Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்!

‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம்.

கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில், நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நாம் தெரிவு செய்யப்பட்டு, 17.01.2010ஆம் திகதியன்று ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டோம்.

ஆன்மீகத் தேடலுக்குரிய அதிர்வு பூரணமாய் அமையப்பெற்றது இப்புனிதத் தலம்.  இந்துக்களின் புண்ணிய பூமி. பல்லின மக்களும் பயபக்தியுடன் சேவிக்கிற சேத்திரம். எம்மை நம்பி தெரிவு செய்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு உண்மையாய் இருப்பதும், நன்நெறியும் தூய்மையும் நேர்மையுமிக்க நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி தொன்மைமிகு ஆலயத்தின் இருப்பினைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் முறையாகக் கையளிப்பதும் எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினோம்.

நாம் பொறுப்பேற்றுக் கொண்ட போது “நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலய பிரதேசத்தை புனித நகராக்கக் கோரிய எமது மக்களின் வேண்டுகோளை அரசு நிராகரித்த வரலாறு, பிரட்றிக் கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம், ஆலயத்தின் தூய்மையை பாதிக்கும் வகையில் அண்மித்த வழித்தடத்தில் அமைக்கப்பட்ட ஐம்பதிற்கும் அதிகமான தற்காலிக் கடைகள்” போன்ற நிதர்சனங்களை கருத்தில் வைத்துக் கொண்டு, எமது ஆலய திருப்பணிகளை மிக நிதானமாக, அதே நேரத்தில் தளராத தொலைநோக்கோடு மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 6 வருடங்களாக ஆலயத்தின் வளர்ச்சிக்காக பல முயற்சிகளை நாம் எடுத்து வந்துள்ளோம்.  அவற்றிற்கெல்லாம் முட்டுக்கட்டையாக தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இருந்து வந்திருக்கிறார்கள்.  அவர்களை அனுசரித்து செயலாற்றிய வேளைகளில் பல சமயங்களில் ஏமாற்றப்பட்டுள்ளோம்.  அவைகளை பகிரங்கப்படுத்தினால் விரும்பத்தகாத பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடிய சாத்தியங்கள் இருந்ததால், அத்தகைய ஏமாற்றங்களையும் வலிகளையும் எங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு கடமைகளில் மட்டும் கண்ணாக இருந்தோம்.  எங்கள் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் மண்ணின் பாராளுமன்ற உறுப்பினரான உயர்திரு. இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்குக் கூட, எதுவும் தெரிவிக்காமல் நீண்டகாலம் மௌனம் காத்தோம்.

இப்போது தொல்பொருள் ஆய்வுத் துறையினரே ஊடகங்களில் எங்கள் திருப்பணிகளுக்கு தடை என்று அறிவித்த பின்னர் எங்கள் வலிகளைப் பகிரங்கப்படுத்த வேண்டிய வேளை வந்து விட்டது என்பதை உணர்கிறோம்.மலையுச்சியில் அமைந்திருப்பதால் காற்றும் மழையும் வசதியாகத் தாக்கும் இடமாக இருந்தது ஆலயம். தொடர்ந்த பராமரிப்பு இல்லாது போனால் காலப்போக்கில் பாழடைந்து போகக் கூடிய நிலைமை. ஒரு சிறு பள்ளம் தோண்ட வேண்டுமாயினும் தொல்பொருள் துறையினரின் அங்கீகாரமில்லாமல் செய்யக்கூடாது என்பதே அவர்களது சட்டம்.  அனுமதி வேண்டி விண்ணப்பித்தால் பதில் கிடைக்காது.  

ஆலய பராமரிப்பு சார்ந்த சிறிய திருத்தங்களைச் செய்யத் தேவையான மண் சீமெண்ட் கல் போன்ற கட்டுமானப் பொருட்களைக்கூட பல சிரமங்களுக்கு மத்தியிலேயே கொண்டு போக வேண்டியிருந்தது.

ஆலய வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பெரிய கட்டுமானத் திருப்பணிகளில் முக்கியமானவை:

•    ஆலயத்திற்கான வெளிவீதி
•    ஆலய குருக்கள்மாருக்கான வதிவிடம்
•    அன்னதான மடம் 
•    சமய கலாசார நிகழ்வுகள் நிகழ்த்தும் அரங்கம் (மேடை)
•    இராஜகோபுரம்

வெளிவீதி:  மூலஸ்தானத்தின் பின்பக்கமாவுள்ள பள்ளத்தாக்கான வெளிப்பகுதியில் வீதியில்லாததால் இன்றுவரை திருவிழாவின் போது பெருமானின் 3 தேர்களும் உள்வீதியிலேயே வலம் வருகின்றன.  பலமாகவும் விசாலமாகவும் தளம் அமைத்து வீதியை உருவாக்கினால் இக்குறை தீருமென பொறியியலாளர்கள் ஆலோசனை கூறினார்கள்.   உறுதியான கொங்கிறீட் தூண்கள் அமைக்கும் பணி ஆரம்பமான வேளையில் 22.01.2013ஆம் திகதியன்று சோழர் காலத்தைச் சேர்ந்த நந்திதேவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.  அதன் பின்னரே பிரச்சனை உருவாயிற்று.

தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் உடன் வந்து திருப்பணி வேலைகளை நிறுத்துமாறும் உரிய அனுமதியைப் பெற்ற பின்னர் வேலையைத் தொடங்கலாமென்றும் கூறியதையடுத்து அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டன.  

பின்னர் 22.2.2013ஆம் திகதியன்று மகா சிவராத்திரி விழாவிற்கான ஆயத்த வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்த போது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் பொலிசாருடன் வந்து கடமையில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளிகளைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.  எனினும் சட்ட வல்லுநர்களின் உதவியோடு நாம் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் அனைவரும் அடுத்த நாளே விடுவிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர் தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரிகளுடன்  மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து 06.05.2013ஆம் திகதியன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் தலைமையில் அவரது பணிமனையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.  இக்கூட்டத்தில் ஆலயத்தின் சார்பில் தலைவரும் செயலாளரும் பங்குபற்றினார்கள்.  கொழும்பு தலைமையகத்திலிருந்து வந்த தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளர், திருமலை நகராட்சிமன்றத் தலைவரின் பிரதிநிதி, பிரட்றிக் கோட்டை இராணுவ கட்டளை அதிகாரி, நகர அபிவிருத்தி சபை அதிகாரி, கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர். 

கட்டிட நிர்மாண வேலைகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து ஆலயத்தின் அடிப்படைத் தேவைகளை தாமதமில்லாமல் அனுமதிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டோம்.  வேலைத்திட்டங்கள் சார்பான சிற்ப சாஸ்திர வரைவுப் படங்களை இணைத்து விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்கும்படியும் அவை கிடைத்ததும் குறித்த அனுமதி அளிக்க ஆவன செய்யப்படும் என்ற உறுதிமொழியுடன் கூட்டம் முடிவுற்றது.

உரிய வரைவுப்படங்களோடு கூடிய விண்ணப்பங்கள் நகரசபைத் தலைவரிடம் 26.07.2013ஆம் திகதியன்று மேல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டன.  நகரசபைத் தலைவர் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தார்.  அதில் பங்குபற்றிய நகர அபிவிருத்தி சபை அதிகாரி, இது முதலில் தொல்பொருள் திணைக்களத்தினரிடம் அனுமதி பெறப்பட வேண்டிய விடயமெனக் கூறியதால் குறித்த விண்ணப்பம் மீண்டும் எங்களிடமே திரும்பி வந்தது.

மீண்டும் கொழும்பு தொல்பொருள் தலைமைப் பணிமனையோடு தொடர்பு கொண்டோம்.  ஒவ்வொரு கட்டிட வேலைகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைத் தராமல் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு நீங்கள் நிறைவேற்ற விரும்புகிற அனைத்து கட்டிட நிர்மாணத் தேவைகளையும் ஒன்றாகச் சேர்த்து (Master Plan) முதன்மைத் திட்டமொன்றைத் தயாரித்து, அவற்றிற்குரிய (Architectural Designs) சிற்ப சாஸ்திர வரைவுப் படங்களோடு சமர்ப்பித்தால் அதற்கான அனுமதியை ஒரே முறையில் வழங்குவோம் என உறுதியளித்தார்கள்.  

இவைகள் எல்லாம் விடயத்தைத் தட்டிக் கழிக்கும் வழிகள் என புரிந்து கொண்டாலும், நம்பிக்கையை இழக்காமல் அதனை ஏற்றுக் கொண்டோம்.  இதற்காக கொழும்பில் சிற்ப சாஸ்திர முறையில் படம் வரையும் நிறுவனத்தினரோடு தொடர்பு கொண்டு எல்லா கட்டிட நிர்மாணங்களையும் உள்ளடக்கிய எமது வரைவுப் படங்களை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, ஒப்பமிடத் தத்துவம் பெற்ற கட்டிட நிபுணரான (நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆதீனகர்த்தாவின் மகனிடம்) படங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து, அவரது கையொப்பங்களையும் பெற்றுக் கொண்டோம்.

8.01.2014ஆம் திகதி தொல்பொருள் ஆய்வுத் துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசானாயக்க மற்றும் உரிய துறையின் பணிப்பாளரான திரு. பிரசன்ன பி இரத்னாயக ஆகியோரை தலைமையகத்தில் நேரில் சந்தித்து விண்ணப்பங்களைக் கொடுத்தோம்.  பின்னர் அடிக்கடி தொலைபேசியிலும் கடிதம் மூலமாகவும் இதுபற்றி ஞாபகமூட்டினோம்.  ஆனால் எமது அனைத்து முயற்சிகளும் வீணாகப் போனதுதான் மிச்சம்.

எவ்வளவு சிரமப்பட்டு விண்ணப்பங்களைக் கொடுத்தாலும் அவற்றைத் தட்டிக் கழிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல ஏமாற்ற அனுபவங்களிலிருந்து புரிந்து கொண்டோம்.  

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தரும் முக்கிய அரசுப் பிரமுகர்களை திருக்கோணேஸ்வரத்திற்கு அழைத்து வரும்போது,  அவர்களை நாம் வரவேற்று அனுசரிக்க வேண்டும் என்று விரும்பும் அரச இயந்திரங்களைச் சார்ந்தவர்கள், ஆலயத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யத் தயாராக இல்லையென்பதே நாங்கள் உணர்ந்து கொண்ட உண்மை.  

இவர்களது பாரபட்சம், பாராமுகம், கெடுபிடிகளுக்காக சரத்திரப் பிரசத்தி பெற்ற ஆலயத்தை கட்டியெழுப்பாமல் சோம்பேறியாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எமக்குள்ளே எழுந்தது. எமது ஆலயத்தின் இருப்பும், உலகப் பிரசித்தி பெற்ற அதன் பெருமைகளும் விழுமியங்களும் காப்பாற்றப்பட வேண்டும்.  எது வந்தாலும் வரட்டும் என்ற துணிவுடனும் கோணேசப் பெருமான் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஆலயத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பல திருப்பணிகளை செய்தோம்.

ஓவ்வொரு முறையும் அவர்கள் வந்து பார்த்து விட்டு வேலையை நிறுத்தச் சொல்வார்கள்.  கட்டிடப் பொருட்களை கோட்டைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இராணுவத்தினருக்கு அறிவிப்பார்கள்.  இப்படியே கடுமையான கெடுபிடிகள் தொடர்ந்த போதும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, சமாளித்து வேலைகளைச் செய்தோம்.  

22 வருடங்களாக இடம்பெறாதிருந்த மகா கும்பாபிசேகத்தை நிறைவேற்ற வேண்டுமானால் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திருப்பணி வேலைகள் செய்தாக வேண்டும்.  22.08.2014ஆம் திகதியன்று பாலஸ்தாபனம் செய்து, சொல்லி மாளாத கஷ்டங்களோடு எல்லா வேலைகளையும் செய்து மகா கும்பாபிசேகத்தினை 11.02.2015ஆம் திகதியன்று நல்ல முறையில் நிறைவேற்றினோம்.

கடந்த 4.12.2015ஆம் திகதி வெளிவீதிக்குத் தேவையான கொங்கிறீட் தூண்களை அமைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தொல்பொருள்துறையினர் வந்து அவ்வேலைகளை உடனே நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். அதன் பின்னரே, 18.12.2015ஆம் திகதியன்று அவர்களது தடையுத்தரவு பற்றி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

பத்திரிகைகளில் காணப்பட்ட சில தவறான செய்திகள் சார்ந்த  உண்மைத்தன்மைகளை விளக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது:  

“16.01.1981ல் வெளியான 124ம் இலக்க தொல்;பொருள் சட்டத்தின் கீழ் கோயில் அடங்கிய 372 ஏக்கர் நிலப்பகுதி தொல்பொருள் ஆய்வுப் பகுதியாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது” என அச்செய்தி கூறுகிறது:

•    இச்சட்டம் வர்த்தமானியில் வெளியாகு முன்னர், இலங்கை நிலஅளவை நாயகம் சார்பாக 03.09.1976ஆம் திகதியில் வெளியிடப்பட்ட கோணேசர் ஆலயம் சம்பந்தப்பட்ட நிலஅளவை வரைவுப் படத்தின் பிரதி எம்மிடமுள்ளது.  அதில், மொத்தமாகவுள்ள 378 ஏக்கர் நிலப்பரப்பில் - கோணேசர் கோயில், அருள்மலை, அதைச் சுற்றியுள்ள தோட்டம், தொலைத்தொடர்புக் கம்பம் அமைந்திருக்கும் மலை அடங்கிய 18 ஏக்கர் 1 றூட் 03 பேர்ச்சேஸ் இடமும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில் இரண்டு கிணறுகள், அருகேயுள்ள 3 கட்டிடங்கள், 1 சீமெந்து தளம் ஆகியவை அடங்கிய 3 ஏக்கர் 2 றூட் 1 பேச்சர்ஸ் இடமும் - திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் அப்போதைய தலைவரான திரு. எம்.கே. செல்வராஜா அவர்களால் உரிமை கோரும் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை தவர்ந்த மற்றைய பகுதிகள் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, “4 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்று மிகவும் இரகசியமான முறையில் கட்டப்படுகிறது” எனவும் அச்செய்தி கூறகிறது:

•    வெளிவீதிக்கான தளம் அமைப்பதற்குரிய தூண்கள் நிறுவ கொங்கிறீட் போட்டதைத் தவிர வேறு எந்த வேலையும் அங்கு நடைபெறவில்லை என்பதே உண்மை. 

நாம் பொறுப்பேற்கும் முன்னரே, முன்னைய நிர்வாகக்; காலத்தில் கோயில் கடை அமைந்திருக்கும் இடத்திற்கு எதிரில் உள்ள நிலத்தில் சங்கரி கோயில் கட்டுவதற்காக அத்திவாரமிடப்பட்டதை எல்லோரும் அறிவீர்கள்.  முன்னைய நிர்வாகத்தினர் தொடர முடியாமல் கைவிட்ட இவ்வத்திவாரத்தைப் புனரமைத்து அர்ச்சகர்களுக்கான விடுதியாக அமைக்க விரும்பினோம்.  அப்போதைய கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியோடு அதற்கான வேலைகளைத் தொடங்கினோம்.   தொடங்கிய உடனேயே தொல்பொருள் ஆய்வுத் துறையினர் தலையிட்டு வேலையை இடைநிறுத்தினர்.  அந்த அத்திவாரம் நீண்ட காலமாக அதே நிலையிலேயே இப்போதும் உள்ளது.

1950களில் கட்டப்பட்ட அன்னதான மடம் சீரற்ற நிலையில் அடியார்கள் கீழேயிருந்து உண்பதற்கு வசதியில்லாமல் பாழ்பட்டுக் கிடக்கிறது.   அதனை நிரூபிக்கும் முகமாக எடுத்த புகைப்படங்களோடு அன்னதான மடத்தை திருத்திக் கட்டுவதற்கான விண்ணப்பத்தை திருகோணமலை தொல்பொருள் துறையினரிடம் கடந்த 2015 ஆவணி மாதம் கொடுத்தோம்.  பல ஞாபகமூட்டல்களுக்குப் பின்னர், உடைந்த இடங்களைத் தட்டிப் பூசி ஓடுகளை மாற்றி விடுங்கள் என்று சொல்லப்பட்டது.

1981ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தொல்பொருள் ஆய்வுக்குட்பட்ட பகுதியென பிரகடணப்படுத்தியதோடு - கோணேஸ்வர ஆலயம், எந்தவித வளர்ச்சியுமில்லாமல் பாழாகி, அப்படியே முடங்கிப் போக வேண்டும் என்ற எழுதாத சட்டமும் அமுலில் இருக்கிறதைக் கோடி காட்டுகிற ஏமாற்ற அனுபவங்களே எங்கள் வலிக்குக் காரணம்.

எமது வலியை அதிகப்படுத்திய மற்றுமொரு விடயமாக ஆலயத்தின் சுற்றாடல் தூய்மைக்குக் குந்தகமாக இருக்கும் தற்காலிக கடைகள் இருப்பதைப் பார்ப்போம்:

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுவிட்டது என பரவலாக பேசப்பட்ட பின்னர்    கௌரவ ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் மீள்குடியேற்றம் புனரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சருக்கும் அவ்வமைச்சின் செயலாளருக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கும் இதுபற்றி விளக்கமாக எழுதி இவ்விடயத்தில் விரைவில் ஆவன செய்து தருமாறு வேண்டினோம்.    

தை 2010ல் நாம் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் முன்னரே இக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.  ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள வழித்தடத்தின் இரு ஓரங்களிலும் கடலின் இயற்கை அழகினை மறைத்துக் கொள்ளும் வகையில் இவை இருக்கின்றன. மாமிச உணவும் மதுபானமும் பயன்படுத்தப்படுகின்றன. குப்பைகள் கடற்கரைப்பக்கம் எறியப்படுகிறது.  அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ வாகனங்கள் மிகக் குறுகலான அவ்வீதியில் நிறுத்தப்பட்டு போக்குவரத்திற்கு ஊறு விளைவிப்பதாகவுள்ளது. 

அடியார்களும் ஆலயத்தில் கடமையாற்றும் குருக்கள்மாரும் ஊழியர்களும் எமது அங்கத்தவர்களும் பகலிலும் இரவிலும் பாதுகாப்பாக கோயிலுக்குப் போய் வருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு இருந்ததால் பின்விளைவுகளை கருத்தில்கொண்டு நேரடியாக இவர்களோடு நாம் பிரச்சனைக்குப் போகவில்லை. புதிது புதிதாக கடைகள் முளைத்தன.  இராணுவத்திடமும் பொலிசாரிடமும் கூறியும் பயனில்லை.  காலப்போக்கில் இவை பல்கிப் பெருகி அன்னதான மடத்தையும் தாண்டி கிளிப் கொட்டேஜ் சந்தி வரை அண்மித்து விட்டன.  முற்றாக இவைகளை அகற்றி அவர்களது வாழ்வாதாரத்திற்கு தடை போடும்படி நாம் கோரவில்லை.  மாறாக, ஆலய சூழலின் புனிதம் கருதி கிளிப் கொட்டேஜ்க்கு அப்பால் அவர்களுக்கான கடைகளை அமைத்துக் கொடுக்கலாம் என்றே கூறினோம்.

சமீபத்தைய நிகழ்வுகளைப் பார்த்தால் அவர்களுக்கே அவ்விடங்களைச் சொந்தமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது போலத் தோன்றுகிறது.

திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை பற்றி ஆராய்ந்த பல வரலாற்றாசிரியர்கள் அதன் தோற்றம் ஆகக் குறைந்தது கி.மு. 1300 ஆண்டுகள் என குறிப்பிட்டிருக்கிறார்கள். திரு. பீ. ஈ. பீரிஸ் என்னும் ஆய்வாளர் (Nagadipa and Buddhist Remains in Jaffna) என்னும் தனது நூலின் 17 – 18ஆம் பக்கங்களில், விஜயன் வருமுன்னரே இலங்கையில் 5 சிவாலயங்கள் இருந்தன என்றும் அவற்றிலொன்று திருக்கோணேஸ்வரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கி.பி. 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ் அவர்கள் (The Temporal and Spiritual Conquest of  Ceylon) என்னும் தனது நூலின் 236ஆம் பக்கத்தில் திருக்கோணேஸ்வரம் பற்றிக் குறிப்பிடுகையில், கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று வர்ணித்து, அக்காலத்தில் மிக அதிகமான பக்தர்களின் கவனத்தை ஈர்த்த இந்தியக் கோவில்களான இராமேஸ்வரம், காஞ்சிபுரம், திருப்பதி ஆகியவற்றிற்குச் சென்ற யாத்திரிகர்களைக் காட்டிலும் கூடுதலானோர் கோணேஸ்வரத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.  

குளக்கோட்டன் என மக்களால் போற்றப்பட்ட சோழகங்கன் என்னும் அரசனால் மிக உயர்ந்த முறையில் புனரமைக்கப்பட்ட திருக்கோணேஸ்வரம், 1624ஆம் ஆண்டில் போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட பின்னர், 1963ஆம் ஆண்டில் மீண்டும் கும்பாபிசேகம் செய்யப்பட்டு புத்துயிர் பெற்றது.

இத்தகைய தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலை எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் எதிர்பார்ப்பா?

இலங்கையின் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் திருக்கோணேஸ்வரத்தின் மகா கும்பாபிசேக விழாவினையொட்டி எமக்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில்:

“பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேக விழா பக்தர்கள் தமது சமயப் பாரம்பரியங்களுக்கேற்ப சுதந்திரமாக பங்குபற்றுவதற்கேற்ற வகையில்  நாட்டில் நிலவும் சமாதான சூழலில் 22 வருடங்களின் பின்னர் இம்முறை நடாத்தப்படுகின்றது. கி.மு 205 ஆம் ஆண்;டு தொன்மையைக் கொண்ட திருக்கோணேஸ்வர கோயில் நாட்டிலுள்ள மிகவும் மதிப்புவாய்ந்த இந்துக் கோயில்களில் ஒன்றாகும். இந்த மகா கும்பாபிஷேக விழா நாட்டில் சமாதானம் ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வைக் கொண்டுவரும் வகையில் கோயில் சிலைகளை பதில்வைப்பு செய்வதைக் குறிக்கிறது. மேலும் இத்திருவுருவங்களின் அபிஷேகத்திற்கான நீர் இலங்கையின் சிவபெருமானுக்கு அர்ப்பணித்த பிரதான இந்து கோயில்களில் இருந்து பெறப்படுவது ஐக்கியத்திற்கான ஒரு மேலதிக அறிகுறியாகவுள்ளது. 22 வருடங்களின் பின்னர் நடைபெறும் இவ்விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வருகைதரும் பல்வேறு நம்பிக்கைகளையுடைய யாத்திரிகர்கள் இதன் புதுப்பொழிவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைவர்”

எனக் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை ஜனாதிபதி அவர்களின் ஆசியுரையில் பொதுந்துள்ள நற்கருத்துகளை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினர் கருத்தில் கொள்வார்களா?

நல்லாட்சி நடைபெறுகிறது என பெருமிதப்படுத்தப்படும் இக்கால கட்டத்தில் அரசு முன்வைக்கும் சமூக சமய இன நல்லிணக்கத்திற்கு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஒத்துழைப்புக் கொடுப்பார்களா?

எங்களாலான அத்தனை முயற்சிகளை எடுத்தும் எதுவும் சித்திக்காத  பட்சத்தில் எங்கள் வலிகளை யாரிடம் சொல்லி நியாயம் கேட்க முடியும்? எங்கள் மக்களிடம் சொல்கிறோம்.  எங்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய எங்கள் பாராளுமன்றப் பிரதிநிதியான உயர்திரு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களிடம் சொல்கிறோம்.

பழுத்த அனுபவமும் நேர்கொண்ட சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவரது முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை.

பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன்
தலைவர்

கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்
செயலாளர்

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
திருகோணமலை


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3050:2015-12-22-04-57-56&catid=44:2011-04-23-22-51-51&Itemid=59

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.