Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

Featured Replies

3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

 

jaya_10378.jpg

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள்  இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சி தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது.

gal_10144.png

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3வது இடத்துக்கு பாஜகவும், 4வது இடத்துக்கு தேமுதிகவும் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்று மதியத்துக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ga_10497.png

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையைத் தொடர்ந்து அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் திரண்ட அதிமுகவினர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டினர்.

இதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/73097-admk-leads-in-by-election-celebration-begins.art

  • கருத்துக்கள உறவுகள்
தஞ்சையில் அதிமுக வெற்றி; மற்ற இரு தொகுதிகளிலும் முன்னிலை
 

இன்று
 
 
 
 
 
 
Advertisement
 

 
Tamil_News_large_1654367_318_219.jpg
 

சென்னை : தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். மற்ற இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. நெல்லித்தோப்பில் 3 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அரவக்குறிச்சியில் 18, திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுக்களாகவும், தஞ்சாவூரில் 20 சுற்றுக்களாகவும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே அ.தி.மு.க., வேட்பாளர்களே மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர். 
 

தஞ்சாவூர்:

 

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் ரங்கசாமி, 27,853 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை தோற்கடித்தார். ரங்கசாமிக்கு 99,362 ஓட்டுக்களும், அஞ்சுகம் பூபதிக்கு 71,509 ஓட்டுக்களும் கிடைத்தன.
 

நெல்லித்தோப்பு:

 

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார். அவர் 18,709 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஓம்சக்தி சேகர், 7,526 ஓட்டுக்கள் பெற்றார். இந்த வெற்றி மூலம் முதல்வர் பதவியை நாராயணசாமி தக்க வைத்து கொண்டார். 
 

போராட்டம்:

 

முன்னதாக, அரக்குறிச்சி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து மையம் முன் பா.ஜ. மற்றும் தே.மு.தி.க.வினர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தே.மு.தி.க., மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். 
மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. இந்த அறையை அதிகாரிகள் திறக்க முற்பட்ட போது, சுயேட்சை வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டது. தி.மு.க வேட்பாளர் சரவணன், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1654367.,

 

  • தொடங்கியவர்

தமிழகத்தில் வெல்லும் அ.தி.மு.க. புதுவையில் ஏன் தோற்றது தெரியுமா? இடைத்தேர்தல் அரசியல் !

 

a1_11541.jpg

டைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் தவிர வேறு எங்கும் அதன் அதிர்வுகளையோ, எதிர்பார்ப்புகளையோ விதைக்காமல் நடந்து முடிந்திருக்கிறது 4 தொகுதிகளுக்கான தேர்தல். தேர்தல் முடிவுகள் வெளியான இந்த கணத்தில் கூட யாரிடமும் பெரிய ஆர்வம் தென்பட்டிருக்கவில்லை. 'இடைத்தேர்தல் என்றாலே அங்கு ஆளுங்கட்சி தானே வெல்லும். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது' என்ற பேச்சும் ஒலிக்க தவறவில்லை. உண்மையில் இடைத்தேர்தல் ஏன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது தெரியுமா?

1980க்கு 85 சதவீதம் ஆளுங்கட்சிக்கே வெற்றி

தமிழகத்தில் 1980க்கு பின்னால் மொத்தம் 51 இடைத்தேர்தல், 2 ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல்கள் (தற்போது நடந்து முடிந்த தேர்தல்களையும் சேர்த்து) நடந்து முடிந்துள்ளது. இதில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றது என்பது வெறும் 8 தொகுதிகளில் தான். மீதமுள்ள 43 தொகுதி இடைத்தேர்தல், 2 ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் என 45 தொகுதிகளுக்கான தேர்தலில் ஆளுங்கட்சியே வென்றுள்ளது. அதுவும் 1990களுக்கு பின்னால் எதிர்கட்சிகள் வெற்றி என்பது பெருமளவு குறைந்து, இடைத்தேர்தல்களில் எதிர்கட்சி வெல்வது என்பது அரிதினும் அரிதாக நடக்கத்துவங்கியது.

1999ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில், நத்தம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அதற்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் 2004ம் ஆண்டு. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, மங்களூர் தொகுதியில் தி.மு.க. வென்றது. இதற்கு பின்னர் நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வென்றுவருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்பதே நிலைமை.

அதிக வாக்குப்பதிவு நடந்தால் ஆளுங்கட்சிக்கு சாதகம், பெண்கள் அதிகளவில் வாக்களித்தால் அது அ.தி.மு.க.வுக்கு சாதகம் என தேர்தலின் அத்தனை கணக்குகளையும் இடைத்தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி விடுகிறது. அப்படியென்றால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே தொடர்ச்சியாக வெற்றி பெற என்ன காரணம் என கேட்கிறீர்களா?

a3_11092.jpg

வெற்றிக்கு வழி வகுக்கும் அதிகார பலம்

முதல் காரணம் அதிகார பலம். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரு கட்சிகளும் தீவிரமாக போட்டியிட்டாலும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் என்பதும், காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பலம். தேர்தல் விதிகளை சில இடங்களிலோ, தேவைப்பட்டால் பல இடங்களிலோ இவர்கள் மிக எளிதாய் மீற முடியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க விரும்பினால் அதையும் தங்கு தடையின்றி செய்ய இந்த அதிகாரம் பயன்படும். பயன்படுத்தப்படுகிறது.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்த்ல் நடக்கும் தொகுதியில் முழு கவனம் செலுத்தி பணியாற்றும் போது, அந்தந்த துறை அதிகாரிகளின் அதிகாரம் முழுக்க தேர்தலுக்கு பயன்படுத்த முடியும். தேர்தல் விதிகளை மிக எளிதாய் மீற... இந்த அதிகாரம் பயன்படும். தேர்தல் வெற்றிக்கு ஆளுங்கட்சியிடம் மட்டுமே இருக்கும் இந்த அதிகார பலம் மிக முக்கிய காரணம்.

a2_11193.jpg

பணம் இதையும் செய்யும்

இரண்டாவது பண பலம். ஆளுங்கட்சி என்றால் பணப்புழக்கம் அதிகளவில் இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க அனைத்து அமைச்சர்களும் களமிறங்கி பணியாற்றுவார்கள் என்பதால், அவர்கள் பெருந்தொகையை தேர்தலில் இறக்கி விட்டு தேர்தல் பணியாற்றுகிறார்கள். ஒரு அமைச்சருக்கு சில ஆயிரம் வாக்காளர்கள் வீதம் பிரித்து கொடுக்கப்படுவதால் பணம் கொடுப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. அதிக தொகை கொடுக்கவும் இது வழி வகை செய்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றால் அது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவதால், எவ்வளவு பணத்தை செலவழித்தேனும் வெற்றியை பெற வேண்டும் என நினைத்து பணத்தை கொட்டி குவிக்கிறார்கள்.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர், இந்த இடைத்தேர்தல் ஃபார்முலா தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 500, 1000 என இருந்த பணம் இப்போது, 5000 ரூபாய் வரை நீண்டிருக்கிறது.  மக்களை பணத்தை காட்டி இழுத்து அவர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்துவிடுகிறார்கள் ஆளுங்கட்சியினர்.  எதிர்கட்சிகளும் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள் என்றாலும், தங்களிடம் உள்ள அதிகார பலத்தை கொண்டு அதை கொஞ்சம் அடக்கி வைக்கவும், தங்களிடம் உள்ள பண பலத்தை கொண்டு பெருமளவில் தொகையை வாக்காளர்களுக்கு கொடுக்கவும் ஆளுங்கட்சியினராலே முடிகிறது.

a1_11361.jpg

மக்களின் மனநிலை

மூன்றாவது ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் தொகுதிக்கு ஏதாவது திட்டங்கள் நடக்கும் என மக்கள் நினைப்பதும், அதை நோக்கிய பிரச்சாரங்களும் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.  'எதுக்கு வம்பு. ஆளுங்கட்சிக்கே ஓட்டை போட்டுடுவோம். அவங்க ஆட்சி செய்யறப்போ, இவங்க வந்து என்ன செய்யப்போறாங்க' என்ற எண்ணம் பொதுவாகவே மக்களிடம் இருக்கிறது. இதை நோக்கியே ஆளுங்கட்சியின் பிரச்சாரமும் அமைக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதைச்செய்வோம், இதைச்செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் கட்சிகள், 'நாங்கள் வந்தால் தான் இது நடக்கும்' என பிரச்சாரத்தில் மென்மையான மிரட்டலையும் கையாள தவறுவதில்லை. எனவே ஆளுங்கட்சிக்கே வாக்களித்து விடுவோம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் மக்கள்.

கடந்த பொதுத்தேர்தலின் போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்திருந்தால், தி.மு.க. வென்றிருக்கும் என சொல்லப்பட்டது. இப்போது அந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வியை தழுவுகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுகிறது. இதற்கு அதிகார, பண பலத்தை கடந்து மக்களின் மனநிலையும் முக்கிய காரணம்.

a4_11094.jpg

கோட்டையானாலும் தோல்வியை தழுவும் எதிர்கட்சிகள்

தஞ்சாவூர் தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே இங்கு தி.மு.க. தோற்றதில்லை என சொல்லும் அளவுக்கு தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது தஞ்சாவூர். அரவக்குறிச்சியும் அப்படித்தான். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. மிக மோசமான தோல்வியை சந்தித்த நேரத்திலும் அரவக்குறிச்சியில் தி.மு.க. வென்றது. இந்த முறையும் வெல்லும் என உறுதியிட்டு கூறப்பட்ட நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது இங்கும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுகிறது.

a5_11040.jpg

இங்கு வெற்றி... அங்கு தோல்வி... ஏன் தெரியுமா?

தமிழகத்தில் யாருடைய ஆதரவும் இல்லாமல் 3 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் அ.தி.மு.க., புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில், பாரதிய ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் ஆதரவோடு போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கும் அங்கும் தமிழக அமைச்சர்கள் களமாற்றினார்கள். பணம் வாரி இறைக்கப்பட்டது. ஆனாலும் அ.தி.மு.க. மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. அங்கு வெற்றி பெற்றது புதுவை மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ். புதுவை முதல்வர் நாராயணசாமி அ.தி.மு.க.வை விட மிகப்பெரும்பான்மை வாக்குகளை பெற்று வென்றுள்ளார். தமிழகத்தில் வென்ற அ.தி.மு.க. புதுவையில் மிக மோசமான தோல்வியை தழுவுகிறது.

ஏனென்றால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முதல் காரணமான அதிகார பலம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. இது தான் இடைத்தேர்தல் அரசியல். அதிகார பலம், பண பலம் மற்றும் ஆளுங்கட்சி வெல்வது தானே நல்லது என்ற மக்கள் நிலை இந்த மூன்றும் தான் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற முக்கிய காரணம்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற 12 ஆண்டு வரலாறு, 13 வது ஆண்டாக தொடர்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/73102-why-aiadmk-lost-in-pudhucherry-byelection.art

  • தொடங்கியவர்

தேமுதிகவை முந்திய பாஜக 3 தொகுதிகளிலும் 3-ம் இடம்

 

 
திருப்பரங்குன்றம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் | படம்: ஆர்.அசோக்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் | படம்: ஆர்.அசோக்.
 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்:

அதிமுக; திமுக வேட்பாளர்களை இடையே வாக்கு வித்தியாசத்தில் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கான மாற்றம் ஏதும் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதே காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர்.

அதேவேளையில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்ட தேமுதிகவின் பலம் இந்த தேர்தலில் மேலும் சரிந்துள்ளது.

அரவக்குறிச்சியில் 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக - 1340 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக - 572 வாக்குகள் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் 13-வது சுற்று முடிவில் பாஜக - 4099 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 2708 வக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது. பாஜக 2940 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 1092 வாக்குகள் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு தேர்தல் சரியும் தேமுதிக:

கட்சி ஆரம்பித்த 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 12 சதவீதம் வாக்குகள் பெற்றது. 2011-ல் அதிமு.கவுடன் கூட்டணி அமைத்து 7.88% வாக்கு பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது தேமுதிக. கடைசியாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தமாகா கூட்டணி உடன் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார்.

அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும் திமுக கூட்டணி 98 தொகுதிகளையும் கைப்பற்றின. இத்தேர்தலில் தேமுதிக படுதோல்வி தழுவியது. தேமுதிக 2.4% வாக்குகள் மட்டுமே பெற்றது.

தேர்தல் விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது சட்டப்பேரவைத் தேர்தலில் 30 உறுப்பினர்களுக்கு ஒரு உறுப்பினர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பதிவான மொத்த வாக்குகளில் அந்தக் கட்சி பெற்ற ஓட்டுகள் 6% இருக்க வேண்டும். ஆனால், தேமுதிக 2.4% வாக்குகள் மட்டுமே பெற்றது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தேர்தல் முடிவுகள் தேமுதிகவை இன்னும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளிலும் தேமுதிகவைக் காட்டிலும் பாஜக அதிக வாக்குகள் பெற்று அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3-வது இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/தேமுதிகவை-முந்திய-பாஜக-3-தொகுதிகளிலும்-3ம்-இடம்/article9373782.ece?homepage=true

  • தொடங்கியவர்

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

 

 
தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் | படம்: எல்.சீனிவாசன்.
தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் | படம்: எல்.சீனிவாசன்.
 

தமிழகத்தில் 3 தொகுதிகளை அதிமுக வசமாக்கியுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரி நெல்லித்தோப்பில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். எஞ்சிய அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அரவக்குறிச்சியில் மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தஞ்சையில் அதிமுக வெற்றி:

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சாவூரில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி கூறும்போது, "என்னை ஆதரித்து வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி தமிழக முதல்வரின் சாதனைத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி" என்றார்.

திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி:

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 1,12,988 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் 70,361 வாக்குகள் பெற்றுள்ளார். 42,627 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக 6,453 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தேமுதிக 3,901 வாக்குகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சியில் 12-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 20,108 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அஇஅதிமுக - 62,520; திமுக - 42,412 வாக்குகள் பெற்றுள்ளன.

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.

நாராயணசாமி அமோக வெற்றி:

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி பெற்ற மொத்த வாக்குகள்: 18,709. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர்- 7565 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 334 வாக்குகள் பதிவாகின.

விரிவான செய்திக்கு: | நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி |

4 தொகுதிகள் பதிவான வாக்குகள் எவ்வளவு?

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

மொத்த வாக்காளர்களான 31362 பேரில் 26895 பேர் வாக்களித்தனர். இதில் 12551 ஆண் வாக்காளர்கள் (83.99 சதம்), 14,344 வாக்காளர்கள் (87.37 சதம்) என மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மொத்தம் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது.

இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

http://tamil.thehindu.com/tamilnadu/4-தொகுதி-முடிவுகள்-3-தொகுதிகளும்-அதிமுக-வசம்-நெல்லித்தோப்பில்-நாராயணசாமி-வெற்றி/article9372836.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

’மக்கள் என் பக்கம்’- முதல்வர் பெருமிதம்

 

leGV85nj_16270.jpg

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்த மூன்று தொகுதி வாக்காளர்களுக்கும் முதல்வர்  ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் இன்று வாக்கு ண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் நலம் தேறி வரும்  எனக்கு, இந்த 3 தொகுதி தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. மகத்தான வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றி. மக்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/73151-tn-bypoll-election--jayalalithaa-thanks-voters.art

  • தொடங்கியவர்

தே.மு.தி.கவை பின்னுக்குத் தள்ளிய பா.ஜ.க

 

tamilisai-%20vijayakanth%20meet_16194.jp

தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது அக்கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மூன்று தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 3,806 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் அப்துல்லா சேட் 1,534 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,192 வாக்குகளும், பாமக வேட்பாளர் 794 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் 3-வது இடத்தை நோட்டா பிடித்துள்ளது. நோட்டாவுக்கு 2,295 வாக்குகள் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,930 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 4,105 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,082 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 2,214 வாக்குகள் கிடைத்துள்ளன.

அரவக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் 1,070 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 1179 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/73154-bjp-pushed-back-dmdk.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.