Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸ்மிக் திரை

Featured Replies

காஸ்மிக் திரை

சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

p74a.jpg

‘‘இந்தச் செய்திகளை எல்லாம் மக்கள் நம்புகிறார்களா?’’ ஹாசினி வெறுப்புடன் கேட்டுவிட்டு, இடதுகை மணிக்கட்டில் கட்டியிருந்த ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள்.

‘‘நம்புகிறார்களா எனத் தெரியாது, ஆனால் விரும்புகிறார்கள் ஹாசினி. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்.’’

அங்கு இருந்த ஆறு பேரும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.

‘‘ஹாசினி, சீக்கிரம் முடிவெடு. செய்திப் பிரிவு தயாராகிவிட்டது. மொத்தம் 20 நிமிடங்கள்தான். அதில் நான்கு க்ளிப்பிங்ஸ். நீ பேசப்போவது ஐந்து நிமிடங்கள்கூட இருக்காது.’’ ஹாசினி மீண்டும் ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள். உலக நேரம், பால்வீதி புள்ளியின் நான்காம் பரிமாணம், உடம்பின் டெம்பரேச்சர் வரை காட்டியது. ரிக்கார்டர், ஹாஸ்பிட்டல், ஆயுதம் எல்லாமே அதுதான்.

‘‘எதற்கு மீண்டும் மீண்டும் அதைப் பார்க்கிறாய்?’’

அப்படிப் பழகிவிட்டது. ஹாசினி தலைமுடியைக் கோதிக்கொண்டாள். வேண்டாத விருப்பத்துடன் சம்மதம் தெரிவிக்கும் ஒரு பாவனை அதில் தெரிந்தது. பெண் அடையாளங்களுக்கான இடங்களில் மட்டும் செப்பு உடை அணிந்திருந்தாள். ஆண்களுக்கு அந்த அவசியம் இருக்கவில்லை.

பிடிவாதமாக அவளுடைய செய்தி வாசிப்பைப் பயன்படுத்த நினைப்பதை அறவே வெறுத்தாள். பூமி மட்டத்தில் இருந்து 60 அடி ஆழம். எல்லா அறைகளும் ஒன்றுபோல அமைக்கப்பட்டு அதற்குள்தான் மக்கள் வசிக்கிறார்கள் என்கிறார்கள்.செய்தி வாசிப்பு அறையில் இருந்து புவியை தரிசிக்க ஒரு ஜன்னலும் இல்லை. புவி இப்போது எப்படி இருக்கும் என யாருக்குமே தெரியவில்லை. என்னதான் காஸ்மிக் புயல், நியூட்ரான் குண்டு என அச்சுறுத்தினாலும் புவியைப் பார்க்கும் ஆசை மட்டும் போகவே இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஓஸா விண்வெளித்தளம் வெளியிடும் புவிக்கோளத்தின் படங்கள்தான் மக்களுக்கு ஒரே புவி தரிசனம். கருகிய நெடிதுயர்ந்த கட்டடங்கள், ஆங்காங்கே புகை, மை பூசிவிட்டது போன்ற மலைகள், சகதிகள், ஒரே ஜீவராஜன்களாக கரப்பான்பூச்சிகளின் மொய்ப்பு... இவற்றை வெவ்வேறு வகைகளில் படம் எடுத்து கேலக்ஸி கேலரியில் வெளியிடுவார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகளாவது ஆனபிறகுதான் புவியை மனிதர்கள் நேரடியாகப் பார்க்க முடியும். அதுவரை கதிர்வீச்சு இருக்கும் என உறுதியாகக் கூறிவிட்டார்கள்.

கேலக்ஸி டூரிஸத்திலேயே தடைசெய்யப்பட்ட பகுதி என்ற பட்டியலில் இருந்தது பூமி. நியூக்ளியர் போருக்குப் பின்னர் அது வாழ உகந்ததாக இல்லை என்பது யுனிவர்ஸல் மேப்பிலேயே குறிக்கப்பட்டு விட்டது. டார்க் ஏரியா. மூடிய விண்கலத்தில்தான் பயணம். புவியைப் பார்ப்பதுகூட ஆபத்தானது. கதிர்வீச்சின் அபாயம் அப்படி. எல்லாம் ஆன்ட்ரமீடாகாரர்கள் வந்தபிறகுதான்.

ஹாசினியுடன் அவளுடைய காதலன் ஹாசன் வந்திருந்தான். கணவன்-மனைவி பெயர்கள் இப்படி விகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், சமீபத்தில் அப்படி பெயரை மாற்றியிருந்தனர். ராணி என்றால் ஆண்பால் விகுதி ராணன். ராஜா என வைக்கக் கூடாது. ராஜாவுக்கு ராஜி. கேலக்ஸி குடும்பத்தின் தலைவன், பெயர்களை நீக்குவதில் குறியாக இருந்தான். அவனுக்குப் பெயர் ஒன். அடுத்த லெவல்களில் டு, த்ரி... அவன் அன்ட்ரமீடா வாசி. அவன் என்பதுகூட பழக்கதோஷத்தில்தான். அது! அதுகளின் அத்துமீறலை ஒழிக்க வேண்டும் என்பதில் செய்திப்பிரிவில் தனியே ஒரு சதிப்பிரிவே செயல்பட்டுவருகிறது.

இப்போது ஹாச ஜோடியுடன் மற்றும் நால்வர் வந்திருந்தனர். புவிச் செய்தியாளர்கள்... சதியாளர்களும்கூட. பூமி மீட்புப் போராளிகள். அவர்களுடன் மிக எளிமையான டிரான்ஸ்மீட்டர் கருவி. பல்குச்சி அளவுக்கு. செய்தி பரப்புப் பணிக்காக.

‘‘சரி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்றாள்.

‘‘ஏற்கெனவே 100 முறை சொல்லிவிட்டோம். செய்தி வாசிக்க வேண்டும்’’ ராண் சொன்னான்.

‘‘இதற்கெல்லாம் விடிவே இல்லையா? எவ்வளவு நேரம்?’’

‘‘அதுவும் 10 முறை... சரி. 20 நிமிடங்கள்.’’

‘‘எத்தனை நாளைக்கு?’’

‘‘ஒரு வாரத்துக்கு.’’

ஹாசினி மனதுக்குள் பல்லைக்கடிப்பது வெளியே கேட்டது. செய்தி வாசிப்பது அவளுக்கு மிகவும் சாதாரணமான விஷயம்தான். ஆனால், வாழ வழியற்ற பூமியில், மனிதர்கள் எல்லாம் 60 அடி ஆழத்தில் அபயம் தேடிக் கிடக்கும் அவலத்தில் இருக்கும் மக்களுக்குச் செய்தி வாசிப்பது பெரும்துன்பம். அதுவும் செய்திகள் அனைத்தும் கற்பனை. மக்கள் செய்திகளுக்காக ஏங்கிப்போய் கிடக்கிறார்கள் என்பதற்காக இட்டுக்கட்டிச் சொல்லும் செய்திகள்.

ஹாசினி தன் விரிந்த கூந்தலை நெற்றிக்குப் பின்னே தள்ளிவிட்டு, அது மீண்டும் முகத்தின் மீது வந்து விழுவதற்குள் இன்றைய செய்திச் சுருக்கங்களை ஒருமுறை பார்வையிட்டாள். ஃப்ரிவ்யூ ரன்னரில் செய்திகள் திருப்தியாக இருந்தன.

‘`ரெடி?’’ - கட்டைவிரலை உயர்த்தினாள் ராக்‌ஷி.

தயார் என்பதை ஹாசினி எப்போதும் கண்களைச் சிமிட்டி தெரிவிப்பாள்; தெரிவித்தாள். கேமரா இயங்க ஆரம்பித்ததன் அடையாளமாக, பல்குச்சியின்  கொண்டையில் சிவப்புப் புள்ளி தெரிந்தது. செய்திகளை வாசிக்க ஆரம்பித்தாள் ஹாசினி.

`` `துள்ளுவார் துள்ளட்டும்' முப்பரிமாணத் திரைப்படத்தின் தொடக்க விழா, தமிழகத்தின் திரை நகரமான நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.

விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய பொழுதுபோக்குத் துறை அமைச்சர் ரெமோ, ‘`முப்பரிமாணங்களில் பழைய நடிகர்களை மீண்டும் உருவாக்க முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும், இன்னொரு புறம் அவர்களைக் கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'’ என்றார்.

எம்.ஜி.ஆர்., தனுஷ், புரூஸ் லீ இணைந்து நடிக்கும் அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். முதலில் இதற்கு புருஸ் லீ-யின் ஆறாம் தலைமுறை வாரிசு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனுஷின் கொள்ளுப்பேத்தி ஒருவரும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என வழக்கு தொடுத்தார். இப்போது அந்தப் பிரச்னைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டு, இன்று படப்பிடிப்பு ஆரம்பமானது.

அந்த விழாவில் அமைச்சர் மேலும் பேசியதாவது:

`தனுஷ், இருபதே நிமிடங்களில் ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல் புனையும் திறன் பெற்றவராக இருந்தார் என்பதுதான் உண்மை. அதை வைத்து அவர் சீன மொழியும் பல்கேரிய மொழியும் கலந்த பாடல்களைப் புனைந்ததாகச் சொல்லி இருப்பது சரியில்லை. அவருக்கு சீன, பல்கேரிய மொழிகள் தெரிந்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எம்.ஜி.ஆர்., அநீதிகளைத் தட்டிக்கேட்டார் என்ற தகவலையும், அவர் அண்ணாவின் சீடர் என்பதையும் மட்டும் பிடித்துக் கொண்டு அவரை அண்ணா ஹஜாரேவின் சீடரான கெஜ்ரிவால் என தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதுவும் தவறு' என்று அமைச்சர் ரெமோ கூறினார்.

`மகாத்மா காந்தியை ஸ்டன்ட் காட்சியிலும் புத்தரை நடனக் காட்சியிலும் காட்டுவது உங்கள் தொழில்நுட்பத்தின் சாதனையா?’ என சிலர் கேள்வி எழுப்ப, இயக்குநர் மனுஷ்காந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

`மகாத்மா காந்தி ஸ்டன்ட் காட்சியில் தோன்றினார். ஆனால், சண்டை வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத்தான் அந்தக் காட்சியைப் பயன்படுத்தினோம். புத்தர் நடனம் ஆடியது அவர் சித்தார்த்தனாக இருந்தபோதுதான் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.’ இருவரின் கருத்துக்களுக்கும் சராசரியாக ஒரு லட்சம் கைதட்டல்கள் விழுந்துள்ளன.

அடுத்த செய்திக்கான புதிய புன்னகையுடன் ஹாசினி மீண்டும் திரையில் தோன்றினாள். ‘‘புவி காக்கும் நாளை ஒட்டி இன்று இந்தியாவில் ஒரே நாளில் ஒரு பில்லியன் செயற்கை மரங்கள் நடப்பட்டன. கடந்த இருநூறு ஆண்டுகளாக நிலவிவந்த புவி வெப்பமயப் பிரச்னை, இதனால் முடிவுக்கு வந்தது. ‘உலகின் பல பகுதிகளிலும் இன்று செயற்கை மரங்கள் நட்டு இருப்பது குளோபல் வார்மிங் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்’ என தட்பவெப்பத் துறை அமைச்சர் மைக்கேல் இன்று மரம் நடும் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

`செயற்கை மரங்கள், நாட்டின் பிரதான சாலை ஓரம் முழுவதுமே நடப்பட்டன. உடனடியாக செயற்கை மரங்கள் ஆக்ஸிஜனை வெளியிட ஆரம்பித்தன. உலக ஆக்ஸிஜன் அளவு மூன்று புள்ளிகள் உயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாவரங்கள் இயற்கையான தாவரங்களைவிட வேகமாக ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடியவை. சூரிய சக்தியின் மூலம் சோலார் கன்வெர்ஷன் முறையில் கார்பன்டை ஆக்ஸைடை இவை ஆக்ஸிஜனாக மாற்றும். ஸ்டார்ச் முறையைவிட வேகமாக இது நடப்பதால் இன்னும் சில தினங்களில் உலக தட்பவெப்பம் சீராகும் எனத் தெரிகிறது’ என்று அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

‘காற்று வரி செலுத்த நாளையே கடைசி தினம்' என்று அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்தாதவர் களுக்கு நாளை முதல் சுத்திகரிக்கப்பட்ட காற்று நிறுத்தப்படும்’ எனவும் சுகாதாரத் துறை அதிகாரி ராகேஷ் தெரிவித்தார்.

`2147- ம் ஆண்டு இந்தத் திட்டத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்து இதை நாங்கள் கடுமையாக எதிர்த்துவருகிறோம். நாடு சுதந்திரம் அடைந்து 200 ஆண்டுகள் கழித்து நாம் கண்ட பலன் இதுதானா?’ என மக்கள் போராட்டம் நடத்தினர். இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளுக்கு வரி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காற்று வரித் துறை அதிகாரி லியாண்டர், `இந்தப் போராட்டமே வேடிக்கையாக இருக்கிறது. தண்ணீருக்கும் மின்சாரத்துக்கு நிலத்துக்கும் வரி செலுத்தும்போது ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அவையும் இயற்கையாகக் கிடைப்பதுதானே? நிலம் இயற்கையாக அமைந்ததுதான்... வரி செலுத்துகிறோமே. இயற்கையாக இருப்பவற்றுக்கு எதற்கு வரி என்பது சரியான வாதம் அல்ல. சொல்லப்போனால் இயற்கையாகக் கிடைப்பவைக்குத்தான் வரி செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

p74b.jpg

`அடுத்து நாம் காண இருப்பது, செய்தி சிலவரிகளில்...'

(திரையில் அடுத்து வர இருக்கும் செய்திகள் பற்றிய துண்டுக் காட்சிகள் ஓடுகின்றன.)

ஹாலோகிராம் ஆசிரியர்கள்

``எந்த இடத்திலும் என்ன பாடத்தையும் படிக்கும் வசதி. நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் கம்ப்யூட்டரில் ஹாலோகிராம் பட்டனைத் தட்டியதும் ஆசிரியர் தோன்றுவார். கண்டிப்புடன் நடக்கும் ஆசிரியரை கன்ட்ரோல் செய்ய முடியும். ஆசிரியர்களின் செயல்திறன் போதவில்லை என்று மாணவர்கள் போராட்டம்.

பருவகால இயந்திரம்

வீடுகளில் நாம் விரும்பும் பருவகாலத்தை உருவாக்கிக்கொள்ளும் இயந்திரங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு. குளிர்காலம், மழைக்காலம், கோடைக்காலம் எல்லாமே ஒரு நொடியில் உருவாக்க முடியும். இந்த நற்கால இயந்திரம் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.

...இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.’’

கேமராவின் சிவப்பு விளக்கு அணைந்த மறுவிநாடி, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் ஹாசினி. சொன்ன செய்திகள் அத்தனையும் பொய். இது ஒரு பிழைப்பா என்ற அக அறம் அவளைச் சீண்டியது.
காஸ்மிக் புயல்களால் மக்கள் பூமிக்கு அடியில் வாழ நேர்ந்த பின்னர், தொலைக்காட்சி செய்திகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. செய்திகளுக்கு அடிமையாகிவிட்ட மக்களைத் திருப்திப்படுத்து வதற்காக ஸ்பேஸ்ஷிப்களில் வசிக்கும் செய்தியாளர்கள் வாரத்துக்கு ஒருமுறை வந்து இப்படி செய்திகள் யோசிக்க வேண்டும். அதற்காக செய்தித் துறையினருக்கு மாதம் 3,000 உணவு மாத்திரையும், 30 லிட்டர் நீரும் சலுகை சம்பளமாக வழங்கப் படுகிறது.

ஹாசனுக்கு அவளை எப்படித் தேற்றுவது என்றே தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டின் இரக்கச் சொச்சம் அவளிடம் அதிகமாகவே இருந்தது. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தாகிவிட்டது. அவளிடம் இருந்து இரக்கத்தை அப்புறப்படுத்தவே முடியவில்லை. ஓய்வு அறைக்கு வந்ததும் ஆளுக்கோர் உணவு மாத்திரையும், 50 எம்.எல் நீரூம் எடுத்துக் கொண்டனர்.

து பூமியின் பங்கர் அறை. ஸ்பேஸ் ஷிப்பில் இருந்து டிரான்ஸ்மிட் செய்வதில் சில சிக்கல் இருப்பதால் பூமிக்கு வந்து செய்தி வாசிக்கவேண்டிய நிர்பந்தம். இன்னும் சில நாட்களில் இந்தத் தொல்லை இருக்காது. அங்கு இருந்தே ஏமாற்றலாம். ஹாசினி ஏப்பம்விட இருந்த நேரத்தில், பூமியைக் குடைந்து யாரோ உள்ளே வருவது போன்ற விநோத ஓசை கேட்டது. ‘‘நீ கேட்டாயா?’’ என ஹாசனைப் பார்த்துக்கேட்டான் ப்ரியன். ஹாசன் ஆமாம் என தலை அசைத்தான்.

யாரோ எதையோ இடித்துத் தள்ளுவது போன்ற ஓசை. எல்லோரும் உற்றுக் கேட்பதை உணர்ந்து கொண்டதுபோல அதுவே அடங்கிவிட்டது. பிரமையாக இருக்கலாம். அல்லது யாரோ எதையோ உடைத்துக் கொண்டிருந்தால்தான் என்ன? அன்றைக்கான உறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதும் அனைவரும் தனித்தனியாகப் படுக்கைத் தொட்டிகளுக்குள் அடங்கினர். ஹாசன், ஹாசினிக்கு மட்டும் விதிவிலக்கு.

மூன்றாவது நாள் செய்தி வாசிப்புக்குப் பிறகு அறைக்கு வந்தபோது அந்தச் சத்தம் அதிகமாகவே கேட்க ஆரம்பித்தது. அதையும் பிரமை என ஒதுக்கிவிட யாருக்கும் மனசு வரவில்லை. விநோத விலங்காக இருக்குமோ? டிராகன், கொரில்லா படங்களில் பூமிக்கு அடியில் இருந்து எழுந்துவரும் ஜீவராசிகள் நினைவுக்கு வந்தன. சினிமா கண்டுபிடித்த நாளில் இருந்து இதே கதைதான். செல்லுலாய்டில் இருந்து அல்ட்ராவுக்கு மாறியதுதான் புதுசு.

ஹாசினியின் ஆல்ஸ்ட்ரிப், அது ஓர் உயிரினம்தான் என்பதை உறுதிப்படுத்தியது. சிவப்புக் கதிர்வீச்சு தெரிகிறது. உயிரினத்தின் அசைவும் தெரிகிறது. ‘‘ஹாசன் இனி தாமதிக்க வேண்டாம். ஷிப்புக்கு தகவல் தெரிவிக்கலாம். அங்கு உள்ள குண்டூசி மண்டையர்கள் பார்த்துக் கொள்வார்கள்’’ ப்ரியன் பதறினான். ஆன்ட்ரமீடா ஜீவராசிகளுக்கு அவன் அப்படித்தான் பெயரிட்டிருந்தான்.

அறையை நெருங்கி வந்துவிட்டது தெரிந்தாலும், ஹாசினி எதற்காகவோ காத்திருந்தாள். அது விலங்காக இருக்க முடியாது என்பது அவளுடைய திண்ணம். ‘அந்த உயிரினம் கையில் ஒரு பலமான ஆயுதம் வைத்திருக்கிறது. அதைக்கொண்டுதான் இடிக்கிறது. ஆயுதம் பயன்படுத்தும் விலங்கு... மனிதன் ஒன்றுதான். ஒரு மனிதன்தான் நம்மை நெருங்கி வருகிறான்.’

‘‘என்ன ஹாசினி யோசனை?’’

``நம்மை நோக்கி வருவது ஒரு மனிதன். நீங்கள் ஆல்ஸ்ட்ரிப் கட்டுவதை அவமானமாகக் கருதுகிறீர்கள். இதைப் பாருங்கள்... நம்மை நெருங்கிக்கொண்டிருப்பது 23 ஜோடி குரோமசோம் செல் கொண்ட உயிரினம். அதாவது மனிதன்.’’

‘‘என்ன ஹாசினி சொல்கிறாய்? நாம் தங்கியிருக்கும் இடத்துக்கும் மனிதக்கூடத்துக்கும் வெகுதூரம். இங்கே மனிதர்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை!’’

‘‘இந்தப் பக்கம் இருந்துதான் சத்தம் வருகிறது. வாருங்கள் நாமும் இங்கிருந்து இடிப்போம்.’’

‘‘வேண்டாம் ஹாசினி’’ என்ற குரலுக்கு ஆதரவு இல்லை. மற்ற எல்லோருமே சத்தம் வந்த இடத்தை நோக்கி சுவரை இடிக்க ஆரம்பித்தனர். தொம்... தொம்... சுவரின் ஓரிடத்தில் சரிந்தது. சிறிய ஓட்டை... ஓ... இப்போது வெளிப்புறம் இருக்கும் மண் உள்ளே சரிந்தது. ஆஹா... வெளிச்சம்... ஒரு மனிதன் தெரிந்தான்.

அவனுடைய தலை, அந்த ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. உழைத்து, உழைத்து உரமேறிய உடம்பு. கருப்பன். கண்கள் தீர்க்கமாய்ப் பார்த்தன. அவனுடைய உலர்ந்த உதடுகள் அசைந்தன. ‘‘நீங்கள்தான் செய்திப் பிரிவினரா?’’

ஹாசினியை, திரையில் பார்த்திருக்கக் கூடும். இப்போதும் பார்த்தான். அதனால் யாரும் அவன் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை.

‘‘நீங்கள்?’’

‘‘நான் சோழ நாட்டில் இருந்து வருகிறேன். இங்கே என்னை கேலக்ஸியில் காட்டும் கருவி எதுவும் இல்லை அல்லவா? (ஹாசினி ஆமோதித்தாள்) நாங்கள் விரும்பாத செய்திகளை எங்கள் மீது திணிக்கிறீர்களே அதைத் தடுக்கத்தான் வந்தேன். சற்றும் உண்மைக்குப் பொருந்தாத செய்திகள். நீங்கள் உருவாக்குபவற்றுக்குப் பெயர் செய்தி அல்ல.’’ அவன் அவசரமாகப் பேசினான்.  கதிர் வீச்சு, எரிந்துபோன நகரம் என்ற அச்சுறுத்தல்களை மீறி எப்படி வந்தான்?

‘‘நீங்கள் பூமிக்கு அடியில் வசிப்பதாகவும் செய்திகளுக்கு அடிமையாகிப்போய் அதற்காக ஏங்குவதாகவும் சொன்னார்களே?’’

அவன் அந்த ஓட்டையின் வழியே உள்ளே வந்தான். அறையை இளக்காரமாகப் பார்த்தான்.

‘‘உங்களுக்கே தெரியாமல்தான் இந்தத் தவற்றைச் செய்கிறீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். நீங்கள் பூமி மீட்புப் போராளிகள் என்பதும் தெரியும். நாங்கள் விரும்புவதை நீங்களோ, நீங்கள் விரும்புவதை நாங்களோ அறிந்துகொள்ள வழி இல்லாமல் செய்து விட்டார்கள். நீங்கள் எங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது எதுவுமே உண்மை இல்லை.’’

‘‘எங்களைப் பற்றி எப்படித் தெரியும்?, ஏன் அப்படிச் செய்தார்கள்?’’

‘‘தெரியும். போராளிப் பிரிவினர் பலமாக இருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் பூமி போன்ற சில கோள்களில்தான் உயிர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் இயற்கை ஆதாரங்கள் இருக்கின்றன. ஆன்ட்ரமீடா பால்வீதியில் இருக்கும் ஜீவராசிகள் வாழ உகந்த அத்தனை கோள்களுக்கும் பூமியில் இருந்துதான் உணவும் உடைகளும் தயாராகின்றன. பூமியையே அவர்களின் காலனி ஆக்கிவிட்டார்கள். பூமியைச் சுரண்டி பிரபஞ்சத்துக்குப் பங்கிடுகிறார்கள்.’’

‘‘இங்கே காஸ்மிக் புயலும் நியுட்ரான் குண்டும்...’’

‘‘பூமி மீது யாரும் கவனம் செலுத்தாமல் இருப்பதற்காகச் செய்யப்பட்ட கற்பனை. பூமிதான் பிரபஞ்சத்துக்கே ஆதாரம் என்பது தெரிந்துவிட்டால் சுலபமாக இதை யாராவது ஆக்ரமித்துவிட முடியும். அதனால் யுனிவர்ஸை முதலில் பூமியில் இருந்து தனிமைப்படுத்திவிட்டார்கள். பூமியில் வாழும் 700 கோடி பேரும் இப்போது கேலக்ஸி தலைவருக்கு அடிமைகள்... பூமியில் இருப்பவர்களின் நிலைமை இதுதான்’’ அவனுடைய அழுக்கு உடையைக் காட்டினான்.

‘‘உச்.’’

‘‘உங்களைப் போன்ற தொழில்நுட்ப ஜீவன்களை மட்டும் ஸ்பேஸ்ஷிப்புக்குக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். பூமியில் இருப்பவர்களை மேய்க்க. நீங்கள் உயர்மட்ட அடிமைகள்.’’

‘‘காலனி ஆதிக்கத்தை ஒழிப்பது எப்படி?’’ - ஹாசினி.

‘‘நீங்கள் நினைத்தால் பூமியில் மனிதர்கள் இயற்கைச் சூழலில்தான் இருக்கிறார்கள் என்பதை கேலக்ஸிக்கு உணர்த்த முடியும். நீங்கள் செய்தியாளர்கள்...’’

‘‘நீங்கள் உணவு, உடை தயாரிப்பதை நிறுத்தலாமே?’’ ஹாசினி கேட்டாள்.

‘‘நிறுத்தினால் சித்ரவதைக்கு ஆளாவோம். அடங்க மறுத்தால் கொல்லப்படுவோம்.’’

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

``இதற்கு என்ன செய்வது?''

‘‘இங்கு இருந்து தயாரித்து அனுப்பும் உணவுப் பொருட்களில் எரிவசம்பு கலந்து அனுப்புகிறோம். எரிவசம்பு அவர்களுக்கு அலர்ஜி. விரைவில் ஆன்ட்ரமீடாவாசிகளின் தோல்கள் உரிய ஆரம்பித்துவிடும். மனிதர்களை ஒன்றும் செய்யாது. அதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்.’’

‘‘அவர்கள் வேறு இடத்தைத் தேடிப் போக முயற்சி எடுப்பார்கள். நல்ல யோசனை. உணவும் நீரும் நம்மிடம் இருக்கும் வரை அவர்கள்தான் நம்முடைய அடிமைகள்.’’ ராண்டன் கண்கள் பிரகாசித்தன.
சர்வலோக மொழிபெயர்க் கருவியை அணைத்துவிட்டு ஹாசினி கேட்டாள், ‘‘நீங்கள் தமிழில்தான் பேசுகிறீர்களா... சோழ நாடு எனச் சொன்னதால் கேட்கிறேன்?’’

p74c.jpg

‘‘ஆமாம்.’’

ஹாசினிக்கு தமிழைக் கேட்பது பரவசமாக இருந்தது. மின் அலை மாற்றி ஒலிக்கருவியில் மட்டுமே கேட்டு வந்த தமிழ்... யார் எந்த மொழியில் பேசினாலும் கேட்பவர் மொழிக்கு மாற்றித் தரும் கருவி.
‘‘நான் கிளம்புகிறேன். இன்னும் இருந்தால் என் நடவடிக்கையைக் கண்டுபிடித்து விடுவார்கள்.’’ அவன் எந்த ஓட்டை வழியாக வந்தானோ அந்த வழியே வெளியேறினான்.

ஹாசினி அவன் தலை மறைவதற்குள் அவசரமாகக் கேட்டாள், ‘`நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?’’

‘‘உணவு மாத்திரை தயாரிப்புப் பிரிவில் இருக்கிறேன். சோழ நாடு சோறுடைத்து...’’ அவன் திரும்பிப் பார்க்காமலேயே சொல்லிவிட்டு வேகமாக அகன்றான்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.