Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல நோக்கங்களைக் கொண்ட கிழக்கு படை நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப் போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது.

கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது.

கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக்கத்தை வலுப்படுத்த முடியுமென்பதும் இனவாதிகளின் திட்டமாகும். இதற்காகவே வடக்கு- கிழக்கை தனித்தனியாகப் பிரித்தவுடன் கிழக்கில் தமிழரின் பலத்தை குறைக்கும் நடவடிக்கையில் அரசு மிகத் தீவிரம் காட்டுகிறது.

கிழக்கில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாது செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இஷ்டப்படி செயற்பட முடியுமென்பதும் அரசின் திட்டமாகும். அத்துடன், புலிகளை இராணுவ ரீதியில் கிழக்கில் பலமிழக்கச் செய்த பின் அங்கு அரசியல் காய்நகர்த்தல்களும் ஆரம்பமாகியுள்ளன.

திருகோணமலையிலுள்ள பாரிய எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு வழங்கிய அரசு தற்போது திருமலை சம்பூரில் அனல் மின் நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் தொடங்கவுள்ளது. புத்தளம் நுரைச்சோலை பகுதியில் இவ்வாறானதொரு அனல் மின் நிலையத்தை அமைக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டும் இன்று வரை கடும் எதிர்ப்பால் அந்தத் திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் மூதூர் கிழக்கை கைப்பற்றிய அரசு, சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது. மூதூர் கிழக்கை படையினர் கைப்பற்றும் வரை இவ்வாறானதொரு திட்டம் பற்றியே சிந்திக்கப்படாத நிலையில் அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட பின்னர் அவசர அவசரமாக அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சுவீகரித்துச் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ளன.

இதற்கு இந்தியாவும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் இலங்கையுடன் இந்த அனல் மின் நிலையம் தொடர்பாக ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்த ுவிரட்டியடிக்கப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்காது அந்த இடங்களை ஆக்கிரமித்து எதுவித எதிர்ப்புமின்றி இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்தி அப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொள்வதே அரசின் திட்டமாகும்.

கிழக்கை தனியாகப் பிரிப்பதன் மூலம் வட பகுதியின் செல்வாக்கிலிருந்து அதனை விடுவிக்கும் அதேநேரம், மத்திய அரசின் செல்வாக்கை அங்கு நேரடியாகச் செலுத்தி தமிழ் பேசும் மக்களின் பலத்தை குறைப்பதுடன் இந்தியா போன்ற நாடுகளையும், இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சம்பந்தப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் புலிகளின் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விடலாமெனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கை கைப்பற்றியதன் மூலம் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க முற்படும் அரசு, தற்போது திருமலையில் பாரிய நிலப்பரப்பில் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. திருமலைத் துறைமுகத்தை மையமாக வைத்து பெருமளவு நிலத்தை சுவீகரித்து இந்த முதலீட்டு திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் திருமலை நகரில் தமிழ் மக்கள் வாழும் பெருமளவு நிலப்பரப்பை சுவீகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருமலை நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலீட்டுத் திட்டமென்ற பெயரில் திருமலை நகரில், தெற்கிலிருந்து சிங்களவரைக் கொண்டு வந்து குடியேற்றும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகின்றன.

தற்போது கிழக்கில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளும், இவ்வாறு பல இரகசியத் திட்டங்களை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படை நடவடிக்கை மூலம் திருமலை நகருக்கு சமீபமாக மூதூர் கிழக்கிலிருந்த மக்கள் இன்று விரட்டியடிக்கப்பட்டு மட்டக்களப்பு புறநகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஒரு சில மாதங்களில் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு தற்போது நூறு கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மூதூரில் கடும் சண்டை நடைபெற்ற போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். அங்கு மோதல்கள் முடிவடைந்த மறுநாளே அங்கு மக்கள் திரும்பி வந்து விட்டனர். ஆனால், மூதூர் கிழக்கிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, கதிரவெளி, வாகரைப் பகுதிகளில் வந்து தங்கியிருந்தனர். ஆனால், இன்று அங்கிருந்தும் விரட்டப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

கிழக்கில் தற்போது இடம்பெறும் பாரிய நடவடிக்கைகள், அங்கிருந்து புலிகளை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டாலும், அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வடக்கு- கிழக்கை பிரிப்பதுடன் மட்டுமல்லாது கிழக்கிலிருந்து திருகோணமலையை தனியாகப் பிரித்து எதிர்காலத்தில் வேறு ஒரு மாகாணத்துடன் கூட சேர்த்துவிடும் நோக்கங்களிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து விட வேண்டுமென்பதில் அரசுடன் சேர்ந்தியங்கும் முஸ்லிம் தலைவர்களும் குறியாகவிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தபோது அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 வீதமாகும். கிழக்கு இன்று தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டதால் கிழக்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்று 33 வீதமாகும். குடியேற்றத் திட்டங்கள் மூலம் சிங்களவரின் எண்ணிக்கை 23 வீதமாகும்.

இதனால், வடக்கும் கிழக்கும் இணைந்திருந்ததை விட கிழக்கு தனியான போது தங்களுக்கு எல்லாவகையிலும் வாய்ப்புகள் பெருமளவில் கிடைக்குமென முஸ்லிம்கள் கருதுவதால் கிழக்கிலிருந்து திருகோணமலையை தனியாகப் பிரித்தாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை.

அதேநேரம், புலிகளை கிழக்கில் மிகவும் பலவீனப்படுத்தி விடுவதன் மூலம் இவற்றுக்கெதிராக தமிழர்கள் குரலெழுப்புவதை தடுத்து விட முடியுமென்றும் அரசு கருதுகிறது.

கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றுவதன் மூலமே வடக்கிலிருந்து கிழக்கை பிரித்ததற்கான பலன்களை தாங்கள் பெற முடியுமென அரசு கருதுகிறது. கிழக்கில் புலிகள் மிகவும் பலமாயிருக்கும் போது வடக்கு- கிழக்கை பிரித்து கிழக்கிற்கு தனியான மாகாண சபையை அமைத்து அதனை இயங்கச் செய்ய முடியாதென்பது அரசுக்கு நன்கு தெரியும். இதனால் தான் அங்கு தனக்குச் சார்பாக ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களைத் தனது பிடிக்குள் அரசு வைத்திருக்கின்றது.

கிழக்கிலிருந்து புலிகளை விரட்டியடித்த பின்னர் வடக்கிலிருந்தும் புலிகள் விரட்டியடிக்கப்படுவரென அரசு கூறுவதானது, கிழக்கில் தாங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதுடன் பொதுவாகவே புலிகளுக்கு எதிராக இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க மேற்கொண்டுள்ள திட்டங்களென அனைவரையும் நம்பவைக்கும் முயற்சியாகும்.

கிழக்கில் திருமலை மாவட்டத்தை படையினர் தங்கள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த மாவட்டத்தை கிழக்கிலிருந்து பிரித்து தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்தவாறு அங்கு தங்கள் இஷ்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அரசின் திட்டமாகும். இதற்காகவே முதலில் திருகோணமலை மாவட்டத்தை புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியது.

இதனால், தான் மூதூர் கிழக்கிலிருந்து கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று வரை தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படாது வாகரையிலிருந்தும் விரட்டப்பட்டு மட்டக்களப்பிற்குள் தள்ளப்பட்டனர். இதனால், வாகரைக்கு வடக்கே தற்போது புலிகள் நிலை கொண்டுள்ள கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியை படையினர் கைப்பற்றினாலும் திருகோணமலையிலிருந்து, குறிப்பாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படுவார்களா என்பது மிகப் பெரும் கேள்வியாகும்.

கிழக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கும் போது புலிகளின் அச்சுறுத்தல்கள் இருக்கக் கூடாதென்பதற்காக தற்போது அம்பாறையிலும் விஷேட அதிரடிப் படையினர் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அம்பாறையில் புலிகள் நிலை கொண்டிருந்த கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கடந்தஇரு வாரங்களாக அதிரடிப் படையினர் படை நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அரசு பெரும் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

திருகோணமலையிலிருந்தும் அம்பாறையிலிருந்தும் புலிகளை வெளியேற்றி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. இதனால், தினமும் இப் பகுதிகளில் படையினர் பல்வேறு பகுதிளினுள்ளும் முன்னேறிச் சென்று நிலப் பிரதேசங்களை பிடித்து வருகின்றனர். இதன் மூலம் படையினர், தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுத பலத்திற்கப்பால் அகலக் கால் வைத்து வருகின்றனர்.

குறிப்பிட்டளவு படையினர் முன்னர் ஒரு சில முகாம்களிலிருந்தவாறு பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்வதும் அதன் மூலம் சில பிரதேசங்களுக்குச் சென்று விட்டு மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்புவதுமாயிருந்தனர்.

ஆனால், தற்போதுஅரசியல் தேவைகளுக்காகவும் நில ஆக்கிரமிப்புக்காகவும் இவர்கள் பாரிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் நூறு கிலோ மீற்றர் தூரத்திற்கு பரந்து விரிந்து சென்றுள்ளதுடன் ஒவ்வொரு பகுதியிலும் முகாம்களை அமைத்து நிலைகொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, பரந்து விரிந்து அகலக் கால் வைத்துள்ள படையினர் ஒவ்வொரு இடத்திலும் குறைந்த எண்ணிக்கையானவர்களைக் கொண்டே முகாம்களை அமைத்து நிலை கொண்டிருப்பதுடன் அடர்ந்த காடுகள், மக்கள் எவருமேயற்ற பிரதேசங்களில் விநியோகப் பாதைகளையும் பேண வேண்டியிருக்கும். இதனால், இனிமேல் இவர்கள் இலகுவாகத் தாக்கப்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

வாகரையை படையினர் கைப்பற்றியுள்ளனர் , அதற்கு வடக்கே கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியில் தற்போது புலிகள் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் நிலை கொள்ளும் வாய்ப்பு குறைவு. இதனால், அடுத்து வரும் நாட்களில் கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியையும் கைப்பற்றி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான ஏ15 தரை வழிப் பாதையை இராணுவம் இணைத்துவிடக் கூடும்.

எனினும், மூதூர் கிழக்கில் சம்பூர் முதல் பனிச்சங்கேணி வரையான சுமார் 70 கிலோ மீற்றர் தூரப் பிரதேசத்தை கைப்பற்றுவதன் மூலம் இப்பகுதிகளில் மேலதிகமாக ஆயிரக் கணக்கான படையினரை நிறுத்தி 24 மணி நேரம் இப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இராணுவத்தில் மிகப் பெரும் பகுதி கிழக்கில் நிறுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஆட்பலமும் அதிகளவில் தேவைப்படுகிறது.

இந்தப் போர் நிறுத்த காலத்தில் அண்மைக் காலமாக படையினரே தொடர்ந்தும் பாரிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுவரை புலிகள் தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டுள்ளனர். இந்தப் படை நடவடிக்கைகள் போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதால் இனி புலிகளும் பாரிய பதில் தாக்குதல்களில் இறங்கக் கூடும்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் மிகவும் வலுவாக உள்ளனர். பல முகாம்களை அமைத்து அவர்கள் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறையில் இது போல் அவர்கள் முகாம்களை வைத்திருக்கவில்லை. அங்கு அவர்கள் நகரும் முகாம்களையே வைத்திருக்கின்றனர். அடர்ந்த காடுகளினுள் வலுவான முகாம்களுள்ளன.

தேவைக்கேற்ப அவர்களது நகரும் முகாம்கள் இடம்மாறும். கஞ்சிகுடிச்சாறு பகுதியில் முன்னரும் அடிக்கடி அதிரடிப் படையினர் புலிகளின் பகுதிகளுக்குள் செல்லும் போது அங்கிருந்து நகரும் புலிகள், அரதிரடிப்படையினர் திரும்பிச் சென்றதும் மீண்டும் அங்கு வருவர். ஆனால் இம் முறை அதிரடிப் படையினர் பெருமளவில் அங்கு சென்று தாங்கள் சென்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். விநியோகங்களை மேற்கொள்வதற்காக சிறு சிறு முகாம்களையும் அமைத்துள்ளனர்.

புலிகள் இருந்த சிறிய சிறிய கொட்டில்களை பிடித்த படையினர் புலிகளின் பாரிய தளங்களை தாங்கள் கைப்பற்றியிருப்பதாக ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போரில் அரசும் படைத்தரப்பும் பிரசாரப் போரை முடுக்கிவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் இந்த அரசு குறித்து ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இவ்வாறு கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதிக்குள் சென்ற அதிரடிப்படையினருக்கான விநியோகங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட, பக்கிமுட்டி முகாம் மீது புலிகள் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட பத்து படையினர் கொல்லப்பட்டதுடன் பத்து பேர் படுகாயமடைந்தனர்.

இனிமேல் இதுதான் நடக்கப்போகிறது. அகலக்கால் வைத்துள்ள படையினருக்கான விநியோக முகாம்களும் வாகனத் தொடரணிகளும் தாக்குதலுக்குள்ளாகப் போகின்றன. புலிகளின் மிகவும் சக்திவாய்ந்த `கிளேமோர்கள்' அண்மைக்காலமாக படையினருக்கு பெரும் சிம்மசொப்பனமாயிருப்பதால் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரிக்கப் போகின்றன.

புதிய ஜனாதிபதி ,புதிய அரசு, புதிய படைத்தளபதி ,புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலர் ,புதிய கூட்டுப் படைக் கட்டளைத்தளபதி என எல்லோருமே புதியவர்களென்பதால் இவர்களுக்கு கடந்த கால போரியல் அனுபவங்கள் மிகக் குறைவென்பது தற்போதைய படைநடவடிக்கைகள் மூலம் தெரிகிறது. இதனால்தான் இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் நன்கு அவதானித்து வரும் புலிகள் தற்போது தற்காப்புச் சமருடன் மட்டும் நிற்கின்றனர். இன்னும் தங்கள் தாக்குதல் சமரை ஆரம்பிக்கவில்லை.

வடக்கு - கிழக்கில் ஒரு புறம் மக்கள் மத்தியில் பெரும் உளவியல் போரும் நடத்தப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவை ,மிகப் பெரும் அச்சுறுத்தல்கள் மூலம் தடுக்கும் உளவியல் போரே அதுவாகும். கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதலென மிகவும் அச்சமூட்டும் நடவடிக்கைகள் மூலம் மக்கள் மிகப்பெரும் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டுள்ள அதேநேரம் மறுபுறம் பாரிய படைநடவடிக்கைகள் மூலம் உயிரழிவுகள், சொத்தழிவுகள், மிகப்பெரும் இடப்பெயர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

கிழக்கில் இவ்வாறான பாரிய படை நடவடிக்கைகள் இடம் பெறும் போது தெற்கில் குறிப்பாக கொழும்பில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாமென்ற அச்சத்தில் நாடு முழுவதும் தினமும் பாரிய சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் நடைபெறுகின்றன.

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெற்ற தேடுதல்களில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், `தடுப்புக்காவல் உத்தரவு' (டி.ஒ.) போடப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாதக்கணக்கில் `டி.ஒ.' போடப்பட்டு நூற்றுக்கணக்கானோரை சிறைகளில் அடைப்பதற்கு சில முக்கிய காரணங்களுண்டு. கைது செய்யப்பட்டவர்களில், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலி உறுப்பினர்களும் இருக்கலாமெனக் கருதும் அரசு, அவர்களை புலிகளென இனங்காண முடியாவிட்டாலும் கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் அடைப்பதன் மூலம் அந்த தாக்குதல் திட்டத்தை தடுத்து விடலாமெனக் கருதுகிறது.

இவ்வாறு சகல வழிகளிலும் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கிறது. போர் நிறுத்த உடன் படிக்கை அமுலிலிருக்கையில் இவ்வாறான பாரிய படை நடவடிக்கைகள் ஏனெனக் கேட்கவோ கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதலைத் தட்டிக் கேட்கவோ திராணியற்று சர்வதேச சமூகம் வாய் மூடி நிற்கிறது.

இந்த நிலையில் புலிகளின் ெமளனம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறது. புலிகள் குறித்த பிரசாரங்கள் உண்மையோ எனத் தமிழர்கள் பலர் தங்களுக்கிடையே கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். மிகவும் பலவீனமடைந்து விட்டதால் புலிகளால் இனித் தற்காப்புச் சமரைக் கூடநடத்த முடியாதென்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுவதுடன் கிழக்கில் புலிகளை சரணடைந்து விடுமாறு அரசும் படைத்தரப்பும் அறிவித்து வருகின்றன. இது உளவியல் போரின் உச்சக்கட்டமாகும்.

ஆனாலும் வடக்கில் `ஏ-9' பாதையை திறப்பதற்காக 1996 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படைநடவடிக்கையை ஆரம்பித்து அதற்கேற்பட்ட கதியே `ஏ-15' பாதையை (திருமலை - மட்டக்களப்பு) திறக்கும் முயற்சியில் ஈடுபடும் படையினருக்கும் ஏற்படலாமென்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

வடக்கில் அகலக் கால் வைத்த படையினரும் இன்று கிழக்கில் அகலக்கால் வைத்துவரும் படையினரும் எவ்வாறான விளைவுகளை சந்தித்தனர், சந்திக்கப்போகின்றனரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

thanks:www.nerudal.com

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் ஆகும் என்றுதானே விடுதலைப் போராட்டம் தொடங்கினது. இப்படி ஆகுதே என்று இப்பவும் புலம்பிக் கொண்டிருப்பதிலும்.. சர்வதேச விளிப்புணர்வோடு அவர்களின் ஆதரவோடு நாம் இவற்றைத் தடுத்து நிறுத்த முயல வேண்டும்.

1. இராணுவ வழிகளுக்கு இராணுவ வழியிலும்

2. அரசியல் அணுகுமுறைகளுக்கு அரசியல் அணுகுமுறையிலும்

3. இராஜதந்திர அணுகுமுறைகளுக்கு இராஜதந்திர அணுகுமுறைகளிலும் அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்த முயல வேண்டும்.

1987 இல் திலீபன் அண்ணாவின் ஐந்தம்சக்கோரிக்கைகளிலேயே வடக்குக்கிழக்கு குடியேற்றங்களை நிறுத்துதல் முக்கியம் பெற்றிருந்தது என்பதை வரலாற்றில் காணலாம். அப்ப இருந்தே கிழக்கின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. இருந்தும் தொடர்ந்து கிழக்கு பலவீனமான களமாகவே தமிழர் தரப்புக்கு விளங்குகிறது. இந்த நிலையை போர்நிறுத்தம் மாற்றும் என்று பார்த்தால் கருணாவின் பிளவு அதில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணிவிட்டது.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அவற்றைச் சவாலாக எடுத்து தென் தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களின் பாரம்பரிய நிலம் பறிபோவதை எனியும் அனுமதிக்கக் கூடாது.

இராணுவ அழுத்தங்களுக்கு கிழக்கில் அதிரடிதான் எனிச் சரி. முன்னர் மன்னாரை ஆக்கிரமித்த படையினரை தொடர் அதிரடி மூலம் விலக வைத்த யுக்திகள் குறைந்த இழப்போடு எதிரியின் இராணுவ அணுகுமுறைகளை முறியடிக்க உதவும்.

அரசியல் அணுகுமுறைகளில் தமிழ் தேசியக் கூட்டணி என்ன செய்கிறது என்பது யாருக்கும் தெரியாது. முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்குச் சென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யும் போது எம்மவர்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கின்றனர். மேற்கு நாடுகள்.. சிங்கப்பூர் மலேசியே என்று சிறீலங்காவுடன் வர்த்தகப்போட்டியில் உள்ள நாடுகளுடன் நாம் கைகோர்க்கவும் நெருங்கி ஒத்துழைக்கவும் மக்கள் பிரதிநிதிகளாக எம்பிக்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.

கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டணி கருணா கும்பலின் செயற்பாட்டு அஞ்சிக் கொண்டிருப்பதிலும் தங்களின் அரசியல் ஸ்தம்பிதம் குறித்து சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வர முயல வேண்டும். அதன் மூலம் அரசுக்கு அழுத்தங்கள் போக வேண்டும்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் மேற்கூறிய எல்லா வழிமுறைகளையும் பாவித்தே வருகின்றனர். அது எனித் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ரம்புக்வெலவே பகிரங்கமாகச் சொல்லிவிட்டார் கிழக்கு பூரணக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வடக்கில் இருந்து புலிகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று. ஆக கிழக்கே இப்போ இலங்கையின் இனப்பிரச்சனையின் மூலமாக விளங்குகிறது. வடக்கு கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறது எனலாம்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.