Jump to content

சுவைக்கு அடிமையாகாதீர்கள்! - எச்சரிக்கிறார் நல்லுணவு செயல்பாட்டாளர் வாணி ஹரி


Recommended Posts

vani_2570492f.jpg

“என் பெயர் வாணி ஹரி. ஆனால், அமெரிக்காவில் நான் படித்த பள்ளியில் இந்தப் பெயரை யாருக்கும் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதனால் என் பெயரை நான் வெறுத்தேன். சில காலம் கழித்துத்தான் தெரிந்தது. ‘வாணி' என்ற என் பெயருக்கு ‘குரல்' என்பது அர்த்தம் என்று. இன்று பல கோடி மக்களின் சார்பாக நான் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது எனக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே தெரிகிறது!" - புன்னகை தவழத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வாணி ஹரி. பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு 'ஆடிஷனு'க்கு வந்த பெண் போன்ற தோற்றம்.

ஆனால், அவருடைய புலனாய்வு எழுத்துகளால் அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு உணவு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 'தி ஃபுட் பேப் வே' எனும் இவருடைய புத்தகம் அமெரிக்காவில் பெஸ்ட் செல்லர். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட் அமைப்புகளைச் சேர்ந்த அனந்து ஏற்பாட்டில் சென்னைவாசிகளைச் சந்திக்கச் சமீபத்தில் வந்திருந்தார் வாணி ஹரி. அவருடனான உரையாடலில் இருந்து...

சில மாதங்களுக்கு முன்பு 'ஆன்ட்டி பயாட்டிக்' செலுத்தப்பட்ட கோழிகள் குறித்து, ஓர் ஆய்வு வெளிவந்தது. அது குறித்து?

இன்று பல பன்னாட்டு உணவு நிறுவனங்கள் 'ஆன்ட்டிபயாட்டிக்' செலுத்தப்பட்ட இறைச்சியைத்தான் மக்களுக்குப் பரிமாறுகின்றன. அதனால் பல நேரங்களில் நல்ல பாக்டீரியா கொல்லப்பட்டு, ஆன்ட்டிபயாட்டிக்கை எதிர்க்கும் கிருமிகள் தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. மாடு, வெண்பன்றி, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி உயிரினங்கள் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றன.

அவற்றிடமிருந்து ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புக் கிருமிகள் மனிதர்களுக்கு வரும். இதில் இறைச்சி உண்ணாமல் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுபவராக இருந்தாலும்கூட, பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் ஓர் ஆண்டில் தேவையில்லாத ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் சுமார் 23 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். ஆன்ட்டிபயாட்டிக் செலுத்தப்பட்ட இறைச்சியை உண்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இறந்தவர்களைக் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை நிச்சயம் எகிறும்.

இந்தியாவில் ‘மேகி' நூடுல்ஸ் பிரச்சினை பல விவாதங்களைக் கிளப்பியது. ஆனால், அமெரிக்காவில் 'மோனோசோடியம் குளூட்டமேட்' (எம்.எஸ்.ஜி) பயன்பாட்டில் உள்ளதே?

அமெரிக்காவில் எம்.எஸ்.ஜி., பயன்பாடு பரவலாக இருப்பது உண்மைதான். ஆனால், அது மக்களின் பார்வைக்குத் தெரியாமல் ‘ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட்', ‘சாய் புரோட்டீன்', ‘கால்சியம் குளுட்டமேட்' என வேறு பல பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனுடைய முக்கியப் பயன்பாடு, நாக்கின் சுவை மொட்டுகளைத் தூண்டிவிடுவதுதான். அதற்கு எம்.எஸ்.ஜி. எதற்கு? இயற்கையாகக் கிடைக்கும் உணவு மூலம் சுவையும் சத்தும் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிட்டதன் விளைவே எம்.எஸ்.ஜி.யின் செயற்கை சுவை தூண்டல். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மான்சான்டோவுடன் தொடர்பு கொண்டிருந்த பேராசிரியர் ஒருவரை நீங்கள் அம்பலப் படுத்தினீர்கள். இந்தியாவில் இன்று பல வேளாண் பல்கலைக்கழகங்கள் அந்த நிறுவனத் துடன் ஒப்பந்தங்கள் போட்டிருப்பது பற்றி?

அந்தப் பேராசிரியர் கெவின் ஃபோல்டா. மான்சான்டோவுக்கு எதிராக நாங்கள் போராடியபோது, அவர் தானாகவே எங்களுக்கு எதிராகப் பேசினார். ‘நீங்கள் மான்சான்டோவிடம் நிதியுதவி பெற்றிருக்கிறீர்கள்' என்று நாங்கள் குற்றஞ் சாட்டியபோது, முதலில் அதை மறுத்தார்.

பின்னர் ‘தகவல் அறிவதற்கான சுதந்திரச் சட்டம்' மூலம் அந்த நிறுவனத்திடம் இருந்து, தனது ஆய்வுகளுக்கு அவர் நிதி பெற்றிருப்பது தெரியவந்தது. இதுபோன்று உணவு வணிகத்தைக் கைப்பற்ற நினைக்கும் நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால், அதன் முடிவுகள் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மையுடன் இருக்கும்? இது போன்ற ஆராய்ச்சிகள் முழுமையாகத் தடை செய்யப்படும்வரை நாம் போராட வேண்டும்.

எல்லா நிறுவனங்களையும் கேள்வி கேட்கும் உங்களுக்கு, எந்த ஆபத்தும் இல்லையா?

என்னை இழிவுபடுத்த மான்சான்டோ கங்கணம் கட்டி கொண்டிருக்கிறது. நான் ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வுக் கூட்டங்களுக்குக் கெவின் ஃபோல்டா போன்ற நபர்களை அனுப்பி ‘வாணி கூறுவது சுத்தப் பொய். அவற்றில் துளியும் அறிவியல் உண்மை இல்லை' என்று கூட்டத்தின் நடுவே கத்துவதற்கு, அந்த நிறுவனம் சில ஆட்களை நியமித்துள்ளது.

நான் எங்குச் செல்கிறேன், யாருடன் பேசுகிறேன், எனது அடுத்த திட்டம் என்ன என்பதை எல்லாம் அந்த நிறுவனம் தெரிந்து வைத்திருக்கிறது. மான்சான்டோவால் நான் கண்காணிக்கப்படுகிறேன் என்பது உண்மைதான்!

அந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரவுண்டப்' களைக்கொல்லி புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்று சமீபத்தில் தகவல் வெளியானது. அதன் விற்பனையைத் தடுக்க அமெரிக்க அரசு என்ன செய்திருக்கிறது?

ஐரோப்பாவில் இந்தக் களைக்கொல்லியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். ஆனால், அமெரிக்கா வில் அதற்குத் தடை விதிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், அந்த நிறுவனத்துக்கு அரசியல் பலம் அப்படி. எந்த அளவுக்கு என்றால்... அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளின்டனுக்குத் தேர்தல் நிதி அளிக்கும் அளவுக்கு!

பள்ளிகளில் மதிய உணவு கொடுக்கும் திட்டத்தின் கீழ் ‘சப்வே' நிறுவனத்தின் உணவுப் பொருட்களை வழங்கலாம் என்று மிஷெல் ஒபாமா கூறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

'சப்வே' உணவுப் பொருட்களில் ‘அசோடிகார்பனமைடு' எனும் வேதி பொருள் கலக்கப்படுகிறது. இதே வேதிப்பொருள்தான் யோகா விரிப்புகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியென்றால், அதன் உணவுப் பொருட்கள் எவ்வளவு விஷத்தன்மை கொண்டவை என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம்.

அதேபோல, பீட்ஸாவை மதிய உண வுக்கு வழங்கலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கூறியிருந்ததே...

இதெல்லாம் கார்ப்பரேட் சூழ்ச்சி. வாய்ப்பு இருக்கும் இடங்களில் நிறுவனங்களே நேரடியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும். வாய்ப்பு இல்லாத இடங்களில் அரசியல் வாதிகள் அவற்றுக்காக ‘லாபி’ செய்வார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘டிரபுள் ப்ரூவிங் டீ' என்ற தலைப்பில் தேயிலையில் பூச்சிக்கொல்லிகள் குறித்த ஆய்வைக் கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டது. ‘இந்தியத் தேயிலை வணிகத்தை அந்த அமைப்பு குலைக்கப் பார்க்கிறது' என்று அந்த அமைப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டது பற்றி...

தேயிலைத் தூள் மட்டுமல்ல... தேயிலைத் தூளைச் சுமந்துவரும் பைகளும் (டீ பேக்) கூட ஆபத்தானவைதான்! அந்தப் பைகளைக் கொதிக்கும் நீரில் போடும்போது, ‘பாலிலாக்டிக் ஆசிட்' மற்றும் ‘பாலிஎதிலீன் டிரெப்தலேட்' ஆகிய வேதி பொருட்கள் தேநீரோடு கலந்துவிடுகின்றன. இவை புற்றுநோயைத் தூண்டக்கூடியவை.

அது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தூண்டக்கூடிய பூச்சிக்கொல்லி தேயிலையின் மீது தெளிக்கப்பட்டிருந்தால், தேநீரோடு அந்த ரசாயனத்தையும் சேர்த்தே குடிக்கிறோம் என்று அர்த்தம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட தேயிலையை எத்தனை முறை சுத்தப்படுத்தினாலும், அந்த ரசாயனப் பொருட்கள் போகாது, எச்சமாகத் தேங்கியிருக்கும்.

இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நாடும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால், வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடிகிறது. இதற்கு என்ன தீர்வு?

நம் வசதிக்கு என்ன முடிகிறதோ, அந்த இயற்கை உணவையாவது வாங்கிச் சாப்பிடலாம். அது ஒரே ஒரு வாழைப்பழமாகக்கூட இருக்கலாம்.

நம் வீடுகளில் கொஞ்சம் இடம் இருந்தால், நாமே ஒரு சின்ன தோட்டத்தை உருவாக்கி இயற்கை முறையில் காய்கறிகள், பழங்களை விளைவிப்பது செலவு குறைவான, நம்பகமான வழி.

மரபணு மாற்ற உணவுப் பொருட்களை 'லேபிள்' செய்ய வேண்டும் என்று வாதாடி வருகிறீர்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியம்?

கடையில் வாங்கும் ‘பேக்கேஜ்டு' உணவுப் பொருட்களில் என்னென்ன உட்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய, அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் தகவல்களைப் படித்துப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் விழிப்புணர்வு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அவ்வளவு தூரம் மரபணு மாற்ற உணவுப் பொருட்களுக்கு 'லேபிளிங்' செய்ய வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையும் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்வைப் பரவலாக்கும்.

மருத்துவமனை போதிமரம்

"என் பெற்றோர் பஞ்சாபிகள். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில்தான். சின்ன வயதில் எல்லாப் பெண்களையும் போலவே வீட்டில் அம்மா செய்துதரும் உணவை மறுத்தேன். எப்போதும் சப்வே, கிராஃப்ட், சிபோட்ல் எனப் பன்னாட்டு உணவு நிறுவனங்களின் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டுவந்தேன்.

அதனால் நான் குண்டானேன். முகத்தில் பருக்கள் தோன்ற ஆரம்பித்தன. கேலிக்கு ஆளானேன். இறுதியில் அப்பென்டிசைட்டிஸ் அறுவைசிகிச்சை செய்யப்படும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தபோது, என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என யோசித்தேன். யோசித்து... யோசித்து... ‘முறையற்ற உணவுப் பழக்கமும், நொறுக்கு தீனிகளும்தான் காரணம்' என்பதை உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு என் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்து, நிறைய தேட ஆரம்பித்தேன். அதுவரை நான் சாப்பிட்டு வந்த உணவு வகைகளில், என்ன வகையான உட்பொருட்கள் உள்ளன என்பதைப் பற்றி யதேச்சையாக ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

முதல் விழிப்பு

நான் அதுவரை உட்கொண்ட பன்னாட்டு உணவு நிறுவனங்களின் உணவு வகைகளில் பலதரப்பட்ட ரசாயனப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்டவை கலந்திருக்கின்றன என்பதை, என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

அப்போது நானும் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு மாலை நேரத்தில் அலுவலகத்துக்கு அருகேயிருந்த 'யோஃபோரியா' என்ற உணவு நிறுவனம் நடத்தும் உணவகத்துக்குச் சென்று, சுவையூட்டப்பட்ட தயிர் ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டேன்.

என் வாழ்வில் அப்படிப்பட்ட சுவையான தயிரை, அதுவரை நான் சாப்பிட்டதில்லை. அப்படி அதில் என்ன கலந்திருக்கிறது என்று, அங்கு வேலை பார்க்கும் என் தோழி ஒருவரிடம் கேட்டபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் உணவகத்தின் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார். தயிரின் சுவையைக் கூட்டுவதற்காக அங்கே பலவிதமான பவுடர்கள் கலக்கப்படுவதைப் பார்த்தேன்.

முதல் வெற்றி

பிறகு வீட்டுக்கு வந்ததும், இதைப் பற்றி என் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினேன். அது பலரைச் சென்றடைந்தது. அதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் என்னை அழைத்து, 'இனித் தயிரில் இப்படிப் பவுடர் கலக்க மாட்டோம்' என்று உறுதியளித்தார். பின்னர், அந்நிறுவனத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தச் சிறு வெற்றி, நல்உணவுக்கான முழுநேரப் போராளியாக என்னை மாற்றியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனது வேலையை உதறினேன். 'ஃபுட் பேப்' எனும் வலைத்தளத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து பன்னாட்டு உணவு நிறுவனங்களின் திரைமறைவு வேலைகளை ஆய்வு செய்து அம்பலப்படுத்தினேன்.!" - இதுதான் வாணி ஹரியின் முன்கதைச் சுருக்கம்.

http://tamil.thehindu.com/general/health/சுவைக்கு-அடிமையாகாதீர்கள்-எச்சரிக்கிறார்-நல்லுணவு-செயல்பாட்டாளர்-வாணி-ஹரி/article7719120.ece?widget-art=four-all

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திமிங்கிலங்கலோடு மோதுகிறாய் பெண்ணே..., ஜாக்கிரதையாக இரு..., வாழ்த்துக்கள்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபி பெற்றோர்கள்.

பெயரும், கலரும் நம்மூரு பொண்ணு போல இருக்குதே..:rolleyes:

Link to comment
Share on other sites

பயனுள்ள தகவல்கள். நல்ல பதிவுகளை தேடிப் பிடித்து இணைக்கும் ஆதவனுக்கும் நவீனனுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.