Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் சாதி:அ.மார்கஸ், ரவிக்குமார்,ஷோபாசக்தி

Featured Replies

யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த (Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : 2009)1 ஆய்வுகள் வரை நிறைய கல்வித்துறை சார் நெறியுடன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேற்கத்தியர்களும் காலனியக் காலம் முதல் விடுதலைப் புலிகளின் காலம் வரை வடகிழக்கில் சாதி குறித்த ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் சாதி பற்றிய அரசியல் கேள்விகளை முதன் முதலில் எழுப்பியவர் (அன்றைய நிறப்பிரிகை வட்டம் சார்ந்த தலித்தியக் கோட்பாட்டாளரும், இன்றைய விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினருமான) பா.ரவிக்குமார்தான் (Himal South Aasia : Auguest 2002)2.  

 

விடுதலைப் புலிகள் சாதி காப்பவர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, அப்புறமாக ஆதவன் தீட்சண்யா வரை எழுப்பும் கூக்குரல்களின் துவக்கம் ரவிக்குமாரின்  கட்டுரைதான் என்று தயங்காமல் சொல்லலாம். புகலிட புலி எதிர்ப்பாளர்களின் தலித்தியக் கோட்பாட்டு வரையறை கூட ரவிக்குமாரை மேற்கோள் காட்டியே கட்டமைக்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இன்றைய சட்டமன்ற உறுப்பினரான, விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கொண்ட ரவிக்குமாரது அபிப்பிராயங்களும் காலமாற்றத்தில் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது என நாம் கொள்ள வேண்டிய அவசியமும் இன்று இல்லை.

 

 

2009 ஆம் ஆண்டு, தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் விடுதலைப் புலிகளின் சாதியம் குறித்து விவாதிக்கிற (pages in between 50 to 78)3   ஒரு அத்தியாயம் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழ் சாதியப் பிரச்சினை அல்லது யுத்த காலத்தின் இடையில் யாழ்ப்பாணத்தில் சாதியப் பிரச்சினை பற்றி புள்ளியியல் அடிப்படையில் (statistically) ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் இரண்டு விதமான இடர்களை எதிர்கொள்கிறார்கள்.

 

 

முதல் இடர் ஏராளமான இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போர்ச் சூழலில் அந்த மக்களுக்கிடையில் ஆய்வுகளின் சாத்தியமின்மை. இரண்டாவது இடர் விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை (banned caste descrimination and criminalised it)தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரையிலும்  சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்த குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள் (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 : Tamil Net : 30 October 2003)4. 

 

 

விடுதலைப் புலிகளின் சாதி குறித்த பார்வைகளை ஆய்வு செய்வதற்கு முன்பாக புலிகளின் அமைப்பின் சாதிப் பண்பு (caste character like class character) என்ன என்ற கேள்வி எழுகிறது. புரட்சித் தலைமையின் வர்க்கப் பண்பு என்ன என்று ஆய்வு செய்வதைப் போன்ற கேள்வி இது. இதற்கும் முன்பாக, விடுதலைப் புலிகள் ஆளுகையின் கீழ் வடகிழக்குப் பிரதேசங்கள் அல்லது குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் வருவதற்கு முன்னால், அங்கு சாதியக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது எனும் கேள்வியும் எழுகிறது. தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் இது குறித்த வரலாற்றுரீதியான தரவுகள் தெளிவாகப் பதியப்படுகின்றன.

 

 

 

இந்திய பார்ப்பனர்களைப் போல் அல்லாமல், யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பில் நிலத்தைத் தம் வசம் வைத்திருந்த வெள்ளாளர்களே ஆதிக்க சாதியினராக இருந்தனர் இந்தியாவிலிருந்து கோயில் ஆகம காரியங்களுக்காக வெள்ளாளர்களால் அழைத்துவரப்பட்ட பார்ப்பனர்கள் வெள்ளாளர்களுக்குக் கீழாகவே சாதியப் படிநிலையில் இருந்தனர். வெள்ளாளர்களுக்குக் கீழான சாதியினை அவர்கள் குடிமக்கள் சாதியினராகவும் அடிமைகள் சாதியினராகவும் பிரித்திருந்தனர். குடிமக்கள் சாதியினர் வெள்ளாளர் வீடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். அடிமைச்சாதியினர் தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். பறையர், பள்ளர், நளவர் என இவர்களே அடிமைச்சாதியினர் எனத் திட்டவட்டமாக அறியப்பட்டனர். இவர்களுடன் அம்பட்டர், வண்ணார் ஆகியோர் சேர்ந்து பஞ்சமர், ஐந்து சாதியினர் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயரில் அறியப்பட்டனர். ஆய்வாளர்களும் இலங்கையில் தலித் எனும் பதம் அங்கீகரிக்கப்பட்டதாக இல்லாததால் பஞ்சமர் எனும் சொல்லிலேயே தலித் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

 

 

பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதை மறுப்பது, பள்ளிக் கூடங்களில் படிப்பிக்க மறுப்பது, இரட்டைக் குவளை முறை போன்ற இந்திய பார்ப்பானிய சமூகத் தீண்டாமையின் வடிவங்கள் யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலைபெற்றிருந்தன. 1920 வரையிலும், பஞ்சமர் என யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகிற தலித் மக்கள் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடாமலேயே இருந்து வந்த நிலை இருந்தது. 1920 துவக்கம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. என்.எஸ்.கந்தையா, பிற்பாடாக  சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் கோயில் நுழைவுப் போராட்டம், பஞ்சமர்களுக்கெனப் பள்ளிக் கூடங்கள் அமைத்தல், இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு, வெள்ளாள ஆதிக்கத்திற்கு எதிராகத் திரட்டப்பட்ட எதிர்ப்பை (organised resistence) தலித் சமூகத்தினர் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

 

 

எழுபதுகளில் ஆயுதமேந்திய விடுதலை இயங்கங்களின் தோற்றம் என்பது அதுவரையிலான யாழ்ப்பாண அரசியல் தலைமையை வெள்ளாளர்களிடமிருந்து ஆயுதமேந்திய குழுக்களிடம் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகள் பிற இயக்கங்களை அழித்த பின்னால், வெள்ளாள அரசியல் தலைமை என்பது, விடுதலைப் புலிகளின் ஆரம்பக்காலத் தலைமையில் அதிகமும் இடம்பெற்ற இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கரையார் சாதியைச் சேர்ந்தவர். கரையார்களிலும் இந்துக்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைமை வந்ததன் வழி வெள்ளாளர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது தகர்ந்தது.

 

விடுதலைப் புலிகள் தலைமையேற்றதிலிருந்து சாதியப் போராட்டம் தொடர்பான இரண்டு பண்புகள் வெளிப்படலாயின. முதலாவதாக விடுதலைப் புலிகள் சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தடை செய்தனர். இந்தத் தடையில் உள்ளார்ந்திருந்த பிறிதொரு அம்சம், சாதிப் பிரச்சினை என்பது தமிழீழ தேசிய ஒற்றுமையை முதன்மையாகக் கொண்டு இரண்டாம் பட்சமானது என அவர்கள் கருதி, சகல சாதியினரதும் மதத்தினரதும் ஒற்றுமையை வலியுறுத்தியதால், சாதியம் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களையும் விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்தார்கள்.

 

 

 

 

அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற (secular) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் கீழிருந்த சட்டமுறைகளையும் சமூக மதிப்பீடுகளையும் ஒரு வகையில் ஸதாம் ஹுசைனின் கீழிருந்த ஈராக்குடன் நாம் பல வகைகளில் ஒப்பிட முடியும். ஸதாம் ஹுசைனின் சமூகம் ஒரு மதச்சார்பற்ற சமூகமாகவே இருந்தது. ஈரான், சவுதி அரேபியா போன்ற பிற அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈராக்கியப் பெண்கள், கல்வி, சிவில் சமூகப் பங்கேற்பு போன்றவற்றில் விடுதலை பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். சியா-சன்னி என்ற இரு இஸ்லாமியப் பிரிவுகளின் மதச் சடங்குகள் பொதுவெளிகளில் நடத்தத் தடைசெய்யப்பட்டிருந்தது.

ஸதாம் ஹுசைனின் சன்னி இனக்குழு அதிகாரத் தன்மையிலும், விடுதலைப் புலிகளின் இயல்பாக அமைந்த கரையார் இனக்குழு அதிகாரத்தன்மையிலும் நாம் ஒப்புமைகளைக் காணமுடியும்.

 

 

மேம்போக்காக சிவில் சமூகத்தில் ஜனநாயக மரபுகளை இவர்களது சட்டங்கள் பிரதிபலிப்பதாகத் தோன்றினாலும், இரண்டு விதங்களில் மிகக் கடுமையான ஒடுக்குமுறைச் சமூகங்களாகவே இவை இரண்டும் இயல்பில் இருந்தன. எடுத்துக்காட்டாக நீதித்துறையின் மீதோ, சட்டநிறுவனச் செயல்பாட்டின் மீதோ ஸதாம் ஹுசைனின் பாத் கட்சியினருக்கும், பிரபாகரனின் விடுதலைப் புலிகளுக்கும் இருக்கும் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் ஒரு வரையறுக்குள் கொண்டுவருவதற்கான கடிவாளம் என்ன? 

அதைப் போலவே தாம் பிற சமூகக் குழுவொன்றினால் ஒடுக்கப்படுகிறோம் எனக்கொண்டு, பிறிதொரு சமூகக் குழு ஒன்றுதிரண்டு போராடுவதற்கான வாய்ப்பு இந்தச் சட்டவரம்புக்குள் இருக்கிறதா?

இரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பதுதான் பதில்.

ஸதாம் ஹுசைன் ஈராக்கிய ஒற்றுமையின் பெயரிலும், விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய ஒற்றுமையின் பெயரிலும் எந்தவிதமான எதிர்ப்பையும் ஒடுக்கி, தமது அமைப்பின் கட்டுப்பாட்டையே நிலை நிறுத்த முனைவர். ஸதாமின் ஈராக்கில் அதுதான் நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசின் நிலைமையை ஈராக்கைப் போல நாம் இப்படிக் கறுப்பு வெள்ளையாக மதிப்பிட முடியாது.

 

 

 

 

அடுத்ததான கேள்வி : விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதியத் தன்மை(caste character) குறித்த கேள்வி. விடுதலைப் புலிகள் அமைப்பு என்கிற போது, தலைமை மற்றும் கீழ்மட்ட அணிகள் இரண்டும் இணைந்ததாகவே அமைகிறது. உள்நாட்டுப்போரின் காரணத்தினால், பொருளாதாரரீதியில் வளம் கொண்டவர்கள் பெரும்பாலுமானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள். இயல்பாகவே அவர்கள் வெள்ளாளர்களாக இருக்கிறார்கள். நாட்டில் தங்கிவிட்டவர்களில் பெரும்பாலுமுள்ளவர்களில் கணிசமானோர் பஞ்சமர் அல்லது தலித்தியர்களாகவே இருக்கிறார்கள். மரபான யாழ்ப்பாண சமூகத்தில் 18 சதவீதமான பஞ்சமர்கள்தான் அதிகமும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் போராளிகளாகச் சேர்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நோக்கம் என்பது தமிழ் தேசிய ஒற்றுமையாக இருக்கிறது. சாதி ஒதுக்கத்தை அவர்கள் தடைசெய்கிறார்கள். சமவேளையில் தமது அமைப்பின் பெரும்பாலுமான போராளிகள் தலித்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதை விரும்புவதும் இல்லை. இவ்வகையிலான குறிப்பிட்டுக் காட்டல் யாழ் பல்கலைக்கழக ஆய்வு அமர்வொன்றில் யத்தனிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான மாணவர்கள் அந்த நிலைப்பாட்டை திரும்பப் பெறச் செய்தார்கள் என்பதனை நூலின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பைக் குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் பிணைப்பதை விடுதலைப்புலிகள்  விரும்பவில்லை. ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது. மரபாக வெள்ளாளர்கள் சாதி எனும் அளவில் யாழ்ப்பாணத்தின் 50 சதவீதமானவர்கள் எனும் அளவில், பொருளியல் ரீதியில் அனைவருமே செல்வந்தர்கள் இல்லை. அவர்களிலும் பொருளியல் ரீதியில் மேல்-இடை-கடைத் தட்டுகளில் இருந்தவர்களும் இருந்தார்கள். தமிழ் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி போன்றவர்கள் கரையாரான பிரபாகரனைக் கடுமையாக எதிர்ப்பதற்கு, அவர்தம் யாழ் மேல்குடி வெள்ளாளப் பின்னணியும் காரணமாகச் சுட்டப்படுவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

 

 

விடுதலைப் புலிகளின் தலைமை சார்ந்தும் சரி, போராளிகள் சார்ந்தும் சரி, ஆய்வாளர்கள் தாம் ஆய்வில் ஈடுபடும் காலகட்டத்தில் திட்டவட்டமான சாதியப் புள்ளிவிவரங்கள் பெறுவது சாத்தியமாயிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.  யுத்த நிலைமையும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் இவ்வகையில் தமது ஆய்வை மட்டுப்படுத்துகிறது என்பதனையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். புலிகளின் பதவிகளும் சரி, பொறுப்புகளும் சரி படைப் பயிற்சி, தேர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதேயொழிய, சாதியப் பிரதிநிதித்துவம், பிரதேசப் பிரதிநிதித்துவம் போன்றவற்றின் அடிப்படையில் அல்ல என்பதனையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

 

ஈழத்தில் சாதியப் பிரச்சினையின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மீது தமிழக தலித்தியக் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிற விமர்சனம் ஒன்றுதான் : விடுதலைப் புலிகள் தலைமையேற்பதற்கு முன்பாகத் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான, திரட்டிக் கொண்ட இயக்கத்தை நடத்துவதற்கான சூழல் இருந்தது. விடுதலைப் புலிகள் அதனை முற்றிலும் மௌனமாக்கிவிட்டார்கள். இயக்கரீதியிலான தலித்துக்களின் செயல்பாட்டை விடுதலைப் புலிகள் மௌனமாக்கிவிட்டார்கள் எனும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

ரவிக்குமார் முன்வைத்த பிறிதொரு விமர்சனம் விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தமிழர், மலையகத் தமிழர் என இரு வேறுபட்ட சமூகத்தின் பிரதிநிதிகளோடு உரையாலை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான பிரதிநிதித்துவத்தையோ அல்லது உலையாடலையோ தலித் சமூகத்தைப் பொறுத்து விடுதலைப் புலிகள் வழங்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

 

 

 

 

சாதியப் பிரச்சினை தொடர்பான விடுதலைப் புலிகளின் பார்வை தொடர்பாகவும், அவர்களின் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாகவும் இதிலிருந்து நாம் சில நிலைப்பாடுகளுக்கு வந்து சேரலாம். புலிகள் தமது அமைப்புக்குள் சாதிய ஒடுக்குமுறையைக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொண்ணூறுகளிலிருந்து 2009 மே வரையிலுமான இரண்டு தசாப்தங்கள் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைமையாக அல்லது வெள்ளாளர்களின் அல்லது கரையார்களின் தலைமையாக இருந்தது என்பதற்கான புள்ளிவிரங்களோ சான்றுகளோ இல்லை. அவ்வாறே இருந்தாலும் அவர்கள் விடுதலைப் புலிப்போராளிகளை சாதியரீதியில் ஒடுக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தடைசெய்து அதனைக் குற்றத்தன்மை வாய்ந்ததாக ஆக்கியதன் பின், அவர்கள் திட்டமிட்டு தலித்தியர்கள் மீதான வெள்ளாளர்களின் ஒடுக்குமுறைக்குத் துணைபோனார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை.

 

 

இதுவன்றி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிற ஒரு முக்கியமான விடயம், மாவீரர்களின் கல்லறை அமைக்கப்பட்ட விதம். அனைவருக்கும் ஒரே மாதிரியான நினைவு மண்டபங்கள்தான் அமைக்கப்பட்டன. சாதிய அடையாளங்கள் அங்கு துப்புரவாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத அடையாளங்களும் அங்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்து மதம் இறந்தவர்களை எரிக்கச் சொல்கிறது. விடுதலைப் புலிகள் போராளிகளைப் புதைத்திருக்கிறார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சாதிய அமைப்பு என்று சொல்வதற்கோ, அது சாதியத்தைக் கடைப்பிடித்த அமைப்பு என்று சொல்வதற்கோ, அது உருவாக்க விரும்பிய அமைப்பு - அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் - அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை.

 

 

விடுதலைப் புலிகளை தலித்தியப் பெருஞ்கதையாடலுக்குள் கொணரப் பிரயத்தனப்படும் புகலிட புலி எதிர்ப்பாளர்களுக்கும் சரி, அவர்களது பிரயத்தனங்களுக்குக் கோட்பாட்டு அடிப்படைகளையும், அரசியல் அடிப்படைகளையும் தமிழகத்தில் உருவாக்கிக் கொடுக்கும் அ.மார்க்சுக்கும் சரி, ஆதவன் தீட்சண்யாவுக்கும் சரி, இருக்கிற ஒரே காரணமெல்லாம், விடுதலைப் புலிகள் தமது ஆளுகையைத் ஸ்தாபிப்பதற்கு முன்னால் திரட்டிக் கொள்ளப்பட்ட வகையில் நடத்தபட்ட தலித்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை, அவர்கள் முற்றிலும் இல்லாதாக ஆக்கினார்கள் என்ற காரணம் மட்டும்தான் எஞ்சி நிற்கிறது.

 

 

விடுதலைப் புலிகள் அவ்வாறான நிலைப்பாடு மேற்கொண்டதற்கான அவர்களுக்கான காரணங்கள் தெளிவாக இருக்கின்றன. சாதிய முரண்பாடுகள் வெளிப்படையாகக் கிளம்புவதற்கான வாயப்புகளைத் தாங்கள் தருவதனால், சிங்கள பௌத்த பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றுமை பாதிக்கப்படும் என அவர்கள் கருதினார்கள். ஒரு வகையில் வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து சகலமுரண்பாடுகளையும் இரண்டாம்பட்சமாக முன்வைத்த மரபான மார்க்சிய நிலைப்பாட்டை ஒத்தது விடுதலைப் புலிகளின் இந்த நிலைப்பாடு.

II

தேசியமும் மார்க்சியமும் பிற முரண்பாடுகளும் தொடர்பான இந்த விவாதவெளிக்குப் போவதற்கு முன்னால், ஈழ விடுதலைப் போராட்டமும், உள்நாட்டு இடப்பெயர்வும், புகலிட நாடுகள் நோக்கிய மக்களின் வெளியேற்றமும் யாழ்ப்பாணத்தின் சாதியக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் ஆய்வாளர்களின் சில அவதானங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

 

 

விடுதலைப் புலிகளின் சாதிய ஒதுக்குதலின் மீதான தடையால் வெளிப்படையாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாத நிலை வெள்ளாளர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளிடம் இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்கள் திட்டவட்டமாக பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறார்கள். நிலங்கள் தொடர்பான சில தகராறுகள் தங்களிடம் வந்தபோது, தலித்துகளுக்கு அனுசரணையாகவே புலிகள் செயல்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் இடப்பெயர்வு காரணமாக கறாரான சாதிஒதுக்குதலையும் தீண்டாமையையும் பஞ்சமர்களின் மீது சுமத்தமுடியாத சூழலுக்குப் பிற சாதியினர் தள்ளப்பட்டார்கள்.

எனினும் இடைத்தங்கலாகத் தங்கிய நிலங்கள் வெள்ளாளருடையதாக இருந்தால், அங்கு முன்னுரிமைகள் வெள்ளாளருக்குத் தரப்பட்டிருக்கின்றன. நலவாழ்வு முகாம்கள் (welfare camps) என அமைக்கப்பட்ட இடங்களிலேயே தலித்துகள் தங்கமுடிந்தது. வெள்ளாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களிலும் தீண்டாமை முறைகளைக் கடைப்பிடிக்க முயன்றனர். கோயிலில் நுழையத் தடை, பொதுக் கிணற்றில் நீரெடுக்கத் தடை என்பனவற்றை அச்சூழலிலும் தலித் மக்கள் எதிர்கொள்ளவே நேர்ந்தது. இத்தகைய சூழலில் புலிகளிடம் இந்நிலைமை முறையிடப்பட்டபோது பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலுமான வெள்ளாளர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதால், யாழ்ப்பாணத்திலுள்ள நிலங்களை தலித்மக்கள் வாங்குவதற்கான சூழலும் கூடவே தோன்றியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

விடுதலைப் புலிகள் சாதிவாதிகள் என்பதை நிரூபிப்பதற்காக புகலிட தலித்தியர்கள் முன்வைக்கும் சில விவாதங்கள் விநோதமானவை. யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வர் ராஜதுரை கொல்லப்பட்டபோது, விடுதலைப் புலிகள் அவரை தலித் என்ற காரணத்திற்காகத்தான் சுட்டுக் கொன்றார்கள் என்றார்கள். தலித்தியரும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளருமான தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டபோது தமிழ்ச்செல்வனை தலித் என்பதால் (தமிழ்ச் செல்வன் அம்பட்டர்) திட்டமிட்டுத்தான் விடுதலைப் புலிகள் சாகக் கொடுத்தார்கள் எனப் ‘பேசிக்கொள்கிறார்கள்’ என்றும் வியாக்கியானப்படுத்தினார்கள்.

 

 

முதல்வர் கொல்லப்பட்டதற்கான காரணமாக அவர் விடுதலைப் புலி எதிர்ப்பாளரான டக்ளஸ் தேவானந்தாவுடன் உறவு கொண்டிருந்த காரணங்களே இருந்திருக்குக்கூடும் என எழுதுகிறார் பத்திரிகையாளரான டிபிஎஸ். ஜெயராஜ். டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக முதல்வருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசப் பேச்சுகள் நடந்திருப்பதையும் அவர் பதிவு செய்கிறார். பிரச்சினை சாதிய வடிவம் எடுத்துவிடாத அவதானம் விடுதலைப் புலிகளுக்கு வேண்டும் எனவும் அவர் எழுதுகிறார்5.  

இலங்கை ராணுவம் திட்டமிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மருத்துவமனைகளின் மீதும் குண்டு போடுகிறது. அதன் பகுதியாகவே விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழிக்கிறது. தமிழ்ச்செல்வன் அதனது பகுதியாகவே கொல்லப்பட்டார். அவரது மரணத்தைக் கூட புலி எதிர்ப்பாளர்கள் தமது தலித்தியக் கோரலுக்குப் பாவித்த வக்கிரம்தான் அரங்கேறியிருக்கிறது.

சாதி, மத, இனக்குழு பேதமின்றி தமிழ் மக்களைக் கொல்லும் சிங்கள இனவாத ராணுவம், இதனை எதிர்த்து ராணுவ ரீதியில் போராடும் ஏகப்பிரதிநிதித்துவவாதிகளாகப் புலிகள், அந்தப் போராட்டத்தின் ஒற்றுமைக்காகச் சகலமுரண்பாடுகளையும் மௌனமாக்கும் சிந்தனைப் போக்கு என மிகச் சிக்கலான ஒரு செயல்போக்கை, எழுந்த மேனியாக விடுதலைப் புலிகள் தலித் விரோதிகள் எனத் திரித்ததாகவே புகலிட (தலித்தியரல்லாத) தலித்தியர்களதும், அவர்களுக்கு முண்டுகொடுக்கும் தமிழக (தலித்தியரல்லாத) தலித்தியப் பின்நவீனத்துவரான அ.மார்க்சினதும், தலித்தியரான ஆதவன் தீட்சண்யாவினதும் நிலைப்பாடுகள் இருக்கின்றன.

விடுதலைப் புலிகளை இந்துத்துவவாதிகள் என நரேந்திரமோடியினுடனும் பிஜேபியினுடனும் சமப்படுத்துவதும் இத்தகைய அபத்தம்தான். அத்வானியோ அல்லது நரேந்திரமோடியோ பாபர்மசூதி இடிப்பையோ அல்லது குஜராத் இஸ்லாமிய மக்கள் படுகொலைகளையோ தவறு எனச் சொன்னதில்லை. இஸ்லாமியர்களுடன் அவர்கள் ஒருபோதும் உரையாடலில் ஈடுபட்டதில்லை. விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்பத் தமது தவற்றை, யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றப்பட்ட தவற்றை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியக் கண்ணோட்டத்திலிருந்து ஈழத் தேசிய இனப் பிரச்சினையை எப்படிப் புரிந்து கொள்ள முடியாதோ, அதைப்போலவே ஈழத்தின் சாதியப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தமிழக தலித்தியக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் புரிந்து கொள்ள முடியாது.

 

 

III

ஆதவன் தீட்சண்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து பேசுவதாலும், அ.மார்க்ஸ் (ஈழப் பிரச்சினை தொடர்பான ‘புத்தகம் பேசுகிறது’ நேர்முகம்), ஷோபா சக்தி (‘புதுவிசை’ நேர்முகம்), சசீந்திரன் (‘புதுவிசை’ நேர்முகம்) போன்ற புலியெதிர்ப்பு (தலித்தியரல்லாத) தலித்தியர்களின் குரலை தமிழகச் சூழலில் ஆதவன் முன்வைப்பதாலும், ஈழத் தேசியப் பிரச்சினை குறித்த இரு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்தே நாம் பிரச்சினையைப் பேசத்துவங்க வேண்டியிருக்கிறது.

1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திற்கு ஈழத்தமிழ் மக்கள் வந்தபோது அவர்களுடன் உறவைப் பேணுவதிலும் சரி, அவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்துவதிலும் சரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகளும் தமிழகத் தலைமையினரும் எடுத்த நிலைப்பாட்டினை ஒப்பிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தோழர்களிடம் தோழமை உணர்வையும் கொண்டிருக்கவில்லை. உரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அ.மார்க்ஸ், ஈழவிடுதலை இயக்கங்களின் பாலான அவரது அனுசரணையான செயல்பாட்டுக்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அன்றிலிருந்து இன்று வரை மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. காலத்தின் கோலம் அ.மார்க்ஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை வந்தடைந்திருக்கிறார். விளைவாக ஷோபாசக்தி,  சசீந்திரன் போன்றவர்கள் கூட ஆதவன் தீட்சண்யாவின் ஊடே தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன் பயணிகள் ஆகியிருக்கிறார்கள்.

 

 

என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையினருக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஈழத் தமிழ்த் தேசியப் பிரச்சினை சார்ந்த எந்தவிதமான ஆழ்ந்த அறிதலும் இல்லை. இதற்கான மிகக் கடுமையான சான்று : சென்ற அகில இந்திய மாநாட்டில்தான் அவர்கள் ஜேவிபியைத் தமது மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். ஜேவிபி சுத்தியல் அரிவாள் கொடிவைத்த ஒரு சிங்கள இனவாத அமைப்பு. அதனது கட்சியின் வகுப்புகளில் போதிக்கப்பட்ட ‘ஐந்தாவது கருதுகோள் (fifth thesis) மலையகத் தமிழர்களை (ஆதவன் தீட்சண்யா கூர்ந்து கவனிக்க வேண்டும்) இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கைக்கூலிகளாகப் பார்த்தது. 2009 மே, இலங்கை ராணுவ வெற்றியின் பின் தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் என்று ஏதுமில்லை, ஆகவே எந்தவிதமான அரசியல் தீர்வுத்திட்டமும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்று சொல்லும் கட்சி இது. இது வரையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துலகத்தை உருவாக்கிய கூறுகள் இரண்டு. ஒன்று : ஜேவிபி எனும் ஒரு இனவாத இயக்கம். இரண்டாவது கூறு : இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனான இந்து ராம். இதனை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இனவாதக் கட்சி என முடிவுக்கு வருவதற்கு ஒப்பானதுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சாதிய வெறியர்களாகவும் இந்துத்துவவாதிகளாகவும் சித்தரிக்கிற பார்வை.

 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக அணிகள் ஷோபா சக்தி, சுசீந்திரன், அ.மார்க்ஸ் போன்றவர்களின் வழியில் ஈழப் பிரச்சினையை அணுக நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. .

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எண்பதுகளில் ஈழவிடுதலை இயக்கங்களில் மார்க்சியப் போக்குகளைத் தமது அணிகளில் கொண்டிருந்த ஈழப் புரட்சி அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்றவற்றுடன்தான் தனது தோழமையை வெளிப்படுத்தியது. தமிழ்த்தேசியத்தைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலை இயக்கமும் இடதுசாரிகளை அணுகவில்லை. அவர்கள் திமுகவையும் அண்ணா திமுகவையும்தான் அணுகினார்கள். அதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிற்காலத்தில் எந்தவிதமான விமர்சனமும் அற்றவகையில் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட அணிகளிடம் தமிழகத் தலைமையின் இந்தத் தலைகீழ் மாற்றம் உற்சாகமாக வரவேற்கப்படவில்லை.

 

 

இவ்வகையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஈழத்தின் அரசியல் வாலாற்றையும் நிகழ்ந்து வந்திருக்கும் மாற்றங்களையும் அவதானிக்கத் தவறின.

IV

தலித் அரசியலினதும் மார்க்சியர்களதும் செயல்பாடுகளிலிருந்து நாம் துவங்குவோம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அம்பேத்கர் எனும் ஆளுமையும் பெரியார் எனும் ஆளுமையும் கம்யூனிஸ்ட் அணிகளால் சுவீகரிக்கப்படுவதற்கும், தலித்தியப் பார்வை வர்க்கப் பார்வைக்கு இணையானது எனும் நிலைப்பாட்டுக்கு இவர்கள் வந்து சேர்வதற்கும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது.

என்ன காரணம்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பார்ப்பனியத் தலைமையாக இருந்தது என அதனது தலித்திய விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலித்தியரல்லாதவர்களின் தலைமையைக் கொண்டிருந்தது என அதனது விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஏன், ஷோபா சக்தியின் ‘சத்தியக் கடதாசி’ இணையத்தளத்தில் மோனிகாவின் ஒரு கட்டுரையில் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும்தான் இந்தியாவிலேயே அதிகமான பார்ப்பனர்களைக் கொண்ட அரசியல் தலைமை இருக்கிறது எனச் சொல்லப்பட்டது.

 

 

சாதியப் பிரச்சினையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்காததற்குக் காரணம் பார்ப்பனியத் தலைமைதான் என்பதை ஒரு மார்க்சியனாக நான் ஏற்கவில்லை. நீங்கள் ஏற்கிறீர்களா ஆதவன்? தலித்தியம் மட்டுமல்ல, ஆண்கள் தலைமையில் அதிகமாக இருப்பதாலேயே பெண்நிலைவாதத்தை மார்க்சியர்கள் ஏற்கவில்லை என்ற விமர்சனமும், ஆண்பெண் பாலுறவுப் பழக்க வழக்கம் கொண்டவர்கள் அதிகமாக இருப்பதால்தான் சமப்பாலுறவாளர்களை மார்க்சியர்கள் ஏற்காது இருந்தார்கள் என்றெல்லாம் விமர்சனம் வரும்போது, ஆமாம், அதுதான் காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ஆதவன்?

மரபான மார்க்சியர்கள் இவைகளை ஏற்காததற்கான காரணங்கள் நாம் அனைவரும் சர்வதேசியவாதிகளாக இருந்ததுதான். மார்க்சிய அனுபவங்களை ரஷ்யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்து பாவித்ததுதான் காரணம். வர்க்கப் போராட்டம் நடந்து முதலில் சோசலிசம் வரட்டும். அதன் பின் பெண்விடுதலை, சாதிநீக்கம் வரும் என நம்பினோம். சகலமும் அதன்பின் சமப்பட்டுவிடும் என நாம் நம்பினோம். இட்லரிடமிருந்து சோவியத் யூனியனைக் காப்பதற்காக ஆங்கில ஏகாதிபத்தியத்தை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும் எனவும் நிலைப்பாடு எடுத்தோம்.

 

 

பிரிட்டிசாரை எதிர்த்து இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஆயுதவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை. ஜனநாயக அரசியல் செய்யக் கூடிய அந்தச் சூழலிலும், அப்போதும் அம்பேத்கரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கவில்லை. தமிழகத்தில் பெரியாரை நாம் ஏற்கவில்லை. திராவிட இயக்கத்தினரின் மொழிவழிப்பட்ட ஜனநாயகக் கோரிக்கைளை நாம் இட்லரோடு ஒப்பிட்டு, பாசிசத்தோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். பி.ராமமூர்த்தியும் ஜீவாவும் இப்படித்தான் பேசினார்கள். கே. பாலதண்டாயுதம் இப்படித்தான் பேசினார்.  காரணம் ஒன்றே ஒன்றுதான் : வர்க்க மையவாதம். அதற்காக அனைத்து முரண்பாடுகளையும் நாம் கீழ்மைப்படுத்தினோம். இதற்காக நாம் அனைவருமே கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.

தேசிய இனப் பிரச்சினை, பெண்ணிலைவாதம், சூழலியல், சமப்பாலுறவு, மனித உரிமை அக்கறை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள், விளிம்புநிலைக் கலாச்சாரங்கள் இவையெல்லாம் பற்றியும் மார்க்சியர்கள் அக்கறைப்பட வேண்டும் என நாம் சிந்திப்பதற்கு, கலாச்சாரப் புரட்சியின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, செப்டம்பர் சம்பவங்கள், புதிதாக இனத்தேசங்கள் அமைந்தமை, முதலாளித்துவத்தின் சாதனைகள் பற்றிய மறுபரிசீலனை, குடிமைச் சமூகம், மக்கள்நல அரசு, மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு என அத்தனையையும் நாம் சுவீகரிக்க வேண்டியிருந்தது.

 

 

புகலிடச் சூழலை அறிந்தவர்களுக்குத் தெரியும். சோசலிசத் தமிழீழம் என நம்பிப் புறப்பட்டவர்களுக்கு, சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்த ஈழப் போராட்டத்தின் திசை மாற்றத்தின் பின், ஒரு மிகப் பெரிய நம்பிக்கை வெற்றிடம் தோன்றியிருந்தது. தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ந்த போது அவர்களது கோட்பாட்டு நம்பிக்கைகளும் சிதைந்து போயின. தமிழகத்தில் தலித்தியத்தைக் கோட்பாட்டுருவாக்கம் செய்வதற்கு அ.மார்க்சுக்கும் ரவிக்குமாருக்கும் பின்நவீனத்துவம்தான் அப்போது கைகொடுத்தது. அ.மார்க்ஸ் மார்க்சியத்தின் பெயரால் நடந்தவைகளைப் பட்டியலிட்டுப் புத்தகமாக ஆக்கியிருந்தார். இந்த அலை புகலிடத்திற்கும் வந்தது. விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களுக்குத் தமது எதிர்ப்பைக் கோட்பாட்டுருவாக்கத்திற்குள் கொண்டு வரவேண்டிய தேவை இருந்தது. நிறப்பிரிகை தொகுத்த ‘தேசியம் ஒரு கற்பிதம்’ அவர்களுக்குக் கச்சிதமான சட்டகம் ஆகியது. தேசியம் கற்பிதம் எனக் கொண்டு, தமிழக தலித்தியத்தினால் ஈழத் தேசியப் போராட்டத்தை அவர்களை மறுவரைவு செய்ய எத்தனித்தார்கள். இதுவன்றி இஸ்லாமிய அரசியலின் காவலராகத் தன்னை வரித்துக் கொண்ட (இது பற்றி எழுத்தாளர் ஸல்மாவும் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஊர்விலக்கம் செய்யப்பட்ட இடதுசாரி எழுத்தாளர் ஹெச்.சி.ரசூல் குறித்த எந்த நிலைப்பாட்டையும் அ.மார்க்ஸ் இதுவரையிலும் எடுக்கவில்லை) அ.மார்க்ஸ்சின் இஸ்லாம்-இந்துத்துவம் பற்றிய இருதுருவ  வாய்ப்பாட்டையும் இவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

 

 

யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதற்கான அடிப்படையான காரணமாக விடுதலைப் புலிகள் சொன்னது என்ன? வடகிழக்கில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தில் அவ்வேளை இஸ்லாமிய உயரதிகாரிகளும் இருந்தனர், இவர்களது தொடர்பிலிருந்து சில இஸ்லாமிய மதம் சார்ந்த தனிநபர்கள் விடுதலைப் புலிகளைக் குறித்த உளவுத் தகவல்களை இலங்கை ராணுவத்தினருக்குத் தெரிவித்தனர். இவ்வாறான சில தனிநபர்கள் இலங்கை ராணுவத்தினருக்கான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதனை இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதனைக் கண்டித்த ஈழத்து இஸ்லாமிய அரசியல்வாதிகள் முன்வைத்ததில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்திலுள்ள சில தனிநபர்களைத் தண்டிப்பது என்பதற்கு மாறாக, முழு இஸ்லாமிய சமூகத்தினதும் சொத்துக்களையும் கையகப்படுத்திக் கொண்டு, 24 மணித்தியாலங்களுக்குள், வெறும் 500 ரூபாயுடன் அம்மக்கள் கூட்டத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியது இனப்படுகொலை முஸ்தீபை ஒத்த கொடூரமான செயல் எனவே அவர்கள் விமர்சனத்தை வைக்கிறார்கள்.

‘யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய செயல் விடுதலைப் புலிகளின் இந்துத்துவ நிலைப்பாட்டில் இருந்து எடுத்த நடவடிக்கை எனத் தான் இப்போதும் கிஞ்சிற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை’ என நான் இது குறித்துப் பேசியபோது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட  புகலிடத்தின் முக்கியமான ஊடகவியலாளரும் இஸ்லாமியரும் ஆன இளைய அப்துல்லா என்னிடம் பகிர்ந்து கொண்டார். அ.மார்க்சும் அவரது புகலிட சீடரான ஷோபாசக்தியும் யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் வெளியேற்றத்தை தமிழக இந்துத்துவவாதிகளின் மனப்பான்மையுடன் முடிச்சுப் போட முனைகின்றனர். அப்பட்டமான பொய்.

 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காகச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் - இளைஞர்களையும் யுவதிகளையும் - விடுதலைப் புலிகள் தமது முள்ளியாவளை மாவீரர் நினைவில்லத்தில் ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி, இஸ்லாமிய சமாதியில் அப்போராளிகள் புதைக்கப்படவில்லை  எனும் வருத்தம் கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது.  ஆனால் சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமியப் போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறு விதமாகச் செயல்பட்டிருக்க முடியாது. யாழ்ப்பாண இஸ்லாமியர் வெளியேற்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களான பானுவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கரிகாலனும் கருணாவும்தான் முக்கிய பங்காற்றினார்கள்6. அதே கருணா தற்போது ஷோபா சக்தியால் ஜனநாயகவாதியாக முடிசூட்டப்படுவது வரலாற்றின் முரண்நகை அன்றி வேறென்ன?

 

 

அ.மார்க்சும் ஷோபா சக்தியும் தமிழகத்தில் அவிழ்த்துவிட்டிருக்கும் இன்னுமொரு நச்சுப் பிரச்சாரம், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது அப்பட்டமான பொய்.

2002 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது இது குறித்த கேள்விகளுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் பதில் சொல்லியிருக்கிறார். தாம் முஸ்லீம்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியிருக்கிறோம் என்பதனையும், இஸ்லாமியர்களுக்கு தமிழர் தாயக நிலத்தில் உரிமை உண்டு எனவும் பாலசிங்கம் அந்த உரையாடலில் தெரிவித்திருக்கிறார்7.

 

 

விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவாளர் நெடுமாறன் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிஜேபி இல.கணேசனுக்கு தேர்தல் வேலை செய்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அத்வானியைச் சந்தித்தனர். விடுதலைப் புலிகளின் போதாத காலமாக பால்தாக்கரே ஈழத் தமிழர்களின் உடம்பில் ஓடுவது இந்து ரத்தம் என்றார். இவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், ஆகவே விடுதலைப் புலிகள் இந்துத்துவவாதிகள். ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் என்றனர் ஷோபா சக்தி வகையினர்.

சாதியத்தையும் இந்துத்துவத்தையும் கடுமையாக எதிர்க்கிற இன்குலாப்பும் தியாகுவும் விடுதலை. ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் கோவை கு.ராமகிருட்டிணனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, ஆக விடுதலைப் புலிகள் பெரியாரினது வாரிசுகள் அல்லவா?

 

 

தலித்தியக் கோட்பாட்டாளரான ரவிக்குமாரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, ஆக விடுதலைப் புலிகள் அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் அல்லவா?

பல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் இயங்குகிற ஒரு புவிப்பகுதியில் நடக்கிற இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறும் சக்திகள் ஒற்றைப்பட்டைத் தன்மையுடன் இருப்பது எவ்வாறு சாத்தியம்? ஏன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இந்திய சமூகத்தில் எதிரொலிக்கிற எல்லா முரண்பாடுகளும் அவர்களது தலைமையிலும் அணிகளிடமும் எதிரொலிக்காமலா இருக்கிறது?

புலிகள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்கிறீர்கள். இந்துத்துவவாதிகள் என்கிறீர்கள். முதலாளித்துவவாதிகள் என்கிறீர்கள். சாதி வெறியர்கள் என்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது என்பதற்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது இவ்வாறான முத்திரைகள் குத்துவது கொடுமையிலும் கொடுமை.

 

 

வியட்நாம் அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது. சீனா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இருவரும் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளா? தொண்ணூறுகளில் விடுதலை பெற்ற எந்த நாடும், சுமார் 30 நாடுகள்,  சோசலிசத்தைத் தேறவில்லை. என்ன செய்யப் போகிறோம்?  மாவோவின் காலத்தில் மாபெரும் பாய்ச்சலில் இலட்சக் கணக்கில் பட்டினியால் மக்கள் இறந்தனர். அவரை எப்படி அழைப்பது? தலித்தியப் பிரதிநிதித்துவம் என்பது மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலித் விரோதக் கட்சியா? இந்துத்துவக் கட்சியா?

முத்திரைகள் குத்துவது எளிது. முத்திரை குத்தும் பழக்கத்தை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய மகானுபாவர் அ.மார்க்ஸ். கோவை ஞானிக்கு, எஸ்.என்.நாகராசனுக்கு, தன்னை விமர்சிக்கிற அல்லது தான் விமர்சிக்க நேர்கிற எல்லோருக்கும் முத்திரை குத்துவது அவரது மரபு. அவரது முத்திரை குத்தலுக்கு அவரது முன்னாள் தலித்திய நண்பர் ரவிக்குமார் கூடத் தப்பவில்லை.

புகலிடத்தில் அவரது வழித்தோன்றல்கள் அவர்களுடன் முரண்படுகிற, அவர்களுக்கு ஒவ்வாத அனைவருக்கும் சாதிய முத்திரைகள் குத்துவார்கள். ரயாகரனுக்கு உயிருடன் கல்வெட்டு அடிப்பார்கள். யமுனா ராஜேந்திரனை காணாமல் போக வைப்பார்கள். சபா.நாவலனுக்கு வாயில் சர்க்கரைக்குப் பதில் சயனைடைப் போடவா என்பார்கள். இந்தப் புரட்சிகர நடவடிக்கைகளைச் செய்தவர் உங்கள் தலித்திய ஜனநாயக நண்பர் ஷோபா சக்திதான். ஷோபா சக்தியிடம் துவக்கு மட்டும் இருந்திருந்தால் இப்போது புகலிடத்தில் மூவர் நிஜமாகவே காணாமல்தான் போயிருப்பார்கள். அவ்வளவு வக்கிரமும் வன்முமம் அவருக்குள் குடி கொண்டிருக்கிறது.

 

 

சிங்கள திரைப்பட இயக்குனர் துசரா பிரீசை அடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போகவில்லை. தோழர்.தா.பாண்டியனும் அதனை ஆதரிக்கவில்லை. ஆனால் ஷோபா சக்திக்குத் தோழர். தா. பாண்டியனை அடிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. லண்டன் மேடையில் இப்படித்தான் இவர் ‘அறம்’ பேசுகிறார்.

ஈழவிடுதலைப் போராட்டம் துவங்கியபோது அனைத்து இயக்கங்களதும் எதிர்காலக் கனவு சோசலிசத் தமிழீழம்தான். விடுதலைப் புலிகளது கனவும் சோசலிசத் தமிழீழம்தான். அந்தக் கனவைத் தொடர்ந்தும் காவி வருவதற்கான நம்பிக்கையை இன்று ‘நிலவும்’ சோசலிச நாடுகளில் இருந்து எவரும் பெற முடியாது. இந்தியாவில் இருக்கிற தொழிற்சங்க உரிமைகள் கூட சீனாவில் இல்லை. கிராமப்புறத்துச் சிறுவர்கள் அதிக அளவில் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக நகரப்புறத்துக்கு வருகிறார்கள். இந்திய ஜனநாயகத்தோடு சீனாவை ஒப்பீட்டளவில் கூட போற்றிப் பேச முடியாது. வியட்நாமிய ‘தேசிய’ சோசலிசம், முதலாளித்துவம்-சோசலிசம் என இரண்டின் நல்லவைகளையும் எடுத்துக் கொள்ளும் என்கிறார் ஜெனரல் நிகுயன் கியாப். இந்த நோக்கில் விடுதலைப் புலிகளின் எதிர்கால அரசு, அவர்கள் முன்பு சொன்ன டிட்டோவின் யுகோஸ்லாவிய மாதிரியிலிருந்து, சந்தைப் பொருளாதார சமூகமாக மாறியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

 

 

விடுதலைப் புலிகள் அமைப்பு வடிவம் ஸ்டாலினிய, போல்பாட்டிச, ஸதாம் ஹுசைன் வகையிலான அமைப்பு வடிவம்தான். சதாம் ஹுசைனைப் போற்றுகிற அ.மார்க்ஸ் வகையறாக்கள் பிரபாகரனைக் கடுமையாக விமர்சிப்பது முரண்நகை. தலிபான்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இஸ்லாமின் அழிவுச் சிந்தனைகள் பற்றியோ, காஷ்மீரத்திலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் பற்றியோ, ஈரானில் அரங்கேறும் பெண்கொலைகள் பற்றியோ, அல்லது தஸ்லிமா சுட்டுகிற மாதிரி பங்களாதேசில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களைச் சூறையாடிய இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ அ.மார்க்ஸ் வாய்திறக்க மாட்டார். ஆனால், வெனிசுலாவின் சேவாசையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் பற்றி மட்டும் திரு உருவைக் கலைத்துக் கட்டுடைத்துக் கொண்டேயிருக்கிற ‘தேர்ந்தேடுத்த ஞாபகமறதிப் பேராசிரியர்‘தான் அ.மார்க்ஸ்.

 

 

கடந்த இரு தசாப்தங்களில் அ.மார்க்சின் எழுத்துகளை எடுத்துப் பார்த்தோமானால் அதில் கணிசமானவை  கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை இயக்கங்களையும் இடதுசாரிகளையும் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்தான். உலகெங்கிலும் தகவல்களைத் திரட்டி இவை பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். அடுத்தாக எந்த ஆக்கத்தன்மையுமற்று, அழிவை மட்டுமே முன்வைத்து உலகளாவிய அரசியலாகி வரும் அரசியல் இஸ்லாம் எனும் மனிதவிஷம் பற்றி, அதனது இடதுசாரி எதிர்ப்புத்தன்மை பற்றி அவர் மௌனம் காப்பார். வஹாபி இஸ்லாமியரை விடவும் அடிப்படைவாத இஸ்லாமியக் கோட்பாட்டாளர்களின் மௌனம் போன்றது இவ்விஷயத்தில் அ.மார்க்சின் மௌனம். இந்த மௌனமும் அவரது எழுத்துகளாகக் குவிந்திருக்கிறது. இந்த இரு வகையிலான எழுத்துகளோடு ஒப்பிட, உலகின் ஒடுக்குமுறை அமைப்புகள், அரசுகள் குறித்த அவரது எழுத்துகள் மிகவும் சொற்பம். இந்த அளவில்தான் ஜெயமோகனுக்கும் அ.மார்க்சுக்குமான சந்திப்பு முனை தோன்றுகிறது.

பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்வைக்கிற, மார்க்சியம் காலாவதியாகிவிட்டது அல்லது புரட்சிகரக் கட்சிக்குப் பதிலாக வானவில் கூட்டணி என, ஒடுக்குமுறைக்குள்ளான சக்திகளுக்குள் குறைந்தபட்சப் புரிதலின் அடிப்படையில் ஒற்றுமை என்பதற்கு மாற்றாக, அடையாள அரசியலை முன்வைத்து பன்முகத்துவம் என்பதனைப் பேசியபடி, அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான சக்திகளைப் பிளவுபடுத்தும் அவரது அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா? ஈழப் பிரச்சினையில் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா கூட்டு ஒரு மிகமோசமான சந்தர்ப்பவாத அரசியலின் துவக்கம்.

அ.மார்க்சின் பன்மைத்துவத்திற்கும் அடையாள அரசியலுக்கும் தமிழக தலித்தியக் கட்சிகளின் இன்றைய நிலை ஒரு சாட்சி. தத்தமது குறுகிய சாதிய அடையாளங்களை முன்வைத்து, பன்முகத்துவத்தை முன்வைத்துக் கூர்தீட்டியபடி, திசைக்கு ஒன்றாக நிற்கிற தலித்திய சக்திகளை பார்ப்பானியத்திற்கும், இந்திய அரசின் பார்ப்பனிய கருத்துருவ இயந்திரத்திற்கும் எதிராக நிறுத்த தனது பின்நவீனத்துவ அரசியல் சார்ந்து கத்தை கட்டிவிட்டு, பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத்தின் மக்களிடம் தனது அடையாள அரசியலை அ.மார்க்ஸ் பேசட்டும்.

தலித்திய இயக்கங்கள் வேறாகவும் அதனது பூர்வீகத் தத்துவ ஆசான் வேறாகவும் பிரிந்து கிடப்பதுதான் தமிழக தலித்திய அரசியல் யதார்த்தம். இந்த இலட்சணத்தில் ஈழத்து தலித்திய அரசியலின் பிதாமகனாக அ.மார்க்ஸ் வேஷந்தரித்திருப்பது படு அபத்தநாடகம்.

 

 

V

இந்தியாவில் பிரித்தானிய ராணுவத்தின் கீழ் வாழ்ந்த இந்திய மக்கள், சிங்கள இனவாதிகளின் ராணுவத்தின் கீழான ஈழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் மனித அவலத்தைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஈழத்தில் நடந்து கொண்டிருப்பது உள்நாட்டு யுத்தம். கொடிய ராணுவத்தை எதிர்த்து அங்கே போர்நிகழ்ந்து கொண்டிருந்தது.

அம்பேத்கர் காங்கிரசுக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையில் நிலைப்பாடு எடுப்பதற்கான சூழல் இந்தியாவில் நிலவியது. இருவருடனும் உரையாடல் நிகழ்த்தக் கூடிய வாய்ப்புகளும் இருந்தது. மார்க்சியர்களுக்கும் தலித்தியர்களுடன் உரையாடல் மேற்கொள்ளக் கூடிய சூழல் நிலவியது.

இலங்கையில் தலித்திய உரையாடலை மேற்கொண்டிருக்கக் கூடிய சூழல், உள்நாட்டுப் போர் உக்கிரம் பெற்ற நிலைமையில் இல்லாது போனது. உயிர்வாழ்தலும் இடப்பெயர்வும் அங்கு அன்றாட வாழ்வுப் பிரச்சினையாக ஆனது.

 

 

சாதியைத் தாங்கள் ஒழித்துவிட்டதாக விடுதலைப் புலிகள் எங்கும் பிரகடனம் செய்யவில்லை. சாதி ஒதுக்குதலைக் குற்றமாக்கியிருக்கிறோம், சாதிய ஒதுக்குதலைத் தடை செய்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். சாதிய ஒதுக்குதலுக்குத் தண்டனை அளிப்போம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தமது அமைப்பை அவர்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை.

அவர்களது அமைப்பு சார்ந்த கருத்தியலை அவர்கள் ஸ்டாலினிடம் இருந்துதான் சுவீகரித்தார்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னிறுறுத்தி சகலவற்றையும் இரண்டாம் பட்சமாக ஆக்கிய சிந்தனையமைப்பின் தொடர்ச்சியாகத்தான் அவர்கள் வர்க்கத்திற்கு மாற்றாக தேசியத்தை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். சாதி பாட்டாளிவர்க்க ஒற்றுமையைப் பிளந்துவிடும் என இந்திய மார்க்சியர்கள் விவாதித்து வந்திருக்கிறார்கள். அவ்வகையில் சாதியப் பிரச்சினைகளை அவர்கள் மௌனமாக்கி வந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியில் சாதிய ஒடுக்குமுறைக்கு கருத்தளவில் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வந்திருக்கிறார்கள். இதற்காக எவரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சாதிய வெறியர்கள் என்றோ இந்துத்துவவாதிகள் என்றோ சொன்னதில்லை. விடுதலைப் புலிகளும் இவ்வாறு தேசியத்தை முன்னிறுத்தி, சாதியப் பிரச்சினையை இரண்டாம் இடத்திற்கு நகர்த்தியதால் அவர்களைச் சாதி வெறியர்கள் எனச் சொல்ல முடியாது.

 

 

அவர்களது அமைப்பில் அவர்கள் திட்டமிட்ட வகையில் கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமணச் சடங்குகளில் தாலியை நிராகரித்திருக்கிறார்கள். சாதிகடந்த வகையில் மாவீரர்களின் கல்லறைகளை அமைத்திருக்கிறார்கள். நடைமுறையில் தேசிய ஒற்றுமை கருதி சாதியப் பிரச்சினையில் மௌனம் காத்தினரே ஒழிய, அமைப்பில் சாதியையும் சாதி வெறியையும் அவர்கள் ஒரு போதும் கட்டிக் காக்கவில்லை. இஸ்லாமியர் தொடர்பாக அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் ஒரு போதும் நியாயப்படுத்தியதில்லை.

மலையகத் தமிழர்களின் சாதிய அடையாளம் ஒற்றைப்பட்டைத் தன்மையானது இல்லை. மலையகத் தமிழரிடையேயும் தமிழகம் போலவே சாதிய ஒதுக்கலும் ஒடுக்குமுறையும் உண்டு. அதனை அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் காவிக் கொண்டுதான் போனார்கள். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்குப் போனவர்கள் அனைவரும் தலித்துகளும் இல்லை. மலையகத் தமிழரின் பாலான எழுபதுகளுக்கு முன்னான யாழ்ப்பாண சமூகத்தவரின் சாதிய தடித்தனத்திற்கு விடுதலைப் புலிகளை பொறுப்பாக்க முடியாது.

 

 

மலையகத் தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகளாகப் போராடி மடிந்திருக்கிறார்கள். யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது. மரபுரீதியான யாழ்ப்பாண சமூகம் வெள்ளாள மேட்டுக்குடி சமூகம்தான். சாதிய ஒதுக்குதல் சமூகம்தான். விடுதலைப் புலிகள் தமது ஆளுகையின் கீழ் இதனை மாற்றியமைத்தனர். தமிழ் சமூகத்தின் தலைமையைத் தாம் ஏற்றதன் வழி வெள்ளாளத் தலைமையை அவர்கள் அகற்றினார்கள். சாதிய ஒதுக்குதலைத் தமது சட்ட உருவாக்கலில் குற்றச் செயலாக ஆக்கினார்கள்.

விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வையே அவர்களது எல்லாத் தவறுகளுக்கும் காரணமாக அமைந்தது. சாதியப் பிரச்சினை குறித்த விவாதம் மட்டுப்படுத்தப்பட்டமையும் அவர்களது அந்த நிலைப்பாட்டின் கீழ்தான் வருகிறது. மாறாக பிரக்ஞைபூர்வமாக விடுதலைப் புலிகள் சாதி காப்பாளர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

 


 
தமிழகச் சூழலில் அ.மார்க்சும் அவரது புகலிடச் சீடர்களும் இரண்டு வார்த்தைகளை வரலாறு கடந்து, விமர்சனமற்ற வகைகளில் புனிதமாக்கி வைத்திருக்கிறார்கள். தலித்தியம் மற்றும் இஸ்லாம் என்பது அந்த இரண்டு புனித வார்த்தைகள்.

தலித்தியப் பார்வையிலிருந்து பேசுவதாகவோ அல்லது இஸ்லாமிய நோக்கிலிருந்து நீங்கள் பேசுவதாகவோ காட்டிக் கொள்வீர்களானால் நீங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்கள். முரண்படுபவர்கள் சாதியவாதி என்றோ இந்துத்துவவாதி என்றோ முத்திரை குத்தப்படுவார்கள். அவர்களது உயிர்க்கூற்று ஆராய்ச்சியை இவர்கள் உடனடியாகத் துவங்கிவிடுவார்கள்.

 

 

பிறப்பிலேயே தலித்தியரோ அல்லது இஸ்லாமியரோ அல்லாதவர்கள் இந்தத் தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் எதிரிகளை இப்படித்தான் கட்டமைக்கிறார்கள். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் சாதியம் பற்றிப் பேசுகிற அ.மார்க்ஸோ அல்லது புகலிட நாடுகளில் தலித்தியம் பற்றிப் பேசுகிற ஷோபா சக்தியோ அல்லது சுசீந்திரனோ இவர்களில் எவருமோ தலித்தியரும் இல்லை, இஸ்லாமியரும் இல்லை.

ஈழ தலித்தியத்தை புலி எதிர்ப்பு வெள்ளாளர்கள் எப்போதோ தமது அரசியல் நலன்களுக்காகக் கடத்திவிட்டார்கள் என்று வளர்மதி (keetru.com) சொல்வதுதான் நிஜம்.

புகலிட தலித்தியர்கள் தமது விடுதலைப் புலிகள் எதிர்ப்புக்குத் தலித்திய முலாம் பூசினார்கள். அந்த முலாமைக் கொண்டு வந்து தமிழகத்திலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஒரு பிரிவினரது சமூக நடவடிக்கைகளோடு பொருத்தி அ.மார்க்ஸ் சரிபார்த்துச் சொல்ல, புலிகளின் மீது இந்துத்துவச் சாயத்தையும் அவர்கள் ஏற்றினார்கள். அந்தச் சாயத்தை இரத்தச் சிவப்பில் குழைத்து  அழுத்தமாக ஆதவன் தீட்சண்யா புதுவிசையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளினிடையில் வீசினார்.

 

 

விடுதலைப் புலிகள் இயக்கம் வெள்ளாளத் தலைமையைக் (அது அவ்வாறாக இல்லை) கொண்டதால், அது தலித் விரோத இயக்கம் என்றால் தலித்தியரைத் தலைமையில் கொண்டிராத, பார்ப்பனியர்களைத் தலைமையில் அதிகம் கொண்டிருக்கிற ஆதவன் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கம்தான் இந்தியாவின் முதன்மையான தலித் விரோத இயக்கம், சாதி வெறி இயக்கம் என்பதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். புலிகள் சாதி விரோதிகள் என்றால், ஆதவன் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கம்தான் சாதி ஒதுக்குதலின் பிரதான காவலர்கள் என்பதனை அவர் ஒப்புக் கொண்டே தீர வேண்டும். விடுதலைப் புலிகள் இந்துத்துவவாதிகள் என்றால் அவர் சார்ந்த இயக்கம்தான் இந்தியாவில் இந்துத்துவத்தின் மொத்த வடிவம் என்பதனையும் ஆதவன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு பெரிய அவப்பெயரை அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கத்தின் மீது முத்திரை குத்துவதனை ஒத்ததுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சாதிய இயக்கம் என முத்திரை குத்துவதற்கு  முயன்ற ஆதவனின் செயல்பாடு.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற எழுபதுகளோடு ஒப்பிட, அவர்களது தலைமை முற்றிலும் கொன்றொழிக்கப்பட்ட 2009 மே முடிய 35 ஆண்டுகளில் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. திசைதேடித் திரிந்த எல்லா விடுதலை இயக்கங்களும் போலத்தான் அவர்கள் உலகின் சகல மூலைகளிலும் முட்டிமோதினார்கள்.

 

 

கடைசிவரையிலும் அமெரிக்காவை நம்பியிருந்து மரணமுறும் அவல நிவையில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார் எனும் செய்தி, தென் ஆசியாவும் இந்தியாவும், இந்தியாவுடன் அணுஒப்பந்தம் போட்ட அமெரிக்காவும் குறித்த அவரது அரசியல் தரிசனமின்மைக்கு ஒரு சான்று.

முன்னாள் மார்க்சியர்களான கிழக்கு திமோர் ஜனாதிபதி குசமா சனானாவும், குர்திஸ் விடுதலை இயக்கத்தின் அப்துல்லா ஒச்சலானும் தமது தேசங்களின் விடுதலைக்காக அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஐக்கிய நாட்டுப் படைகளையும் தான் நாடினார்கள். விடுதலைப் புலிகளும் அதைத்தான் நாடினார்கள். துரதிருஷ்டவசமாக குசாமாவுக்கு அருகில் அமெரிக்க நண்பனான ஆஸ்திரேலியா இருந்தது. ஆஸ்திரேலியா குசாமாவை ஆதரித்தது. கிழக்கு திமோர் தப்பித்தது. ஒச்சலானைப் பொறுத்து அமெரிக்காவின் நண்பனான துருக்கிக்கு ஒச்சலானை ஒழிக்க வேண்டும். ஒச்சலான் ஆயுள் சிறையில் இருக்கிறார்.

 

 

பிரபாகரன் விடயத்தில் என்ன நடந்தது? அமெரிக்காவின் நண்பனாக இந்தியா இருக்கிறது. இந்திய அரசின் அறிவிக்கப்பட்ட பகைவனாக பிரபாகரன் இருந்தார். அமெரிக்கா சாவகாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க பிரபாகரன் திட்டமிட்டபடி கொல்லப்பட்டார். இந்தக் குறைந்தபட்ச தரிசனமும்கூட இல்லாது பிரபாகரன் அமெரிக்காவுக்காகக் காத்திருந்திருக்கிறார். இதுதான் அவரது அரசியல் தரிசனம்.

இந்தப் புதிய உலக யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டுதான், எழுபதுகளையும் (10 ஆண்டுகள் : கெடுபிடிப் போர்க்காலம்) எண்பதுகளையும்-தொண்ணூறுகளையும் (20 ஆண்டுகள் : சோசலிச முகாம் வீழ்ச்சியின் காலம்) இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள் (9 ஆண்டுகள் : செப்டம்பர் 11 இன் பின்னான பயங்கரவாத உரையாடல் காலம்) என இப்படி மூன்று கட்டங்களாகத்தான், விடுதலைப் புலிகளிடம் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயலவேண்டும்.

 

 

அதை விட்டுவிட்டு புகலிட தலித்தியர்களின் சிறுபிள்ளைக் கோளாறுகளையெல்லாம் (infantile disorder) தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுவீகரித்திருப்பது, அதனது தத்துவார்த்த பலத்திலிருந்தல்ல, பலவீனத்திலிருந்தே வருவதாகும். 

VI

ஈழத்தில் விடுதலைப் புலிகளும் சாதிய ஒழிப்பும் குறித்து இதுவரையிலுமான ஆய்வுகள் அவதானங்களிலிருந்து நாம் அந்தச் சமூகம் குறித்தும், அதில் ஈடுபாடுள்ள புலிகள் ஆதரவாளர்களதும், புலி எதிர்ப்பாளர்களதும் கோருதல்கள் (claims) குறித்தும் நிர்ணயமான அல்லது திட்டவட்டமான முடிவுகளுக்கு வருதல் சாத்தியமில்லை.

 

 

சாதி குறித்த புள்ளிவிவரங்கள், சாதிய முரண்பாடுகள் அல்லது எழுச்சிகள் அல்லது மோதல்கள் அல்லது ஒடுக்குமுறைகள் என நிகழ்வுகளின் மீதான தரவுகள் என்பது இத்தகைய முடிவுகளுக்கு வருவதற்கு மிகவும் அடிப்படையானதாகும்.

கடந்த 35 ஆண்டுகளாக வடகிழக்கு மக்கள் அரசபடைகளின் கட்டுப்பாடு அல்லது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். உள்நாட்டு யுத்தத்தினிடையிலும் இடப்பெயர்தலினிடையிலும் தான் வாழ்ந்து வருகிறார்கள். முதலில் நிகழ்வுகளும் தரவுகளும் புள்ளிவிவரங்களும் சம்பந்தப்பட்ட மக்களிடம் இருந்து திரட்டப்பட வேண்டும். இதுவன்றி அரசியல் ரீதியான வியாக்கியானங்களிலிருந்தோ அல்லது கருதுகோள்களிலிருந்தோ சாதி தொடர்பான உண்மைகளை நிர்ணயமாக வைக்க முடியாது.

 

 

கடந்த 35 ஆண்டுகளில் சாதி குறித்த சுயாதீனமான ஆய்வுகள் எதுவும் இல்லை. புள்ளிவிவரங்களும் இல்லை. குறைந்தபட்சம் அத்தகைய நெறிகளுடன் எழுதப்பட்டுள்ள அடிப்படையான கட்டுரைகளும் கூட இல்லை. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களால் எழுதப்பட்டவை ஒன்று அரசியல் கருதுகோள்கள் அல்லது உணர்ச்சிவசமான எதிர்வு கூறல்கள் என்பதைத் தாண்டிவரவில்லை.

அதுபோலவே விடுதலைப்புலிகள் தமது ஆளுகையின் கீழான பிரதேசத்தில் தாம் பிரகடனப்படுத்திய சாதி ஒதுக்குதல் குறித்த தண்டனைகளும் தடைகளும் எவ்வாறு நிஜத்தில் செயல்பட்டன என்பதனை அவர்களது கோருதல்களில் இருந்து அல்லாமல், சுயாதீனமான கல்வித்துறை ஆய்வுகளிலிருந்தே நாம் பெறுதல் சாத்தியம்.

சட்டங்களோ தடைகளோ போட்டு விடுவதால் சாதி ஒழிந்து விடாது. வன்கொடுமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என நிறைய சட்டங்கள் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் பெரிய சாதனைகள் ஏதும் நிகழவில்லை என்பது நிதர்சனமாக இருக்கிறது. எனில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் சாதியற்ற சொர்க்கம் இருந்தது என்று கொள்ள வேண்டிய அவசியமேயில்லை

 

 

சாதி ஒழிப்பு என்பது கருத்தியல் மட்டத்திலும் உளவியல் மட்டத்திலும் சட்டமுறையின் மட்டத்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய போராட்டம். நிறவெறி ஒழிப்பு, அடிமை முறை ஒழிப்பு போன்றவற்றை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டஆக்கலின் மூலம்தான் நடைமுறைப்படுத்த முடிந்தது.

சோசலிச நாடுகளிலும் கட்சியின் அதிகாரம் என்பதனை விடவும் சட்டத்தின் ஆட்சியைத்தான் அதனது விமர்சகர்கள் கோருகிறார்கள். அம்பேத்கரும் பெரியாரும் சாதியை ஒழிப்பதில் சட்டமுறைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும்.

இந்த வகையில்தான் அதனது நடைமுறைப் பண்புகளுக்கும் கோருதல்களுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் சட்ட ஆக்கலையும்,  தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த குறைந்தபட்சமான சுயாதீன ஆய்வையும் கூட நாம் ஆக்கபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

 

 


ஆதாரங்கள் :

* கட்டுரையின் தலைப்பு ‘ஹிமல் சவுத் ஆசியா : ஆகஸ்ட் 2002’ இதழில் வெளியான ரவிக்குமாரின் ஆங்கிலக் கட்டுரையில் இருந்து எழுத்தாளப்படுகிறது. ரவிக்குமாரின் கட்டுரை 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டதென்றும், அது பிரசுரிக்கப்படாத அறிக்கை என்றும் தலித்திய ஆய்வுகளுக்கான நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட, இலங்கையில் சாதி தொடர்பான ஆய்வு நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதி குறித்துப் பேசிய ரவிக்குமாரின் இந்த முன்னோடிக் கட்டுரை, எனது அறிவுக்கெட்டிய வரையில், தமிழகத்திலோ அல்லது புகலிடத்திலோ அல்லது இலங்கையிலோ அசலாக எழுதப்பட்ட தமிழ் மொழி மூலத்தில் பிரசுரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  ஹிமல் இதழில் வெளியான, அழகரசனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, சமகாலத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் ‘தி ஐலன்ட்’ பத்திரிக்கையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது என்பதனை இங்கு ஒரு தகவலாகப் பதியவேண்டியது முக்கியம் எனவே நான் கருதுகிறேன். 

இதுவன்றி இக்கட்டுரையின் பூர்வாங்க வடிவத்தை என்னுடன் விவாதித்து திருத்தங்கள் சொல்லி கட்டுரையை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவிய 'தேசம்நெற்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நண்பர் தா.ஜெயபாலனுக்கு எனது அன்பும் நன்றியும் உரியது.

1. Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : Editors : Kalinga Tudor Silva -P.P. Sivapragasam - Paramsothy Thanges : International Dalit Solidarity Network, Copenhagen : Indian Institute of Dalit Studies, New Delhi : 2009.

2. Caste of the Tiger: Dalits among Sri Lankan Tamils by Ravi Kumar : Translated from Tamil by R Azhagarasan in Himal South Asia :  August 2002 : reproduced in  Island of Srilanka : 2002.ரவிக்குமாரின் கட்டுரை தற்போது தொழில்நுட்பக் காரணங்களால் ‘ஹிமல்’ இதழ் தொகுப்பில் கிடைப்பதில்லை எனினும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பெறும் ‘தமிழ்நேசன்’ (tamilnation.org) வலைப்பக்கத்தில் இக்கட்டுரை வாசகர்களுக்குக் கிடைக்கிறது.

3.  Caste Discrimination in War-affected Jaffna Society by Paramsothy Thanges & Kalinga Tudor Silva : pages 50 to 78 .
4. The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code, which were enacted in 1994 : criminalise caste descrimination : Tamil Eelam:A-De-Facto-State : Tamil Eelam Legal System : E.Pararajasingham, Head of Tamil Eelam Judicial Division : Tamil net : 30 October 2003.

5. Tigers face community wrath over Rajadurai killing by D.B.S. Jeyaraj : Tamil Week : October 23-29 : 2005.

6. பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறியாமல் களத்திலிருந்த தளபதிகளால் நேர்ந்த பிழை இது என விடுதலைப் புலிகளின் தரப்பில் சாட்டு சொல்லப்பட்டாலும், மத்தியத்துவப்படுத்தப்பட்ட புலிகளின் அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லையெனவும், விடுதலைப் புலிகளே முழுமையாக இதற்குப் பொறுப்பானவர்கள் எனவும் அவருடனான உரையாடலின் போது இளைய அப்துல்லா என்னிடம் தெரிவித்தார். குறிப்பிட்ட விவரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்காக மறுபடியும் இளைய அப்துல்லாவுக்கு எனது நன்றி உரியது.

7. Question : You have apologized to the Muslims but not made an open invitation for their  return.  Anton Balasingham : We have already apologized to them. If we invite them, there should be some conducive set up for them to live. Our leader will certainly extend an invitation for them to come to the north and live with us.

Question : There are reports about Muslims in the East being harassed. It is reported that they have no rights to the land.  Anton Balsingham : We have called the service commanders from the east to discuss the alleged  harassment of Muslims. We have called Karikalan for a meeting and asked him what has gone wrong. He has assured us that he has made no such statement and it is a distortion. We believe that the Tamil homeland belongs to the Muslim people and we believe that there is no dispute that Muslims have a right to own land. When Mr. Hakeem comes we will discuss the matter

 

 

 

 

 

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1793

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.