Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உண்மை புனைவானது” `உயிரணை` நூல் உலகிற்கு உணர்த்தும் செய்தி – மாதவி சிவலீலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14470846_10207320243424949_1424565558_n-

`மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனிதரை எழுப்பும் வல்லமை எனக்கில்லை

ஆனால் கொல்லச் சொன்னவரை  உயிருடன் உலவும் பிணங்களாக்க

என் குரலுக்கு இயலும்` (மலைமகள், பெயரிடப்படாத நட்சத்திரங்கள்)

14518367_10207320243464950_16282859_n

தமிழீழக் கனவோடு போராடச் சென்ற  ஒரு போராளியை மையமாக வைத்து  ஆக்கப்பட்ட `உயிரணை` எனும் இந்த புனைவு இலக்கியத்தின் ஆசிரியர் சாந்தி நேசக்கரம். 143 பக்கங்கள் கொண்ட இந்நூல் பூவரசி வெளியீடாக வந்துள்ளது.

பதின்மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட  கதைப்பகுதியில், முதல் ஐந்தும் மேவுதல் அடுத்த ஐந்தும் கரைதல் இறுதி மூன்றும் அவாவுதல் என்னும் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது.

இவை விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்ற காலத்தையும் வீழ்ச்சிக் காலத்தையும் கையறு நிலையில் மற்றவரை வேண்டி நின்ற காலத்தையும் மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

நூலினை 2009ஆம் ஆண்டில் மண்ணில் உயிர் நீத்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

1999 ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த ஆதித்தன் எனும் போராளிப் பாத்திரம் சுண்டிக்குளம் யுத்தத்தில் பால்ராஜ் தலைமையில் ஆயுதம் ஏந்தி நிற்கின்ற  நிகழ்வோடு கதை ஆரம்பமாகின்றது. ஜேர்மனிக்கு எதிராக இடம்பெற்ற `நோர்மெண்டி` தரையிறக்கத்தோடு  ஒப்பிட்டு இந்த யுத்தத்தை அவர்கள் கொண்டாடிய காலமது.

RPG கொமாண்டோ படை வீரனாக அடையாளப்படுத்தப்படுகின்ற  இவன் பெற்ற பயிற்சிகள் பெண்படையணிகளுடனான தொடர்பு ,யுத்தங்கள், எல்லைப்படை  விரிவாக்கம், RPGஆழ ஊடுறுவல் எனும் படைப்பிரிவு ஆரம்பம் போன்ற நிகழ்வுகளின் ஊடாக மேவுதல் எனும் அத்தியாயங்கள் கொண்டு செல்லப்படுகின்றன..

அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற  சமாதான உடன்படிக்கை, கல்விக்குழு கிழக்கு மாகாணம் செல்லுதல், புலம்பெயர்ந்தோர் தாயகம் வருகை, அரசியல் வகுப்புகள், பாடசாலைக் கல்வி ,எரிமலைப் பத்திரிகையுடன் தொடர்பு, 2007இல் காயப்படுதல், காயப்பட்ட போராளியாக மருத்துவமனை அனுபவங்கள், போராட்டம் வீழ்ச்சியடைந்த காலங்கள், நந்திக்கடற்கரையில் தனது காதலிக்கு விடை கொடுத்தல் என்பவற்றுடன் தொடர்புடையதாக ஆதித்தன் வாழ்வு அமைந்ததாக கரைதல் எனும் அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன.

சிங்கள இராணுவத்திடம் `செல்வன்` என்ற தனது இயற்பெயருடன் சாதாரண குடிமகனாக  சரணடைகின்றான். முகாம் வன்முறைகள், சிங்களவர்களின் அறிமுகம், கொழும்பு வாழ்வு, இந்திய வாழ்வு, இலண்டன் பயணம் என்பவற்றுடன் கதை நிறைவு பெறுகின்றது. இது `அவாவுதல்` எனும் தலைப்பில் அமைந்துள்ளது.

இங்கு உண்மைக் கதாபாத்திரங்களும்  உண்மைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அன்றைய போராட்டக் காலத்து முழுச்சம்பவங்களும் பதிவு செய்யப்படாத போதும் ஆதித்தன் வாழ்வில் எவை முக்கியமானவையாகச் சொல்லப்பட வேண்டியதாக இருந்ததோ அவை சொல்லப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்த காலங்களை மையப்படுத்தியதாக பல இலக்கிய நூல்கள் வெளிவந்தவையாகவுள்ளன. அவை போராட்டம்  சார்ந்தவையாக போர்க்கால வாழ்வைச் சார்ந்தவையாகப் பிரபல்யம்  பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஊழிக்காலம், நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, ஆறாவடு, ஆதிரை, போராளியின் காதலி, ஆயுத எழுத்து, Box கதைப்புத்தகம், பார்த்தீனியம், கூர்வாளின் நிழலில் போன்ற புனைவு இலக்கிய வரிசையில் உயிரணை எனும் இந்நூலும் இடம்பெறுகின்றது.

இலக்கியகாரர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் எமது ஆக்க இலக்கியகாரர்களைக்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் இவர்கள் கூறும் கதைக்கருவும் சொல்லும் மொழியும் வலிமை மிகுந்தவை.

போரியல்  வாழ்வோடு பின்னிப்பிணைந்து  வாழ்ந்த எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களோடு நின்று இங்கு கதை சொல்லியுள்ளனர். இந்த அனுபவ மொழி என்பது வீரியம் மிக்கது. சொல்ல வந்த எண்ணங்களுக்கு அந்த மொழி செயல் வடிவம் கொடுத்திருக்கின்றது. ஆனால் போராட்ட காலம் என்பது பெரும் ஆழக்கடல். அங்கு அவர்கள் எதை எடுத்தார்களோ அதைப் பற்றிச் சொல்லியுள்ளார்கள்.

பெரும் யானையின் காலைப் பார்த்தவன் காலைப்பற்றித் தான்  சொல்ல முடியும். காதைப் பார்த்தவன் சுளகுக் காது பற்றித் தான் சொல்வான். உடம்பைப் பார்த்தவன் உடம்பு பற்றி மட்டுமே கதைப்பான். வாலைத் தொட்டவன் அதைப்பற்றியே கூறுவான். ஆனால் சொல்லப்பட்ட அனைத்திலும் உண்மையிருக்கின்றது. அழகியல் இருக்கின்றது. வாசகரைக் கவரும் லாவன்யம் இருகின்றது. வாசகர்கள் இன்று அனைத்தையும் அறியும் ஆவலில் இருகின்றார்கள் . அந்த ஆவல் தேடலை நோக்கி அவர்களைப் பயணிக்க வைக்கின்றது.இதன் அடிப்படையில்  நின்று கொண்டு ஆதித்தன் எனும் கதாபாத்திரத்தைப் பார்க்கலாம்.

சாந்தி நேசக்கரம் ஒரு பெண் எழுத்தாளர். களப்பணியாளர். இவர் ஆண் கதாபாத்திர வாழ்வைச் செம்மையுற தன் தேவைக்குத் தக்க வகையில் வடிவமைத்திருகின்றார். போராளிகளுடனான உரையாடல்கள் மூலம் பெற்ற அனுபவமே இந்த இலக்கிய முயற்சியின் வெற்றிக்குக் காரணமாக அமைகின்றது.  அந்த வகையில் இங்கு முக்கியமாக பதியப்பட்ட விடயங்கள் என்னவென்பது கவனிக்கப்படவேண்டியவையாக உள்ளன.

எம் வாழ்நாட்களில் வாழ்ந்த மனிதர்கள், போராளிகள் இங்கு கதைமாந்தர்களாக இடம்பெறுகின்றனர். அண்ணை, தலைவரெனக் கொண்டாடப்படும் பிரபாகரன், பால்ராஜ், தீபன், மில்லர், திலீபன், அப்பையா, சங்கர், சூசை, கடாபி, அக்பர், போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இவர்கள் நாட்டிற்காக  மண்ணிற்காக அண்ணைக்காக எதனையும் செய்யக்கூடியவர்களாக விளங்கினர். இவர்கள் தலைவனை எவ்வளவு தூரம் நேசித்தனரென்பதனை அண்ணையின்ரை பொடியள் / RPG கொமாண்டோக்கள்/  அண்ணை என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவர்/ எல்லாத் திறன்களையும் தன்னோடு ஒருங்கே அமையப்பெற்ற தலைவனைத் தந்த காலத்தின் கைகளுக்கு நன்றி போன்றதான வரிகள் இவற்றை நிறுவுகின்றன. பானு எனும் தளபதி பற்றிய பதிவு மனத்தளம்பல் நிலையில் அவரது நிலைப்பாடு பற்றியதான முரணைத் தருவதாகவுள்ளது.

இது மட்டுமன்றி மாவீரர்கள் போற்றுதலுக்குரியவர்களாக  அடிக்கடி ஆதித்தனால் நினைவு கூறப்படுகின்றனர். “ உலகநாடுகளில் இருந்தெல்லாம் பெற்ற நவீன ஆயுதங்கள் அதிகரித்த ஆட்பலம்  என்பவற்றை போராளிகளின்  உயிர்த் தியாகங்கள் மூலமே முறியடிக்க வேண்டியிருக்கின்றது.“என ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

`சாதனையெல்லாம்  மடிந்து போன மாவீரர்களுக்குச் சமர்ப்பணம்`, `மக்கள் வாழ வேண்டுமென்பதற்காக விழி மூடப்போகும் வீரர்கள்` போன்ற வரிகள் இறந்த போராளிகளின் தியாகம் பற்றிப் பேசுகின்றன. உண்மையிலே மாவீரர்களின் மரணத்தை யாருமே கொச்சைப்படுத்தக்கூடாது.

இங்கே `கம்பன்` எனும் பாத்திரம் காயப்பட்ட போது தனக்குத் தானே குண்டு வைத்து எதிரியின் கையில் பிடிபடாமல் தன்னையே அழித்துக் கொல்கின்றான்.  சங்க இலக்கியத்தில் மறக்காஞ்சியென அழைக்கப்படும் இச்செயலையொத்த பல நிகழ்வுகளைப் போராட்ட  வாழ்வில் போராளிகள் செய்து மரணித்துள்ளனர்.

மாலதி சோதியா படையணிகளும் இம்ரான் சாள்ஸ் படையணிகளும் அவர்களுடன் RPG படையணிகளும் கொண்ட தொடர்பு முக்கியமானதாகும். ஏனெனில் எமது சமுகம் ஆண் பெண் உறவு சம்பந்தமாக வைத்திருந்த கற்பிதங்கள் தளர்ச்சியடைய இப்போராட்டங்களும்  காரணமாக அமைந்திருந்தன.

“விடியற்புறம் ஏதோ சத்தங்கள் கேட்டன. எழுந்து பார்த்த்தான் ஆதித்தன். இவர்கள் கால்களுக்கு அண்மையாக மாலதி படையணியின் பெண் போராளிகள் படுத்திருந்தனர்.“  என ஒரு சம்பவம் இடம்பெறுகின்றது.

பெண்களைக் காமப்பொருளாகவும்  அடிமைகளாகவும் வரையறுத்திருந்த எண்ணப்பதிவு சிதைந்து யாவரும் போராளிகளாகக் கணிக்கப்பட்ட நிலைமை அங்கே சொல்லப்பட்டிருக்கின்றது.

அவனை அவளும் அவளை அவனும் நம்புகின்ற  தன்மை தானாகவே உருவாகியுள்ளது. உலகமே வியந்து பார்த்த விடயமெனக் கொள்ளத்தக்கதாக, அன்று பெண் போராளிகள் களமாடினர்.

இது தவிர ஆதித்தன் வாழ்வில் காதலியாகக் கௌரியும் தோழியாக தேசப்பிரியாவும் இடம்பெறுகின்றனர். தான் வீட்டிற்குத் திரும்பிப் போகும் போது வீட்டு வாசலில் தன்னை வரவேற்பாள் என எண்ணியிருக்கத் தன் காதலியான கௌரியைக் களத்தில் சந்திக்கும் ஆதித்தன் மனவுணர்வை நாம் சாதாரணமாகக் கடந்து போய் விட முடியாது.

இந்நூல் முக்கியமாக இன்னொரு விடயத்தைப் பதிவு செய்கின்றது. அதாவது வெளிநாட்டு கொமாண்டோக்கள் வந்து நூறு போராளிகளுக்கு விசேட பயிற்சியளித்திருக்கின்றார்கள். .

இவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானில் வானில் இருந்து தரையிறங்கும் போது காயப்பட்ட சம்பவம் சொல்லப்படுகின்றது. எனவே அங்கு எந்நாட்டினர் சென்று சண்டையிட்டனரோ அவர்களில் ஒரு பிரிவினரே இவர்களுக்கு உதவியுள்ளானர். ஆனால் இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களெனும் குறிப்பைச் சாந்தி  கூறவில்லை. இதனை நாமே ஊகிக்கவேண்டியுள்ளது.

இவர்களின் வருகையின் பின் பயிற்சி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் போராளிகளின்  பாதுகாப்பில் காட்டிய அக்கறை,போராட்டத்தை அவர்கள் நேசித்த விதம் போன்றவை ஆசிரியரால் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்வு புலிக்களுக்கு உதவிய நாடு எதுவென்பதையும் தோற்கடித்த நாடுகள் எவையென்பதையும் ஆராயச் சந்தர்ப்பம்  தருகின்றது.

சமாதானக் காலத்தில் போராளிகள் கிழக்கு மாகாணத்திற்குச் செல்கின்றார்கள். அங்கு தற்செயலாக சிங்களப்பிரிகேடியர் குடும்பத்தைச் சந்திக்கின்றனர். பின்னர் முஸ்லீம் ஒருவருடன் உரையாடுகின்றனர். வன்முறையற்ற சமாதான நாட்டை விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனூடாக  தனிமனிதன் போரையோ வன்முறையையோ விரும்பவில்லையென்பதை  உணரமுடிகின்றது. மனிதரை மனிதராகப் பார்க்கும் உளவியல், கருணை என்பன இருந்திருந்தால் இனங்களிடையே புரிந்துணர்வு  கட்டியமைக்கப்பட்டிருக்கும்  என்கின்ற ஆதங்கத்தை இது உண்டாக்குகின்றது.

இதனைப் போரின் முடிவில் சிங்களவர் மத்தியில் வைத்தியசாலையில் ஆதித்தன் இருக்கின்றபோது  சந்தித்த சிங்கள மக்களின் உறவுநிலை மூலமும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.  .

சிங்கள மக்களின் உதவியுடன் தப்பி வந்த பல போராளிகள், மக்கள் எம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் சிங்களமக்களை நல்லவர்கள் என்றே கூறுகின்றனர். அங்கு மனிதம் நிற்கின்றது..

அப்படியாயின் இவ்வளவு காலமும் நாம் யாரோடு போரிட்டோம். யார் எம்மைப் போருக்குள் திணித்தது?மக்களின் மனங்களை வெல்லத் தவறியதாலேயே ஆயுதங்கள் பேசிக் கொண்டன. ஆயுதம் பேசாமல் மனிதம் பேசியிருந்தால்  இந்த மனித அவலம் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ? என்பதெல்லாம் எம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

`விருப்பம் இல்லாத யாரையும் கட்டாயப்படுத்த மாட்டம்` எனப்போராடச் சென்றவர்களளைப்  பார்த்துச்  சொல்லி வந்த தலைமை பின்னர் கட்டாயப்படுத்திப்  பிள்ளைகளைப் பிடித்துப் போராட வைத்த போதே போராட்டம்  சரிவைச் சந்திக்கத் தொடங்கி விட்டதென்பது உண்மை.

இது பற்றித் தமிழினியும் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது ஏனைய இயக்கங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மக்களுக்காகப் போராடியவர்கள் பின்னர் மக்களுடன் போராட வேண்டியேற்பட்டு, இவர்கள் பொதுமக்களுடன் முரண்பட வேண்டியேற்பட்டது. அத்துடன் `ஒரு  பக்கத்தில் களநிலைமை இறுகிக் கொண்டு போக ஆயுதம் தாங்கிக் களங்களில் நின்ற பல போராளிகளும்  தலைமறைவாகிக்  கொண்டிருந்தார்கள்` எனும் கூற்றும் இயக்கத்தின் கட்டுக் கோப்பு எங்கே உடைந்தது என்பதைப் புலப்படுத்துகின்றது.

நந்திக்கடற்கரையில்  எங்கள் சரித்திரம் சொல்ல நீங்கள் தப்பிப் போங்கள் எனச் சொல்லிக் கௌரி விடைபெற்றுப் போக, அவள் போன திசையில் பெரும் வெடியோசை கேட்கின்றது. அந்த வெடியோசைக்குள் சங்கமமாகியவர்கள் யார்யாரென்பது அவிழ்க்கப்படாத முடிச்சாக எம் முன்னே கிடக்கின்றது. .

இவை தவிர முகாம் வாழ்வு , முகாம் அருகே பெண்களின் வெட்டப்பட்ட தலைகள் போன்ற குறிப்புகளும், கள வாழ்வு அனுபவங்கள் கொழும்பில் தப்ப உதவியது போன்றதான விடயங்களும் இந்நூலில் பதியப்பட்டிருக்கின்றன..

மேற்குறிப்பிடப்பட்ட  விடயங்களெல்லாம் ஆதித்தன் எனும் பாத்திரத்தினூடாகச்  சாந்தி நேசக்கரம் கூறியுள்ளார். அவனது வாழ்வாக நாம் நூலை வாசிக்கும் போது இலக்கியம் வெற்றி பெறுகின்றது. எனினும் இதனை உண்மைக் கதை தழுவியது என ஆசிரியரால் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.  அதன் போது இது வரலாற்றுப் பதிவோடு சேர்ந்து வலுப்பெற்றிருக்கும். ஏனெனில் இன்று ஈழத்தை மையப்படுத்தி வருகின்ற எந்த இலக்கியமும் போராட்ட வாழ்வைத் தவிர்த்து எழுதாத சூழலை நேர்மையாகச் சிந்திக்கும் ஆக்க இலக்கிய கர்த்தாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

இது சிறுபுனைவு. அதனால் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் ஆழப்பார்க்கப்படவில்லை. ஆனால் கச்சிதமாகக் கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களது போராட்ட வாழ்வு சோகமானது. போராளிகள் வாழ்வு, போரைப் புறக்கணித்தோர் வாழ்வு, மக்கள் வாழ்வு, சிங்களவர், முஸ்லீம்கள் வாழ்வு யாவுமே பாதிக்கப்பட்டுப் புரட்டிப் போடப்படுள்ளது.

வென்றவர்கள் வரலாறு எழுதும் போது நாம் இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கின்றோம்.  இன்று எம் மக்களிடையே நடைபெறும் உளவியல் யுத்தத்தை வெல்லக்கூடிய சாத்தியப்பாடுகள் நோக்கி நாம் நகர வேண்டியவர்களாக உள்ளோம்.

கம்பராமாயணத்தில் கம்பன் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாயத்தையும் தெளிவுபடச் சொல்வான். அது போன்றே  ஒவ்வொருவரிடமும் நியாயம் உள்ளது. அதனை நாம் மதிக்க வேண்டும். இப்போது யாரும் எதுவும் கதைக்கலாம் எழுதலாமெனும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் உண்மைகள் மனச்சாட்சியுடன் கதைக்கப்பட வேண்டும்  சுயநலமற்ற பதிவுகள் இடம்பெற வேண்டும். எம்மிடையே குவியலாகக் கதைகள் உண்டு. அதை அசைமீட்டுப் பார்க்கும் போது நாம் எதனை உள்வாங்கினோமோ அதனையே மீட்டுப் பார்ப்போம். அந்த வகையில் சாந்தி நேசக்கரம் உண்மையைப் புனைவாக்கியுள்ளார். இவர் இன்னும் உண்மைகளோடு கூடிய பல புனைவுகளைத் தரவேண்டும்.

நூலின் அமைப்புப் பற்றியும் குறிப்பிடப்படுவது அவசியமாகும். நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெறுகின்ற  எழுத்துக்களின் பிரிப்பும், சொற்களின் பிரிப்பும் முகம் சுழிக்க வைக்கின்றது. இவை கருத்துப் பிழைகளுக்கு வழியமைக்கின்றது. இவற்றை நூலாசிரியர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். பதிப்பு முயற்சிகள் நேர்த்தியாக அமைந்தால் நூல்கள் இன்னும் கனதி பெறும். இதனை ஆசிரியர் வருங்காலத்தில் கருத்தில் கொள்வது நன்மையத் தரும்.

 

http://www.thisaikaddi.com/?p=3865

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இங்காலயும் வாங்க அக்கா இந்த புத்தகம்  இன்னும் கிடைக்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.