அது!

பிற்குறிப்பு: கம்யூனிஸ்ட் தத்துவங்களில் பெரிதும் கவரப்பட்ட அவர் தனது பென்சன் காலத்திற்கு பின்பு கனடாவில் வாழ்ந்த பொழுது அரச உதவி பெறாமல் செக்கியூரிட்டி ஒவ்வீசராக நித்திரை மு ழித்து உழைத்து அதில் வாழ்ந்தார் என்று அறிந்தேன்.
சிலர் அரசியல் அரசியல் கொள்கையை வைத்து பணம் பண்ணும் உலகில்… சிவப்பு நிறத்தை தன் தோள்மீது கொடியாகப் போர்க்காமல் நியமாக தன் கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்திருக்கின்றார் எங்கள் அதிபர்.
மானிப்பாய் இந்து இருக்கும் வரை அவரின் புகழ் இருக்கும்!

11921656_1654634734753143_75095939020342

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமல்லே…. பாகம் 5/6

சுந்தரலிங்கம் மாஸ்டரும் தாவரவியலில் மதுவமும் உயர்தரம் – 2ம் ஆண்டு.

11951978_1655020574714559_54778482218195
சுந்தரலிங்கம் மாஸ்டர் தாவரவியல் பாடம் எடுப்பதும், குறிப்புச் சொல்வதும் ஒரு கலைதான். “அவ்வாறு பார்க்கும் பொழுது”. . . “மேல் எழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது”. . . “எனினும்”. . .என முன்னுக்குப் பின்னாக இந்த மூன்று வார்த்தைகளும் நோட்ஸ் கொப்பியையின் அரைவாசியை நிறைத்திருக்கும்.
சில வேளைகளில் அவர் ஆம் என்கிறா அல்லது இல்லை என்கிறாரா என்ற சந்தேகங்கள் வந்தாலும் வகுப்பு கடைசி மணி அடிக்கும் பொழுது அவர் சொல்ல வந்தது புரிந்து விடும்.
அவர்தான் எமக்கு தாவரவியல் ஆய்வுகூட ஆசிரியரும் ஆவார்.
அடுத்த நாள் மதுவத்தை நாம் நுணுக்குக் காட்டியினூடு பார்க்க வேண்டும்.
மதுவம் எங்கே இருக்கும்?
கள்ளில் இருக்கும்.
சிங்கம் என அனைவராலும் அறியப்பட்ட சிங்கராஜா எனும் ஆய்வுகூடப் பொறுப்பாளர் கள்ளை வேண்டி வர வேண்டும் – அல்லது யாரோ ஒருவர் கள்ளுக் கொண்டு வர வேண்டும்.
சிறிய தேக்கரண்டியளவு கள்ளு வகுப்பு முழுவதற்கும் போதுமானதால் ஏன் வீணாக ஒரு போத்தல் கள்ளை வேண்டுவான் என சிங்கம் அபிப்பிராயம் தெரிவித்தார்.
“சேர். . அப்பாக்கு ஒவ்வொரு நாளும் கள்ளு வாறது. . .நான் கொண்டு வருகிறேன்” என நவாலியில் இருந்து வரும் என் சக வகுப்புத் தோழன் சொல்ல அது ஏற்கப்பட்டது.
அடுத்த நாள் மதிய நேரம் – ஆய்வுகூடத்தில் கூடியிருந்தோம் – சுந்தரலிங்கம் மாஸ்டர் வகுப்பிற்கு பிரசன்னமானார்.
“கள்ளுக் கொண்டு வந்தியா” என மாஸ்டர் கேட்க, “ஆம்” என்றவாறு மேசையில் தொங்கிக் கொண்டிருந்த தனது தோள்ப்பையில் இருந்து சுமார் 5 லீற்றர் கலனை அம்மாணவர் தூக்கி வைக்க வகுப்பு “கொல்”லெனச் சிரித்தது.
மாணவர்களின் சிரிப்புக்கு மேலாக மாணவிகளின் சிரிப்பு.
அவனுக்கு முகம் சிவந்து விட்டது.
பாவம்.
“ஒரு மை போத்தலுள் கொண்டு வந்திருந்தால் போதும். . . இனறு; உனக்கு வீட்டில் உரிவிழப்போகிறது” என்றவாறே சுந்தரலிங்கம் மாஸ்டர் சின்னக் குடுவை ஒன்றினுள் அன்றைய தேவைக்கு வேண்டியளவை எடுத்துக்கொண்டு மிகுதியை பின்னால் வைக்கச் சொல்லி விட்டு பாடத்தை ஆரம்பித்தார்.
இடைவேளைக்குரிய மணி அடித்தது.
இடைவேளை தொடங்கும் பொழுது நாம் மதுவங்களை நுணுக்குகாட்டியூடு பார்க்க வேண்டும்.
இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்ப இருக்கும் போது வகுப்புக்குள் அவசர அவசரமாக வந்த இரு மாணவிகள் கைகள் பட்டு மேசையில் இருந்த சின்னக் குடுவை – அதுதான் சுந்தரலிங்கம் மாஸ்டர் எடுத்து வைத்திருந்த குடுவை நிலத்தில் விழுந்து உடைந்து விட்டது.
கள்ளும் சிதறி விட்டது.
“கள்ளைப் பார்க்கவே வெறிக்குதோ” என என்றவாறே “சிங்கம். . . பின்னாலை எடுத்து வைத்ததை எடுத்து வா” என்றார்.
“சேர். . .அதைக் காணேல்லை” – பின்னால் இருந்து சிங்கத்தின் குரல் வந்தது.
அனைவரும் ஆளை ஆள் பார்த்தார்கள்.
என்னைச் சுற்றியிருந்த சில மாணவர்களின் கண்கள் மொய்த்துக் கொண்டு இருந்தது.
சுந்தரலிங்கம் மாஸ்டருக்குப் புரிந்து விட்டது.
உதட்டினிடையே சிரித்துக் கொண்டு “வெயிலுக்கு நல்லாய் புளிச்சிருக்குமே” என்றவாறு புத்தகத்தின் அடுத்து பக்கத்தை புரட்டினார்.
பல வருடங்களுக்கு பிறகு நாவாலி தேவாலய குண்டு வீச்சில்
அந்த மாணவன் உயிரிழந்தார் என்ற ஒரு செய்தி வந்தது.
அன்று முழுக்க சுந்தரலிங்கம் ஆசிரியரையும்… அவனையும் வகுப்பில் இருந்த அத்தனை மாணவ மாணவிகளையும்.. வகுப்புக்கு முன்னால் நிற்கும் பெரிய தேமா மரங்களையும்… சவுக்கு மரங்களையும்.. தண்ணீர் குடிக்கும் பைப்பையும் நினைத்துக் கொண்டே இருந்தேன்.

11951268_1655020068047943_70187892518017

11903767_1655020538047896_37681782688030

1010533_1440968102786475_2129107340_n.jp FB  Jeeva Kumaran

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குழப்படிகளும், சிரிப்பை வரவழைத்தது. பகிர்விற்கு நன்றி ஆதவன். :)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமல்லே….பாகம் 6/6… ,இறுதி அத்தியாயம்.

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு நினைவுமலருக்கு எழுதியது.
தனபாலசிங்கமாஸ்ட்டரின் பௌதிக ஆய்வுவுடமும் ஒரு சின்ன ‘A’ ஜோக்கும் 

11949438_1655280294688587_92045334319724


நோட்ஸ் வழங்காமல் தமது கற்பித்து திறமையால் மாணவரையே நோட்ஸ் எடுக்கும் கலையை கற்பித்த பெருமை சாரி மாஸ்டரையும் தனபாலசிங்க மாஸ்டரையும் சேரும்.
உயர்தரக் கல்வி கற்கும் பொழுது பௌதிக ஆய்வுகூடத்தில் தொலைநோக்கி கருவி கொண்டு பல
அளவீடுகள் செய்வப்படுவதுண்டு.
குவியத்தூரம், முறிவுக்குணகம். . .இத்தியாதி. . .இத்தியாதி. . .
இந்தத் தொலைநோக்கி யை திருப்பி மறுபக்கத்தால் பொருட்களைப் பார்க்கும் பொழுது குவியத்தூரத்திற்கு அப்பால்பட்ட பொருட்கள் தலை கீழாய் தெரியும்.
அதேவேளை மானிப்பாய் மகளிர் கல்லூரி எமது பாடசாலைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முதலே விட்டு விடும் – மாணவர்கள் மாணவிகளைத் தொல்லை செய்யாது இருப்பதற்காக.
கடைசிப் பாடமாய் எமக்கு ஆய்வுகூடத்தில் கற்பித்தல் நடைபெறும் பொழுது தொலைநோக்கியால் வெளியால் பார்த்தால் மைதானத்திற்கு வெளியே உள்ள ஒழுங்கையால் பெண் பிள்ளைகள் நடந்து போவது வடிவாகத் தெரியும். ஆனால் தலைகீழாக நடந்து கொண்டு போவார்கள்.
ஒரு நாள் எனக்குப் பக்கத்தில் நின்ற மாணவன், “மச்சான். . . பொம்பிளைப் பிள்ளையள் தலைகீழாய்

நடந்து போறது சரி. . . ஆனால் அவர்களின் யூனிபோர்ம்கள ; கவிழுதில்லையே” என்றான்.
நான் பலமாய்ச் சிரித்து விட்டேன்.
பின்னால் தனபாலசிங்க மாஸ்டர்.
அன்றிலிருந்து நாமிருவரும் பௌதிக கூடத்தின் மற்றப் பக்கத்திற்கு மாற்றப்பட்டோம்.
அட்வான்ஸ் லெவல் முடியும் வரை தோட்டத்தில் நின்ற வாழைமரங்களைத் தான் தலைகீழாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.
மானி. இந்து பற்றிய இந்த ஆட்டோக்கிராவ் பதிவுகள் இன்றுடன் முடிவடைகின்றது.
பல பழைய மாணவ மாணவிகள் வெவ்வேறு ஆசியைகள்…. ஆசிரியர்களைப் பற்றி எழுதக் கேட்டிருந்தார்கள். மிக்க நன்றிகள்.

திரு. வெங்கடாச்சாரி எனப் பெயர் கொண்ட ’சாரி’ மாஸ்டர்…
ஆட்டுச் சுப்பர் - மாட்டுச் சுப்பர் என அழைக்கப்பட்ட 2 சுப்பிரமணிய ஆசிரியர்கள்…
அடிக்கு பெயர் போன சிவக்கொழுந்து மாஸ்டர்….
பத்துமணி இடைவேளைக்கு பக்கத்தில் உள்ள தன் வீட்டுக்கு சோறு வடித்த கஞ்சி குடிக்கச் செல்லும் ஒரு ஆசிரியர் ("பால்றொட்டியர்" என்ற பட்டப் பெயர் மட்டும் தான் ஞாபகம் இருக்கின்றது)
மாணவர்களின் சாப்பாட்டு பாசலை காகம் கொத்தி விட்டால் தனது பணத்தில் உணவு வேண்டி தரும் பாலேந்திரா மாஸ்டர்…
அவரின் கண்டிப்புக்காக ’ காளி’ என அவ்வாறு மாணவரால் அழைக்கப்பட்ட நூலக ஆசிரியை Miss. சுப்பையாபிள்ளை…
மற்றும் ஆளைள. மண்டலசேகரம்… ஆளைள. ஞானசேகரம்… ஆளைள. பொன்னம்பலம்… பற்றி எவ்வளவோ எழுதலாம்.
மானி இந்துவின் என்ன சாபமோ… அதிக பெண் ஆசிரியர்கள் இறுதிவரை திருமணமாகாத முதிர் கன்னிகனாகவே வாழ்ந்தார்கள்.
எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமாக அவர்களின் நிளைவுகளை ஆங்காங்கே பதிவு செய்வேன்.

11866324_1655280721355211_39338606045687

11891150_1655280774688539_10253834134854

1010533_1440968102786475_2129107340_n.jp FB  Jeeva Kumaran

  • கருத்துக்கள உறவுகள்

"மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்"  கம்பராமாயணம்...!

பகிர்வுக்கு நன்றி ஆதவன்...., அசத்தலான நினைவலைகள்...!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.