Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட மகனை கடற்படை சீருடையுடன் கண்டனர்.

Featured Replies

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட மகனை கடற்படை சீருடையுடன் கண்டனர்.

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட மகனை கடற்படை சீருடையுடன் கண்டனர்.
இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எனது மகன் நயினாதீவில் கடற்படை சீருடையுடன் நின்றார் என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் மக்ஸ்வெல் பரணகம தலைமயில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
 
குறித்த அமர்வில் கோப்பாய் , கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 232 பேர் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டு இருந்தனர்.
 
அந்த அமர்வில் காணாமல் போன தனது மகன் குறித்து சாட்சியம் அளிகையிலையே அவ்வாறு குறிப்பிட்டார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
எனது மகனான அச்சுதன் வைகுந்தன் (வயது 22) நீர்வேலி வடக்கில் உள்ள எமது வீட்டில் இருந்த வேளை 2006ம் ஆண்டு 10ம்  மாதம் 18ம் திகதி வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நெருக்கி மகனை கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர்.
 
அதன் பின்னர் அச்செழு மற்றும் ஊரெழு இராணுவ முகாமில் மகனை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் மகனை பற்றிய தகவல் எதுவும் இல்லை.
 
மகன் கடத்தப்பட்டு ஆறு மாத காலம் கடந்த நிலையில் நயினாதீவு ஆலயத்திற்கு சென்ற எமது உறவினர்கள் மகனை கடற்படை சீருடையுடன் நயினாதீவில் கண்டு உள்ளனர். 
 
அதன் பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. கடந்த 2013ம் ஆண்டு இறுதி கால பகுதியில் எமக்கு ஒரு கடிதம் வந்தது மகனை வவுனியா யோசப் முகாமில் தடுத்து  வைத்து இருப்பதாகவும் அவரை மீட்க ஒரு இலட்ச ரூபாய் பணம் கொடுக்கவும் என.அதன் பிறகு கைதடியில் உள்ள ஒருவர் வந்து என்னிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த பணத்தை இராணுவத்தினரிடம் வழங்கினால் முகாமில் இருந்து அதிகாலை மகனை விடுதலை செய்வார்கள் என கூறி பணத்தினை வாங்கி சென்றார்.
 
அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. பணத்தை பெற்றவரின் வீட்டினை அறிந்து அங்கு சென்று விசாரித்தால் பணம் வாங்கியவரின் மனைவி பிள்ளைகளே இருந்தனர். அவர்கள் கூறினார்கள் அவர் நீண்ட நாள வீட்டுக்கு வரவில்லை என
 
அதன் பிறகு மகனை பற்றியோ பணத்தை பெற்றவர் பற்றியோ எந்தவிதமான தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
கடத்தப்பட்ட மகன் இராணுவ சீருடையுடன் தலையாட்டியாக கண்டனர். - தந்தை சாட்சியம்.
 
கடத்தப்பட்ட என் மகனை இராணுவ சீருடையுடன் தலையாட்டியாக கண்டேன் என தந்தை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வின் போது சாட்சியம் அளித்துள்ளார்.
 
 
மேலும் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
சிறுப்பிட்டியை சேர்ந்த செந்தில்நாதன் கஜேந்திரன் எனும் எனது மகன் திராட்சை தோட்டம் வைத்து திராட்சை பழங்களை விற்கும் தொழில் செய்து வந்தார். 
 
கடந்த 2006ம் ஆண்டு 11ம் மாதம் 29ம் திகதி அவ்வாறு திராட்சை பழங்களை விற்றுவிட்டு வீட்டுக்கு வந்த வேளை திடீர் என வீட்டுக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கியால் எனது மகனை தாக்கி கீழே வீழ்த்தி பின் புறமாக மகனின் கையை கட்டி முகத்திற்கு கறுத்த துணியால் கட்டி இழுத்து சென்றனர்.
 
அந்த கும்பலில் ஒருவர் இராணுவ சீருடையுடனும் மற்றையவர்கள் சிவில் உடையுடனும் வந்து இருந்தார்கள். வீட்டுக்கு வெளியே பெருமளவான இராணுவத்தினர் நின்று இருந்தார்கள்.
 
மகனை இழுத்து செல்லும் போது எம்மை நோக்கி சத்தம் போட்டால் மகனை சுட்டு விடுவோம் என கூறியதனால் நாம் சத்தம் போடாமல் இருந்தோம்.
 
அதன் பின்னர் மகனை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மகன் காணாமல் போய் ஓரிரு மாதங்களின் பின்னர். அயல் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைப்பு செய்து அக்கிராமத்தை சேர்ந்தவர்களை மைதானம் ஒன்றிற்கு அழைத்து சென்று இருந்தனர். அவ்வேளை அங்கு எனது மகனுக்கு இராணுவ சீருடை அணிந்து தலையாட்டியாக கொண்டு வந்து இருந்தனர். 
 
அன்றைய தினத்திற்கு பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
இராணுவத்தினரிடம் கையளித்த மகனையும் மகளையும் காணவில்லை. தாய் சாட்சியம்.
 
ஓமந்தையில் இராணுவத்திடம் கையளித்த மகனையும் மகளையும் காணவில்லை என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
ஓமந்தை பகுதியால் நாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வேளை எனது மகனான புவனேந்திரன் மதன்ராஜ் , மற்றும் மகளான புவனேந்திரன் நிஷாந்தினி ஆகிய இருவரையும் இராணுவத்தினர் பிடித்து சென்று அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றி சென்றனர்.
 
 
எனது பிள்ளைகள் புலிகள் இல்லை அவர்களை விடுமாறு கூறிய போது விசாரனைக்காக தான் அழைத்து செல்கின்றோம். விசாரணை முடிய விடுதலை செய்வோம் என கூறி தான் அழைத்து சென்றார்கள் அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
 
மேஜர் செங்கதிருடன் சென்ற மகனை காணவில்லை. - தாய் சாட்சியம்.
 
விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த மேஜர் செங்கதிர் உடன் சென்ற தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
கடந்த 1990ம் ஆண்டு பாடசாலைக்கு சென்ற எனது மகனான சரவணபவன் ரகுநாதன் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து  கொண்டதாக புலிகளால் கூறப்பட்டது.
 
அதன் பின்னர் 1991ம் ஆண்டு மட்டுவில் பகுதியில் உள்ள விடுதலை புலிகளின் முகாமில் மேஜர் செங்கதிர் என்பவரின் மெய் பாதுகாவலராக இருந்தார்.
 
1991ம் ஆண்டு முதலாம் மாதம் 10ம் திகதி மேஜர் செங்கதிர் உடன் வவுனியாவுக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளார். அவர்கள் இருவரும் காணாமல் போன சில நாட்களில் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டு வந்து எனது மகனை தேடினார்கள். அவர்களிடம் எனது மகன் இல்லை என கூறினேன்.
 
அதன் பின்னர் 1991ம் ஆண்டு 2ம் மாதம் 25ம் திகதி மேஜர் செங்கதிரும் எனது மகனும் வீரச்சாவு என ஈழநாதம் பத்திரிகையில் மூலம் விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்டது. 
 
மேஜர் செங்கதிருக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் உட்பூசல் இருந்ததாகவும் அதனால்  செங்கதிரும் எனது மகனும் வவுனியா இராணுவ முகாமில் சரணடைந்து தற்போது இராணுவத்தினரின் தலையாடிகளாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேவேளை யாழில் வைக்கப்பட்டு இருந்த மேஜர் செங்கதிரின் உருவ படங்களும் அகற்றப்பட்டன.
 
இந்த ஆணைக்குழுவிடம் நான் கேட்பது 91ம் ஆண்டில் இருந்து 95ம் ஆண்டு வரையிலான கால பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பார்வையிட அல்லது சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள சரணடைந்தவர்களை பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே 
எனது மகன் இன்னமும் உயிரோட ஏதோவொரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
 
வைத்தியசாலையில் இராணுவம் கைது செய்த கணவனை காணவில்லை. - மனைவி சாட்சியம்.
 
 
வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு துறையை சேர்ந்த காந்தி என அழைக்கப்படும், நல்லையா மகேஸ்வரன் என்பவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற பின்னர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
 
தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில், 
 
எனது கணவர் 2009ம் ஆண்டு 5ம் மாதம் 16ம் திகதி காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வேளை அங்கு இராணுவத்தினருடன்  புலிகள் அமைப்பின் புலனாய்வு துறையை சேர்ந்த ஒருவர் எனது கணவரும் புலனாய்வு துறையை சேர்ந்தவர் என அடையாளம் காட்டினார். 
 
அதனையடுத்து எனது கணவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றனர். அதன் பின்னர் கணவரை பற்றிய எந்த தகவலும் இல்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
 
 
இறுதி யுத்தத்தில் மூன்று மகனும் காணாமல் போய் விட்டனர். - தாய் சாட்சியம்.
 
எனது மூன்று மகனும் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய்விட்டனர் என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் ,
மூத்தமகனான செல்வநாயகம் பத்மசீலன் , இரண்டாவது மகன் செல்வநாயகம் தேவசீலன் மூன்றாவது மகன் குணசீலன் ஆகிய மூன்று மகனுமே காணாமல் போயுள்ளனர்.
 
அச்சுவேலியில் இருந்த நாம் வன்னியில் உள்ள வயலில் விவசாயம் செய்வோம் என்று வன்னியில் சென்று குடியேறி இருந்தோம்.
 
மூத்த மகன் வன்னியில் வேலை செய்தார் இரண்டாவது மகன் யாழ்.மருத்துவ பீட 3ம் வருட மாணவனாக கல்வியை தொடர்ந்து கொண்டு இருந்தார். மூன்றாவது மகன் கா.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்று வந்தார்.
 
மீண்டும் 2006ம் ஆண்டு யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து இரண்டாவது மகன் யாழ்ப்பாணம் வர முடியாது பாதை பூட்டப்பட்டமையால் வன்னியில் எம்முடன் இருந்தார்.
 
பின்னர் யுத்தம் 2009ம் ஆண்டு தீவிரம் அடைந்தது. அக்காலத்தில் முதலாம் மாதம் மூன்றாவது மகன் காணாமல் போனார். பின்னர் ஐந்தாம் மாதம் ஏனைய இரு மகன் மாரும் காணாமல் போயினர். இதுவரை வரை காலமும் காணாமல் போன மூன்று மகன் மார் பற்றிய எந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
 
யுத்தம் முடிந்த பின்னர் கணவர் கடத்தப்பட்டார். - மனைவி சாட்சியம்.
 
யுத்தம் முடிவடைந்த பின்னர் எனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் போனார் என மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
எனது கணவரான சோதிநாதன் கோபிநாத் முச்சக்கர வண்டி சாரதி ஆவார் அவர் கடந்த 2011ம் ஆண்டு 1ம் மாதம் 1ம் திகதி உரும்பிராய் சந்தியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனார்.
 
அதன் பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகள் உடல் நிலை பாதிக்கப்பட்டு அனுராதபுர வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு உள்ளனர் என பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தன.
 
அதில் வைத்திய சாலையில் கோபிநாத் என்பவர் அனுமதிக்க பட்டு உள்ளார் என இருந்தது. அதனை அடுத்து நாம் அனுராதபுர வைத்திய சாலைக்கு சென்ற போது கோபிநாத் என்பவர் சிகிச்சை பெற்றார் என்றும் அவர் தற்போது குணமடைந்து மீளவும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டார் எனவும் கூறினார்கள்.
 
அதனை அடுத்து நாம் அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்று விசாரித்த போது நீங்கள் கூறும் கோபிநாத் இங்கு இல்லை வைத்திய சாலையில் சிக்கிசை பெற்ற கோபிநாத் வேறு என கூறினார்கள், உடனே நாமும் அப்படியாயின் அந்த கோபிநாத்தை காட்டுங்கள் நாங்கள் பார்த்து விட்டு செல்கின்றோம் என கூறினோம். அதற்கு அவர்கள் அவ்வாறு காட்ட முடியாது என கூறி எம்மை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்கள்.
 
அதன் பின்னர் நாம் வந்து விட்டோம் என தனது சாட்சியத்தில் கூறினார்.
 
 
 
கடந்த ஆண்டு மேசன் வேலைக்கு சென்ற மகனை காணவில்லை. - தாய் சாட்சியம்.
 
கடந்த ஆண்டு மேசன் வேலைக்கு சென்ற தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
உரும்பிராயை சேர்ந்த எனது மகனான தம்பையா சந்திரகுமார் கடந்த 2015ம்  ஆண்டு ஆறாம் மாதம் சாவகச்சேரி பிரதேசத்திற்கு மேசன் வேலை செய்வதற்காக சென்றவர் காணாமல் போயுள்ளார் என சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
சகோதர்கள் இருவரை காணவில்லை. - சகோதரன் சாட்சி.
 
தனது இரு சகோதர்களை காணவில்லை என சகோதர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
அவர் மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் ,
 
எனது சகோதரனான சுகுணகுமார் இந்திய இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த கால பகுதியில் இலங்கை போலிஸ் தொண்டர் படையில் இணைந்து இருந்தார்.
 
யாழ்.கோட்டையில் கடமையாற்றி வந்தார். அந்நிலையில் மானிப்பாயில் உள்ள எமது வீட்டுக்கு கடமை முடிந்து வரும் வேளை 1990ம்  ஆண்டு மார்ச் மாதம் காணமல் போயுள்ளார்.
 
மற்றுமொரு சகோதரனான சேரன்குமார் என்பவர் வவுனியாவில் வெல்டிங் வேலை செய்து வந்தார் அத்துடன் "சீட்டு" பிடித்தும் வந்தவர். சீட்டின் மூலம் 2 ரூபாய் மோசடி செய்யப்பட்டு நஷ்டத்தை எதிர்கொண்டார்.
 
அது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தன. அந்நிலையில் 2012,ம் ஆண்டு 10ம் மாதம் 27ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
 
அவர் காணாமல் போகும் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தார்கள் என மூவரை வவுனியா பொலிசார் கைது விசாரணை செய்து இருந்தார்கள். பின்னர் அந்த விசாரணை தொடர்பில் பொலிசார் எமதுக்கு எதுவும் தெரியப்படுத்த வில்லை.
 
தற்போது வவுனியா பொலிசார் கூறுகின்றார்கள் எனது சகோதரன் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி சென்று விட்டதாக ஆனால் அதனை நாம் நம்ப மாட்டோம் ஏனெனில் அவர் அவுஸ்ரேலியா சென்று இருந்தால் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி இருப்பார். இதுவரை அவர் தொடர்பிலான அந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
 
காணமல் போனோர் இராணுவத்தினரிடம். மனித உரிமை ஆணைக்குழு கடிதம்.
 
காணமால் போன இருவர் இராணுவத்தினரால் தடுத்து வைத்து உள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்து உள்ளது. அதன் பின்னர் அவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை என இருவர் சாட்சியம் அளித்துள்ளனர்.
 
மேலும் சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
யாழ்.வர்த்தக சங்கத்தில் கடமையாற்றி வந்த  செல்லத்துரை நந்தகுமார் மற்றும் பூதத்தம்பி ரதிஸ்குமார் ஆகிய இருவரும் 1996ம் ஆண்டு 8ம் மாதம் 19ம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளை மாம்பழம் சந்தியில் உள்ள இராணுவ முகாமில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
பின்னர் தகவல் இல்லை. அவர்கள் இருவரும் கைது செய்யப்படும் போது பலர் கண்டு இருந்தனர். அக்கால பகுதியில் அவர்கள் காணாமல் போனமை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியவில்லை.
 
இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்து இருந்தோம். அதற்கு அவர்கள் பதில் கடிதம் போட்டு இருந்தார்கள் அவர்கள் இருவரையும் இராணுவத்தினர் விசாரனைக்காக தடுத்து வைத்து இருப்பதாக அதன் பின்னர் இருவர் பற்றிய எந்த தகவலும் இல்லை என காணமல் போன நந்தகுமார் என்பவரின் சகோதரி விஜிதாவும் , ரதிஸ்குமாரின் தாயான இராஜேஸ்வரியும் சாட்சியம் அளித்துள்ளனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.