Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குற்றமே தண்டனையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமே தண்டனையா?

வெற்றி

44-1.jpg

‘குற்றமே தண்டனை’யின் மையமாக பூஜா தேவர்யாவின் பாத்திரத்தைச் சொல்லலாம். அப்பாத்திரத்தின் குற்றம் ரவிச்சந்திரன் பாத்திரத்தை ‘விதார்த்’ காதலிப்பதாகவும் தண்டனையாக அவனையே திருமணம் செய்துகொள்வதுமாக இருக்கிறது. இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை என ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பகிரப்படும் மீம்களில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியைச் சேர்த்து எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது ‘குற்றமே தண்டனை’ திரைப்படம்.

ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் படுமளவு, பெண்கள் திராவகத் தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் ஆளாகும்போது இத்தகைய மனோபாவங்களை வளர்ப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு குறித்தும் லேசாகவோ பெரிதாகவோ விவாதிக்கப்படுகின்றது. பெரும்பாலும் செல்வராகவன் உள்ளிட்டோரின் படங்கள். இம்முறை ஒரே நாளில் மூன்று வெவ்வேறு கொலைகள் நிகழ்ந்த சமயத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படமாக ‘குற்றமே தண்டனை’ அமைந்திருக்கிறது. இப்படம் இந்த மனநிலையைத் தூண்டக்கூடிய சினிமாக்களின் வரிசையில் அமையாமல் போகலாம். எனினும் மாற்று சினிமாவாகக் கொலைக்குப் பின் அதற்கான நியாயப்படுத்தலை வழங்குவதாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இதை எழுதத் தொடங்குவதற்குள்ளேயே ‘குற்றமே தண்டனை’ குறித்துப் பல பாராட்டுகளும் சில எதிர்மறை விமர்சனங்களும் எழுதப்பட்டுவிட்டன. எனவே, சிலவற்றைக் குறிப்பாகச் சொல்லிவிடுவதே மரியாதையாக இருக்கும்.

ஒரு கதை, கதைக்குள்ளேயே செயல்படும் கதாபாத்திரத்தின் வழியாக மட்டுமே சொல்லப் படும்போது நாம் கதையின் நேர்மை, அரசியல் மற்ற கதாபாத்திரங்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் அக்கதாபாத்திரத் தின் மனச்சாய்வுகளோடு சேர்த்தே புரிந்துகொள்ள முடியும். ஆனால் பெரும்பாலும் தமிழ் சினிமாக் கதைகள் பெயர் உருவமற்ற கதைசொல்லிகளின்

பார்வையிலிருந்தே நகர்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டப்படுகிறது. ஒளிப்பதிவு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் எதுவும் நம்மை உணரச் செய்வதாக இல்லை. ‘மெட்ராஸ்’ படத்தில் அந்த ஹவுசிங் போர்டின் ஒவ்வொரு தெருவையும் நம்மால் உணரமுடியும். கதாபாத்திரங்கள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் இன்னொரு இடத்திற்கான தூரத்தை, அப்படத்தின் ஒளிப்பதிவு தெளிவாகவும் நிர்ணயிக்கப்பட்ட அழகியல் பார்வையோடும் காட்டியது. அது ஹவுசிங் போர்ட் வீடுகள் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் சரி; அல்லது ‘டனல் விஷன்’ என்ற பார்வைக் குறைபாட்டை உணரவைக்கும் முயற்சியாக இருந்திருக்கவேண்டிய காட்சிகளாக இருந்தாலும் சரி! அவை பெரும்பாலும் சம்பிரதாயத்திற்கு எடுக்கப்பட்டவையாகவே இருந்தன. படம் அந்தப் பாத்திரத்தின் குறைபாட்டைப் புரிந்துகொள்வதாக இருந்தது. இதனாலேயே அப்பாத்திரத்தின் குறைபாடுகள், நியாயப்படுத்தல்கள் ஏற்படுத்தும் கோபம் கதைசொல்லி மீதாகத் திரும்பக்கூடியதாகவும் ஆனது.

‘குற்றமும் தண்டனையும்’ நாவலே படத்தின் பெயர்த் தலைப்புக்கு உந்துதல் என்று எடுத்துக்கொண்டால், பெயர்த் தலைப்பு படத்தின் முக்கியப் பிரச்சினையை உணர்த்துகிறது. ஒரு படம் எந்தவொரு செய்தியையும் அல்லது கருத்தையும் முன்வைக்காமல் இருக்கலாம்; ஆனால் எல்லாப் படைப்புகளும் ஒரு உணர்வை நம்மிடத்தே ஏற்படுத்துகின்றன. சில பார்வையாளர்களின் தனிப்பட்ட புரிதலைத் தாண்டி பொதுவானவையாக வெளிப்படையானவையாக அவை இருக்கின்றன. இதில் அவ்வாறு வெளிப்படையாக இருக்கும் குற்றமே தண்டனை என்ற கருத்தியல் ஏற்க இயலாதது; மதக் கற்பனைகளை ஒட்டியது.

எதிர் வீட்டுப் பெண் (ஐஸ்வர்யா) கதாபாத்திர உருவாக்கத்திலேயே பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டலாம். எதிர்வீட்டுப் பெண் கதாபாத்திரம் மீதான பார்வை மையக் கதாபாத்திரத்துடையதே என்று நாம் எண்ணிவிடாமல் இருக்கவேண்டுமென்றோ என்னவோ, அவர் தானே முன்வந்து ‘ஆமா நா மோசமான பொண்ணுதான்’ என்று வாக்குமூலம் கொடுக்கிறார். தான் நல்லவர் என்று சொல்லும் எல்லோரையும் நல்லவர் என்று நம்புமளவு பார்வையாளர்கள் முட்டாள்கள் என்ற நம்பிக்கையா அல்லது யாராவது சில முட்டாள்கள் அந்த கதாபாத்திரத்திடம் மனச்சாய்வு கொண்டுவிடுவார்கள் என்ற பதற்றமா? இயக்குநருக்கே வெளிச்சம். நாயகனுக்குப் பின்னர் மன்னிப்பு வழங்கப்பட ஏதுவாகவே இந்த வாக்குமூலமும் வழங்கப்படுகிறது. அந்த அயர்ன் செய்கிற பெண்மணிக்கு என்ன தண்டனையோ தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு பெண்களுக்குத் தீர்ப்பு எழுதிவிட்டதால் இயக்குநர் அவரைத் திரைக்குள் மன்னித்திருக்கிறார்.

முக்கியப் பிரச்சினை இதில் வழங்கப்படும் பாவமன்னிப் பல்ல. ஆண்கள் பல வருடங்களாக தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொள்ளும் பாவமன்னிப்புகள் அதிகபட்சச் சலிப்பையூட்டுகின்றன. ஆனால் பெண் கதாபாத்திரங்களை விவரமாக வரையமுடியாமல் தவிப்பதோடு அவர்களுக்கும் சேர்த்து தீர்ப்பெழுதுவது எரிச்சலாக இருக்கிறது.

இந்தக் கதையின்மீது எனக்கெழுந்த குற்றச்சாட்டுகள் எல்லாமும் ரவிச்சந்திரன் பாத்திரத்தின் அற்புதமான உருவாக்கம் என்று கருதிவிடலாமா என்று ஒரு பக்கம் தோன்றினாலும் மறுபுறம் இலக்கியத்தனமான தலைப்பு அந்த இன்னொசென்ஸை அதற்கு வழங்குவதிலிருந்து தடுக்கிறது. அப்படியே வழங்கினாலும் இந்த ஆண்களின் கதைகள் பலநூறு முறை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்டுவிட்டதைவிட சிலாகிக்கும்படி இப்படத்தில் எதுவும் இல்லை.

சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மனநல மருத்துவர் ஷாலினி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் பெண்களையே பார்த்திருப்பதில்லை என்பதாகச் சொன்னார். மணிகண்டனின் பிரச்சினையும் அதுவாகவே தோன்றுகிறது.

வெகுசன மனோவியலைச் சொறிந்துகொடுத்துப் பெரும்பெயர் வாங்கிய சமீபத்திய ‘ஜோக்க’ரும் இதேபோலத்தான். இதிலாவது நாம் கதாபாத்திரத்தின் மனோநிலை என்று என்னென்னவோ பேச வேண்டியுள்ளது. ஆனால் ஜோக்கரில் அப்படி எதுவும் இல்லை. இயக்குநர் எந்தக் கதையும் சொல்லாமல், தான் இத்தனை வருடமாக கற்றுக்கொண்ட அத்தனை அரசியலையும் நம் தலையில் கொட்டவே படம் எடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் மையக் கதாபாத்திரம் கழிப்பறை கட்டியுள்ள ஆணையே திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னாலும், குடிகார அப்பாவுக்குக் கூட்டத்துக்குப் போய் சரக்கு வாங்கிக்கொண்டு போகிற, கழிப்பறைக் கோரிக்கையையும் விஜய், அஜீத் என இயக்குநர் திட்டும் கதாநாயகர்களைப் போலவே ஹீரோவின் காதலுக்காக விட்டுத்தந்து கர்ப்பமாகிக் கோமாவிலும் விழுகிறார். இடையே பாடல் வரிகளில் கர்ப்பமான ஆட்டைப் பார்க்கும்போது ‘உன் ஞாபகம் வருகிறது’ என்பது போன்ற வரிகள் அரசியலைக் கடந்த காதலாகும்.

ரஞ்சித்தின் மூன்று படங்கள் வெகுசன வெற்றியைப் பெற்றிருக்கும் சூழலிலிருந்து, அந்தப் படங்களில் காதல் மற்றும் பெண் கதாபாத்திரங்களின் வளர்ச்சி ஆகியவற்றோடு பொருத்தி இதைப் பார்க்க முடியும். ‘அட்டக்கத்தி’யின் இளைஞன் தனது காதல் தோல்விகளுக்காக அந்தப் பெண்கள்மீது கோபம் கொள்வதுமில்லை; அது அவ்வளவு பெரிய விஷயமாகவும் இருப்பதில்லை. ‘மெட்ரா’ஸில் ஒன்றுசேர்ந்த காதலும்கூட அவ்வளவு பெரிய விஷயமாக இருப்பதில்லை. பெரும்பாலானோர் இப்படி இயல்பாகவே எடுத்துக்கொள்ளும் காதலை மறுபடிமறுபடி மறுத்து புனிதப்படுத்தப்படுத்திய ஆக்ரோஷங்களின் நாடகமே நமக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறதா என்ன? ‘தர்மதுரை’யையும் இந்த வரிசையில் சொல்லலாம். திடீரென்று வந்து அறிவுரை சொல்லும் பேராசிரியர் உட்பட ஒரு இரட்டை மனநிலையிலேயே இயங்கினாலும் தர்மதுரை இத்தகைய போக்கிற்கு எதிரான திசையிலான பயணத்தின் பகுதியே.

இதே கருத்துகளை தாங்களும் சொல்லியதன் மூலம் நம்பிக்கையளித்த நண்பர்களுக்கு நன்றி, இப்படி எல்லா படத்தையும் திட்டுறாய்ங்களே நமக்கு வாய்த்த நண்பர்கள், என்ன படம்தான்யா புடிச்சிருந்துச்சு என்றதற்கு நான் உட்பட பெரும்பாலானோரின் பதில்: ஜாக்ஸன் துரை என்பதே.

http://www.kalachuvadu.com/archives/issue-202/குற்றமே-தண்டனையா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.