Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதியை காப்பாற்றுமா பரணகம ஆணைக்குழு?

Featured Replies

வாக்குறுதியை காப்பாற்றுமா பரணகம ஆணைக்குழு?
 
 
 

article_1456120650-sanjay.jpgஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மேலும் மூன்று மாத காலம் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 15ஆம் திகதியுடன் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், ஜேர்மனிக்கான பயணத்தை அதேநாள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்கும், ஆவணங்களில் கையெழுத்திட்டு விட்டுச் சென்றிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

வழக்கத்துக்கு மாறாக, இம்முறை இந்த ஆணைக்குழுவுக்கு மூன்று மாத கால பதவி நீடிப்புக்கே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த

ராஜபக்ஷவினால், 2013ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளுயிர் கொடுக்கும், வகையில் கையெழுத்திடுவது, ஜனாபதியின் கடமை போலாகியிருந்தது.

முன்னர், ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வர்த்தமானி அறிவிப்பை 1987ஆம் இந்திய-இலங்கை உடன்பாட்டுக்கு அமைய வெளியிட்டார்.

அப்போதிருந்து, ஆண்டுக்கு ஒருமுறை அந்த வர்த்தமானி அறிவிப்பை புதுப்பிப்பது, அவருக்குப் பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகளான, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் வழக்கமாகவே இருந்தது.

எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அந்த வர்த்தமானி அறிவிப்பு வழக்கத்தை இல்லாமல் செய்தது.

அதுபோலத்தான், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சேவை நீடிப்பு உத்தரவில் கையெழுத்திடுவது, மஹிந்த ராஜபக்ஷவில் இருந்து மைத்திரிபால சிறிசேன வரை இருந்து வரும் வழக்கமாகி விட்டது.

ஆனால், இம்முறை மூன்று மாதங்களுக்கு மட்டுமே சேவையை நீடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அதாவது, இந்த ஆணைக்குழுவின் பணிக்கால எல்லை சுருக்கப்பட்டிருக்கிறது.

அதற்காக, இந்த ஆணைக்குழு தனது பணிகளை முடித்துவிட்டது என்று அர்த்தமில்லை.

ஆனாலும், ஆணைக்குழுவின் பணிக்காலத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு எழுந்திருக்கிறது,

இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர், எதனைச் சாதித்திருக்கிறது. இந்த மூன்று மாதங்களுக்குள் எதனைச் சாதிக்கப் போகிறது என்பது தான் முக்கியமான விடயம்.

பரணகம ஆணைக்குழு ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட நோக்கத்துக்கும், அதன் தற்போதைய விசாரணைப் பரப்பு எல்லைக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

ஆரம்பத்தில், இதன் விசாரணைக் கால எல்லைப் பரப்பு 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரைதான் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கட்ட ஈழப்போர்கள் நிகழ்ந்த காலப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.

அதாவது போர், மிகத் தீவிரமான பரிணாமத்தை அடைந்து, முடிவுக் கட்டத்தை எட்டியது வரையான காலத்தை உள்ளடக்கியதாக இருந்தது.

பின்னர், அந்தக் கால எல்லை, 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையாக விரிவாக்கப்பட்டது.

அதுபோலவே, ஆரம்பத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு பின்னர், போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததா, சர்வதேச சட்டமீறல்கள் இடம்பெற்றதா என்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரப்பட்டது.

இவ்வாறாக, ஆணைக்குழு அமைக்கப்பட்டப் பின்னர், அதன் செயற்பரப்பு காலத்துக்கு காலம் பெரிதாக்கப்பட்ட போதிலும், இதன் மூலம் சாத்தியமான விடயங்களாக பெரிதாக எதையும் பட்டியலிட முடியாது.

இருபதாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்ட பரணகம ஆணைக்குழு, அது குறித்து மந்தமான விசாரணைகளைத் தான் மேற்கொண்டது.

அண்மைக்காலத்தில் தான், விசாரணைகளின் வேகம் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் அனைத்தும் இன்னமும் முதற்கட்ட சாட்சியப்பதிவுகள் கூட நடத்தி முடிக்கப்படவில்லை.

அதனைவிட, இந்த விசாரணைக்குழு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்ற போதிலும், காணாமற்போனதாக முறைப்பாடு செய்த ஒருவரையேனும் கண்டுபிடிக்கவில்லை.

காணாமற்போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா, இல்லையா என்பதைக் கூட கூறமுடியாத நிலையில் தான் இருக்கிறது.

அதற்குள் இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைகள், இறுதிப்போர் பற்றிய விடயங்களை மூடிமறைக்கும் அரசாங்கத்துக்கு சாதகமாகவே அமைந்திருந்ததையும் மறுக்கமுடியாது.

பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அந்த அறிக்கைகள் கொண்டிருந்ததும், ஆணைக்குழுவின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியது.

ஒரு சில விடயங்களில் உண்மையான கருத்துக்களை பரணகம வெளிப்படுத்தியிருந்தாலும், இது பாதிக்கப்பட்ட பிரதான தரப்பினரான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கத் தவறிவிட்டது இதன் பெருங்குறைபாடாக காணப்படுகிறது.

இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டப் பின்னர், நடத்தப்பட்ட விசாரணைகளில், காணாமற்போன ஒருவரது நிலை கூட என்னவாயிற்று என்று கண்டறியப்படவில்லை.

உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்பதையும் கூடக் கண்டறியவில்லை.

ஆனாலும், காணாமற்போனவர்களில் ஒரு சிலர் வெளிநாடுகளில் உள்ளனர் என்ற விடயத்தை மட்டும் தூக்கிப்பிடித்துக் கருத்து வெளியிட்டு வருகிறது.

இது, முன்னைய அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையிலானதும் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள், அதிகாரிகளின் நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போகும் வகையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பரணகம ஆணைக்குழு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டமைக்கு அதன் விசாரணைகளில் ஆரம்பத்தில் இருந்தே காட்டப்பட்டு வந்த அக்கறையீனமும் பிரதான விடயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் வகையில் கருத்துக்களைப் பெற்றதும் முக்கிய காரணம்.

பிள்ளைகளை, கணவனை காணவில்லை என்று போய் கதறியழுத உறவினர்களிடம், இறப்புச்சான்றிதழ் பெறுமாறு கட்டாயப்படுத்தியதும் நட்டஈடு பெறுமாறு கோரியதும் மட்டுமன்றி, ஆடு, மாடு வளர்க்க முடியுமா, கோழிக்குஞ்சு வளர்க்க முடியுமா என்று கேள்விகளை எழுப்பி சினமூட்டியும் இருந்தது.

இதுபோன்ற நிகழ்வுகள், ஆணைக்குழு தம்மை முட்டாள்களாக்கப் பார்க்கிறது என்ற கருத்தை ஆரம்பத்திலேயே தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி விட்டது.

அதைவிட, காணாமற்போனவரைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, தேவையற்ற கேள்விகளின் ஊடாக நேரத்தையும் விரயமாக்கியது.

இது பரணகம ஆணைக்குழுவின் முக்கியமான தோல்விகளில் ஒன்றாக குறிப்பிடலாம்.

எந்தவொரு விசாரணைக் கட்டமைப்பும் அந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்தத் தவறினால், அது தோல்வியில் முடிந்ததாகவே கருதப்படும்.

இப்போது, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை, நம்பகமானதாக, சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சர்வதேச சமூகம், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும், அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. பரணகம ஆணைக்குழுவுக்கும் அது பொருத்தமானது.

ஆனால், விசாரணைகளில் மாத்திரமன்றி, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெறும் விடயத்திலும் இந்த ஆணைக்குழு தோல்வியையே சந்தித்திருந்தது.

இதனால் தான், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூஸைன், கடந்த செப்டெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில், இந்த ஆணைக்குழுவைக் கலைத்து விட்டு, இதன் மூலம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை பொருத்தமான அமைப்பு ஒன்றிடம் கையளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்தப் பரிந்துரையை அரசாங்கம் இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே, மீண்டும் அதன் பணிக்காலம் நீடிக்கப்பட்டமை எடுத்துக் காட்டியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூஸைன், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சூழ்நிலையில், இந்த ஆணைக்குழுவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கவில்லை.

இது கூட, ஆணைக்குழுவுக்கு கடைசி நேர சேவைநீடிப்பு அறிவிப்பு வெளியிடக் காரணமாகியிருக்கலாம்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளையும் மீறி, அரசாங்கம் இந்த ஆணைக்குழுவுக்கு உயிர் கொடுத்திருப்பதற்கு என்ன காரணம்?

அண்மையில், இந்த ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். 'தமக்கு குறுகியகால சேவை நீடிப்பு வழங்கினால், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவோம்' என்று அவர் கூறியிருந்தார்.

அதாவது, காணாமற்போனவர்களை கண்டுபிடிக்க முடியாவிடினும், அவர்களுக்கு என்ன நடந்தது, எங்கிருக்கின்றனர் என்று கூற முடியவிடினும், யாரால் காணாமற்போகச் செய்யப்பட்டனர், கடைசியாக அவர்கள் எங்கிருந்தனர் என்ற விபரங்களையாவது வெளியிட முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதனைச் செய்வதற்குத் தான், இந்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது போலத்தெரிகிறது.

எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதியில் ஆணைக்குழு தமது இலக்கை எட்டப்போவதில்லை. தமக்கு வழங்கப்பட்ட ஆணையை முழுமைப்படுத்தப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/166631/%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-#sthash.HfrIrIRH.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.