Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை

Featured Replies

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை

ஜெயமோகன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யாநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

p90a.jpg

`அது சாத்தியமா?' என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையில் இருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை, கஷ்டப்பட்டுத் தான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. கணக்குகள் போடப்படும்போது எல்லா கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை, நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ, விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும்போதுகூட, பத்து நிமிடங்களுக்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத் தகவல் குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ்கிறோம்.

ஆகவே, புறங்கையில் தற்செயலாக வந்து படிந்த நுரைக்குமிழியை கூடுமானவரையில் உடைக்காமல் அதன் வண்ணங்களைப் பார்க்கும் மனநிலையில்தான் நான் இருந்தேன். அனுதாபமான புன்னகையுடன் “அற்புதம்” என்று அவரிடம் சொன்னேன்.

அரை மணி நேரம் முன்னர்தான் விமானப் பணிப்பெண் வந்து அவரிடம் விமானத்தின் ஜன்னல் கதவைச் சாத்தும்படி பணிவுடன் ஆணையிட்டுப் போனாள்.

அவர் “மன்னிக்க வேண்டும்... மன்னிக்க வேண்டும்” என்று சொன்ன பிறகு, விமானத்தின் உள்ளே அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டு இருப்பதைத் திரும்பிப் பார்த்தார். அவர் ஜன்னலை மூடுவதற்காக, பணிப்பெண் அங்கேயே முன் இருக்கையில் கைவைத்து உடலை சற்றே வளைத்து வரையப்பட்டது போன்ற புன்னகையுடன் காத்து நின்றாள்.

அவர் ஜன்னல் கதவை கீழே இறக்கும்போது கைகள் சற்று நடுங்குகின்றனவா என எனக்கு சந்தேகமாக இருந்தது. இறக்கி மூடிவிட்டு “மன்னிக்க வேண்டும்” என்று மீண்டும் அவர் சொன்னார்.

ஜப்பானிய முகம். ஒவ்வொரு சொற்றொடருக்குப் பின்னாலும் சற்றே உடல் வளைத்து வணக்கம் சொல்வது போன்ற ஜப்பானிய பாவனை. ஜப்பானியர்கள் பணிவானவர்கள் என்ற சித்திரத்தை உலகம் எங்கும் அளிப்பது அது. அந்தப் பணிவுக்குப் பின்னால்தான் உலகத்தின் மிக ஆணவம்கொண்ட, இனமேட்டிமை மனநிலைகொண்ட மக்கள் பிரிவு ஒன்று இருக்கிறது என்பதை, என்னைப்போல் உலகம் முழுக்கச் சென்று வணிகம் செய்பவர்கள் அறிந்திருப்பார்கள்.

p90.jpg

அவர் தன் இரு கைகளையும் கோத்து மடியில் வைத்துக்கொண்டார். அவை நடுங்கிக்கொண்டே இருந்தன. உதடுகள், மிகவும் வெளிறி தோல் நிறத்துக்கே வந்துவிட்டிருந்தன. மஞ்சள் இனத்துக்கு இருப்பதே சிறிய உதடுகள். அவை நிறம் இழந்தபோது இருப்பதே தெரியாமல் ஆயின.

பணிப்பெண் “நன்றி” என்று சொல்லி, அச்சிடப்பட்ட ஒரு புன்னகையை மீண்டும் அளித்துவிட்டு நடந்து சென்றாள்.

ஜன்னல்கள் மூடப்பட்டபோது, விமானத்தின் ஓசை அதிகரித்ததுபோல் ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. விமானத்தில் பெரும்பாலானவர்கள், கண்களுக்கு மேல் ஒளிமறைப்பானை இழுத்துவிட்டுக் கொண்டு மல்லாந்து தூங்கிக்கொண்டி ருந்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் மது வகைகள் சுழன்று சுழன்று வந்திருந்தன.

ஜப்பானிய நபர், மிகவும் நடுங்குவதை உணர்ந்தேன். `அவ்வளவாகக் குளிரவில்லையே!' என எண்ணியபடி, மேலே குளிர்ந்த காற்று வரும் குழாயைப் பார்த்தேன். அது மூடப்பட்டு இருந்தது. அவர் முகம் வெளிறி இருப்பதை மீண்டும் நோக்கினேன். குளிரில் புல்லரித்ததுபோல் கழுத்திலும் காதுகளுக்குப் பின்பக்கமும் மயிர்ப்புள்ளிகள் தென்பட்டன. என்னை நோக்கி மங்கலாகப் புன்னகை புரிந்துவிட்டு, மீண்டும் திரும்பிக்கொண்டார். `அவரை நோக்கக் கூடாது' என முடிவுசெய்து, நான் கால்களை நீட்டியும் உடலை விரித்தும் சாய்ந்து அமர்ந்தேன்.

அவர் தன் நடுங்கும் விரல்களை, விமானத்தின் ஜன்னல் கதவின் மேல் வைத்தார். அவை துள்ளி விழுபவைபோல நடுங்குவதைப் பார்த்தேன். `ஒருவேளை இவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருக்குமோ?!' அவர் தன் உடலை நன்கு வளைத்து ஜன்னல் கதவு அருகே தலையை வைத்துக் கொண்டார். பின்னர் அதிர்ந்துகொண்டிருந்த அந்த விரல்களால் கதவை மெள்ளத் திறந்தார். உள்ளே சரிவான ஒளி வந்து என் மடியிலும் கால்களிலும் விழுந்தது. வெளியே உச்சிப் பொழுதாக இருக்க வேண்டும். அந்தச் சிறிய இடைவெளி வழியே அவர் தன் முகத்தை வைத்து, வெளியே பார்த்தார்.

ஒரு கணம் எனக்குக் கோபம் தலையை நிறைத்தது. திரும்பத் திரும்ப இத்தகையவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கு, எந்த விதி இருந்தாலும் அதைச் சற்றேனும் மீற முடியுமா எனப் பார்ப்பவர்கள். ஒரு வரிசை என்றால், குறைந்தது ஒருவரையாவது தாண்டிச் சென்றாக வேண்டும். ஒரு சோதனை என்றால், எதையாவது ஏமாற்றியாக வேண்டும்.

பொதுவாக, கள்ளத்தனம் என்பது  இந்தியர்களின் குணம். ஆப்பிரிக்கர்களும் விதி மீறுவார்கள். ஆனால்,  எதிர்த்து மூர்க்கமாகச் சண்டையிடுவார்கள். ஆனால், தென்கிழக்கு நாட்டவர்களில் கொரியர்கள், தாய்வான்காரர்கள், சிங்கப்பூர் காரர்கள், ஜப்பானியர்கள் அனைத்து விதிகளுக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பதைப் பார்த்திருக்கிறேன். விதிகளை மீறுகிறார் என்றால், அவர் வேறு வகை ஆள். விதிகளை மீறுவதையே தொழி லாகவும் வாழ்க்கையாகவும் கொண்டவர். அவர் சிறிய விதிகளை மீறுவது இல்லை.

ஜன்னலின் கீழ் விளிம்பின் இடைவெளியினூடாக வந்த ஒளியை, பணிப் பெண்ணுக்குத் தெரியாதபடி தன் தலையால் முழுக்க மறைத்துக்கொண்டு வெளியே பார்த்தபடி வந்தார். அதற்காக உடலை மிக விசித்திரமாக மடித்திருந்தார். கால்களும் வழக்கத்தை மீறிய வகையில் ஒடிந்தவைபோல் தெரிந்தன. சூட்கேஸுக்குள் வைத்த பிணம்போல என நினைத்துக்கொண்டதுமே அதைத் தவிர்த்தேன்.

பணிப்பெண் எங்களைக் கடந்து சென்றாள். அவள் அவரைப் பார்க்கிறாளா எனப் பார்த்தேன். அவள் இயல்பாகத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றாள். அவள் கோணத்தில் ஜன்னல் கதவை அவர் திறந்திருப்பது தெரியவில்லை என்று யூகித்தேன். அப்படியென்றால், மிகத் திறமையான உத்தி அது. இதை, பலமுறை இவர் செய்து பார்த்திருக்கிறார். இப்போது பணிப்பெண் பார்வையில் ஜன்னல் மூடி இருக்கிறது. விதி அமலில் இருக்கிறது. ஆனால், அவருக்குத் தெரியும் அதை அவர் மீறியிருக்கிறார் என்று. `என்ன சிறுமை இது?' என முதலில் சிரிப்பாக இருந்தது. பின்னர், மெல்லிய குரூரம் ஒன்றை அடைந்தேன்.
 
அவர் தோளில் தட்டி, “மன்னிக்க வேண்டும். ஜன்னல்களை மூடும்படி சொல்லப்படுகிறது. மூடுங்கள்” என்றேன்.

அவர் “மூடுகிறேன், மன்னிக்க வேண்டும்” என்று பணிவுடன் சொன்னார். ஆனால் மூடவில்லை.

நான் மீண்டும், “தயவுசெய்து ஜன்னலை மூடுங்கள். இது விதி” என்றேன்.

“மூடுகிறேன் இதோ…” என்று அவர் மீண்டும் சொல்லிவிட்டு, ஜன்னல் கதவில் கையை வைத்து மூடுவதுபோல் ஒரு பாவனை செய்தார். கை, மிக நன்றாகவே நடுங்கி அதிர்ந்தது. கதவு கீழ் இறங்கவில்லை.

நான் என் கையை அதில் வைத்து கீழே தள்ளத் தொடங்கியபோது, அந்த இடைவெளியில் தன் கையை வைத்து மூடி கீழ் இறங்காமல் தடுத்துக் கொண்டார்.

“தயவுசெய்து… தயவுசெய்து…” என்றார்.

“ஏன் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று நான் கேட்டேன்.

“என்னை மன்னியுங்கள். வெளியே வெயில் இருக்கிறது. அது எனக்கு வேண்டும்” என்றார்.

“ஆம், வெளியே உச்சிப் பொழுது இப்போது” என்றேன்.

“நான் அதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

“அங்கு என்ன தெரியும்? கண்கள் கூசும் வெளிச்சம் மட்டும்தான் இருக்கும். இந்த உயரத்தில் மேகங்கள்கூட இருக்காது. அதில் என்ன பார்க்கிறீர்கள்?” என்றேன்.

பதறியபடி “இல்லை, நான் பார்க்க வேண்டும். வெளிச்சத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.
 
“பைத்தியக்காரத்தனம்!” என்று சொல்லி, “கையை எடுங்கள். விதி என்பது, இந்த இருக்கையில் இருக்கும் நம் மூவரையுமே கட்டுப்படுத்தும்” என்றேன்.

எனக்கு அப்பால் விளிம்பு இருக்கையில் முழு போதையில் வாய் திறந்து தவளைத் தொண்டை அதிர தூங்கிக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு “அவருக்குத் தெரியாது” என்றார்.

“ஆம். ஆனால் எனக்குத் தெரியும். நான் விதிகளைக் கடைப்பிடிப்பவன்” என்ற பிறகு, அவர் தடையாக வைத்திருந்த அந்தக் கையைப் பிடித்து விலக்கிவிட்டு, மூடியை இழுத்து நன்றாக மூடினேன்.

அவர் நடுங்கத் தொடங்கியதில் தொடைகள் துள்ளின. கைகூப்புவதுபோல இரு கைகளையும் சேர்த்தபடி என்னிடம், ``தயவுகாட்டுங்கள்... என் மேல் தயவுகாட்டுங்கள்” என்றார்.

“உங்களுக்கு என்ன செய்கிறது? மது வேண்டுமா?” என்றேன்.

“இல்லை. நான் மது அருந்துவது இல்லை'' என்றார்.

“என்னதான் பிரச்னை உங்களுக்கு?” என்று நான் மீண்டும் கேட்டேன்.

“எனக்கு பகல் வேண்டும். கதவுகளை மூடிவிட்டால், இரவாகிவிடுவதுபோல் இருக்கிறது” என்றார்.

“ஆம். இங்கு உள்ளே இருப்பவர்களின் பெரும்பாலானவர்களின் உடல்களுக்கு இது இரவு. எனக்கும்கூட இரவுதான்” என்றேன்.

“அது தெரியும். ஆனால், நான் பகலில் இருக்க விரும்புகிறேன். பகலுக்காகத்தான் இந்த விமானத்தில் பயணம் செய்கிறேன்” என்றார்.

நான் அவரை நோக்கி “பகலுக்கு என்றால்…” என்றேன்.

“நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்வீர்களா என எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் பகலில் இருக்கிறேன்” என்றார்.

நான் அவர் கண்களைப் பார்த்தேன், சற்றே நீர் நிறைந்ததுபோல் தோன்றியது. போதை அடிமைகளின் கண்கள் அப்படித்தான் இருக்கும். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. மிகுந்த அச்சத்தில் பேசுபவர்போல குரலும் நடுங்கியது. “தயவுசெய்யுங்கள். இந்தக் கதவைத் திறந்துவைக்க என்னை அனுமதியுங்கள்” என்றார்.

திறக்காவிட்டால் இறந்துவிடுவார் என எண்ணிக்கொண்டேன். “சரி” என்று திரும்பிக் கொண்டேன். அவர் ஜன்னல் கதவை நான்கு விரல் அளவுக்கு மேலே தூக்கி, அவர் தேர்ந்திருந்த வகையில் முகத்தை அந்தப் பிளவில் பொருத்தி வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அந்த நடுக்கம் நின்று, இல்லாமலாகி, தசைகள் மெள்ள விடுபடத் தொடங்கின. தூக்கத்தில் இருப்பதுபோல அமைதியான சீரான மூச்சுடன் அவர் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். `தூங்கிவிட்டாரா..?' என, குனிந்து அவரைப் பார்த்தேன். அவர் உதடுகள் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. தூங்கவில்லை. `போதை அடிமையேதான்!' என நான் எண்ணிக்கொண்டேன்.

என் தொழில்முறைப் பயணங்களில் பல வகையான விருந்துகளில் பங்கெடுப்பது உண்டு. தென்கிழக்கு நாடுகள் முழுக்க, உயர்நிலை விருந்து என்றாலே போதை இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை எக்ஸ்டஸி வரிசை மாத்திரைகள். கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரத்தை மூளையில் செலுத்திக்கொள்வதுதான் இன்று உலகம் முழுவதும் வழக்கம். மாத்திரைகளின் பேரரசான அமெரிக்கா அழிந்து, மின்கருவிகளின் பேரரசாக சீனா எழுந்து வந்துவிட்டது. சில மின்சார வருடல்கள், காது முரசுக்கும் செவிடாகிவிடும். இரண்டு ஆள் உயரமான ஒலிபெருக்கி பெட்டியின் முன்னால் சென்று நின்று, அதை காதலியாக நினைத்துத் தழுவியபடி நடனமிடும் போதைகொண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கு, காரம் போதவே போதாது. பச்சைமிளகாய்களை மெல்வார்கள். இவருக்கு ஒளி போலிருக்கிறது.

அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். அப்போது இரவில் இருந்தேன். இரவுக்கு உரிய ஒலிகள், குளிர், இரவுக்கு உரிய மெல்லிய தூசு கலந்த நீராவி மணம். எங்கு இருக்கிறேன் என வியந்தபடி விழித்துக் கொண்டபோது ஆறாயிரம் பேர் அமர்ந்திருக்கும் வசதிகொண்ட இரண்டு அடுக்கு அணுவெடிப்பு விசை விமானத்தின் பெருங்கூடத்தில் அரை இருள் பரவியிருந்தது. என் முழங்காலும் இடது கையும் மட்டும் ஒளியுடன் இருந்தன. திரும்பிப் பார்த்தபோது ஜப்பானியர் அந்த இடைவெளி வழியாக வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

முதலில் அவர் இறந்து மடிந்திருக்கிறார் என்ற அனிச்சையான எண்ணம் வந்தது. அதன் பிறகுதான் தூங்குவதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்பது நினைவில் எழுந்தது. உண்மையில் `இவருக்கு என்ன சிக்கல்?' என எண்ணிக்கொண்டே அவரைப் பார்த்தேன். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்போல் இருந்தார். முகம் அமைதிகொண்டிருந்தது. விரல்களின் நடுக்கம் மறைந்திருந்தது. `நான் இரவில் இருக்கையில், அவர் பகலில் இருக்கிறார்' என எண்ணிக்கொண்டேன். வெளியே சூரியன் தகதகக்கும் உச்சிப்பொழுது. ஆனால், என் உடல் இரவில் இருக்கிறது. சீவிடுகளின் ரீங்காரத்தையும், புழுதி மணமும் நீராவியும் கலந்த காற்றையும், நட்சத்திரங்களையும் தனக்குள் இருந்து அது எடுத்துக்கொள்கிறது.

என் செல்பேசியில், வழக்கமாக இந்தியாவின் நேரத்தையே வைத்திருப்பேன். கைக்கடி காரத்தில்தான் செல்லும் இடத்தின் நேரம். இந்திய நேரம் எனக்கு முக்கியமானது. வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நேரங்களில் பயணம் செய்யும்போது, உடல் தன் தாளத்தை மறந்து விடாமல் இருக்க வேண்டும். அதற்கு நான் திட்டமிட்டு அதன் இரவை அதற்கு அளிக்க வேண்டியிருக்கிறது. இந்த உடலின் இரவில் நான் நன்றாகத் தூங்கிச் செல்லும் இடத்தில் சூரியனின் இரவில் சென்று இறங்க வேண்டும். என் உடலுக்குள் அப்போது சூரியன் உதித்திருக்கும். ஆனால் இந்த ஜப்பானியர்…
 நான் அவர் தோளை மெதுவாகத் தொட்டேன். அவர் அதை அறியவில்லை. மீண்டும் ஒருமுறை மெள்ளத் தட்டினேன். திடுக்கிட்டு விழித்துக் கொண்டு “மன்னிக்க வேண்டும்” என்றார். உலகத்திடம் இடைவிடாத மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருக்கிறார் என நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னது அப்போதுதான் என் மனதில் தெளிவாக உறைத்தது.

p90b.jpg

“ஒன்றும் இல்லை. நீங்கள் பகலுக்காக ஏன் இப்படி ஏங்குகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?” என்று அவர் கண்களை நோக்கியபடி கேட்டேன்.

என் கேள்வியால் அவர் திடுக்கிட்டதுபோல வாய் திறந்து, விழிகள் அசையாமல் உற்றுப்பார்த்தார். நான் “மன்னிக்க வேண்டும். தவறாகக் கேட்டுவிட்டேன்” என்று சொல்லித்  திரும்புவதற்குள் என் கை மேல் தன் கைகளை வைத்தார்.

“இல்லை… இல்லவே இல்லை” என்றார். அவரது கைகள், பாத்திரம் கழுவிக் கொண்டிருந்ததைப்போல் நனைந்து குளிர்ந்து இருந்தன.

“உங்களுக்கு உடல் நலம் இல்லையா?” என்றேன்.

“நன்றாகத்தான் இருக்கிறேன். ஆனால், எனக்கு சற்று நரம்பு சிக்கல்கள் உண்டு” என்று அவர் சொன்னார்.

`தெரிகிறது’ என எண்ணிக் கொண்டேன்.

“நான் சூரியன் இல்லாமல் வாழ்வது இல்லை” என்றார்.

நான் அவரை கூர்ந்து பார்த்தேன்.

“எப்போதும் என் வானத்தில் சூரியன் இருக்க வேண்டும். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக் கிறேன்” என்றார்.

“எத்தனை வருடங்களாக?” என்றேன்.

“இருபத்தியெட்டு வருடங்களாக. என் பதினெட்டு வயது முதல்…” என்றார்.

அவர் என்னிடம் விளையாடுகிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், அப்படித் தெரியவில்லை. விளையாடுகிறார் என்றால், உலகின் தலைசிறந்த நடிகர் அவர்.

“அதாவது நீங்கள் ்இருபத்தியெட்டு வருடங்களாக எப்போதும் எங்கோ ஒரு ஊரில் பகலில் இருந்துகொண்டிருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன்.

“பெரும்பாலும் விமான நிலையங்களில், விமானத்தில்!” என்றார்.

நான், அவர் விளக்கட்டும் எனக் காத்திருந்தேன். “சூரியன்் இருபத்து நான்கு மணி நேரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. ஒரு விமானம் ்இருபத்து நான்கு மணி நேரத்தில் டோக்கியோவில் கிளம்பி சிங்கப்பூர், மும்பை, துபாய், அமெரிக்கா வழியாக மீண்டும் டோக்கியோவுக்கே வரும் என்றால், அதன் அருகே எப்போதும் சூரியன் இருந்து கொண்டிருக்கும் அல்லவா?”

நான் “ஆம்” என்றேன்.

“ஆனால்...'' என நான் தொடங்குவதற்குள், “இன்றைய அணு ஆற்றல் விமானங்கள், மிக விரைவானவை; மணிக்கு ஆயிரத்து இருநூறு மைல் வேகத்தில் பறப்பவை. ஆயினும் பயணிகள் விமானத்தில் சென்றால் எனக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எட்டு மணி நேர இழப்பு ஏற்படும். தனியார் விரைவு விமானத்தை ஏற்பாடு செய்துகொண்டு அதை ஈடுகட்டிவிடுவேன். ஆகவே, நான் பூமியின் ஒளிமிக்க பக்கத்தில் மட்டுமே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

``28 ஆண்டுகள் என்றால், 365-ஐ 28-ல் பெருக்க வேண்டும். அத்தனை முறை நீங்கள் உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன்.

``ஆம். ஆனால், உலகம் எப்படி இருக்கிறது என எனக்குத் தெரியாது. பெரும்பாலும் நான் விமானநிலையத்தில் தான் இருக்கிறேன். எப்போதாவது சில மணி நேரம் நகரங்களுக்குள் செல்வேன். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வேன். உடல், நலம் இல்லாதபோது சிலமுறை மருத்துவர்களைப் பார்த்திருக் கிறேன். மற்றபடி விமான நிலைய அறைகள்தான்.

உங்களுக்குத் தெரியும் உலகம் முழுக்க விமான நிலையங்கள் ஒன்றுபோலவே இருக்கும். எனக்கு ஒரே விமான நிலையத்துக்குள் வந்து இறங்கி, மீண்டும் விமானத்தில் ஏறுவதாகவே தோன்றுகிறது. எந்த விமான நிலையம் என்பதை என் மனம் உணர்வதே இல்லை. இன்று நான் சிங்கப்பூருக்குச் சென்று இறங்கும்போது உச்சிப்பொழுதாகி இருக்கும். ஒன்றரை மணி நேரத்தில் மும்பை விமானத்தைப் பிடிப்பேன். அங்கு இரண்டு மணிக்கு இறங்குவேன். அங்கு இருந்து துபாய், அமெரிக்கா. சில தருணங்களில் தனியார் விமானங்கள் பிந்தும். எப்போதும் மாற்று பயணச்சீட்டு போட்டிருப்பேன்.”

நான் சற்று சலிப்புடன் அசைந்து அமர்ந்தேன். உண்மையில் நான் இணையத்தில் இருந்து அத்தனை விமான அட்டவணைகளையும் தரவிறக்கி, விமானங்களின் வேகத்துடன் அவற்றை ஒப்பிட்டு, சரியான ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அலுப்பாகவும் இருந்தது. மேலும், இந்த மெலிந்த நரம்புநோய் கொண்ட ஜப்பானியரை, அவ்வளவு தூரம் ஆராய்ந்து புரிந்து கண்டுபிடித்து என்ன அடையப்போகிறேன்?

ஆங்காங்கே பலர் ஜன்னல் மூடிகளை மேலே தூக்கத் தொடங்கினர்.  பாய்ந்து அவரும் ஜன்னல் மூடியைத் தூக்கிவிட்டார். சூரிய ஒளியை, பாலைவனத்தில் செல்பவன் தண்ணீரைப் பார்த்ததுபோல், அவர் பாய்ந்துசென்று அள்ளிக்கொள்வதைப் பார்த்தேன். வாயைத் திறந்து அதைக் குடிக்கிறார் எனத் தோன்றியது. அருவியில் நீராடுபவர்போல ஒளியில் தலையைக் காட்டினார். உடம்பை, கை-கால்களைக் காட்டினார். அவருக்கு ஏதேனும் நோய் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அதற்காக வாழ்நாள் எல்லாம் பயணம் செய்வார்களா என்ன?

``நீங்கள் பெரும் பணக்காரராக இருக்க வேண்டும்” என்றேன்.

அவர் என்னிடம், ``உண்மை. என் தந்தை பழைய ஜப்பானின் அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருந்தார். அவர் இறக்கும்போது நான் உலகின் முக்கியமான கோடீஸ்வரர்களில் ஒருவனாக இருந்தேன்.”

ஜப்பான், சீனாவுடன் இணைந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னர் ஜப்பானிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர்கள், பூமியை விலைபேசிக் கொண்டிருந்தனர்.

“உங்கள் குடும்பம்?” என்றேன்.

``நான் திருமணம் செய்துகொள்ளவில்லை” என்றார் அவர். `நல்லது' என நான் நினைத்துக் கொண்டேன். நான் நினைப்பதை அவர் உணர்ந்தது போல சிரித்தபடி, “விமானப் பணிப்பெண்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். முன்பொருமுறை, ஒருத்தி தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டாள். அவள், தான் அதிகமாக என்னுடன் செலவிட முடியும் என்றாள்.”

அவரால் சிரிக்க முடியும் என்பதை கண்டேன். பல் வரிசைகள் சீராக இருந்தன. ஜப்பானியர்களுக்கு, சோழி அடுக்கிவைத்ததுபோல் பற்கள் இருக்கும். இவை சிறிய வெண்ணிறப்பற்கள்.

அவர் ஒரு பழைய கதையைச் சொல்லப்போகிறார் எனத் தெரிந்தது. அதை நானே கேட்பது அநாகரிகம். ஆனால், அவ்வளவு சொன்ன பிறகு அதைச் சொல்லாமல் அவரால் இருக்க முடியாது. அது எனக்கு முக்கியம் இல்லை என்பதுபோன்ற பாவனையை நான் மேற்கொண்டாக வேண்டும்.
எனவே, ``இதனால் உங்கள் உடலுக்கு பிரச்னை ஏதும் இல்லையா?” என்றேன்.

அவர் “என்ன பிரச்னை?” என்றார்.

“இல்லை... உயிரிகளின் உடல் இரவும் பகலும் கொண்டது. இரவையும் பகலையும் தூக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் நீங்கள் ஓரளவு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பகலிலேயே வாழ்வது என்பது…” என்ற பிறகு, “அதிலும் பெரும்பாலும் நீங்கள் சூரிய வெளிச்சத்திலேயே இருக்கிறீர்கள்” என்றேன்.

“ஆம். முடிந்தவரை வெயிலைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். வெயில் படாத இடங்களில் நான் இருப்பது மிகக் குறைவுதான். நல்ல வேளையாக இன்றைய விமான நிலையங்கள் அனைத்தும் மின்சார சேமிப்புக்காக சூரிய ஒளியை உள்ளே விடுவதுபோல்தான் அமைக்கப் பட்டிருக்கின்றன” என்றார்.

“கண்கள் மட்டும் அல்ல, தோலும் சூரியனை அறிகிறது. இவை இரண்டுக்கும் தொடர்பு இல்லாமலேயே மூளை, சூரியனை அறிகிறது.புறஊதாக்கதிர்கள், அகச்சிவப்புக்கதிர்கள்…” என்றேன்.

``நீங்கள் சொல்வது உண்மை. மனித உடல் சூரியனை அறிகிறது. அதைக் கொண்டு இரவையும் பகலையும் பகுக்கிறது. எனக்கும் அந்தப் பிரச்னைகள் இருந்தன. நான் பகலில் வாழ ஆரம்பித்தபோது தலைக்கு மேல் இருக்கும் சூரியனைப் பிடிவாதமாக மறுத்து, என் உடல் இரவை நடிக்க ஆரம்பிக்கும். ஆனால், ஓரிரு மாதங்களுக்குள் உடலும் புரிந்துகொண்டது. இப்போது அது எப்போதும் பகலில்தான் இருக்கிறது. எப்போதும் இருக்கும் பகலில்தான் தூங்குகிறேன். நான் தூங்குவது மிகக் குறைவுதான்; ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம். அதுவும் சேர்ந்தாற்போல் அல்ல.”
 
திடீரென எழுந்த குரூரமான ஓர் உணர்வால் உந்தப்பட்டு நான் அவரிடம், ``இன்னும் எத்தனை காலம் இப்படி வானில் இருப்பீர்கள்?” என்றேன்.

அவர் புன்னகையுடன் “ஒரு நாள்” என்றார்.

“எனக்கு இருப்பது ஒரு நாள்தான். அந்த முடிவற்ற நாளில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

`என்ன நோய்?' என நான் கேட்கவில்லை. ஒளியுடனோ, இருளுடனோ தொடர்புடைய ஏதோ ஒரு நோய் என நான் எண்ணிக் கொண்டிருந்தபோது, அவர் “ரத்தப் புற்றுநோய்” என்றார். என் எண்ண ஓட்டத்தைக் கூர்மையாக வெட்டி, “எனக்கு அல்ல..!” என்று சேர்த்துக்கொண்டார்.

“ரத்தப் புற்றுநோய், ஜப்பானில் மிக அதிகம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நூற்றைம்பது  ஆண்டுகளுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த பிறகு, அந்தப் பகுதியில் புற்றுநோய் பல மடங்கு அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில்கூட தலைமுறை தலைமுறையாகவே குழந்தைகள்கூட புற்றுநோயில் செத்துக்கொண்டி ருக்கின்றன.”

“புற்றுநோய் யாருக்கு?” என்றேன்.

அவர் சில கணங்களுக்குப் பிறகு, “என் இளமைக் காதலிக்கு” என்றார்.

நான் அதை ஓரளவுக்கு யூகித்திருந்தேன்.

“அகேமி என்றால் ஜப்பானிய மொழியில் சுடர். நானும் அவளும் ஒரே வயது... ஒரே ஊர், ஹிரோஷிமாவுக்கு அருகில்தான். ஒரே பள்ளியில் படித்தோம்... ஒரே தோட்டத்தில்தான் விளையாடினோம்.

நான் இளமையிலேயே ஆரோக்கியமான குழந்தையாக இல்லை. மெலிந்த வெளிறிய உடல். இளமையிலேயே நரம்புச் சிக்கல்கள் இருந்தன. என் குடும்பத்தால், பொத்திப் பொத்தி வளர்க்கப் பட்டேன். பாதுகாவலர்களுடன்தான் பள்ளிக்கூடத்துக்குச் செல்வேன். வீட்டில் எப்போதும் வேலைக்காரர்களுடன்தான் வாழ்ந்தேன். `வெளி உலகம்' என்ற ஒன்று இருப்பதும், அங்கு என்ன நிகழ்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. என் வெளி உலகமே அவள்தான். எங்களைப்போலவே பணக்காரக் குடும்பம். என் குடும்பம் அவர்களுடன் தலைமுறை உறவு உடையது.”

அவர் பெருமூச்சுவிட்டார். “எங்க ஊரில் நோய்க்கான பரிசோதனைகள் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்பதால், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். வழக்கமாக, கதிரியக்கப் பாதிப்பால் வரும் புற்றுநோய் விரைவாகப் படராது. உடல் உபாதையாக நெடுநாள் நீடித்த பின்னரே உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாறும். மாறாக, அவளுக்கு லுக்கிமியா, உடலில் தீ போல பற்றி எரிந்து மேல் ஏறியது. நோய் அடையாளம் காணப்பட்டுவிட்ட எட்டு மாதங்களுக்குள் வெளிறி, நான்கு முறை கழுவப்பட்ட சுமி-இ ஓவியம்போல ஆகிவிட்டாள்.

மூக்கின் சவ்வு உடைந்து, ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. கண்கள் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டன. மருத்துவமனையில் கிடந்தாள். அவளுடன் நானும் இருந்தேன். பகலா... இரவா எனத் தெரியாத வார்டில் உடல் முழுக்க குழாய் களும் கருவிகளும் கம்பிகளும் பொருத்திக்கொண்டு படுத்திருந்த  அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சில சமயம் எண்ணப்பெருக்கு. சில சமயம் மனமே இல்லாமல் வெறும் வெண்ணிறமான புகைமூட்டமும் ரீங்காரமும்.

என்னிடம் எதையும் எவரும் சொல்லவில்லை. அவள் அம்மா உடன் இருந்தாள். என் அம்மா அடிக்கடி வந்து போவாள். என் அம்மா, உடன்பிறந்தவர்கள் இருவரையும் கணவனையும் அதே நோய்க்குப் பறிகொடுத்தவள். அவள் அம்மாவின் இரு சகோதரர்களும் கணவரும் இறந்த நோயும் அதுவே. ஆகவே, அவர்களுக்குக் கொந்தளிப்பு எதுவும் இல்லை. நான் அவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்களின் முகம் கொள்ளும் மாற்றம் வழியாகவே என்ன நிகழ்கிறது எனப் புரிந்துகொண்டேன்.

p90c.jpg

ஒருநாள் இரவில் அவளுடன் நான் மட்டும் இருந்தேன். அப்பால் தாதி ஏதோ செய்து கொண்டிருந்தாள். செவிலியர் வேறு அறைக்குள் பேசிக்கொண்டிருந்த ஒலி. அவள் என்னை, பெயர் சொல்லி அழைத்தாள் அல்லது அது என் பிரமை. அவள் குரலை இழந்திருந்தாள். நான் பார்த்தபோது அவள் உதடுகள் அசைந்தன. நான் எழுந்து சென்று, அவள் உதடுகள் அருகில் என் காதை வைத்தேன். அவள் மெள்ள ‘விளக்குகளை அணை’ என்றாள்.

நான் குழப்பமாக ‘ஏன்?' என்றேன். `விளக்குகளை அணை. ஒளி, என்னை எரிக்கிறது' என்றாள். நான் மீண்டும் ‘இந்த ஒளியா?’ என்றேன். மிதமான குளிர்ந்த மின்னொளி அது. ‘சூரிய ஒளி… அது என்னை உருக்குகிறது’ என்றாள். ‘தயவுசெய்து விளக்கை அணை’ என்றதும், நான் எழுந்து விளக்குகளை அணைத்தேன். ‘எல்லா விளக்கையும்' என்றாள். மேலும் விளக்குகளை அணைத்தேன். ‘முழு இருட்டு’ என்றாள். இறுதி விளக்கையும் அணைத்தேன். அவள் கண்கள் இருளுக்குள் மின்னி, மெள்ள அணைவதைக் கண்டேன்.

தாதி ஓடிவந்து ‘என்ன செய்கிறாய்?' என்றாள். விளக்குகளை ஒளிரச்செய்து அவள் பார்த்தபோது, நிலைகுத்திய விழிகளுடன் அவள் இறந்திருந்தாள். ‘என்ன செய்தாய்... என்ன செய்தாய் நீ?’ என்று தாதி கூச்சலிட்டாள். செவிலியரும் கூச்சலிட்டபடி ஓடிவந்தார்கள். நான் ‘இதுதானா?’ எனச் சொல்லிக்கொண்டேன். ‘இதுதான் இறப்பா?’ இறப்பு என்னும் சொல்லை உள்ளம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது.

பல நாட்கள் அந்தச் சொல்லில் வாழ்ந்தேன். அதை இப்போது சொல்லும்போது எளிதாக இருக்கிறது. இறப்பு என்னும் சொல் அல்ல இறப்பு என்பது. `ஃப்யூஜியாமா' என்ற வார்த்தையை எழுத்தில் படிப்பதற்கும், அந்த மாபெரும் எரிமலைக்கு முன் சென்று நிற்பதற்குமான வேறுபாடு. மன்னிக்க வேண்டும். நான் இதை இவ்வளவுதான் சொல்ல முடிகிறது. என்னைவிட சிறப்பாக ஓர் எழுத்தாளர் புனைக்கதையில் சொல்லிவிடக்கூடும்” என்றார்.

“என்னால் உணர முடிகிறது” என்றேன்.

“நான் மாதக்கணக்கில் என் இருண்ட அறைக்குள் வாழ்ந்தேன். கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்வேன். கைகளால் துழாவித்தான் மேஜையில் இருக்கும் காபிக் கோப்பையை எடுக்க முடியும். அத்தனை அடர்ந்த இருள். அதற்குள் மட்டுமே என்னால் வாழ முடிந்தது. என் அன்னை, பல மருத்துவர்களை அழைத்துவந்து என்னைக் காட்டினாள். நான் அந்த முடியாத இரவில் வாழ்ந்தேன்.

அப்போதுதான் ஒரு கனவு வந்தது. அவளைக் கண்டேன். கனவா அல்லது உருவெளித் தோற்றமா என இப்போது சொல்ல முடியாது. கண்ணாடிச் சிலையில் வெயில் பட்டதுபோல அவள் ஒளி கொண்டிருந்தாள். என்னிடம் ஏதோ சொன்னாள். என்ன சொல்கிறாள் என, அவள் உதடுகளை உற்றுப்பார்த்தேன். விழித்துக்கொண்டேன். உடனே அந்தச் சொல் தெளிவாக என் தலைக்குள் வெடித்தது. ‘ஒரு பகல்தானே?’ என அவள் கேட்டாள்.

ஒரு பகல். எனக்கு ஒரு பகல் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது. முதலில் அது ஒரு பெரும் நிம்மதியாக இருந்தது. பின்னர் இனிய எதிர்பார்ப்பு. ஆனால், நேரம் செல்லச் செல்ல என் உள்ளம் அச்சம்கொள்ளத் தொடங்கியது. ஒரு பகல். இன்னும் சற்று நேரம். அதன் பிறகு இருள். எனக்குள் அமர்ந்துகொண்டு யாரோ பித்துப்பிடித்தபடி பேசிக் கொண்டிருப்பதுபோல... நான் நினைத்தால்கூட அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்பதுபோல.

அஞ்சியும் தயங்கியும் எழுந்து சென்று ஒரு கதவைக் கொஞ்சம் திறந்தேன். கூரிய வாள்போல ஒளிக்கீற்று அறையை இரண்டாகப் பிளந்தது. என் உடல் நடுங்கியது. கண்களை மூடிக்கொண்டேன். விழுந்துவிடாமல் இருக்க ஜன்னல் கதவைப் பிடித்துக்கொண்டேன். ஒளியை என் உடலே உணர்ந்தது. என் திசுக்கள் எல்லாம் விரியத் தொடங்கின. சோடாநீர் போல குருதியில் கொப்புளங்கள் வெடித்து சிதறிக்கொண்டே இருந்ததை அறிந்தேன்.  கதவை மெள்ள திறந்து வெளியே வந்தேன். நன்றாக விடிந்து வெயில் பெருகிக்கிடந்த மே மாதப் பின்காலை. பறவைகள் அனைத்தும் வானில் இருந்தன. அவற்றின் குரல்களின் கலவை ஓசையைத் தொலைவில் கேட்க முடிந்தது. அவ்வப்போது தரையில் நிழல்களாகக் கடந்து சென்றன பறவைக் கூட்டங்கள். ஒளியில் எனக்குக் கண் கூசியது. கண்ணீர் வழிந்து பார்வையை மறைத்து தாடை வழியாக நெஞ்சில் சொட்டிக்கொண்டிருந்தது. அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன்.

நான் வெயிலைப் பார்ப்பதே அபூர்வம். வெயில் அப்படி உருகி வழிந்து ஒளிகொண்டிருக்கும் என அப்போதுதான் அறிந்தேன். சூரியனைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். சூரியனை எப்போதுமே நான் ஏறிட்டுப் பார்த்தது இல்லை. வானில் அப்படி ஒன்று இருந்து ஒளியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன். உண்மையில் கண்ணாடிகளில் அதைப் பார்த்திருக்கிறேன்; ஓவியங்களாகக் கண்டிருக்கிறேன்; கண்ணில் தற்செயலாக விழும் ஒளிப்பெருக்காக உணர்ந்திருக்கிறேன்.

பதினெட்டு வயதான ஒருவன், தன் வாழ்நாளில் முதல்முறையாக சூரியனை நிமிர்ந்து பார்த்தான். ‘எத்தனை மகத்தான ஒளிவட்டம்!’ என்றுதான் முதலில் தோன்றியது. பொன்னிற வட்டத்துக்கு உள்ளே உருகும் வெள்ளி வட்டம் அதற்குள் இளநீலம் அலையடிக்கும் ஒரு தலம். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மறைந்தது. மீண்டும் திறந்தபோது மிக அருகே என நானும் சூரியனும் மட்டுமே எஞ்சினோம்.

சொல்லப்போனால், சூரியனை நான் அப்போது வானத்தில் பார்க்கவில்லை. எனக்கு சமமான தூரத்தில் சற்று ஓடினால் தொட்டுவிடுவதுபோல என் அளவேயான ஒரு வட்டமாகப் பார்த்தேன். இதை ஒரு மனப்பிரமை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். நானும் அப்படித்தான் எண்ணினேன். ஆனால், எது பிரமை... எது உண்மை என்றெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்போம்? எது நமக்கு மகிழ்வளிக்கிறதோ, எது நம்மை வாழச் செய்கிறதோ அது உண்மை. அன்று முடிவுசெய்தேன் சூரியனுடன் இருக்க வேண்டும் என்று.

உடனே காரில் ஏறிக் கிளம்பினேன். மாலையில் சூரியன் அணைந்துவிடும். `சூரியனுடன் இருக்க வேண்டும். என்ன செய்வது... என்ன செய்வது..?' என எண்ணிக்கொண்டு காரில் அமர்ந்திருந்தேன். என் ஓட்டுநரிடம் `எப்போதும் சூரியனுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். அவன் துடிப்பான சீன இளைஞன். `சூரியனுடன் தொற்றிக்கொள்ள வேண்டியதுதான்' என்றான். டாங் காலகட்டக் கவிஞரான து-ஃபு அப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறாராம். சூரியனின் வாலைப் பிடித்துக்கொண்டு வானில் பறந்து கொண்டிருப்பதைப் பற்றி.''

``ஆம், மகாபாரதத்தில் நாகங்கள், சூரியனின் குதிரையின் வாலைப் பற்றிக்கொண்டு பறந்தன என்று கதை உண்டு” என்றேன்.

அவர் “அந்தக் கணமே நான் முடிவு செய்து விட்டேன், கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டே இருப்பது என்று. தலைக்கு மேல் எப்போதும் சூரியன் இருக்க வேண்டும். விமானங்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கின்றன எனப் பார்த்தேன். உடனடியாக, தனியார் விமானம் ஒன்றை பதிவுசெயதுகொண்டு டோக்கியோவில் இருந்து சிங்கப்பூர் வந்தேன். வரும் வழியிலேயே அடுத்தடுத்த விமானங்களைப் பதிவுசெய்து கொண்டேன். எனக்கு தேவையான அனைத்தையும் விமான நிலையங்களில் கொண்டுவரும்படி ஆணையிட்டேன். விமான நிலையங்களில் இருந்தபடியே எனது பங்குகளை முதலீடுசெய்து, எனக்கான வருவாயை பிற பொருளாதார விஷயங்களையும் சீரமைத்துக்கொண்டேன்.

நான் இன்னும் இருக்கிறேன். ஏன் என்றால் நான் இருந்துகொண்டிருப்பது ஒரு பகலில். இந்தப் பகல் முடிந்தால், நான் இறந்துவிடுவேன். ஆனால், இந்தப் பகலை நான் முடியவிடப்போவது இல்லை” என்றார்.

பேச்சு நிறைவுற்றக் களைப்புடன் உடலை மெள்ள நீட்டிக்கொண்டார். நான் அவரைப் பார்த்தபடி சொல் மறந்து அமர்ந்திருந்தேன்.

“உங்களுக்கு வியப்பாக இருக்கிறது எனக்குத் தெரியும்” என்றார்.

“ஆம், உண்மையில் ஏதோ புராணக் கதையைக் கேட்டதுபோல் இருக்கிறது” என்றேன்.

“எங்கள் புராணங்களில் இப்படித்தான் வரும்.ஒரு சாபம் கிடைக்கும். அதைத் தந்திரமாக ஜெயிப்பார்கள்.''

உடனே நினைவுக்கு வந்தது, “மார்க்கண்டேயன் என்பவன், அவனுடைய 16-வது வயதில் சாக வேண்டும். அவன் தனக்கு என்றும் 16 வயதாகவே இருக்க வேண்டும் என சிவனிடம் வரம் பெற்று காலத்தை வென்றான்” என்றேன்.

உடல் முழுக்கக் குலுங்க, கண்கள் இடுங்க சிரித்தபோது அவர் ஒரு சிறுவனாகியிருந்தார்.

நான், “உங்களுக்கு இறப்பே கிடையாது. இந்த விமானத்தில் இருக்கும் அத்தனை பேரும் முதுமை அடைந்து இறப்பார்கள். அணுவிசை விமானங்கள் மறைந்து நுண்வடிவ விமானங்கள் வரும். நாடுகள் இணைந்து உலகம் ஒன்றாகும். நிலாவிலும் செவ்வாய்க்கிரகத்திலும் மனிதர்கள் குடியேறுவார்கள். ஆனால், உங்கள் பகல் முடியவே முடியாது” என்றேன்.

“ஆம்” என்றார் அவர். ஆனால், சிரிப்பு மறைந்துவிட்டிருந்தது.

விமானம் சிங்கப்பூரில் இறங்கும் அறிவிப்பு வந்தது. சாய்ந்த இருக்கைகளை நிமிரச்செய்து இடைப்பட்டைகளைக் கட்டினோம். “ஜன்னல் மூடிகளை இறக்குங்கள்” என்று சொன்னபடி பணிப்பெண் சுற்றி வந்தாள். ஜன்னல் மூடியை இறக்கி விரல் அளவுக்கு இடைவெளிவிட்டு அதில் இரு விழிகளையும் பொருத்தி வெளியே பொழிந்த வெயிலை பார்த்துக்கொண்டு வந்தார்.

விமானம், அதிர்வுடன் தரையைத் தொட்டது. மாறுபட்ட இயந்திர ஓசையுடன் விரைந்து பலவிதமான சீழ்க்கைகளும் குலுக்கல்களுமாக நின்றது. சாங்கி விமான நிலையத்தை வந்தடைந் திருக்கும் தகவலை, ஒலிபெருக்கிப் பெண்குரல் சொன்னது. பயணிகள், சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை அடைந்தவர்கள்போலப் பாய்ந்து தங்கள் பெட்டிகளை எடுத்தார்கள்.

விமானப் பயணிகளிடம் இருக்கும் இந்தப் பதற்றத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக் கிறேன். எவரும் முந்திப்போய்விட முடியாது. அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே போவதைத் தீர்மானிப்பது, பெட்டிகள் வந்து சேரும் நேரமும்... பிற ஆவணப் பரிசோதனை வரிசைகளும்தான். ஆனாலும் விமானங்களுக்குள் முண்டியடிக்கிறார்கள், ஐந்து நிமிடம் என்றால் ஐந்து சொட்டு அமுதம் என்பதைப்போல!

விமானத்தின் ஜன்னல் திரையை மேலே ஏற்றிவிட்டுக்கொண்டு, கைகளைக் கட்டியபடி வெளியே பார்த்தபடி அவர் அமர்ந்திருந்தார். வரிசை நகரத் தொடங்கியது. நான் எழுந்து என் பெட்டியை எடுத்தேன். அவரும் எழுந்து தனது சிறிய கைப்பெட்டியை எடுத்துக்கொண்டார்.
நான், “சிங்கப்பூரில் இப்போது பன்னிரண்டு மணி” என்றேன்.

“ஆம், எனக்கு சிங்கப்பூர் நேரம் ஒன்றரை மணிக்கு மும்பை விமானம்” என்றார்.

ஏதோ ஒன்று எஞ்சியிருந்தது. சொல்ல, கேட்க. `என்ன... என்ன..?' என்று என் உள்ளம் முட்டிமுட்டி சலித்தது. வரிசையில் நின்றபோது அவர் எனக்குப் பின்னால் நின்றார். எனக்குள் அந்த எண்ணம் எழுந்ததுமே நான் அறியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தேன். என் விழிகள் அவர் விழிகளைச் சந்தித்ததும் அவர் திரும்பிக்கொண்டார். அவருக்கும் அது தெரியும் எனத் தெரிந்தது.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.