Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்!

Featured Replies

பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்!

 

ந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

viru.jpg

கடந்த  2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார்.

இந்திய அணிக்காக  104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள  8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார்.  அதோடு  சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

தற்போது துபாயில் நடைபெறவுள்ள மாஸ்டர்ஸ் டி20 போட்டியில் விளையாட சேவாக் முடிவு செய்துள்ளார். அதில் பங்பேற்க வேண்டுமென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து சேவாக் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=54024

  • தொடங்கியவர்

நவீன கால விவ் ரிச்சர்ட்ஸ்: சேவாக் புகழ்பாடும் தோனியும் பிரபலங்களும்

 
 
சேவாக், தோனி. | கோப்புப் படம்.
சேவாக், தோனி. | கோப்புப் படம்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ஓய்வு அறிவித்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் புகழாரம் பெருகி வருகிறது.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி:

விவ் ரிச்சர்ட்ஸ் பேட்டிங் செய்ததை நேரில் நான் பார்த்ததில்லை. ஆனால் சேவாக் பேட் செய்ததை பார்த்துள்ளேன் என்பதை பெருமையுடன் நான் கூற முடியும். அவர் பந்து வீச்சுகளை அவர் புரட்டி எடுத்ததை நான் பார்த்துள்ளேன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.

பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்துவது ஒரு வகை என்றால், பேட்டிங்கில் விரூப்பாவின் (சேவாக்) மனநிலை என்பதை வைத்துக் கொள்வது அசாத்தியம். அருமையான கிரிக்கெட் கரியருக்கு வாழ்த்துக்கள்.

டெஸ்ட் கேப்டன் விராட் கோலி:

உங்களுடன் விளையாடியது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. என்ன ஒரு திகைக்கவைக்கும் பேட்டிங் கரியர் உங்களுடையது. வழிகாட்டுதலுக்கும் நினைவுகளூக்கும் நன்றி. மாடர்ன் டே லெஜண்ட்.

ஜாகீர் கான்:

தாக்குதல் பேட்டிங்கில் தெளிவான சிந்தனை உங்களது பேட்டிங்கின் சிறப்பு அடையாளம். தலைசிறந்த நினைவுகளுக்காகவும் சிறந்த நட்புக்காகவும் நன்றி.

ஹர்பஜன் சிங்:

நவீன காலத்தின் விவ் ரிச்சர்ட்ஸ். மிகச்சிறந்த வீரர், நீங்கள் விளையாடியதைப் பார்த்தும் பந்து வீச்சாளர்களுடனான உங்களது கேளிக்கையையும் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.

பிஷன் பேடி:

சேவாக், அவரது பாணியில் சிக்கல்களற்ற கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினார். அதைப்போலவே அவரது பாணியில் விடைபெற்றுள்ளார். சேவாகைச் சுற்றி உள்ள ஒளிவட்டம் வெகுஜன மக்களிடையே அவரை நெருக்கமாக்கியுள்ளது. எதிரணியினரிடம் சச்சின் டெண்டுல்கர் போலவே அச்சத்தை ஏற்படுத்தியவர். சேவாகைப் போற்றுவோம், இப்போதும்.. எப்போதும்..

ஆகாஷ் சோப்ரா:

சாத்தியமாகாததை சாதித்துக் காட்டுவது உங்களது பேட்டிங் அடையாளம். இது ஜீனியஸின் அடையாளமும் கூட. சேவாக் ஒரு கிரிக்கெட் ஜீனியஸ்.

சம்பீத் பால்:

சேவாக் முதல் சதத்தை எடுக்கும் போது சச்சின் டெண்டுல்கரின் பிரதிபிம்பம் போல் தெரிந்தார். ஆனால் அவர் தன்னிலே உருவான ஒரு புது வகை. உண்மையில் ஒப்பற்றவர்.

http://tamil.thehindu.com/sports/நவீன-கால-விவ்-ரிச்சர்ட்ஸ்-தோனி-உள்ளிட்டோர்-சேவாகுக்கு-புகழாரம்/article7784693.ece

  • தொடங்கியவர்

அறிவுரைகளுக்கு நன்றி... ஏற்காததற்கு மன்னியுங்கள்: விடைபெற்ற சேவாக்கின் 'தனித்துவ' பதிவு

 
 
ஓய்வு குறித்து சேவாக் அறிக்கை. | கோப்புப் படம்
ஓய்வு குறித்து சேவாக் அறிக்கை. | கோப்புப் படம்

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விரேந்திர சேவாக், இதையொட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது கிரிக்கெட் வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் கடைசியில் சற்றே நகைச்சுவையுடன், தனக்கு அறிவுரை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பெரும்பாலான அறிவுரைகளை தான் ஏற்காததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம்:

'மார்க் ட்வெயினை மறு கூற்றாக்கம் செய்தால் நேற்று என் ஓய்வு பற்றிய செய்தி சற்றே ஊதிப்பெருக்கப்பட்டதுதான். ஆயினும், எது சரியானது என்பதையே நான் எப்போதும் செய்து வந்துள்ளேன். மரபுவாதிகள் எது சரியென்று கருதினார்களோ அதை நான் செய்ததில்லை. கடவுள் என்னிடம் கருணையுடன் இருந்துள்ளார். இதனால் நான் விரும்பியதைச் செய்ய முடிந்தது. சில காலம் முன்பாகவே எனது 37-வது பிறந்த நாளன்று நான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தேன். இன்று நான் எனது குடும்பத்தினருடன் நாளை செலவிடும் இத்தருணத்தில் நான் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்.

கிரிக்கெட்தான் எனது வாழ்க்கை, அப்படித்தான் இனியும் தொடரும். இந்தியாவுக்காக விளையாடுவது ஓர் இனிய நினைவு சார்ந்த பயணம். இதனை எனது அணியினருக்காகவும், இந்திய ரசிகர்களுக்காகவும் நான் மேலும் நினைவுகூரத்தக்கதாகச் செய்துள்ளேன்.

என்னுடன் விளையாடிய அனைத்து சகாக்களுக்கும் நன்றி. இவர்களில் பலர் கிரிக்கெட் ஆட்டத்தின் மிகப்பெரிய வீரர்கள். அனைத்து கேப்டன்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்பினார்கள், என்ன சூழ்நிலையிலும் என்னை ஆதரித்தார்கள். எங்களது மிகச்சிறந்த கூட்டாளிகளான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அளித்த ஆதரவு, மிகச்சிறந்த நினைவுகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறைய மகா வீரர்களுடன் ஆடியுள்ளேன், இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதோடு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும் கருதுகிறேன். இதனால்தான் எனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆட முடிந்தது. இதுதான் எனக்கு ஊக்கத்தை அளித்தது. நான் எனது கனவை வாழ்ந்து விட்டேன், உலகின் சிறந்த மைதானங்களில் ஆடிவிட்டேன். மைதான பணியாட்கள், கிளப்கள், அசோசியேஷன்கள் அனைவருக்கும் எனது நன்றி. இவர்கள்தான் எங்கள் திறமையை வெளிப்படுத்த அரங்கத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்கள்.

இன்று என் தந்தை எங்களுடன் இல்லை. நான் என் பயணத்தை தொடங்கும் போது அவர் என்னுடன் இருந்தார். ஆனால், அவர் இந்த நாளிலும் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எங்கிருந்தாலும் அவருக்கு பெருமை சேர்த்ததாகவே நான் நினைக்கிறேன். அவர் என்னை பெருமையுடன் கண்டு களித்துள்ளார். எனது பயிற்சியாளர் ஏ.என்.சர்மாவுக்கு நன்றி. நான் எந்த மாதிரியான வீரராக உருவானேனோ அத்தகைய தன்மையை என்னிடத்தில் உருவாக்கியவர் ஏ.என்.சர்மா சார். வேறு பயிற்சியாளராக இருந்திருந்தால் பள்ளி கிரிக்கெட் ஆடுவதில் கூட நான் போராடியிருக்க நேரிட்டிருக்கும்...

எனக்கு இத்தனையாண்டுகள் ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. நான் டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கும் கடமைபட்டுள்ளேன். குறிப்பாக அருண் ஜேட்லிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவர் எப்போதும் என்னை ஊக்குவித்து வந்தார், எங்களிடம் எப்போதும் ஆலோசனைகளைக் கேட்டு அதனை உடனுக்குடன் நிறைவேற்றினார் ஜேட்லி.

என்னை வரவேற்ற ஹரியாணா கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. இங்கு சில உண்மையான திறமையுடைய வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.

டெல்லி டேர் டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு நன்றிகள். நான் எனது அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வழங்கியுள்ளேன், மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சில சிறந்த வீரர்களுடன் ஆடியதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டுள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஊடகவியலாளர்களுடன் எனது உரையாடலை மகிழ்ச்சியுடன் நடத்தியுள்ளேன். அயல்நாட்டுப் பயணங்களின் போது இந்திய பத்திரிகையாளர்கள் சிலரது இருப்பு உண்மையில் அருமையான நினைவுகளை என்னிடத்தில் விட்டுச் சென்றுள்ளது.

இனி உங்களுடன் அதிக நேரம் இருப்பதற்காக, சேவாக் சர்வதேசப் பள்ளிக்கு அடிக்கடி வருகை தருவேன் என்று கருதுகிறேன்.

இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு கிரிக்கெட் அறிவுரைகளை வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன், ஆனால், இவற்றில் பெரும்பாலான அறிவுரைகளை நான் ஏற்றுக் கொள்ளாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் அவற்றை பின்பற்றாததற்கு என்னிடம் காரணங்கள் உள்ளன. நான் எனது வழியில் அதனைச் செய்தேன்' என்று சேவாக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/அறிவுரைகளுக்கு-நன்றி-ஏற்காததற்கு-மன்னியுங்கள்-விடைபெற்ற-சேவாக்கின்-தனித்துவ-பதிவு/article7784792.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஷேவாக் என்னும் பெரும் கனவு!

 

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் யூ-டியூப்பில் அந்த வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது. ''கமல்ஹாசன் மாதிரி ஒரு ஆள் இருக்கிற தமிழ்நாட்டுல இவன் எப்படி ஒரு நடிகன்னு பேர் வாங்கினான்னு அமிதாப் பச்சன்ல இருந்து எல்லோருக்குமே ஒரு சந்தேகம், ஒரு கேள்வி இருக்கும். கண்ணுங்களா, ரொம்ப சிம்பிள். அவர் தொட்டதை நான் தொடலை, அவர் போன வழியில நான் போகலை. ரூட்டை கொஞ்சம் மாத்திக்கிட்டேன். புத்தியைக் கொஞ்சம் யூஸ் பண்ணேன். அவ்ளோதான்" என்று வெற்றிக்கான ரகசியத்தை சிம்பிளாக சொன்னார் ரஜினி. ஆமாம், ரஜினியின் ஃபார்முலாவில் வந்தவர்தான் வீரேந்திர ஷேவாக். இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் ஷேவாக்.

Sewah.jpg

கங்குலி- சச்சின் ஓப்பன் பார்ட்னர்ஷிப் என்பது மாறி ஷேவாக்- சச்சின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கியபோது ''யார் இவன் சச்சினைப் போலவே விளையாடுறான்'' என ஆரம்பித்து, ''யார் இவன் சச்சினையே தூக்கி சாப்புடுறானே" என்று பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும் தெறிக்க விட்டவர் ஷேவாக். சச்சின் 90 ரன்களைத் தொட்டதும் சென்சுரி அடிப்பதற்காக படபடப்பு ஆட்டம் ஆடும்போது அனாயசமாக சிக்சர்களைத் தூக்கிவிட்டு சதம், இரட்டை சதம், முச்சதம் என எதற்கும் எந்த டென்ஷனும் காட்டாமல் மிரட்டியவர். பூஜ்ஜியத்தில் இருந்தாலும் சரி, 99 ரன்களில் இருந்தாலும், 295 ரன்களில் இருந்தாலும் சரி அவரது பேட், பந்தை பதம் பார்க்குமே தவிர பணியாது.

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஷேவாக். ஆரம்பமே அபசகுனம்தான். 1 ரன்னில் அவுட் ஆனார். பெளலிங் இன்னும் சொதப்பல். 3 ஓவர்கள் வீசி, 35 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகள், அதாவது 20 மாதங்களுக்கு மீண்டும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே ஷேவாக்குக்கு கிடைக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இல்லை. நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி இலங்கை செல்கிறது. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரை களமிறக்குவது என குழப்பம். யுவராஜ் சிங், அபய் குரசியா என யார் யாரையோ எல்லாம் ஓப்பனிங் பேட்ஸ்ஸ்மேனாக இறக்கிவிட்டு கடைசியாக, ஷேவாக்குக்கு வாய்ப்பை வழங்குகிறார் கங்குலி. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 260 ரன்கள் குவிக்கிறது. சுழற்பந்துக்கு சாதகமான, மிகவும் ஸ்லோவான பிட்சில் இந்த ஸ்கோர் என்பது 350 ரன்களுக்கு நிகரானது. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்குகிறார் ஷேவாக். 69 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அந்த ஆட்டத்தில் மேட்ச்வின்னராக உயர்ந்து நின்றார் ஷேவாக். அதன்பிறகு இந்தியாவின் நிரந்தர ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷேவாக்தான்.

Sewah-sachin.jpg

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள். ஆனால், கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களைத் தாண்டி எல்லோரும் ரசிக்கும் விளையாட்டாக மாற்றியவர்கள் ஒரு சிலரே. அதில் மிக முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். கிரிக்கெட் டிப்ளமஸி என்று உண்டு. முதல் நாள் கோட் போட்டு டாஸ் போட்டுவிட்டு, வெள்ளை உடையில் ஐந்து நாட்கள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் ஆடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், 'டெஸ்ட் போட்டியிலும் இவ்வளவு ஆக்ரோஷம் காட்ட முடியும், இப்படி பவுண்டரிகள் அடிக்க முடியும், இப்படி எல்லாம் ஆடி ஒருவரால் 300 ரன்கள் குவிக்க முடியும்' என்று ஆச்சரிப்படுத்தியவர் ஷேவாக். ஆமாம். அவருக்கு கிரிக்கெட் டிப்ளமஸி தெரியாது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரண்டு முச்சதங்களும், மூன்று இரட்டை சதங்களும் விளாசியிருக்கும் அன் டிப்ளோமேட்டிக் பேட்ஸ்மேன் ஷேவாக்.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அஜெந்தா மென்டிஸ் என்னும் புதிய சுழற்பந்து வீச்சாளரைப் பார்த்து இந்திய வீரர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மென்டிஸை துவம்சம் செய்தார் ஷேவாக். ''சுழற்பந்து வீச்சாளர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. ஸ்பின்னர் என்பவர் பேட்ஸ்மேனால்தான் உருவாகிறார். பேட்ஸ்மேன் ஒரு பந்தை சுழல்வதற்கு முன்பே அடித்துவிட்டால் அப்புறம் ஏது சுழற்பந்து. பந்து சுழல்வதற்கு முன்பாகவே தூக்கி கிரவுண்டுக்கு வெளியே அடித்தால் ஒருவர் எனக்கு வாழ்நாள் முழுக்க ஸ்பின்னே போடமாட்டார்" என்று சொன்னார் ஷேவாக்.

''எனக்கு டெக்னிக்ஸ் மீது நம்பிக்கை கிடையாது. நான் பர்ஃபாமென்ஸின் மீது நம்பிக்கை கொண்டவன். நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்போதும், டெக்னிக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களால் சமாளிக்க முடியும். என் வாழ்க்கையில் நடந்தது அதுதான். பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின்னர்தான் நான் சீரியஸாக கிரிக்கெட் விளையாட பயிற்சியாளரிடம் சேர்ந்தேன். டெக்னிக்ஸை கற்றுக்கொள்ள எனக்குப் பொறுமையில்லை. பந்தை எப்படி போட்டாலும் வெள்ளைக் கயிற்றைத் தாண்டி அடிக்கவேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தபோதும் என் ஸ்டைலை நான் மாற்றிக்கொள்ளவில்லை. சில தொடர்களில் நான் சரியாக ஆடாதபோது டெக்னிக்ஸ் வேண்டும் என்று சொல்வார்கள். அடுத்தப்போட்டியிலேயே சதம் அடித்துவிட்டால் ஷேவாக்கின் ஸ்டைல் இதுதான் என்பார்கள். இங்கே எதற்குமே இதுதான் ஃபார்முலா என்று இல்லை. ஃபார்முலாக்களை நம்பினால் சில நேரங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நம்பினால் எப்போதுமே வெற்றிதான்" என்பது ஷேவாக்கின் சக்ஸஸ் சீக்ரெட்.

Sewah-ganguly.jpg

மிகச்சிறந்த என்டர்டெய்னர், அசைக்கமுடியாத மேட்ச் வின்னர் ஷேவாக். அப்பர் கட் ஷாட்டை மிகச்சரியாக விளையாடியவர். ''பிட்சில் ஒரு இடத்தில் ஷேவாக் நிலையாக நின்று ஆடவே மாட்டார். கால்கள் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அவரது பின்காலில் ஒரு பெரிய கோதுமை மூட்டையைக் கட்டி விட்டுவிட்டு முன் காலைப் பயன்படுத்தி ஆடவைத்தோம். அதன்பிறகு ஃப்ரன்ட் ஃபூட்  மட்டும் அல்ல, பேக் ஃபூட், அப்பர் கட், அக்ராஸ் தி லைன் என பந்துகளை நொறுக்கித்தள்ள ஆரம்பித்துவிட்டார் ஷேவாக்" என்கிறார் ஷேவாக்கின் பயிற்சியாளர் அமர்நாத் ஷர்மா.

கிரிக்கெட் மைதானத்தில் ஷேவாக் அடித்த முச்சதங்கள், இரட்டை சதங்களைத்தாண்டி அவரது முக்கியமான இன்னிங்ஸ்கள் பல இருக்கின்றன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, அதுவும் தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபான்டின் மைதானத்தில் 105 ரன்கள் விறுவிறுவென அடித்து டெஸ்ட் போட்டியில் தனக்கான இடத்தைப் பதிவு செய்தார் ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்தியர் ஷேவாக்தான்.

ஷேவாக் என்பவர் யார்? ஷேவாக் ஒரு கிரிக்கெட் ஜீனியஸ். அவரது ஆட்டத்தை அவரது ஸ்டைலில் இன்னொருவர் எந்த காலத்திலும் இனி ஆடவே முடியாது. ஷேவாக் என்பது பெரும்கனவு. அது கொஞ்சம் சீக்கிரமே முடிந்துபோனதில் வருத்தமே!

http://www.vikatan.com/news/article.php?aid=54040

  • கருத்துக்கள உறவுகள்

வீரேந்திர ஷேவாக் - புழுதியில் இருந்து மேலெழுந்த புயல்

 
Share this :
 
1445345080-9326.jpg
 
எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பணமாக விளங்கிய, பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் வரிசையில் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவக்கிற்கு நிச்சயம் இடமுண்டு.
 
சாதாரண தானிய வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் ஷேவாக். இவரது தந்தையின் பெயர் கிருஷ்ணன், தாயின் பெயர் கிருஷ்ணா ஷேவாக். நான்கு பிள்ளைகளில், ஷேவாக் மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர். இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் இளைய சகோதரர் ஒருவர்.
 
இவருடைய பள்ளிக் காலத்தில், எப்போதும், பள்ளியின் கிரிக்கெட் மைதானத்திலேயேதான் ஷேவாக் இருப்பார். இவரது ஆர்வத்தைக் கண்ட அந்த பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா அவருக்கு தேவையான ஆட்ட நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் கற்றுத் தந்தார்.
 
அதன் விளைவாக, 1997-98 ஆம் ஆண்டில் தில்லி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 19998-99 இல் துலீப் கோப்பைக்கான வடக்கு மண்டல அணியில் தேர்வு செய்யப்பட்டார். அப்போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய ஷேவாக், அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். அதில் ஒரு போட்டியில் 274 ரன்கள் குவித்ததும் அடங்கும்.
 
அதன் பிறகு நடைபெற்ற ரஞ்சி போட்டியில் 175 பந்துகளில் 187 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிறகு தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் ஷேவாக் இடம்பிடித்தார்.
 
சர்வதேச ஒருநாள் போட்டி துவக்கம்:
 
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொஹாலியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வீரேந்திர ஷேவாக் முதன் முதலாக களமிறங்கினார். ஆனால், அந்த போட்டியில் வெறும் ஒரு ரன்கள் மட்டும் எடுத்து சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
 
அதுதான் அப்படியென்றால், தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஷேவாக் சரியாக செயல்படாததால் அடுத்து இந்திய அணியில் இடம் பிடிக்க 20 மாதங்கள் ஆனது.
 
அதற்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரில் ஷேவாக் களம் இறக்கப்பட்டார்.
 
பின்னர், ஆஸ்திரேலிய அணிக்காக எதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், ஷேவாக் 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மேலும், அப்போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்திய அணியை வெற்றி பெற வைத்து அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
 
இவர் சச்சின் டெண்டுல்கரை தனது முன் மாதிரியாக கொண்டவர். இவர் விளையாடும் ஸ்டைல் கூட கிட்டத்தட்ட சச்சினின் ஆட்டத்தை ஒத்திருக்கும். துவக்க ஆட்டக்காரராக களமிறங்க ஆரம்பித்த பிறகு, இவர் முதல் பந்து முதலே அதிரடி தொடங்குவது வழக்கம்.
 
பந்துவீச்சாளர்களை மிரட்டிய ஷேவாக்:
 
இதனால், பந்துவீச்சாளர்கள் பலரும் பயந்து பயந்து பந்துவீசியதை பார்க்க முடிந்தது. எத்தகைய பந்துவீச்சாளர்களையும் அசாத்தியமாக எதிர்கொள்ளும் திறன் படைத்தவர் சேவாக். பந்துவீச்சில் சிறந்து விளங்கும், பவுன்ஸர்களை வீசி மண்டைகளை உடைக்கும் அணியான ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சாளர்களை மிரளச் செய்துள்ளார்.
 
2007ஆம் ஆண்டில் ஆஸ்‌திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில், ஷேவாக்கிற்கு இடம் அளிக்காதது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் இயான் சேப்பல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
அப்போது கூறிய சேப்பல், ”ஷேவாக்கை பார்த்து இன்னமும் ஆஸ்‌திரேலிய அணியினர் அஞ்சுகின்றனர். பிரெட் லீ போன்ற பந்து வீச்சாளர்களை அவர் அடித்து நொறுக்கும் விதம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்” என்றார்.
 
இது தவிர பிரெட் லீ ஒருமுறை கூறும்போது, ”நீங்கள் எவ்வளவு சிறந்த, அனுபவமுள்ள பந்துவீச்சாளர்கள் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஷேவாக் உங்கள் மணப்பான்மையை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுவார்” என்றார்.
 
ஷோயப் அக்தரை பிச்சையெடுக்க வைத்த ஷேவாக்:
 
2003-04 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. அப்போட்டியின்போது ஷோயப் அக்தர் ஷேவாக்கை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருந்தார்.
 
ஆனால், ஷேவாக் தனது பேட்டிங் மூலம் பதிலடிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த போட்டியில் ஷேவாக் முச்சதத்தை கடந்தார். அதுவும் வெறும் 364 பந்துகளில். அதில் 38 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
 
அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டிக்கு பிறகு கூறிய ஷேவாக், “ஷோயப் அக்தர் பந்துவீசினாரா இல்லை பிச்சை எடுத்தரா?” என்றார்.
 
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறுகையில், “ஷேவாக் எப்போதும் எனது அணியில் இருக்க விரும்பியிருக்கிறேன். நான் அவரின் பேட்டிங்கை பார்த்து ரசிக்க விரும்புவேன். ஆனால், பந்துவீச விரும்பமாட்டேன்” என்று வேடிக்கையாக கூறினார். இப்படி வெளிப்படையாக கூறும் அளவுக்கு எதிரணியை மிரட்டக்கூடியவர்.
 
”பந்துவீச்சாளர்கள் கூட்டம் ஒன்று நடத்தினோம். அந்த கூட்டம் முழுவதுமே ஷேவாக்கை எப்படி வீழ்த்துவது என்றுதான் அங்குலம், அங்குலமாக விவாதித்துக் கொண்டோம்” என்று கூறியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் கூறினார்.
 
சிக்ஸர் அடித்து முச்சதத்தை கடந்த ஷேவாக்:
 
பொதுவாக ஷேவாக் இந்திய அணிக்குள் நுழைவதற்கு முன்னர், இந்திய வீரர்கள் பெரும்பாலும் 90 ரன்களை கடந்துவிட்டால் அடுத்து தங்களது சதத்தை பதிவு செய்வதற்கு தேவைப்படும் 10 ரன்களை எடுக்க ஏறக்குறைய 20 பந்துகளையாவது வீணடித்து வெறுப்பேற்றுவார்கள்.
 
அது சச்சின், சவுரவ் கங்குலி, அஜய் ஜடேஜா, முஹமது அஷாருதின் என எல்லோருமே பொதுவான விஷயமாகவே இருந்தது. ஆனால், ஷேவாக் மட்டும்தான் பெரும்பாலும் பவுண்டரிகளையோ, சிக்ஸர்களையோ விளாசிதான் சதத்தை நிறைவு செய்வார். இது அனைவரும் புதுமாதிரியாக எல்லோருக்கும் தோன்றியது.
 
ஏன் அவர் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய பொழுது முச்சதத்தைக் கடந்தார். அந்த போட்டியில் 298 ரன்கள் எடுத்திருந்த ஷேவாக் சிக்ஸர் அடித்து தனது முச்சதத்தை நிறைவு செய்து அனைவரையும் மிரளச் செய்தார்.
 
இது குறித்து கூறிய பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ், “298 ரன்கள் குவித்த ஒருவர், சிக்ஸர் அடிப்பதை கொஞ்சம்கூட கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படி செய்வதற்கு நீங்கள் ஒரு மேதாவியாகத்தான் இருக்க வேண்டும்” என்றார்.
 
சச்சின் டெண்டுல்கரே ஒருமுறை இது குறித்து வியந்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், ”90ஆவது ரன்களின்போது எவ்வாறு பதற்றமில்லாமல் விளையாட வேண்டும் என்பதை கற்றிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
அதே பாகிஸ்தான் வீரர் ரமிஷ் ராஜா வேறுமாதிரி கூறினார். அதாவது, “விவியன் ரிச்சர்ட்ஸ் ஒய்வு பெற்றபோது, இந்த கிரிக்கெட்டின் எதிர்காலம் நிறைவடைந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், ஷேவாக் வந்தார். பிறகு அவர்தான் இந்த கிரிக்கெட்டின் அரசன்” என்று கூறினார்.
 
அவர் கிரிக்கெட் உலகிற்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார். இளைஞர்கள் பலருக்கும், பிற தேசத்து கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன்னுதரணமாக திகழ்பவர் வீரேந்திர ஷேவாக். அவரது ஓய்வு நிச்சயம் கிரிக்கெட்டிற்கு பேரிழப்பு என்பதை மறுக்க முடியாது. அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
  • தொடங்கியவர்

ஹரியாணாவுக்காக சதம் அடித்து ஓய்வைக் கொண்டாடிய சேவாக்

 
  • கர்நாடக அணிக்கு எதிராக சதம் அடித்த ஹரியாணா கேப்டன் சேவாக், மட்டையை உயர்த்துகிறார். | படம்: ஜி.பி.சம்பத் குமார்.
    கர்நாடக அணிக்கு எதிராக சதம் அடித்த ஹரியாணா கேப்டன் சேவாக், மட்டையை உயர்த்துகிறார். | படம்: ஜி.பி.சம்பத் குமார்.
  • கர்நாடக பந்து வீச்சை பதம் பார்த்த சேவாக் சதம். | படம்: ஜி.பி.சம்பத் குமார்.
    கர்நாடக பந்து வீச்சை பதம் பார்த்த சேவாக் சதம். | படம்: ஜி.பி.சம்பத் குமார்.
  • ஆஃப் திசையில் பந்தை தூக்கி அடிக்கும் சேவாக். | படம்: ஜி.பி.சம்பத் குமார்
    ஆஃப் திசையில் பந்தை தூக்கி அடிக்கும் சேவாக். | படம்: ஜி.பி.சம்பத் குமார்

மைசூருவில் கடந்த ரஞ்சி சாம்பியன் கர்நாடகா அணிக்கு எதிராக ஹரியாணா அணிக்கு ஆடும், ஓய்வு அறிவித்த விரேந்திர சேவாக் 136 ரன்களை விளாசினார். முதல் நாள் ஆட்டத்தில் ஹரியாணா 319 ரன்கள் எடுத்தது.

தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பை ஹரியாணா அணிக்கு எதிரான சதம் மூலம் கொண்டாடினார் சேவாக். ஹரியாணா அணிக்கு கேப்டன் பொறுப்பிலிருக்கும் சேவாக் 170 பந்துகளில் 16 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 136 ரன்கள் எடுத்தார்.

டாஸ் வென்ற சேவாக் உடனடியாக பேட்டிங் விளையாட முடிவெடுத்தார். ஹரியாணா தொடக்க வீரர் ராகுல் தேவன் (9) ஷரத் பந்தில் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய பிறகு களமிறங்கினார் சேவாக். இறங்கியது முதல் அவருக்கே உரித்தான ஷாட்களை ஆன் மற்றும் ஆஃப் திசைகளில் அடிக்க தொடங்கினார். ரன்கள் வரத் தொடங்கியது, வினய் குமார், மத்தியாஸ், எஸ். கோபால் போன்ற பவுலர்கள் சேவாகிடம் சிக்கினர்.

ஸ்கோர் 53 ரன்களை எட்டிய போது மற்றொரு தொடக்க வீரர் பிஷ்னாய் அவுட் ஆனார். ஆனால் அதன் பிறகு ஜெயந்த் யாதவ் (100 ரன்கள், 173 பந்துகள் 11 பவுண்டரி 1 சிக்சர்) சேவாகுடன் இணைய, இருவரும் கர்நாடக பந்து வீச்சைப் பதம் பார்த்தனர். இருவரும் இணைந்து 206 ரன்களை 48 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ஆனால் சேவாக் 170 பந்துகளில் 16 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 136 ரன்கள் எடுத்து பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து மத்தியாசிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜெயந்த் யாதவ்வும் 100 ரன்களில் வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் ஷரத் ஹேட்ரிக் சாதனை புரிந்தார். இவர் ரானா, தாகர், சைனி ஆகியோர் விக்கெட்டுகளை 2 ஓவர்களாயினும் 3 தொடர்ச்சியான பந்துகளில் வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

ஆட்ட முடிவில் ஹரியாணா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஹரியாணாவுக்காக-சதம்-அடித்து-ஓய்வைக்-கொண்டாடிய-சேவாக்/article7792892.ece?homepage=true

  • தொடங்கியவர்

2007-ம் ஆண்டே ஓய்வு அறிவித்திருப்பேன், சச்சின் என்னை தடுத்தார்: சேவாக்

 

 
90 ஒருநாள் போட்டிகளுக்கும் அதிகமாக தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள சச்சின், சேவாக். | பிடிஐ.
90 ஒருநாள் போட்டிகளுக்கும் அதிகமாக தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள சச்சின், சேவாக். | பிடிஐ.

2007-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு உடனடியாக ஓய்வு அறிவிக்க முடிவெடுத்ததாகவும், ஆனால் சச்சின் டெண்டுல்கர் தன்னை தடுத்தததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

"எந்த ஒரு வீரரும் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் ஓய்வு பெறவே விரும்புவார்கள். நானும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய போதே ஓய்வு பெற்றிருந்தால் நானும் பிரியாவிடை உரையாற்றியிருப்பேன். ஆனால் விதி எனக்காக வேறு ஒன்றை வைத்திருந்தது.

2007-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் ஓய்வு அறிவிக்க முடிவெடுத்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர்தான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார்.

2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரின் போது என்னை அணியிலிருந்து நீக்கிய போதே அணித் தேர்வாளர்கள் என்ன செய்யப் போகிறேன் என்று என்னிடம் கேட்டிருந்தால், அந்தத் தொடரிலேயே ஓய்வு அறிவித்திருப்பேன்.

நான் இப்போதும், இனிமேலும் கூட கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்பில்தான் இருப்பேன். வர்ணனை வாய்ப்பு கிடைத்தால் பரிசீலிப்பேன். எனது பேட்டிங் போலவே எனது வர்ணனையும் நேர்மையாக, வெளிப்படையாக கருத்துகளை தெரிவிப்பதாக இருக்கும்.

நான் ஓய்வு பெற்றது குறித்து எனது இரு மகன்களுக்கும் ஏமாற்றம். ஆனால் எனக்கு அதுபற்றி கவலையில்லை. நான் விளையாடிய கேப்டன்களில் அனில் கும்ளே சிறந்தவர், அவர் எங்கள் தன்னம்பிக்கையை மேலும் வளர்த்தெடுத்தவர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் டெல்லி டெஸ்ட் போட்டியின் போது சேவாக் தனது பிரியாவிடை உரையளிக்க வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ-யும் அதனை பரிசீலித்து வருகிறது.

http://tamil.thehindu.com/sports/2007ம்-ஆண்டே-ஓய்வு-அறிவித்திருப்பேன்-சச்சின்-என்னை-தடுத்தார்-சேவாக்/article7817856.ece

  • தொடங்கியவர்

சேவாக்கை கவுரவிக்க பிசிசிஐ முடிவு

 

 
சேவாக்
சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனது அதிரடியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் வீரேந்திர சேவாக் (37). கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 20ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சேவாக் அறிவித்தார்.

ஜனவரி மாதம் நடைபெறும் எம்சிஎல் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்த ஓய்வு முடிவை சேவாக் அறிவித்தார். எனினும் சேவாக் ரஞ்சிகோப்பை போட்டிகளில் ஆடிவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் முக்கிய பங்குவகித்த சேவாக்கை உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் (டிசம்பர் 7) சேவாக்கிற்கு பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ் பன்சால் கூறுகையில், சேவாக்கிற்கு பாராட்டு விழா நடத்தவது தொடர்பாக பிசிசிஐ-யிடம் இருந்து முறைப்படியான எந்த தகவலும் வரவில்லை. எனினும் சேவாக்கை கவுரவிக்கவே பிசிசிஐ விரும்புகிறது.

பாராட்டு விழா நடத்துவது தொடர்பான தகவல் வந்ததும் அதற்கான பணிகளை சிறப்பாக செய்வோம். பெரேஷா கோட்லா மைதானத்தின் ஏதேனும் ஒரு நுழைவு வாசலுக்கு சேவாக் பெயரை வைக்கும் எண்ணம் உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அண்மையில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை, இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 வது ஒருநாள் போட்டியின் போது பிசிசிஐ கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/சேவாக்கை-கவுரவிக்க-பிசிசிஐ-முடிவு/article7817581.ece

  • தொடங்கியவர்

சச்சினை கேலி செய்த மைக்கேல் கிளார்க்குக்கு பதிலடி: சேவாக் உணர்ச்சிப் பகிர்வு

 

sehwag_2604536f.jpg
 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக், கடைசி போட்டியை ஆடி விடைபெறும் வாய்ப்பு பெறாதது நெஞ்சை விட்டு அகலாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவி-யின் ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் பேசிய சேவாக் கூறியதாவது:

“அணித் தேர்வாளர்கள் என்னை நீக்கப்போவதாக முன் கூட்டியே கூறியிருந்தால், டெல்லியில் கடைசி போட்டியில் ஆடிவிடுகிறேன் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்திருப்பேன். ஆனால், எனக்கு அவர்கள் அந்த வாய்ப்பையே வழங்கவில்லை.

விளையாடும்போதே கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி, பிரியாவிடை அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததின் சோகமும் வருத்தமும் என் நெஞ்சை விட்டு அகலாது, எனினும் இதெல்லாம் ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையில் சகஜம். விளையாடும் போது எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ஒருவர் எப்போதும் உணர்வதில்லை, ஆனால் அணியிலிருந்து நீக்கப்படும்போதுதான் ஓய்வு குறித்த சிந்தனை ஏற்படுகிறது.

நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்: நாட்டுக்காக 12-13 ஆண்டுகள் விளையாடிய ஒரு வீரர் தனது பிரியாவிடை போட்டிக்கு தகுதியற்றவரா?

ஆனால், தற்போது டெல்லியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கேள்விப்படுகிறேன், அது உண்மையெனில் நல்லது. பிசிசிஐ செய்ய முடியவில்லை எனில் டெல்லி கிரிக்கெட் சங்கம் செய்ய வேண்டும். இது என்னைப்பற்றிய விவகாரம் மட்டுமல்ல ஓய்வு பெறும் ஒவ்வொரு வீரரும் பிரியாவிடை கொடுத்து விடை பெற வேண்டும்.

ஒரு வீரர் தொடர்ச்சியாக 4 அல்லது 5 போட்டிகளில் சரியாக ஆடவில்லையெனில் அவர் ஜூனியராக இருந்தாலும் சீனியராக இருந்தாலும் நீக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை” என்று கூறினார் சேவாக்.

மேலும் அவர் சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டபோது, “ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் நானும் சச்சினும் பேட் செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் மைக்கேல் கிளார்க் அணியில் சேர்க்கப்பட்டிருந்த புதிய வீரர். அவர் சச்சினை நோக்கி அடிக்கடி, ‘உங்களுக்கு வயதாகி விட்டது, உங்களால் பீல்ட் செய்ய முடியாது, உங்களால் அதைச் செய்ய முடியாது, இதைச் செய்ய முடியாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தார்.

நான், கிளார்க்கிடம் சென்று அவரது வயதைக் கேட்டேன். அவர் 23 என்றார். நான் அவரிடம் கூறினேன், உன் வயதை விட அதிக சதங்களை எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர் என்றேன்.

'பாகிஸ்தானுடன் ஆடியிருக்க வேண்டும்'

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இன்னும் 2 தொடர்களை ஆடியிருந்தால் நான் 10,000 டெஸ்ட் ரன்களை நிறைவு செய்திருப்பேன். நான் 8,586 ரன்களை எடுத்துள்ளேன். ஆனால் 2006க்கு பிறகு பாகிஸ்தானுடன் தொடர்கள் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக எனது பேட்டிங் சராசரி 90 ரன்களுக்கும் மேல்.

பாகிஸ்தானுடன் அதிக அளவில் ரன் எடுக்கக் காரணம் இரு நாடுகளுக்கும் இடையே விளையாட்டில் உள்ள ஒரு எதிரித்தன்மையே. மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழியும். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரிக்கப் படாத இந்தியாவின் ஒருபகுதியாக பாகிஸ்தான் இருந்தது. இதனாலேயே பகைமை பெரிய அளவில் இருந்தது, ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருந்தார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார் சேவாக்.

http://tamil.thehindu.com/sports/சச்சினை-கேலி-செய்த-மைக்கேல்-கிளார்க்குக்கு-பதிலடி-சேவாக்-உணர்ச்சிப்-பகிர்வு/article7827495.ece

  • தொடங்கியவர்

சச்சின் மட்டும்தான் சாதனையாளரா? :சேவாக் நிச்சயம் கவுரவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்!

 

ந்திய கிரிக்கெட்டின் அடையாளங்களுல் ஒருவர் சேவாக். சுமார் 13 ஆண்டுகாலம் இந்தியர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டை நேசித்து விளையாடியவர். இந்திய அணிக்காக 23 டெஸ்ட் சதங்களும் 15 ஒருநாள் சதங்களும் அடித்தவர். தனது பார்மின் உச்சக்கட்டத்தில் இருந்த போது, எந்த பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசினாலும் சொல்லி வைத்து அடிக்கும் கில்லி. அப்படிப்பட்ட ஒரு  வீரரை இன்று 'எனக்காக ஒரு பிரிவு உபச்சார போட்டி நடத்துங்களேன்' என்று கெஞ்சும் நிலைக்குத் பி.சி.சி.ஐ. தள்ளியுள்ளது.

sev.jpg

இது குறித்து சேவாக்கே தெரிவித்த கருத்து : '' என்னிடம் இந்திய அணியின் தேர்வாளர்கள், உங்களை அணியில் இனி சேர்த்துக் கொள்ளப்போவததில்லை என்றார்கள். ஒரு பிரிவு உபச்சார போட்டியில் டெல்லியில் விளையாட வேண்டுமென்பது எனது ஆசை என்றேன். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஓய்வு அறிவிக்க வேண்டுமென்பதுதான் எனது நீங்காத ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதலில் டெல்லியில் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கவிருந்த இந்திய - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் போது என்னை கவுரவிக்கவுள்ளதாக கூறினார்கள். அப்படி செய்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் பி.சி.சி.ஐ. ஏனோ அதற்கு விரும்பவில்லை. குறைந்த பட்சம் டெல்லி கிரிக்கெட் சங்கமாவது எனக்காக ஒரு பிரிவு உபச்சார போட்டி நடத்தும் என்று நினைக்கிறேன். ஒரு விளையாட்டு வீரனாக ஒவ்வொருவக்கும் இந்த ஆசை இருக்கும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது  '' இப்படி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் மனம் வெதும்பி கூறியிருக்கிறார் சேவாக்.

13 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்களை தனது அதிரடியால் மகிழ்வித்தவர். பொதுவாகவே சேவாக்கின் அதிரடி  இந்திய அணியின் வெற்றியுடன் பொருந்தியிருக்கின்றன. முக்கிய ஆட்டங்களில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் சேவாக் அசராமல் ஆடி வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேவாக் பட்டையை கிளப்புபவர்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரத்து 586 ரன்களை குவித்துள்ளார்.  இன்னும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் டெஸ்ட் வாழ்க்கையில் 10 ஆயிரம் ரன்களை எட்டியிருப்பேன் என்கிறார் சேவாக். பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக்கின் டெஸ்ட் சராசரி 90 முதல் 100 ரன்கள் வரை இருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பொதுவாக இந்திய கிரிக்கெட்டர்களை பொறுத்தவரை, பெரும்பாலானவர்க்கு  கவுரவமாக அந்த விளையாட்டில் இருந்து விடைபெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியின் 'சுவர் ' என்று வருணிக்கப்பட்ட  ராகுல் டிராவிட்டுக்கும் கூட இதே நிலைதான். இப்போது சேவாக்கிற்கு ஏற்பட்ட நிலைதான் அப்போது ராகுல் டிராவிட்டுக்கும் ஏற்பட்டது.

சச்சின் அளவுக்கு சேவாக் சாதனை படைக்கவில்லை என்றாலும் அணிக்கான தனது நேர்மையான உழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியவர். சேவாக் கேட்காமலேயே பி.சி.சி.ஐ. அவரை  கவுரவப்படுத்தியிருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. இப்போது மனம் பொறுக்காமல் அவரே கேட்டு விட்டார். இப்போதும் பி.சி.சி.ஐ. அமைதி காப்பது ஏன்?

 பி.சி.சி.ஐ.க்கு சச்சின் மட்டும்தான் சாதனையாளராகத் தெரிகிறாரோ?

http://www.vikatan.com/news/article.php?aid=54510

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.