Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ்

Featured Replies

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 1

 
 
பாரீஸ் பேரணியில் பங்கேற்ற உலகத் தலைவர்கள்.| படம்: ஏஎப்பி
பாரீஸ் பேரணியில் பங்கேற்ற உலகத் தலைவர்கள்.| படம்: ஏஎப்பி

‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள். துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி.

பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை.

நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாந்த். கொஞ்சம் சோகமாகத்தான் இதைச் சொல்ல வேண்டிய சூழல்.

நீங்கள் ஏதோ ஒரு வேற்று கிரகத்துக்கு பத்து நாட்கள் சென்று வந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்தப் பத்து நாட்களில் செய்தித் தாள் எதையும் படிக்கவில்லை. (அட, இது யாரையோ நினைவு படுத்துகிறதே!) இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நகருக்கு கீழே உள்ள வி.ஐ.பிக்கள் விஜயம் செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. உங்கள் யூகம் என்னவாக இருக்கும்?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோப், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென் பெர்க், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா - பட்டியல் முடியவில்லை. இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள் என்றால் அந்த நிகழ்வு எதுவாக இருக்கும் என்று நினைப்பீர்கள்?

ஒரு நாட்டின் தலைவர் இறந்திருப்பார். அதற்கு அஞ்சலி செலுத்ததான் அந்த நாட்டின் தலைநகருக்கு இத்தனை பேரும் வந்திருப்பார்கள் என்பதுதான் உங்கள் பதிலா? உங்கள் பதிலில் பாதி சரி. இறந்தது நாட்டுத் தலைவர் அல்ல. பத்திரிகையாளர்கள்.

பாரீஸில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் மேற்படி வி.ஐ.பி.க் களுடன் பொது மக்களும் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள தேசம் பிரான்ஸ். இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு மேற்கில் ஸ்பெயினுக்கு வடகிழக்கே அமைந்த நாடு. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு. இங்கு பாயும் ரைன் நதி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.

பாரீஸிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் ஆசிரியரும் அங்கு பணியாற்றிய வேறு பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்கொய்தா அமைப்பு இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.

சார்லி ஹெப்டோ கிண்டலுக்கும் கேலிக்கும் புகழ் பெற்ற ஒரு வார இதழ். (ஹெப்டோ என்றால் வார இதழ் என்று அர்த்தம்). இடதுசாரிப் பார்வை கொண்டது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடாயிசம் என்று சகட்டுமேனிக்கு எல்லா மதங்கள் மற்றும் பிரபல அரசியல் தலைவர்களையும் அங்கதம் செய்தது இந்த வார இதழ். இஸ்லாமை மட்டுமல்ல கிறிஸ்தவத்தையும் இந்த இதழ் கடுமையாக, நகைச்சுவையாக விமர்சிக்கத் தவறியதில்லை.

பல வருடங்களுக்கு முன் நபிகள் நாயகத்தைப் பற்றி வெளி யிட்ட கார்ட்டூன்களுக்காக தீவிர வாதிகள் 2011-ல் இந்த இதழின் அலுவலகத்தின் மீது வெடி குண்டுகளை வீசினார்கள். அந்த இதழின் இணையதளம் முடக்கப்பட்டது. சார்லி ஹெப்டோ தொடர்ந்து தான் வந்த அதே பாதையில் நடந்தது. (‘பட்டும் திருந்தவில்லை’ என்பதோ ‘அஞ்சாத மனப்போக்கு’ என்பதோ அவரவர் கோணத்தைப் பொறுத்தது).

அல்-காய்தா தீவிரவாதி களுக்கு அதிக எரிச்சலை அளித் திருக்கக்கூடும் என்று கூறப்படுவது 2011 நவம்பரில் வெளிவந்த இதழ். ‘’ஷரியா ஹெப்டோ’’ என்ற தலைப்பில் வெளியானது. ஷரியா என்பது இஸ்லாமியர்களின் ஒரு வகை சட்டம். நபிகள் நாயகம் இந்த இதழின் சிறப்பு ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டது. போதாக் குறைக்கு ‘’இதைப் படித்துவிட்டு சிரிக்காவிட்டால் உங்களுக்கு 100 சவுக்கடி’’ என்று அவர் கூறுவதைப் போலவும் ஒரு கார்ட்டூன்!

ஹராகிரி என்பது இந்தப் பத்திரிகையின் பூர்வஜென்மப் பெயர். ஹராகிரி என்பதும் செப்புகு என்பதும் ஒரே அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள். ‘வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறப்பது’ என்பது இதன் பொருள். ஜப்பானிய சாமுராய் வீரர்கள், தாங்கள் எதிரிகள் கையில் பிடிபடுவோம் என்றால், தங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்து விடு வார்கள் (இலங்கை விடுதலைப் புலிகள் சயனைட் குப்பியை வாயில் சரித்துக் கொள்வதுபோல).

‘சிரித்து சிரித்து வயிறே வெடித்துவிட்டது’என்கிறோம் அல்லவா, அந்த அர்த்தத்தில் இந்த இதழ் தனக்கான பெயரைச் சூடிக் கொண்டது. ஆனால் அப்போதைய பிரான்ஸ் அதிபரின் மரணத்தையே கேலி செய்ததைத் தொடர்ந்து அது தடை செய்யப்பட்டது. சுமார் பத்து வருடங் களுக்குப் பிறகு அது சார்லி ஹெப்டோவாக மறுவடிவம் எடுத்தது. பழைய இதழில் பணியாற்றியவர்கள் கிட்டத்தட்ட அப்படியே இதிலும்.

இதன் அலுவலகத்துக்குள் ஜனவரி 8 அன்று நுழைந்த மூன்று முகமூடி நபர்கள் கண்மூடித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்திரிகை ஆசிரியர் உட்பட ஒரு டஜன் பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதலில் குறிப்பிட்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது என்பதைவிட, தீவிரவாதத்துக்கு எதிரான ஊர்வலம் இது என்பது மேலும் பொருந்தும்.

இது தவிர மாட்ரிட், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களிலும் பெரும் ஊர்வலங்கள் நடந்தன. இந்த நகரங்களில் அல்-காய்தா தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். நவீன சிந்தனைகளுக்கு கம்பளம் விரிக்கும் நாடான இது மிகத் தொன்மையான நாடும்கூட!

பிரான்ஸ் பற்றி நீங்கள் கேள் விப்படாமல் இருந்திருக்க முடி யாது. பிரெஞ்சு ஓபன் பந்தயங்கள், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க். ‘’பள்ளியில் பிரெஞ்சு மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுத்தால் மிக அதிக மதிப்பெண்கள் பெறலாம்’’ என்று ஏதோ ஒருவிதத்தில் பிரான்ஸ் நமக்கு அறிமுகமாகியிருக்கும்.

ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லாம் பிரான்ஸை ஒரு கணமாவது நினைக்க வேண்டும். அங்குள்ள ‘டெனிம்ஸ்’ என்ற இடத்தில்தான் ஜீன்ஸ் அறிமுகமானது. திரைப்பட ரசிகர்கள் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவை நினைவு கொள்வார் கள். தவிர, ‘செவாலியே’ சிவாஜி கணேசனை மறக்கலாகுமா?

பிரான்ஸை இன்னமும் அதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா? தவிர, வேறு காரணங்களும் உண்டு.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-1/article6784371.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2

 
 
 
பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம்
பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம்

பாரீஸ் நகருக்குச் செல் பவர்கள் அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்துக்கு நிச்சயம் செல்வார்கள். அது ஒரு கலைப் பொக்கிஷம். மோனோலிசா ஓவியம்கூட அங்குதான் இருக்கிறது. பிரபல ‘டாவின்ஸி கோட்’ புதினம் இந்த மியூசியத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றால் சிலருக்குப் புரியக்கூடும்.

உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் குவியும் இந்த அருங் காட்சியகத்துக்கு போயிருந்த போது ஒரு கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஓர் இடத்தில்கூட ஆங்கில அறிவிப்பு கிடையாது. அந்த அளவுக்குத் தங்கள் மொழி யான பிரெஞ்சு மீது வெறித்தனமான அபிமானம் அவர்களுக்கு. தவிர ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வரலாற்றுப் பகை இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கலாம் என்பது கூடுதல் காரணம்.

ஆனால் ரொம்பவும் தொடக்க காலத்தில் பிரான்ஸ் நாட்டின் மொழி பிரெஞ்சு கிடையாது.

இப்போதுள்ள பிரான்ஸ் பகுதியில் அப்போது இருந்த நாட்டின் பெயர் கால் (Gaul - ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ் படித்தவர்களுக்கு இந்த நாடு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்). அப்போது பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்றவைகூட இந்த நாட்டின் பகுதிகளாக இருந்தன. அங்கு பேசப்பட்ட மொழி ஸெல்டிக்.

ரோம சாம்ராஜ்யம் பரந்து விரிந்த காலகட்டம். கால் நாட்டை மட்டும் சும்மா விடுமா? அந்த முழு தேசத்தையுமே தன் பிடிக்குள் கொண்டு வந்தது ரோம். இது நடந்தது கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு.

வேறு வழியில்லாமல் ரோம் மொழி மற்றும் ரோமானிய கலாச்சாரத்துக்கு தங்களை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள் கால் மக்கள்.

ரோமானியர்கள் தங்கள் கைவரிசையை கால் நகரில் காட்டினார்கள் - நல்லவிதத்திலும் தான்! பிரம்மாண்டமான கட்டிடங் களும் அரங்கங்களும் எழும்பின.

பின்னர் சில காட்டுமிராண்டிக் கூட்டங்கள் அவற்றில் பலவற்றை அழித்துவிட்டாலும் இன்னமும் சில அருமையான மிச்சங்களை பிரான்ஸில் காண முடியும். முக்கியமாக மூன்று அடுக்கு கொண்ட நீர்த்தொட்டிகள், ரோன் பள்ளத்தாக்கில் உள்ள பிரம்மாண்ட நாடக அரங்கு, நிமஸ் என்ற இடத்திலுள்ள ஆலயம்.

சில நூற்றாண்டுகள் நகர்ந்தன. மன்னன் குலோவிஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட பிராங்க் இனத்தவர் கால் நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இந்த பிராங்க் இனத்தவர் ஜெர் மானிய குடிகளில் ஒரு வகையினர்.

பிராங்க் இனத்தவர் அந்தப் பகுதியை ஆக்ரமித்தவுடன் இந்தப் பகுதியை சில சிறிய பகுதிகளாகப் பிரித்தனர். பெயர் மாற்றம் நடைபெற்றது. அவர்கள் பெயர் அல்ல - நாட்டின் பெயர். மேற்குப் பகுதிக்கு ‘பிரான்ஸியா’ என்று பெயரிட்டனர். ஆக, கால் போச்சு பிரான்ஸ் வந்தது.

அப்போதுகூட பிரெஞ்சு அதிகாரபூர்வ மொழி ஆகிவிட வில்லை. ஆனால் கி.பி.1000-ல் பிரான்ஸை ஆண்ட மன்னன் பிரான்ஸியன் என்பவனுக்கு தீவிர மொழிப் பற்று. அவன்தான் பிரெஞ்சு மொழியை குறைந்தபட்சம் உயர் வகுப்பினராவது பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினான். லத்தீனிலிருந்து பலவிதங்களில் மாறுதல் பெற்று புதிய வடிவமாக உருவாகியிருந்தது பிரெஞ்சு. இது பிரான்ஸின் அதிகாரபூர்வ மொழியானது.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? ‘வேறு யாராவது அந்த நாட்டின் மீது படையெடுத்திருப்பார்கள்’ என்கிறீர்களா? அதேதான். இந்த முறை அதைச் செய்தது வைகிங் இனத்தவர். பிரான்ஸின் வடக்குப் பகுதி மீது இவர்கள் கண் வைத்தார்கள். வைகிங் இனத்தவர் ஸ்கான்டிநேவியா பகுதியில் வேர்விட்டவர்கள். (நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் ஸ்கான்டிநேவியா).

சமாதானமாகப் போக விரும் பினார் பிரெஞ்சு மன்னன். தன் தேசத்தின் கணிசமான பகுதியை வைகிங் மன்னர்களுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டார். அப்படி அளிக்கப்பட்ட பகுதியில் குடியேறியவர்கள் நாளடைவில் நார்மன்ஸ் அல்லது நார்ஸ்மென் என்று அழைக்கப்பட்டது தனிக்கதை.

காலச் சக்கரம் வழக்கம்போல் உருண்டது. 1666-ல் நார்மன் இனத்தைச் சேர்ந்த வில்லியம் என்ற ஒருவர் இங்கிலாந்தை ஆக்கிரமிப்பதற்காக கிளம்பினார். இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ‘வில்லியம் தி கான்கோரர்’. அதாவது வென்று கொண்டே இருக்கும் வில்லியம்! அவ்வளவு நம்பிக்கை.

‘’சுற்றி வளைத்துப் பார்த்தால் இங்கிலாந்து மன்னருக்கு நானும் உறவு. எனவே எனக்கும் வாரிசுரிமை இருக்கிறது’’ என்று கிளம்பினார்.

நடைபெற்றது ‘ஹேஸ்டிங்ஸ் யுத்தம்’. இது என்ன புதிதாக ஒரு கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள். யுத்தம் நடைபெற்ற இடத்தின் பெயர் அது. தன் பெயருக்கேற்ப வில்லியம் ஜெயித்தார். அடுத்த 400 வருடங்களுக்கு இங்கிலாந்தின் ஆட்சி மொழி பிரெஞ்சுதான். இந்த காலகட்டத்தில்தான் ஆங்கில மொழியில் பல பிரெஞ்சு வார்த்தைகள் புகுந்தன அதாவது புகுத்தப்பட்டன.

காலம் தொடர்ந்து நகர்ந்தது. பிரெஞ்சு ராணியான எலியனார் என்பவர் கணவனை விவாகரத்து செய்தது ஒரு வரலாற்றுத் திருப்பமானது. காரணம் அவர் விவாகரத்து செய்த லூயி ஒரு பிரெஞ்சு மன்னன். அவர் மறுமணம் செய்து கொண்ட இரண்டாம் ஹென்றி ஓர் ஆங்கிலேய மன்னன். இதன் காரணமாக, அந்தக் கால நியதிப்படி பிரான்ஸின் கணிசமான பகுதியும் முழு இங்கிலாந்தும் எலியனாருக்கு வந்து சேர்ந்தது. விவாகரத்து காரணமாக வந்தது பிரான்ஸ் பகுதி. மன்னன் ஹென்றி இறந்துவிட அவரிடம் வந்தது இங்கிலாந்து.

தன் மகன் ரிச்சர்டை மன்னனாக்கி விட்டு. ஆலோசகர் என்ற பதவியை ஏற்றார் எலியனார். இந்த ஆட்சியில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இசைக் கலைஞர்களும், கவிஞர் களும், ஓவியர்களும் ஊக்குவிக்கப் பட்டார்கள். அந்தக் காலத்தில் உருவான இசை ஸ்டைல் இன்றள வும் உரு மாறாமல் இசைக்கப் படுகிறது.

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வந்து தொலைக்குமே! ஒன்றல்ல இரண்டு பிரச்னைகள் பிரான்ஸை சின்னாபின்னமாக்கின.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-2/article6788399.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 3

 
 
 
france_2280712f.jpg
 

1337-ல் தொடங்கி 1451 வரை நடைபெற்றது ‘நூறு வருட யுத்தம்’. (கணிதப் புலிகள் கன்ஃப்யூஸ் ஆக வேண்டாம். நூறைத் தாண்டினாலும் அதன் பெயர் நூறு வருட யுத்தம்தான்). பிரான்ஸ் எல்லைப் பகுதியை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்று வெறித்தனமாக ஆசைப்பட்டது இங்கிலாந்து. பிரான்ஸ் கடுமையாக இதை எதிர்த்து நின்றது. இந்த இரண்டு நாடுகளின் மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். எண்ணிலடங்காத பாதிப்புகள் உண்டாயின. போதாக்குறைக்கு அந்த சமயம் பார்த்து ப்ளேக் நோய் வந்தது. கொள்ளை நோய் என்பதால் இதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். பிரான்ஸ் இங்கிலாந்தின் வசப்பட்டது.

கொஞ்சம் விட்டுவிட்டுதான் என்றாலும் ‘கிட்டத்தட்ட’ தொடர்ச்சியாகவே போர்கள் நடந்து கொண்டே இருந்தன. சில குறிப்பிட்ட பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதிலிருந்து வாரிசுரிமை தொடர்பான சிக்கல்கள் வரை பல காரணங்களும் இந்த நூறு வருடப் போர் அணையாமல் தொடர்ந்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தன.

பிரான்ஸ் மன்னர்களுக்கு நிதி நிலைமை பிரச்னை இல்லை. மேற்கு ஐரோப்பாவின் மிகுந்த மக்கள் தொகை கொண்ட சக்தி வாய்ந்த நாடு அது. ஒப்பிடும்போது ஆங்கிலேய அரசாங்கம் அளவிலும் குறைவு - மக்கள் தொகையிலும் குறைவு. என்றாலும் ஆங்கில ராணுவம் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாக இருந்தது. அவர்கள் மிகத் துல்லியமாக அதிகப்படி நீளம் கொண்ட அம்புகளை தொலைதூரத்துக்கு எறிவதில் கில்லாடிகளாக இருந்தார்கள். இதன் காரணமாக பலமுறை அவர்களால் ஜெயிக்க முடிந்தது - கடல் வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் இரண்டிலும்.

சில பகுதிகள் (முக்கியமாக Duchy of Guynne என்ற பகுதி) யாருக்கு என்பதில் யுத்தம் தொடங்குவதும், ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு ஒத்துக் கொண்டு பிரான்ஸ் மன்னன் அதை இங்கிலாந்துக்கு அளிப்பதும், பிரான்ஸ் மன்னனின் வாரிசு போரில் வென்று மறுபடியும் அந்தப் பகுதிகளை பிரான்ஸுடன் இணைப்பதுமாக போர் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

ராணுவ ரீதியாக பலமுறை வெல்ல முடிந்தாலும் இங்கிலாந்தினால் அரசியல் வெற்றிகளை சுவைக்க முடியவில்லை. பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்தனர். இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஹென்றி பிரான்ஸ் நாட்டை வென்றான். வருங்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவோ என்னவோ பிரான்ஸ் மன்னனான ஐந்தாம் சார்லஸின் மகளை மணந்து கொண்டு ஒரு மகனுக்கு அப்பா ஆனான். ‘’வருங்காலத்தில் என் மகன்தான் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் அரசன்’’ என்றபடி கண்களை மூடினான். மறுபடி திறக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் பிரான்ஸ் வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்த ஜோன் ஆஃப் ஆர்க் சிலிர்த்தெழுந்தாள்.பிரான்ஸில் உள்ள ஆர்லியன்ஸ் என்ற பகுதியில் ஒரு கிராமப் பெண்ணாக வளர்ந்தாள் ஜோன் ஆஃப் ஆர்க் என்று பின்னாளில் பிரபலமான அந்த வீராங்கனை. பதிமூன்று வயதிலேயே அவரால் பல தெய்வீக தூதர்களின் குரல்களைக் கேட்க முடிந்ததாம். மைக்கேல், மார்கரெட், கேதரின் போன்ற இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக அவருக்கு செய்திகளை அளித்தனராம்.

தன் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைக்கூட அந்தக் குரல்கள் கூறின என்றாள் அவள். இங்கிலாந்துக்கு எதிராக 1429-ல் தன் தலைமையில் ஒரு படை புறப்படும் என்றும், அந்தப் போரில் தனக்கு பெரும் காயம் ஏற்படும் என்றும் அவர் கூறியது பின்னாளில் அப்படியே பலித்தது.

“எனக்கென்று ஒரு தெய்வீக வாளை கடவுள் அளித்திருக்கிறார். அது தூய கேதரின் மாதா கோவிலருகே புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருக்கும்’’ - இப்படி தனக்கு ஒரு தெய்வீக செய்தி வந்ததாக அவர் கூற, குறிப்பிட்ட இடம் தோண்டப்பட்டது. அங்கே ஒரு துருப்பிடித்த வாள். அதை சுத்தப் படுத்தியபோது, அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருந்தன!

நலிவடைந்திருந்த பிரான்ஸை இங்கிலாந்திடமிருந்து மீட்பதற்கு மிகவும் முனைந்தார் ஜோன். தன் வீரத்திலும், பிரச்சாரத்திலும் சிறந்து நின்ற அவரை ஒரு சாகசக் கதாநாயகியாகவே பார்த்தனர் பிரெஞ்சு மக்கள்.

இங்கிலாந்து கடும் கோபம் கொண்டது. பிரான்ஸின்மீது தான் கொண்ட பிடிமானம் ஜோன் காரணமாக நழுவுகிறதே! இதுகூட ஒருவிதத்தில் இயல்பானதுதான். ஆனால் பிரான்ஸின் ஒரு பகுதியான பர்கண்டி என்ற பகுதியை ஆட்சி செய்தவர்களும் ஜோனை வெறுக்கத் தொடங்கியது காலத்தின் கொடுமை.

‘நேற்று பிறந்த ஒருத்தி தங்களைவிட புகழ் பெறுவதா?’ என்ற பொறாமை கொந்தளிக்க ஜோனை ரகசியமாக சிறை பிடித்து ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டார்கள் பர்கண்டி ஆட்சியாளர்கள். பதிலுக்குப் பத்தாயிரம் பிராங்க் தொகையை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். ஆங்கிலேய அரசு ஜோன் மீது வழக்கு தொடுத்தது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-3/article6794622.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 4

 
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் மோனலிசா ஓவியம். அதை வரைந்த லியனார்டோ டாவின்ஸி.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் மோனலிசா ஓவியம். அதை வரைந்த லியனார்டோ டாவின்ஸி.

ஆங்கிலேய அரசு ஜோன் மீது வழக்கு தொடுத்தது. நாட்டுப் பற்றுக்காகவா வழக்கு தொடுக்க முடியும்? எனவே மதத்தைப் பயன்படுத்திக் கொண்டது.

‘’பிரான்ஸை இங்கிலாந்தின் பிடியிலிருந்து நீ விடுவிக்க வேண்டும்’’ என்று தெய்வீகக் குரல்கள் தனக்குக் கட்டளையிடு வதாக ஜோன் பலமுறை கூறி யிருந்தார். இதை சாத்தான்களின் குரல் என்றும் சாத்தான்களுடன் உரையாடும் ஜோன் சூனியக்காரி என்றும் கூறியது ஆங்கிலேய அரசு. தூய மைக்கேல், தூய மார்கரெட் போன்றவர்களின் குரல் களைக் கேட்டதாக ஜோன் கூறிய தில் அந்தப் பகுதி பிஷப்பும் கொந் தளித்திருந்தார் (பொறாமை?).

ஜோன் மீது நீதிமன்றத்தில் முதலில் குற்றம் சாட்டியவர் அந்த பிஷப்தான். அவரது எல்லைக் குள்தான் வேண்டுமென்றே ஜோனைக் கைது செய்திருந்தார் கள். நீதிமன்றத்தில் ஜோனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அநாகரிகமானவை. ஒரு கட்டத் தில் “நான் கடவுளுக்கும், ரோமில் உள்ள தெய்வீகத் தந்தைக்கும் மட்டும்தான் பதிலளிப்பேன்’’ என்றார் ஜோன்.

110 குற்றச்சாட்டுகள் ஜோனின் மீது சுமத்தப்பட்டன. வழக்கு முடியாத நிலையில் சிறைக் கொடுமை தாங்க முடியாமல் சிறையின் மேல் தளத்திலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் ஜோன் குதிக்க அவர் மீது தற்கொலை குற்றச்சாட்டும் சேர்ந்து கொண்டது. கத்தோலிக்க மதத்தின்படி தற் கொலை என்பது மாபெரும் பாவம்.

‘’தெய்வீகக் குரல் என்றெல்லாம் கூறுவதை வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் உங் களைத் தீயில் கொளுத்த நேரிடும்’’ என்றது நீதிமன்றம். “தீயின் நடுவில் நின்றாலும் கூறியதைத்தான் தொடர்ந்து கூறுவேன்’’ என்றார் ஜோன்.

அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டது. 30.5.1431 அன்று அவரை தீக்கிரையாக்கினார்கள். அவர் தெய்வீகப் பெண்ணல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவரது கருகிய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதற்கு பத்தொன்பது வருடங் களுக்குப் பிறகு பிரான்ஸின் ஏழாம் சார்லஸ் மன்னன் ஆங்கிலேயரை வெளியேற்றினான். பின்னர் பிரான்ஸ் அரசு “ஜோன் மீது சரியான முறையில் விசாரணை நடக்கவில்லை’’ என்று அறி வித்தது. ஜோன் தெய்விக நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

116 வருடங்கள் நடைபெற்ற “நூறு வருடப்போர்’’ ஒரு சீசா விளையாட்டு போல வெற்றிகளை இருதரப்புக்கும் மாறி மாறி அளித்தது. பிரான்ஸ் தரப்பில் மன்னன் இரண்டாம் ஜீன், அவர் மகன் ஐந்தாம் சார்லஸ், மன்னன் ஆறாம் சார்லஸ் போன்றவர்கள் போரின் பல்வேறு கட்டங்களில் பங்கு கொண்டார்கள். மன்னன் இரண்டாம் ரிச்சர்டு, ஐந்தாம் ஹென்றி, மூன்றாம் எட்வர்டு போன்றவர்கள் இங்கிலாந்து தரப்பில் பல்வேறு கால கட்டங்களில் போரிட்டனர்.

இவர்களெல்லாம் சில சாம்பிள்கள்தான். தவிர இப்படிப் போரிட்டவர்களில் சிலரை இரண்டிலுமே சேர்த்துக் கொள்ளலாம் - ஆங்கிலேய - பிரெஞ்சு கலப்பு மணத்தில் பிறந்தவர்கள்.

ராணுவப் புரட்சிகள், அரசியல் புரட்சிகள் என்ற கிழிபட்டுக் கொண்டிருந்த பிரான்ஸ் வேறொரு வகையான புரட்சியை 15 16ம் நூற்றாண்டுகளில் சந்தித்தது. அது கலாச்சார மறுமலர்ச்சி (Renaissance). ஐரோப்பாவின் கலாச்சார மறுபிறப்பு என்றும் இது கருதப்படுகிறது.

ஓவியம், இசை ஆகியவை மட்டுமல்ல, அச்சுக்கலை, கட்டிடக் கலை, சிற்பக்கலை, இலக்கியம் ஆகியவற்றிலும் மாபெரும் மறுமலர்ச்சி உண்டானது.

இந்த காலகட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப் பிணைந்திருந்தன. மறுமலர்ச்சி காலத்தில் அறிவியல் வளர்ந்தது. மதத்துக்கும், மருத்துவத்துக்கும் இருந்த தொடர்பு மெல்ல மெல்ல அறுபடத் தொடங்கியது.

ஒழுங்கமைவு கொண்ட கட்டிடங்கள் எளிமையான கணித அளவு விகிதப்படி அமையத் தொடங்கின. அரைக்கோள வடிவ குவிமாளிகைகள் போன்ற பல புதுமைகள் உருவாயின.

சொல்லப்போனால் இத்தாலி யில்தான் மறுமலர்ச்சி பெருமள வில் தொடங்கியது. ராஃபேல், மைக்கேல் ஆஞ்சலோ, ரோமானோ, பெர்னினி போன்ற பல பிரபலங்கள் இந்த மறுமலர்ச் சியில் முக்கிய பங்கு கொண்டார் கள். எட்டாம் சார்லஸ் மன்னன் பிரான்ஸை ஆட்சி செய்தபோது அவன் இத்தாலி மீது படை யெடுத்தான். இதன் விளைவாகவும் மறுமலர்ச்சி பிரான்ஸில் பெரு மளவில் புகுந்து பரவியது.

பிரான்ஸ் - இத்தாலி போர், பிரபல ஓவியர் மற்றும் சகலகலா வல்லவர் லியனார்டோ டாவின் ஸியை மிக அதிகமாக பாதித்தது. எழுபது டன் வெண்கலத்தை உருக்கி ஒரு மிக பிரம்மாண்டமான குதிரையை வடிவமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் போர் ஆயுதங்களுக்கு அந்த வெண் கலம் பயன்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் போரின் விளைவால் பிரான்ஸுக்கு சென்று தங்க லியனார்டோ டாவின்ஸி ஒத்துக் கொண்டார். கூடவே தன் மாஸ்டர் பீஸ் ஆன மோனோலிசாவையும் எடுத்துச் சென்றார். மன்னர் முதலாம் பிரான்சிஸ் வழங்கிய ஒரு வீட்டில்தான் கடைசி நாட்களை அவர் கழித்தார். அவரது பல ஓவியங்கள் இன்று பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளன.

அடுத்த கட்டமாக அடுத்த புரட்சி ஒன்றும் பிரான்ஸில் ஏற்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களில். இதைத் தொடர்ந்து அரசியல் களங்களில் பெரும் மாற்றங்கள் உண்டாயின.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-4/article6804775.ece?ref=relatedNews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 5

 
வெர்செய்ல்ஸ் நகரில் பதினான்காம் லூயி கட்டிய அரண்மனை.
வெர்செய்ல்ஸ் நகரில் பதினான்காம் லூயி கட்டிய அரண்மனை.

1643-ல் இருந்து 1715 வரை பிரான்ஸை ஆண்ட மன்னன் பதினான்காம் லூயி தன் முத்திரையை சரித்திரத்தில் அழுத்தமாகவே பதிய வைத்தார். சூரிய மன்னன் (SUN KING) என்றும் அறியப்பட்ட இவர்தான் ஐரோப்பியச் சரித்திரத்திலேயே மிக அதிக வருடங்கள் ஆட்சி செய்த மன்னர். 72 வருட ஆட்சி!

பதிமூன்றாம் லூயி மன்னனுக்கும், ஆஸ்திரிய இளவரசி ஆனேவுக்கும் பிறந்தவர் இவர். எதிர்பாராத கட்டத்தில் தந்தை இறந்து விட, தன் இளம் வயதிலேயே முடிசூட்டிக் கொண்டார் பதினான்காம் லூயி. இளம் வயது என்றால்? நான்கே வயது!

தாய் அவருக்குப் போதிய கவனிப்பை அளிக்கவில்லை. பணியாட்களின் தயவில் வளர்ந்தது ராஜ குழந்தை. ஒருமுறை தவறி குளத்தில் விழுந்து உயிருக்கே போராடி அந்தக் குழந்தை தப்பித்தபோது ‘’கடவுளுக்கு எதிராக நீ எப்போதாவது குற்றம் இழைத்திருப்பாய். அதனால்தான் இப்படி நடந்தது’’ என்று தாய் ஆனே கடிந்து கொண்டாளாம். அது மன்னன் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. தீவிர கத்தோலிக்கராக வளர்ந்தார் அவர்.

கார்டினல் ரிசேலியு என்பவர் அப்போது முதல் அமைச்சராக விளங்கினார். செல்வாக்கு மிக்கவர். பிரான்ஸை அதிக அதிகாரமுள்ள மைய ஆட்சி கொண்டதாக ஆக்கியதிலும் தலைசிறந்த உளவு நிறுவனத்தை அங்கு உருவாக்கி சிறப்படையச் செய்ததிலும் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஸ்பெயினுடனான போரில் பிரான்ஸ் வெற்றி பெற, ஸ்பெயினின் பிடியிலிருந்த நெதர்லாந்தின் ஒரு பகுதி பிரான்ஸின் வசம் வந்தது. ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக பிரான்ஸ் உருவானது. ஸ்பெயினை ஆண்ட நான்காம் பிலிப்பின் மகள் மரியா தெரசாவை பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி திருமணம் செய்து கொண்டபோது அரசியல் உலகம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தாலும் ஒரே குழந்தைதான் பெரியவனாகும்வரை உயிர் வாழ்ந்தது.

பிரான்ஸுக்கு முதல் அமைச்சர் என்ற ஒருவர் இருப்பதும் அவர் முக்கிய முடிவுகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் வழக்கமாக இருந்த ஒன்றுதான். ரிசேலியுவுக்குப் பிறகு மஸாரின் என்பவர் முதல் அமைச்சராகி தன் பங்குக்கு பிரான்ஸில் கலைகளை வளரச் செய்தார். அரசுக்கும் தனக்கும் எதிரான புரட்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மன்னர் ஒரு எதிர்பாராத அறிவிப்பைச் செய்தார்.

’’அடுத்த முதல் அமைச்சர் என்று யாரும் கிடையாது. நான்தான் மன்னன். எனக்கு நானேதான் முதல் மந்திரி’’ என்று அறிவித்துக் கொண்ட பதினான்காம் லூயி இறுதிவரை அதை கடைப்பிடித்தார். ஒப்புக்குச் சில அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களை அவர் எப்போது நியமிப்பார், எப்போது நீக்குவார் என்பது யாருக்குமே தெரியாது.

ஆனால் ஒன்றில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தார் லூயி. தன் அமைச்சரவையில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, புகழ்பெற்றஇளவரசர்களோ, ராணுவத்தில் பணியாற்றிய அறிஞர்களோ கட்டாயம் இருக்கக் கூடாது!

உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் மன்னன் பதினான்காம் லூயி ஈடு இணையற்று விளங்கினார். நாட்டில் புதிய, தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்டன. நிதி அமைச்சராக விளங்கிய கால்பர்ட் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தனார்.

இந்தக் கால கட்டத்தில் கலைகள் மிகச் செழிப்பாக வளர்ந்தன. ஓவியம், சிற்பம் போன்ற கலைகளுக்கு தனித்துறையை தொடங்கினார். அறிவியலும் ஏற்றம் கண்டது. பாரீஸில் ஒரு பெரும் தொலைநோக்ககம் (OBSERVATORY) உருவாக்கப்பட்டது. இலக்கிய அகாடமி அமைப்புக்கும் புது வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அது முழுக்க அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது.

அற்புதமான கட்டிடங்களைக் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார் மன்னர். லூவர் அருங்காட்சியகக் கட்டிடம்கூட அவர் காலத்தில் எழுப்பப்பட்டதுதான். ஸ்பெயினின் அதிகாரத்திலிருந்த சில பகுதிகள் பிரான்ஸோடு இவர் காலத்தில் இணைக்கப்பட்டன.

ஆனால் நிர்வாகத்தில் பெரிதும் உதவிய நிதி அமைச்சர் கால்பர்ட்டின் இறப்புக்குப் பிறகு ஆட்சியில் பல மாறுதல்கள் உண்டாயின. பிரான்ஸில் உள்ள பிராடஸ்டன்ட் சிறுபான்மையினரின் சிறப்பு வழிபாட்டு உரிமையை நீக்கினார் மன்னர். பிரெஞ்சு ப்ராடெஸ்டன்டுகளை ‘ஹுகனாட்ஸ்’ என்பார்கள். இவர்களுக்கான வழிபாட்டு உரிமைகளை ரத்து செய்தார் மன்னர். அது மட்டுமல்ல, ப்ராடஸ்டன்ட் ஆலயங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.

ப்ராடஸ்டன்ட் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பிரிவினரின் திருமணங்கள் செல்லாது என்று சட்டமியற்றும் அளவுக்கு மன்னரின் கத்தோலிக்க வெறி எல்லை தாண்டியது. கத்தோலிக்கக் கல்வியும் ஞானஸ்நானமும் ல்லா பிரான்ஸ் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இதன் காரணமாக தொழிலதிபர்களாக இருந்த ப்ராடஸ்டன்ட் பிரிவினரில் பலரும் பிரான்ஸைவிட்டு நீங்கினார்கள். ஆக பெருத்த முதலீடுகளும் திறமையான நபர்களில் கணிசமானவர்களும் நாட்டைவிட்டு நீங்கின(ர்). இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இப்படிச் சென்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.

மன்னரின் வேறு ஒரு செயல்பாடும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. வெர்செய்ல்ஸ் என்ற பகுதி தலைநகரிலிருந்து 25 மைல் தொலைவில் இருந்தது. அங்கு மிக பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை எழுப்பினார் மன்னர். இதற்கான செலவு நாட்டின் கஜானாவை வெறுமையாக்கியது.1709-ல் உண்டான பிரான்ஸின் மிகக் கடுமையான குளிரும் பலரை வீழ்த்தியது.

72 வருட ஆட்சிக்குப் பிறகு தனது 77-வது வயதில் மன்னர் பதினான்காம் லூயி இறந்தார். அவரது ஐந்து வயது பேரன் மன்னன் பதினைந்தாம் லூயி ஆனான்.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-5/article6805917.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 6

 
பாஸ்டில் சிறை தகர்ப்பை சித்தரிக்கும் ஓவியம்.
பாஸ்டில் சிறை தகர்ப்பை சித்தரிக்கும் ஓவியம்.

பிரெஞ்சு சரித்திரத்தில் அடுத்த முக்கியக் கட்டம் மன்னன் பதினாறாம் லூயியின் ஆட்சி. அப்போது பிரான்ஸ் கடுமையான பொருளாதாரச் சிக்கலை சந்தித்தது. நாட்டின் அதீத வரிகளை பொது மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். அதுவும் பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய வரி சதவிகிதம் குறைவு என்கிற விதத்தில் வரி விகிதங்கள் அமைந்திருந்தால் எதிர்ப்பு வராதா என்ன?

போதாக்குறைக்கு அமெரிக்க புரட்சியில் வேறு தங்கள் மூக்கை பிரான்ஸ் நுழைக்க, இதனாலும் நிறைய பொருள் செலவு. பிரான்ஸ் மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகிதம்தான் பிரபுக்கள். என்றாலும் அவர்கள் கூறியதே சட்டமாக இருந்தது. இதனாலும் மக்களுக்கு வெறுப்பு.

பாரீஸில் சுதந்திர தாகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மன்னனின் அனுமதியில்லா மலேயே பிரான்ஸில் தேசியக் குழு அமைக்கப்பட்டது. அதன் அரசியல் விவாதங்கள் பொது மக்களை அடைந்தன. அரசியல் விழிப்புணர்வு அதிகமானது.

மக்கள் ஆங்காங்கே கூட்ட மாகக் கூடி ஆட்சியை அலசினர். அப்படியொரு மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த ராணுவத் தலைமை முயற்சித்தது. ஆனால் சிப்பாய்கள் அப்படிச் செய்ய மறுத்து விட்டனர். மறுத்த வர்களை சிறைகளில் அடைத்தது அரசு. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று `முடிவெடுத்தது’ தேசியக் குழு. ஆனால் தொடர்ந்து அவர்கள் சிறையிலேயே வைக்கப் பட்டிருந்தனர்.

மக்களின் மனப்போக்குக்கு மதிப்பளிக்காமல் பிரபுக்களின் எண்ணப்படி மட்டுமே செயல் பட்டார் மன்னன் பதினாறாம் லூயி. பிரபுக்களுக்கும், ராணுவத் தலைவர்களுக்கும் மிக முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. இதை விட முக்கியமாக பிரெஞ்ச் மக்களை எரிச்சல்பட வைத்தது வேறொரு விஷயம். அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஒரே அமைச்சரான ஜேக்வெஸ் நெக்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மக் களுக்கு அச்சமும் வந்தது. தேசியக் குழுவையே வன்முறையால் கலைத்து விடுவார்களோ?

மக்கள் மீண்டும் கூடிக்கூடிப் பேசினார்கள். “தேசியவாதத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணிதான் நெக்கரின் பதவி நீக்கம்’’ என்ற பேச்சு பரவலானது. “சுவிஸ் மற்றும் ஜெர்மன் பிரிவு ராணுவங் களைக் கொண்டு நம்மை யெல்லாம் படுகொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது. நமக்கு ஒரே வழி ஆயுதம் ஏந்துவதுதான்’’ என்றெல்லாம் பிரச்சாரம் நடத்தப் பட்டது. மன்னனுக்கு எதிரான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

தவிர எங்கெல்லாம் உணவுப் பொருள்களும், துப்பாக்கிகளும் அரசால் பதுக்கி வைக்கப்பட்டிருக் கிறது என்று நம்பினார்களோ அங்கெல்லாம் திரண்டு சென்று அவற்றை அதிரடியாகக் கைப் பற்றும் வழக்கத்தை மக்கள் மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

இவ்வளவு குழப்பங்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புரட்சியில் பாரீஸ் பற்றி எரியத் தொடங்கியது. ராணுவத்தில் ஒரு பகுதியினரே மக்களோடு சேர்ந்து கொண்டனர்.

தங்களுக்கு எதிராக புதிய ராணுவப் படைகள் திரட்டப்படுவதாகக் கேள்விப்பட்டதும் மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். மக்களைக் கொல்வதற்கு அரசு திட்டமிடுவதா!

பாஸ்டில் (Bastille) என்ற பகுதியில் ஒரு பெரும் சிறை இருந்தது. ஆனால் அப்போது அதில் கைதிகள் யாரும் இல்லை. இந்த சிறைச்சாலையில் ராணுவம் சுமார் 14,000 கிலோ கன்பவுடர் சேமித்து வைத்திருப்பதாக மக்களுக்குத் தகவல் வந்தது. பொதுமக்கள் அந்தச் சிறைச்சாலையை 1789 ஜூலை 14 அன்று சூழ்ந்தார்கள்.

சூழ்ந்த மக்கள் சுமார் ஆயிரம் பேர். இவர்களை சமாளிக்க அங்கு அனுப்பப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையும் ஆயிரம்!.

‘‘சிறைச்சாலையை எங்களிடம் ஒப்படை. துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் இங்கிருந்து நீக்கி கடலில் வீசு’’ என்ற கோஷங் கள் எழுந்தன. எதிர்ப்பு அதிகரிக்க, பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றது ஒருவழியாக அரசு தரப்பு. ஆனால் இரண்டுபேரை மட்டுமே சிறை வளாகத்துக்குள் அனுமதிப் போம் என்றும் கூறியது. இரண்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளே சென்றார்கள். பேச்சுவார்த்தை முடிவடைவதாகத் தெரியவில்லை. மக்கள் பொறுமை இழந்தனர்.

மதியம் ஒன்றரை மணிக்கு சிறைச் சலையின் உள் ஒட்டு மொத்தமாக நுழையத் தொடங்கினார்கள். துப்பாக்கிகள் முழங்கின. பொது மக்களில் 98 பேர் இறந்தனர். இருதரப்பிலும் பாதிப்புகள் ஏராளம். ராணுவ அதிகாரி ஒருவரை மக்கள் தெருத்தெருவாக இழுத்துச் சென்று கொன்றனர். மன்னரின் ராணுவம் நினைத்திருந்தால் இறப்புகள் நேராமல் தடுத்திருக்க முடியும் என்ற பேச்சு பரவலானது.

இதில் வேடிக்கை என்னவென் றால் இதெல்லாம் மன்னருக்கு அடுத்த நாள்தான் தெரிவிக்கப் பட்டதாம். “இது என்ன எதிர்ப்பா?’’ என்று சாவகாசமாகக் கேட்டான் மன்னன் பதினாறாம் லூயி.

அது வெறும் எதிர்ப்பு அல்ல புரட்சி என்பது சீக்கிரமே தெரியத் தொடங்கியது.

மக்கள் தங்கள்மீது மீண்டும் ராணுவம் ஏவிவிடப்படலாம் என்று தயார் நிலையில் மேலும் ஆக்ரோஷமாக குவியத் தொடங்கினர். ஒருவழியாக ராணுவம் பின்னடைந்தது. நெக்கரை மீண்டும் பதவியில் அமர்த்துவதாக மன்னன் அறிவித்தான். “தேசம் நீண்ட காலம் வாழ்க” என்று குரல் கொடுத்தார்கள் மக்கள்.

பிரபுக்களுக்கு இதற்குப் பிறகு கலவரம் ஏற்பட்டது. மன்னன், மக்கள் இருதரப்புமே தங்களைக் கைவிட்டதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

பாரீஸில் கிடைத்த இந்த மக்கள் வெற்றி பிரான்ஸ் முழுவதும் பரவியது. ஆங்காங்கே மக்கள் குழுக்கள் நிறையத் தோன்றின. கிராமங்களில் ஜமீன்தார்கள் தாக்கப்பட்டார்கள். தங்கள் புரட்சிகளை அவர்கள்தான் நசுக்குவார்கள் என்ற பயம்.

பிரெஞ்சுப் புரட்சி ஆரவாரமாகத் தொடங்கியது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-6/article6811140.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 7

 
 
நெப்போலியன்
நெப்போலியன்

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பல பின்னணிகள் - சரிந்து கொண் டிருந்த பொருளாதாரம், தவறான வரி விகிதம், மக்களிட மிருந்து பிரிந்து நின்ற திறமை யில்லாத மன்னன், உணவுப் பொருள் தட்டுப்பாடு. ஆகஸ்ட் 1792-ல் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. முதன் முறையாக பிரான்ஸ் குடியரசு ஆனது.

கிறிஸ்தவ திருச்சபையின் அதிகார ஆதிக்கம் சரிந்தது. குடி யுரிமை என்பதற்குத் தெளிவான வரையறை செய்யப்பட்டது. பொது மக்களும், இடதுசாரி அரசியல் அமைப்புகளும் இந்த மாற்றங்கள் உருவாகக் காரண மாயினர். மன்னர் 16-ம் லூயி பிரான்ஸி லிருந்து தப்பி ஓட முயற்சி செய்தபோது பிடிபட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கில்லட் கருவி யால் அவர் தலை கொய்யப்பட்டது.

புதிய குடியரசு “சுதந்திரம், சமத்துவம், சகோதாரத்துவம்’’ என்ற கவர்ச்சிகரமான இலக்கை அறிவித்துக் கொண்டது. ஆனால் வேறு விரும்பத்தகாத சக்திகளும் பிரான்ஸில் தலை காட்டத் தொடங்கின. குடியரசுக்கு எதிரான இயக் கங்களும் முளைவிடத் தொடங் கின. பணம் படைத்தவர்கள் இதற்குப் பின்னணியில் செயல் பட்டனர். புதிய குடியரசு திணறத் தொடங்கினது. தவிர ஆஸ்திரியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து பிரான்ஸ்மீது இதுதான் சமயம் என்று போர் தொடுக்கத் தொடங்கின. மக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியது.

அந்த காலகட்டத்தை `பயங்கரவாத ஆட்சி’ (The reign of terror) என்றே குறிப்பிடுகிறார்கள். அற்பமான காரணங்களுக்காகக் கூட மக்கள் கடுமையாக தண்டிக் கப்பட்டார்கள். தலைகள் உருண் டன. அப்போது ஆட்சியில் இருந் தவரின் பெயர் மாக்ஸ்மிலன் ரோபெஸ்பியரே. “நீதி கிடைப் பதுதான் முக்கியம். பயங்கரவாத ஆட்சியில் தப்பில்லை’’ என்று வெளிப்படையாகவே அறிவித் தார். முப்பதாயிரம் பிரெஞ்ச் மக்கள் இப்படி அரசினால் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த தவறு புரட்சியில் ஈடுபட்டதுதான்.

பொது மக்கள் புரட்சியாளர் களுக்கு மறந்தும்கூட ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பயங் கர நடவடிக்கைகள். குற்றம் சுமத் தப்பட்டவர்கள் தங்கள் தரப்பை வெளிப்படுத்தக்கூட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

இதன் உச்சகட்டமாக ரோபஸ் பியரே கைது செய்யப்பட்டார். அவர் தலை நீக்கப்பட்டது காலத்தின் கட்டாயமானது. பிறகு பொதுவான அமைப்பு ஒன்று (டைரக்டரேட்) பிரான்ஸை 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது.

இதைத் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒருவர் தன்னை பிரான்ஸின் பேரரசர் என்று அறிவித்துக் கொண்டார் - அவர் நெப்போலியன். இத்தாலியைச் சேர்ந்த கோர்ஸிகா என்ற பகுதியில் பிறந்தவர் நெப்போலியன். இந்தப் பகுதி அப்போது பிரான்ஸின் பிடியில் வந்திருந்தது. பள்ளிப் படிப்புக்காக பிரான் ஸுக்கு அனுப்பப்பட்டார் நெப்போலியன். பிரெஞ்ச் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்றார். இரண்டாம் நிலைத் தளபதியானார்.

பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. அடுத்தடுத்து மூன்று புரட்சிகள். மன்னராட்சி முடிவடைந்து குடியரசு உருவான காலகட்டம். தொடக்க கட்டப் புரட்சிகளின் போது நெப்போலியன் ராணுவத் திலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். பிறகு ராணுவம் திரும்பியபோது முன்பு குறிப்பிட்ட ரோபெஸ்பியரே என்பவரோடு ராணுவ அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.

இதன் காரணமாக பின்னொரு காலத்தில் நெப்போலியன் கொஞ்ச காலத்துக்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். (ரோபெஸ்பிய ரேவின் உளவாளியோ இவர் என்கிற சந்தேகம்).

கொஞ்சம் கொஞ்சமாக நெப்போலியன் புகழ் உலகமெங் கும் பரவத் தொடங்கியது. 1796-லிருந்தே அவரது பார்வை உலக நாடுகளின்மீது அழுத்தமாகவே பதியத் தொடங்கியது. 1796-ல் ஆஸ்திரியாவின்மீது படையெடுத்து, அந்த ராணுவத்தைத் தோற்கடித்தார். சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது.

அடுத்ததாக நெப்போலியன் குறிவைத்தது வெளியே அல்ல, உள்ளே! பிரான்ஸை ஆட்சி செய்த ஐந்துபேர் கொண்ட ஆட்சிக் குழு. இங்கிலாந்தின்மீது படையெடுக்க வேண்டுமென்று நெப்போலியனிடம் கூறியது. “நம் கடற்படைகள் அதற்குத் தகுந்ததாக இப்போது இல்லை. எகிப்தின்மீது படையெடுப்போம். அதைக் கைப்பற்றினால் இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே உள்ள வணிகப் பாதைகளைத் தடை செய்ய முடியும்” என்றார் நெப்போலியன்.

வீரத்தில் மட்டுமல்ல குள்ளநரித்தனத்திலும் புகழ் பெற்றவர் நெப்போலியன். சொன்னதைச் செய்து காட்டினார். ஆனால் தொடர்ந்த காலகட்டத்தில் பிரிட்டன் பிரான்ஸ்மீது படையெடுத்து அதன் கப்பல் படையை சின்னாபின்னமாக்கியது.

அதற்கு அடுத்த வருடமே சிரியாவின்மீது போர். வெற்றி. என்றாலும் பிரான்ஸில் குழப்பமான சூழல் உருவாவதைக் கண்டதும் தாய்நாடு திரும்பினார். திரும்பிய கையோடு ஐவர் குழுவைக் கலைத்தார். “மூன்றுபேர் போதும், அதில் நான் முதலாவது” என்றார். ஒரே ஆண்டுதான். நெப்போலியனின் படைகள் இத்தாலியில் இருந்த ஆஸ்திரியர்களை ஓடஓட விரட்டியது.

பிறகு உள்ளூர் ஆட்சியில் கவனம் செலுத்தினார் நெப்போலி யன். மத்திய ஆட்சிக்கு அதிகாரங் களைக் குவித்தார். வங்கிகளும் கல்வித் துறையும் பல மாற்றங் களைச் சந்தித்தன. போப்புடன் உறவை சீர்செய்து கொண்டார். எல்லாவற்றையும்விட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவர் சீர் செய்த சட்டமுறைகள். அவர் அன்று அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள்தான் இன்றைய பிரான்ஸின் சிவில் சட்டத்துக்கு அடிப்படை.

1804ல் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதற்காகப் பாரிஸில் குழுமியவர்களிடம் “இனி நான் பிரான்ஸின் சக்ரவர்த்தி’’ என்று முடிசூடிக் கொண்டார். ஆக பிரான்ஸில் மீண்டும் முடியாட்சி!

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-7/article6814761.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 8

 
 
வாட்டர்லூ போர் நினைவாக பெல்ஜியம் நாட்டின் வாட்டர்லூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிங்க சிற்பத்துடன்கூடிய நினைவு தூண்.
வாட்டர்லூ போர் நினைவாக பெல்ஜியம் நாட்டின் வாட்டர்லூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிங்க சிற்பத்துடன்கூடிய நினைவு தூண்.

ஜோஸபின் என்பவரை நெப்போலியன் திருமணம் செய்து கொண்டபோது பலரும் வியப்படைந்தனர். ஜோஸபின் ஏற்கனவே திருமணம் நடந்து கணவரை இழந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நெப்போலியனைவிட ஆறு வயது மூத்தவர். என்றாலும் ஸ்டைல் ராணி.

பத்து வருடங்கள் கடந்தும் நெப்போலியனுக்கு வாரிசு உருவாகவில்லை. ஜோஸபினை விவாகரத்து செய்தார். ஆஸ்திரிய சக்ரவர்த்தியின் மகளான மேரி லூசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்தது (பின்னாளில் இரண்டாம் நெப்போலியன்).

1803ல் அடுத்த அதிரடி. மேலும் பல யுத்தங்கள் செய்ய வேண்டும். அதற்கு நிதி வேண்டாமா? இப்படி ஒரு கேள்வியை எழுப்பியபடி பிரான்ஸின் எல்லையிலிருந்த லூசியானா என்ற பகுதியை அமெரிக்காவுக்கு விற்றார். ஒன்றரை கோடி டாலரைப் பெற்றார்.

1812ல் ரஷ்யா மீது பெரும் படையுடன் இவர் முற்றுகையிட்ட கதை தனித்துவமானது. பிரெஞ்சுப் படை முன்னேற முன்னேற, ரஷ்யப் படை கொஞ்சம் கொஞ்ச மாக பின்வாங்கியபடி இருந்தது. இதன் பின்னணியை உணராமல் நெப்போலியனின் படைகள் மேலும் மேலும் ரஷ்யாவுக்குள் ஊடுருவின. திடீரென வெளியே, உள்ளே ஆகிய இரு திசைகளிலி ருந்தும் தாக்கின ரஷ்யப் படைகள். இதையும் மீறி மாஸ்கோவை அடைந்தது பிரெஞ்சு ராணுவம்.

இதற்குள் மாஸ்கோவின் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி இருந்தனர். போகிற போக்கில் வயல்களுக்கெல்லாம் தீ வைத்திருந்தனர். உணவுப் பொருள்கள் இல்லாமல் தவித்தது நெப்போலியனின் ராணுவம். போதாக்குறைக்கு ரஷ்யாவின் கடுங்குளிர் காலம் வேறு நெருங் கிக் கொண்டிருந்தது. வேறு வழி யில்லாமல் பிரெஞ்சு ராணுவம் பின்வாங்கியது. அப்போது எதிர்பாராத வகையில் ரஷ்ய ராணுவம் அவர்களைத் தாக்கியது. ஆறு லட்சம் பேருடன் ரஷ்யாவில் நுழைந்த பிரெஞ்சு படை வெறும் ஒரு லட்சம் பேரோடு மீண்டது.

‘இழந்த மானத்தை’ மீட்க நினைத்து வேறெந்த நாட்டின்மீது படையெடுக்கலாம் என்று நெப்போலியன் யோசித்துக் கொண்டிருந்தபோது பிரான் ஸுக்கு எதிராகவே போர்முரசு கொட்டப்பட்டது. பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகி யவை இணைந்து இபெரியா தீபகற்பத்திலிருந்து பிரான்ஸ் மக்களை விரட்டியது. ஆஸ் திரியா, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய அத்தனை நாடு களின் ராணுவங்களும் ஒன்றி ணைந்து போரிட்டு பாரீஸை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தன. நெப்போலியனின் மகுடம் பறிக்கப்பட்டது. இத்தாலியிலி ருந்து சற்று தள்ளி அமைந்திருந்த எல்பா என்ற தீவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அவர் மனைவியும் மகனும் ஆஸ்திரியாவுக்குச் சென்றனர்.

சுமார் ஒரு வருடம் அந்தத் தீவில் வாழ்ந்த நெப்போலியன் அங்கிருந்து தப்பி பிரான்ஸுக் குள் நுழைந்தார். உள்ளூர் மக்கள் உற்சாகமாக அவரை வர வேற்றனர். புதிய மன்னனாக அமர்த்தப்பட்ட மன்னன் பதி னெட்டாம் லூயி சத்தம்போடாமல் மறைந்துவிட்டார்.

கொதித்த எதிரணி நாடுகள் போருக்குத் தயாராயின. அவர் களை ஒவ்வொருவராக வெற்றி கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார் நெப்போலியன். முதலில் அவர் தேர்ந்தெடுத்தது பெல்ஜியத்தை. தொடக்கத்தில் வெற்றி கிடைத்தது. ஆனால் ஜெர்மன் ராணுவத்தின் உதவி யுடன் பிரிட்டன் நெப்போலியனின் ராணுவத்தை சிதறடித்தது. வாட்டர்லூ என்ற இடத்தில் நெப் போலியன் மோசமான தோல்வி யைத் தழுவினார். பிரிட்டனைச் சேர்ந்த தீவான செயின்ட் ஹெலெனா என்ற பகுதிக்கு கடத் தப்பட்டார் நெப்போலியன். அங்கு இறந்தார். வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார் என்கிறார்கள். ‘’நான் இறந்தால் என்னை மிகவும் விரும்பிய பிரெஞ்சு மக்களின் நடுவே சியென் நதிக்கரையில் என்னைப் புதைக்க வேண்டும்’’ என்று அவர் கூறியது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறந்த தீவிலேயே புதைக்கப்பட்டார்.

நெப்போலியனின் மறைவிற் குப் பிறகு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ‘இனி யாருமே ஐரோப்பா முழுவதையும் தன் வசம் கொண்டுவரக் கூடாது. அதற்கு முயற்சிகளும் எடுக்கக் கூடாது’. இப்படியொரு தீர்மானத் துடன் அனைத்து முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் 1814-ல் வியன்னாவில் கூடிப் பேசினர். ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. இனி எந்த ஒரு நாடாவது பிற நாடுகளை முற்றுகையிட்டால் மீதி அத்தனை நாடுகளும் ஒன்று சேர்ந்து அதை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். கூடவே எந்த நாட்டிலும் புரட்சி வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

மிகவும் சீரியஸான ஒரு மாநாடாகத்தான் அது இருந்தது. ஆனால் பிரான்ஸ் தொடர்பான வேறொரு சீரியஸான விஷயம் விளையாட்டில் பதிந்து அது உலக அங்கீகாரம் பெற்றது அந்த நாட்டின் சரித்திரத்தில் மற்றொரு மைல்கல்.

2013-ம் ஆண்டில் பிரான்ஸில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது 1903-ல் அங்கு தொடங் கப்பட்ட, பின்னர் உலகப் புகழ் பெற்ற டூர் டே பிரான்ஸ் எனப்படும் சைக்ளிங் பந்தயம் தொடர்பாகத்தான் அந்த விழா.

(இரண்டு உலகப் போர்களின் போதும் இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. எனவே அந்த ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை). வேடிக்கை என்னவென்றால் இந்தப் போட்டி தொடங்கப்பட்டது ஒர் அரசியல் காரணத்துக்காக.

பிரெஞ்சு ராணுவத்தில் அதிகாரி யாக விளங்கியவர் கேப்டன் ஆஃல்ப்ரட் ட்ரேஃபாஸ். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். துரோகம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு அவர் குற்றம் செய்யவில்லை என்று தெரிய வந்தது.

இதற்கான ஆதாரங்கள் முன்னமே ராணுவ உயர் அதிகாரிகளிடம் இருந்தன என்றும், வேண்டுமென்றே அவற்றை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இதுபற்றி பட்டி மன்றம். கூடவே யூதர்களுக்கு எதிரான போக்கு பிரான்ஸில் நிலவுகிறது என்பதைப் பற்றியும் இருவேறு கருத்துகள். கிட்டத்தட்ட பிரான்ஸ் தேசமே இரண்டுபட்டு நின்றது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-8/article6818452.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 9

 
முதலாம் உலகப்போரின்போது பிரான்ஸ் விமானப் படையில் முக்கிய பங்காற்றிய கவுடிரான் ஜி-3 போர் விமானம்.
முதலாம் உலகப்போரின்போது பிரான்ஸ் விமானப் படையில் முக்கிய பங்காற்றிய கவுடிரான் ஜி-3 போர் விமானம்.

பிரான்ஸ் மக்களுக்கு சைக்ளிங் மிகவும் பிடிக்கும். அங்கு வெளியாகிக் கொண்டிருந்த ‘எல் வெலோ’ (L’Velo) என்ற சைக்ளிங் தொடர்பான சிறப்புப் பத்திரிகை, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட யூத அதிகாரிக்கு ஆதரவாகவும் அரசைக் கண்டித்தும் கட்டுரைகள் எழுத அங்கு பணியாற்றிய சிலர் அதிலிருந்து விலகினர்.

யூதர்கள் மீது நல்ல கருத்து இல்லாதவர்கள் என்று கருதப்பட்ட இவர்கள், ‘எல்-ஆட்டோ-வெலோ’ என்ற பெயரில் புதிய இதழை தொடங்கினார்கள். வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றார்கள். இவர்கள் மீது எல் வெலோ வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக தனது பெயரை எல்-ஆட்டோ என்று மாற்றிக் கொண்டது புதிய இதழ்.

இதன் காரணமாகவோ, என்னவோ புதிய இதழின் விற்பனை சரிந்தது. இழந்த வாசகர்களை பெற்றாக வேண்டுமே. என்ன செய்யலாம்? யோசித்த எல்-ஆட்டோ இதழ் நிர்வாகிகளுக்குத் தோன்றியதுதான் சைக்ளிங் போட்டி - அதாவது டூர் டெ பிரான்ஸ். இந்த அறிவிப்புக்குப் பிறகு அதன் விற்பனை ஆறு மடங்கு அதிகமானது. அவர்கள் விலகி வந்த இதழான எல் வெலோ விற்பனை சரிந்து திவால் ஆனது.

1903-ல் இந்த சைக்ளிங் போட்டி தொடங்கியபோது சமதளத்தில்தான் இது நடத்தப்பட்டது. இப்போது இருப்பதுபோல் மலைப்பகுதிகளில் எல்லாம் ஏற வேண்டாம். ஆனால் அப்போது கடக்க வேண்டிய தூரம் அதிகம் - சுமார் 400 கிலோ மீட்டர். தொடக்க ஆண்டில் 60 சைக்ளிங் வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 49 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி உலக சைக்ளிங் போட்டிகள் தொடங்கிய சுமார் 10 ஆண்டுகளில் வேறொன்று தொடங்கியது - முதலாம் உலகப்போர்!

ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாகச் சொன்னால் முதலாம் ஐரோப்பிய போர்தான். ஒருபுறம் ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, இத்தாலி நாடுகள். மறுபுறம் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், அயர்லாந்து நாடுகள்.

ரஷ்யாவும், ஜெர்மனியும் நட்பு நாடுகள். இவை எப்படி எதிர் துருவங்கள் ஆயின? இங்கிலாந்தும், பிரான்ஸும் எதிரிகள் அல்லவா, அவை எப்படி ஒரே அணியில் சேர்ந்தன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நீண்டவை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பார்ப்போம்.

சக்தி வாய்ந்த பீரங்கி படையைக் கொண்டிருந்த ஜெர்மனி, பெல்ஜியத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டபிறகு பிரான்ஸை முற்றுகையிட்டது. பாரீஸின் வெளி எல்லை வரை ஜெர்மன் ராணுவம் முன்னேறியது. ஆனால் அவர்களைப் பின்வாங்கவும் விடாமல் முன்னேறவும் விடாமல் இருபுறமும் சூழ்ந்த பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் ராணுவங்கள் பலத்த சேதத்தை உண்டாக்கின. ஜெர்மனியின் இரு பிரிவு ராணுவங்களையும் இணையவிடாமல் பிரான்ஸ் ராணுவம் செயல்பட்டதால் பாரீஸை தக்க வைத்துக் கொள்வது சாத்தியமானது.

பிரான்ஸை ஜெர்மனியால் முற்றுகையிட முடியவில்லை என்பது ஒரு திருப்புமுனை. இதற்குப் பிறகும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதலாம் உலகப்போர் தொடர்ந்தது என்றாலும் ஜெர்மனியின் தொடர் தோல்விகளுக்கு பிள்ளையார் சுழியிட்டது பிரான்ஸில் அதற்கு ஏற்பட்ட மூக்குடைப்புதான்.

எதிர்பாராமல் வேறொரு பகுதியிலிருந்து ரஷ்யா ஜெர்மனியின் மீது தாக்குதலை நடத்தியதும் ஜெர்மனியின் தோல்விக்கு ஒரு காரணம். தவிர பிரிட்டன் பிரான்ஸுக்கு ஆதரவாக இந்த அளவு செயல்படும் என்பதை ஜெர்மனி எதிர்பார்க்கவில்லை. எப்படியோ ஜெர்மனி மொத்தத்தில் ‘மகத்தான’ தோல்வி கண்டது.

1919 ஜூன் 28 அன்று சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. பிரான்ஸில் உள்ள வெர்செயிலெஸ் என்ற இடத்தில் அது கையெழுத்தானது. முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை வடிவமைத்ததில் பிரான்ஸுக்குப் பெரும் பங்கு உண்டு. மீண்டும் ஒரு யுத்தத்தை ஜெர்மனி தொடங்கிவிட முடியாத அளவுக்கு கடுமையான நிபந்தனைகள். 60 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்டிருந்த ஜெர்மனி, தன் ராணுவத்தை வெறும் ஒரு லட்சம் பேர் கொண்டதாக சுருக்கிக் கொள்ள வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களையும், ராணுவ விமானங்களையும் விற்றுவிட வேண்டும். அதிகபட்சம் ஆறு போர்க் கப்பல்களைத்தான் அது வைத்திருக்கலாம். தான் கைப்பற்றிய பிரெஞ்சு பகுதிகளை அது மீண்டும் தந்துவிட வேண்டும்.

இவற்றைவிட கடுமையானதாக இருந்தது வேறொரு நிபந்தனை. கூட்டு நாடுகளுக்கு (முக்கியமாக பிரான்ஸுக்கு) முதலாம் உலகப் போரினால் உண்டான நஷ்டத்தை ஜெர்மனி ஈடு செய்ய வேண்டும். அந்த நஷ்ட ஈடு என்பது எவ்வளவு? கணக்கெடுக்கப்படவில்லை. ஆனால் முதல் தவணையாக 132 பில்லியன் தங்க மார்க்குகளை (மார்க் என்பது ஜெர்மானிய நாணயம்) தர வேண்டும் என்றது உடன்படிக்கை. இப்படியொரு மாபெரும் தொகையைத் தவணைகளில் ஜெர்மனி செலுத்தி முடித்தபோது வருடம் கி.பி. 2010 என்று ஆகிவிட்டது.

‘இது மிகவும் ஒருதலைப் பட்சமான ஒப்பந்தம்’ என்ற கருத்தை தன் நாட்டு மக்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றி கண்டார் ஹிட்லர். ‘தவறுகளை சரி செய்ய வேண்டும்’ என்று அவர் களத்தில் இறங்க, பிறந்தது இரண்டாம் உலகப்போர்!

மேற்படி உடன்படிக்கையால் உண்டான திருப்புமுனைகளில் முக்கியமானது ‘லீக் ஆஃப் நேஷனஸ்’ உருவாக்கம். ஐ.நா. சபையின் முன்னோடி என்று இதைச் சொல்லலாம்.

யுத்தம் என்ற ஒன்று இல்லாமல் நாடுகள் சமரசமாகப் போக வேண்டும். இதற்கு வழிவகுக்கதான் மேற்படி அமைப்பு உருவானது. ஆனால் அடுத்த உலகப்போரை அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-9/article6825884.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 10

 
 
1944 ஆகஸ்டில் நாஜிக்கள் பிடியில் இருந்து பாரீஸை மீட்க உதவிய அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறிய நகர மக்கள்.
1944 ஆகஸ்டில் நாஜிக்கள் பிடியில் இருந்து பாரீஸை மீட்க உதவிய அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறிய நகர மக்கள்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மீண்டும் பிரான்ஸை ஆக்கிரமித்தது. இம்முறை ஜெர்மனி தரப்பில் ஜப்பான் சேர்ந்து கொண்டது. கூட்டு நாடுகள் அணியில் அமெரிக்கா வெளிப்படையாகவே இடம் பிடித்தது.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கமே ‘’பிரான்ஸுடன் போர்’’ என்று ஜெர்மனி அறிவித்ததுதான். இம்முறை ஜெர்மனியின் தாக்குதல் பலமாகவே தொடங்கியது. நெதர்லாந்து, வடக்கு பெல்ஜியம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தி பிறகு பிரான்ஸின் மையப் பகுதியை நோக்கி முன்னேறியது.

இம்முறை பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியின் இரண்டு ராணுவப் பிரிவுகளுக்கிடையே மாட்டிக் கொண்டது. தனிமைப்பட்ட பிரான்ஸ் ராணுவத்தை ஜெர்மனி எதிர்கொண்டது. பாரீஸ் - அதுதான் ஜெர்மனி ராணுவத்தின் முக்கிய இலக்கு.

பிரிட்டிஷ் புதிய பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் தன் முழு ஆதரவை பிரான்ஸுக்கு அளித்தார். நேரடியாகவே பாரீஸுக்கு ஒரு விசிட் செய்தார். ஆனால் தொடர்ந்து தனது ராணுவத்தை பிரான்ஸுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டினார். தனது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம்.

இதற்குள் பிரெஞ்சு ராணுவம் பலத்த அடி வாங்கியிருந்தது. சரணடையத் தயாரானது. பாரீஸை அடைந்தார் ஹிட்லர். பிரபல ஈஃபில் டவருக்கு முன்னால் நின்று கொண்டு வெற்றிக் களிப்புடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

ஜூன் 13, 1940 அன்று பாரீஸ், பிரான்ஸின் கையிலிருந்து முழுமை யாக நழுவியது. அன்று பிரான்ஸ் அரசு அதை தன் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாக அறிவித்தது. சமாதான உடன் படிக்கைக்கு அவசரமாக ஒத்துக் கொண்டது பிரான்ஸ். ஆனால் ஹிட்லர் அந்த ஒப்பந்தம் எந்த இடத்தில் கையெழுத்தாக வேண்டும் என்ப தில் உறுதியாக இருந்தார். எந்த ரயிலில் ஜெர்மனி முதலாம் உலகப் போரில் சரண் அடைந்ததை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டதோ, அதே ரயிலில்தான் இப்பொழுது பிரான்ஸ் கையெழுத்திட வேண் டும்.

ஆக பிரான்ஸ் ஒட்டுமொத்தமான அவமானத்தை சந்தித்தது. பிரான்ஸின் படு தோல்வி கூட்டு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சி. அடுத்த நான்கு வருடங்களுக்கு பிரிட்டன் கிட்டத் தட்ட தனியாகவே தனது எல்லைப் பகுதிகளில் ஜெர்மனியுடன் போராட வேண்டிய கட்டாயம். இந்த இடத்தில் சார்லஸ் டி காலே குறித்து குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

பிரான்ஸின் ராணுவத் தளபதியாக விளங்கிய அவர் அந்த நாட்டின் அதிபதியும் ஆனார். ஆனால் பாரீஸ் ஜெர்மனியின் வசமான 1940-லிருந்து அவர் பிரான்ஸின் 'சட்ட பூர்வமற்ற' அதிபரானார். அதாவது ஜெர்மனியின் வசப் பட்ட பிறகு, பிரெஞ்சு அரசாங்கம் டி காலேவிடமிருந்து ஃபிலிப் பெடென் என்பவர் கைக்குச் சென்றது. மத்திய பிரான்ஸிலிருந்த விச்சி என்பதைத் தலை நகரமாகக் கொண்டு, ஜெர் மனியின் ஆலோசனைப் படி அரசு நடத்தினார் இவர்.

ஜெர்மனியிலிருந்து நாஜிக்கள் பாரீஸைப் பரவலாகவே ஆக்கிர மித்தனர். அதேசமயம் புரட்சி ஆட்சி ஒன்றை டி காலே பிரிட்டனிலிருந்து கொண்டே நடத்தத் தொடங்கினார். அங்கிருந்தே பிரெஞ்சு ராணுவம் ஒன்றை உருவாக்கினார். ஒரு வழியாக மேலும் பல அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பாரீஸ் விடுதலை பெற்றது. பிரிட்டனிலிருந்து இயங்கிய பிரெஞ்சு ராணுவமும் அமெரிக்க ராணுவமும் கூட்டு சேர்ந்து பாரீஸை நாஜிக்களிடமிருந்து விடுவித்தனர்.

இதற்குள் காலத்தின் கோலமாக ஹிட்லரின் ராணுவத்திலேயே சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. “பாரீஸைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பாக அந்த நகரின் முக்கிய அடையாளங்களை அழித்துவிட்டு, நகரைத் தீக்கிரையாக்கி விட்டு பிறகு ஜெர்மனிக்கு வந்து சேருங் கள்” என்ற ஹிட்லரின் ஆணையை, அவரது தளபதி ஏற்க மறுத்து விட்டார்.

பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் உள்ள உறவு இன்றுகூட அவ் வளவு சிறப்பாக இருக்கிறது என்று கூறிவிட முடியாது. இன்றைய பிரான்ஸ் அதிபர் ஹொலந்தோ வும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் பல விஷயங்களில் எதிரும் புதிருமாகத்தான் ஐரோப் பிய யூனியனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு மற்றும் கிழக்கு ஜெர் மனிகள் இணைந்ததை பிரான்ஸ் ரசிக்கவில்லை. சொல்லப் போனால் அதற்கு இந்த நிகழ்வு அதிர்ச்சிதான்.

1981-ல் பிரான்ஸ் அதிபர் மிட்டர் ரன்ட் பல தொழில்களையும் வங்கி களையும் தேசியமயமாக்கினார். ஐரோப்பிய யூனியனின் பொருளா தாரத்துக்கு இது ஏற்றதல்ல என்று குரல் கொடுத்தது ஜெர்மனி.

ஐரோப்பிய யூனியனில் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது பிரான்ஸ். பட்ஜெட் பற்றாக்குறை குறைக்கப் பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறுவதை தள்ளிப்போட வேண்டும் என்கிறது பிரான்ஸ். மத்திய தரைப்பகுதியைச் சுற்றி யுள்ள ஐரோப்பிய நாடுகளும் வடஅமெரிக்க நாடுகளும் இணைந்து ஓர் அமைப்பை உரு வாக்க வேண்டுமென்றும் பிரான்ஸ் கூறி வருகிறது. லிபியாவுடன் ஓர் அணு ஆயுத ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது பிரான்ஸ்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும் ஜெர்மனியின் பிரதமர் மெர்கெல் பிரான்ஸுக்கு எதிராகத்தான் பேசி வருகிறார் அல்லது வாக்களித்திருக் கிறார். அதாவது இந்த இரு நாடு களுக்கிடையே உள்ள சரித்திரப் பகைமை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் பொதுவாக ‘முதலில் செயல்படுவோம். பிறகு ஆலோசனையைக் கேட்போம் என்கிற வகையைச் சேர்ந்தவர். ஜெர்மனி பிரதமரோ திறமையான வாதங்களை முன்வைத்துவிட்டு பிறகு தன் முடிவை செயல்படுத்த வேண்டும் என்பதுபோல் நடந்து கொள்கிறார்.

பிற ஐரோப்பிய நாடுகள் இரு தரப்பிலும் நியாயமும் அநியாய மும் உள்ளன என்பதுபோல் நடந்து கொள்கின்றன.ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸ் குடியரசு ஆனபின் அதிபராக பதவியேற்ற இருவரின் செயல்பாடுகள் ஜெர்மனியை மட்டுமல்ல, பல உலக நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்தது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-10/article6827400.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 11

 
எடித் கிரேஸ்ஸன்
எடித் கிரேஸ்ஸன்

1981ல் பிரான்ஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஃபிரான்சுவா மிட்டர்ரன்ட். தொடர்ந்து பதினான்கு வருடங்கள் (அதாவது 1995 வரை) இந்தப் பதவியை வகித்தார். பிரான்ஸ் சரித்திரத்தில் இவ்வளவு காலம் தொடர்ந்து அதிபராக இருந்தவர் இவர்தான்.

இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் பணியாற்றி யவர். தொடக்கத்தில் டி காலேவின் தாற்காலிக அரசில் இடம் பெற்ற பின் ஒரு காலகட்டத்தில் அவருக்கு நேர் எதிர் நிலையை எடுத்தார் மிட்டர்ரன்ட். 1965ல் அதிபர் தேர்தலில் டி காலோவுக்கு எதிராகப் போட்டியிட்டார், தோற்றார்.

மிட்டர்ரன்டின் ஓய்வுக் காலத் தில் அவர் குறித்த பல விஷயங்கள் வெளியாகி அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தின. நாஜிக்களின் ஆதரவோடு பிரான்ஸில் நடைபெற்ற பொம்மை ஆட்சியாளர்களோடு இவர் கொண்டிருந்த தொடர் நட்பு வெளியானது. ஊழல் சங்கதிகளும் அடிபட்டன. திருமண வட்டத்துக்கு வெளியே இவர் சில பெண்களுடன் கொண் டிருந்த தொடர்பு வெளியானது.

1991ல் இவர் எடித் கிரேஸ்ஸன் என்பவரை பிரதமராக்கினார். 1996-ல் மிட்டர்ரன்ட் இறந்தார்.

எடித் கிரேஸ்ஸன் பிரான்ஸின் முதல் பெண் பிரதமர். முன்னாள் பிரதமர். இன்று அவர் ஐரோப்பிய யூனியனில் பொறுப்பு மிக்க அதிகாரி. அவர்மீது சமீபத்தில் கடுமையான சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவை நிரூபிக்கப்பட்டுவிட்டால் அவர் தன் பதவியை இழக்க வேண்டியதுதான். மேலும் வருடத்துக்கு 26,000 டாலர் என தீர்மானிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தையும் அவர் கைகழுவ வேண்டியதுதான். தவிர ஐந்து வருட சிறைத் தண்டனையையும் அனுபவிக்க நேரலாம். இதனால் பிரான்ஸ் சங்கடப்படுகிறது. இப்போதே அதற்கு தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது.

என்னதான் செய்துவிட்டாராம் எடித்? ஏமாற்று, போலிக் கையொப்பம், நம்பிக்கைச் சிதைவு என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

1995-லிருந்து 1999-வரை ஐரோப்பிய யூனியனின் ஆராய்ச்சி மற்றும் கல்வி அதிகாரியாக விளங்கியபோது எடித் பல ஒப்பந்தங்களில் தில்லுமுல்லு செய்ததாகக் குற்றச்சாட்டுகள். தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஐரோப்பிய யூனியனின் நிதியைக் கையாடல் செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு. அவருடைய நண்பரான பல் டாக்டர் ஒருவரை ஐரோப்பிய யூனியனின் எய்ட்ஸ் பிரிவு ஆலோசகராக அவர் நியமித்ததும் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அந்த டாக்டருக்கு எய்ட்ஸ் குறித்த எந்த ஆழ்ந்த அறிவும் இல்லையாம். தனது இரண்டு வருடப் பணிக்காக அந்தப் பல் டாக்டர் 85,000 டாலரை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு வெறும் 24 பக்க ஆராய்ச்சியை சமர்ப்பித்திருக்கிறார். அதில் உருப்படியாக எதுவும் இல்லை என்று கருத்து கூறியிருக்கிறார்கள் பிற மருத்துவர்கள்.

வழக்கு நடைபெறுகிறது. “பிரான்ஸை அவமானப்படுத்த சில ஐரோப்பிய நாடுகள் செய்யும் சதி” என்கிறார் எடித். இந்த நாடுகளில் ஜெர்மனியும் உண்டு என்பது வெளிப்படை. ஆனால் குற்றச்சாட்டுகளும், ஆதாரங்களும் வலிமையாகவே உள்ளன.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக ஜாக்கஸ் சிராக் இருந்தபோது செயல்படுத்தப்பட்ட ஒரு முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெர்லின் நகரில் குழுமிய 12,000 இளைஞர்கள் அங்குள்ள பிரான்ஸ் தூதரகத்தின்மீது அழுகிய முட்டைகளை வீசி தங்கள் மனக்கொதிப்பை வெளிப் படுத்தினார்கள். சிட்னியில் பிரெஞ் சுக் கொடி எரிக்கப்பட்டது. சிலி நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் மனிதச் சங்கிலியாக உருவாகி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள். நியூசிலாந்தும், சிலியும் தங்கள் தூதர்களை பிரான்ஸிலிருந்து வாபஸ் பெற்றன.

காரணம் பிரான்ஸ் நடத்திய அணு ஆயுதச் சோதனை.

மூன்று முக்கியக் காரணங்களுக்காகத்தான் பிரான்ஸ் இந்த அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. தங்களது புதிதான போர்க் (நீர்மூழ்கிக்) கப்பலின் திறமையை உறுதி செய்து கொள்வது, தங்களது பழைய அணு ஆயுதங்களின் தற்போதைய செயல்திறனை அறிவது, கம்ப்யூட்டர் உத்திகளை எந்த அளவு போர் ஆயுதங்களில் பயன்படுத்த முடியும் என்பதற்கான நேரடிப் புள்ளிவிவரங்களை அறிந்து கொள்வது ஆகிய மூன்றும்தான் அந்தக் காரணங்கள். அதே சமயம் பிரான்ஸ் தன்னை ஒரு வலிமை மிகுந்த பேரரசாக உலகுக்குக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்றும் இதைச் சொல்லலாம்.

பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞானிகள் கூறிய சமாதானம் இதுதான். ‘’எங்களது சோதனைகளால் எந்தவிதக் கதிர்வீச்சும் உண்டாகவில்லை. இதனால் எந்தவித உயிரினங்களின் வாழ்க்கை முறையும் பெரும் மாறுதலுக்கு உள்ளாகிவிடவில்லை. அப்படி இருக்க ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?’’.

இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் முயற்சியாக பிரான்ஸ் அரசு பல பத்திரிகை நிருபர்களை, அணு சோதனை நடத்த தென் பசிபிக் பகுதிக்கு அழைத்துச் சென்று வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தச் செய்து அந்தப் பகுதி எந்தவிதக் கதிர்வீச்சுக்கும் உள்ளாகிவிடவில்லை என்பதை நிரூபித்தது. அணுகுண்டு வெடித்த இடத்திற்கு மிக நெருக்கமான தீவே 120 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியது பிரான்ஸ் அரசு.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-11/article6833517.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 12

 
 
 
suthanthiradevi_2294850f.jpg
 

பிரான்ஸின் அணுகுண்டு சோதனை சம்பந்தமாக இன்னொரு கேள்வியும் எழுந்தது. பிரான்ஸ் தனது அணு ஆயுத சோதனைகளுக்குக் களமாக தனது எல்லையிலேயே ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்காமல் முராரோ என்ற பசிபிக் கடற் பகுதியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு “பாரிஸ் எப்படி பிரான்ஸின் ஒரு பகுதியோ, அது போல முராரோவும் பிரான்ஸின் ஒரு பகுதியே’’ என்று கூலாக பதிலளித்தார் அன்றைய அதிபர் சிராக். இதைப் பல நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

வேதனையான விஷயம் என்னவென்றால் ஹிரோஷிமா, நாகாஸகி நகர்களின்மீது அமெரிக்கா குண்டுவீசிய ஐம்பதாண்டு நிறைவு உலகெங்கும் நினைவு கொள்ளப்பட்ட சில வாரங்களிலேயே பிரான்ஸ் தனது அணு ஆயுத சோதனைகளைத் தொடங்கிப் பலரையும் பீதிக்குள்ளாக்கியதுதான். என்றாலும் 2008-ல் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.

சமீபத்திய பிரான்ஸ் வரலாற் றில் ஏற்பட்ட மற்றொரு முக்கிய திருப்புமுனை பிரான்ஸுக்கும், பிரிட்டனுக்கும் இடையே அமைக்கப்பட்ட மிக நீண்ட சுரங்கப்பாதை. கடலுக்குக் கீழ் அமைந்துள்ள இதைக்கட்ட எட்டு வருடங்கள் ஆயின. பல கோடிக்கணக்கான பவுண்டுகள் செலவிடப்பட்டன.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்பச் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூறப்பட்டது. பிரான்ஸுக்கு பிரிட்டனைவிட நெருக்கமான நண்பன் யார் என்று கேட்டால் அமெரிக்கா என்று கூறிவிடலாம்தான்.அமெரிக்காவின் கவுரவச் சின்னங்களில் ஒன்றான `சுதந்திர தேவி சிலை’ கூட பிரான்ஸை நினைவுபடுத்தும் ஒன்றுதான்.

ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பாரீஸை விடுவிக்க அமெரிக்க ராணுவமும் உதவி யதைப் பார்த்தோம். அதேசமயம் பிரான்ஸின் உதவியில்லாமல் அமெரிக்கப் புரட்சியும் வெற்றி அடைந்திருக்காது. கப்பல்கள், ஆயுதங்கள், ராணுவ வீரர்கள் என்று பல விதங்களில் வாரி வழங்கியது பிரான்ஸ். இதற்கு பதில் அங்கீகாரமாக அமெரிக்கா வின் உயர் ராணுவ பதவிகளில் ஒரு பிரெஞ்சு ராணுவ வீரர் நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் நெகிழ்ந்தது.

அதற்கு சுமார் நூறு வருடங் களுக்குப் பிறகு, அதாவது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பிறகு, பிரெஞ்சு மக்கள் பலரும் அமெரிக்காவைப் பாராட்ட நினைத்தார்கள். அங்கு ஜனநாயக ஆட்சி அமைந்ததும், அடிமை முறை முடிவுக்கு வந்த தும் அவர்களை மகிழ வைத்தன.

பிரான்ஸும், அமெரிக்காவும் இரு சகோதரிகள் என்று வர்ணித்துக் கொண்டார்கள். இந்த இரு நாடுகளும் தொடர்ந்து நட்புடனேயே இருந்து வந்தன என்பது உண்மை. இன்னும் 11 வருடங்களில் அமெரிக்க சுதந்திரத்தின் நூறாவது ஆண்டு கொண்டாட இருப்பதை உணர்ந்தபோது கருத்துகள் தீர்மானம் ஆனது. என்றென்றும் நிலைக்கும்படி ஒரு சிலை பரிசாக அளிக்கலாம்!

பிரெடரிக் அகஸ்த் யர்தோல்டி என்ற சிற்பியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிரம்மாண்டமாக உருவானது சுதந்திர தேவியின் சிலை. இது பிரான்ஸ் மக்களின் அன்பளிப்பு. அது மட்டுமல்ல ஒருவிதத்தில் கலங்கரை விளக்கமும்கூட. அமெரிக்காவின் வரவேற்புச் சின்னமாக அது மாறிப்போனது.

அரசியல் தளத்தைப் பொறுத்தவரை பிரான்ஸின் அடுத்த அதிபர் தேர்தல் 2017-ல்தான். ஆனால் ஏற்கெனவே அதற்கான போட்டி தொடங்கி விட்டது போலத்தான் தோன்றுகிறது.

2007லிருந்து 2012வரை பிரான்ஸ் அதிபராக விளங்கியவர் நிகோலஸ் சர்கோஸி. இவர் மைய-வலதுசாரி கூட்டமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போது பிரான்ஸில் இருகட்சித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. கட்சியை இணைப்பது என்பது இவருக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

2002 தேர்தலில் தோற்றால் பொது வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் சர்கோஸி. (ஒருவேளை தன் தோல்வியை அவர் எதிர்பார்க்க வில்லையோ என்னவோ!). ஆனால் வென்றது பிரான்சுவா ஹொலாந்துதான். என்றாலும் கட்சியின் வேண்டுகோளுக் கிணங்க மீண்டும் சர்கோஸி அரசிய லுக்கு வந்திருக்கிறார்.

ஹொலாந்துவுக்கு சர்கோஸி யின் தேர்வு இனிப்பானதாக இருந்தால் வியப்பில்லை. ஏனென்றால் அவரது ஆட்சியில் ஏற்பட்ட கசப்புகள் சீக்கிரத்தில் மறைந்து விடாது என்பது ஹொலாந்துவின் எண்ணம்.

இதற்கு நடுவே லீ பென் என்ற பெண்மணி தனது கட்சியினரின் 100 சதவிகித ஆதரவைப் பெற்று முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் எல்லாவற்றையும் விட பிரான்ஸ் குறித்த இத் தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சார்லஸ் ஹெப்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தாக்கம்தான் பிரான்ஸை அதிகம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

தீவிரவாத தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு பள்ளிகளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஒரு நிமிடம் மவுனம் காக்க வேண்டுமென்று அறிக்கை விட்டார் கல்வி அமைச்சர். ஆனால் சில மாணவர்கள் இதற்கு உடன் படவில்லை எனும்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.

ஒரு பள்ளியில் படிக்கும் மாண வர்களில் மூன்றில் இரண்டு பேர் “நபிகள்நாயகத்தை கார்டூனாக வரைந்திருக்கக் கூடாது. மத நம்பிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் கொச்சைப் படுத்தக் கூடாது’’ என்று தெளிவாகவே கூறினார்கள்.

பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடுதான். இனி வருடத்துக்கு ஒரு முறை பள்ளிக்கூடங்களில் மதச் சார்பற்ற சட்டங்களை விளக்கும் வகையில் ஒரு தினம் ஒதுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் கல்வி அமைச்சர்.

பிரான்ஸ் அரசு அவசர அவசர மாக பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தீவிரவாதி களை எப்படிக் கையாள்வது என்ப தோடு, மத விரோதம் பள்ளி மாணவர்களுக்கிடையே பரவாமல் எப்படி பார்த்துக் கொள்வது என் பதையும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர் களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/world/பிரமிப்புகளை-அளிக்கும்-பிரான்ஸ்-12/article6837911.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.