Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவல்: அமெரிக்கா! - வ.ந.கிரிதரன்

Featured Replies

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'

மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன்.

- வ.ந.கிரிதரன் - 

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!

உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். 'ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்' என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

இதை எழுதுகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் நானோர் இளம் எழுத்தாளன்.  எழுத்துலகில்  பலவற்றைச் சாதிக்க வேண்டுமென்ற, சோதிக்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் முயன்று கொண்டிருக்கின்ற இளம் எழுத்தாளன்.  அதே சமயம் நானொரு தமிழ்க்கனடியன்.  இன்றைய சூழ்நிலையில்  எனது அமெரிக்க அனுபவங்களை மீளாய்வு செய்யும்போதுதான் பல உண்மைகள்  வெளிப்படுகின்றன.  புரூக்லீன் நகரில், தடுப்பு முகாமில் எனது மூன்று மாத கால அனுபவமும்,  நியுயார்க்  நகரில் எனது எனது ஒரு வருட அனுபவமும் எனக்கு எத்தனையோ  விடயங்களைத் தெளிவுபடுத்தின.  வாழ்வு பற்றிய  பல்வேறு உண்மைகளைப் புரிய வைத்தன.  அனுபவங்கள் கசப்பானைவையாக இருந்தபோதும், அவ்வனுபவங்கள் தந்த படிப்பினைகள் மகத்தானவை. விலை மதிக்க முடியாதன். எனது இந்த அனுபவங்களை, இன்று அமெரிக்காவில் பல்வேறு தடுப்பு முகாம்களில் கைதிகளாக, ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கிடக்கும் பல்வேறு நாட்டு மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்.

ஆ...! எனது பெயரைக்கூட கூற மறந்து விட்டேனே. இளங்கோ! என் பெயர்தான் அது. என் அப்பா ஒரு சிலப்பதிகாரப்பித்தர். அந்தப்பித்தில் எனக்கு வைத்த பெயர்தான் இளங்கோ.  இளங்கோவென்று பெயர் வைத்த ராசிபோலும் எழுத்தில் ஈடுபாடு ஏற்பட்டதோ?

விரைவதே தெரியாமல் விமானம் விரைந்துகொண்டிருக்கின்றது. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் பொஸ்டன் நகரை விமானம் அடைந்து விடும். மிகமிக விரைவாகவே சம்பவங்கல் நடந்து முடிந்து விட்டன. திண்ணைவேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப்புலிகள் சுட்ட செய்தியுடன் பெரிதாக வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரவியது. நான் பொறியியலாளனாக வேலை செய்துகொண்டிருந்த அரசாங்கத்திணைக்களத்துக்குச் சொந்தமான கார்கள் ஐம்பது வரையில் வாகனத்தரிப்பிடத்திலிருந்தன. யாருமே உதவிக்கு  வரவில்லை.  கடைசியில் எங்கள் திணைக்களத்தில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தைச்சேர்ந்த இந்தியப்பொறியியளாளர் ஒருவருடன் ஒரு மாதிரித்தப்பி வெளியேறி வெள்ளவத்தை ராமகிருஷ்ண மண்டபத்தைப்போய்ச்சேர்ந்தால்... குண்டர்களின் அட்டகாசம் அங்கும் வெடித்தது. அச்சமயம் மண்டபத்தில் சுமார் ஐம்பதுபேர் வரையில் இருந்தோம்.  எல்லாரும் மண்டபத்தின் மொட்டை மாடிக்கு ஓடினோம்.  பெண்கள், ஆண்களில் சிலர் தண்ணீர் தாங்கிக்கும், தளத்துக்குமிடையிலிருந்த பகுதியில் ஒளிந்து மறைந்துகொள்ள, எஞ்சிய நாங்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த தூண்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டோம். நாங்கள் பதுங்கி ஒளிவதை எதிரே பிரைட்டன் ஹொட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பயணிகள் வீடியோ படம் எடுப்பதை அவதானிக்க முடிந்தது.

வெள்ளவத்தைப் பகுதியிலிருந்த வீடுகளிலிருந்து  அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள் குடும்பம், குடும்பமாகத் தெகிவளை பக்கமாக, புகையிரத இருப்புப்பாதை ஓடி வருவது தெரிந்தது.  வெள்ளவதைப்பகுதியிலிருந்து புகை மண்டலம் நானா பக்கங்களிலும் பரவிக்கொண்டிருந்தது.  புகையிர இருப்புப்பாதை வழியாக  வயதான் தமிழ்ப்பெண்கள்  முழங்கால் வரை சேலைகளை இழுத்துப்பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்க்கப்பாவமாகவிருந்தது. 

இராமகிருஷ்ண மண்டபத்துக்கு முன்பாக, புற்றரையில் நின்றிருந்த யாழ்பாணப்பிள்ளையார் விலாஸின் சொகுசு பஸ் வண்டியொன்றைக் குண்டர்கள் கொளுத்தி விட்டார்கள்.  மண்டபத்தின்  நிலத்தளத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்கள். மண்டபத்தைக்கொளுத்த முற்பட்டபோது  அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  பொலிஸார் உள்ளே நுழைந்தார்கள்.

மாலை வரையில் இராமகிருஷ்ண மண்டபத்தில் தங்கியிருந்தோம். அங்கிருந்ததைக்கொண்டு ஆக்கிச்சாப்பிட்டோம். அன்றிரவே லொறிகளில் சரஸ்வதி மண்டபத்துக்குக்கொண்டு செல்லபட்டோம். லொறிகளில் ஏற்றியபோது பெண்கள் அழுதார்கள். யாருக்குமே எங்கு போகின்றோமென்று தெரிந்திருக்கவில்லை. சரஸ்வதி மண்டபத்தில் அகதிகளாகச் சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் போகும் வரையில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியுருந்தோம். 

யாழ்ப்பாணத்துக்குச் சிதம்பரம் கப்பலில் சென்று கொண்டிருந்தபோதுகூட நான் வெளிநாட்டுக்குப் புறப்படுவேனென்று  எண்ணியிருக்கவில்லை.  அழிவும், கொள்ளையும், இரத்தகளரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நான் வெளியில் போவதே நல்லதாகப்பெற்றோருக்குப் பட்டது.  கனடாவுக்கு அகதிகளாகப்போகலாமென்று விஷயம் காதில் பட்டது. இந்தச்சமயத்தில் சின்னம்மாவின் பணம்தான் வெளிநாடு போவதற்கு மிகவும் உதவியது.  சிந்தித்துச்சீர்தூக்கிப் பார்ப்பதற்குள்  முகவன் ஒருவனின் உதவியுடன் கனடா புறப்பட்டு விட்டேன். பலாலியிலிருந்து இரத்மலானை வரை இரண்டு மூன்று பேர் வரை அமர்ந்திருக்கக்கூடிய , தனியாரின் சிறிய விமானமொன்றில் பயணம். பின் கட்டுநாயக்காவிலிருந்து பாரிஸ் வரையில் YTA  விமானத்தில் பயணம். பாரிஸிலிருந்து பொஸ்டன் வரையில் TWA விமானத்தில் பயணம். பின் பொஸ்டனிலிருந்து மான்ரியால், கனடா வரை டெல்டா விமானத்தில் பயணம். இவ்விதமாகத்தான் திட்டமிருந்தது. 

முதற் பிரச்சினை பாரிஸ் விமான நிலையத்தில் தொடங்கியது. பாரிசிலிருந்து , பொஸ்டனுக்கு விசா இல்லாமல் விமானத்தில் ஏற்ற மாட்டோமென்று தடுத்தார்கள். கனடாவுக்குச் செல்லப்பொதுநல வாய நாடுகளில் ஒன்றான இலங்கையிலிருந்து செல்வதற்கு விசா தேவையில்லையென்று எடுத்துக்காட்ட ஒரு வழியாகச்சம்மதித்தார்கள். அதற்கு எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த இன்னுமோர் இலங்கை அகதி ஒரு வேளை உதவக்கூடுமென்று எடுத்து வைத்திருந்த அவ்விடயத்தை விபரிக்கும் புகைப்படப்பிரதி கை கொடுத்தது. அடுத்த தடை பொஸ்டனில் ஆரம்பமானது. அங்கிருந்து மான்ரியால் செல்வதற்கு விசா இல்லாமல் அனுப்ப முடியாதென்று தடுத்து விட்டார்கள். இவ்விதமாகக்கனடா செல்வதாக இருந்த எங்கள் திட்டம் பொஸ்டனின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் முடிவுக்கு வந்தது.

 

அத்தியாயம் இரண்டு: அகதிக்கோரிக்கை!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'

" என்ன இளங்கோ! ஒரே யோசனை?'  அருள்ராசாதான் கேட்டான். ஊரில் இவனொரு கணக்காளன் (அக்கவுண்டன்). இவனும் என்னை மாதிரித்தான்.  கனடாவுக்கு அகதியாக நான் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் சென்று கொண்டிருந்தான். அண்மையில்தான் திருமணம் செய்திருந்தான். அண்மைய கலவரங்களில் பாதிக்கப்பட்டிருந்தான். கலவரங்களின் பாதிப்பு அவனை நாட்டை விட்டே துரத்தியிருந்தது.  அவனுடன் பணிபுரிந்த ஒரு தமிழ்ப்பெண்ணைக் குண்டர்கள் மானபங்கப்படுத்தியதை நேரிலேயே பார்த்தவன். அந்தப்பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத அருள்ராசா "போகிற இடத்திலை வரவேற்பு எப்படி இருக்குமென்று யோசித்துப்பார்த்தன்" என்றான்.

"பிரச்சினை அவ்வளவு இருக்காதென்றுதான் படுகுது. ஆனா இந்தைப் பிளைட்டிலை மட்டும் ஐந்து பேராவது எங்கட ஆட்கள் இருக்கினம் போலை படுகுதே?"

"அதுவும் ஒரு பிரச்சினைதான். ஆனால் எல்லாம் நல்லபடியா முடியுமென்றுதான் படுகுது"

இவ்விதமாகக்கதைத்துக்கொண்டிருந்த பொழுதே லோகன் சர்வதேச விமானநிலையத்தில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த விமானம் மெல்ல வந்து தரையிறங்கியது.  எங்கள் எல்லாருடைய நிலையும் ஒரே மாதிரித்தான். அகதிகளாகப்பயணித்துக்கொண்டிருந்தோம். இவ்விதம் ஒரே நாட்டைச்சேர்ந்த நாம் ஐவரும் ஒன்றாகப்பயணித்தது. விமான நிலையக் குடிவரவு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது.  எல்லாருடைய கடவுச்சீட்டுகளிலும் 'ட்ரான்சிட்' விசா பதித்தவர்கள், கடவுச்ச்சீட்டுகளைத்திருப்பித்தரவேயில்லை. இதே சமயம் எங்களக் கனடாவின் மான்ரிலால் நகருக்கு ஏற்றிச்செல்ல டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விட்டது. பிரச்சினை ஆரம்பமாகியது. எங்கள் ஐவரையும் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் பொலிஸ் காவலுடன் வைத்தார்கள்.  'என்ன நடக்குமோ?' என்ற யோசனையில் எல்லாரும் மூழ்கிப்போனோம். எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு , வீட்டை ஈடு வைத்து , வட்டிக்குப்பணமெடுத்து வந்தவர்கள்தாம் எங்களில் பெரும்பான்மையினர்.  இந்நிலையில் திருப்பி அனுப்பினார்களென்றால்..... நேரம் போய்க்கொண்டிருந்தது.  பிற்பகல் இரண்டு மணியளவில்தான் விமான நிலையத்தை வந்தடைந்திருந்தோம்.  வந்ததிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் சென்றதே தெரியவில்லை.  பசி வயிற்றைக்கிள்ளியது. சோர்வு எல்லார் முகங்களிலும் படரத்தொடங்கி விட்டிருந்தது.  இதற்கிடையில் நாம் ஐவரும் ஒருவருக்கொருவர் பழக்கமானவராகி விட்டோம். 

இராஜசுந்தரம் இலங்கை வங்கியொன்றில் மனேஜராகக்கடமையாற்றியவர். நாட்டில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டி, இந்த வதில் இன்னுமொரு புது வாழ்வினை வேண்டிப்பயணித்திருந்தார். மற்றவர் சிவகுமார். இவருக்கு வயது முப்பதுதானிருக்கும். ஆனால் அதற்குள்ளேயே தலையில் இலேசாக வழுக்கை விழுந்து விட்டிருந்தது. இவர் கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.  திருமணமாகாதவர்.  அடுத்தவன் ரவீந்திரன். பதினெட்டு வயதுதானிருக்கும். இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தவன்.

இதற்கிடையில் குடிவரவு அதிகாரி ஒருவர் வந்து எங்களைப் பத்து மணி 'சுவிஸ் எயார் பிளைட்டில்' கொழும்பு திருப்பி அனுப்போவதாகவும், தயாராக இருக்கும்படியும் கூறினார். எங்களுக்கு இலேசாகப்பயம் ஏற்பட்டது. உண்மையிலேயே 'திருப்பி அனுப்பிப் போடுவார்களோ?'...

இதற்கிடையில் இராஜசுந்தரம் கூறினார்: 'பை போர்சா எங்களைத்திருப்பி அனுப்பப்போறாங்கள் போலை இருக்கு.  என்ன் பிரச்சினை வந்தாலும் எதிர்க்க வேண்டும்."

இச்சமயம் முன்பு வந்த அதே 'இமிகிரேசன்' அதிகாரி மீண்டும் வந்தார்.

எனக்குப் பசி வயிற்றைக்கிள்ளியது. சிவகுமாரால் அடக்க முடியவில்லை. 

" சேர்! வீ ஆர் சோ ஹங்ரி. இஃப் யூ அல்லோ அஸ் டு பை சம்சிங் டொ ஈட், இட் வுட் பி ரியலி கிரேட் ஃபுல்" என்று சிவகுமார் கூறியதற்கு  " யூ கான் காவ் யுவர் பிரெக்பாஸ்ட் இன் கலம்போ" என்று அந்த அதிகாரி எகத்தாளமாகப்பதிலிறுத்தபோது எல்லாருக்கும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆத்திரப்பட்டு என்ன பயன்? பேசாமலிருந்தோம்.

அந்த அதிகாரி திரும்பிக் கொழும்பு செல்வதற்கான 'போர்டிங் பாஸ்' எல்லாவற்றுடனும் வந்திருந்தார். 'போர்டிங் பாசை'த்தருவதற்காக எங்களது  பெயர்களைக் கூப்பிட்டார்.

ஒருத்தரும் அசையவில்லை. பதில் பேசாது மெளனாகவிருந்தோம். 

அந்த அதிகாரியின் முகத்தில் ஆத்திரம் படரத்தொடங்கியதை அவதானித்தோம். இதற்கிடையில் இன்னுமொரு பெண் 'இமிகிரேசன்' அதிகாரியும் அவ்விடத்துக்கு வந்தார். அவரைப் பார்க்கும்போது எங்களுக்கும் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. எங்கள் நாட்டுப் பிரச்சினையை, நாட்டு நிலைமையினை விளங்கப்படுத்தினோம். அவர் எங்களது பிரச்சினைகளை  மிகவும் அக்கறையுடன் செவி மடுத்தார். 

இராஜசுந்தரம் கூறினார்: "மேடம், நாங்கள் எவ்வளவோ பிரச்சினைகள் பட்டுக் கனடாவுக்குப் போவதற்காகப்புறப்பட்டிருக்கின்றோம். கனடாவைப்பொறுத்தவரையில் எங்களுக்கு விசா தேவையில்லை.  எங்களுடைய பயணச்சீட்டுகளை டெல்டா விமான நிறுவனம் ஏன் ஏற்கவில்லையென்று தெரியவில்லை."

அதற்கு அந்தப்பெண் 'இமிகிரேசன்' அதிகாரி கூறினார்: "சட்டப்படி அவர்கள் உங்களை மறுப்பது சரியில்லை என்றுதான் படுகிறது. ஆனால் எங்களால் செய்வதற்கொன்றுமில்லை.  ஏற்கனவே மூன்று சிறிலங்காத் தமிழர்களை மான்ரியாலில் இவ்விதம் இறக்கியதற்காகக் கனடிய அரசு  டெல்டா நிறுவனத்தை அபராதம் கட்டும்படி பணித்துள்ளது.  இந்நிலையில் அவர்களால் செய்வதற்கொன்றுமில்லை."

இதற்கு இராஜசுந்தரம் " இந்த நிலைமையில் எங்களுக்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோருவதைத்தவிர  வேறு வழியில்லை.  நாங்கள் எல்லாரும் அமெரிக்காவில்  அகதிகளாக விண்ணப்பிக்கின்றோம்." என்றார்.

இராஜசுந்தரம் அகதிக்கோரிக்கையை விண்ணப்பித்ததும் அந்தப்பெண் அதிகாரியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.  அருகில் கடுகடுத்தபடியிருந்த  ஆண் அதிகாரியின் முகத்திலும் கடுமை சிறிது குறைந்ததை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இவ்விதம் எங்கள் அகதிக்கோரிக்கையுடன் எங்கோ சென்ற அந்தப்பெண் அதிகாரி விரைவிலேயே திரும்பி வந்தார். வந்தவர்

" நீங்கள் அகதிகளாக விண்ணப்பித்துள்ள காரணத்தினால் உங்களைத்திருப்பி அனுப்பவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே." என்றார். 

உண்மைதான். எல்லாரும் மகிழ்ச்சியுடன் இராஜசுந்தரத்தை நோக்கினோம்.

[ தொடரும் ]

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3024:2015-12-11-04-35-12&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

  • தொடங்கியவர்

அத்தியாயம் மூன்று: புரூக்லீன் தடுப்பு முகாம்.

 

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகி விட்டது. இரண்டு நாள்கள் ஹில்டன் ஹொட்டலில் வைத்திருந்தார்கள்.  பொஸ்டன்  குளோப் பத்திரிகையில் எங்களைப்பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். 'வோய்ஸ் ஒவ் அமெரிக்கா , பி.பி.ஸி ஆகியவற்றிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள்.  இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த  சமயத்தில்தான்  எங்களது பயணமும் தொடங்கியிருந்தது.  இதனால்தான்  எங்களைப்பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது.  எங்களைப்பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயார்க்குக்கு அனுப்பினார்கள். அப்பொழுதுகூட எங்களுக்குத்தடுப்பு முகாமுக்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை.

பிரத்தியேக பஸ்ஸொன்றில் எங்களை நியூயார்க் அனுப்பியபொழுது ஏற்கனவே இரண்டு நாள்கள்  ஆடம்பர ஹொட்டலான ஹில்டனில் இருந்த சந்தோசத்தில் நாங்கள் சந்தோசமாகவேயிருந்தோம்.  நியூயார்க் நகரைப்பற்றி, அதன் பிரசித்தி பற்றி இலங்கையிலேயே அறிந்திருந்தோம். அத்தகையதொரு நகருக்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில் களிப்பு. பல்வேறு கனவுகள், திட்டங்களுடன் படம் விரித்தன.  அன்று மட்டுமல்ல இன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடிதானிருக்கின்றது.  பொஸ்டனில் ;பிடிபட்ட எங்களை எதற்காக நியுயார்க் அனுப்பினார்கள்.  பொஸ்டனில் தமிழ் அமைப்புகள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின.  இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல்ரீதியில் அமெரிக்க அரசுக்குப் பிரச்சினை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியிருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம்தான் எனக்குப்படுகின்றது.

பொஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கான எங்களது பயணம் எமக்கு இன்பமாகவேயிருந்தது.  முதன் முதலாக 'எகஸ்பிரஸ்வே'யில் பயணம். பல்வேறு வகைகளினான் ட்ரக்குகளை வியப்புடன் பார்த்தோம். அடிக்கடி இரண்டு ட்ரெயிலர்களை ஒன்றாக இணைத்தபடி செல்லும் ட்ரக்குகள் நெஞ்சில் ஆச்சரியத்தை விளைவித்தன. அப்பாடா, ஒரு வழியாக எதிர்ப்பட்ட தடைகளையெல்லாம் கடந்து விட்டோமென்று  பட்டது. எல்லாரும் ஒருவிதமான ஆனந்தத்தில் மூழ்கியிருந்தோம்.  எனக்கு வீட்டு ஞாபகங்கள் எழுந்தன. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உழைத்து வீட்டுப்பிரச்சினைகளை முடித்து விடவேண்டும்.  தம்பியை மெதுவாக இங்கு இழுத்து விடவேண்டும்.  அக்காவின் திருமணத்தைக்கோலாகலமாக நடத்தி வைத்து விட வேண்டும். எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்து விட்டுத்தான் கெளசல்யாவின் நிலையைப்பார்க்க வேண்டும். கெளசல்யாவின் நினைவுகள் நெஞ்சுக்கு இதமாகவிருந்தன். கெளசல்யாவுக்கு எத்தனையோ தடவைகள்  எடுத்துக்கூறி விட்டேன். எனது பொறுப்புகள், பிரச்சினைகள் பற்றி விரிவாக விளங்கப்படுத்தி விட்டேன். அவள் பிடிவாதமாக என்னைத்தான் மணப்பதாகக் காத்து  நிற்கப்போவதாகக் கூறுகின்றாள்.  இந்நிலையில் நானென்ன செய்ய?  காத்து நிற்கும் பட்சத்தில்  ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.  

நியூயார்க் நகருக்குள் நுழைந்தபோதும் எங்களுக்கு நிலைமை விளங்கவில்லை. பஸ் நியூயார்க்கின் வறுமை படர்ந்த பகுதியொன்றினுள்  நுழைந்தபோதுதான் நெஞ்சை ஏதோ நெருடியது.  வறுமையான தோற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த  கறுப்பினப்பிள்ளைகள் , பழமை வாய்ந்த கட்டடங்கள்.. இவ்விதமானதொரு பிரதேசத்தினூடு பஸ்  சென்றபோது எங்களுக்கு நிலைமை விளங்காமற் போனாலும், எங்கேயோ பிழை யொன்றிருப்பது புரிந்தது. கடைசியில் பஸ் பழைமையானதொரு கட்டடம் ஒன்றின் முன்னால் சென்று நின்றது.  

நாங்கள் எங்கள் உடைமைகளுடனிறங்கப் பணிக்கப்பட்டோம்.  அப்பொழுதும் எங்களுக்கு நிலைமை வடிவாகப்புரியவில்லை.  ஐந்தாவது மாடியை அடைந்தபோதுதான் நிலைமை ஓரளவு புரிந்தது. நாங்கள் சென்றடைந்த பகுதி  ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த வரவேற்புக்கூடம். சிறைக்காவலரைப்போன்ற தோற்றத்துடன் மேசையில் கோப்பொன்றில் மூழ்கியிருந்தவரிடம் எங்களை ஒப்படைத்த பொஸ்டன் குடிவரவு அதிகாரி 'குட் லக்' கூறிவிட்டுப்போனபோதுதான் சூழலின் யதார்த்தமே எங்களுக்கு உறைத்தது. ஏதோ ஒரு வகையான சிறையொன்றுக்கு நாங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றோமென்ற உண்மையை உணர்த்தியது.

கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் எங்களை ஆவலுடன் , சிறை ஆடைகளுடன் நோக்கியபடியிருந்த விழிகள் புரிய வைத்தன. சிறைக்காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எங்கள் உடமைகளெல்லாம் எங்களிடமிருந்து நீக்கப்பட்டன. எங்களிடமிருந்த பணம் எடுக்கப்பட்டது. நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறும் சமயத்தில் அவை மீண்டும் தரப்படும் எனக்கூறப்பட்டது.  லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது போல் பூர்வாங்க சோதனைகள் நடத்தப்பட்டன. கைரேகைகள் எடுக்கபட்டன.  ஒரு வழியாகச் சோதனைகளெல்லாம் முடிவடைந்த பின்னர் எங்களுக்குச் சிறை ஆடைகள் தரப்பட்டன.  அணிந்து கொண்டு உள்ளே சென்றோம். 

'"கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைதான்" இவ்விதம் இராகசுந்தரத்தார் ஒரு வித விரக்தியுடன் கூறினார். "பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்" இவ்விதம் சிவகுமார் சலித்துக்கொண்டார். "ஊரிலை பிரச்சினையென்று வெளிக்கிட்டால்...  இப்பிடி மாட்டுப்படுவமென்று தெரிந்திருந்தால் அங்கேயே கிடந்து செத்துத்தொலைத்திருக்கலாமே" இவ்விதமாக ரவிச்சந்திரன் முணுமுணுத்துக்கொண்டான். அருளராசா எதுவுமே பேசாமல் மெளனமாகவிருந்தான். "நடப்பதைப்பார்ப்போம்" இவ்விதம் கூறினேன்.

எங்களுக்குப் பின்னால் சிறைக்கதவுகள் மூடப்பட்டன. மல்லர்களைப்போல் கறுப்பினத்துக் காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். ஐந்தாவது மாடித்தடுப்புமுகாமின் கூடம்,  இணைக்கும் நடைபாதை, கூடம் என்னும் மாதிரியானதொரு அமைப்பில் காணப்பட்டது. ஒவ்வொரு படுக்கைக்கூடத்துக்கும் எதிராக ஒரு கூடம் பொழுது போக்குவதற்காகக் காணப்பட்டது.  இப்பொழுதுபோக்குக் கூடத்தில் ஒரு மூலையில் தொலைக்காட்சிப்பெட்டி, 'வென்டிங் மெஷின்' (காடு போட்டுப்பொருளெடுக்கும் இயந்திரம்), டேபிள் டெனிஸ் விளையாட மேசை, தொலைபேசிகள் ஆகியவை காணப்பட்டன. படுக்கைகளுக்கான கூடத்தில் 'பங்பெட்ஸ' (Bunk Beds) .. கப்பல்களில், மாணவர் விடுதிகளில் இருப்பதுபோல்  , ஒரு கட்டில்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகக்காணப்பட்டன. கூடங்களை இணைக்கும் நடைபாதைகள் பலமான இருப்புக்கதவுகளுடன் , காவலர்களுடன் காணப்பட்டன.

இரு கூடங்களையும் இணைக்கும் நடைபாதையுடன் சேர்ந்து குளியலறை, மலசலக்கூடம் ஆகியவை காணப்பட்டன.  இது தவிர உணவுண்ணும் கூடம், தேகப்பயிற்சி செய்வதற்கான கூடம் ஆகியவையுமிருந்தன.  நோய் வாய்ப்படும் சந்தர்ப்பத்தில் மருத்துவ வசதிகள் பெறுவதற்கான வசதிகளும் அளிக்கப்பட்டன. மருத்துவரின் அறை தடுப்பு முகாமின் முன் பக்கத்தில், வரவேற்புக் கூடத்துக்கு முன்பாக அமைந்திருந்தது.  

எங்களது பகுதியில் தடுப்புக் கைதிகள் அனைவரும் ஆண்களே. பெண்கள் வேறொரு பகுதியிலிருந்தார்கள். உணவுக்காகக் காத்து நிற்கும்போது மட்டும் முன்னதாகவே உணவை முடித்து விட்டுச் செல்லும் பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு ஆண்கள் முண்டியடித்துக்கொள்வார்கள். இதற்காகவே சமையலறையில் வேலை செய்வதற்காகப்போட்டி போடுவார்கள். இவ்விதம் வேலை செய்தால் ஒரு நாளைக்கு ஒரு டொலர் சம்பளமாகத்தருவார்கள். 

[தொடரும்]

ngiri2704@rogers.com

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3025:-3&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.