Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சிறுகதை

Featured Replies

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சிறுகதை

பொள்ளாச்சி அபி, ஓவியங்கள்: ஸ்யாம்

 

''ஏய் சரசு... மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!'' - சிவகாமி இரைந்தாள்.  

அதிர்ந்து நிமிர்ந்த சரசு அத்தை, கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, ''தள்ளுங்க... தள்ளுங்க... கொஞ்சம் இருங்க வர்றேன்...'' என்றபடி அவசரமாகக் கைகளால் விலக்கிவிட்டு எழுந்து ஓடினாள்.

சரசு அத்தைக்கு ஏறக்குறைய 35 வயது இருக்கும். வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருப்பதால், உருவிவிட்டாற்போல கிண்ணென இருந்தாள். படக்கென உட்கார்வதும், நிமிர்வதும்... அப்படியே அம்மாவுக்கு நேர் எதிர். என்ன... நிறத்தில் அம்மாவைவிட கொஞ்சம் கம்மி. அவ்வளவுதான்!

பள்ளி விட்டதும் வீட்டில் ஓடியாடி விளையாடினாலும், இரவு உணவுக்குப் பின் சரசு அத்தையிடம் கதை கேட்காமல் நானும் அண்ணனும் தூங்குவதே இல்லை. அம்மாவும் சில சமயம் அப்பாவும், 'இது என்ன கெட்ட  பழக்கம்? சாப்பிட்டாச்சுன்னா போய்ப் படுத்துத் தூங்க வேண்டியதுதானே! தினமும் அவகிட்ட கதை கேக்குறதே பொழப்பாப்போச்சு...’ என்று சலிப்பாகவும், சில சமயம் கோபமாகவும் சொல்லிக்கொண்டே இருந்தாலும், நாங்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

'தூக்கம் வர்ற வரைக்கும்... கொஞ்ச நேரம்தாம்மா. அப்புறம் போய் படுத்துக்கிர்றோம்!’ என்று கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொல்வோம்.

p76c.jpg

சரசு அத்தை, அப்பாவுடன் பிறந்தவள் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு தூரத்து உறவினர் மூலம் எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்தவள். 'அவளைக் கட்டிக்கிட்டவன், 'எனக்கு ஒரு வாரிசைப் பெத்துக்குடுக்க வக்கில்லாத இவளைப் போய்க் கட்டினேன் பாரு’னு அடிக்கடி தகராறு செய்றான். ஒரு வருஷத்துக்கு முன்னாடி பொழப்புக்குனு ஏதோ ஒரு ஊருக்குப் போனவன், இன்ன வரைக்கும் வீடு திரும்பலை. அவன் உயிரோடுதான் இருக்கானானும் தெரியலை. ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு ஈரோடு பக்கத்துல இருக்கான்னும் சொல்றாங்க. இதுல உண்மை எது, பொய் எதுனு தெரியலை. அப்படியே போலீஸ்ல சொல்லி, அவனை பொள்ளாச்சிக்கு இழுத்துட்டு வந்து இவகூட சேத்துவெச்சாலும், திரும்பியும் ஓடிப்போக மாட்டான்னும், இவளைக் கொடுமைப்படுத்தாம நல்லா வெச்சுக்குவான்னும் என்னம்மா உறுதி இருக்கு?

பெத்தவங்களும் இல்லாம, இப்ப புருசனும் இல்லாம அநாதையா நிக்கிறா. ஒரு நல்ல குடும்பத்தை அண்டிப் பிழைச்சுக்கிட்டுமேனு தான் இவளை இங்கே கொண்டுவந்து விடுறேன் தாயி...’ என்று சரசு அத்தையை வீட்டுக்குக் கூட்டிவந்த கிழவி சொல்லிவிட்டுப் போனாள். அம்மாவைவிட எட்டு வயது குறைந்தவள் சரசு அத்தை. அதனால் தான், 'அத்தை’ என்று அழைத்துப் பழகிவிட்டோம். அதற்குக்கூட முதலில் ஆட்சேபம் தெரிவித்தாள் அம்மா.

'பின்னே எப்பிடிக் கூப்பிடுறதாம்..?’ நான்காம் வகுப்புப் படிக்கும் நானும், ஆறாம் வகுப்புப் படிக்கும் அண்ணனும் அம்மாவிடம் எதிர்த்துக் கேட்டபோது, 'ஏய் சரசு...’ என்று அவளைப்போலவே கூப்பிடச் சொல்ல, அவளுக்கும் மனம் வரவில்லை. அப்புறம் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அப்பா இது குறித்து ஒன்றும் கண்டுகொள்ள வில்லை.

துணிகளை எடுத்துப்போட்ட சரசுவுக்கு, மீண்டும் ஏதோ வேலை கொடுத்திருந்தாள் அம்மா. அத்தை திரும்ப வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தோம். கொல்லைப் பக்கம் எட்டிப் பார்த்தேன். சரசு அத்தை மரங்களுக்கு கீழே சேர்ந்திருந்த குப்பைகூளங்களைக் கூட்டிக்கொண்டிருந்தாள். வீட்டின் பின்புறம் மா, கொய்யா, சீத்தா எனப் பழமரங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் இருந்து அத்தை பறித்துத் தரும் பழங்கள் மட்டும் எப்போதும் தித்திக்கும். எப்படித்தான் அவளுக்கு அந்தப் பக்குவம் தெரிகிறதோ?!

சில நிமிடங்களில் சரசு அத்தை வந்து சேர்ந்தாள். ''மீனாட்சி... உனக்குத் தூக்கம் வரலை? டேய் ராமு... உனக்குமா தூக்கம் வரலை..?''

''தூக்கம் வர்ற மாதிரிதான் அத்தை இருக்கு. ஆனா, உன்கிட்ட கதை கேட்கணுமே... நீ சின்னக் கதையா ஒண்ணு சொல்லு. அப்புறமா போய்ப் படுத்துக்கிறோம்.'' - ராமுதான் பதில் சொன்னான்; நான் தலையாட்டினேன்.

'சின்னக் கதையா ஒண்ணு சொல்லு’ என்று ராமு சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. சிலசமயம் அத்தை கதை சொல்லத் தொடங்கினால், அது நீளமாக இருக்கும். அப்படித்தான் முதன்முதலாக, அவள் சொன்ன ஒரு கதை இரண்டு இரவு தாண்டிப் போனது. 'முன் ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்ததால் கடவுளால் சபிக்கப்பட்டு, இந்த ஜென்மத்தில் அரண்மனையில் பிறந்த ராஜகுமாரி ஒருத்தி, குழந்தையாக இருந்தபோதே கயவர்கள் சிலரால் கடத்தப்பட்டாள். துரத்திவந்த காவலர்களுக்குப் பயந்து ஒரு ஏகாலியின் குடிசைக்குள், குழந்தையைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அங்கு வளர்ந்து வந்தவள் குமரியாக மாறியபோது, ஒரு ராஜகுமாரன் பெண் கேட்டு வந்து, கல்யாணம் செய்துகொண்டு போனான். சில நாட்கள் அவளுடன் சந்தோஷமாக இருந்த ராஜகுமாரன் பின்னர் அவளை ஒதுக்கிவைத்துவிட்டு, வேறொரு நாட்டு ராஜகுமாரியைக் கல்யாணம் செய்துகொண்டான். இதனால் ஆத்திரமுற்ற ராஜகுமாரி அவனைப் பழிவாங்கத் திட்டமிட்டபோது, அவளைப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டான்.

சில நாள் கழித்து சிறையில் இருந்து தப்பிய ராஜகுமாரியால், அளவுக்கு அதிகமாக இருந்த காவல்களைத் தாண்டி ராஜகுமாரனை நெருங்கவே முடியவில்லை. அவன்தான் சகல அதிகாரங்களையும் கொண்டவனாயிற்றே. அதனால் எப்போதாவது இவனைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அவள் தற்போது தலைமறைவாக வாழ்ந்துவருகிறாளாம். எப்போது வேண்டுமானாலும் ராஜகுமாரியால் தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தோடு ராஜகுமாரன் இன்றைக்கும் வாழ்ந்து வருகிறான்...’ என்று அத்தை சொன்ன கதையில், 'ராஜாக்கள் காலத்தில் இருந்த ராஜகுமாரி இன்னுமா உயிரோடு இருப்பாள்?’ என்று எனக்குள் கேள்வியே எழவில்லை. என்றாவது ஒருநாள் அவள், ராஜகுமாரனைப் பழிவாங்கிவிட்டாள் என்று தகவல் தெரிந்தால், சந்தோஷமாக இருக்கும் என்றே எனக்கு அன்று தோன்றியது.

ஆனால், இரண்டு நாளும் ராமு அந்தக் கதையை முழுதாகக் கேட்காமல், இடையிலேயே தூங்கிவிட்டிருந்தான். சரசு அத்தை சம்பவங்களை விவரிக்கும்போது, சந்தோஷம், துக்கம், கோபம், ஆத்திரம்... எனக் காட்சிக்கு ஏற்றபடி அவளது குரலிலும், முகபாவத்திலும் ஏற்படும் மாற்றங்களைப் பார்க்க, எனக்கு உற்சாகமாக இருக்கும். சொல்லப்போனால் அந்தப் பாவனைகளே, அவளுடைய கதைகளின் மீது எனக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது.

அதற்குப் பின் வந்த நாட்களிலும் அத்தை எப்போது கதை சொன்னாலும், அதில் கட்டாயம் ஒரு ராஜகுமாரி இருப்பாள். அவளின் கட்டளைக்குப் பணியாற்ற ஏராளமான அடிமைகள் இருப்பார்கள். அவர்களை ராஜகுமாரி அவ்வப்போது சவுக்கால் விளாசுவதும் உண்டு. ஒவ்வொரு கதையிலும் ராஜகுமாரியின் உடைகள் மிகவும் விலை உயர்வானதாக இருக்கும்.

p76b.jpg

10 யானைகள் அல்லது 50 குதிரைகள் அல்லது 100 பசுக்கள் அல்லது இவற்றுக்கு ஈடானதாக எதையேனும் கொடுத்துப் பெறப்பட்ட உடைகளாகவே இருக்கும். அரண்மனையில் நடைபெறவேண்டிய காரியங்களுக்கு, அவள்தான் எப்போதும் முடிவு எடுப்பாள். என்ன சமைக்க வேண்டும் என்பது உட்பட!

சரசுவை நாங்கள் எல்லாம் பிரியமாக அத்தை என்று அழைத்தாலும், அவள்  வேலைக்காரி என்றும் அவளுடன் ஒட்டி உறவாட வேண்டாம் என்றும் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். ஆனால், அம்மா கழித்துப்போட்ட பழைய சேலைகளையே உடுத்திக்கொண்டு, கிழிந்த கோரைப் பாயை விரித்து உறங்கும் அவளிடம் கதைகள் கேட்கும் எங்கள் ஆவல் மட்டும் தீரவே இல்லை; அதேபோல அவளிடம் இருந்த கதைகளும் தீரவே இல்லை.

நான் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றதும் என்னை கல்லூரியில் சேர்க்க அப்பா அலைந்துகொண்டிருந்த நேரம். அண்ணனின் ரசனைகளும் வெகுவாக மாறி, அவன் அத்தையிடம் கதை கேட்பதும் நின்றுபோனது. இந்த நேரத்தில், சற்றே விவரம் தெரிந்தவளாக நான் வளர்ந்துவிட்டதால், எனக்காக மட்டும் சில கதைகளையும் அத்தை சொல்லியிருக்கிறாள்.

அந்தக் கதைகளில் ஒன்றை நான் இன்னும் மறக்கவே இல்லை!

'ஒரு ராஜகுமாரி தன் நாட்டை மீட்பதற்காக, மற்றொரு ராஜாவிடம் உதவிகேட்டு அடைக்கலமாகப் போய்ச் சேர்கிறாள். அது அங்கு இருந்த ராணிக்குப் பிடிக்கவில்லை. எனினும், சகல அதிகாரங்கள்கொண்ட ராஜாவை எதிர்த்து அவளால் பேச முடியவில்லை. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜா, ராஜகுமாரியிடம் 'சீக்கிரமே உதவி செய்கிறேன்’ எனச் சொல்லியே அவளையும் பலவந்தப்படுத்திக் கெடுத்து, ஒரு மனைவியைப்போல வைத்துக் கொண்டானாம்.

அந்த ராஜாவையும் பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த ராஜகுமாரி, நாளடைவில் பல சந்தர்ப்பம் கிடைத்தும், பழிவாங்க முடியவில்லையாம். காரணம், அந்த ராஜாவின் குழந்தைகள், ஒரு தாயைப்போல எண்ணி ராஜகுமாரியிடம் பாசமாக இருந்தார்களாம். சரி... எதிர்காலத்தில் என்ன நடக்குமோ அப்படியே நடக்கட்டும் என்று, விதியை எண்ணி நொந்தபடியே அந்த ராஜகுமாரி இன்னும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறாளாம்.’

அத்தை சொல்லும் கதைகளில் சில இப்படித்தான் முடிவு இல்லாமல் நின்றுவிடும். 'கதைன்னா அதுல ஏதாவது முடிவு இருக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை மீனாட்சி...’ என்று ஒருமுறை அத்தை சொன்னதை நானும் ஏற்றுக்கொண்டேன்.

ஆமாம்தானே... மனித வாழ்க்கையில் ஒரு கதையின் சம்பவம்போல தொடங்கும் எத்தனையோ நிகழ்வுகள் முடிவற்றுத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன? நான் கல்லூரிப் படிப்பை முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பின், மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணேசனுடன் காதல் ஏற்பட்டது. இரு பக்கத்து பெற்றோர்களின் வசையுடனும், சாபத்துடனும் எங்கள் காதல் திருமணத்தில் முடிந்தது. என் கணவரை அவர்  வேலைசெய்த கணிப்பொறி நிறுவனம், அமெரிக்காவில் இருந்த அதன் தலைமை அலுவலகத்துக்குப் பதவி உயர்வில் அனுப்ப, நாங்கள் அமெரிக்கவாசி ஆகிவிட்டோம். இடையே 10 ஆண்டுகள் ஓடிவிட்டன.

p76a.jpgகடந்த ஆண்டு அப்பா இறந்துவிட்டார்.சொத்துக்குப் போட்டி இல்லாததால் வீட்டு நிர்வாகம், தோட்டம், வியாபாரம் எல்லாம் அண்ணன்தான் பார்த்துக்கொள்கிறான். இப்போது சொந்தம் இறுகியிருந்தது. வயதின் மூப்பால் மிகவும் தளர்ந்துபோன அம்மா, மூட்டுவலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். கட்டிலைவிட்டு அவள் இறங்குவது இல்லை. அவளுக்குத் துணையாக சரசு அத்தை, வேலைக்காரர்கள் புடைசூழ வீட்டில் இருக்கிறாள். இப்போது எல்லாம் அம்மாவுக்கும், அத்தை கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறாளோ என்னவோ?

எனது இரண்டு குழந்தைகளுடன், அம்மாவைப் பார்த்துவருவதாகச் சொல்லி, அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன். வீட்டின் முன்பாக காரில் இருந்து இறங்கும்போதே, அண்ணனும் அண்ணியும் ஓடிவந்து வரவேற்றனர். அம்மாவிடம் நலம் விசாரித்தபோது, அப்பாவின் பிரிவு, அவளது இயலாமை, அங்கலாய்ப்பு என அரை மணி நேரம் மூச்சுவிடாமல் அழுகையினூடே பேசித் தீர்த்தாள்.

அம்மாவை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறும்போது, அவ்வளவு நேரம் வரை அருகில் நின்றுகொண்டி ருந்த சரசு அத்தையின் கைகளைப் பற்றிக்கொண்டேன். இருவரும் மெதுவாக வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு இருந்த பழ மரங்கள் முன்பைக் காட்டிலும் நன்றாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தன.

சரசு அத்தைக்கும் வயதாகிவிட் டது. அவள் முகத்தில் முன்புபோல எப்போதும் நிலவும் விரக்தி, சோகம் எதுவும் இல்லை. பரிபூரண அமைதி. அது, அவளை இன்னும் அழகாகக் காட்டியது.

''அத்தை... எப்படி இருக்கீங்க..?'

'நீதான் பாக்குறியே மீனாட்சி... நான் நல்லா இருக்கேன்!''- குரல்கூட மிக நிதானமாக, கம்பீரமாக அவளிடம் இருந்து வெளிப்பட்டது.

''இன்னைக்கு ராத்திரி ஏதாவது ராஜகுமாரி கதை சொல்றீங்களா..?'' - சிரித்துக்கொண்டே கேட்டேன். எனது சிரிப்பில், சரசு அத்தையின் உள்மனசு தெரியும் என்ற அர்த்தமும் இருந்தது.

''இப்போலாம் எனக்கு எந்த வேலையும் கொடுக்காம, உங்க அம்மாவும், அண்ணணும், நல்லா பார்த்துக்கிறாங்க மீனாட்சி. இந்த வீட்டுலே என்ன செய்யணும்னாலும் என்னையும் கேட்டு, சம்மதம் வாங்கிட்டுத்தான் செய்றாங்க. ஒரு ராணி மாதிரி வாழ்க்கை போயிட்டு இருக்கு. மனசுக்கு நிம்மதியா இருக்கு. சொல்லப்போனா... இப்பல்லாம் எனக்கு ராஜகுமாரி கதையே தோணுறது இல்லை'' என்றாள் அத்தை.

அவள் பதிலில் எனக்கு ஆச்சர்யம் இல்லை!  

http://www.vikatan.com/anandavikatan/2014-sep-10/stories/98499.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.