Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதிலமாகிக்கொண்டிருக்கும் விம்பங்கள்...... ஆனந்தப்ரசாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அனுராதபுர சந்தி.....கிழக்கு மாகாணத்தின் வாயில்.....
அதனுடாக பயணித்தால் மடத்தடிச் சந்தி.......
திருக்கோணமலை நகரின் நுழைவாயில். இந்துமாகடலின்
வழமையேயான இறைமையையும் இயற்கைத்
துறைமுகமென்ற பெருமையையும் தக்கவைத்துக்
கொண்டிருந்த அல்லது இருந்ததாக இறுமாந்து கொண்டிருந் கிழக்கு மாகாணத்தினுள்ளே உட்புகும் மிக எளிய
நுழைவாயில். இன்னபிற இடது கையை வலதுபுறமாக சுற்றி
மூக்கைத்தொடும் சூத்திர...சூக்க்ஷுமங்கள் ஏலவே
ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களின் வலது குறைந்த நிராதரவான நிலைமைகளை சாதகமாக்கி மெழுகுவர்த்தியாய்
எரியவாரம்பித்த ஆயுதம் தாங்கிய நிலங்கீழ் தண்டுகள் விடுதலைப்போராட்ட முளைகளை விதைக்க வாழைச்சேனை...வாகரை..தாண்டி திருக்கோவில் வரையும் ஊர்ந்து செல்ல தேர்ந்தெடுத்தன. கிழக்கின் அடர்ந்த காடுகளும் திறந்த தனிமைப்பட்ட வயல்களும் ஆறுகளும் தண்மை
விகசித்த புவியியல் விருந்தோம்பல்களுமே வலுவான
காரணங்களாயின.
கோட்டை வாயிலுக்கு ஏன் அனுராதபுரச்சந்தி
என்று பெயர் அமைந்தது என்பதற்கு எந்த வரலாற்று
நியாயங்களும் இல்லை. இந்தச் சந்தியினூடாக நகரும்
கண்டி வீதியை நோக்கி நின்றால் இடதுபுறமாக பாலம்
போட்டாறு (பாலம்பட்டாறு.......எனப்பின்னர் திரிந்தது கனபொருத்தம்
என்று இப்போதுதான் தெரிகிறது.) பத்தாம்கட்டை தாண்டினால்
தம்பலகாமம்....பதினாறாம் கட்டைவரை தமிழ் இருந்தது.
இங்கிருந்து மெதுவாக ஹபரண வழியாக தலைநகர் கொழும்பு.
கண்டி வீதியின் வலது புறமாகப் பயணித்தால் வரலாற்றுப்
புகழ் வாய்ந்த கன்னியாய் வென்னீரூற்று. தொடர்ந்தால்
பான்மதவாச்சி.....கடந்தால் பன்குளம்வரையும் தமிழாயிருந்தது.
இங்கிருந்து மெதுவாக ஊர்ந்தால் 1977ல் பெரிதாக விளம்பரங்கள்
இல்லாமல் திருக்கோணமலையில் நடந்தேறிய இனக்கலவரத்தில்
யாழ்ப்பாணத்துக்கு தப்பியோட முனைந்த தமிழர்கள் நிறைந்த
''ஐலன்ட் பஸ்'' தீக்குளித்த கம்பீர பலத்தில் நிமிரும்
''கெப்பிட்டிக்கொல்லாவ'' என்கிற ஊர். கண்டி வீதியின் இடப்புறத்திலும்
வலப்புறத்திலும் தமிழ் விரவிக் கிடந்த நிலம் நீங்கலாக
ஹபரணவிலிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ விலிருந்தும்
வாழைப்பழமும் ஊசியும் போல மிருதுவாக அதே சமயம் வெகு நேர்த்தியாக திட்டமிட்ட குடியேற்றங்கள் முடிக்குரிய காணிகளில் அமர்த்தப்பட்டு கிழக்கு மாகாணத்தை வளைத்துப்போடும் தந்திரோபாயங்கள் மெல்ல அரங்கேறிக் கொண்டிருந்தன.
யூத இனத்தின்பால் பேரன்பும் பெரும் அக்கறையும் கொண்ட அடோல்ஃவ் ஹிற்லர் ஐயாவைப்போல ஆர். ஜீ. சேனநாயக்க என்கிற அண்ணல் தமிழினத்தின் மேற்கொண்ட தீராக் காதலால் பாரிய இன அழிப்புக்கு பதியம் போட்டுக்கொண்டிருந்தான். இதே போல வடக்கு கிழக்கு மாகாண தமிழர்கள் பால் பேரன்பு பூண்டிருந்த.........முன்னொரு காலத்தே தனித்தனிக் கட்சிகளாக பாஷையூரிலிந்து பருத்தித்துறை
கடற்கரை வரை குடுமியைப் பிடித்து குஸ்தி போட்டுக்கொண்டிருந்த
தமிழரசு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இமயங்கள் துருவங்கள் இணைவது போல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகி பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி ஸ்தானத்தில் அமர்ந்தனர். அதனாலோ என்னவோ வாழைப்பழத்தையும் ஊசியையும் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி டட்லி சேனநாயக்க தலைமையில்
ஆட்சி நடத்திக்கொண்டிருந்த அறுபதுகளில் களனித்தொகுதிப்
பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு வர்தகத் துறை
அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருந்த இவன்
முழுமூச்சாக செய்து கொண்டிருந்த வியாபாரம் திட்டமிட்ட
குடியேற்றங்களே. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணமலை
நகர் உட்பட கிழக்கு மாகாணத்தையே சிங்கள மயப்படுத்த இவன்
கையாண்ட உத்திகள் என்ன?
இலங்கையின் புகழ் பெற்ற வெலிக்கடை....பனாகொடை உட்பட பல்வேறு சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனைகளும் அற்பாயுள் தண்டனைகளும் அனுபவித்துக் கொண்டிருந்த கைதிகளுக்கு ஓசைப்படாமல் பொது மன்னிப்பு வழங்கி கிழக்கினுள் குடியமர்த்தியதே. இந்த கைதிகளோ கத்திக்குத்து...அரிவாள் வெட்டு...கொலை...கொள்ளை...பாலியல் வல்லுறவு.....
இத்யாதி காருண்யச்செயல்களில் ஈடு பட்டுக்கொண்டிருந்தவர்கள்.
இவைகளில் மிகுந்த தேர்ச்சியும் பெற்றவர்கள். திருக்கோணமலை
நகரை அண்டிய முடிக்குரிய காடுகளை வெட்டித்திருத்தி அரச
மான்யத்தில் ஓலைக்கொட்டில் அமைத்து அரச உதவிப்பணத்தில்
பாணும் பருப்பும் ரின்மீனும் வயிற்ற நிரப்ப வாழத்தொடங்கினார்கள்.
தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரிக்கும் புனிதப்பணிகளில்
ஈடு படும் தருணங்களில் முப்படைகளாலும் சாராயமும் எரிபொருளும்
வெகுமானிக்கப்பட்டு அபகரிக்கும் பொருட்களையும் அவர்களே
அனுபவித்துக் கொள்ளவும் ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.
அந்த நேரத்தில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த
நேமிநாதன் வீட்டுக்கு முன்னாலேயே இருந்த மரக்கறிச்சந்தையும்
மீன் சந்தையும் ஒட்டு மொத்தமாக இவர்கள் கை மாறியதை கண்டும்
காணாது கடற்கரையில் காற்றுவாங்கிக்கொண்டு ''ஆமி வந்தால் நேமி
வரும்'' என்று புலம்பிக்கொண்டே சாமியிடம் போய்ச்சேர்ந்தார்.
சரியாகப் பகல் பன்னிரண்டே காலுக்கு இலக்கம் 34 கிறீன் ரோட்டு
வாசலுக்கு ஸ்டீஃபன் சைக்கிளோடு காட்சி கொடுத்தால் இருபது
இருபது ரூபாய்க்கு ஏதோவொரு இரும்புத் துண்டு விற்பனையாகி
இருக்கிறதென்று அந்தத் தெருவே அர்த்தப்படுத்திக் கொள்ளும்!
பாட்டன் தொடக்கித் தகப்பன் தொடர்ந்த நாடார் குலத்தொழிலான
இரும்பு மற்றும் கட்டிடப்பொருட்கள் வியாபாரம் இருவரும் யேசுவிடம்
சென்றடைய இரும்பு இவனை வந்தடைந்தது. வயதான
தாயார். விருத்தியில்லாத வியாபாரம். இரும்புப் பொருட்கள் நட்டுகள்....
போல்ட்டுகள்....சங்கிலிகள் இருந்திருந்து விற்றுப்போனதில் வாழ்க்கை
ஓடியது. தாய் ஒரு நேர்மையான கிறிஸ்துவள். ஸ்டீஃவன் என்னுடைய
நண்பன். என்னையும் மகனாக நேசித்தவள் ஒருநாள் யேசுவைப் பார்கப்
போய்விட்டாள். தாயையும் என்னையும் தவிர வேறுயாரையும் அதிகம்
தெரிந்திராதவன் இருபது ரூபாயுடன் எனது வீட்டு வாசலுக்கு வருவது
மேஸ்லான்ட் ஹொட்டேல் அல்லது கிங்ஸ் ஹொட்டேல் பார்களில்
நிகழும் சாராய சங்கமத்துக்கு.
ஸ்டீஃவனின் ஒன்று விட்ட சகோதரன் காந்தி என்கிற காந்திராஜ் கடின முயற்சிக்காரன். இரும்பில் ஆரம்பித்து பெயின்ற் வரைக்கும் போனவன். இரண்டு பெரிய ஹார்ட் வெயார் கடைகள் நகரில் சுறுசுறுப்பானவை. பெயின்ற் வகை வகையாக ஸ்டாக்கிலிருக்கும். பாலையூற்றில் ஒரு வீடும் உவர்மலையில் இன்னொரு வீடுமாக முன்னேறியவன். ஸ்டீஃவனுக்கு இவனிடம் பொறாமையில்லை. மாறாக சகோதர வாஞ்சையுண்டு. காந்தியோ பயங்கர பிஸி.
எப்போதும் மோட்டார் சைக்கிளில் திருமலைக்குள்ளும் கொழும்புக்குமாக ஓடிக்கொண்டிருப்பவன்.
இதனால் இருவரும் அதிகமாக சந்தித்துக்கொள்வதில்லை.
நானும் வேலை வெட்டியொன்றும் இல்லாமல் திண்ணைக்கு
மண்ணெடுத்துக்கொண்டிருந்த காலங்கள். சாராயத்துக்கு கொடுத்துவைக்காத நாட்களில் காந்திராஜ் கடைவழியாக சைக்கிளில் போகும்போது அவன் கல்லாவிலிருந்தால் போய்ப் பேசுவோம்.
இரும்பு வியாபாரியாக இருந்தும் நல்ல நகைச்சுவை உணர்ச்சி உள்ளவன். சிரிக்க சிரிக்கப் பேசுவான். கொளும்புப் புதினங்கள் சொல்லுவான். சாப்பிட ஹோட்டலுக்கு கூட்டிப்போவான்.
''தண்ணிப்'' பிரச்சனைகள் இல்லாதவன். நாங்களும்
''சாராயமா.........அடச்சீ'' என்கிற ரீதியில் நடந்து கொள்வோம்.
ரிச்சர்ட் கோத்தபாய சேனநாயக்கவின் அதீத முயற்சியால்
சீனக்குடா, அநுராதபுரச்சந்தி, கன்னியாய், சிவயோகபுரம்,
பன்குளம், பான்மதவாச்சி பக்கங்களில் காடையர்
குடியேற்றங்கள் சீரும் சிறப்புமாக நடந்தேறிக்கொண்டிருந்தது.
இந்த இறுமாப்போடு 1970ம் ஆண்டில் சேனநாயக்க காலமானார்.
இவன் போட்டுச்சென்ற பதியம் வளர்ந்து திருக்கோணமலையின்
இருதயத்துக்குள்ளேயே வேரோடத்துவங்கியது.
முடிக்குரிய காணிகளில் குடியேறியது போக உறுதிக்காணிகளையும்
அபகரிக்கத்தொடங்கினார்கள். எனது பாட்டன், முப்பாட்டர்கள்
அமைத்து வழிபட்டுவந்த வீரகத்திப் பிள்ளையார் கோவிலைச் சுற்றி
இருந்த எனது முன்னோர்களால் கோவிலுக்கென்று சாசனம் செய்து
வைக்கப்பட்டிருந்த ஏராளமான நிலங்கள் பறிபோயின.
வடகரை வீதியிலமைந்திருந்த குவாட்டலூப் மாதா கோவிலுக்கு
அருகாமையில் அமைந்திருந்த இந்து மயானத்தில் பிணத்தை
எரித்துவிட்டு வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக
மடத்தடச் சந்தியிலிருந்த கொட்டுக்கிணற்றில் முழுகிவிட்டு
வீட்டுக்குப் போவது ஊர்வழமை. மயானத்தைக் கடந்து
போனால் வரும் உப்புவெளிக் கிராமத்தில் எனது பாட்டியார்
சிவானந்த சரஸ்வதி மாதாஜி அவர்கள் பரம்பரை நிலத்தில்
சிவானந்த தபோவனம் என்கிற ஆச்சிரமம் அமைத்து அனாதை
இல்லம் ஒன்றையும் நடாத்தி வந்தார். இந்த ஆச்சிரமத்துக்க
சொந்தமான உறுதிக்காணிகளிலும் பலாத்காரமாக நுழைந்தனர்.
எனது பாட்டனாரும் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும்
பிரதம நீதியரசராகப் பணியாற்றி இளைப்பாறிய திரு.கிருஷ்ணதாஸன்
அவர்கள் தனியொருவராக சட்டரீதியாகப் போராடிக்கொண்டிருந்தார்.
கோட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்துகொண்டிருந்தார்.
மடத்தடிச்சந்தியிலும் உப்புவெளிப் பாதையின் இருமருங்கிலும்
காடையரின் கடைகள் உணவகங்கள் உருவாகின.
திருக்கோணமலை நகரில் இருந்து தரைமார்க்கமாக வெளியேறுவதென்றால் மடத்தடிச்சந்தியைத் தாண்டினால்தான் முடியும். புகையிரத நிலையமே இதற்கப்பால்தான் இருக்கிறது. இதைத்தாண்டி அநுராதபுரச் சந்தி வரை காடையர் வியாபித்திருந்தனர். இந்தச் சந்தியைத்தாண்டினால் மட்டுமே கொழும்புக்கோ யாழ்ப்பாணத்துக்கோ மட்டக்களப்பிற்கோ ஓடுவது சாத்தியம். இதற்கு நேரெதிரான திசையில் இந்துமா சமுத்திரம். இயற்கைத் துறைமுகம். ''லாஞ்ச்'' களில்தான் மூதூருக்குப் போகலாம். ஊருக்குள் கலவரம் மூண்டால் அசாத்தியமான நீச்சல் பயிற்சியிருந்தால் கடலன்னை சாந்த குணவதியாகவும் இருந்தால் உயிர் உயிர்ப்பது ஓரளவுக்குச் சாத்தியமாகும்!!!
மட்டக்களப்புக்கு தப்பியோடலாமென்று நிலாவெளிப்பாதையில்
ஓடினால் புல்மோட்டைக்கப்பால் கொக்கிளாய் ஏரி
பூதாகரமாக விந்து கிடக்கிறது. கடப்பதானால் இழுவைப்படகு
தேவைப்படும். ஊரடங்கு நேரங்களில் இவைகள் கிடைக்காது.
விரட்டி விரட்டி வெட்டித்தள்ள வசதியாக.....என்ன ஒரு
புவியியல்.....? நாங்கள் தலையணைப் பஞ்சுப்பொதிகளானோம்.
ஹேரத் ஹெட்டியாராய்ச்சிகே நந்தாமாலினி தம்பதிகள்
இலங்கைத்தீவின் அழகையும் உற்பத்திகளையும் இறைமையையும்
பிரித்தானியர்கள் சூறையாடிக் கொண்டிருந்த 1930பதுகளிலேயே
தென்னிலங்கையிலிருந்து கல்யாணமான கையோடு தேன்நிலவுக்கும்
தொழில் வாய்ப்பிற்குமாக திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்து
வந்துவிட்டார்கள். துரு....துருவென்ற கடின உழைப்பாளர்களான
இருவரும் மரவியாபாரம் செய்யவாரம்பித்து குறுகிய
காலத்திலேயே தளபாடங்கள் உருவாக்கி பதினெட்டுத் தச்சு
தொழிலாளர்களோடு கூடிய நிறுவனமாக்கி விட்டார்கள்.
சிங்களவர்களோடு தமிழ்த் தொழிலாளர்களும் இணைந்து
இருமொழிகளிலும் மழலை பேசிக்கொண்டு தமிழ் சிங்களப்
புத்தாண்டில் இவர்கள் அவர்கள் வீட்டுக்கும் அவர்கள்
இவர்கள் வீட்டுக்கும் விருந்துபசாரங்கள் செய்து முதலாளி
தொழிலாளி பம்மாத்துக்கள் இல்லாது உயர்ந்தனர்.
இவர்களுக்கு நில்மினி என்ற மகனும் வாஸந்தி என்ற மகளும் வாய்த்தனர். இவர்களைப்போலவே தென்னிலங்கையிலிருந்தும் ஊவா மாகாணம்....சப்பிரகாமுவ மாகாணம்..... கண்டி மாவட்டம் போன்ற இடங்களிலிருந்தும் வாழ்வாதாரம் தேடி வந்தவர்களை ஓங்கியொலித்த இந்து மாகடலும் ஒங்கி நெடுத்துக்கிடந்த காடுகளும் பச்சைப்பசேல் என்று பொலிந்து விளைந்த வேளாண்மைகளும்அணைத்துக்
கொண்டன. ஹேரத், மாலினி குடும்பத்தினரோடு சிறுவயது முதலே வீட்டிலொருவனாக வளர்ந்தவன் காந்திராஜ். ''அணே.....மகே ரத்தரங் புத்தா....'' (என் தங்க மகனே...)என்று அன்பைச்சொரிவாள் மாலினி.
காந்தி அசத்தலாக சிங்களம் பேசுவான்.
தமிழ் மட்டும் கொஞ்சம் நாடார்த்தனமாக இருக்கும்.
எனக்கும் ஸ்டீஃவனுக்கும் பல சிங்களவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். தேங்காய் மொத்தவியாபாரம் செய்துகொண்டிருந்த சிரில் டி சில்வா.... சிகரெட் ஹோல்சேல் லசந்த பீரிஸ்.....சிகரெட் தட்டுப்பாடான காலத்திலும் எங்களுக்கான சப்ளை தவறவில்லை. மரக்கறி வியாபாரத்தை நேர்மையாக செய்து கொண்டிருந்த அப்புஹாமி.....இப்படியாகப் பலர். இவர்கள் குடும்பத்தினரோடு
நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். ஸ்டீஃவன் கொஞ்சம் ஒதுங்கலான பேர்வழி. அதிகம் ஒட்டமாட்டான். இவனும் நானும் பேசும் சிங்கள பாஷையும் அவர்கள் உரையாடும் தமிழும் திருக்கோணமலை கந்தகபூமியின் அதீத வெப்பத்திலும் நகைச்சுவையால் இதமான குளிர்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.
தெற்கில் ''தமிழன் தோலில் செருப்புத்தைத்துப் போடுவேன்...''
என்று சொல்லிச் சொல்லி ஓட்டுவாங்கிக் கொட்டிருந்தார்கள்.
வடக்கில் ''சிங்களையா....மோடையா....'' என்று நக்கலடித்து
வாக்குகளை வசீகரித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப்
பேத்தல்களுக்கெல்லாம் யாரும் மசியவில்லை.
திருக்கோணமலை சிங்கள மஹாவித்யாலயத்தில் ஒருமுறை
சரஸ்வதி பூஜையில் நானும் வயலின் வித்வான் காலஞ்சென்ற
சங்கரலிங்கம் ஐயா அவர்களும் கச்சேரி நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தோம். நில்மினவும், வாஸந்தியும் இங்குதான் உயர்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஐயா வயலின் வாசிக்க நான் மிருதங்கம் வாசிக்க நடுவில் மஹாவித்யாலய இசையாசிரியர் சேனரத்ன மாஸ்ரர் ''எஸ்ராஜ்'' வாத்தியத்தோடு வந்து எங்களுடன் இணைந்து வாசித்தார்.
மண்டபம் இசையால் அதிர்ந்தது. ஐநூறுக்கும் அதிகமான மாணவ மாணவியர் இருந்தும் ஸ்வாஸச் சத்தம்கூடக் கேட்கவில்லை. எஸ்ராஜ்.......ஒரு சிறிய சித்தார் வாத்தியம் போலிருக்கும்....ஆனால் வயலினைப்போலவே ''போ'' போட்டு வாசிக்கவேண்டும். தரப்பட்ட ஒரு மணி நேரம் இரண்டரை மணி நேரமாக விரிந்தது. யாரும் அசங்கவில்லை. இசை நின்றதும் ஒரு பெரிய பித்தளைத் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பூக்கள், பழங்கள் அலங்கரிக்க
சன்மானங்களும் வைத்து அத்தனை மாணவ மாணவியரும் எங்கள் கால்களில் வரிசையாக வந்து விழுந்து நமஸ்காரம் செய்து கையளித்துவிட்டுப் போனார்கள். இப்படியொரு கெளரவிப்பு எனது சமூகத்தில் கூட எனக்கும் சங்கரலிங்கம் ஐயாவுக்கும் கிடைத்ததேயில்லை.
இந்த வாஸந்தியைப்பற்றிச் சொல்லியேயாகவேண்டும்!!!
என்னைவிட நான்கு வயது இளையவள். அநியாயத்துக்கு அழகு.
கரு...கருவென்ற கேசம் தரையைத் தடவாதகுறை. எல்லாம்
தென்னிலங்கைத் தேங்காய்ப்பால்.....என்று பெருமூச்சு விட்டுக்கொள்வேன். சிங்கள மஹா வித்யாலயத்தையும், வாஸந்தி வீட்டையும் தினசரி சுற்றிக் கும்பிடுவது எனது பக்திமார்க்கமானது.
அநியாய அழகும் அன்பைச்சொரியும் சுபாவமும் கொண்டவள்
என்னையும் நேசித்தாள். எல்லோரையும் நேசித்தாள். ஆயினும்
காந்திராஜை அதிகமாகவே நேசித்தாள். காந்தி அவளுக்குப்
பொருத்தமானவன் என்பதை ஒத்துக்கொண்டு நானும்
ஒதுங்கிவிட்டேன். ஹேரத் தம்பதிகளுக்கும் சுறுசுறுப்பான,
துடிப்பான வாலிபனான காந்தியை மருமகனாக்கிக்கொள்ள
உள்ளூர விரும்பினார்கள். ஏற்கெனவே நாடார் குலத்தொழில்
வர்த்தகம் மரபணுக்களில் விரவிக்கிடந்த காந்திராஜ் ஹேரத்தின்
வியாபார நுணுக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டு
ஹார்ட்வெயார் வர்த்தகத்தில் கடகடவென்று மேலேறிக்
கொண்டிருந்தான்.
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் தமிழரசுக்
கட்சியின் ஸ்தாபகர்.....தமிழர் சுயநிர்ணய உரிமைகளுக்காக
பலகாலம் போராடியவர். ''பார்கின்ஸன்ஸ்'' நோயால்
அவதிப்பட்டு 1977 ஏப்ரல் மாதம் 26ம் திகதியன்று காலமானார்.
அணைத்திலங்கை தமிழ் காங்கிரஸ்கட்சியில் ஆரம்பத்தில்
உப தலைவராக இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து
மீண்டும் எல்லோரும் இணைந்து தமிழர் விடுதலைக்
கூட்டணி அமைத்து தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்த
நாட்களில் இவரை இழக்க நேர்ந்தது. வட கிழக்கின் தமிழர்கள்
சோகத்தில் ஆழ்ந்தனர். அன்னாரது அஸ்தி இரண்டு மாகாணங்களுக்கும்
ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இவரது தொகுதியான காங்கேசன்துறை நகரிலிருந்து யாழ்நகர்,
பரந்தன், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஊடாக ஊர்ந்தன ஊர்திகள் அஸ்தியைச் சுமந்து கொண்டு கிழக்கு மாகாணத்து திருக்கோணமலையை நோக்கி.
தமிழீழக் கோரிக்கையினால் உள்ளூர முறுகிக்கொண்டிருந்தாலும்
இடையே இருந்த சிங்களக் கிராமங்களான கெப்பிட்டிக்கொல்லாவ,
கோமரன்கடவெல இவைகளை அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி
கடந்து அநுராதபுரச் சந்தியை நோக்கி முன்னேறியது ஊர்வலம்.
இந்தக் காடையர் குடியேற்றங்களையும் ஒருவழியாகத் தாண்டி
உப்புவெளி வீதியால் வந்துகொண்டிருக்கும் போது
இரு மருங்கிலும் முறைத்தபடி நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த சிறை மீண்ட செம்மறிகள் ஊர்வலத்தில் ஊர்திகளோடு
நடந்து வந்துகொண்டிருந்த தமிழ் மக்கள் மீது கற்களை
விட்டெறிந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஊர்வலத்தினர்
திருப்பித்தாக்க முற்பட சின்னதாக ஒரு கைகலப்புக் குமிழி
வெடித்துச் சிதறி மறைந்தது. ஒரு நடுப்பகலில் நிகழ்ந்த இந்தச் சிறு வன்முறை விஸ்வரூபம் எடுக்குமென்பதை அப்போதில் யாருமே கணித்திருக்கவில்லை. அஸ்திப் பேழை திருமலை நகர சபை மண்டபத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலையில் கிண்ணியா வழியாக மூதூரை நோக்கிப் பயணித்தது.
மாலைச் சூரியன் திருக்கோணேச்வர கோவிலின் பின்னால்
இராவணன் வெட்டு வழியாக இந்துமாகடலுக்குள் முக்குளிக்க
விழைந்து கொண்டிருந்தான். செக்கர் வானத்தின் அழகிய
நிறப் பிரிகைகளையெல்லாம் அரக்கத்தனமாக இருள்
அழிக்க முனைந்து முடிவில் அழித்தேயழித்துவிட்டது.
இனத்துவேஷ நெருப்பை கக்கிக் கக்கியே அரசியல் லாபம்
சம்பாதித்துக்கொண்டிருந்த ஈனப்பிறவிகளால் இரண்டே
இரண்டு மொழி பேசிக்கொண்டிருந்த இரண்டேயிரண்டு
இனங்கள் பிளவு பட்டுப்போயின. எந்த நெருப்பைக்
கக்கினார்களோ அதே தழல் நிஜத்தீயாய் வெறியாட்டம்
ஆடியது அன்றிரவில்.
சிறைச்சாலைகளில் உழன்று அத்துமீறி
குடியமர்ந்தவர்கள் முதலில் ''கிங்ஸ் ஹோட்டலை'' உடைத்து
உள்ளே நுழைந்து மதுப்புட்டிகளை கைப்பற்றிக்கொண்டு
இராணுவ வாகனங்களில் நகர்த்தப்பட்டு ராணுவமும்,
சாராயமும் கொடுத்த உந்து சக்தியில் தமிழர்களின்
வர்த்தக நிறுவனங்களின் கதவுகளை உடைத்து முதலில்
பொருட்களை சூறையாடி ராணுவ வாகனங்களில் சேமித்து
வைத்தபின்னர் தீ மூட்டினர். கூடுதல் பாதிப்பு மத்திய
வீதியிலும், பிரதான வீதியிலும் அமைந்திருந்த கடைகளே.
அதிக நேரம் தீக்குளித்தது சிதம்பரம்பிள்ளை புத்தக சாலை.
இந்தக்கடையில் இவர்களுக்குத் தேவையானது எதுவுமே
இருக்கவில்லை. அதே போல் அதிகாலையையும் தாண்டி
கிழக்கில் சூரியன் பனையளவுமேறும்வரை எரிந்து
கொண்டிருந்தது காந்திராஜின் களஞ்சியம். அவ்வளவும்
பெயின்ட்றும்.....தின்னரும். காடையரின் கொட்டில்களுக்கு
இவைகளும் தேவைப்படவில்லை.
பிரதான வீதியிலிருந்த குலத்தின் ''ஹை...ஃவை'' ரேடியோ....
அருகிலிருந்த கிளியண்ணையின் யாழ் கபே.....விஜயனின்
விஜயா ஸ்ரூடியோ.....மத்திய வீதியிலிருந்த ஜெயமதி பவான்...
ஜகந்நாதன் ஹார்ட் வெயார் ஸ்டோர்ஸ்.......இப்படியாக
ஏராளமானவை எரிந்து சாம்பராயின.
அன்றிரவு ஏழு மணிமுதல் அதிகாலை ஆறு மணிவரை
ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதாக தம்பியப்பா
செளண்ட் சேர்விஸின் ஒலி பெருக்கிகள் தெருத்தெருவாக
முழங்கின. புழுக்கம் தாங்காமல் வீட்டுவாசலில் வந்து நின்று காற்றோடு வந்த இத அறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த போது......
டொக்கியாட்....கிறீன்வீதி முனையில் ஸ்டீஃவன் சைக்கிளில்
வந்து திரும்பிக்கொள்வது தெரிந்தது. அப்போது நேரம் சரியாக
பன்னிரண்டே கால். ''என்னடா...இந்த நேரத்திலுமா....? என்று
சலித்துக்கொள்கையில் சைக்கிளைக் கொண்டுவந்து நிறுத்தினான்.
நான் என்றுமே கண்டிராத ஒரு முகம் தென்பட்டது. பாறையாய்
இறுகிப்போய் சலனமற்றுக் கிடந்தது.
அவன் சொன்னது இவ்வளவுதான்.
''மச்சான்......உப்புவெளிச் சந்தீயிலெ வெச்சு காந்தியண்ணெய
வெட்டிப்புட்டாய்ங்க......பெரீயாஸ்பத்திரீல மோச்சறேக்குள்ள
கெடக்கான்.......''
ஸர்வமும் உறைந்து போனது.....சலனங்கள் ஸ்தம்பித்துப்போனது.
இதற்குமேலும் இந்தக் கணநேரத்தை என்னால் விவரித்து எழுத முடியாதிருக்கிறது.
இவ்வளவுதான் நடந்தது.
கடையெரிந்த செய்தியை அறிந்ததும் அடித்துப் பிய்த்துக்கொண்டு
மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறான் காந்திராஜ்.
முதல்நாள் இரவின் வெறி முறிந்தும் முறியாத நிலையில்
முதல்நாள் பகல் உரசலேற்பட்ட அதே இடத்தில்....வந்தவனை
வழிமறித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித்தள்ளியிருக்கிறார்கள்.
நானும்,ஸ்டீஃவனும் பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம்.
வெட்டுக்காயங்களுடன் நிர்வாணமாய்க் கிடத்திவைக்கப்பட்டிருந்தான்.....
குருதி உறைந்தும் உறையாமலும். எங்களால் அழமுடியவில்லை.
ஓடினோம்.....காந்தியின் தகப்பனைக் கூட்டிவந்து பிணத்தை மீட்டு
பெட்டியை தயாரிக்கச்சொல்லிவிட்டு டொக்கியாட்....கிறீன் வீதி
முனையிலிருந்த அங்கிலிக்கன் இடுகாட்டில் குழிதோண்டிவிட்டு
பாஸ்டர் நல்லையாவைக் கூட்டிவந்து தாய்....தகப்பன்....நான்......
ஸ்டீஃவன் சாட்சியாக.....மண்ணை நிரப்பிக்கொண்டிருக்கும் போது
என்ன பாட்டுப் பாடினேன் என்பது மட்டும் இன்றளவும் ஞாபகத்தில்
வர மாட்டேன் என்கிறது.!!!
இதன் பிறகு நகரின் வழமைகள் எல்லாமே மாறிப்போய்விட்டது.
பரஸ்பர நல்லிணக்கத்தை, அன்பை, சந்தோஷங்களை, துக்கங்களை,
புத்தாண்டுகளை, சரஸ்வதி பூஜைகளை, அடிப்படை மனிதநேயங்களை
எதையுமே பகிர்ந்துகொள்ள முடியாமல் இரு இனங்கள் வாழ்வைத் தொடர்ந்தன.
ஆனந்தப்ரசாத்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ''காலம்'' காலாண்டிதழில் பிரசுரமாகிய காலத்தால் மளுங்கடிக்கப் படாத எனது பிராணாவஸ்தைகளின் ஒரு சிறிய பதிவு.
 
 
 
முகப் புத்தகத்தில் வந்ததை இதில் இணைக்கின்றேன்.எனது குடும்பமும் திருகோணமலை கலவரங்களால் பாதிக்கப்பட்டது. எங்களுக்குள் சண்டை பிடிப்பதை விட்டு விட்டு எமது பொருளாதார/அரசியல் அறிவு என்ற கத்தியை இன்னமும் நாம் தீட்ட வேண்டும். கருத்துக்களை பகிருங்கள் உறவுகளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.