Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போரின் சாயல்கொண்ட போர் அவலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழப்போரின் சாயல்கொண்ட போர் அவலங்கள்  
ரதன்

மதிய உணவிற்காக விடுதி சாப்பாட்டுக் கூடத்துக்குச் செல்லும் போது அந்த ஹெலிகப்ரரைக் கண்டேன். எமது பாடசாலை விளையாட்டு மைதானத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. எமது பாடசாலைக்கு ஏன்? என்ற கேள்வி மனதினுள் எழ மைதானத்தையொட்டியுள்ள பாதையின் ஊடாக உணவு மண்டபத்தை அடைந்தபோது சாப்பிடுவதற்கான மூன்றாவது மணியும் அடித்துவிடவே உள்ளே சென்றுவிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மைதானத்துக்குள் இறங்கிய ஹெலியில் இருந்து இராணுவ அதிகாரிகள் இறங்கினார்கள். எனது சக மாணவர்கள் மத்தியில் இவர்கள் இங்கு ஏன் என்ற கேள்விகள் எழுந்தபோதும் இலகுவாக எங்களுக்கு விடையும் கிடைத்துவிட்டது.

Marth-Marcy-May-Marlene.jpg

எமது பாடசாலைக்கு அடுத்துள்ள “பழைய பூங்கா”வினுள் இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டி ருந்தது. எமது பாடசாலையையும் பூங்காவையும் ஒரு சிறு வீதி பிரிக்கின்றது. பாடசாலையில் இறங்கும் அதிகாரிகள் முகாமிற்குச் செல்ல இது வசதியாகவிருந்தது. அப்பொழுது நான் 11ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் பலதடவை ஹெலி எமது மைதானத்தில் இறங்கியது. ஆரம்பத்தில் இருந்த கவனம் எமக்கு பின்னர் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு முறை இறங்கும் போதும் இராணுவ வீரர்கள் மைதானத்தைச் சுற்றி காவல் காப்பார்கள். இராணுவ வீரர்களுடனான எனது அறிமுகம் இது முதல் தடவையல்ல. எனது மாமனார் எனது அம்மாவின் தம்பி இராணுவத்தில் கேப்டனாக இருந்து பின்னர் 1983 தமிழ்ப் படுகொலைகளுக்குச் சிறிது காலத்துக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தார். இவர் ஒவ்வொருமுறை வீட்டிற்கு வரும்பொழுது இவரது நடவடிக்கைகள் சற்று இறுக்கமாகவே இருக்கும். இவரை வைத்தே இராணுவத்தினர் மீதான எனது கணிப்பு இருந்தது. அதனால் நான் சற்றுத் தள்ளியே இருந்தேன்.

தொடர்ச்சியாக ஹெலி இறங்குவதும் இராணுவத்தினர் சுற்றி நிற்பதும் தொடர்ந்தபோது எனது சக விடுதிமாணவர்களுக்கு இராணுவத்தில் சிலரின் அறிமுகங்கள் கிடைத்தன. அவ்வாறு கிடைத்தவர்களில் ஒருவர் மெண்டிஸ். இவர் ஒரு தடவை விடுதியில் மதிய உணவின்போது உங்களுக்கு கிடைக்கும் முட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு போராட்டம் நடத்தச் சொன்னார். புலியைத் தேடி இங்கு வந்துள்ளோம் இதுவரை எந்தப் புலியையும் காணவில்லை எனவும் கூறுவார். இவர் பின்னர் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிந்தேன்.

post4.jpg

1983 இனக்கலவரத்திற்குப் பிற்பாடு இராணுவத்தினரின் வன்செயல்கள் மிக மோசமாகத் தொடங்கின. எனது வீட்டிற்குப் பின்புறம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய இளைஞனைத் துரத்திச் சென்று அவ்விளைஞன் மதில் பாய முற்பட்டபோது சுட்டுக் கொன்றதையும் கண்டுள்ளேன். அதன் பின்னர் இராணுவத்தினர் என்னுள் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னமும் மனதிற்குள் ஓசையை எழுப்பியவண்ணமுள்ளன. 1998இல் கொழும்பு விமானநிலையத்தில் சலம் கழிக்கச் சென்றபோது மலசலக் கூடத்தினுள் இராணுவத்தினர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். இதற்காகவே நீண்ட நேரம் சலம் கழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாலும் உள் மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கழித்த சலத்தையே இராணுவம் பார்த்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது.

புலம்பெயர்ந்து வாழும் கடந்த முப்பது வருடங்களில் கனடிய இராணுவத்தை வீதிகளில் நான் பார்த்ததில்லை. ஈழப் போரின்போது நடைபெற்ற சம்பவங்களைப் பார்த்தும் அறிந்தும் அனுபவித்தும் இருந்ததனால் இராணுவத்தை என்னால் மனிதக் கண்ணோட்டத்தில் பார்க்கமுடியவில்லை.

இணையத் தளங்களில் இராணுவத்தினரைப் பற்றித் தேடியபோது இவர்களின் குணாதிசியங்கள் வித்தியாசமானவை என்பதை அறிந்துகொண்டேன். அமெரிக்க இராணுவ வீரர்கள் பலர் தற்கொலை செய்துகொள்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இவர்கள் மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகின்றது. வியட்நாம் போரைப்பற்றிப் பதிவு செய்த சில குறிப்பிடத்தக்க படங்கள் இராணுவ வீரர்களின் மனோநிலையைப் பதிவு செய்துள்ளன. அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தியுள்ளன. இராணுவ வீரர்களது அறம் சார்ந்த விடயத்தைக் கேள்வியெழுப்பியுள்ளன. இராணுவ வீரர்களின் அராஜகத்தனமான மனோநிலைக்கு அவர்களை உருவாக்கும் அமைப்புத் திட்டம் காரணமாக இருக்க வேண்டும். இவை காலங்காலமாக அரசு இயந்திரங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை மீளாய்வு செய்யப்படவேண்டும். ஸ்ரான்லி குப்ரிக்கின் Full Metal Jacket கடுமையான இராணுவப் பயிற்சி முகாம்களை விமர்சித்துள்ளது. ஜோன் இர்வினின் ஹம்பேகர் ஹில், ஒலிவர் ஸ்ரோனின் பிளட்டூன் போன்ற படங்கள் இவை இராணுவ வீரர்களை உருவாக்கும் அமைப்பியல் மீதான கேள்விகளையே எழுப்புகின்றன.

பிலிம்மேக்கர் சஞ்சிகைக்குப் பேட்டி அளித்த சிலி நாட்டு இயக்குனர் பப்லோ லறைன்; ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். “ஒருநாள் சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த பெண் ஒரு இராணுவ வீரரைக் கண்டுள்ளார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்பெண்ணைப் பார்த்து எப்படி இருக்கின்றாய் என இவ்வீரர் நலம் விசாரித்தார். ஒரு சோகமான புன்னகையைப் பதிலாகப் பெற்றுக்கொண்ட இராணுவ வீரன் தனது வாழ்க்கையைப் பற்றிக் கூறத் தொடங்கினான். இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் நினைக்கலாம். நலம் விசாரித்த இராணுவ வீரன் இப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி சித்திரவதை செய்துள்ளான். இன்று குற்றஉணர்ச்சியற்று சாதாரணமாக மக்களுடன் ஒருவனாக இணைந்து வாழ்கின்றான்.” என அச்சம்பவத்தைக் கூறுகின்றார். இப் பேட்டியை வாசித்தபொழுது எனக்கு முள்ளிவாய்க்கால் படுகொலைகளே நினைவுக்கு வந்தன. இதே இராணுவ வீரர்கள் எந்த வித விசாரணையுமின்றி குற்றமற்றவர்களாக மக்களில் ஒருவராக வாழ்கின்றார்கள். நடமாடுகின்றார்கள். இதே இராணுவத்தினர்தான் இன்று வட-கிழக்கு மாகாணங்களில் மக்களைப் பாதுகாக்கின்றார்கள்?

post.jpg

இப்பேட்டியை வாசித்த பின்னர் இவரது மூன்று படங்களைப் பார்த்தேன். இம்மூன்று படங்களும் சிலியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட இடதுசாரி அதிபர் சல்வடோர் அல்லெண்டேயின் ஆட்சியைக் கைப்பற்றி 17 வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தைப் பதிவு செய்துள்ளன. இதனை மூன்றன் தொகுதிப்படங்கள் எனலாம். இவற்றுள் இரண்டாவது படம் பிரேதப் பரிசோதனை. இப்படத்தைப் பார்த்து முடித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி பிரபாகரனின் மரண விசாரணை எவ்வாறு நடந்தது. முடிவுகள் விசாரணையின்றி எழுதப்பட்டனவா? எவ்வாறு இறந்தார்? பிரேதப் பரிசோதனை நிபுணர்கள் என்ன கூறினார்கள்? முள்ளிவாய்க்காலில் இறந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல் ஒவ்வொன்றுக்கும் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்டதா? மரண விசாரணை நடாத்தப்பட்டதா? இவர்களது மரணங்கள் எவ்வாறு பதியப்பட்டுள்ளன? இக்கேள்விகள் அனைத்துக்கும் பப்லோ லறைனின் பிரேதப் பரிசோதனை படம் பதிலளிக்கின்றது. இதே பேட்டியில் லறைன் மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றார். ஒகஸ்ரோ பினோசெட் ஆட்சிக் காலத்தின்போது காணாமல் போனவர்கள் சிறையிலோ அல்லது ஏதாவது ஒரு தீவிலோ சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்தோம். இவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதனைப் பின்னர்தான் தெரிந்துகொண்டோம். இலங்கையிலும் காணாமல் போனவர்களின் பட்டியல் என்பது மிக நீளமானது. இவர்களில் எத்தனை வீதமானோர் உயிருடன் உள்ளார்கள் என்பதைக் காலம்தான் கூறும். இல்லையேல் பூமியைத் தோண்டும்போது வெளிப்படும் எலும்புக் கூடுகள் அல்லது சிதைந்த எலும்புகள் சாட்சியம் கூறும். பப்லோ லறைனின் பிரேதப் பரிசோதனைப் படம் இலங்கையை முற்று முழுதாகப் பிரதிபலிக்கின்றது.

நான் அக்காலங்களில் சூரியனைக் காணவில்லை. எனது ஞாபகத்தில் முகில் கூட்டங்கள் நிரம்பிய ஒளியற்ற பகற்பொழுதே நினைவில் உள்ளது என சிலியின் இருண்ட காலமான ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தை நினைவு கூறுகின்றார் பப்லோ லறைன்.

ஒகஸ்ரோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றியபோது பப்லோ லறைனுக்கு மூன்று வயது.

1973ல் இருந்து 1990வரை சிலியை ஆட்சி செய்தார் சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசெட். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலாவது சோசலிச ஜனாதிபதி அல்லண்டே. இவரது ஆட்சியைக் கவிழ்க்க இவர் தேர்வுசெய்யப்பட்ட 1970ஆம் ஆண்டே அமெரிக்க உளவுப்படை முயற்சி செய்தது. முதலில் இராணுவ அதிகாரி (Chief of Staff General ) ரெனே சினைடெர் ஊடாக முயற்சி செய்தது. இவர் மறுத்துவிட்டார். புரட்டாதி 22,1970 அன்று இவரது கார் விபத்துக்குள்ளாக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் இவர்மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. மூன்று நாட்களின் பின்னர் இவர் இறந்துவிட்டார். இதனைச் செய்தது சிலி இராணுவத்தின் இரு குழுக்கள் எனப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அமெரிக்க உளவு நிறுவனம் இவ்விரு குழுக்களுக்கும் உதவிகள் செய்தமையும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு இராணுவ ஜெனரலான கார்லஸ் ப்ராட்ஸ் ஊடாக மீண்டும் முயற்சி செய்தது. அவர் தனது பதவியை 1973ம் ஆண்டு ஆவணி 21இல் இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து சிலி அதிபர் அல்லண்டே ஒகஸ்ரோ பினோசெட்டை இராணுவத் தளபதியாக நியமித்தார். புரட்டாதி 11, 1973ல் அல்லண்டே இராணுவப்புரட்சி மூலம் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன்போது துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இன்றுவரை அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே அரச ஆவணங்கள் உறுதி கூறுகின்றன. அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனின் ஆலோசகராக இருந்த ஹென்றி கீசிங்கரிடம் நிக்சன் அல்லண்டேயைப் பதவியிறக்கும்படி உத்தரவிட்டார். இதனைக் கீசிங்கரே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சியில் கடுமையான மனித உரிமை மீறல்களையும் அட்டூழியங்களையும் சந்திக்கின்றது. சுமார் 3200 அரசியல் வாதிகள் கொல்லப்பட்டனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட 110000 பேரளவில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். திறந்த சந்தைப் பொருளாதார முறை அமுல்படுத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பு போன்றவற்றின் விளைவாக 1988ல் ஒகஸ்ரோ பினோசெட் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தினார். இதில் 55.99 வீதமானோர் இவர் ஜனாதிபதியாகத் தொடர்வதை எதிர்ப்பதாகத் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து 1990இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாட்ரிசியோ அய்ல்வினிடம் நாட்டைக் கையளித்துவிட்டு அதிபர் பதவியைத் துறக்கின்றார். இவர் இத்தேர்தலில் போட்டியிடவுமில்லை. இதன் பின்னரும் 1998ஆம் ஆண்டுவரை இராணுவத் தளபதியாகத் தொடர்ந்து பதவி வகிக்கின்றார். இராணுவத் தளபதி பதவியைத் துறந்து சில மாதங்களில் இங்கிலாந்து சென்றபோது இவர் ஆட்சியில் செய்த மனித உரிமை மீறல்களுக்காகக் கைது செய்யப்படுகின்றார். பின்னர் சுகயீனத்தைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்யப்படுகின்றார். 2000ஆம் ஆண்டில் சிலிக்குத் திரும்பிய இவரை 2004ஆம் ஆண்டு சிலி நீதிபதி ஒருவர் இவர்மீது வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளலாம். உடல் நலன் நன்றாக உள்ளது எனத் தீர்ப்பளிக்கின்றார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றார். இவர் இறக்கும்பொழுது இவர் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலிருந்தன. இன்றுவரை இவரது ஆட்சியில் காணாமல் போனோரில் 3000 பேர் எங்கிருக்கின்றார்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாது. இவரது ஆட்சியை ஒத்த ஆட்சியொன்றை மகிந்த இராஜபக்ச நடாத்திக் கொண்டிருக்கின்றார்.

Post-Mortem-3.jpg

பப்லோ லறைன் இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர். கொடுமைகளைக் கண்கூடாகத் தரிசித்தவர். இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் ஒகஸ்ரோ பினோசெட்டின் கொடுங்கோல் ஆட்சியை வெளிப்படுத்தியுள்ளன. தனது மனசாட்சியின் குரலாக இவற்றைப் பதிவுசெய்துள்ளார். மூன்றன் தொகுதியின் முதலாவது படம் Tony Manero ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தையும், இரண்டாவது படம் Postmortem ஆட்சிக்காலத்தின் கொடூரத்தையும் மூன்றாவது படம் NO இறுதிப் பகுதியையும் பதிவுசெய்துள்ளது. இம்மூன்று படங்களுக்குள்ளும் ஒன்றுக்கொன்று ஒரு உரையாடலைக் கொண்டுள்ளது. மூன்று படங்களின் பாத்திரங்களும் அரசியல் சூழல் தங்களைப் பாதிக்காது என நினைப்பினும் அவர்களை அகத்திலும் புறத்திலும் அதிகாரமும் ஆட்சியுமே இயக்கின.

Post Mortem பிரேதப் பரிசோதனை

இது பப்லோ லறைனின் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய இரண்டாவது படம். என்னை மிகவும் பாதித்த படம். இப்படத்தை முதலில் பார்த்த பொழுது எனது காலங்களில் நான் மிகவும் அறிந்த அனுபவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நினைவுக்கு வந்தது. இப்படம் ஒகஸ்ரோ பினோசெட்டின் கொடூர முகங்களை வெளிப்படுத்த இயக்குநர் கையாண்ட உத்தியாக வெளிப்படுகின்றது. படத்தின் தலைப்பே உள்ளடக்கத்தைத் தெரிவிக்கின்றது.

பப்லோ லறைனின் கணினியில் சல்வடோர் அல்லெண்டேயின் பிரேதப் பரிசோதனை பற்றிய முடிவுகளைத் தேடியபோது இப்படத்துக்கான கருவும் தேவையும் தோன்றியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள் ளார். இப்படம் சல்வடோர் அல்லெண்டேயின் மரணத்துக்கான கூறுகளை, காரணங்களை ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தில் பப்லோ லறைனின் தேடுதலாக அமைந்துள்ளது. புரட்டாதி 11,1973 சல்வடோர் அல்லெண்டே தனது நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி முடித்தபோது துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டன. இதனை ஒகஸ்ரோ பினோ செட்டின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் தன்னைத் தானே சுட்டுக் கொன்ற சூட்டுச் சத்தம் என்றனர். அல்லெண்டே ஆதரவாளர்கள் இராணுவத்தின் துப்பாக்கிச் சத்தம். இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்றனர். பிரேதப் பரிசோதனை தற்கொலை என உறுதிசெய்தது. 2008இல் தடயவியல் நிபுண வைத்தியர் லூயிஸ் ரவனாலின் கருத்துப்படி இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து வந்த குண்டுகளே அல்லெண்டேயின் உடலில் காணப்பட்டன. (இன்று வரை கென்னடியை யார் எப்படிக் கொலை செய்திருப்பார்கள் என மீண்டும் மீண்டும் ஆய்வு செய்துவருகின்றார்கள்) முதலில் பிரேதப் பரிசோதனை நடாத்தியோர் சந்தேகத்திற்கு இடமான பல விடயங்களைக் கவனத்திலெடுத்து ஆராயவில்லை என மேலும் குற்றஞ்சாட்டியிருந்தார். பப்லோ றைனின் ஆய்வுக்கான காரணங்களை இக்கூற்று மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இப்படத்தில் மரியோ என்ற பிரதான பாத்திரத்தை ஏற்று அல்பிரடோ கஸ்ரோ மிகவும் இயல்பாக நடித் துள்ளார். ராலாக ரொனி மனீரோவில் தோன்றியமைக்கு எதிர்மறையான பாத்திரம். இவர் பிரேதப் பரிசோத னையகத்தில் தடயவியல் உதவியாளராகக் கடமைபுரிந்தார். பிரேதப் பரிசோதனை வைத்திய நிபுணரின் முடிவுகளைத் தட்டச்சில் பதிவு செய்வதும் இவரது பணிகளுள் ஒன்று. இவர் ஒரு வலதுசாரி. அல்லண்டேயின் ஆட்சிக் கவிழ்ப்பை வரவேற்றவர்.

இவருக்கு இவரது வீட்டின் முன்னால் வசிக்கும் நான்சிமீது நாட்டம். நான்சி ஒரு நடனகத்தில் வேலை பார்த்துவிட்டு இப்பொழுது வீட்டில் தனியாக இருக்கின்றார். நான்சிக்கு ஒகஸ்ரோ பினோசெட்டின் அரசுக்கு எதிராகப் போராடும் இடதுசாரிகளுடன் நேரடித் தொடர்புள்ளது. அவர்களது ஒரு ஆதரவாளர்.

பிரேதப் பரிசோதனையகத்தில் உள்ளோரில் பெரும்பாலோனோர்; அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஒருநாள் மரியோ வேலைக்கு வரும் பொழுது அங்கு இராணுவத்தினர் கட்டிடத்தினுள் காணப்படுகின்றனர். இவர்களது நடிவடிக்கைகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. மற்றொரு நாள் மரியோ, பிரேதப் பரிசோதனை வைத்தியர், உதவியாளர் பெண் ஆகியோரை இராணுவம் ஒரு மருந்தகத்திற்கு ஏற்றிச் செல்கின்றது. அங்கு இவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான ஒரு உடலைப் பரிசோதிக்கின்றனர். இராணுவ அதிகாரிகள் இவர்களது நடிவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். வைத்திய நிபுணர் தனது முடிவுகளைத் தெரிவிக்கின்றார். துப்பாக்கி முனையில் அவர் இது தற்கொலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றார். அந்த உடல் சல்வடோர் அல்லெண்டேயினது உடல். அல்லண்டே தற்கொலைதான் செய்துவிட்டார் என்கின்றார் மரியோ. ஆனால் இவருடன் வேலை பார்க்கும் பெண் இது இராணுவத்தின் கொலை எனத் தெரிவிக்கின்றார். இவர்கள் தங்களுக்குள் வாக்குவாதப் படலாம். ஆனால் அறைக்கு வெளியே இவர்களால் பேச முடியாது.

இராணுவ அதிகாரி இவர்களுக்குக் கூறுகின்றார், “ஒவ்வொரு நாளும் பரிசோதனைக்கு வரும் உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதனால் இனி மிகவும் சுருக்கமாகப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இங்குக் கொண்டுவரப்படும் உடல்களில் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் உள்ளன. எங்கே உள்ளன. அதனை மாத்திரம் பதிவுசெய்துவிடுங்கள். அதற்குமேல் எந்தப் பரிசோதனையும் தேவையில்லை” என்கின்றார்.

மற்றொரு காலை மரியோ வேலைக்குச் சென்ற போது இவருடன் வேலை பார்க்கும் சன்ரா வைத்திய நிபுணரைப் பார்த்துச் சத்தமிடுகின்றார். இதனை இராணுவ அதிகாரி பார்த்துக்கொண்டு நிற்கின்றார். பரிசோதனை அலுவலகம் முழுவதும் உடல்களால் நிரம்பிக் காணப்படுகின்றது. அப்பெண் உரத்தகுரலில் “என்னால் இதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. உயிருடன்கூட உடல்கள் இறந்ததாகக் கொண்டு வரப்படுகின்றன. இப்பொழுதும் இங்குச் சில உடல்கள் உயிருடன் உள்ளன. இவர்களைக் காப்பாற்றுங்கள்” எனக் கூச்சலிடுகின்றார். இராணுவ அதிகாரி மிகவும் அமைதியாகச் சன்ராவை நோக்கி நகர்கின்றார். தனது துப்பாக்கியை வெளியே எடுத்து இனிமேல் அந்தப் பிரச்சினை இருக்காது எனக் கூறி உயிருடன் இருந்த உடல்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றார்.

இப்படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டிருந்தாலும் இயக்குநர் தனது விமர்சனப்பார்வை ஒன்றையும் இங்கு முன்வைக்கின்றார். பிரேதப் பரிசோதனை செய்யும் வைத்தியரையோ ஊடாகவோ அல்லது வேறு முன்நிலைப் பாத்தி ரங்களையோ கதை சொல்லியாக முன்வைக்கவில்லை. பிரேதப் பரிசோதனை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண அலுவலரின் பார்வையிலேயே திரைக்கதையை அமைத்துள்ளார். யார் இந்த மரியோ? அல்லண்டேயினது உடல் பரிசோதனை முடிந்த பின்னரான அறிக்கையில் மூவர் கையொப்பங்களிருந்தன. இருவர் பிரபல்ய நிபுணர்கள். மூன்றாமவர் மரியோ கோர்நெஜோ. இவர் அங்கு வேலை பார்த்த ஒரு அலுவலர். இவரைத் தேடிச் சென்றபோது அவர் இறந்துவிட்டிருந்தார் அவரது மகனும் இதே வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இவரது பிரசன்னத்தைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை. அதேசமயம் இவரைப் பற்றியும் எவருக்கும் அக்கறை இல்லை. ஆனால் இவர் சரித்திரப் பிரசித்தி பெற்ற முக்கியப் படிவத்தில் கையொப்பமிட்டுள்ளார். இயக்குநர் இவரது கண்களூடாகத் திரைப்படத்தைப் படைத்துள்ளார்.

இப்படம் 1970களை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. லறைன் 1970களின் சன்ரியாகோவின் வீதி அமைப்பு, நடை, உடை, பாவனை போன்றவற்றில் கவனம் செலுத்தியுள்ளார். ஆட்சியின் கொடூரத்தை வெளிப்படுத்த ஒளியை ஒரு பாத்திர மாகவே மாற்றியுள்ளார். இப்படம் இருட்டான அல்லது முகில் கூட்டம் நிறைந்த ஒளி குறைந்தபொழுதுகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. மரியோவாக நடித்த அல்பிரட்டோ கஸ்ரோ இயல்பாக நடித்துள்ளார். அல்பிரட்டோ கஸ்ரோவிற்குலறை னின் ரொனி மனீரோ படத்திற்கு எதிர்மறையான பாத்திரம்.

பப்லோ லறைனின் ஒகஸ்ரோ பினோசெட்டின் காலப் பயணமாக இப்படத்தையும் இவரது மற்றைய இரு படங்களையும் கருதலாம். இப் படங்களின் ஊடாக ஒகஸ்ரோ பினோசெட்டின் அரசினை மீள மக்கள்முன் வைத்துள்ளார். இப்படங்கள் ஜனநாயக மீறல்கள், அரசியல் கொலைகள், மக்கள் மீதான வன்முறைகள், பெண்கள் சிறுவர்கள் மீதான வன்தாக்கங்கள் என்பனவற்றை மாத்திரம் பதிவு செய்யாமல் சிலியின் பொருளாதாரக் கொள்கைகளில் ஒகஸ்ரோவினால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் சிலியின் பொருளாதார வளத்தைச் சின்னாபின்னமாக்கியதையும் பதிவு செய்துள்ளார். இடதுசாரி ஜனாதிபதி அல்லெண்டேஆட்சிக்கால மாற்றங்களை அமெரிக்காவும் ஒகஸ்ராவோவும் அழித்து ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் மக்கள் ஆதர வையும் பெற முயன்றதையும் இவரது படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இன்று இதேபோன்ற நடைமுறை ஒன்றை ஈரான்மீது அமெரிக்கா செய்கின்றது. சட்டலைட் மூலம் அமெரிக்கத் தொலைக்காட்சிகள் ஈரானில் சட்டத்துக்குப் புறம்பாகத் திரையிடப்படுகின்றன. அங்கு ஒரு கலாச்சார மாற்றத்துக்கு வித்திடுகின்றது. அதேபோல் அணுவியல் விஞானிகள் கொல்லப்படுகின்றார்கள்.

பப்லோ லறைனின் படங்களில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு அடையாளம். இவை ஒரு சரித்திர காலத்தையே வெளிப்படுத்துகின்றன. இவர் தனது படங்களில் ஒரு குரலை வெளிப்படுத்துகின்றார். இது சூழலின் பாதிப்பால் வெளிப்படுவதாக அமைந்துள்ளது. சினிமா என்ற ஊடகத்தின் தன்மை மாறாமல் பார்வையாளர்கள் சரித்திரத்தில் பதிவானதின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குமாறு வெளிப்படுத்துகின்றார். சினிமாவின் சக்தியை இவர் உணர்ந்துள்ளார். சக சிலி இயக்குநர் மனுலா குவேரா கூறுவதுபோல் அரசியல் படங்களில் மக்கள் தங்களை இனங்காண்கின்றார்கள். பப்லோ லறைனின் படங்களின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களது படுகொலைகளைக் காண முடிகின்றது.

ஒகஸ்ரோ பினோசெட் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் மரணித்த உலகப் புகழ்பெற்ற சிலியின் கவிஞர் பப்லோ நெருடா கூறியதை பப்லோ லறைன் தனது படைப்புகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். ஈழத்தமிழ் மக்களுக்கும் இது பொருந்தும்.

நீ பூக்களைச் சிதைக்கலாம்

இளவேனிற் காலம் வருவதைத் தடுக்க முடியாது.

 

http://www.kalachuvadu.com/issue-171/page74.asp

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்...நல்ல கட்டுரை...முதல் அரைவாசி தான் வாசித்து முடித்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரான்லி குப்ரிக்கின் Full Metal Jacket படத்தை அண்மையில்தான் பார்த்தேன். மிகவும் கடுமையான இராணுவப் பயிற்சி முகாம்களில் எப்படி இரக்கமற்ற கொலை செய்யும் இயந்திரங்களாக இராணுவ வீரர்களைத் தயார் செய்கின்றார்கள் என்பதைத் தத்ரூபமாக எடுத்துள்ளார். வியட்நாம் யுத்தத்தில் நடந்த மனிதவுரிமை மீறல்களையும் படம் வெளிக்கொணர்ந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.