Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருதன் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1234556

அடுத்தடுத்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற வித்தியாசமான வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தர ராஜனுடன் இணைந்திருக்கும் படம் என்பதே ‘மிருதன்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. தமிழின் முதல் ஜாம்பி (zombie) வகைப் படம் என்ற அறிவிப்பு, எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. மிகக் கடுமையான உழைப்பில் இந்தப் படத்தைத் உருவாக்கி இருக்கிறது ‘மிருதன்’ படக்குழு என்பதை ட்ரைலரிலேயே உணர முடிந்தது. படத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமா?

ஊட்டியில் ஒரு தொழிற்சாலையின் விஷக் கழிவு கலந்த நீரைக் குடிக்கும் நாய் ஜாம்பியாக உருவெடுக்கிறது. அந்த நாய் ஒரு மனிதனைக் கடிக்க அவர் ஜாம்பியாகிறார். அந்தக் வைரஸால் பாதிக்கபப்ட்டவர்கள் மற்றவர்களையும் கடித்து பரப்பிவிடும் மூர்க்க மிருகத்தன்மையை அடைகிறார்கள். இதனால் ஊரில் ஒவ்வொருவரிடமும் பரவுகிறது ஜாம்பி வைரஸ்.

அதே ஊரில் போக்குவரத்துக் காவலராக இருக்கும் ஜெயம் ரவி எந்த வம்புதும்புக்கும் போகாமல் தன் ஒரே தங்கைக்கு அனைத்துமாக வாழ்ந்துவருபவர். மருத்துவராக இருக்கும் லட்சுமி மேனனை காதலிக்கிறார். ஆனால் லட்சிமிக்கு அவரை ஒரு லஞ்சம் வாங்கும் காவலராக மட்டுமே தெரியும். அதோடு அவருக்கு வேறொருவரோடு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்பதால் ரவி தன் காதலை மறைத்துவிடுகிறார். .

ஜாம்பி பரவல் கட்டுக்கடங்காமல் போகிறது. அதற்கான மருந்து கண்டுபிடிக்க லட்சுமி மேனன் உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவை ஜெயம் ரவி, தன் தங்கையுடன் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லும் சூழல் உருவாகிறது.

ஜாம்பி வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? கோவைக்குத் தப்பிச் சென்றவர்கள் ஜாம்பியிடமிருந்து தப்பித்தார்களா? என்பவை மீதிக் கதையில் சொல்லப்படுகின்றன.

ஆங்கிலப் படங்களில் பார்த்த ஜாம்பி என்ற புதிய விஷயத்தை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர் சக்தி செளந்தர ராஜன். அதோடு, காதல், அண்ணன் – தங்கை-பாசம், நகைச்சுவை வசனங்கள், தீமையை அழிக்க ஒற்றையாளாகக் களமிறங்கு நாயகன் என தமிழ் சினிமா பார்வையாளர்களின் ரசனைக்கேற்ற அம்சங்களைக் கலந்த படமாக ‘மிருதன்’ படத்தை வழங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் இவை மட்டும் ஒரு படத்தைக் கரைசேர்த்துவிடாது. எதைச் சொன்னாலும் சுவாரஸ்யத்துடனும் நம்பகத்தன்மையுடனும் சொல்ல வேண்டும். இவை இரண்டில் ஏதேனும் ஒன்று முன்னப் பின்ன இருந்தால் பரவாயில்லை. இரண்டுமே பெரிய அளவில் கைகூடவில்லை என்பதுதான் ‘மிருதன்’ படத்தின் ஆகப் பெரிய குறை.

ஜாம்பி வைரஸ் தோன்றிப் பரவுவதை விவரிக்கும் தொடக்கக் காட்சிகள் நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. தொடர்ச்சியாக வரும் காட்சிகளில் அண்ணன் தங்கை உறவையும், நாயகனிடம் காதலையும் சொல்ல தேவைக்கதிகமான நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றில் புதுமையாகவோ சுவாரஸ்யமாகவோ எதுவும் இல்லை. நாயகனின் தங்கையாக வரும் பெண் பேசும் வசனங்கள் அவரது வயதுக்கு ஏற்றதாக இல்லை. சற்று அதிக வயதுப் பெண்ணை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது வசனங்களை வேறு மாதிரி எழுதியிருக்கலாம்.

வைரஸின் பரவல் தீவிரமடைந்து அனைவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை வந்தவுடன் மீண்டும் வேகமெடுக்கிறது திரைக்கதை. இடைவெளியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

ஆனால் அதைத் தொடர்ந்து ஜாம்பிகளின் ஒரே மாதிரியான தாக்குதலும் நாயகன் துப்பாக்கியை வைத்து அனைத்து ஜாம்பிகளையும் சுட்டு வீழ்த்துவதும் மட்டுமே மாறி மாறி வந்து அலுப்பூட்டுகின்றன. கடைசி 20 நிமிடங்களில் நிகழும் சின்ன சின்ன எதிர்பாராத திருப்பங்களும், இரண்டாம் பாக்த்துக்கான அறிவிப்புடன் படத்தை முடித்திருக்கும் விதமும் ஓரளவு படத்தைக் காப்பாற்றுகின்றன.

இந்த இடங்களில் செண்டிமெண்ட் மற்றும் காதல் வெளிப்படும் காட்சிகளும் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. ஜாம்பிகளின் பெருங்கூட்டத்தை எதிர்த்து நாயகன் நாயகியைக் காப்பாற்றும் காட்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

திரைக்கதையில் பல லாஜிக் ஓட்டைகள். 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்களும் பரவி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒரு உயிர்க்கொல்லி வைரஸ் ஊர் முழுவதும் பரவுவதை தினத் தந்தி பேப்பரை ஏதேச்சையாகப் பார்ப்பதன் மூலம்தான் தெரிந்துகொள்கிறார் நாயகன்.

ஒரு வைரஸ் பரவுவதால் ஊரில் இருக்கும் ஒவ்வொருவர் உயிருக்கும் ஆபத்து என்றால் ஏற்பட வேண்டிய பதற்றம் பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே தொற்றிக்கொள்கிறது. அவ்வப்போது ஏற்படும் பதற்றத்தையும் அளவுக்கதிகமான நகைச்சுவை வசனங்களை வைத்து மட்டுப்படுத்திவிடுகிறார்கள். அந்த வசனங்கள் பெரும்பாலும் சிரிப்பையும் வரவழைக்கவில்லை என்பது மற்றுமொரு சிக்கல். குறிப்பாக ”என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” வசனத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு எப்போது விமோசனம் கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.

ஒரு உயிர்கொல்லி வைரஸ் பரவலைத் தடுக்க காவல்துறை, ஊடகங்கள் அரசு ஆகியவற்றின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதைப் படம் கண்டுகொள்ளவே இல்லை. ஒரே ஒரு காட்சியில் காவல்துறை உயரதிகாரி ’தலைநகரத்திலிருந்து ஷூட்டிங் ஆர்டர் கிடைத்துவிட்டது’ என்று சொல்வதுடன் காவல்துறை மற்றும் அரசின் பங்கு முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நாயகன்தான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். ஒரு போக்குவரத்துக் காவலரான நாயகனிடம் எப்படி அத்தனை துப்பாக்கிகளும் (ஸ்னைப்பர்கள் உட்பட) தோட்டாக்களும் இருக்கின்றன என்ற கேள்விக்கும் எந்த பதிலும் இல்லை.

படத்தில் ஜாம்பிகள், தண்ணீரைக் கண்டு பயப்படுவார்கள் என்று ஒரு விஷயம் வருகிறது. அப்படி இருக்க அவர்களை தண்ணீரைப் பயன்படுத்தி கட்டுக்குள் வைக்க முயலாமல் வைரஸ் தாக்கிய அனைவரையும் சுட்டு வீழ்த்துவது சற்று நெருடலாக இருக்கிறது.

’தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் வெளிப்பட்ட ஜெயம் ரவியின் அசாத்திய நடிப்புத் திறமைக்கு இந்தப் படத்தின் கடைசி அரை மணி நேரங்களில் மட்டுமே தீனி கிடைத்திருக்கிறது. அந்தக் காட்சிகளை தோளில் சுமந்து ரசிக்க வைக்கும் பணியை சரியாகச் செய்திருக்கிறார் அவர். லட்சுமி மேனன், பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் அவருக்குப் பின்னணி பேசியிருப்பவரின் குரல் பொருத்தமாக இல்லை. ரவியின் தங்கையாக நடித்திருக்கும் அனைகா இறுதிக் காட்சிகளில் மனதைத் தொடும் நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ரவியின் நண்பராக வரும் காளி வெங்கட் ஒரு சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். ஆர்.என்.ஆர். மனோகர் காமெடி கலந்த மாறுபட்ட வேடத்தில் கவனம் ஈர்க்கிறார். ஜாம்பி வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழக்கும் காவலராக நடித்திருக்கும் இளைஞரும், தலைமை மருத்துவராக நடித்திருப்பவரும், நாயகிக்கு நிச்சயிக்கப்பட்டவராக வரும் அமித் பார்க்கவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஸ்ரீமன் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்., இந்தத் திறமையான நடிகரை ஒரே மாதிரியான காமெடிக் காட்சிகளில் தமிழ் சினிமா வீண்டிக்கிறதே என்ற வருந்தாமல் இருக்க முடியவில்லை.

டி.இமானின் இரண்டு பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருப்பதுடன் கதையின் சூழலுக்குப் பொருந்துகின்றன. ஆனால் பின்னணி இசையில் இரைச்சல் அதிகம். எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஊட்டியின் குளுமையை கண்ணுக்குக் கடத்துவதோடு பல ஆயிரம் பேர் இருக்கும் காட்சிகளை சரியாகக் கொண்டுவந்திருப்பதில் அவரது திறமையும் தொழில்நேர்த்தியும் பளிச்சிடுகிறது. படத்தொகுப்பாளர் கே.ஜே.வெங்கட் ரமணன் படத்தொகுப்பில் முதல் பாதியில் சில காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருக்கலாம். சண்டைப் பயிற்சியாளர் கணேஷ் ஒரு சிறப்புப் பாராட்டுக்குரியவர். க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது பங்கு மிக முக்கியமானது.

கடைசி அரைமணி நேரக் காட்சிகளும் அந்தக் காட்சிகளில் வெளிப்படும், ஜெயம் ரவியின் சிறந்த நடிப்பு மற்றும் படக்குழுவின் அபாரமான உழைப்பு ஆகியவற்றால் காப்பாற்றப்படுகிறான் இந்த மிருதன்.

http://www.tamilfilmnews.com/

Rating: 2.3 / 5.0

 

 

திரை விமர்சனம்: மிருதன்

 

 
 
miruthanreview_2745627f.jpg
 

ஊட்டியில் தனது தங்கை அனிகா வுடன் வசிக்கிறார் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் ரவி. டாக்டர் லட்சுமி மேனனை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஊரில் வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறது ஒரு நாய். அது ஒருவரைக் கடிக்க, வெறிநாயைவிட மோசமாக மாறும் அவர் தன் குடும்பத்தினரைக் கடித்துக் குதறுகிறார். அவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி, எதிர்ப்படும் அனைவரையும் கடிக்கின்றனர். கடிபட்ட அனைவரும் மனித மிருகங்களாக மாறுகிறார்கள். மனித மிருகங்கள் வேகமாகப் பெருக, ஊரே பீதியின் பிடியில் சிக்குகிறது.

லட்சுமி மேனனும் அவருடன் பணி யாற்றும் மருத்துவக் குழுவும் தடுப்பு மருந்தை உருவாக்க கோவைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. இவர் களைக் கோவைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கிறார் ஜெயம் ரவி. திரும்பிய பக்கமெல்லாம் மிருக மனிதர்களின் தாக்குதல். ஜெயம் ரவி அவர்களை ஜெயித்தாரா?

தமிழின் முதல் ‘ஸாம்பி’ வகைப் படம் என்று சொல்லப்பட்ட படம் இது. ஆனால் ஸாம்பிக்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. ஸாம்பி என்றால் பிணம்போல உணர்ச்சியற்று நடமாடும் மனிதன் அல்லது மனிதனைப் போல நடமாடும் பிணம். இந்தப் படம் வைரஸ் தாக்குதலால் வெறிகொண்ட மிருகமாக மாறும் மனிதர்களைப் பற்றியது. அதையாவது ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான்.

மருந்து இல்லாத இந்த பயங்கரமான நோய்க்கு ஆளானவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கும் காவல் துறை ஆணையர் அதன் பிறகு தன் காவல் படையினரைக் கூட்டிக்கொண்டு எங்கு போனார் என்று தெரியவில்லை. இத்தனை பெரிய அபாயத்தைக் கையாள அரசு என்ன செய்கிறது என்பதும் தெரியவில்லை. இருப்பதெல்லாம் ஆயிரக்கணக்கில் பெருகும் மிருக மனிதர்கள். அவர்களை எதிர்கொள்ள தனி ஒருவனாக ஜெயம் ரவி.

மிருக மனிதர்களுக்கு தண்ணீர் என்றால் ஒவ்வாமை என்பதை ஆரம் பத்திலேயே காட்டிவிடுகிறார்கள். தண் ணீரைக் கொண்டு அவர்களை முடக்கும் திட்டம் அரசுக்குத் தோன்றாதா என்ன?

மிருக மனிதர்களை எதிர்கொள்வதிலும் த்ரில் எதுவும் இல்லை. அனைவரும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பாய்கிறார்கள். ஜெயம் ரவி ஓயாமல் அவர்களை சுட்டுக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருக்கிறார்.

அரசியல்வாதியை சித்தரித்துள்ள விதம் அரதப் பழசு. தொடக்கத்தில் லட்சுமி மேனனிடம் ஜெயம் ரவி நடந்து கொள்ளும் விதத்துக்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘முன்னாள் காதலி’ என்னும் பாட்டு தேவையில்லாமல் வந்து எரிச்சலூட்டுகிறது. பதின் வயதில் உள்ள தங்கை, அண்ணனுக்குப் பெண் பார்ப்பதற்காக திருமணத் தரகரைக் கூட்டிவரும் அபத்தமும் படத்தில் உண்டு.

தலைமை மருத்துவர் தொடர்பான சஸ்பென்ஸ், மரண பீதிக்கு நடுவே இழையோடும் காதல் கதை, அண்ணன் தங்கை பாசம் ஆகியவைதான் சிறிது ஆறுதலைத் தருகின்றன.

மிருக மனிதர்களின் ஒப்பனைகள், கிராஃபிக்ஸ் ஆகியவற்றின் தரம் மிகவும் சுமார். டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இ(ம்)சையைத் தாங்க முடியவில்லை. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, படத் தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.

ஜெயம் ரவி நன்றாகவே நடித் திருக்கிறார். குறிப்பாக கடைசிக் காட்சி களில் நன்கு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார். சவால் இல்லாத வேடத்தில் லட்சுமி மேனன் கவனிக்க வைக்கிறார். குழந்தை அனிகாவின் நடிப்பு மனதில் நிற்கிறது.

வித்தியாசமான கதையைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன், ஒரே மாதிரியான காட்சிகளை வைத்து ஒப்பேற்றி வெறுப்பேற்றுகிறார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/article8264074.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.