Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசிப்புக்கான ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்புக்கான ஆலோசனைகள்

ஆர். அபிலாஷ்
 
அசோக் ராஜ் எனும் நண்பர் வாசிப்பு பற்றி ஒரு முக்கியமான கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான என் பதிலை கீழே பார்க்கலாம்.
 
”பாஸ் வணக்கம் .எனக்கு சில மாதங்களாக பெரிய குழப்பம் ஒன்று எற்பட்டுக் கொண்டே இருக்கிறது.அது புத்தக வாசிப்பு பற்றி.  என்னுடைய குழப்பத்திற்கான காரணத்தைவெகுநாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால்  பிடிபடவில்லை. நான்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போதுதான் புத்தகம்வாசிக்கத் தொடங்கினேன். படித்த முதல் புத்தகம் பா.ராகவன் எழுதிய“ஹிட்லர்”. அது எனக்குள் ஏதோ மாயாஜாலம் செய்தது போல் இருந்தது.பா.ராகவனின் எழுத்து நடை மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. அதுபுத்தகத்தினுடன் என்னை கட்டிவிட்டது போல் செய்தது. தொடர்ந்துபா.ராகவனின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அடுத்து பல எழுத்தாளர்களின் புத்தகங்களைகண்டுகொண்டு வாசிக்கத் தொடங்கினேன். ஜெயமோகன் ,அசோகமித்ரன்,எஸ்.ராமகிருஷ்ணன் என விரும்பி வாசிப்பேன். ஆனால் இப்போது சிலமாதங்களாக புத்தகங்கள் படிக்கும்போது எழுத்துநடையின் சுவாரஸ்யத்தைஉணர முடியவில்லை.

வேகமாக வாசிக்கும்போது புத்தகத்தில் உள்ள செய்தியை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. முன்பு போல புத்தகம் வாசிக்கும் போது சுவையாகஇருக்க மாட்டேன் என்கிறது. இது எனக்கு மட்டும் ஏற்பட்டு இருக்கிற கோளாறா? பொதுவாகஎல்லா வாசகர்களுக்கும் இருக்கிற பிரச்சனையா ? எதனால் இப்படி
ஆகிறது ? இந்த நிலை மாறுமா? மாற்றுவது எப்படி? மிகவும் குழம்பிஇருக்கிறேன். உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்.
 
-          அசோக் ராஜ்”
 
 
வணக்கம் அசோக் ராஜ்,
 
எனக்கும் இது போல் நேர்ந்ததுண்டு. அதனால் உங்கள் மனநிலை எனக்கு புரிகிறது. சில எழுத்தாளர்களுக்கு திடீரென எழுத பிடிக்காமல் போய் விடும். எழுத்துடன் மனதுக்கு ஒத்திசைவு ஏற்படாது. Writer’s block என்பார்கள். ஒவ்வொரு சொல்லும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல் தோன்றும். எதுவுமே நமதில்லை என நினைப்போம். அது ரொம்பவே அதோகதி தான். வாசகனுக்கும் இது போன்ற ஆர்வமின்மை, ஒத்திசைவற்ற நிலை சில நேரம் வரும். இதை reader’s block எனலாம். தானே போய் விடும். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
 
இது ஏன் நேர்கிறது? சில காரணங்களை ஊகிக்கிறேன்.
 
1)   ஏன் வாசிக்கிறோம்? சுகம் கிடைப்பதனால் மட்டும் அல்ல. அது நமக்கு தேவையுள்ளதனாலும் தான். சிலநேரம் நம் மனதுக்கு புத்தகங்கள் தேவையின்றி போகலாம். சில நேரம் ஆண்களுக்கு (பெண்களுக்கு) பெண்களின் (ஆண்களின்) அருகாமையே பிடிக்காமல் போய் விடும். பக்கத்தில் போனாலே எரிச்சல் ஏற்படும். சில நேரம் அவர்கள் அருகிலேயே இருக்க வேண்டும் எனத் தோன்றும். என் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார் “போன வாரம் எல்லாம் உங்கள் மீது கடும் வெறுப்பில் இருந்தேன்”
 
”அப்படியா ஏன்?”
 
“அப்படித் தான். உங்களோடு பேசவே பிடிக்கவில்லை”
 
“எனக்கு அப்படி நீங்கள் நினைப்பதாய் தோன்றவில்லையே?”
 
“உங்களோடு கோபமாய் இருந்ததால் நான் உங்களை அழைக்கவில்லை. அதனால் உங்களுக்கு தெரியாமல் போயிற்று”
 
“அது சரி உங்கள் வெறுப்பை அடைவதற்கு நான் ஒன்றும் தப்பாய் செய்யவில்லையே?”
 
“அது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் உங்கள் மீது அவ்வளவு கோபமாய் இருந்தேன்”
 
 
நான் சிரித்து விட்டேன். இப்போது நான் நினைத்துப் பார்த்து ரசிக்கும் உரையாடல் இது. இந்த மாதிரி மனநிலை பனி போல் தோன்றி மறைந்து விடும். சில நேரம் சிலரது அருகாமை, நினைவு, நிழல் கூட நமக்கு தேவையிருக்காது. பிடிக்காது. அது போல் நம் மனதுக்கு புத்தகங்களும் ஒவ்வாமையாய், பிடிக்காததாய் ஆகலாம்.
 
கடந்த 15 வருடங்களில் ஒரு பக்கம் கூட படிக்காமல் இருந்த நினைவு இல்லை. அதற்காய் நான் எப்போதும் முழு தீவிரத்துடன் படிக்கிறேன் என்றில்லை. நூற்றில் பத்து நாட்களே நான் மார்கழி மாசத்து நாயைப் போல் புத்தகங்களின் பின் திரிவேன். மிச்ச நாட்களெல்லாம் பழக்கத்துக்காய் படிப்பேன். இனி அடுத்த காரணத்துக்கு வருகிறேன்.
 
2)   பழக்கம். தொடர்ந்து தினமும் படித்தால் வாசிப்பு அந்த குறிப்பிட்ட நூல், அதிலுள்ள விசயத்தை கடந்த ஒரு அனுபவமாய் மாறும். வெறுமனே சொற்களை உருப்போடுவதே தம்புராவை மீட்டி ஸ்ருதி சேர்ப்பது போன்ற அனுபவம் தான். நான் கல்லூரியில் படிக்கையில் வாரத்துக்கு ஒரு 500 பக்கம் நாவலை படித்துக் கொண்டிருப்பேன். ஒரு கோடை விடுமுறை ஒன்றின் போது தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” நாவலை இரண்டாம் முறையாய் தினமும் படித்து இரு வாரங்களில் முடித்தேன். காலை எழுந்து சாப்பிடுவது பிறகு வாசிப்பது, யாரிடம் பேசுவதோ டிவி பார்ப்பதோ நாளிதழ் பார்ப்பதோ இல்லை. அப்படி வாசிக்க முடிந்தது. ஆனால் பத்து வருடங்களுக்கு பிறகு என்னால் 200 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. மூடி வைத்து விட்டு அடுத்த நூலுக்கு போய் விடுவேன். முன்பு 10 மணிநேரம் தொடர்ந்து படிப்பது எளிது. இப்போது 2 மணிநேரத்தில் களைத்து போனேன். இது பழக்கம் விட்டுப் போனதால் தான். நாவல் படிப்பது ஜிம்மில் வெயிட் தூக்குவது போல. எடுத்த எடுப்பில் 10 கிலோவே தாங்க முடியாது. ஆனால் போக போக 30 கிலோ கூட பொருட்டாய் இருக்காது. உங்களுக்கு பழக்கம் விட்டு போயிருக்கலாம்.
 
3)   நாம் பெரும்பாலும் தேவையில்லாத புத்தகங்களையே படிக்கிறோம். ஒரு புத்தகம் நம் மனதுக்கு அல்லது வாழ்க்கைக்கு அவசியமான ஒரு பாடத்தை தனக்குள் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை. ஆனால் இந்த பாடங்கள் எல்லாருக்கும் பொருந்தாது. எனக்கு தெளிவு தரும் நூல் உங்களுக்கு குழப்பம் தரலாம். உங்களை மகிழ்ச்சியாக்கும் நூல் என்னை கசப்பில் ஆழ்த்தலாம். எழுத்தின் தரத்தை அடுத்து அதன் மைய சேதி/ விவாதம் தான் நம்மை அதை நோக்கி ஈர்க்கிறது. இப்போது நீங்கள் வாசிக்கும் நூல்கள் உங்களது தனிப்பட்ட தேடலுடன் சம்மந்தப்பட்டதா எனப் பாருங்கள். முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது எனக்கு செரியன் குரியன் என ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் வகுப்பில் நானும் என் நண்பனான பிரகாஷ் பத்ரா எனும் வங்காளியும் அடிக்கடி கேள்வி கேட்டு விவாதத்தில் பங்கு கொள்வோம். நாங்கள் பேசுவதையெல்லாம் பிற மாணவர்கள் மனிதக்குரங்குகள் தமக்குள் சண்டைப் போடுவதை வேடிக்கை பார்ப்பது போல் எங்களை கவனிப்பார்கள். பேராசிரியரின் வீட்டிற்கு சென்றிருந்த போது நான் அவரிடம் ஏன் சகமாணவர்கள் விவாதங்களில் பங்கெடுப்பதில்லை, ஏன் அவர்களுக்கு எங்கள் அளவுக்கு இலக்கிய ஆர்வமில்லை என கேட்டேன். அவர் சொன்னார் “உனக்கும் பத்ராவுக்கு தத்துவத்தில் பிடிப்பு இருக்கிறது. வகுப்பில் நான் அது சார்ந்து பேசும் போது கேள்வி கேட்கிறீர்கள். பிற மாணவர்களுக்கு தத்துவ ஈடுபாடு இல்லை. மற்றபடி உங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை”. இந்த பதில் எனக்கு அப்போது அபத்தமாய் பட்டது. ஆனால் இப்போது புரிகிறது. நீங்கள் தடவியல் சார்ந்த ஒரு நூலை ஒரு வெல்லகட்டியை சப்புவது போல் ரசித்து படிக்கலாம். எனக்கு அதே நூல் அலுப்பாக இருக்கலாம்.
 
தேவை எது என அறிவது முக்கியம். இப்போது நீங்கள் வாசிக்கும் நூல்களை ஒதுக்கி விட்டு உங்களைத் தூண்டும் புது நூல்களை கண்டடையுங்கள். அவை ஏன் ஈர்க்கின்றன என யோசியுங்கள். எந்த துறை சேர்ந்த, எம்மாதிரி மொழியில், பார்வையில், தொனியில் எழுதப்பட்டவை அவை? அம்மாதிரி நூல்களை தொடர்ந்து படியுங்கள்.
 
4)   ஒருவேளை நீங்கள் ஒரே மாதிரியான புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கலாம். பரந்து பட்டு படியுங்கள். ஒன்றோடு ஒன்று சம்மந்தமில்லாத நூல்களை எந்தளவு படிக்கிறீர்களோ அந்தளவு புத்துணர்வோடு இருப்பீர்கள். மாறுபட்டு வாசிக்கும் நண்பர்களை பழக்கம் செய்து கொண்டு அவர்களின் பரிந்துரையை கவனியுங்கள். உதாரணமாய் என் மனைவி தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் முற்றிலும் மாறுபட்டவையாய் எனக்குத் தோன்றும். நான் அம்மாதிரி நூல்களை தேடி அடைய மாட்டேன். ஆனால் அவை எனக்கு பல புது வாசல்களை திறந்துள்ளன. இப்போது பல்கலைக்கழகத்தில் உள்ள என் நண்பர்கள் இது போல் கேள்விப்பட்டிராத எவ்வளவோ நூல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தமிழில் ஒரு பிரச்சனை: சிலர் நாவல் மட்டுமே படிப்பார்கள். சிலர் சிறுகதைகளைத் தாண்டி அக்கறைப்பட மாட்டார்கள். சிலர் செய்திக்கட்டுரைகள் அன்றி வேறெதுவும் சீண்ட மாட்டார்கள். சில ஆய்வாள நண்பர்கள் ஆய்வு நூல்கள் அன்றி வேறு படிக்க மாட்டார்கள். இந்த மாதிரி சாமியார்த்தனம் நல்லதல்ல.
 
5)   உங்களூக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நூலை படியுங்கள். நான் சமீபமாய் ஒரு நூல் படித்தேன். அதை எழுதியவர் எழுத்தாளர் அல்ல. சாமான்ய மனிதர். பெயர் பிராங்கோ. அவர் மொழி ரொம்ப தட்டையாய் சிலநேரம் பிழையாய் இருந்தது. அவரே அதை மின்நூலாய் பிரசுரித்திருந்தார். தலைப்பு Seduction: Getting the Good Girls. இந்த நூலையெல்லாம் படிக்கும் படி உங்களுக்கு யாரும் பரிந்துரைக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு இது ரொம்ப நல்ல நூலாக பட்டது. பெண்கள் பற்றி ஒரு அற்புதமான புரிதலை எனக்குத் தெரிந்தது. அதிலுள்ள பல பரிந்துரைகள் இந்த ஜென்மத்தில் என்னால் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனாலும் எனக்கு அருமையான வாசிப்பு அனுபவத்தை தந்தது. சுத்தமாய் உங்களுக்கு சம்மந்தமே இல்லாத நூல் கூட உங்களுக்கு உவகை அளிக்கலாம்.
 
6)   சிலநேரம் உங்களுக்கு மனம் சஞ்சலமுற்றிருந்தால், பதற்றமும் நெருக்கடியும் அதிகமானால் வாசிப்பு சுகமில்லாமல் போகும். அப்போது உங்கள் மனநிலைக்கு ஏற்ற ஒரு நூலை படியுங்கள். சமீபமாய் நான் ஜுரம் வந்து படுத்திருந்தேன். எனக்கு அப்போது “குற்றமும் தண்டனையும்” வாசிக்கும் ஆசை வந்தது. அந்நாவலில் பிரதான பாத்திரமான ரஸ்கோல்நிக்கோவ் முழுநேரமும் ஜுரத்தில் இருப்பான். ஜுர உச்சத்தில் மனம் குழம்பி உன்மத்தமாய் நடந்து கொள்வான். இது எனக்கு அந்நேரம் படிக்க ஆசுவாசமாய் ஆர்வமூட்டுவதாய் இருந்தது. உங்களுக்கு காதல் சோகை என்றால் இமையத்தின் “எங் கதெ” படியுங்கள். ஷேக்ஸ்பியரின் “ஒத்தெல்லோ”, முராகாமியின் “நார்வேஜிய வனம்” படியுங்கள். நான் கல்லூரியில் படிக்கையில் ஒரு நாவல் பற்றி இவ்வாறு படித்தேன்: “இரண்டு பேரை நாம் ஒரே சமயத்தில் ஒரே போன்ற தீவிரத்துடன் உண்மையுடன் காதலித்தால் என்னவாகும் என்பதை இந்நாவல் பேசுகிறது”. உடனே ஒரு நண்பரிடம் அந்நாவலை தேடி வாசித்தேன். அப்படித் தான் தஸ்தாவஸ்கியின் “பேதை” எனக்கு அறிமுகமானது. சிறந்த புத்தக பட்டியலில் உள்ளதால் ஒரு நூலை நாம் படிக்க தேவையில்லை. நமக்குத் தேவையான ஒன்று அதில் இருக்க வேண்டும்.
 
7)   நான் இடைவெளியின்றி படித்து வருகிறேன். முக்கிய காரணம் நான் எழுதுவது தான். என்னமாதிரி புத்தகங்கள் வருகின்றன, எழுத்தின் போக்கு என்ன என அறியும் தேவை எனக்கு உள்ளது. வாசிப்பதற்கு ஒரு நோக்கம் வேண்டும். சும்மா ஜாலிக்கு வாசித்தால் கொஞ்ச நாளில் அது அலுத்து விடும். உதாரணமாய், நீங்கள் போர் சம்மந்தமான அல்லது சோதிடம் சம்மந்தமான சில நூல்களை தேர்ந்து படிக்கலாம். அது குறித்து குறிப்பெடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வாசித்து முடிப்பேன் என இலக்கு வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் வாசிப்பை ஒரு சாகசப் பயணம் போல் ஆக்கும்.
 
8)   கடைசியாக ஒன்று. சற்று சிரமமான (புரியாத அல்ல) நூல்களை அவ்வப்போது படிப்பது நல்லது. மொழி அளவில் அல்லாமல் கூறுபொருளைப் பொறுத்து மாறுபட்ட அடர்த்தியான நூல்களை பரீட்சார்த்த முயற்சியாய் படித்து பாருங்கள். முதலில் புரியாவிட்டால் தொடர்ந்து முயலுங்கள். ஒரு சிக்கலான நூலைப் படித்து முடிக்கும் உவகை பத்து ஆர்வமூட்டும் எளிய நூல்களை படிப்பதை விட மேலானது. நீங்கள் படிக்கிற நூல்கள் எல்லாம் உங்களுக்கு எளிதில் புரிகிறது என்றால் உங்கள் வாசிப்பில் ஏதோ சிக்கல் என்று பொருள். நம் ஈகோவை உடைக்கிற, நம்மை குழப்புகிற நூல்கள் நம்மை புதிய மனிதனாக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு “அட எனக்கு ஒண்ணுமே தெரியலியே” எனும் வியப்புணர்வு எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். அந்த விடுதலை உணர்வுக்காகத் தான் வாசிக்கிறோம்.
 

நல்லதொரு பகிர்வு....

வேகமாக வாசிக்கும்போது புத்தகத்தில் உள்ள செய்தியை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. 

முன்பு போல புத்தகம் வாசிக்கும் போது சுவையாகஇருக்க மாட்டேன் என்கிறது. இது எனக்கு மட்டும் ஏற்பட்டு இருக்கிற கோளாறா? 

பொதுவாகஎல்லா வாசகர்களுக்கும் இருக்கிற பிரச்சனையா ? எதனால் இப்படி

எனக்கு மட்டும்தான் இப்படியான உணர்வு என்று நினைத்துக் கொண்டுருந்தேன். கடந்த 4 மாதங்களாக எந்தவொரு புத்தகத்தினையும் படிக்கவில்லை.. இனி மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

கிருபனுக்கு, இப்படி தோன்றுவதுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போது அதிகமாய் ஒரு பக்கமளவு வரும் கதைகள்தான் படிப்பதுண்டு. மிஞ்சிப் போனால் மண்வாசனைக் கதைகள் படிப்பதுண்டு.

ஆச்சரியமாய் இப்ப கொஞ்ச நாட்களாய்  யாழில் நவீனன் பதிவிடும் "உலகம் உருளும்"  போன்ற பல நாடுகளின் உருட்டுப் புரட்டுகளையும் அப்பப்பவே படித்து விடுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு....

எனக்கு மட்டும்தான் இப்படியான உணர்வு என்று நினைத்துக் கொண்டுருந்தேன். கடந்த 4 மாதங்களாக எந்தவொரு புத்தகத்தினையும் படிக்கவில்லை.. இனி மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

கிருபனுக்கு, இப்படி தோன்றுவதுண்டா?

நான் வேகமாக வாசிப்பதை விரும்புவதில்லை. மூளை கிரகிக்கவில்லையென்றால் மூடி வைத்துவிடுவேன்.

வேகமாக வாசித்தால் சாராம்சம்தான் நினைவில் இருக்கும்.  புத்தகங்களை வாங்கமுன்னரே அதனைப் பற்றிய விமர்சனங்கள், குறிப்புக்களைப் படிப்பதால் பிடிக்காத புத்தகங்களை வாங்குவது குறைவு. அப்படியும் ஒன்றிரண்டு வந்து சேர்ந்துவிடும். அவற்றினை வேகமாகப் படிக்கும்போது சாராம்சத்தை மட்டும்தான் கிரகிக்கமுடியும். வணிக எழுத்துக்கள் வெறும் சொற்களால் கட்டமைக்கப்படுவதால் இயலுமானவரை படிப்பதைத் தவிர்ப்பதுண்டு. 

எழுத்தாளர் ஒவ்வொரு வாக்கியத்தையும், சொற்களையும் மிகவும் கவனமாகவே தெரிவு செய்கின்றார் என்று நம்புவதால் ஒரு பந்தி அல்லது வாக்கியம் விளங்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் வாசிப்பதுண்டு. 

பிரேம்-ரமேஷ் அவர்களது பின்நவீனத்துவத்தை உருக்காட்டும் "மகாமுனி" சிறுகதைத் தொகுப்பை மிகுந்த கஷ்டப்பட்டு அண்மையில் படித்துமுடித்தேன். படிப்பதற்கு சிரமமானது என்றாலும் மொழியை அவர்கள் கையாண்ட விதமும் அவர்களது சிந்தனையும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டியது.

ஒரு கதையில் இருந்து ...

 

உனக்கு ஒரு காதல் கடிதம் எழுத எத்தனித்தேன். வழக்கம் போலவே அது ஒளி பற்றிய குறிப்போடு தொடங்கப்பட்டுவிட்டது. இறுதியில் காதல் இல்லை கடிதம் மட்டுமே எஞ்சியது; எல்லாம் சொற்களாக இருந்தன. சொற்கள் இன்றி அர்த்தங்கள் இயங்குமா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். நீ கூறுவாய்: உடல் இன்றி உயிர் இயங்கமுடியுமா என்று சோதித்துப் பார்க்கும் முயற்சியென. அவன் கூறுவான்: உயிரும் உடலும் வேறு வேறு அல்ல என்றும் - இடைவெளிகள் இன்றியும் அர்த்தங்கள் சாத்தியமில்லை என்றும். எனது பிரச்சினை இருப்பும் இன்மையும் வேறு வேறு என்பது பற்றியும் - காலத்தின் திசை பரிமாணம் பற்றியதும். ஒரு பொருள் இருக்கும் பொழுதே அதுவாக இல்லாமலும் இருக்கின்றது. ஒரு உடல் உயிர் வாழ்தல் என்பது அது இறந்துகொண்டிருக்கின்றது என்ற பொருளில் எல்லாம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. எல்லாம் விரிந்து கொண்டே இருக்கிறது. சுருங்குகிறது. எல்லாம் பிணைகிறது. பிளவுபடுகிறது. பிரபஞ்ச ஆற்றலின் மொத்த அளவு மாறாதது. நான் உன்னை நேசிக்கும் பொழுதே வெறுக்கவும் செய்கிறேன். நான் உன்னை வெறுக்கும் பொழுதே நேசிக்கவும் செய்கிறேன். நான் உன்னை நேசித்து நேசித்து நேசிக்காமல் போகிறேன் - நான் உன்னை வெறுத்து வெறுத்து வெறுக்காமல் போகிறேன். நான் நேசித்தாலும் வெறுத்தாலும் நம்மிடையே வினைபுரியும் ஆற்றலின் அளவு ஒன்றுதால் என்ற முடிவுக்கு வருகிறேன்.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.