Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டிய நடனம் இராணுவ ஏற்பாடு!

Featured Replies

யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா?

என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் ஆறு மணிவரை ‘தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தாய்வு நிலை கருத்து பகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நல்லாட்சி அரசை குழப்ப வேண்டாம் எனவும், பொறுமை காக்கும் படியும் எமது அரசியல் தலைமைகளால் தொடர்ச்சியாக எம்மிடம் கூறப்பட்டு வருகின்றது.

நாமும் கடந்த காலங்களில் பொறுமை காத்து வந்தோம். ஆனால் எம்மால் ஆட்சிக்கு வந்த அரசே தற்போது பௌத்த மயமாக்கலையும், இராணுவ மயமாக்கலையும் மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் நாங்கள் பொறுமை காக்க முடியாது. ஏனென்றால், எம்மால் கொண்டு வரப்பட்ட அரசு எமக்கு எதிராகவே செயற்பட ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் எமது மக்களை அன்னச்சின்னத்திற்கு வாக்களிக்க கோரிய எமது கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பேசியதாக எமக்கு தெரியவில்லை.

திருகோணமலை சாம்பல் தீவு, நயினாதீவு, முல்லைத்து உட்பட வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை இராணுவத்தின் துணையுடன் வைத்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு போனால் எமது தேசம் முழுமையாக சிங்கள மயமாக்கப்பட்டு விடும். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றுள்ளது.

வரவேற்பு நிகழ்வில் கண்டிய நடனம் வேண்டும் என கூறி சிங்கள மாணவர்களால் கண்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தட்டிக்கேட்ட தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னரே கலவரம் வெடித்துள்ளது.

தமிழ் மக்களுடைய ஒரே ஒரு அறிவியல் சொத்தாக உள்ள யாழ்.பல்கலைக்கழகத்தில் வழமைக்கு மாறாக கண்டிய நடனத்தை கோரும்,சிங்கள மாணவர்கள் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா?

யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் அரங்கேற்றுவதற்கான உபகரணங்கள் எங்கிருந்து வந்தன? அவற்றை இராணுவமே திட்டமிட்டு வழங்கியிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/111319

  • தொடங்கியவர்

தென்பகுதியில் இருந்து வந்தவர்கள் மாணவர்களா? மாய மான்களா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தை எவரும் ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது.

ஏனெனில் அந்த சம்பவமானது தென்பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களை மீண்டும் தாக்கி அழித்து, அவர்களின் சொத்துக்களை கபளீகரம் செய்து, அங்கிருந்து அவர்களை துரத்துவதற்கான சதித்திட்டமாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள மாணவர்களின் மோதல் சம்பவம் அமைந்துள்ளது என்று அனுமானிப்பதில் தவறவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நடந்த புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் அதிரடியாக கண்டி நடனம் புகுத்தப்பட்டது எனில், இது ஒரு சதித்திட்டம் என்பதை எவரும் மறுக்க முடியாது.மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரலில் கண்டி நடனம் இல்லாதபோதும் அதனை உள் நுழைத்தவர்கள் யார்?கண்டி நடனத்தில் பங்குபற்ற வந்தவர்கள் எங்கிருந்து வந்தனர்?

இவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? இந்த ஏற்பாடுகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உரிய விசாரணை இல்லாமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இயங்குமாக இருந்தால் அதன் விளைவு தமிழ் மாணவர்களுக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டி நடனத்தை அரங்கேற்ற முற்பட்டவர்கள் இனங்காணப்படாதவரை; கண்டி நடனத்தில் பங்கேற்றவர்களை கைது செய்து பொலிஸார் விசாரிக்காதவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்துவது மகாகடினம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

அதேசமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தின் பின்னணியாக அமைந்த கண்டி நடனம் சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒருபோதும் இருக்க முடியாது.

ஆக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அதிகூடிய எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் இருப்பர்.

இச்சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கண்டி நடனத்தை நுழைத்தால் தமிழ் மாணவர்கள் குழப்பம் அடைவர்.

இக்குழப்பத்தை சாட்டாகக் கொண்டு தமிழ் மாணவர்களை தாக்க முடியும் என்பதுடன் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்கினால் அதனை தமக்கு சாதகமாக்கி தென்பகுதியில் ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தலாம் என்பது யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலின் நோக்கம் என்ற உண்மை உணரப்படக்கூடியது.

எது எவ்வாறாயினும் யுத்தம் முடிந்த கையோடு சிங்கள மாணவர்களை பெரும் எண்ணிக்கையோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதித்தமைக்குள் தென்னிலங்கை சூழ்ச்சியுடன் செயற்பட்டது உண்மை என்றால்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான முரண்பாடுகள் தொடரவே செய்யும்.

ஆனால் பல்கலைக்கழகத்தை மீள இயக்குவதற்கு முன்னதாக தென்பகுதியில் இருந்து யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மாணவர்களா? அல்லது மாய மான்களா? என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும்.

http://www.tamilwin.com/education/01/111316

 

  • தொடங்கியவர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல்! சமரசம் அவசியம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மோதல் சம்பவத்தையடுத்து விஞ்ஞானபீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. விஞ்ஞானபீடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

விஞ்ஞானபீட புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் வழக்கத்துக்கு மாறாக கண்டிய நடனத்துடன் மாணவர்களை வரவேற்க சிங்கள மாணவர்கள் முயன்ற போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகள் யாவும் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருவது வழமையாக உள்ளது.

இந்த நிலையில் விஞ்ஞானபீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது அதில் கண்டிய நடன வரவேற்பு மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது.

விஞ்ஞானப்பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் அதிகமானவர்கள் சிங்கள மாணவர்கள் என்பதால் கண்டிய நடன வரவேற்பு வழங்கப்பட வேண்டுமென்று கூறப்பட்ட போதும் தமிழ் மாணவர்களும் மாணவர் ஒன்றியத்தினரும் விரிவுரையாளர்களும் பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய முறையினை மாற்றி கண்டிய நடன வரவேற்பு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் விஞ்ஞானப்பீடத்தின் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாணவர்களை வரவேற்பதற்கு பல்கலைக்கழக பாரம்பரிய முறையின்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோன்று கண்டிய நடன வரவேற்புக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே மாணவர்களுக்கிடையே வாக்குவாதங்கள் எழுந்திருந்தன. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதங்களை கட்டுப்படுத்திய விரிவுரையாளர்கள் பாரம்பரிய முறைப்படியே வரவேற்பு நிகழ்வு நடைபெறும் என்று உறுதியளித்தனர்.

இதன்படி புதுமுக மாணவர்கள் நுழைவாயிலிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டபோது மாணவர்கள் மண்டபத்திற்குள் நுழைய முன்னரே கண்டிய நடன நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டு வாக்குவாதங்கள் இடம்பெற்றன. கண்டிய நடன வரவேற்பு செய்த மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து சிங்கள மாணவர்கள் அங்கு நின்ற ஐந்து தமிழ் மாணவர்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தமிழ் மாணவர்களும் ஒன்றிணைந்து சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து கடும்மோதல் வெடித்துள்ளது.

இருதரப்பு மாணவர்களும் சுமார் ஒருமணிநேரம் வரை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் வரவழைக்கப்பட்ட பின்னரும் சிங்கள மாணவர்கள் பொல்லுகள், தடிகளுடன் பொலிஸாருக்கு முன்பாக நடமாடியதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.

பொலிஸாரின் செயற்பாட்டை அடுத்து மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களிடையே இவ்வாறு மோதல் இடம்பெற்றுள்ளமையானது கவலையளிக்கும் விடயமாகும்.

தற்போது தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்லாட்சி அரசாங்கமானது இதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழ், சிங்கள மாணவர்களிடையே மோதல் வெடித்துள்ளமையானது நல்லிணக்க செயற்பாடுகளில் ஒரு கரும்புள்ளியாகவே அமைந்திருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் அங்கு நிகழ்வுகள் தமிழர், பாரம்பரியப்படியே இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய பாரம்பரியத்தை மாற்றியமைத்து சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையாக அமையாது. ஆண்டாண்டு காலமாக தமிழர் பாரம்பரியத்தின் படியே புதுமுக மாணவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தற்போது மட்டும் கண்டிய நடனத்துடன் மாணவர்களை வரவேற்க சிங்கள மாணவர்கள் முயன்றுள்ளனர். இத்தகைய செயற்பாட்டுக்கான ஆயத்தங்கள் நடைபெற்ற போதே அதனைத் தடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இதனைவிடுத்து பாரம்பரிய முறைப்படியும் கண்டிய நடனத்துடனும் மாணவர்களை வரவேற்பதற்கு அனுமதி வழங்கியது தவறான செயற்பாடாகவே அமைந்துள்ளது. இதனால் தான் தமிழ், சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு மோதல் வெடித்திருக்கின்றது.

கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை உருவாகியிருந்தது. பல வருடங்களாக சிங்கள மாணவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு சிங்கள மாணவர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நிலைமை சுமுகமடைந்திருந்தது. இதனையடுத்தே சிங்கள மாணவர்களை யாழ். பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட சிங்கள மாணவர்கள் அங்கு சென்று கல்வி கற்பதற்கு அஞ்சும் நிலை காணப்பட்டது. ஆனால், படிப்படியாக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதையடுத்து தற்போது அங்கு பெருமளவான சிங்கள மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

மருத்துவ பீடத்தில் சிங்கள மாணவர்களே அதிகமாக கல்வி கற்கும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் எந்த மாணவரும் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் எழுவதும், மோதல்கள் இடம்பெறுவதும் வழமையானதொரு விடயமாகவே காணப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவரிடையே சாதாரணமாக மோதல் ஏற்பட்டால் அது பூதாகரமாக மாறுவது கிடையாது. ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள மோதலானது பாரதூரமான விடயமாகும். ஏனெனில் தமிழ், சிங்கள மாணவர்களிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளமையினால் அது பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய மோதல் நிலை தொடருமானால் யாழ். பல்கலைக்கழகத்தில் இருதரப்பு மாணவர்களும் உரிய வகையில் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும். இருதரப்பு மாணவர்களுக்கிடையேயும் மோதல் நிலை தொடருமானால் அதன் பிரதிபலிப்பு தென்பகுதி பல்கலைக்கழகங்களிலும் உருவாகும். இதனால் இருதரப்பு மாணவர்களிடையே தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்படலாம்.

எனவே, யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்த மாணவர்கள் தண்டிக்கப்படவேண்டும். தவறிழைத்தவர்கள் சிங்கள மாணவர்களாக இருந்தால் என்ன தமிழ் மாணவர்களாக இருந்தால் என்ன உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமானதாகும்.

தற்போதைய நிலையில் தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணவேண்டியது இன்றியமையாததாகும்.

இதற்கான முயற்சிகளை புதிய அரசாங்கமும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தம்மாலான நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான அவசியம் உணர்த்தப்படவேண்டும்.

பல்கலைக்கழகங்களிலிருந்து போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கான வரலாறுகளை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

எனவே பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ், சிங்கள மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவ வேண்டியது அவசியமானதாகும்.

இதனை உணர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை விலக்கி தீர்வைக் காண பல்கலைக்கழக நிர்வாகம் உரிய வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இருதரப்பு மாணவர்களுக்கிடையேயும் சமரசத்தை ஏற்படுத்தி அவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://www.tamilwin.com/crime/01/111334

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.