Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

54 ஆண்டு கால அன்பர் ஐ. தி. சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 


54 ஆண்டு கால அன்பர் ஐ. தி. சம்பந்தன்
ஐயாத்துரை திருஞானசம்பந்தன்  அவர்களை யாராவது அறிவீர்களா? ஐயாத்துரை சோமாக்கந்தமூர்த்தியை அறிவீர்களா? காரைநகரார், சைவத் தமிழ்த் தொண்டர், தொழிற்சங்கத் தலைவர், தமிழ் அகதிகளின் காப்பாளர், சிறை சென்றவர், எண்பதாண்டு அகவையைக் கடந்தவர்.
தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன், உலகறிந்த அவர் பெயர் ஐ. தி. சம்பந்தன். இலங்கை, தமிழகம், அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆத்திரேலியா எனப் பரந்து வாழும் தமிழரின் நெஞ்சங்களில் அன்பராயும் தொண்டராயும் நிறைந்து நிற்பவர்.
1962இல் சிற்பி சரவணபவன், வித்துவான் ஆறுமுகம், புலவர் சிவபாதசுந்தரம் ஆகியோர் கலைச்செல்வி இதழை வெளியிடத் தொடங்கினர். என் தந்தையாரின் ஸ்ரீ காந்தா அச்சகத்தில் முதல் இதழ் அச்சாயிற்று. தொடர்ந்து பல இதழ்கள் அச்சாகின. வித்துவான் ஆறுமுகமும் நண்பர்களும் ஸ்ரீ காந்தா அச்சகப் பகுதியைச் சில மாதங்கள் பொறுப்பேற்று நடத்தி வந்தனர். அக்காலங்களில் ஐ. தி. சம்பந்தன் ஸ்ரீ காந்தா அச்சகத்துக்கு வருவார். மெய்ப்புப் பார்ப்பார். அச்சகப் பணிகளை முடுக்குவார்.
சென்னையில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வருவேன். ஐ. தி. சம்பந்தன் உள்ளிட்ட கலைச்செல்விக் குழுவைச் சந்திப்பேன். அக்காலங்களில் ஐ. தி. சம்பந்தனை அறிவேன். கடும் உழைப்பாளியாகக் கண்டேன். தமிழ் மொழியில் ஓரளவு புலமை பெற்றிருந்தார். அச்சக நுணுக்கங்களைக் கற்பதில் ஆர்வம் காட்டிவந்தார்.
1963ஆம் ஆண்டு, கார்த்திகையில் காரைநகரைச் சேர்ந்த திரு. கதிரவேலு, எழுதுமட்டுவாளைச் சேர்ந்த திரு. அ. தில்லைநாதன், ஏழாலையைச் சேர்ந்த திரு. கந்தசாமி, மானிப்பாயைச் சேர்ந்த திரு. சீவரத்தினம் கொழும்புத்துறையைச் சேர்ந்த திரு. மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தன், இலங்கை வானொலியில் பமியாற்றிய மயிலிட்டி அருள் தியாகராசா, புண்ணியமூர்த்தி, ஆகியோருடன் கொழும்பில் அறிமுகமானேன்.
கொழும்பு, பம்பலப்பிட்டி, மெல்போர்ண் அவனியு 29ஆம் எண் இல்லத்தில் முனைவர் ஆ. கந்தையா அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அக்காலத்தில் அங்கு வரும் திரு. கதிரவேலு என்னை அழைத்தார். கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக்கினார். இந்து இளைஞன் இதழில் எழுதச் சொன்னார். தொடர்ந்து எழுதினேன். அதனால் இவர்கள் அறிமுகமாயினர்.
இலங்கை முழுவதும் பரந்த இந்து இளைஞர் அமைப்புகளை ஒரே குடையின் கீழ்க் கொணர்க, பணிகளை ஒருங்கிணைக்க என்ற அழைப்புத் தொனியில், பேராறு பெருங்கழகம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை, மேற்கூறியோரையும் சார்ந்தோரையும் என்பால் ஈர்த்தது.
1966ஆம் ஆண்டு ஐப்பசியில் அமைச்சர் மாண்புமிகு மு. திருச்செல்வம் அவர்களின் தனிச் செயலாளராகக் கொழும்பு வந்தேன். தந்தை செல்வநாயகம், திரு. மு. திருச்செல்வம் இருவரது இல்லங்களுக்கும் வருவோர்களுள் ஒருவராக ஐ. தி. சம்பந்தனை மீண்டும் சந்திக்கத் தொடங்கினேன். 1971இன்பின் திருமணமாகி, வெள்ளவத்தை, 344/1 காலி வீதி, மாடியில் குடியிருந்தார். நான் அங்கு அவரிடம் செல்வேன்.
1967 தை தொடக்கம் கொழும்பு, கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணி. கொழும்பின் வடக்கே கதிர்காமத் தொண்டர் சபை, விவேகானந்த சபை, நடுவே கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்கம், தெற்கே அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வாலிபர் சங்கம், சைவ மங்கையர் கழகம், கொழும்புத் தமிழச் சங்கம், வெள்ளவத்தை இராமக்கிருட்டிண மிசன் என எங்கும் ஐ. தி. சம்பந்தனின் தொண்டு துலங்கும், பணி பெருகும், குரல் ஒலிக்கும். அந்த அமைப்புகள் வேறு, ஐ. தி. சம்பந்தன் வேறு எனவாகா.
1971இன் பிற்பகுதியில் கொழும்பில் இலங்கை இந்து இளைஞர் பேரவையைத் தொடக்க ஐ. தி. சம்பந்தன் எனக்குப் பெரிதும் உதவினார். இலங்கையில் உள்ள அனைத்து இந்து இளைஞர் அமைப்புகளையும் ஒரே அணியாக இணைத்தேன்.
வெள்ளவத்தை, 41ஆவது ஒழுங்கையில் வழக்குரைஞர் திரு. உருத்திரமூர்த்தி அவர்களின் இல்லத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை கூடும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் ஐ. தி. சம்பந்தன் அங்கு தவறாது வருவார். நானும் இருப்பேன்.
இவ்வாறாக அவரும் நானும் இணைந்த பணிகள் பலவாயினும் வரலாற்றுத் திருப்புமுனைப் பணிகளில் நாம் இணைந்துள்ளோம். சிலவற்றைக் குறிப்பிடுவேன்.
1971 தொடக்கம் சிறீமாவோ ஆட்சி. 1972இல் இலங்கை குடியரசாகியது. அக்காலத்தில் திரு. குமாரசூரியர், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர்.
அரச அலுவலகங்கள் தோறும் மக்கள் குழுக்கள் அமைந்தன. அவை சிறீமாவோ அரசின் கண்காணிப்புக் குழுக்களாயின.
இதே பாணியில் இந்துக் கோயில்களில் வழிபாட்டாளர் குழுக்களை அமைக்கத் திரு. குமாரசூரியர் விரும்பினார். புத்த, கிறித்தவ, இசுலாமிய வழிபாட்டிடங்களில் இவ்வாறு அமைக்க யாரும் முயலவில்லை. இந்துக் கோயில்களில் அமையும் வழிபாட்டாளர் குழு, கோயில் நடைமுறைகளை ஆட்சி செய்யும் குழுவாக மாறும் நிலையையும் அத்திட்டம் உள்ளடக்கியது.
1973இல் இத்திட்டத்தை மாதிரிச் சட்ட வரைவாக்கி, அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு அனுப்பினர். கருத்துக் கேட்டனர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் நான் உறுப்பினனல்லன். எனினும் மாதிரிச் சட்ட வரைவை இந்து மாமன்ற ஆட்சிக் குழு ஏற்றுக் கொள்ளும் என்ற செய்தி அறிந்தேன். கூட்டம் நடைபெற்ற பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்துக்குச் சென்றேன். என் பின்னால் 20 மாணவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள். வரிகள் எழுதிய அட்டைகள் ஒவ்வொருவர் கையிலும். ஆட்சிக் குழுக் கூட்டத்தினரைச் சுற்றி வலம் வந்தோம்.
ஆட்சிக் குழு உறுப்பினராக ஐ. தி. சம்பந்தன் அங்கிருந்தார். எம்மைக் கண்டார். அவர் முகத்தில் மட்டற்ற மகிழச்சி. ஏழாலை கந்தசாமி, வழக்குரைஞர் நமசிவாயம், சண்முகராசா யாவரது முகங்களிலும் மகிழ்ச்சி. இவர்களும் வேறு சிலருமே மாதிரிச் சட்ட வரைவு இந்துக் கோயில்களுக்குத் தேவையில்லை என்ற கருத்துடையோர். ஆட்சிக் குழுவில் இவர்கள் சொல் ஏறவில்லை.
முழக்க வரி அட்டைகளுடன் வலம் வந்தோம். மாதிரிச் சட்ட வரைவை ஆட்சிக் குழுவின் முன் நான் எரித்தேன். ஆட்சிக் குழு கலைந்தது. மறுநாள் மாமன்றத் தலைவர் பதவி விலகினார். சட்ட வரைவின் ‘கதை’ அத்தோடு முடிந்தது.
1973 நடுப் பகுதியில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையினர் கூடத் தொடங்கினர். பம்பலப்பிட்டி மிலாகிரியா நிழற்சாலையில் கே. சி. தங்கராசா அலுவலகத்தில் கூடினோம். புலமையாளர் உறுப்பினராக இருந்த மன்றம். கே. சி. தங்கராசா, திருமதி புனிதம் திருச்செல்வம், மு. சிவசிதம்பரம் போன்ற ஆர்வலர்களும் உறுப்பினராக இருந்தனர்.
1968 தையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படித்தேன். ஆய்வரங்குகளுக்குத் தலைமை தாங்கினேன். எனவே என்னையும் புலமையாளனாகக் கருதினர். மன்றக் கூட்டங்களில் பங்கேற்றேன்.
1974 தையில் யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவது மன்றத்தின் கொள்கை. மாநாட்டு நடைமுறைகளைப் புலமையாளரும் ஆர்வலரும் பேசினோம். வண. தனிநாயக அடிகளாரின் நேரடிப் பங்களிப்பும் வழிகாட்டலும் மன்றத்துக்குக் கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குப் பதிலாகக் கொழும்பில் நடத்தலாம் என அரசு கருத, அரசு சார் புலமையாளர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, இந்திரபாலா போன்றோரும், கே. சி. தங்கராசா போன்ற ஆர்வலர்களும் அரசின் கருத்தை ஆதரித்து மன்றத்தில் நிலைகொண்டனர். யாழ்ப்பாணத்தில் நடத்துவதில் வண. தனிநாயகம் அடிகளார் முனைப்பாக இருந்தார். எனக்கும் அதே கருத்து. ஆனாலும் அரசு அல்லவா உந்துகிறது. அதுவும் தமிழரை மதிக்காது துன்புறுத்தும் அரசு.
கருத்து மோதலாக மாற, மன்றத்தின் நோக்கம் திசை திரும்புமோ எனக் கருதிய நான், மா. க. ஈழவேந்தன், ஐ. தி. சம்பந்தன், இ. பேரின்பநாயகம் ஆகியோரை யேம்சு இரத்தினத்தின் ஆதரவுடன் மன்றத்தில் ஆர்வலர் உறுப்பினராக்கினேன். மன்றத்தில் எனக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் இவர்கள். யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற நிலையை மீட்டெடுக்க உதவினர். ஐ. தி. சம்பந்தன் என்னோடு இருந்தார்.
1974 தையில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டு அச்சாணிக் குழுவில் நான் இருந்தேன். ஐ. தி. சம்பந்தன் குழுவுக்கு வெளியே இருந்து என்னை ஊக்குவித்தார்.
ஐ. தி. சம்பந்தனின் சைவத் தமிழ்க் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் என் கொள்கைகளுடன் எப்பொழுதும் ஒரே கோட்டில் இருந்தன.
ஆவணங்கள் அடுக்கிய கைப்பையைத் தூக்கிக்கொள்வார். வீட்டைவிட்டு இறங்கி வெளியே வருவார். நாள் முழுவதும் அலைவார். சைவத்துக்காக அலைவார், தமிழுக்காக அலைவார், அரசியலுக்காக அலைவார்.
நாளிதழ்களுக்கு எழுதுவார். வானொலியில் பேசுவார். கூட்டங்களில் உரையாற்றுவார். சமூக அமைப்புகளில் பங்கேற்பார். ஒத்த கருத்துடையோரிடையே உரசல்கள், தன்முனைப்பு-முரண்கள் வராது காப்பார். எல்லோரையும் எவற்றையும் சமாளிக்க அறிவுரை வழங்குவார். அக்காலத்தில் தமிழருக்கான இரு பெரும் அரசியல் கட்சிகளிடையே இருந்த முரண் நிலை சமூக அமைப்புகளுள்ளும் பரவியது. இரு சாராரையும் சமாளித்துப் பணிகளை முன்னெடுத்தவர் ஐ. தி. சம்பந்தன்.
1976 மார்கழியில், கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட நூற்றிற்கும் கூடுதலானோரைச் சிறைகளில் இருந்து சிறீமாவோ அரசு விடுவித்தது. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் கவிஞர் காசி ஆனந்தனுக்கும் இளைஞர்களுக்கும் வரவேற்பு அளித்த நிகழ்ச்சியின் தொடக்கப் புள்ளி ஐ. தி. சம்பந்தன். நானும் சார்ந்தவர்களும் அவருக்குத் துணை நின்றோம்.
புது லீலா அச்சகம் சின்னத்துரை பெரிதும் வழிகாட்டினார். அரசியல் உரிமை உள்ள அரசு ஊழியன் ஐ. தி. சம்பந்தன். அரசியல் உரிமை இல்லாத அரசு ஊழியன் நான். கவிஞர் காசி ஆனந்தன் எனக்கு நெடுங்கால நண்பர். எனவே என் நிலை மறந்து சிறை மீண்டோரைப் பொது இடத்தில் வரவேற்றுப் பாராரட்டினோம். 
அங்கே சந்தித்த சிறை மீண்ட இளைஞர் பலர் இலங்கை அரசின் கொடுமையில் இருந்து தப்பி வெளிநாடு செல்ல விழைந்தனர். அக்காலத்தில் ஒருவர் கடவுச் சீட்டுப் பெறுவதற்கு வேறொருவர் பிணை நிற்க வேண்டும். என் பதவி மட்டத்து அரச ஊழியர் சம காலத்தில் இருவருக்குப் பிணை நிற்கும் தகுதி உடையர். என்னிடம் ஒவ்வொருவராக வந்த 14 இளைஞருக்குப் பிணை நின்றேன். விதிகளைத் தளர்த்தி என் பிணையில் 14 கடவுச் சீட்டுகள் வழங்க உதவியவர் குடிவரவு குடியகல்வுத் துறையில் பணிபுரிந்த என் நண்பர்.  
1977 இன அழிப்புக் கலவர நாள்கள். பம்பலப்பிட்டியில் ஒரு நண்பர் வீட்டில் ஐ. தி. சம்பந்தன் அழைப்பில் அமைந்த கூட்டத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தோன்றியது. கே. சி. நித்தியானந்தா, வழக்குரைஞர் மாவிட்டபுரம் கந்தசாமி, ஐ. தி. சம்பந்தன், வடிவேற்கரசன், நான் ஆகிய ஐவருமே தொடக்கப் பணிகளில் ஈடுபட்டோம். பின்னர் பலர் சேர்ந்தனர். வழக்குரைஞர் கந்தசாமியின் முழுநேரச் சமூகப் பணிக்கு வித்திட்ட நிகழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் அவர் முழுநேரத் தொண்டாற்றிய அமைப்பு.
1977 இன அழிப்புக் கலவரத்தை அடுத்துக் கொழும்பில் என் வேலையை உதறித் தள்ளினேன். குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்தேன். அதே போலக் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்து ஐ. தி. சம்பந்தன் கந்தர்மடத்தில் குடியேறினார். அக்காலத்தில் திருமதி ஐ. தி. சம்பந்தன் என் தந்தையாருக்கு உதவியாகச் சில காலம் ஸ்ரீ காந்தா அச்சகப் பணிகளில் ஈடுபட்டார்.
1979ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்தியாவில் வாரணாசி என்கிற காசியில் இந்து மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கான அழைப்பை, மும்பையில் விசுவநாதர் ஆப்தே என்னிடம் நேரில் தந்தார். யாழ்ப்பாணம் வந்ததும் விசுவ இந்து பரிசத்தினர் நடத்திய உலக இந்து மாநாட்டுக்கு ஒரு குழுவை அனுப்பினேன். அக்குழுவில் ஐ. தி. சம்பந்தன் இருந்தார். மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தனும் இருந்தார். வேறு சிலரும் இருந்தனர்.
1979 பிற்பகுதியில் இன அழிப்பின் நீட்டமாக, கருத்தியலாளர் பலரை இலங்கைக் காவல்துறை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்று, 100 நாள்கள் வரை தடுத்து வைத்து விசாரித்தது. ஐ. தி. சம்பந்தனும் கைதாகி, யாழ்ப்பாணம் கச்சேரித் தடுப்பு முகாமுக்குள் இருந்தார். மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தனும் அங்கு இருந்தார். ஐம்பதுக்கும் கூடுதலானோர் அங்கிருந்தனர்.
1979 ஆனியில் நான் வெளிநாடு சென்றேன். முதலில் தென்மார்க்கில் நடைபெற்ற போர் எதிர்ப்பாளர் மாநாட்டில் பங்கேற்றேன். பின்னர் ஐநா ஊழியராகி, உரோமாபுரி, ஏடன், கெய்ரோ ஆகிய நகரங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
 Where is that bugger Sachi? He had signed for 14 Tamil youth to get passports. They have scooted away to Europe. This bugger, Sachi, wherever he is, we will bring him to inquire , எனக் காவல்துறை தம்மைத் துன்புறுத்திக் கேட்டதாக, ஐ. தி. சம்பந்தன், மா. க. ஈழவேந்தன் ஆகியோர் பின்னர் என்னிடம் கூறினர். விடுதலையானதும் என் தந்தையாரைச் சந்தித்தனர். சச்சியரை இலங்கைக்கு வரவேண்டாம் எனத் தெரிவியுங்கோ என ஐ. தி. சம்பந்தன், மா. க. ஈழவேந்தன் இருவரும் ஆலோசனை கூறியதாகத் தந்தையார் கடிதம் எழுதியிருந்தார்.
1980கள் முழுவதும் நான் இலங்கையில் இருக்கவில்லை. ஐநா பணியில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தேன். பின்னர் 1986 தொடக்கம் சென்னையில் தங்கினேன்.
1985இல் ஐ. தி. சம்பந்தன் உயிர் தப்பிச் சென்னைக்குச் சென்றார். அண்ணா நகரில் வீடு எடுத்துத் தங்கினார். பின்னர் குடும்பத்தாரும் சென்றனர். அக்காலத்தில் அவருக்குக் கடுமையான இருதய நோய் பீடித்தது. வேலூர் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் செய்ய விழைந்தார். அவரிடம் செலவுக்குப் பணம் இருக்கவில்லை. சீசெல்சு நாட்டில் பணியிலிருந்த என்னிடம் கேட்டார். அவரின் மருத்துவத்துக்கான முழுச் செலவையும் அனுப்பிவைத்தேன்.
அக்காலத்தில் அவர் மனக்குழப்பத்தில் இருந்தார். தாய் மண் தாகம், குடும்பச் சுமைகள், வருவாய்க் குறைவு, பொதுப் பணிகள் யாவும் அவரின் குழப்பங்களுக்குக் காரணம். தாய் மண்ணில் தொடர்ச்சியாக உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் கொன்று வந்தனர். சென்னையிலும் கொலைகள் தொடர்ந்தன. அவரால் இத்துயரங்களை ஒரே நேரத்தில் தாங்க முடியவில்லை.
1986இல் ஐரோப்பாவில் தென்மார்க்கு நாட்டில் உலக சமாதான மாநாடு நடைபெற்றது. அப்பொழுது சென்னையில் இருந்த ஐ. தி. சம்பந்தன் மாநாட்டுக்குச் செல்வதற்குத் தெரிவானார். நுழைவனுமதி பெற்றபின் சென்னையில் என் வீட்டுக்கு வந்தார். விமானப் பயணப் பணம் இல்லை என முறையிட்டார். விமானப் பயணச் சீட்டை வாங்கிக் கொடுத்து தென்மார்க்கு நாட்டுக்கு அவரை அனுப்பிவைத்தேன்.
1987க்குப் பின் கொழும்பு சென்ற ஐ. தி. சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப் படையின் தேடுதலில் இருந்து தப்பினார். 1990இல் மொறிசியசு வழியாக இலண்டன் பயணமானார்.
1997 பெப்புருவரியில் சென்னையில் கைதாகினேன். விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் அனுப்ப முயற்சித்தேன் எனக் குற்றம் சாட்டினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த பாண்டியன், ஆத்திரேலியாவில் இருந்து வந்திருந்த மாலினி இராசநாயகம், இந்தியரான சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சிறீதரன், என் நண்பர் மா. க. ஈழவேந்தன் ஆகியோரும் என்னுடன் கைதாகினர். சென்னைச் சிறையில் அடைத்து வைத்தனர். ஒரு மாதம் சிறையில் இருந்தேன்.
அதன்பின் நீதிமன்றத்தில் பிணை காட்டி, வீடு திரும்பினேனாயினும் என் மீதான கட்டுப்பாடுகளைக் காவல்துறை தளர்த்தவில்லை. என் வீட்டுக்கு வருவோர் கண்காணிப்புக்குள்ளாயினர். அக்காலத்தில் ஐ. தி. சம்பந்தன் இலண்டனிலிருந்து தன் அலுவலாகச் சென்னைக்கு வந்திருந்தார். கண்காணிப்பாளரையும் கட்டுக்காவல்களையும் மீறி என் இல்லம் வந்தார். நலம் விசாரித்தார், ஆறுதல் கூறினார்.
2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலண்டன் சென்றேன். அங்கு ஐ. தி. சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். திருமதி செல்லம்மாவும் சம்பந்தனும் அன்புடன் வரவேற்றனர். 
2003இல் கொழும்பில் சந்தித்தேன். அமைச்சர் மாண்புமிகு மகேசுவரனுக்குப் பொதுசனத் தொடர்பாளராகப் பணியில் இருந்தார். நெடுங்காலம் தமிழரசுக் கட்சியில் இருந்தவர். ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி இரண்டுமே சிங்கள மேலாதிக்கக் கட்சிகள் என்ற கருத்தை முன்னெடுத்தவர். ஐக்கிய தேசியக் கட்சிச் சார்பில் வெற்றிபெற்று, அமைச்சரான மாண்புமிகு மகேசுவரனின் அமைச்சுப் பணியாளரானாரே என்ற ஆதங்கத்தைச் சொன்னேன். அதற்கான காரணங்களைச் சொன்னார். அவரது உழைப்புக்கும் தொண்டுக்கும் கொள்கைப் பிடிப்புக்கும் தியாகத்துக்கும் உரிய இடம் கிடைக்கவில்லையே என வருந்தினார்.
2005இல் இலண்டனில் இருந்து சென்னைக்கு வந்தார். அறிஞர் க. சி. குலரத்தினத்தின் தமிழ் தந்த தாதாக்கள் நூல் அச்சுப் பணியைச் செய்து தரக் கேட்டார். இரா. மதிவாணன் அக்காலத்தில் காந்தளகத்தில் பணிபுரிந்தார். அப்பணியைச் செய்யும் பொறுப்பை அவரிடம் கொடுத்து, ஐ. தி. சம்பந்தனையும் அவருக்கு அறிமுகம் செய்தபின், ஆவணியில் யாழ்ப்பாணம் சென்றேன். திரும்பி வரும் காலத்தில் என்னிடம் சொல்லாமலே இரா. மதிவாணன் காந்தளகத்தை விட்டு விலகியிருந்தார். காந்தளகத்துக்குப் பதிலாக இரா. மதிவாணன் தொடங்கிய உலகத் தமிழர் பதிப்பகத்தில் தமிழ் தந்த தாதாக்கள் நூல் அச்சாகிப் பதிப்பாகி இருந்தது. ஐ. தி. சம்பந்தனும் அவருடன் இருந்தார்.  சென்னையில் ஐ. தி. சம்பந்தனின் அச்சுப் பணித் தொடர்பாளராகப் பல ஆண்டுகளுக்கு இரா. மதிவாணன் தொடர்ந்தார். சென்னையில் விழாக்களையும் ஐ. தி. சம்பந்தனுக்கு நடத்திக் கொடுத்தார். ஐ. தி. சம்பந்தனின் உதவியுடன் அழைப்புப் பெற்று ஐரோப்பாவுக்கும் இரா. மதிவாணன் சென்றுவந்தார்.
என் ஆற்றல், என் திறமை, எனக்குள்ள அறிவு தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என ஐ. தி. சம்பந்தன் என்னிடம் அடிக்கடி கூறுவார். சட்டியில் இருந்தாலன்றோ அகப்பையில் வரும் எனக் கூறுவேன். என் மீது உள்ள அன்பினால் மிகையாக அவர் கூறுவதை நினைவூட்டுவேன். அவர் நினைக்கிற அளவு அவ்வியல்புகள் என்னிடம் இல்லை என்பேன்.
2014இல் யாழ்ப்பாணம் வந்த ஐ. தி. சம்பந்தன், தமிழரசுக் கட்சி அலுவலக ஆட்சியராகக் கடமையாற்றுமாறு என்னைக் கேட்டார். பார்க்கலாம் எனச் சொன்னேன். ஏனெனில் ஐ. தி. சம்பந்தன் சொன்னால் தமிழரசுக் கட்சியினர் கேட்கார் என உணர்ந்தவன். ஐ. தி. சம்பந்தனின் கொள்கைப் பராம்பரியத்தையோ, தியாகத்தையோ, கட்சி ஈடுபாட்டையோ இக்காலத்தில் கட்சிக்குள் இருப்பவர்கள் பொருளாகக் கொள்வதில்லை எனவும் உணர்ந்தேன். எனினும் விடாக் கண்டரான ஐ. தி. சம்பந்தன், கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா இருவரிடமும் சென்றார். தன் கருத்தை வலியுறுத்தியபின் இலண்டன் சென்றார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளராக வேண்டும் எனத் தலைமைக்கு என்னை விதந்துரைத்தார். ஐ. தி. சம்பந்தனைக் கட்சி பயன்படுத்தும், அவரின் சொல்லுக்கு மதிப்பளிக்காது என்பதை முன்னரும் சொல்லியிருந்தேன்.
2016 ஆவணியில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் அரங்கில் ஐ. தி. சம்பந்தனின் 80ஆவது பிறந்தநாள் விழா நடைபெறுவதை அறிந்தேன். சென்றேன். பார்வையாளர்களுள் ஒருவனாக இருந்து அவருக்கு என் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.
யாழ்ப்பாணத்தில் 1962இல் ஐ. தி. சம்பந்தனை இளைஞனாக அறியத் தொடங்கினேன். 54 ஆண்டுகள் இடையீடற்று அன்பு பாராட்டினேன். இணைந்து பணிபுரிந்தேன். தேவைக்கு உதவினேன். அன்னாரது 80ஆவது பிறந்த நாள் விழாவில் அவருடனான நினைவுகளை இங்கு அசை போடுகிறேன்.

 

sachi+sampanthan+IT9952.JPG

sachi%2Bsampanthan%2BIT9966.JPG

sachi%2Bsampanthan%2BIT9967.JPG

sachi%2Bsampanthan%2BIT9968.JPG

http://sachithananthan.blogspot.ca/2016/09/54.html

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பா உ தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் படுகொலை ரோவின் கைங்கரியமே! அன்று உயிர் தப்பிய ஐ தி சம்பந்தன்


Dharmalingam_VTELO_Logoமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வி தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோரை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, இந்திய உளவு அமைப்பான ரோவின் திட்டப்படி படுகொலை செய்ததாக அப்படுகொலையில் இருந்து உயிர்தப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளையின் செயலாளர் ஐ தி சம்பந்தன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இப்படுகொலைகள் தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக யாரும் உரிமைகோராத நிலையில், காரணத்தை தெரிவிக்காத நிலையில் முதற் தடவையாக இந்திய உளவுப்பிரிவான ரோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

செப்ரம்பர் 2, 1985 தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று கூறும் ஐ தி சம்பந்தன். அன்றைய படுகொலையில் இருந்து தான் தெய்வாதீனமாக உயிர்தப்பியதாகக் கூறுகிறார். படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 31 ஆண்டுகளுக்கு பின் அச்சம்பவத்தை இன்று செம்ரம்பர் 3 2016இல் தொலைபேசி உரையாடல் ஊடாக மீட்ட அவர் நடந்த சம்பவத்தை வருமாறு விபரித்தார்:

Sambanthan_IT_TNA“செப்ரம்பர் 1, 1985 அன்று நான் திருமண வீடொன்றுக்குச் சென்றிருந்தேன், அங்கு வந்த இளைஞர்கள் என்னை அடையாளம் கண்டு என்னிடம் வந்து பா உ யோகேஸ்வரன் எனது கடிதம் ஒன்றை பெற்றால் அதனைப் பயன்படுத்தி வெளிநாடு செல்லலாம் என்று கூறியதாகக் கூறி கடிதம் கேட்டனர். நான் அவர்களை எனது தொழிற்சங்க அலுவலகத்திற்கு நாளை வாருங்கள் கடிதத்தை தயார் செய்து வைக்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன். மறுநாள் கடிதத்தை நான் தயார் செய்து வைத்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை.

மறுநாள் செம்பரம்பர் 2, அந்த இளைஞர்கள் மாலை எழு மணியளவில் யாழ்ப்பாணத்தில் கந்தர் மடத்தில் 4A குமாரசாமி வீதியில் இருந்த எனது வீட்டுக்கு வந்தனர். வழமையில் யாரும் அவ்வாறு வீட்டுக்கு வருவதில்லை. அவர்களுடன் கதைத்து கொண்டிருக்கையில் அவர்கள் என்னை தங்கள் கார் வரைக்கும் வரும்படி எனது தோளில் அழுத்தமாகத் தட்டிக் கேட்டனர். எனது நல்லகாலம் எனக்கு ஒரு கெட்டது நடக்கப்போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. உள்ளே போய்ட்டு வருகிறேன் என்று இளைஞர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று, வீட்டின் பின்பக்கத்தால் அந்த மதிலைப் பாய்ந்து ஓடிச்சென்று இன்னொரு வீட்டிவ் ஒழிந்துகொண்டேன். அந்த மதிலை எப்படிப் பாய்ந்தேன் என்று இப்ப நினைச்சாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

என்னைக் காணாத அந்த இளைஞர்கள் பின்னர் வாகனத்திற்குச் சென்று ஆயுதங்களோடு வீட்டிற்குள் நுழைந்து வீட்டைச் சோதணையிட்டனர். அப்போது எனது பிள்ளை வந்தவர்களில் ஒரு ஆயுததாரியின் காலைப் பிடித்து ‘ஏன் அப்பாவைச் சுடுகிறீங்கள்? என்னைச் சுடுங்கள்” என்று அழுதானாம். இந்த விடயம் அயல்வீடுகளுக்கும் பரவி எனது வீட்டுக்கு ஆட்கள் வரவும் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்களும் வர அந்த இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

வெளியேறிய இளைஞர்கள் ஆலாலசுந்தரத்திடம் சென்றனர். அவரை கடத்திக்கொண்டு தருலிங்கத்திடம் சென்றனர். அதன் பின் தர்மலிங்கத்தை சுட்டுக்கொலை செய்து தாவடிச் சந்தியில் போட்டுவிட்டுச் சென்றனர். ஆலாலசுந்தரத்தை கல்வியங்காட்டுச் சந்தியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

இந்தத் தகவல்களை காமினி நவரட்ணா அப்போது சற்றடே ரிவியூ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எனது மனைவிக்குச் சொல்லி, என்னை பாதுகாப்பாக இருக்கும்படியும் மறுபடியும் என்னைத் தேடிவருவார்கள் என்றும் எச்சரித்து இருந்தார்.

அக்காலகட்டத்தில் ஆறாவது திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்து தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை துறந்திருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பும் நீக்கப்பட்டு இருந்தது. அ அமிர்தலிங்கம் உட்பட முக்கிய தலைவர்கள் இந்தியாவிலேயே அப்போது தங்கி இருந்தனர். இப்பின்னணயிலேயே ரோ இலங்கையில் இருந்த தமிழ் பா உ க்களை படுகொலை செய்ய திட்டமிட்டது.

நான் நெசவு தொழிற்சாலை வைத்திருந்த ஒருவருடைய வீட்டில் ஒரு வாரம்வரை தங்கினேன். அதற்குப் பிறகு நல்லூர் வந்து கிளிநொச்சி வந்து கொழும்பு வந்து சேர்ந்தேன். நீதிராஜா இந்தியாவிற்கு ரிக்கற் போட்டுத் தந்தார கொழும்பு வந்த ஓரிரு தினங்களில் இந்தியா சென்றுவிட்டேன்.

அப்போது சென்னை எக்மோரில் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கான அலுவலகம் ஒன்றை வைத்திருந்தார். அங்கு சென்று நடந்ததை அவருக்குக் கூறினேன். சந்திரஹாசன் கவலையீனமாக என்னையும் வைத்துக்கொண்டு தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினத்துக்கு தொலைபேசியில் அழைத்து ‘அந்தப் பெயர்ப் பட்டியலில் ஐ தி சம்பந்தன் பெயரும் இருக்கிறதா?’ என்று விசாரித்தார். பதில் ‘ஓம்’ என்று வந்தது.

அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் இருக்கப் பயந்து வேலூரிற்குச் சென்றேன். அங்கு எனக்கு இதயநோய் காரணமாக நோய்வாய்ப்பட்டேன். எனது அதிஸ்டம் வேலூரில் அப்போது திருமதி ராஜமனோகரன் மருத்துவப் பயிற்சிப் பணியில் இருந்தார். அவர் எனக்கு பல வழிகளிலும் உதவி செய்து என்னைக் காப்பாற்றினார்.

தென்மராட்சியில் எங்கள் மூவரையும் படுகொலை செய்யவும் வடமராட்சியில் இராசலிங்கம், துரைரட்ணம் இன்னுமொருவரது பெயர் ஞாபகம் இல்லை அவரையும் கொலை செய்யவும் இந்திய உளவுப்பிரிவான ரோ திட்டமிட்டு இருந்தது, பின்நாட்களில் தெரியவந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் ரெலோவைத் தெரிவு செய்தனர். ரெலோவும் அதற்கு சம்மதித்து இருந்தது.

ரெலோவின் தென்மராட்சிப் பொறுப்பாளர் பொபி எங்கள் மூவரையும் படுகொலை செய்ய முன்வந்து காரியத்திலும் இறங்கினார். ஆனால் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் அப்படுகொலைகளைச் செய்ய முன்வரவில்லை. அதனால் அவர்கள் தப்பித்தனர்.

இச்சம்பவம் இடம்பெற்று ஓராண்டுக்குப் பின்னதாக ரெலோ வின் தலைவராக சிறிகாந்தா இருந்தார். அவரை தமிழகத்தில் உள்ள முகாமில் சந்தித்த போது என்னைக் கொல்ல வந்தவர்கள் இவர்களில் ஒருவர் எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த செப்ரம்பர் 2யை என்னால் மறக்கவே முடியாது” என்று தான் தப்பித்த வரலாற்றை ஒரு திகில் திரைக்கதையாக சொல்லி முடித்தார் ஐ தி சம்பந்தன்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஐ தி சம்பந்தனின் நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட த சித்தார்த்தன் “அன்று என்னுடைய அப்பாவோடு கொல்லப்படுவதில் இருந்து தப்பியதால் இன்று நூலை வெளியிட முடிந்துள்ளது” என்று அச்சம்பவத்தை நினைவு கூர்ந்ததாக ஐ தி சம்பந்தன் தெரிவித்தார்.

அன்று பனிப்போர் காலத்தில் ஜே ஆர் ஜெயவர்த்தன அரசு அமெரிக்கசார்பு நிலையை எடுத்திருந்தது. அதற்கு மாறாக ரஷ்ய சார்புநிலையைக் கொண்ட இந்தியா தென்கிழக்கு ஆசியாவில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு நேரடியான தலையீடுகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது வல்லாதிக்க நலன்களுக்கு இந்தியா நன்கு பயன்படுத்தி வந்தது. ஆரம்ப நாட்களில் தமிழீழ விடுதலை அமைப்புகளில் தமிழீழ விடுதலை இயக்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ரோவின் செல்லப் பிராணிகளாகவே செயற்பட்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் எழுச்சியை அறியவும் ரெலோவைப் பலப்படுத்தவும் ரோ இப்படுகொலைகளை திட்டமிட்டதாக ஐ தி சம்பந்தன் தெரிவிக்கின்றார். இப்படுகொலைகள் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளாக கருதப்பட்ட போதும் விரைவிலேயே அவை ரெலோவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை என்பது தெரியவந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பங்கிற்கு அநுராதபுரம் படுகொலைகளை ரோவின் கட்டளைப்படி நிறைவேற்றியதாகவே இன்றுவரை கருதப்படுகிறது.

ரெலோ இதுவரை இப்படுகொலைகள் தொடர்பாக மெளனம் சாதித்து வருகின்றது, அதற்கான காரணத்தை அண்மைய எதிர்காலத்தில் ரெலோவினால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமே. இன்றும் ரெலோ> ஈரோஸ் போன்ற அமைப்புகள் இந்திய ரோவுக்கு நெருக்கமானவர்களாகவே உள்ளனர்.

http://thesamnet.co.uk/?p=76586

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.