Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரியோ ஒலிம்பிக்கும், ஆப்ரிக்க பிரேஸிலிய பூர்வகுடிகளின் கண்ணீரும்...!

Featured Replies

ரியோ ஒலிம்பிக்கும், ஆப்ரிக்க பிரேஸிலிய பூர்வகுடிகளின் கண்ணீரும்...!

eduardo-kobra-mural-rio-olympics-designb

டந்த ஜூன் 30- ம் தேதி. அன்று ஆர்வமாக நெட்டிசன்கள் உலக சமூக ஊடக தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சமூக ஊடகத்திற்கும் தங்களுக்குமான பந்தத்தை உருக்கமாக, கிண்டலாக, நெகிழ்ச்சியாக என்று விதவிதமான நடைகளில் எழுதி,  சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டிருந்த, அதே நன்னாளில்தான், பிரேசிலின் ரியோ விமான நிலைய வாசலில், ஏறத்தாழ 30 காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் அவர்கள் நாட்டிற்கு வந்தவர்களை மிகவும் வித்தியாசமான வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி, வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆம். சந்தேகம் வேண்டாம், 'வித்தியாசமான வாசகங்கள்' கொண்ட பதாகைதான். அதில் இவ்வாறாகதான் எழுதி இருந்தது,  “நரகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை”.

உள்நாட்டு பயணிகளுக்கு இதற்கான காரணம் தெரியும், வருத்தத்துடன் அவர்களை கடந்து சென்றார்கள். புதிதாக அந்த நாட்டிற்கு வந்தவர்கள், செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ஆம், அவர்கள் எந்த நாட்டு விமான நிலையத்திலும் இப்படியான வரவேற்பை பெற்றிருக்க மாட்டார்கள். அதுவும் சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையே ‘உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை...’ என்று எந்த நாட்டிலும் சொல்லி இருக்காது.

Rio.jpg

 

ஏன் அவர்கள் அவ்வாறாக வரவேற்றார்கள்...?:

இந்த கேள்விக்கான விடை, மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிமையானது. காவல் துறையினருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் தரவில்லை. அதனால் அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட இவ்வாறாக போராடினார்கள் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த பிரச்னையை கொஞ்சம் ஊடுருவி பார்த்தோமென்றால், பிரேசிலில் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் பிரச்னை புரியும். அந்த பிரச்னையால், அந்த நாட்டில் அமைதியாக நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தம் புரியும். யுத்தம் அமைதியாக நடக்குமா...? ஆம் அந்த நாட்டில் அப்படியாக நடந்து கொண்டிருக்கிறது.  அரசு, தம் குடிகளை கணக்கு வழக்கில்லாமல்  கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

rio-police-banner_dz7mdultoji41t3l9w3xat

 

‘கணக்கு வழக்கில்லாமல்’ -இது ஏதோ சொல் நயத்திற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை. அரசால் கொல்லப்பட்டவர்களின் சரியான கணக்கு அரசிடமே இல்லை என்கிறது  ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’. வேண்டுமானால் தோராயமாக, இந்த நான்கு ஆண்டுகளில் இறந்தவர்கள் 2600 எனலாம்.  அரசுக்கும், அதாவது அரசின் படையான காவல் துறைக்கும், அந்த நாட்டு மக்களுக்குமான இந்த அமைதியான யுத்தத்தில், காவல் துறையைச் சேர்ந்த 59 பேரும் இறந்திருக்கிறார்கள்.

என்ன நடந்து கொண்டிக்கிறது பிரேசிலில்...?:

என்ன நடந்துகொண்டு இருக்கிறது பிரேசிலில்... ? அந்த  அரசு,  தம் சொந்த குடிகளை கொன்று கொண்டிருக்கிறதா....? இதற்கான தெளிவான விடை வேண்டுமானால், பிரேசிலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். அதற்கு பிரேசிலின் சில நூற்றாண்டு  கால வரலாறை தெரிந்து கொள்ளவேண்டும்.

15- ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில், போர்ச்சுகீசிய காலனி நாடாக இருந்தது பிரேசில். நாடுகள் அடிமையாவதற்கு என ஒரு பொதுவான காரணம் இருக்கும்தானே... அந்த காரணம்தான் பிரேசில் அடிமை நாடாக மாறியதற்கும். ஆம், அதன் மழைக்காடுகளும், வளமான மண்ணும்தான், அந்த நாட்டை அடிமையாக்கியது. வளமான மண், தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை.... வந்த போர்ச்சுகீசய பிரபுகள் அமைதியாக இருப்பார்களா...? என்ன செய்யலாம் என்று எண்ணினார்கள். அப்போது அவர்களுக்கு தங்கமாக தெரிந்தது ‘கரும்பு’.  பார்க்கும் இடங்களில் எல்லாம் கரும்பு சாகுபடி செய்தார்கள். ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள். கொள்ளை லாபம் வந்தது. கரும்பின் சுவையை முதலில் ருசி கண்டவர்கள்... இப்போது அதன் வருமானத்திலும் ருசி கண்டார்கள். இந்த வருமானத்தை இரட்டிப்பாக்க தீர்மானித்தார்கள். வருமானத்தை இரட்டிப்பு ஆக்க வேண்டுமென்றால், விளைச்சலும் இரட்டிப்பாக வேண்டு. என்ன செய்யாலாம்...?  காட்டை அழித்து கரும்பு நடலாம்... ஏன், இயன்றால் 'கடலையும் தூர்த்து கரும்பு நடலாம்' என்று திட்டமிட்டார்கள்.

quilombo.jpg

திட்டமிட்டால் மட்டும் போதுமா... இதை செயல்படுத்த ஆட்கள் வேண்டுமல்லவா...? ஏற்கெனவே முரண்டு பிடிக்கும் உள்ளூர் கூலிகளை வைத்து மட்டும் இதை சாதிக்க முடியாது. என்ன செய்யலாம்...? அப்போது கனஜோராக அடிமைகள் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. இப்போது கேரளாவிற்கு லாரிகளில் அடிமாடுகளை அனுப்புவது போல், அப்போது கரிபீயன் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மனிதர்களை, கப்பல்கள் மூலம் அடிமைகளாக இறக்குமதி செய்து கொண்டிருந்தது தென் அமெரிக்கா.

இந்த அடிமைகள் வர்த்தகத்தில் பிரேசிலும் ஈடுப்பட்டது.  ஏறத்தாழ 50 லட்சம் கருப்பினத்தவர்களை இறக்குமதி செய்தது... இன்னொரு நாட்டில் போய் அமர்ந்து கொண்டு, அந்த நாட்டை அடிமையாக்கியது மட்டுமல்லாமல், பிற இனத்தவர்களையும் இறக்குமதி செய்து தங்கள் வணிகத்தை பெருக்கிக் கொள்வது  அறமாகாதுதானே...?  அடிமைகள் பொறுத்து பொறுத்துப் பார்த்தார்கள். கிளர்ந்தெழுந்தார்கள். தப்பித்துச் செல்லத் துவங்கினார்கள். (இவர்களை குயிலொம்போ என வரலாறு பதிவு செய்தது.)

zumbi.jpgகடலும், காடும் இணையும் இடம் அவர்களுக்கு பாதுகாப்பான கூடாக அமைந்தது. அங்கு ஒரு சமூகத்தை உண்டாக்கினார்கள்.  தங்களுக்கான இடமாக மட்டும் அதை வைத்துக் கொள்ளவில்லை, தங்களைப் போல் தப்பித்து வந்த பூர்வகுடிகளுக்கும் அடைக்கலம் தந்தார்கள்.  

போர்ச்சுகீசிய அரசு பொறுமையாக இருக்குமா...? அது பல முறை அவர்களைத் தாக்கி, பணிய வைக்க முயற்சி செய்தது. ஆனால், இழப்பதற்கு தங்களது உயிரைத் தவிர எதுவும் இல்லாத அந்த அடிமைகள், திருப்பித் தாக்கினார்கள்.  ஆணவ அரசு பின் வாங்கியது. பின் தந்திரமாகச் செயல்பட்டு, கருப்பினத்தவர்களின் தளபதியாக இருந்த ஷூம்பியைக் கொன்றது. பின் அவன் தலையை கொய்து, கருப்பினத்தவர்களை அச்சமூட்ட,  பிரேசில் எங்கும் அதை எடுத்துச் சென்றது.

பின் பலகட்ட போராட்டத்திற்கு பின், மே 13, 1888 ம் ஆண்டு, இந்த அடிமை முறை முடிவுக்கு வந்தது. மேற்குலகில் பிரேசில்தான், அடிமை முறையை நிறுத்திய கடைசி நாடு. ஆனால், அதற்குள் பிரேசில் எங்கும் அடிமைகளின் குருதி சிந்தி இருந்தது.  

அதற்கு பின் பல விஷயங்கள் மாறின. அரசுகள் மாறின. ஆனால், அந்த குயிலோம்பாக்களின் வம்சாவழியினரின் துயரம் மட்டும் அப்படியே இருக்கிறது. அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இன்றும் பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் பின் தங்கிதான் இருக்கிறார்கள்.

நிலத்திற்கான போராட்டம்:

quilombo%20ano.jpg

 

குயிலொம்போக்கள், 'தாங்கள் பூர்வீகமாக தங்கி இருந்த பகுதிகளை, எங்களுக்கே தர வேண்டும்' என்கிறார்கள். அதுவும் குறிப்பாக, அவர்கள் தப்பித்து கடலும், காடும் சந்திக்கும் பகுதியில் வசித்தார்கள் அல்லவா...? அந்த இடத்திற்கு உரிமை கோருகிறார்கள். அவர்களை பொறுத்த வரை, அது அவர்களின் புனித இடம். தங்கள் மூதாதையர்கள் ரத்தம் சிந்திய இடம்.  அந்த நிலத்திற்காக அம்மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள். ஆனால், பிரேசில் அரசாங்கம் அவர்களுக்கு அந்த இடத்தை தர மறுக்கிறது.  நீதிமன்றம் இதில் தலையிட்ட பின், பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டும் இடம் வழங்கியது.

Olympic%20Park.jpg

 

போர்ச்சுகீசிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையிட்டு,  உடலெங்கும் உரமேறிய அந்த மக்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து போராடி வந்த சூழலில்தான்,  'பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,  போட்டி நடத்துவதற்காக பிரேசில் தேர்ந்தெடுத்த இடம், குயிலொம்போக்கள் வசித்த இடம். அவர்களின் வம்சாவழியினர்களின் புனித இடம். அந்த இடத்தில் கட்டுமானங்களை துவங்க, ஒரு பெருநிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை கொடுத்தது.  குயிலொம்போக்கள் புதைக்கப்பட்ட இடத்தில், ஒலிம்பிக் பூங்கா  எழுப்பப்பட்டது. மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள், போராடி பார்த்தார்கள். அரசு கேட்பதாய் இல்லை. இந்த மக்களும் விடுவதாக இல்லை.  மிச்சம் இருக்கும் தங்களின் அடையாளங்களை தற்காத்துக் கொள்ள, அந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

குயிலொம்போக்கள் சார்பாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் அடில்சன், “எங்களின் புனித இடங்களை பெயர்த்து எடுத்துவிட்டார்கள்...  நாங்கள் எவ்வளவு போராடியும் அவர்கள் (அரசு) கேட்பதாய் இல்லை. நாங்களும் ஓயப்போவதாயில்லை...” என்கிறார்.

வகைதொகை இல்லாத மரணம்:

 

Brazil.jpg

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரேசில் அரசாங்கம் தேசத்தைச் சுத்திகரிக்கிறோம் என்ற பெயரில் தம் குடிகளை கொன்று வருகிறது. ஆம், அடிமையினத்தவராக இருந்தவர்கள்  கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கிறார்கள் அல்லவா... அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள தேர்ந்தெடுத்தது வழிப்பறியும், பிக்பாக்கெட்டும்தான். ஆம், கொள்ளைகாரர்களாக மாறினார்கள். சுற்றுலாப் பயணிகளிடம், செல்வந்தர்களிடம், ஏன் யார் கையில், பையில் பணம் இருந்தாலும் வழிமறித்து, கொள்ளை அடித்தார்கள்... பணம் இல்லையா...? பிழை இல்லை. கழுத்தில், கையில் இருந்ததை பறித்தார்கள். நீங்கள் கூட இது தொடர்பாக சில வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கக் கூடும்.... இல்லை என்றால் பாருங்கள். சிறுவர்கள் கூட வழிமறித்து பணம், நகை பறிப்பது தெரியும். ஆனால், இப்போது அந்த சிறுவர்கள் உயிருடன்  இருப்பார்களா என்றால் தெரியாது.

disparity.jpgஆம். ஒலிம்பிக் நடக்க இருக்கிறது. 'வெளிநாட்டவர்கள் மத்தியில் தேசத்திற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது' என்பதற்காக, பிரேசில் அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிட்டது. அதாவது, கையில் புண் இருந்தால் அதற்கு மருந்திடுவது அல்லது அந்த புண்ணிற்கு என்ன காரணம் என்று பார்த்து அதை சரி செய்ய பார்க்காமல், கையையே வெட்ட முடிவு செய்தது. ஆயிரக்கணக்கானவர்களை கொன்று இருக்கிறது.

திருடர்கள், கயவர்கள் மீது மட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. அப்பாவிகள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறது.  கடந்த ஆண்டு,  விட்டோர் என்னும் இளைஞர் வெளியே கால்பந்து விளையாடச் சென்றிருக்கிறார். அவரையும் காவல்துறை சுட்டு இருக்கிறது. அதனால், அவரது இடுப்பிற்கு கீழே அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டன.

இது இப்படி நடந்துகொண்டிருக்க, ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்த  பிரேசில் பொருளாதாரம், FIFA கால்பந்தாட்டப் போட்டி நடத்தியதாலும், ஒலிம்பிக் போட்டிக்கு செலவு செய்ததாலும், மேலும் சரிவடைந்தது. இந்த ஒலிம்பிக்கிற்கான பட்ஜெட் மட்டும் ஏறத்தாழ 12 பில்லியன் அமெரிக்க டாலர்.

பொருளாதாரம் சரிவு என்றால் சில காலங்களில் சுதாரித்து எழக் கூடிய அளவிற்கான சரிவு இல்லை... மிக மோசமான சரிவு. ஆசிரியர்களுக்கு, காவல் துறைக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு சரிவு.  ஆசிரியர்கள் வெகுண்டெழுந்து, கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஒலிம்பிக் சுடரோட்டத்தில் புகுந்து, சுடரை கைப்பற்றி அதனை அணைத்தார்கள்.

olympic-torch-2.jpg

இத்துடன் கொசுவும் சேர்ந்துக் கொண்டது. ஆம், கொசு மூலம் ஸிகா என்னும் நோய் பரவத்துவங்கியது. சராசரியாக அந்த நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு, 157 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒலிம்பிக் நடக்கும் ரியோ பகுதியில் மட்டும் 26,000 பேரை இந்த நோய் தாக்கி இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் தலைகள் சிறியதாக, மூளை வளர்ச்சி இன்றி இருந்தன... நாடே இப்படியான பாதிப்பில் இருக்கும் போது, நமக்கு இந்த ஒலிம்பிக் தேவையா என்றார்கள்...?

ஒரு பக்கம் நிலத்திற்கான போராட்டம், இன்னொரு பக்கம் சீட்டுக்கட்டாய் சரியும் பொருளாதாரம், மற்றொரு பக்கம் ஆயிரக்கணக்கான மரணங்கள். ஸிகா வைரஸ் ஏற்படுத்திய சோகங்கள்... இத்தகைய சூழலில்தான், அங்கு பலரின் குருதியை குடித்து ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.

பதக்கப்பட்டியலில் நம் நாட்டு பெயர் வருமா என்று, நாம் ஆவலாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க...  'நமக்கு அடுத்த மாதமாவது சம்பளம் வருமா' என்று ஒரு பிரேசிலிய அரசு ஊழியரும், 'வீட்டை விட்டு வெளியே செல்லும் மகன் மீண்டும் வீடு வருவானா..' என்று ஒரு பிரேசிலிய தாயும், 'தங்களுக்கு உரிமையான  இடம் மீண்டும் கிடைக்குமா' என்று என்று ஒரு ஆப்ரிக்க பிரேசிலேயே வம்சத்தில் வந்தவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பின் குறிப்பு:

'ஒரு நாட்டின் உருவாக்கத்தில், பொருளாதார முன்னேற்றத்தில், நாகரிக வளர்ச்சியில் சில பிழைகளும் இருக்கும் தானே... கரைப்படியாத நாடுகள் எத்தனை... குருதி நாற்றம் அடிக்காத வளர்ச்சி என்று ஏதாவது இருக்கிறதா என்ன... ஏன் உலகமே கொண்டாடும் ஒரு போட்டி குறித்து இப்படி ஒரு கட்டுரை...?' -இது போன்ற எண்ணங்கள் உங்களுக்குள் எழுந்தால், மன்னிக்கவும். யாரையும், எவரையும், எவற்றையும் களங்கப்படுத்த வேண்டும் என்பது விகடனின் நோக்கம் அல்ல. எப்போதும் வென்றவர்களின் வாழ்வு மட்டும் தான் வரலாறு ஆகிறது. அதன் பின்னால் இருப்பவர்களை, இருந்தவர்களை, அவர்களின் இன்னல்களை புரிந்துக் கொள்ளாமல் அடுத்தக் கட்ட வளர்ச்சி என்பது இல்லை. அலெக்ஸ் ஹாலி அமெரிக்க கருப்பினத்தவர்களின் வரலாறை ‘Roots' என்னும் நாவல் மூலம் பதியாமல் போயிருந்தால், மனசாட்சி உள்ள இக்கால வெள்ளை அமெரிக்கர்களுக்கே, கருப்பினத்தவர்களின் இன்னல்கள் தெரியாமல் போயிருக்கும், ஏன் ஒபாமா கூட அந்நாட்டின் அதிபர் ஆகாமல் போயிருக்கலாம். ஒரு விஷயத்தை அனைத்து பரிமாணங்களிலும் புரிந்துக் கொள்வோம். அப்போதுதான் அந்தப் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்திலேனும் கவனமாக எதையும் திட்டமிட முடியும். அதுதான் பொதுவெளியில் அனைவருக்குமான நலனாக இருக்கமுடியும்!

http://www.vikatan.com/news/coverstory/67027-rio-olympic-and-sad-tale-of-afro-brazilians.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.