Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'!

Featured Replies

இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'!

 

 
 
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க

உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும்.

இலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை ஊட்டிவிட்டீர்கள்.

சாதித்துவிட்டீர்கள்

காலம்காலமாக அரசியல் களத்தில் எதிரும்புதிருமாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த அரசில் இணைந்துள்ளன; அதிலும் ஒரு கட்சி தனது முன்னாள் அதிபருக்கு எதிராக, இந்நாள் அதிபரையே துணிவுடன் நிறுத்தி தேர்தலில் வெற்றிபெற வைத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது. நடக்கவே நடக்காது, சாத்தியமே இல்லை என்று கூறத்தக்க ஒன்றை சாத்தியம்தான், இது நடைமுறைக்கு உட்பட்டதுதான் என்று சாதித்துக் காட்டிவிட்டீர்கள்.

பழிவாங்குவதற்குப் பதிலாக சமரசத்தையும், பிரிவினைக்குப் பதிலாக பேச்சுவார்த்தையையும், போருக்குப் பதிலாக சமாதானத்தையும், சாவுக்குப் பதிலாக வாழ்வையும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். போரும் சமாதானமும், வாழ்வும் சாவும் என்ற இரண்டு முனைகளுக்கிடையே ஊசலாடும் நாடு என்று கூறினால் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு நினைவுக்கு வந்தது இலங்கையாகத்தான் இருந்தது. ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் மரணத்தின் கோரப் பிடியில் சிக்கி வாழ்ந்திருக்கிறார்கள், அதன் சில்லிட்ட கொடுங்கரங்களில் சிக்கியிருக்கிறார்கள், அந்தப் போர்களின்போது பட்ட தழும்புகளை இன்னும் ஆறாத நினைவுகளோடு தடவிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது பாய்ந்த குண்டுச் சிதறல்கள் சதையில் புதைந்த நிலையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பொதுவாழ்வில் இருக்கின்றனர்; அப்படிப்பட்டவர்கள் இங்கேயும் இருக்கின்றனர். நேரிய சிந்தனையுடனும் துணிச்சலுடனும், அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்ட இலங்கையை மீட்டு நேர் பாதைக்குத் திருப்பிய இந்தத் தலைவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

கூட்டணி என்றாலே சுயநலம்

அரசியலில் கூட்டணி என்றாலே அது சுயநல நோக்கிலான சந்தர்ப்பவாதம்தான். அரசியல் கூட்டணிகள் எப்போதும் சூழ்ச்சிகள் நிறைந்த தந்திர வியூகங்கள்தான். எல்லா நாடுகளிலும் எல்லா தலைமுறைகளிலும் அவசரத்தில் செய்துகொள்ளப்படும் அரசியல் கூட்டணிகள், ஆதாயத்தைப் பங்குபோட்டுக்கொள்ளும்போது உடைந்து நொறுங்கிவிடும்.

இப்போது இங்கே கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது, அது சாதாரணமானதல்ல. பரஸ்பர நம்பிக்கைக் குறைவாக இருந்தால் கூட்டரசு செயல்படத் தொடங்குவதற்கு முன்னாலேயே அது நொறுங்கிவிடும்; அதிக நம்பிக்கை வைத்து, நம்பிக்கைத் துரோகம் அரங்கேறிவிட்டால் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல அதைவிட மிகப் பெரிய இழப்புகளைச் சந்திக்கநேரும். அதிபர் சிறிசேனாவும் பிரதமர் விக்ரமசிங்கவும் இப்பாதையில் இணைந்து செல்ல முடிவு செய்தபோது முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகவின் முதிர்ச்சியான ஆதரவும் துணை நின்றது. அதே சமயம் இந்த முயற்சி பலன் தராமல் தோல்வியுற்றால் அதைத் தாங்கவும் தயாராக இருவரும் தயாராக இருந்திருப்பார்கள். அது வெறும் தோல்வியாக மட்டும் இருக்காது. இன்று லசந்த விக்ரமசிங்கவின் முதலாவது நினைவு நாள். இதற்கும் மேல் நான் இதை விவரிக்க வேண்டுமா?

யாராவது சொல்வார்களா?

இவ்விரு தலைவர்களும் அசாத்தியமான அரசியல் துணிச்சல் உள்ளவர்கள். பாதுகாப்பான அரசியல் வழிமுறைகளைக் கைவிட்டு பாதுகாப்பில்லாத பாதையில் பயணப்பட்டிருக்கின்றனர். ஒரு தேர்தலை எதிர்கொள்ளப் போகும் பெரிய தலைவர் உலகில் எங்காவது சொல்லியிருக்கிறாரா ‘நான் வெற்றி பெற்றால் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள அதிபர் என்ற பதவியைக் கைவிடுவேன்’ என்று? தன்னுடைய அதிகாரத்தையும் அந்தஸ்தையும் குறைத்துக்கொள்ளும் சட்டத்திருத்தத்துக்கும் விதிகளின் திருத்தத்துக்கும் எந்தத் தலைவராவது இணக்கமாக இருப்பாரா? அரசியலில் எதிர் அணியில் இருப்பவர் தங்களுக்கு எதிராகப் பேசியதையும் செயல்பட்டதையும் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் நலன் கருதி ஒரே அரசில் சேர்ந்து செயல்பட எந்த நாட்டின் தலைவர்களாவது இதைப்போல துணிவார்களா?

இலங்கையைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய மத, மொழி, இன, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தங்களுடைய நாட்டை நேசிப்பதை ஓராண்டுக்கு முன்னால் உணர்த்தியிருந்தனர். எதேச்சாதிகாரத்தை அவர்கள் தூக்கி அப்பால் எறிந்தனர். கடந்த காலத்தை அவர்கள் மறக்கவில்லை, ஆனால் அதன் விஷத்தை நீக்கிவிட்டனர். தங்களுக்கிடையே வேற்றுமை இருப்பதை மறுக்கவில்லை ஆனால் சந்தேகத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. அழிவின் விளிம்பிலிருந்து நாட்டை மீட்டுவிட்டனர். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதை உணர்ந்த மக்கள், முள்ளை எடுத்த பிறகு முள் தைத்த இடத்தில் மருந்து போடவேண்டும் என்று முடிவெடுத்தனர். மோதலால் விளையும் முள்ளா, சமரசத்தால் கிடைக்கும் அறுவடையா எது வேண்டும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. பின்னதுதான் வேண்டும் என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.

நாடு என்பது எது?

அரசியல் என்பது நாட்டை அடிப்படையாகக் கொண்டது, அரசியல் கட்சிகளை அல்ல. நாடு என்பது அதன் மக்களுடைய நாகரிகத்தைத்தான் குறிக்குமே தவிர அதன் அரசியல் அமைப்பைப் பற்றியல்ல. இலங்கை மக்களின் புத்திசாலித்தனமான தேர்தல் முடிவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், இதுதான் நாட்டின் நாகரிகம் என்று.

தேசிய அரசு ஓராண்டை நிறைவு செய்ததற்காக அல்ல இந்த கொண்டாட்டம்; அதிகார ஏகாதிபத்தியத்தையும் அரசியல் மனமாச்சரியங்களையும் பரஸ்பர சந்தேகங் களையும் பேராசைகளையும் கைவிடுவதுதான் தேசிய அரசின் அடையாளம். இந்தியாவும் ஏன், ஆசியாவும் இலங்கையிடமிருந்து படிக்க வேண்டிய பாடம் இதுதான்.

நாளை என்ன?

நாளை என்ன? இதற்கான பதில், இன்று இலங்கை எப்படி என்பதுதான். இந்தியர்கள் எப்போதுமே அடுத்தவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதைத் தங்களுடைய பிறப்புரிமையாகக் கருதுபவர்கள்; அதைத் தனது கடமையாகவும், சீரிய பணியாகவும்கூட நினைப்பவர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயதாகிவிட்டாலும் இளைஞர்களானாலும், உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாடு சென்றாலும், யாரும் கேட்காவிட்டாலும்கூட ஆலோசனைகளை வழங்கத் தயங்கமாட்டார்கள். நானும் அவ்வாறே இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் என்னுடைய அரசுக்கும் அறிவுரையாகக் கூற விரும்புவது இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.

இலங்கை மக்கள் தங்களுடைய பணியைச் செவ்வனே செய்துவிட்டார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது தலைவர்களின் கடமை. இலங்கையின் தேசிய அரசுக்கு ஆயிரம் கடமைகள் காத்துக்கிடக்கின்றன. பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பு, குடியரசின் விடுதலை உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளுக்குப் பழைய நிலையை மீட்டளிப்பது என்பவை அவற்றில் முக்கியமானவை. இதற்கு அரசு உரிய கவனத்தைச் செலுத்தும்.

ஆனால் பிரதானமான, முன்னுரிமை தேவைப்படும் கடமை எதுவென்றால் நாட்டின் பிரதான சமூகங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை தக்கவைத்து வலுப்படுத்துவதுதான். தங்களிடம் அரசு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை எல்லா சமூகத்தவருக்கும் ஏற்பட வேண்டும். ஜனநாயகவாதிகள் பதவியில் இருக்கும்போது தங்களுடைய செயலில் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் பிடிவாதமாக இருக்கக்கூடாது. நிர்வாகத்தை நடத்திச் செல்ல உருவாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். தவறு நிகழ்ந்திருந்தால் அதைத் திருத்த வேண்டும், மாறாக தவறு செய்தவர்கள் அதைத் தொடர விட்டுவிடக்கூடாது. தங்களை ஆளும் தலைவர்கள் நல்லவர்களாக மட்டுமல்ல வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு.

siri1_2713781a.jpg

ராஜபட்சவுக்கு ஓரிடம்

இந்த விழாவில், இதற்கு முன்னால் ஆட்சி செய்தவரைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல. எனினும் இங்கு நடந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலைக்குக் காரணமாக இருந்ததால் ஒரு பயங்கரவாதத்துக்குப் பதிலாக நடந்த பழிவாங்கலாகவே அந்த ரத்தக்களரி பார்க்கப்படும். பால்மணம் மாறாப் பாலகனை, அவனுடைய தந்தையின் காரணமாகவே கொன்றதை உலகமே பார்த்து அச்சத்தில் உறைந்தது. எனவேதான் கசப்பான அந்த சகோதர யுத்தம் முடிவுக்கு வந்த பிறகும்கூட அமைதி என்பது கண்ணில்படாமலே இருந்தது. பீரங்கிகளின் சத்தம் மட்டும் ஓயவில்லை, பேச்சுவார்த்தைக்கான குரலும் ஓசையின்றி ஒடுங்கியது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறானார், அவருடைய இலக்கு என்ன? அதுவும் வரலாறாகிவிட்டதா? அல்லது பின்னாளில் மீண்டும் தலைதூக்குவதற்காக எங்காவது மறைந்து நிற்கிறதா? இப்போதைக்கு தனிநாடு கோரிக்கை விவாதப்பட்டியலிலிருந்து விலகியிருக்கலாம், உணர்வுபூர்மாக இருக்கும்வரை அது நீங்கவே நீங்காது. மக்களுடைய உற்சாகமான ஆதரவு என்பது மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே தொடரும். லட்சியங்களைத் திட்டங்களாகவும், திட்டங்களைச் செயல்களாகவும், செயல்களைப் பலன்களாகவும் மாற்றுவதென்பது ஏமாற்றத்துக்கும் அதிர்ச்சிக்கும்கூட வழிவகுக்கும். மனப்புண்களை ஆற்றுவதற்கான செயலை மேற்கொள்ள தொடர் முயற்சிகளும் பொறுமையும் அவசியம். ஆட்சியின் தொடக்கத்துக்குப் பிறகு மறுமலர்ச்சிக் காலம் என்றால் அதுவே பழிவாங்கத் துடிக்கும் சக்திகளுக்கும் முளைவிடும் காலமாகும். எந்த ஒரு தீர்வும் ஏற்படவிடாமல் சீர்குலைப்பதில் அவர்கள் சமர்த்தர்கள். முடிவெடுக்க முடியாத நிலை, குழப்பம் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள். தேச ஒற்றுமை என்பது பயனில்லாதது, அசௌகரியமானது என்று உணர்ந்தவர்கள். சிறுபான்மையினருக்கு அரசு அதிகமாகச் செய்கிறது, விரைந்து செய்கிறது என்று குற்றஞ்சாட்டுவார்கள். அரசின் நடவடிக்கைகளுக்கு இதுவரை தடையாக இல்லாதவர்களையும் தடைகளாக்குவார்கள். இந்தியாவில் அவர்கள் கட்சி மாறலைக்கூட ஊக்குவிப்பார்கள். கட்சி மாறுவதைத் தடுக்கச் சட்டம் வந்தபிறகு அவர்களுடைய வாழ்க்கை சற்றே கடினமானதே தவிர நடத்தவே முடியாத அளவுக்குப் போய்விடவில்லை. பணம் இருந்தால் இப்போது சாதிக்க முடியாத செயல்களே இல்லை.

இலங்கை அரசு இவர்களால் தனது கவனம் சிதற அனுமதிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளைப் பொறுத்தவரையில் கொடுத்தது போதும் என்ற திருப்தி அரசுக்கு வரக்கூடாது, அது தமிழர்களிடமிருந்து வர வேண்டும். பொன்னம்பலங்கள், செல்வநாயகம்கள் ஏமாற்றப்படாமல், நிராகரிக்கப்படாமல், சிறுமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. அத்தகைய பெரிய தலைவர்கள் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பயங்கரவாதத்தின் கோர விளைவுகளை நேரில் அனுபவித்த பலர் இன்றும் நம்முடனே வாழ்கின்றனர். ஐக்கிய இலங்கைக்காகப் பாடுபட்ட ஒவ்வொருவருமே தியாகிதான். ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளே தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பிய எல்லா தமிழர்களும் அதிசயமானவர்கள்தான். ஐக்கிய இலங்கையில் நம்பிக்கை வைத்தத் தமிழர்கள் ஏமாற்றப்படக்கூடாது. பழைய விஷச் சக்கரங்களை மீண்டும் சுற்றவிடக்கூடாது. வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலரின் மனங்களில் இன்றும் கனிந்துகொண்டிருக்கும் தமிழ் ஈழம் என்ற ஆசைக்குத் தூபம் போடக்கூடாது. பழிவாங்கும் எண்ணத்தோடு வன்முறை மீண்டும் ஏற்பட்டால் அதனால் எதிர்வினையாக வரக்கூடிய அடக்குமுறைகளும் பெரும் நாசத்தை ஏற்படுத்திவிடும்.

இந்திய- இலங்கை உடன்பாடு

புதிய அரசியல் சட்டத்தை இயற்ற இலங்கை முற்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் உள்ள பலவீனமான பிரிவுகள் நீக்கப்பட வேண்டும். 1987-ல் ஏற்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டைப் பலரும் பல கோணங்களில் கடுமையாக எதிர்த்திருந்தாலும் அதன் பரிந்துரைகள் நீண்ட கால நோக்கில் பயன் தருபவை. இந்தியாவைவிட இலங்கைக்கு நல்லதொரு நண்பன் இருக்க முடியாது.

அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய அமைப்பு, அதிகாரப் பகிர்வு ஆகியவையே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும். சிறுபான்மையினருக்கு உரிமைகளைத் தரும் பெரும்பான்மை எப்போதுமே சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும். மாறாக அவர்களுடைய உரிமைகளை மதித்து, அவர்களுடைய பங்களிப்பை ஏற்று, அவர்களுடைய பெருமையில் பங்கேற்றுச் செயல்படுவதே நாகரிகமான கலாச்சாரமாக இருக்கும்.

மகாத்மா காந்தி சொல்லும்வரை காத்திருக்காமல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முகம்மது அலி ஜின்னாவை பிரதமராக்கியிருந்தால், அம்பேத்கரை குடியரசுத் தலைவராக நியமித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே மாறியிருக்கும். இலங்கையின் அதிபராகவோ பிரதமராகவோ தமிழர் நியமிக்கப்பட்டிருந்தாலும் இனப் போர் நடந்திருக்கும். ஆனாலும் அது சில பாதுகாப்புகளை இலங்கைக்கு அளித்திருக்கும். இந்தியனாக இல்லாமல், பாதி தமிழனாக இல்லாமல் சொல்கிறேன், இலங்கையின் உயர் பதவியில் அமர ஒரு தமிழர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் காலத்துக்காகக் காத்திருக்கிறேன்.

நெல்சன் மண்டேலாவின் முதல் அரசில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏராளமான இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுடைய மக்கள் தொகைக்கும் அதிகமான விகிதத்தில் ஏன் அவர்களுக்குப் பதவி கொடுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப அல்ல, நாட்டின் சுதந்திர விடுதலைக்காக அவர்கள் போரிட்ட விகிதத்துக்கு ஏற்பவே பிரதிநிதித்துவம் அளித்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.

இலங்கைத் தமிழர்களில் பலர் சரளமாக சிங்களம் பேசுகின்றனர், ஆனால் சிங்களர்களால் தமிழைப் பேச முடிவதில்லையே ஏன்? “ஒரே மொழி என்றால் நாடு இரண்டாகிவிடும், இரண்டு மொழிகளும் என்றால் நாடு ஒன்றாகிவிடும்” என்று காலின் டிசில்வா கூறியதை மறந்தது ஏன்? இன உணர்வில்லாமல் நடப்பது என்பது ஒருவழிப்பாதையாக இருக்க முடியாது. சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும் தமிழர்கள், தமிழ் இனவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மலையகத் தமிழர்கள் என்று எல்லோருமே தங்களையும் நாட்டு மக்களில் ஒரு தரப்பினராகக் கருத வேண்டும் என்றே கோரி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைக்கும் முறை நோக்கி இலங்கை செல்கிறது. இப்போதுள்ளதைப்போல பெரிய கட்சிகள் இரண்டு சேர்ந்தால் பெரும்பான்மை கிடைத்துவிடுகிறது. பெரும்பான்மை வலுவைக் கொண்டாடலாம், பெரும்பான்மையினவாதத்தைக் கொண்டாட முடியாது. பெரும்பான்மை என்பது ஜனநாயக மரத்தில் காய்க்கும் பழம் போன்றது. பெரும்பான்மையினவாதம் என்பது பழத்தை அழுகச் செய்யும் பூச்சி போன்றது. பெரும்பான்மையினவாதம் எப்படி ஜனநாயகத்துக்கு முரணாகவும் போகுமோ அப்படியே சிறுபான்மையினவாதமும் குடியரசுத் தன்மை யைக் கெடுத்துவிடக்கூடும். ஒவ்வொரு வடக்கும் நாட்டில் ஒரு தெற்கும் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கான நீதி என்பது அவர்களுடைய எண்ணிக்கைக்கான நீதி அல்ல அவர்களுடைய இருப்புக்கான நீதி என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

அவர்கள் கேட்கும் உரிமை என்பது எண்ணிக்கைகளுக்கான உரிமை அல்ல அடிப்படை மனித உரிமைகளுக்கான உரிமை என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். சிறுபான்மையின மக்கள் யாரும் தங்களுடைய எண்ணிக்கையைப் பார்த்து மருண்டு உரிமைகளைக் கேட்கக்கூடாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்தான் அவர்கள் சிறுபான்மையினர். மற்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் முழுக் குடியுரிமை பெற்ற நாட்டு மக்கள். இந்திய பட்டியல் இனத்தவர், முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர் ஆகிய அனைத்துப் பிரிவினரும் தங்களுடைய முழுத் தன்மையை உணர்ந்து சிறுபான்மை என்ற கூட்டிலிருந்து விடுபட வேண்டும். குடியரசு நாட்டில் இந்த நிலையைப் போக்குவது பெரும் பான்மைச் சமூகத்தின் கடமை மட்டுமல்ல, தவறைத் திருத்திக் கொள்வதற்கான மகிழ்ச்சியான தருணம்.

இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக அரசியல் சட்ட ரீதியாகவும் பிரிவினைவாதத்தின் மூலமும் பிறகு பயங்கரவாதம் மூலமும் முயற்சி செய்து இனி தங்களுடைய பாதையைத் திருத்திக்கொள்ளவே முடியாது என்று கருதினர். அந்த நிலை மாறிவிட்டது. பேச்சு மூலம் மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சீர்திருத்தம் எப்படி வேலைசெய்யப் போகிறது என்று பார்த்துவிட்டு பிறகு தலைநீட்ட பழிவாங்கும் உணர்வு காத்திருக்கிறது. தேசிய ஒருமைபாட்டுக்கான இந்த அரசின் வெற்றியைத்தான் அனைவரும் பார்ப்பதற்குக் காத்திருக்கின்றனர். இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டால் இனி இப்படியொரு வாய்ப்பு நேராது. சேரன்தீவு என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இத் தீவு அப்படி நம்பிக்கையற்ற நிலைக்குப் போவதற்காக ஏற்பட்டதல்ல.

ஒரு தீவுக்கும் கண்டத்துக்கும் என்ன வேறுபாடு? தீவு என்பது சிறிய கண்டம், கண்டம் என்பது பெரிய தீவு. இலங்கையை வெறும் தீவு என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இருவேறு சமூகங்களுக்கு இடையே அரசியல் குழுக்களுக்கு இடையே நம்பிக்கையை வளர்த்துள்ளது. தான் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு என்னை விட நாடு பெரியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்கு இலக்கணமாக பல்லாண்டுகளாகத் திகழ்ந்த இலங்கை இப்போது நம்பிக்கைக்கான தீவாக மாறியிருக்கிறது. இது நம்பிக்கைக்கான கண்டமாக உருவெடுக்கப் போகிறது.

(சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை)

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8161474.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.