Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடமும் வலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடமும் வலமும்

ஆர். அபிலாஷ்

50542477cc105PAINTING%20%2064%20(%20Lord

கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க அர்ஜுனன் வருகிறான். ஏற்கனவே அங்கே துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்து தூங்கி விழுந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனன் செருமுகிறான். துரியோதனன் அதிர்ந்து விழிக்கிறான். அர்ஜுனனை அடையாளம் கண்டதும் அவன் மீண்டும் அசட்டையாய் கண்ணை மூடிக் கொண்டு தலையை முன்னும் பின்னுமாய் அசைத்து தூக்கத்தை தொடர்கிறான். அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே கிருஷ்ணன் தூங்கும் கட்டிலைத் தவிர வேறு அறைகலன்களே இல்லை. கிருஷ்ணனின் கால்மாட்டில் மட்டுமே உட்கார்வதற்கு இடம் உள்ளது. அர்ஜுனன் தன் உடலை ஒடுக்கி ஓரமாய் ஒண்டிக் கொள்கிறான்.

அர்ஜுனனின் இருப்பு துரியோதனனை தூங்க விடாமல் பண்ணுகிறது. அவன் பாதி கண்ணை திறந்து பார்க்கிறான். அறையில் ஒரே ஜன்னல் தான். அது கிருஷ்ணனின் தலைக்கு பின்னே இருக்கிறது. அதில் இருந்து வரும் பொன்னொளி கிருஷ்ணனின் முகத்தில் பட்டு துலங்க செய்கிறது. கிருஷ்ணனின் உடலில் பட்ட வெளிச்சம் கசிந்து அர்ஜுனனையும் துலங்க வைக்கிறது. அர்ஜுனன் வெளிச்சத்திலும் தான் இருட்டிலும் இருப்பதாய் தோன்றிட துணுக்குற்ற துரியோதனன் ஜன்னல் வெளிச்சத்தை மறைக்கும் வண்ணம் சற்று தள்ளி உட்கார்கிறான். இப்போது கிருஷ்ணனின் பாதி முகம் இருட்டாகிறது.

ஏற்ற இறக்கத்துடன் கேட்கும் கிருஷ்ணனின் குறட்டை ஒலி துரியோதனனுக்கு மீண்டும் தூக்கத்தை வரவழைக்கிறது. தூக்க மயக்கத்தை தவிர்க்க என்ன செய்வது என யோசிக்கிறான். அவன் பின்புறத்தில் எதுவோ உறுத்துகிறது. பிருஷ்டத்தை நெளித்து கைவிட்டு எடுத்தால் கிருஷ்ணனின் புல்லாங்குழல் வருகிறது. அதை விசித்திரமாய் பார்க்கிறான். அதன் துளை வழி ஜன்னலுக்கு வெளியே நோட்டம் விடுகிறான். அவனுக்கு போரடிக்கிறது. புல்லாங்குழலின் துளைகளில் ஒவ்வொன்றாய் ஊதிப் பார்க்கிறான். வெறும் காற்று. அவனுக்கு கோபம் வருகிறது. அதெப்படி குழலிசை வராதிருக்க கூடும் என அவன் சில துளைகளை பொத்தி பலவாறு ஊத முயல ஏதோ ஒரு பறவையின் கழுத்தை பற்றி நெரித்தது போல் கொடூரமாய் ஒரு கத்தல் அதிலிருந்து கேட்கிறது. அவன் திடுக்கிடுகிறான். அர்ஜுனன் திடுக்கிட்டு எழுந்து தன் காண்டீபத்தை எடுக்கிறான். துரியோதன் உடனே தயாராக தன் கதாயுதத்தை தூக்குகிறான். இந்த சத்தத்தில் விழித்துக் கொண்ட கிருஷ்ணன் எழுந்து அமர்கிறார். அவர் கண்ணில் முதலில் அர்ஜுனன் படுகிறான்.

“வா அர்ஜுனா”

துரியோதனன் காயம்பட்ட குரலில் “நானும் தான் வந்திருக்கிறேன்”

“ஓ மன்னித்து விடு, நான் அவனைத் தான் முதலில் பார்த்தேன். நீயும் வா”

“வா அர்ஜுனா இங்கே பக்கத்தில் வந்து உட்கார்”

“போரில் உங்கள் ஆசீர்வாதம் வேண்டி வந்திருக்கிறேன்”

“அது உனக்கு எப்போதும் உண்டு”

அர்ஜுனன் அவர் காலில் பணிந்து வணங்குகிறான்.

துரியோதனன், “அப்படீன்னா எனக்கு உங்க சாபம் மட்டும் தானா?”

கிருஷ்ணன், “சேச்சே நீயும் எனக்கு பிரியமானவன் துரியோதனா”

“அதெப்பிடி? ஏதாவது ஒரு பக்கம் பேசுங்க”

“நான் எல்லார் பக்கமும் இருக்கிறேன்”

அர்ஜுனன் வணங்கியபடி “இப்போரில் உங்கள் நேரடி ஆதரவும் வேண்டும் என்று அண்ணா கேட்டு வரச் சொன்னார்”

“நிச்சயமாய் அர்ஜுனா. நான் என்றும் தர்மத்தின் பக்கம் தான்”

துரியோதனன், “நானும் போரில் உங்க ஆதரவு கேட்கத் தான் வந்தேன்”

“நான் உன் பக்கமும் தான் துரியோதனா”

அர்ஜுனன், “அவர்களுக்கு சீனாவும், ரஷ்யாவும் தரும் ஆதரவு உள்ளது. எங்களுக்கு யாருமே இல்லை. அதனால் நீங்கள் எங்கள் பக்கம் வர வேண்டும்”

”யோசித்தால் அதில் நியாயமுள்ளதாய் தோன்றுகிறது”

துரியோதனன் “அதெப்பிடி சரியாக இருக்க முடியும்? உங்கள் ஒருத்தரின் ஆதரவு பத்து சீனாவுக்கு சமம். நீங்கள் நிற்கிற பக்கம் தானே வெற்றி. அதுதானே உலக வரலாறு”

கிருஷ்ணன் கண்ணை திருமுகிறார்.

துரியோதனன், “மேலும் நான் தானே ஆதரவு கேட்க முதலில் வந்தேன்”

“ஓ அப்படியா நான் கவனிக்கவில்லை. நான் முதலில் அர்ஜுனனைத் தான் பார்த்தேன்”

“அவன் தான் உங்க உறவுக்காரனாயிற்றே. அதனால் அவன் பக்கம் நிற்க தான் உங்களுக்கு விருப்பம். ஆனால் நியாயம் என்று ஒன்று உண்டல்லவா? முதலில் ஆதரவு கேட்க வந்து காத்திருக்கிறவரை தானே ஏற்க வேண்டும்?”

“ஆம் சரி தான் துரியோதனா. ஆனால்…”

அர்ஜுனன் “என்ன சரி தான் என்கிறீர்கள்? நீங்கள் தீமையின் பக்கமா நிற்க போகிறீர்கள்? அதர்மமா உங்கள் தேர்வு?”

“அவன் பக்கமும் நியாயம் உள்ளது என்றேன். நீயாக என் வாயில் இருந்து வார்த்தையை பிடுங்காதே”

“சரி போகட்டும். எங்களுக்கு ஒரு தூசு நிலம்கூட தரமாட்டான் என்றானே. நீங்கள் தானே மத்தியஸ்தம் பேச போனீர்கள்? அதை விட பெரிய அநீதியா இருக்க முடியும்? உங்கள் பேச்சை கேட்காத அகங்காரம் தலைக்கேறின இவனுக்கா உங்க ஆதரவு?”

”அதுவும் சரி தான். துரியோதனா நீ குறைந்தது ஒரு ஐந்து கிராமங்களையாவது கொடுத்திருக்கலாம். எல்லாம் உன்னால் வந்தது”

“என்னாலா? ராஜதந்திரம் அறிந்த நீங்களா சொல்கிறீர்கள்? நாட்டை இவனுக்கு பிரித்தளித்து விட்டு நான் நிம்மதியாய் கண்ணயர முடியுமா? இவன் ஆள் சேர்த்துக் கொண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதம் பண்ண மாட்டான் என என்ன உறுதி? எப்போதும் அந்த ஐந்து கிராமங்கள் ஒரு தீராத தலைவலியாக, ஆறாத புண்ணாக எங்களுக்கு இருக்கும்.”

“எனக்கு புரிகிறது துரியோதனா. ஆனால் இந்த போர் அதை விட பெரிய தலைவலி அல்லவா? ஆயுதங்கள் சேர்க்க வேண்டும். ஏவுகணைகள், போர்விமானங்கள், போர்க்கப்பல்கள் வாங்க வேண்டும். அதற்காய் கண்டவன் காலை பிடிக்க வேண்டும். போர் முடிந்த பின் உனக்கு நிம்மதி இருக்கும் என நினைக்கிறாயா? சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவார்கள். அதற்கு எதிராய் ஆதரவு திரட்ட இது போல் நீ மீண்டும் வந்து என் காலில் விழ வேண்டும். தேவையா? இப்போதே நிம்மதியாய் பிரிந்து போகலாமே? சகோதரர்கள் அல்லவா நீங்கள்?”

“எங்கள் பூர்வீக நிலத்தை இவர்களுக்கு விட்டுக் கொடுக்க சொல்கிறீர்களா? எதற்காய் கொடுக்க வேண்டும்? ஒரு நியாயம் சொல்லுங்கள்?”

“ம்ம்ம் அதுவும் சரி தான்”

அர்ஜுனன், “என்ன சரிதான்? அஸ்தினாபுரம் எங்கள் நாடு. அதை இவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். நியாயம் எங்கள் பக்கம்”

“அதெல்லாம் இல்லை. சூதாட்டத்தில் அதை என்னிடம் இழந்தீர்கள். அதன் பின் உங்களுக்கு அந்நாட்டின் மேல் எந்த உரிமையும் இல்லை. அது மட்டுமல்ல எங்களுக்கு சொந்தமான ஒன்றை இன்னமும் அவர்கள் வெட்கமில்லாமல் வைத்திருக்கிறீர்கள்”

“அதென்ன எனக்குத் தெரியாமல்?”

“அதான் கிருஷ்ணா த்ரௌபதி. அவளையும் சூதில் தோற்றார்களே. விதிப்படி அவள் எங்களுடன் தானே இருக்க வேண்டும்”

“ஓ இப்படி ஒரு நியாயம் மறைந்திருப்பதை நான் யோசிக்கவில்லை. ஆனாலும் மனிதர்களை சூதில் வெல்வது தர்மசாஸ்திரப்படி தவறு தானே துரியோதனா?”

“விதிமுறைகளை முன்கூட்டி பேசித்தானே இருவரும் விளையாடினோம்? பந்தயம் வைக்க இவர்களின் அண்ணன் தானே ஒத்துக் கொண்டான். ஒரு விதிமுறையை அவர்களும் ஒத்துக் கொண்ட பின் தர்மசாஸ்திரம் செல்லுபடியாகாது”

“சரி தான்”

அர்ஜுனன் “என்ன ’சரி’ தான்? இவன் நாக்கில் நரம்பில்லாமல் எங்கள் தர்மபத்தினி அவனுடையள் என்கிறான். நீயும் அதை ஆதரிக்கிறாயா? இப்போதே அவன் தலையை துண்டிக்கிறேன்”, அவன் காண்டிபத்தை தூக்குகிறான்.

கிருஷ்ணன், “பேசித் தோற்கும் போது பேடி தான் ஆயுதம் தூக்குவான். அவன் சொல்லும் நியாயத்தில் உனக்கு மறுப்புள்ளதா?”

”நீங்களும் இப்படி பேசலாமா? சபையில் உள்ள மூத்தோர்கள் தலையிட்டு தானே எங்களை விடுவித்தார்கள்?”

துரியோதனன், “அது செல்லுபடியாகாது. சட்டம் சட்டம் தான் தான்”

“துரியோதனா பேச்சுவார்த்தையில் பெண்கள் இழுப்பது நாணயமல்ல”

“நீங்க எப்பவுமே பொண்ணுங்க பக்கம் தானே. அவளுக்கு சேலை கொடுத்து கூட்டிப் போனது நீங்க தானே. ஆவேசத்தில் பக்கத்தில நின்ன சேடியோட சேலையை வேறு உருவி த்ரௌபதிக்கு கொடுத்தீங்க.”

“அநாகரிகமா பேசாதே. பெண்களை பொதுசபையில் துகிலவிழ்க்க கூடாதுங்கிற அடிப்படை உனக்கு தெரியாதா?”

“வேறென்ன செய்யலாம்?”

“அதை பிறகு பேசுவோம். இப்போ இந்த விசயத்துக்கு வா. பாதி நாட்டை நீ வைத்துக் கொள். மீதியை இவங்க ஆளட்டும்”

“முடியாது. அது எங்கள் நாடு”

”அது ஒரு முக்கியமான வாதம். அர்ஜுனா நீ என்ன சொல்கிறாய்?”

அர்ஜுனன் “எங்கள் அப்பா பிரதமர் என்றால் நாங்கள் தானே இளவரசர்கள்?”

துரியோதனன் “எங்கள் அப்பாவுக்கு வர வேண்டியதை உங்கள் அப்பா ஏமாத்தி புடுங்கி விட்டார். அதனால் நியாயப்படி அது எங்களுக்கு தான்”

கிருஷ்ணன், “ரெண்டு பேர் பக்கமும் நியாயம் இருக்கு. அதனால தான் சமமா பிரித்துக் கொள்ளலாமென சொல்றேன்”

துரியோததன் “கிருஷ்ணா உன் தந்திரம் எனக்கு புரிகிறது. இவர்கள் நாடும் படையும் இல்லாம ஆதரவில்லாமல் திரிந்த போது உன் நாட்டுக்கு கூட்டிப் போய் ராணுவ பயிற்சியும் ஆயுதங்களும் பெட்டி நிறைய கோடிக்கணக்கான நிதியும் கொடுத்து ஒரு தீவிரவாத அமைப்பாக வளர்த்து விட்டாய். அதோடு இவர்களைத் தூண்டி எங்கள் நாட்டில் உள்நாட்டுப் போர் உருவாக செய்தாய். இதெல்லாம் தெரிந்தும் நான் உன்னிடம் மரியாதையாய் பிரியமாய் இருக்கிறேன். இப்போது நாட்டையும் பிரிச்சு அவங்களுக்கு கொடுத்து என் ஆட்சியையும் எதிர்காலத்தை பலஹீனப்படுத்த முயற்சி பண்ணுகிறாய். இது எல்லா வல்லரசுகளும் செய்வதாக இருக்கலாம். ஆனால் இது என்னிடம் இந்த தந்திரமெல்லாம் இனி பலிக்காது”

“கோபத்தில் நிதானம் இழக்கிறாய் துரியோதனா? நான் என்றுமே உனக்கு தீங்கு நினைத்ததில்லை. நீயும் எனக்கு மகனைப் போலத் தான். போர் இல்லாமல் சமாதானமாய் போவது தானே நல்லது? இவர்களை நான் வளர்த்ததினால் தானே நீ இன்று பேச்சுவார்த்தைக்கே தயாரானாய்? அதனால் தானே நீதி நிறைவேற ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது?”

“இவன் பக்கம் நீதி உள்ளதுன்னு நீ எப்பிடி சொல்லலாம் கிருஷ்ணா?”

“நான் அப்படி சொல்லவ்ல்லை. அவன் சொன்னதை உன்னிடம் சொல்கிறேன். சரி அர்ஜுனா நீ என்ன சொல்கிறாய்?”

“போரில் சந்திப்போம். என் மனதில் இன்னும் ரணங்கள் ஆறவில்லை”

“அது வேண்டாம். துரியோதனா நீ என்ன சொல்கிறாய்?”

“போர் வேண்டாமென்றால் ஒன்று செய்வோம். இன்னொரு முறை சூதாடுவோம்”

“வாய்ப்பே இல்லை. இதுக்கு தான் நான் என் அண்ணனை அழைத்து வரவில்லை”

“சரி… ரெண்டு பக்கமும் நியாயம் இருப்பதனால்…”

துரியோதனன் “கிருஷ்ணா நீ பஞ்சாயத்து செய்தது போதும். என் பக்கமா அவன் பக்கமா அதை முடிவு செய். வலது பக்கமா இடது பக்கமா?”

“அதென்ன இடது வலது?”

“நான் உனக்கு வலது பக்கம் நிக்கிறேன். நான் வலதுசாரி. அவன் இடது பக்கம் நிக்கிறான். அவன் இடதுசாரி”

“ஆனா நான் நடுவில இருக்கிறேன்”

“அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். ஒன்று இங்கே இல்லையென்றால் அங்கே”

”நான் ரெண்டு பக்கமும் இல்லை. நான் தர்மத்தின் பக்கம் நிற்கிறேன்”

“தர்மம் என் பக்கம் தான். என் அப்பா தான் நாட்டோட முதல் பிரதமர். நான் தான் சூதாட்டத்தில ஜெயித்தேன். நான் தான் உங்களிடம் ஆதரவு கேட்க முதலில் வந்தேன். இது உங்கள் நேர்மைக்கான சோதனை. நீங்கள் நடுநிலையான ஆளென்றால் என் பக்கம் தான் நிற்பீர்கள்”

“முதலில் வந்தவர் தான் ஆள வேண்டுமென்றால் நீங்கள் ரெண்டு பேருமே உண்மையான அரச வாரிசு இல்லை. சரி நாம் அந்த சர்ச்சைக்குள் போக வேண்டாம்.”

அர்ஜுனன், “இவர்களால் எங்களுக்கு நேர்ந்த அதர்மங்கள் ஏராளம். அதனால் நாங்கள் தான் தர்மத்தின் பக்கம்”

“அதர்மம் இழைக்கப்பட்டதால் யாரும் தர்மத்தின் பிரதிநிதி ஆக முடியாது. அது தப்பான வாதம்”, என்றான் கிருஷ்ணன்.

“நீங்கள் ஏன் இப்போது திடீரென்று அவனை ஆதரிக்கிறீர்கள்”, அர்ஜுனன் கொதிப்புற்றான்.

“வாயை மூடு பார்த்தா. ஒன்று செய்வோம். என் படைகள் எல்லாவற்றையும் துரியோதனனுக்கு கொடுத்து விடுகிறேன். ஏனென்றால் அவன் தானே முதலில் வந்தான். அவன் பக்கமும் நியாயம் இருக்கிறதே. உன் பக்கமும் நியாயம் இருக்கிறது. ரெண்டு பேர் சொல்வதையும் ஏற்கிறேன். அதனால் பார்த்தா நான் உன் கூட வருகிறேன். உன் வண்டியை ஓட்டுறேன்”

அர்ஜுனன், “உங்கள் படைகளை அவனுக்கு கொடுத்து விட்டு உங்களை மட்டும் சாரதியாய் வைத்துக் கொண்டு நான் என்ன பண்ண? எனக்கு ரெண்டும் வேண்டும்”

துரியோதனன், “எனக்கு உங்களோட ஆலோசனையும் வேண்டும். படைகளும் வேண்டும். என் மனைவியின் தனிப்பட்ட ரதத்துக்கும் ஒரு சாரதி தேவைப்படுகிறார். அதனால் உங்களை பாதியாக பிரித்தெல்லாம் கொடுக்க முடியாது”

“நான் கதவை திறந்து வைத்து தூங்கியது தப்பாக போய் விட்டது.”

“நீங்க ஏதாவது ஒண்ணு முடிவு பண்ணுங்க. இடதா வலதா? நன்மையா தீமையா? தர்மமா அதர்மமா?”

“நான் இடது - வலதுக்கு அப்பாற்பட்டவன். நான் நன்மையிலும் இல்லை தீமையிலும் இல்லை”

 “நீங்க தானே தர்மத்தின் பக்கம் நிற்பீர்கள் எனச் சொன்னீங்க?”

“சரி தான் அர்ஜுனா. ஆனால் உங்கள் ரெண்டு பேரிடமும் தர்மம் இல்லை. தர்மம் உங்களோட அன்றாட சச்சரவுகளுக்கு அப்பாலானது. இது குறித்து உனக்கு நான் பெரிய வகுப்பு எடுக்க வேண்டும். அதாவது தர்மம் என்றால்…”

“கிருஷ்ணா உன் உபதேசம் கேட்கவெல்லாம் நேரமில்லை. நீ எங்களோடு வா”, அர்ஜுனன் கிருஷ்ணனின் கையை பிடித்து இழுக்கிறான்.

“கையை விடு”

“கிருஷ்ணா உன் பேச்சே சரியில்லை. நீ ஒரு வலதுசாரி ஆகி விட்டாய். அப்படியே துரியோதனனின் வாதங்கள் தான் உன்னுடையதுமாய் இருக்கிறது. அணி தாவி விட்டாய்”

“அவன் பக்கமுள்ள நியாயங்களை பேசினால் அவன் நானாகி விடுவேனா? என்ன தர்க்கமடா இது?”

துரியோதனன் கிருஷ்ணனின் கையை பிடித்து இழுக்கிறான் “இப்போது பார்த்தாயா? இத்தனை காலமும் சொந்தக்காரன் என்று ஒட்டி உறவாடினாயே. சரியான நேரம் பார்த்து உன்னை வெளியே தள்ளி விட்டான். அவனே சொல்லி விட்டான் நீ பேசுவது எங்கள் பக்கம் நியாயம் தான் என்று. இனிமேல் அவனுடன் என்ன உறவு தேவை இருக்கிறது? எங்களுடன் வா. நாம் சேர்ந்து அகண்ட இந்து ராஷ்டிரத்தை கட்ட்டியெழுப்புவோம்.”

“கையை விடு. நான் யார் கூடேயும் வரல. என் புல்லாங்குழலை கொடு. அந்தரபுரத்துக்கு போறேன்”, கிருஷ்ணன் எழுந்து கொள்கிறான்.

“கிருஷ்ணா எங்களுக்கு துரோகம் பண்ணி விட்டாய். முதுகில் குத்தி விட்டாய்”

“அர்ஜுனா நான் உங்களில் ஒருவர் பக்கம் தான் நிற்க வேண்டும் என நீ எப்படி வற்புறுத்த முடியும்?”

“ரெண்டு திசை தானே உள்ளது. ஒன்று இடது இன்னொன்று வலது”

“யார் சொன்னது? வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு இப்படி ஏதாவது ஒரு பக்கமாய் பார்த்து போகிறேன். விடுங்கள்”

துரியோதனன், “அதெப்பிடி பாதியில் விட்டு போக முடியும்? ஐந்து கிராமங்கள் வேண்டாமா?”

“நீ தான் தர மாட்டாய் என்கிறாயே?”

“உங்களுக்காய் விட்டுத் தருகிறேன்”

அர்ஜுனன் “ஐந்து கிராமங்களை நீயே வைத்துக் கொள் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல”

துரியோதனன் “ஆனால் அதற்க்கு பதிலாக உன் படைகளை எனக்கு கொடுக்க வேண்டும். நீ வேண்டு மென்றால் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து கொள். எனக்கு பிரச்சனையில்லை”

“எனக்கு சாரதி ஒன்றும் வேணாம். நானே என் ரதத்தை ஓட்டுவேன். ஏவுகணை, போர்விமானம், வெடிகுண்டு இதெல்லாம் வேண்டும். வேண்டுமென்றால் காலாட்படைகளை அவன் வைத்துக் கொள்ளட்டும்”

“நிறுத்துங்கடா. ஒன்றும் தர முடியாது. கிளம்புங்க”, அவர் புல்லாங்குழலை சோதித்து பார்க்கிறார்.

அர்ஜுனன், “நீங்கள் முடியாதென்றால் எப்பிடி போர் நடக்கும்? எப்படி தர்மத்தை நிலைநிறுத்துவது? உலக இயக்கமே நின்று போகுமே?”

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் பார்த்தா.”

துரியோதனன், “கிருஷ்ணா நீ பாதியில தப்பித்து ஓட முடியாது. அது உன் நேர்மைக்கு அழகல்ல. இப்போது போர் செய்யவா வேண்டாமா?”

“நான் தான் உனக்கு படைகளை தருகிறேன் என்றபோது மறுத்தாயே. இனி உனக்கு வாய்ப்பு இல்லை”

“கிருஷ்ணா கௌரவர்கள் எங்கள் நாட்டை பறித்தது நியாயம் என்று நீ சொல்றாய். அது மட்டுமல்ல நான் உண்மையான குருவம்ச வாரிசு இல்லையென்றும் சொன்னாய். நீ முழுக்க அவர்கள் பக்கம் சாய்ந்து விட்டாய். நீ அவங்களை மாதிரியே பேச ஆரம்பித்து விட்டாய்”

“பார்த்தா ஒரு சில உண்மைகளை சொன்னால் ஏன் நான் அவர்கள் பக்கம் என்று நீ முடிவு செய்கிறாய்? என் கருத்து தனியானது”

“அப்பிடியென்றால் நீ எங்கள் பக்கம் நிற்க வேண்டும். அதாவது நீதியின் பக்கம்”

“உன் பக்கம் தான் நீதி என்று எப்படி உனக்குத் தெரியும்? இந்த போர் நடந்தால் நீங்கள் பாண்டவர்கள் வெற்றிக்காக மோசமான அநீதிகளை இழைக்க போகிறீர்கள். அப்போது நான் யார் பக்கம் நிற்பது? தான் மட்டும் நீதியின் பக்கம் நிற்பதாய் நினைத்து ஆவேசம் கொள்வது ஒரு மனித கற்பனை பார்த்தா”

துரியோதனன் “இப்போது தான் நீ எங்கள் பக்கம் வந்திருக்கிறாய் கிருஷ்ணா. மகிழ்ச்சி”

“நீ கொக்கரிக்காதே. அவர்கள் போரின் போது செய்யப் போவதை விட படு பயங்கரமான குற்றங்களை நீங்க ஏற்கனவே செய்திருக்கிறாய். நீ தான் அழிவின் துவக்கம். தீமையின் முதல் விதை நீ தான்”

“சரி கிருஷ்ணா நாடகம் போதும். உன் உண்மையான முகத்தை காட்டு. நீ யார் பக்கம்?”

“இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பித் தான் ஆக வேண்டும் என்று இல்லையே. நான் ஒரு மூன்றாவது பக்கத்தில் நிற்க கூடாதா?”

“அதான் என்ன?”

“தர்மத்தின் பக்கம்”

“வெற்று வார்த்தை ஜாலம். நீ ஒரு பச்சோந்தி கிருஷ்ணா. என் பிரம்மாஸ்திரத்தால் உன் தலையை கொய்யப் போகிறேன்.”

“அதற்கு முன் எங்கள் குலத்தை அவமானப்படுத்தியதற்காய் நான் என் கதையால் உன் மண்டையை பிளக்க போகிறேன் கிருஷ்ணா”

“அதற்கு முன் இந்த போரில் நீங்கள் உயிரோடு எஞ்சுவீர்கள் என நினைக்கிறீர்களா? இந்த போர் உங்களை முழுங்கி ஏப்பம் விடும். எதுவும் உங்கள் எதிர்பார்ப்பின் படி நடக்கப் போவதில்லை. உற்றோர், உறவினர், நண்பர்கள், அன்பர்கள் யாரும் எஞ்ச மாட்டார்கள். ஆள தேசமிருக்கும். ஆனால் மக்கள் இருக்க மாட்டார்கள். எல்லாம் என் கண்ணில் தெரிகிறது. ஆனால் உங்கள் ஊனக் கண்ணுக்கு தெரியாது”

அர்ஜுனன் காண்டிபத்தை கீழே போட்டு தலைகுனிகிறான், “என் வெகுளித்தனத்தை மன்னித்து விடு. நீயில்லாத போர் எனக்கு வேண்டாம் கிருஷ்ணா”

“ஹா ஹா அதுவும் முடியாது பார்த்தா. நீ போர் செய்தே ஆக வேண்டும். அது உன் விதி. நீ தப்பிக்க முடியாது”

துரியோதனன் “கிருஷ்ணா போரில் நான் வெல்லப் போகிறேன் என்று தானே சொல்கிறாய்?”

“உங்கள் இருவருக்கும் வெற்றி கிடைக்காது”

“சரி, அவர்களே சண்டையில் இருந்து பின்வாங்கி பேடி ஆகி விட்டால் பிறகு எனக்கு என்ன வேலை? நானும் போர் செய்யவில்லை”

“துரியோதனா தீமை நன்மையுடன் மோதியே ஆகும். நீ தப்பிக்க முடியாது”

“என்னதான் சொல்ல வருகிறாய்? இடது கையில் குண்டும் போடுவேன், வலது கையில் அமைதிக்கான நோபல் பரிசும் வாங்குவேன் என்றால் எப்படி?”

ராதையும் ருக்மிணியும் நுழைகிறார்கள். ராதை கிருஷ்ணனின் கழுத்தை கட்டிக் கொள்கிறாள் “எனக்கும் ருக்மணிக்கும் இடையில் ஒரு வாதம். நீ தான் தீர்த்து வைக்க வேண்டும் கிருஷ்ணா”

“இப்படி ஆரம்பித்தாலே பிரச்சனைதான். மாட்டிக் கொண்டேனா”

“சொல். செய்வாயா?”

“ம்ம்”

“நாம் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை பளிங்கு மாளிகை என் திட்டப்படி தானே எழுந்து வருகிறது?”

“ருக்மணி என்ன சொல்கிறாள்?”

“அவள் வரைந்த சித்திரத்தின் அடிப்படையில் தான் நீ அதை எழுப்பி வருவதாய் சொல்கிறாள்”

“ரெண்டு பேர் கருத்துக்கும் அதில் இடமுள்ளது”

“அது முடியாது. ஏதாவது ஒருவர் கருத்துப்படி தான் அமைய வேண்டும்”

“சரி யோசிக்கிறேன்”

கிருஷ்ணர் பின்னர் குழலை லேசா ஊதி உப் உப் என ஊதி “இதில சத்தம் வர மாட்டேங்குதே?”. பிறகு மெல்ல மெல்ல ஸ்ருதி சேர்த்து இசைக்க தொடங்குகிறார். ராதையும் ருக்மணியும் தமக்குள் சர்ச்சை செய்ய கிருஷ்ணன் “ச்சூ சத்தம் போடாதீங்க. என்றைக்காவது நான் வாசிப்பதை கேட்டு நீங்கள் மயங்கி நின்றிருக்கிறீர்களா? கோகுலத்தில் நான் வாசிப்பது கேட்டு பசுக்கள் தானாய் பால் சுரக்கும். ஆயிரம் கோபிகைகள் மயங்கி நிற்பார்கள். இங்கே நான் வாசிக்க தொடங்கினாலே நீங்கள் கத்த தொடங்குகிறீர்கள். மனிதனுக்கு நிம்மதி வேண்டாமா?”

பெண்களின் கூச்சல் அதிகமாக அர்ஜுனனும் துரியோதனும் வாசல் பக்கமாய் நகர்கிறார்கள். 

“சரி அர்ஜுனா இனி போருக்கு வாய்ப்பில்லை. நாம் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வோம். இந்த அண்ணன் சொல்வதைக் கேள். இப்போதைக்கு இது தான் நம்முன் உள்ள ஒரே வழி””

“அதென்ன ‘தற்காலிக’ போர் நிறுத்தம்?”

“எப்படியும் அது நிலைக்க போவதில்லை. முதலில் நீ மீறி விடுவாய்.”

 

“அதெப்பிடி நீ அப்பிடி சொல்லலாம்”

“வரலாறு அப்படி இருக்கிறதே அர்ஜுனா”

“உன் அக்கிரமங்களின் வரலாறு எவ்வளவு நெடியது என உலகமே அறியும்”

“என் நாட்டின் சிறு குழந்தை கூட உன் மேல் நம்பிக்கை வைக்காது. சரி அப்படியே நீ விதிமுறைப்படி இயங்கினாலும் நீ ஒப்பந்தத்தை மீறியதாய் சொல்லி நான் என் பக்கம் இருந்து முதலில் அடிக்க துவங்கி விடுவேன். ஹா ஹா ஹா எப்படியும் நீ அழிய போகிறாய். ஆனால் இப்போதைக்கு நாம் நண்பர்களாய் இருப்பது தான் உசிதம்”, துரியோதனன் கையை நீட்ட அர்ஜுனன் அதைப் பற்றி குலுக்குகிறான். இருவரும் சர்ச்சித்தவாறு வெளியேறுகிறார்கள்.

அப்போது குழலில் இருந்து ஒரு இனிய நாதம் பிறக்கிறது. கிருஷ்ணன் அதில் திளைத்தபடி வாசிக்கிறான். ஒரு கணம் திடுக்கிட்டு நிறுத்தும் ராதையும் ருக்மணியும் குழலிசையை மீறி கத்துவதை தொடர்கிறார்கள்

(நன்றி: அம்ருதா, பிப்ரவரி 2016)

 

http://thiruttusavi.blogspot.co.uk/2016/03/blog-post_19.html

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கதையில இவர் என்னத்தை சொல்ல வாறார்?...சிங்களவன் தாறதை வாங்கிக் கொண்டு தமிழன் பேசாமல் இருந்திருக்க வேண்டுமாமா????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.