Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"எம்பி அப்பாவுக்கு " 93

Featured Replies

"எம்பி அப்பாவுக்கு " 93

 
"எம்பி அப்பாவுக்கு " 93 - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக எஸ் எம் வரதராஜன் நியூசீலாந்தில் இருந்து:-


" ஆனந்த நடமிட வாரும் !
நமதையன் சிவாவென்று  வையகம் போற்றவே !
 ஆனந்த நடமிடவாரும் !"
 
வாய்ப்பறை போட்டெமை  ஏய்த்து  நின்றோரும் ,
 வாங்கிக் குடிக்குமட்டும் சார்ந்து நின்றோரும்
பேய்த்தனமாய்ப் பழி பேசியபேரும்
 பின்கதவால் செல்லும் பேர்களும் நாண
 ஆனந்த நடமிட வாரும் ..
நமதையன் சிவாவென்று  வையகம் போற்றவே !. "
 
1970 பொதுத்தேர்தல்  பிரசாரத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தையில்  இடம்பெற்ற தேர்தல் பொதுக்  கூட்டத்தில் அமரர் சிவசிதம்பரம் அவர்களுக்கு நான் பாடிய பாடலின் தொடக்க வரிகள் அவை.
 
"ஆனந்த நடமிடும் பாதன் " என்ற கேதார கௌளை ராகக் கீர்த்தனத்தை  மாற்றி  நாடகக் கவிமணி கரவைக்  கிருஷ்ணாழ்வார் எழுதித்தந்து எனது தாயார்  எனக்குப் பயிற்றுவித்த   பாடல் அது.


மேடையில் வேட்பாளர் அமரர் சிவசிதம்பரத்துடன் தலைவர் ஜி ஜி பொன்னம்பலம் , வீ ஆனந்த சங்கரி , சி அருளம்பலம் .அமர்ந்திருந்த நினைவு இன்றும் உள்ளது.  

அந்த நாள் தான் எனக்கும் தலைவர் சிவசிதம்பரத்திற்குமிடையில் பிற்காலத்தில் நான் ஒரு ஊடகவியலாளனாக இருந்த போதிலும் நம்பிக்கையும் நெருக்கமுமான நட்புக்கு   காரணமாயிற்று எனலாம். செய்தி எதையும் i கொழும்புப் பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டுமாயினும் அவரது உறவினரும் உதவியாளருமான சிதம்பரநாதனை அனுப்பி என்னை வரச்ச்சொல்லி அழைப்பு விடுத்து ,தாம் சொல்லக் சொல்ல என்னை எழுதச்  சொல்லி  "வீரகேசரிக்கும் கொடும்"  என்று சொல்லி முடிப்பார்.


நான் ஈழநாட்டிற்கும் ,தினபதிக்கும் நிருபராக பணியாற்றினேன். அவர் தருவதை பின்னர் வீரகேசரி வடமராட்சி நிருபர் தில்லைநாதனிடமும்  தினகரன் நிருபர் திருச்செல்வத்திடமும் சேர்ப்பிப்பேன்.


தலைவர்  சிவசிதம்பரத்தை சந்திக்கச் செல்லும்போது அயல் சிறுவர்கள் அவர் வீட்டில் வந்து "எம்பி அப்பா " என்று  அன்புடன் அழைப்பது எனது சந்திப்பின் "சுற்றுப்புற  " ஒலியாக இன்றும் நினைவில் நிற்கிறது.

 "எம் பி அப்பா "என்ற அந்தச் சொல் அவர் வீடடைத் தாண்டிச் செல்லும் அன்றைய சிறுவர்களுக்கு இன்றும் நினைவில் நிச்சயம் வரும். கரவெட்டியில் அவரது உறவினர்களின் பிள்ளைகளும் அயலவர்கள்  பிள்ளைகளும் அப் பிள்ளைகளுடன் படித்த பிள்ளைகளும் கூட  எம் பி அப்பா என்று அவரை அழைத்தனர் .  தமது பல வேலைகளுக்குள்ளும்  வெளியில் நின்று சிறுவர்களுடன் இடையிடையே செல்லமாய்க் கதைப்பார் எம் பி அப்பா .
 
தமிழ்த் தலைவர்கள் யாரும் இப்படி அன்பாக "எம்பியப்பா" என்று அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. தமிழர்களுக்கெல்லாம் ஒரு "தந்தை" இருந்தார். ஒரு "எம் பி அப்பா " இருக்கவில்லை.
 
அவருடைய பிள்ளைகள் சத்தியேந்திராவும் ,நிரஞ்சலியும்  கூட அவருடன் கரவெட்டியிலிருந்ததில்லை.  1983 இல் கொழும்பிலிருந்த அவரது முழு வீடுமே எரிந்தபின்னர்  கரவெட்டியிலேயே அதிகம் வந்து வாசம் செய்தார். தனியாகவே இருந்தார்.  அவ்வேளையில் தான்  நான் அடிக்கடி சென்று   சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ." என்ன குடிக்கிறீர் . சாப்பிட்டுப் போம்" என்பது அவர் வழக்கம். ஒருநாள் இருநாள் தான்  நினைவு.


சாதமும் தயிரும் அல்லது  சோறும்  ரசமும் தான் அவர் உணவு.  அதனால் அவர் சொல்லுமுன்பே வேண்டாம் சாப்பிட்டு  வந்தேன் என்பேன். மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.


எனது தந்தையார்  சிவசிதம்பரம் அவர்களைப்பற்றிச் சொல்லும்போது உபசபாநாயகர் பதவியில் இருந்த அவருடைய வாழ்க்கை முறையைக் கண்டு லண்டன் பத்திரிகையாளர் ஒருவர்  அதிசயித்து எழுதியதாகச் சொல்வார்.

கேள்விக்குப் பதிலும் விளக்கமும்.

இது பேப்பருக்கு இல்லை என்று என்ன கேள்வி கேடடாலும் ஆறுதலாக தெளிவாக விளக்கமாகப் பதில் சொல்வார் . ஆனால் கூட்டணியின்  கிராம யாத்திரையில்  இளையவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்  சொன்ன பதில்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தது .  கேட்கப்படட கேள்விகளுக்கு ஏற்ற "தொனியிலேயே "  அவரது பதில்களும் அமைந்து பின்னர் குழப்பத்தில் கூடடம் முடிந்தது.

அங்கு கேட்கப்படட கேள்விகள் பல.

அவர்கள் கூடடத்தைக் குழப்ப என்றே வந்தவர்கள்.  அதுதான் அப்படிப் பதில் சொன்னேன் என்று பின்னர்  சொன்னார்.

கூட்டணியின்  கிராமயாத்திரை கரவெட்டியில்   இடம்பெற்ற போது- அவரிடம்  கேள்வி கேட்ட பிள்ளையொன்றும் அவரை  ஒருகாலத்தில் "எம் பி யப்பா " என்று அழைத்தவற்றில் ஒன்று .

"யாழ் பல்கலைக்கழக  மாணவர்களுக்கு அவர்கள் உண்ணாவிரதமிருந்து   போராடிய போது எங்கு போனீர்கள்?" - என்று கேடடார் அந்தப்  பையன். கருத்தரங்கு நடைபெற்ற வீட்டின் யன்னலூடாக எட்டிப்பார்த்து இந்தக் கேள்வியைக் கேடடார். அந்த வீடும் "எம் பி யப்பாவின்" தந்தையார் பேரனாரின் வீடு.  
 
"என்ன கேட்டீர் .. விளங்கேல்ல  திரும்பிச் சொல்லும் "- தலைவர் சிவா. .
 
" இல்லை... யாழ் பல்கலைக்கழக  மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து போராடிய போது என்ன செய்தீர்கள்?"
 
" நானும் தம்பி யோகேசும் அவர்களைச்  சென்று பார்த்தோம்..ஜீப்பில் பாண் பருப்பு என்று கொண்டு சென்று கொடுத்தோம்..!"
 
(கூடத்திலிருந்த இளைஞர்கள் மத்தியில் சலசலப்பு )
 
கேள்வி கேட்டவர்  மீண்டும் கேட்கிறார் :-
 
" ஏன் ..வண்டில்ல கொண்டு போகாதேங்கோவன் ...?"
 
"என்ன சொல்லுறீர் ..?" -சிவா
 
அந்த இளைஞர்  மீண்டும் மெதுவாகச் சொல்கிறார்.. " இல்லை ...வண்டில்ல கொண்டு போகாதேங்கோவன் ...?"
 
இளைஞர்கள் பலத்த சிரிப்புடன் ஆரவாரம்
 
தலைவர் சிவா அந்த இளையவரைப் பார்த்து...".........உம்மை மாதிரி இரண்டு மாடு இருந்திருந்தால் ...வண்டில்ல போயிருப்போம்..!" -
 
வீடைச்சுற்றியும் உள்ளேயும் பலத்த கூக்குரல்...
 
" பொடியன்களைப் பார்த்து மாடு என்கிறார்கள்..கூய் .. "...யாரோ ஒருவரின் சத்தம்..
 
மறறொரு  இளைஞர்  ," பிரேமதாச வந்ததை சென்று வரவேற்கச்  சொல்லி  திரு இராசலிங்கத்திற்கு சொன்னது நீங்கள் தானே..?"

கேள்வி கேட்டவர்  இலங்கைக் கொம்யூனிஸ்ட் கடசியின்  முக்கியத்தர் ஒருவரின் உறவினர் . ஆனால் அவர் கோவை மகேசன் ஈழவேந்தன் ஆகியோருடன் அவ்வேளையில் நட்பைப் பேணியிருந்தார். . அவருடைய கேள்விக்கும் எம்பியப்பா வின்  பதில் இப்படி இருந்தது,

" நீங்கள் ஸ்ரீமா அம்மையார் வந்தால் பலாலியில் அவவுக்கு குடை பிடிப்பீர்கள். பிரேமதாசாவை வரவேற்கப் போனால் கேள்வி கேட்பீர்கள்..

அவர் என் அப்படிப் பதில் சொன்னார் என்பதை தினபதியில் அந்தச் செய்தி வந்தபின்னர் எனக்கு விளக்கினார்.. கேள்வி கேட்டவரும் வேறு  சில இளைஞர்களும் தலைவரைச் சந்தித்து இராசலிங்கத்தை அனுப்பவேண்டாமென்று கேட்ட்டபொழுது . அவர் பொத்துவில் கனகரத்தினம் முதல் இராசதுரை வரை விளக்கி மற்றுமொரு இராசதுரையை நாம் உருவாக்க விரும்பவில்லை என்றும் அவரைப் போக அனுமதித்துள்ளோம் என்றும் நிலைமைகளை விளக்கி யுள்ளார். கேட்டுவிட்டுச் சென்ற  அந்த இளைஞர் மீண்டும் இளையவர்கள் முன்னிலையிலும் திரு இராசலிங்கத்தின் முன்னிலையிலும்  இந்தக் கேள்வியைக்கேட்டுள்ளார் .அதற்காகவே அந்தப் பதிலை தாம் சொன்னதாகச்  சொல்லி புன்னகைத்தார்.

உதயன் தலைப்புச் செய்தி


உதயன் பத்திரிகை வருவதற்கான ஆயத்த வேளைகளில் நாமிருந்த வேளை 1985 ஜூலை நடுப்பகுதியில் அதன் ஆசிரியர்  திரு கானமயில்நாதன்  உதயனின் முதலாவது இதழுக்கு நல்ல தலைப்பு போடவேண்டும் .ஏனைய பத்திரிகைகளில் வராததாக இருக்க வேண்டும் . வரதர் தான் சிவசிதம்பரத்தாரிடம் ஏதாவது எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் வீரகேசரியில் யாழ் செய்தித் சேவையில் பணியாற்றிய போது   நான் சிவசிதம்பரத்தாரின் கதைகளைச்  சொல்வதுண்டு. அதனாலேயே அவர் எனக்கு அந்தப் பணியினைத் தந்தார். நான் சிவசிதம்பரம் அவர்களிடம் இதனைச் சொல்லி வைத்தேன்,  முதல் இதழ் வரும்போது சொல்லும்படி சொன்னார். எதற்கும் அந்நேரம் அவர் இந்திய பிரதமர்  ராஜீவ் காந்தியைச் சந்தித்து வந்திருந்த படியால்,"  இப்பவே குறித்து வையும். வடக்கு கிழக்கு இணைந்த மாநில சபை -இந்தியாவின் நிலைப்பாடு என்று,  ,உங்களுக்கும் நன்றாயிருக்கும் மக்களும் அன்று  ஆர்வமாய் வாங்கிப்  பார்ப்பார்கள் என்றார் .1985 நவம்பர் மாதம் 27 வந்த முதலாவது உதயனின் தலைப்புச் செய்தி அதுவே.   
இந்தியாவும் இந்திராவும்.

இந்திராகாந்தி மரணித்த பின்னர் ராஜீவ் காந்தி பிரதமரான வுடன் அவருக்கு வாழ்த்துத் தந்தி அனுப்ப என்னை வரும்படி  திரு சிதம்பரநாதன் மூலம் அழைத்தார். தந்தியைச் சொன்னார் .நான் எழுதினேன். கரவெட்டி தபால் கந்தோரில் சென்று அனுப்பிவிட்டு  பத்திரிகைகளுக்கு கொடுக்கும்படி கேடடார். அப்போ நான் கேட்டேன், " புதியவர் எப்படி எமக்கு ? "என்று. அதற்கு அவர் சொன்ன பதில் "இந்திரா அம்மையார் எம்மில் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார். நாமும் அவரில் வைத்திருந்தோம். ஆனால் இனி என்னவென்று சொல்லமுடியாது " என்று புன்னகைத்தார் . பத்திரிகைக்குப் போடுவதானால் நான் கேட்டுவிட்டே  போடுவேன் என்பது அவருக்குத் தெரியும்.

ராஜீவ் காந்தி பிரதமரானபின்னர் சந்தித்துவிட்டு வந்த கையோடு நான் செய்தி எடுத்து ஈழநாட்டில் முதற்பக்கத்தில் செய்தி வந்தது. புதிய பிரதமர் மீது நிறைந்த நம்பிக்கை - தலைவர்  சிவா. என்று செய்தி வந்தது. ஆனால் அவர்  எனக்குச் சொன்ன செய்தி  அதுவல்ல. சிவா சொன்னார் ," அவர் இனிமேல் ஆலோசகர்கள் சொல்வதைத்தான் செய்வார். தாய்  அப்படியல்ல. ராஜீவ்  எமக்குச் சொல்லிவிடடார்..தமிழ் ஈழம் என்று ஒன்றை நினைக்க வேண்டாம் , நாம் இராணுவ ரீதியில்  தலையிடமாட்டோம்  ,. - இந்திய மாநிலங்களுக்கு மேலால் அதிகாரம் தர தாம்  இலங்கையை வலியுறுத்த மாடடேன் என  ,  அவ்வளவுந்தான் தம்பி . தந்தை செல்வநாயகம் சொன்னது போல கடவுள் தான் எங்களைக் காப்பாற்றவேண்டும்"


இவை எதுவும் அக்காலத்தில் எப் பத்திரிகையிலும் உடனடியாக   வரவில்லை.

கரவெட்டியின் மன்னவன்  மாஸ்டர்  வடமராட்சியின்  புகழ் பெற்ற ஒரு கவிஞர் . சிவசிதம்பரம் அவர்களின் நெருங்கிய தீவிர ஆதரவாளராயிருந்தவர். இடையில் ஒரு முறுகல் . 1977 இல் மோதிலால்  நேருவுக்கு ஆதரவாய் வேலை செய்தவர். அதாவது கூடடணியின் வேட்பாளர் இராசலிங்கத்திற்கு எதிராக. இவர்  செயற்பட்டார் .  ஒருமுறை சிவசிதம்பரம் அவர்களின்  வீட்டிலிருந்த வவுனியா  எம் பி  சிவசிதம்பரம்  அவர்கள் மன்னவன் மாஸ்டரிடம் கொஞ்சம் கண்டிப்பாக எதையோ சொல்லிவிட்டார் .  அதனைத் தங்க முடியாத  மன்னவன் அவரைப்பார்த்து  "நீரும்  பா. உ .நானும் பா .உ . அதைப்  புரிஞ்சு கொள்ளும்"  என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.


சிலநாட்கள் கழித்து எங்கள் தலைவர் சிவா மன்னவன் மாஸ்டரிடம் வவுனியா சிவசிதம்பரத்தாரிடம் அன்று சொன்னதற்கு விளக்கம் கேட்டுள்ளார். மன்னவன் சொன்னது " நீரும் பா உ (பாராளுமன்ற உறுப்பினர் ) நானும் பா உ (பாடசாலை உபாத்தி) " என்பதாகும்.

மன்னவன் மாஸ்டர் தலைவர் சிவாவுடன்   நன்கு பகிடியாகவும் வேடிக்கையாகவும்  கதைப்பார். பிற்காலத்தில் ஒருநாள் தலைவர் சிவாவிடம் பகிடியாகவே கேடடார்..' எதுக்கு நீங்கள் இந்தியாவில தொங்குறீர்கள் " என்று . அதற்கு அவருடைய பாணியிலேயே சிவசிதம்பரம் பதிலைச்  சொன்னார். கீழே இருக்கிறோம். அதனால் தூங்குகிறோம்...சில கணங்கள் கழித்துச் சொன்னார்.." இந்துசமுத்திரத்தில வேற எங்கேயுமிருந்தால் ஏன் தொங்கப் போகிறோம்..? "

அருவி என்ற லண்டன்  இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் இந்தியா பற்றிக் கேட்ட  கேள்விக்கு அவர் சொன்ன பதில் இங்கு குறிக்கத்தக்கது.'''

" மேற்கத்தைய நாடுகளுக்கு இந்தியாவை இந்தப் பிராந்தியத்தில் பலவீனப்படுத்தும்  ஆசை உண்டு. இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இந்தியா இப்பிராந்தியத்தில் பலவீனப்படுமாயிருந்தால் எந்தக்  காலத்திலும் எமக்கு விமோசனமில்லை .மேற்கத்தகைய நாடுகள் வரலாம் .ஆனால் இந்தியாவுடன் சேர்ந்துதான் வரவேண்டும் "


முஸ்லிம்களும் சிவாவும்.

தலைவர் சிவாவின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி உரையாற்றிய  அல்ஹாஜ்   ஏ எச் எம் அஸ்வர்  பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக இருந்த போது ஆற்றிய  உரை முக்கியமான ஒன்றாகும்.


இலக்கியத்துறையின் மூலமே அவரது பேச்சால் தாம் ஈர்க்கப்பட்ட்தாக அஸ்வர் குறிப்பிட்டிருந்தார். 1960 இல் முஸ்லிம் லீக்கின் செயலாளராக அஸ்வர் அவர்கள் இருந்தபோது சிவாவை முதன்முதலாகச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளார் . Whither  Democracy ? என்ற தலைப்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக வந்த  சிவா முஸ்லிம் லீக்கில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்ததாக அஸ்வர் குறிப்பிட்டிருந்தார். அதுபோலவே அஸ்வர் இன்னுமொரு விடயத்தையும் நகைச்சுவையாகச் சொல்லியிருந்தார். 1977 தேர்தலில் சிவசிதம்பரம்  அவர்கள் இலங்கையில்  அதிகப்படியான  மேலதிக வாக்கைப் பெற்றதுடன் அவருக்கு அடுத்த வாக்குப் பெற்றவர் தனது கட்டுக்காசையும் இழக்கச் செய்தார் - என்று அஸ்வர் குறிப்பிட்டார்.  எம் சிவசிதம்பரம்(த வி கூ)  - 29858  கே ராமநாதன் (சுயேச்சை) - 1721.
அமரர் சிவசிதம்பரத்திற்கு அடுத்ததாக இலங்கையில் அதிகப்படியான வாக்கைப் பெற்றவர் பேருவளை  -பல அங்கத்தவர் -தொகுதியில் வெற்றி பெற்ற கெளரவ பக்கீர் மக்கர் ஆவார். இவரை சபாநாயகர் பதவிக்கு அமரர் சிவசிதம்பரம் அவர்களே ஆமோதித்திருந்தார்.

 அஸ்வர் தமது உரையில் ," யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்படட முஸ்லிம்கள் அங்கு திரும்பிச் சென்ற பின்புதான் நான் யாழ் செல்வேன் " என்று சிவசிதம்பரம் அவர்கள் சொன்னார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் சென்றார்கள் .ஆனால் எப்படிச் சென்றார்கள் ? கண்களை மூடிய வண்ணம் தான் சென்றார்கள். அவர் கண்களைத் திறந்திருந்த போது யாழ் செல்வதற்குரிய ஓர் அருமையான சந்தர்ப்பத்தை இந்தச் சமுதாயம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கத் தவறிவிட்டது"

சண்டே லீடர் பத்திரிகைக்கு மார்ச் 3,2002 இல் முஸ்லிம்களின் கோரிக்கை தொடர்பாக அவர் அளித்த பதில் பின்வருமாறு.

Sunday Leader, March 3,2002

Q:- Muslims say that The Tamils who will be majority in the north and east would violate their fundamental rights. what are your views?

A:- Well , we manged to come to an agreement with Ashraff. we said we would give a separate council (to the Muslims) based in Ampara., which will be a sub council itself will have representation in the bigger council. And that council itself will have representation in the bigger council and certain subjects like land, religion, culture and so on which will be exclusively dealt with by that sub- council. Ashraff agreed with us and we presented that agreement to Chandrika.  
.
சிவாவின் சிறப்புகள் சில

இவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக வும் பின்னர் உப சபாநாயகராகவும் 1967 முதல் 1970 வரை பணியாற்றியுள்ளார்.

1960 களில்  அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின்  சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு மாநகர மன்றத்தின் திறவு கோலை மாநகர முதல்வர் அவருக்கு வழங்கினார்.

அதேபோல உபசபாநாயகராகப் பதவி வகித்த காலத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்படுக் கெளரவிக்கப்பட்டார் .

இவர் உபசபாநாயகராக இருந்த வேளை இவரைப் பேட்டி எடுக்க வந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் " குடிசையில் சாமியார் போல வாழும் இலங்கை நாட்டின் உப சபாநாயகர் " என்று குறிப்பிட்டிருந்தார்.


சிவாவுக்கு மூன்று நினைவு தினங்கள் ..?

கடந்த ஜூன்  ஐந்தாம் திகதி  தலைவர் சிவாவின் நினைவு நாளன்று தலைவர்  சம்பந்தன் அவர்கள் அமரர்  சிவசிதம்பரதின் சிலைக்கு  மாலை போடும் படத்தையும் செய்தியையும் பார்த்தபோது  இதே நெல்லியடியில் நடைபெற்ற ஒரு சம்பவமும் இந்த நினைவு தினத்துடன் இணைந்து இக்குறிப்பை எழுதத் தூண்டியது.
 
1977 ஆம் ஆண்டுத் தேர்தல் வந்தது. அதற்கு நான் பாடவில்லை . கூட்டணியின் தேர்தற் கூட்டங்களில் நான் பார்வையாளனாக இருந்தேன். வண்ணை ஆனந்தன் "பழம்  பழுத்தால்.."  என்று சொல்ல..." வௌவால் வரும்..."  என்று கத்திப் பதில் சொன்ன மாணவர்களில் ஒருவனாக  இருந்தேன்.
 
 1977 ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. உடுப்பிட்டியில் கூட்டணி சார்பில் இராசலிங்கம் போட்டியிட்டார். இராசலிங்கதிற்கு எதிராக பலர் போட்டியிட்டனர். தமிழக் காங்கிரசைச்  சேர்ந்த மோதிலால் நேரு , மூத்த இடதுசாரிப் பிரமுகர் கே ஸீ மகாதேவன் , சமசமாசிப் பிரமுகர் ஆர் ஆர் தர்மரத்தினம் , சிறுபான்மை சமூகங்களின்  பெயர் பெற்ற சுந்தரம் ,பிள்ளையினார் ஆகியோர் இதில் குறிப்பிடவேண்டியவர்கள்.
 
அமரர் கே சி மகாதேவன் தான் விடுதலைப் புலிகள் இயக்க மகளிர் அணிப் பொறுப்பாளர்  தமிழினியின் கணவர் ஜெயக்குமாரின் தந்தை ஆவார். அதாவது தமிழினியின்  மாமா!
 
அமரர்கள் மோதிலால் நேருவும், கே சி மகாதேவனும்  கூட்டணியின்  தலைவர் சிவசிதம்பரத்தை தமது பிரசார மேடைகளில் "அண்ணன்  சிவசிதம்பரம்" என்று விழித்தே உரையாற்றினார்கள். ஆனால் கூட்டணியைத் திட்டினார்கள். உடுப்பிட்டியில் மோதிலாலும், யாழில் குமார் பொன்னம்பலமும் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று -" தமிழ் ஈழம் வந்தால் மின்சாரம் எப்படிக் கிடைக்கும்..? "! என்பது .
 
அதற்கு சிவசிதம்பரம்  " தம்பி மோதிலால் நல்ல வழக்கறிஞர் என்று எனக்குத் தெரியும். நல்ல பேச்சாளன்  என்றும் எனக்குத் தெரியும் .


ஆனால் அவர் அந்தத் தொழிலையே பார்ப்பது நல்லது. தமிழ் ஈழம் வந்தால் மின்சாரம் பற்றி குமார் பொன்னம்பலதிடமோ மோதிலாலிடமோ தமிழ் ஈழ அரசு ஒரு நாளும் ஆலோசனை கேட்காது என்பதை அவர்களுக்குச் சொல்லிக்  கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு மின்சாரம் பற்றித் தெரிந்த உலக நிறுவனங்கள் பொறியியலாளர்கள் உள்ளனர் ..."  என்று ஒரு கூட்டத்தில் பதில் சொன்னார்.


மாகாதேவன்   கரவெட்டிக் கூடம் ஒன்றில் தாம் பதவிக்கு வந்தால்  வல்லை வெளியைத் திராட்சைத் தோட்டப் பண்ணையாக மாற்றுவேன் -என்றார்.
 
கூட்டணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் கரவெட்டியில் நடைபெற்றது.  அதில் உரையாற்றிய தலைவர் சிவா ...இங்கு பலரும் என்னை, அண்ணன் சிவா அண்ணன் சிவா என்று அழைக்கிறார்கள் ..அப்படி அவர்களுக்கு என்னில் ஒரு  அன்பு   இத் தேர்தல் காலத்தில்  வந்துள்ளது. தேர்தல் முடிய ஆறு கடந்த நிலை தான்....எனக்கு இன்றுள்ள  ஒரேயொரு தம்பி  இராசலிங்கம்  மட்டுமே. ! என்னை நேசிப்பவர்கள்  யாவரும் அவருக்கே உங்கள் வாக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு  இறுதி பிரசாரக் கூடடம் நிறைவு பெற்றது.
 
மகாதேவனின் திராட்சைத் தோட்டம் பற்றிப் பேசிய சிவசிதம்பரம் , "திராட்சைக் கிளையை இலங்கைக்குக் கொண்டுவந்தவர்  திரு துரைரத்தினம் அவர்கள். நான் இஸ்ரேலிய நிபுணரை  அழைத்துவந்து  எப்பவோ இதுபற்றிப் பேசி திட்டமும் இட்டோம். என்னிடம் அவை உள்ளன. மகாதேவன் வந்தால் நான் அவருக்கு அவற்றைக் க் காட்டுவேன். ஆனால் எமக்கென்று ஓர்   அரசு எமது நிதி வளங்களை திட்டமிடக் கூடிய அரசு எம்மிடம் இல்லாத வரைக்கும் திராட்சை என்ன பேரீச்சை கூட எம்மால் விளைவிக்க முடியாது  என்பது முற்போக்கு அரசியலில் ஈடுபட்ட அனுபவம் பெற்ற மகாதேவனுக்குத் தெரியும் .ஆனால்.." என்று பதில் சொல்லியிருந்தார்.

தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் அமரர் இராசலிங்கம் வென்றார். பின்னர் காலங்கள் மாறின. 1981 இல் மாவடட சபைத் தேர்தல் பின்னர் 1983 ஆடிக்கலவரம் பின்னர்  ஊரில் இளையவர்கள் தலைமறைவு  தொடர்ந்து இயக்கங்களின் வருகை என்பனவும் இராணுவம் கவச வாகனங்களில் வருகையும் சோதனைகளும் இடம்பெறத் தொடங்கின.


1984 ஆம் ஆண்டு ஆவணி மாதப் பகுதியில் நான் தினபதி ஈழநாடு நிருபராகப் பணியாற்றிய காலத்தில் ஒருநாள் .


தச்சன் தோப்பு பிள்ளையார் ஆலய உற்சவத்திற்கு தவறாமல் தலைவர் சிவா  ஊரில் வந்திருந்தார்.


வழமையாக அவர் ஊருக்கு வந்தால்   ஒரு மாதம் அல்லது  இரண்டு மாதங்கள் ஊரில்  தங்கியிருப்பார்.


 அவர் அப்படி வந்திருந்த நாட்களில் ஒருநாள்..
நெல்லியடியில் மகாதேவனைச் சுட்டுவிடார்கள் என்று கதை வந்து உடனடியாக நெல்லியடிச் சந்திக்குப் போனேன்.


 கூட்டத்தின் நடுவில் ...மகாதேவன்  அமைதியாக நீட்டி நிமிர்ந்தபடி படுத்திருந்தார்.வெள்ளை வேட்டி  மட்டும் அணிந்திருந்தார். வழமையான நிமிர்ந்த நடையுடன் வீதியால் செல்லும் மகாதேவன் அங்கு அமைதியாக உறங்குவது போலவே தோன்றினார்.


"  வழக்கம் போல " நான் கண்ட மின்கம்பக்  கொலைகளைப்  போல- கண்ணில் நெற்றியில் இரத்தம் சிந்திக் கறை படர்ந்து   முகம் அலங்கோலமாக இருக்கவில்லை.  


 ஆற அமர்ந்து படுத்துறங்குவது போலவே இருந்தார்.


 நெல்லியடிச் சந்தியில் சுமார் 30க்குமேற்பட்ட கம்பக் கொலைகளை நேரில் கண்டு செய்தி எழுதியவன் நான். அதனால் தான் வழக்கம் போல..என்று குறிப்பிட்டேன்.


 "இரவு கொண்டு  வந்தாங்களாம் ..இவர் கொஞ்சம் வாய் தானே.. சத்தம் போட்டிருக்கிறார்..மன்னிப்புக் கேள் என்றாங்களாம் ..எதுக்கு மன்னிப்பு ..
உன்ற  கடைசி ஆசை என்ன என்று கேட்டிருக்கிறாங்கள் ...உன்ற  விருப்பம் என்னவோ அதைச் செய் ..விருப்பம் என்றால் சுடு ...என்று சொல்லிக் கேட்டிருக்கு ." .
 
"  பிறகு கொஞ்சநேரம் சத்தம் ஒன்றும் இல்லையாம் ... " பிறகு  வெடிச்சத்தம் கேட்டதாம் .."


 சொன்ன ஆளைக் கேட்காதே.. இதுகளையும் போடாதே .." என்று எனக்கு இந்தக் கதையைச் சொன்னவர் நெல்லியடிச் சந்தியில்  கடை , நடத்திய ஒரு முதியவர் செய்தியைத்  தொலைபேசியில் அனுப்பிவிட்டு  வீடு செல்ல..தலைவர் சிவசிதமபரத்தின் அழைப்பு வந்திருந்தது.


 எம் பி நெல்லியடிச் சந்திக் காட்சிகள் பற்றிக் கேட்டார்..அவரிடம் ஒரு பதட்டம் ..இழப்பு  என்பன இருந்ததை அவரது மூச்சு வாங்கலில் புரிய முடிந்தது.  மனதில் சோகமும் இழையோடியது . கலக்கமாகவே பேசினார் .
 
மகாதேவன் அவரது உறவினர் .தம்பி முறையானவர் ..அதைவிட அயலவர். ஒரு வேலி . இருவரும் ஒன்றாக  சண்முகதாசன் ,பொன் கந்தையா  ஆகியயோருடன் இடதுசாரி அணியில் இருந்தவர்கள்.


 மகாதேவன் பின்னர் பீட்டர் கெனமன் வீடமைப்பு அமைச்சரானபின்னர் அமைச்சில் நல்ல பதவியில் இருந்தவர். 1977 தேர்தலுக்காக இராஜினாமாச் செய்தவர் என்று பேசப்பட்டது.


 இவர் பின்னர் மகாவலி கொத்மல  திட்டத்தில்  பலாலி இராணுவ உயர் அதிகாரியின்  சகோதரர் ஒருவருடன் பணியாற்றியதன் காரணமாக அந்த அதிகாரியுடன் இவருக்கு நட்பு இருந்தது.எனப்பட்ட்து
 
 ஆனால் 1980 களில் ஊரில் பாதுகாப்புச் சுற்றிவளைப்புகளில் ,திடீர்ச் சந்தி மறிப்புகளில் எமது இளையவர்கள் அழைத்துச் செல்லப் ப்பட்டபின்னர்..உடனடியாகவே  மகாதேவனைப் பிடித்தால் சரி என்ற கதை ஊரில் நிலவியது.


 நான் அறிய ஆரமபத்தில் இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் இப்படி இவரால் கதைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியினைச் செய்ய வேண்டாமென்று உறவினர் நண்பர்களும் அவரைக் கேட்ட்தாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்ட்தாகவும் கதையுண்டு. .
 
மகாதேவன் . கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இயக்கம் ஒன்றின் முக்கியத்தருடன் அவர் வாய்த்தர்க்கத்திலீடுபட்ட்தாகவும் பேசப்பட்டது .

 அவ்வேளையில் ஊரில் குறிப்பாக வடமராட்சியில் பல இயக்கங்கள் இயங்கின . சில இயக்கங்களுக்கிடையில் நடப்புறவு அதிகமாகவுமிருந்தது. . இவற்றில் சிலவற்றுக்கு  விடுதலை புலிகள் கூட  அஞ்சித் தமது நடவடிக்கைகளை ஊர்களில் "பார்த்து"  மேற்கொண்டனர். இப்படியான ஒரு காலப்பகுதியிலேயே மகாதேவனின் சம்பவம் இடம்பெற்றது.
 
என்னை அழைத்த தலைவர்  சிவசிதம்பரம் நெல்லியடி நடப்புக்களைக் கேட்டுவிட்டு.. மகாதேவன் கொல்லப்பட்ட அன்று அதற்கு முன்னர் தமக்கு  நடந்த அனுபவத்தை , எனக்குச் சொல்லி அதனை செய்தியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்..இதனைச் செய் தியாக்கினால் நாளை கரவெட்டி முழுக்க அல்ல யாழ் குடாநாடு முழுதும் தேடுதல் ஒன்றைச் செய்து பல இளைஞர்களைக் கொண்டு போய்விடுவார்கள் ..என்றார் அவர். ..
 
அன்று மகதேவனைத் தேடிப்  போனவர்கள் முதலில் திரு சிவசிதம்பரத் திடம் தான் போயுள்ளனர் .
 
"  நீங்களா மகாதேவன் ..?" என்று கேட்டதாகவும்
 
" இல்லை  தம்பி "என்று தாம் சொல்ல
 
உண்மையைச் சொல்லும் ! என்று சற்று மிரட்டியதாகவும்
 
"இல்லை நான் மகாதேவன் இல்லை." என்று சொல்லி
 
இனியும்  ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அடுத்த வீட்டைக் காட்டினேன் ..
 
நானும் வாக்குவாதப்  பட்டிருந்தால் எனக்கு இங்கு வைத்தே வெடி வைத்திருப்பார்கள் ...என்றார் தலைவர்  சிவா.  
 
 அன்று தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் "நான் தான் மகாதேவன் ! என்ன செய்யப் போகிறீர்கள் ...? " என்று கேட்டிருந்தால்...
அவரது நினைவுதினம் இன்று வேறாக இருந்திருக்கும். !


தலைவர் சிவாவின் இறுதி வரிகள்..

தமது இறுதிக் காலத்தில்  தலைவர் சிவா அதனை உணர்ந்தோ என்னவோ அவரது தினக்குறிப்பில் சில வரிகளை எழுதியிருந்ததாக  அவருடன் இறுதிக்காலத்தில் கூட இருந்த திரு முகுந்தன் குறிப்பிட்டிருந்தார்.

1930 களில் அவர் பாடசாலை மாணவராக இருந்தபோது கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக்கு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு வந்திருந்தார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியினால் நேருவுக்கு வழங்கப்படட வாழ்த்துப் பாத்திரத்தில் "நாம் நிலை தவறோம்' ( We will not falter ) என்ற  வரிகளை நேரு தமது சுய சரிதையில் எழுதியுள்ளமையைக் குறிப்பிட்டு மேலும் சில வரிகளுடன் சிவா நிறுத்தியிருந்தார்.


இறுதி உரை:-

நீதி மன்றங்களிலும்  பாராளுமன்றத்திலும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பிரதிநிதிகள் முன்னிலையிலும் சிறப்புமிக்க தீர்க்கதரிசனமாக உரைகளை பேசிய அந்தச் சிம்மக்  குரல் பாராளுமன்றத்தில் 8 ஏப்ரில் 2002 அன்று  இறுதியாக ஒலித்தது இதுவே..

அதனை நான் ஆங்கிலத்திலேயே தருவது பொருத்தமும் அவரது ஆதங்கத்தைக் குறிப்பதுமாகும்.  

" Sir , there was a time when we were proud of the excellence of our education system in Jaffna and in the eastern Province. But today the Education in the North and East is in shambles. ".


14 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர் ஆற்றிய உரை இன்றும் பொருந்தும் .

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134199/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.