Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதீத ஆர்வம்! ஓயாத உழைப்பு! குன்றாத உற்சாகம்! ஏனென்றால், அவர் கருணாநிதி!

Featured Replies

தளர்ந்த உடல்... தளராத தலைமை... கருணாநிதி கடந்து வந்த பாதை !

 

b1_13475.jpg

ரசியல் மேடையில் இந்த கதையை நீங்கள் பல முறை கேட்டிருக்கலாம். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை எத்தனை முறை சொல்லி இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. தன் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவமாக இதை அவர் சொல்வதுண்டு. அவரது தன்னம்பிக்கையை, விடா முயற்சியை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது இந்த சம்பவம்.

ஒரு ஆண்டுக்கு முன்னர்,  கருணாநிதியிடம் 'இத்தனை வயதாகிவிட்டது. அரசியலில் எப்படி இவ்வளவு சலிப்பில்லாமல் இயங்குகிறீர்கள்? ஓய்வு எடுக்கலாம் என தோன்றியதே இல்லையா' என அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் இந்த சம்பவத்தை அடிக்கோடிட்டு தான்.

b2_13061.jpg

அரசியல் நான் விரும்பிய பாதை

"பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்து சென்று விட்டோம். 'என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்' என்றார் நண்பன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான் நீந்த வேண்டும்' என்று சொன்னேன்.இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை" என்றார் அவர்.

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதியைப் போல வெற்றி கண்டவரும் இல்லை. அவரை போல சரிவுகளை சந்தித்தவர்களும் இல்லை. அவரைப் போல விமர்சிக்கப்பட்டவர் தமிழக அரசியலில் யாரும் இல்லை. நீண்ட காலம் அரசியலில் இருப்பது என்பது அவருக்கு மிகப்பெரிய சிக்கலைத் தான் கொடுத்தது. பல பிரச்னைகளில் அவர் மீது ஆத்திரங்களை வாரி கொட்டுகின்றனர். ஆனாலும் அவர் இன்னும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.  இது போன்ற விமர்சனங்களின் போதெல்லாம், 'எல்லா பாதைகளிலும் குளிர் சோலைகளும் இருக்கும். சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டதும் பதுங்கி ஓடுபவன் நான் அல்ல' என விளக்கம் கொடுப்பார்.

b5_13180.jpg

13 தேர்தல்களில் தொடர் வெற்றி

கருணாநிதி இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளார். எதிலும் அவர் தோற்றதில்லை. 1957-ம் ஆண்டு முதன்முதலில் கருணாநிதி போட்டியிட்டது குளித்தலை தொகுதியில். அன்று நடந்த தேர்தலில் அவருடன் களம் கண்டவர்கள் யாரும் இன்றைய அரசியல் களத்தில் இவரளவு செயல்பாட்டில் இல்லை. இவர் மட்டுமே இருக்கிறார். இவரை விட ஒன்றரை ஆண்டு முதிர்ந்தவர் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன். 1957-ம் ஆண்டு கருணாநிதியோடு தேர்தலை சந்தித்தவர் அன்பழகன் தான். கடந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அன்பழகன் ஒதுங்கி கொண்டார். 93-வது வயதில் இப்போதும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் கருணாநிதி.

1957-ம் ஆண்டு தனது முதல் தேர்தலை சந்தித்த போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 வயது கூட இல்லை. ஜெயலலிதாவுக்கு 21 வயது இருக்கும்போது கருணாநிதி, தி.மு.க.வின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி விட்டார். ஜெயலலிதா முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்றபோது கருணாநிதி இருமுறை முதல்வராகி இருந்தார். கடந்த தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு நேரெதிராய் முதல்வர் வேட்பாளராய் களம் கண்டிருக்கிறார்.

b6_13356.jpg

1971-ல் பெற்ற பிரம்மாண்ட வெற்றி

32 வயதில் எம்.எல்.ஏ., 44-வது வயதில் முதல்வர், கட்சியின் தலைவர், போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் இடைவிடாத வெற்றி, 93 வயதிலும் எம்.எல்.ஏ. என இவர் அடைந்த உயரங்கள் பல. இதற்குப் பின்னால் கருணாநிதியின் கால நேரம் பார்க்காத உழைப்பு இருக்கிறது.

தனது பதின் வயதின் துவக்கத்தில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அந்த வயதில் 'மாணவ நேசன்' என்ற துண்டு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில்  மாணவர்களை திரட்டினார் கருணாநிதி. மிகவும் இளம் தலைவராக இருந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பின்னர் தனது 44-வது வயதில் முதல்வரானார். கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அண்ணா மறைவுக்கு பிறகு 1971-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தது தி.மு.க. ராஜாஜி, காமராஜர் ஆகியோர் ஓரணியில் நிற்க... அவர்களை எதிர்த்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியை பெற்றார். 184 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார் கருணாநிதி. தனிப்பெரும் கட்சி 184 இடங்களில் வென்றது அப்போது தான். அந்த வெற்றியை அதன் பின்னர் யாராலும் பெற முடியவில்லை. அதன் பின்னர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியதால், 13 ஆண்டுகள் ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்திருந்தது தி.மு.க. அப்போது கூட கருணாநிதி தேர்தலில் தோல்வியை தழுவியதில்லை. மாணவ நேசன் கையெழுத்துப் பிரதியை நடத்தியவர், இப்போது கட்சியின் தலைவர், எம்.எல்.ஏ. ஆகிய பொறுப்புகளோடு, முரசொலி பத்திரிகையின் ஆசியராகவும் இருந்து வருகிறார்.

வெற்றிகளை மட்டுமல்ல... பழிகளும் ஏராளம்...

கருணாநிதி ஏற்றங்களை மட்டுமல்ல. வீழ்ச்சியையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தவர். தமிழகத்துக்கு மதுவிலக்கு அகற்றும் யோசனையை கொண்டு வந்தது, ஈழ விவகாரத்தில் இவரது செயல்பாடு, 2 ஜி ஊழல் என இவர் மீதான விமர்சனங்கள் எண்ணற்றவை. அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடித்தவர் என்பதால் ஏராளமான பழிகளை இவர் எதிர்கொண்டிருக்கிறார். எதிர்கொண்டு வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., வைகோ, இப்போது அழகிரி என இவருக்கு ஏராளமான சிக்கல் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, மாநில சுயாட்சிக் கொள்கை என தி.மு.க. கடைபிடித்த கொள்கைகளில் இருந்து இவர் விலகி வந்தது கடுமையாகவே கேள்விக்குள்ளாப்பட்டது. முக்கியமாக ஈழ விவகாரத்தில் தி.மு.க.வின் செயல்பாடு, கருணாநிதி மீது இன்றைய தலைமுறையினரை ஆத்திரப்பட வைத்தது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் தோல்வியை தழுவாமல் பயணம் செய்து விட்டார் கருணாநிதி. இந்த 60 ஆண்டுகளில் அவர் முதல்வராக இருந்தது வெறும் 18 ஆண்டுகள் தான். ஆனால் எப்போதும் இவரே கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.

b4_13521.jpg

தளர்ந்த உடல்... தளராத தலைவர் !

கருணாநிதி மீதான இந்த விமர்சனங்களின் போது, தி.மு.க. தரப்பில் தரப்படும் விளக்கம் 'காய்த்த மரங்களே கல்லடி படுகின்றன' என்பார்கள். உண்மையில் காய்த்த மரம் தான் கருணாநிதி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 60 ஆண்டுகளைக் கடந்த அரசியல் அனுபவம், 48 ஆண்டுகளாக அரசியல் கட்சியின் தலைவர் என இவர் எட்டிய உயரம் நிச்சயம் மிகப்பெரிய சாதனை தான்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணலை நடத்தினார் தி.மு.க. கட்சியின் தலைவர் கருணாநிதி. அவரோடு பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். ஆயிரக்கணக்கானோரை நேர்காணல் செய்த கருணாநிதி, நேர்காணலை நடத்தியவர்களில் ஸ்டாலினையும், துரைமுருகனையும் கூட நேர்காணல் செய்தார். கட்சியின் அடுத்த தலைவர் என சொல்லப்பட்ட ஸ்டாலினை கருணாநிதி நேர்முகத்தேர்வு செய்தது வெறும் செய்தி அல்ல. நான் இன்னும் தளர்ந்து விடவில்லை என்பதை சொல்வதாகத்தான் அது இருந்தது. வயது முதிர்ந்து விட்டாலும், இன்னும் தளராமல் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இப்போது உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எந்த இளம் தலைவர்களுக்கும் இவரது ஆற்றலும், செல்வாக்கும் இல்லை. புதைகுழிகள் நிறைந்த பாதை என சொல்லப்படும் அரசியல் பாதையில் இத்தனை நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது என்ன சாதாரணா விஷயமா என்ன?

http://www.vikatan.com/news/coverstory/73906-political-journey-of-dmk-chief-karunanidhi.art

 
  •  

அதீத ஆர்வம்! ஓயாத உழைப்பு! குன்றாத உற்சாகம்! ஏனென்றால், அவர் கருணாநிதி!

 

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதியின் அரசியலோடு நேரெதிராக ஒருவர் முரண்பாடலாம். அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். அதிகாரத்தில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட முறைகளில், இன்றுவரை ஆத்திரம் இருக்கலாம். அவருடைய மதிநுட்பம், நகைச்சுவை உணர்வு, தன்முனைப்பு, தனிநபர் துதிபாடல் குறித்து, கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், யாருக்கும்... ஏன் கருணாநிதியை பரமவைரியாக நினைப்பவர்களுக்கும் கூட அவருடைய உழைப்பு, உற்சாகம், ஆர்வம் குறித்து எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. எந்த விமர்சனத்தையும் அவர்களால் வைக்க முடியாது. கருணாநிதிக்கு எதற்கும் நேரம் இல்லாமல் போனதே இல்லை. இருக்கும் நேரம் அனைத்தையும் அவர் உழைத்தே கழிப்பார். அந்த உழைப்புத்தான், 93-வயதிலும், அவர் நினைத்ததை செய்வதற்கான நேரத்தை அவர் வசம் வைத்துக் கொண்டே இருந்தது. 

2 மாதங்களுக்கு முன் கருணாநிதி...

“தலைவர் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். எனவே, அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்” என்று கடந்த அக்டோபர் 25-ம் தேதி, அறிவலாயத்தில் இருந்து அறிக்கை வந்தது. அதன்பிறகுதான், அவர் தனது அன்றாட வேலைகளில் இருந்து பிசகினார். ஆனால், அந்த அறிக்கைக்கு முன்புவரை, கருணாநிதி உற்சாகமாக உழைத்துக் கொண்டே இருந்தார். 

93 வயதில் கருணாநிதியின் ஒருநாள்!

கருணாநிதிக்கு தற்போது 93 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய செயல்பாடுகளை அவர் கொஞ்சம் குறைத்துக்கொண்டார். ஆனால், எதையும் உதறித் தள்ளிவிடவில்லை. காற்றைப்போல் கருணாநிதி இயங்கிக் கொண்டே இருந்தார்.  அவருடைய ஒருநாள், காலை 5 மணிக்கு ஆரம்பித்துவிடும். வீட்டில் இருந்து 5.30 மணிக்கு அறிவாலயம் சென்றுவிடுவார். முன்பு நடைப்பயிற்சிக்காக அறிவாலயம் சென்றவர், நடக்கமுடியாமல் போனதற்குப் பிறகு,  அறிவாலயம் செல்வதை நிறுத்தவில்லை. நடக்க முடியாவிட்டால் என்ன? சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டே, அறிவாலயத்தை  தினமும் காலையில் சுற்றி வந்தார். நடைபயிற்சியால் கிடைக்கும் உற்சாகத்தை அவருக்கு இந்தப் பழக்கம் கொடுத்தது. காலையில் நிரம்பியிருக்கும் புதிய காற்றை சுவாசித்துக் கொண்டு, கைகளை அசைத்து, அவரால் முடிந்த அளவில் சில யோகா பயிற்சிகளை செய்து கொண்டிருந்தார். பயிற்சி முடிந்ததும், அங்கு வைத்தே பத்திரிகைகள் அனைத்தையும் படித்துவிடுவார்.  தொலைக்காட்சி செய்திகளை அங்கேயே பார்த்துவிடுவார். அந்த  நேரத்திலேயே, அன்று கொடுக்க வேண்டிய அறிக்கை அவர் மனதில் பிறந்துவிடும். 

kalignar_1_14173.jpg

150 நேர்காணல்கள்... 84 பைல்கள்

கருணாநிதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஏறக்குறைய நிறுத்திவிட்டார். மிக முக்கியமான திருமணங்கள், கட்சிப்பொதுக்கூட்டம், மாநாடுகள், ஆர்ப்பாட்டம் தவிர வேறு எதிலும் நேரில் சென்று கலந்து கொள்வதில்லை. ஆனால், வீட்டுக்கு வரும் தொண்டர்களை சந்திக்காமல் அவர் திருப்பி அனுப்பியதில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரையிலும், நாள்தோறும், 100 முதல் 150 அப்பாயின்ட்மென்ட்களை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்கு வாழ்த்து வாங்க வருபவர்கள், வெளியூர்களில் இருந்து வரும் கட்சிக்காரர்களுக்கு இதில் முன்னுரிமை. அதுபோல, 

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை தினமும் கண்டிப்பாக அறிவாலயம் வந்துவிடுவார். அங்கு வந்து, அறிக்கை தயார் செய்து கலைஞர் தொலைக்காட்சிக்கும் முரசொலிக்கும் முதலில் அனுப்பிவிடுவார். அதன்பிறகு, அறிவாலயத்தில் இருக்கும் பைல்களைப் பார்ப்பார். கட்சிக்காரர்களின் கோரிக்கைகள், மாவட்டச் செயலாளர்கள் பஞ்சாயத்து தொடர்பான பைல்களைப் பார்த்து, அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை வலியுறுத்துவார். அறிவாலயத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான உத்தரவுகள் கொடுப்பார். தேவைப்பட்டால், அப்போதே சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிவிடுவார். தேவை இருந்தால், நேரில் வரச் சொல்வார். கடைசியாக அவர் அறிவாலயம் வந்து, பைல்களைப் பார்த்தபோது, ஒரே நாளில் 84 பைல்களைப் பார்த்து, அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அதன்பிறகு, தான் கொடுத்த அறிக்கைகள், தொலைகாட்சியின் மதிய நேரச் செய்திகளில் எப்படி வருகிறது என்று பார்த்துவிடுவார். அவர் நினைத்தது வரவில்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு திருத்தம் சொல்வார். 

kanimozhi_14333.jpg

அறிவாலயம் டூ சி.ஐ.டி காலனி

அறிவாலயத்தில் இருந்து கிளம்பி, மதியத்துக்கு மேல், சி.ஐ.டி காலனி வீட்டுக்குப்போவார். மதிய உணவு அங்குதான். அரை மணிநேரத் தூக்கம் கண்டிப்பாக இருக்கும். அதன்பிறகு மாலை தேவைப்பட்டால் மற்றொருமுறை அறிவாலயம் வருவார். இல்லையென்றால் நேராக கோபாலபுரம் சென்றுவிடுவார். அங்குபோய், அவர் கதை வசனத்தில் வெளியாகும் ராமானுஜர் தொடரைப் பார்ப்பார். அடுத்தவாரம் ஒளிபரப்பாகும் தொடர், ஒருவாரத்திற்கு முன்பே கருணாநிதிக்கு வந்துவிடும். அதைப் பார்த்துவிட்டு அதில் திருத்தம் இருந்தால் சொல்வார். இதற்கிடையில், தென்பாண்டிச் சிங்கம் தொடருக்கான கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். 

தயாளு அம்மாளுக்கு தனியாக நேரம்!

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் எனும் ஞாபக மறதிப் பிரச்னையில் இருக்கிறார். அதுபோல, அவருக்கு வாயில் உமிழ் நீர் சுரப்பது குறைந்துவிட்டது. அது செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. கோபாலபுரம் வீட்டில் கீழ் தளத்தில்தான் தயாளு அம்மாளின் அறை இருக்கிறது. மேல்தளத்தில் கருணாநிதியின் அறை இருக்கிறது. தினமும் தயாளு அம்மாளுடன் பேசிக்கொள்ளும் கருணாநிதி, அவரையும் உற்சாகப்படுத்துவார். அவருக்கு நினைவு திரும்பும் நேரங்களில், அவரிடம் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பார். 

அதன்பிறகு, இரவு செய்திகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை சிறிது நேரம் பார்ப்பார். இப்போது புழக்கத்தில் இருக்கம் ரிமோட்களில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள். அதை கையாள்வதில் கருணாநிதிக்கு சிக்கல் இருந்தது. அதற்காக அவருடைய செல்போனில் ஒரு ஆப் டவுன்லோடு செய்து வைத்திருந்தார். அதைப் பயன்படுத்தி செல்போனில் இருந்தே, சேனலை மாற்றிப் பார்ப்பார். அதன்பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு மறுநாள் வெளிவரும் முரசொலியின் ‘பைனல்’ பார்த்துவிட்டு, திருத்தம் சொல்வார். இரவு அவர் தூங்குவதற்கு 11.30 மணிக்குமேல் ஆகிவிடும். இந்த நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் சாதரணமானவையாகத் தோன்றலாம். ஆனால், 93 வயதில் கருணாநிதி இந்த நிகழ்ச்சி நிரலை, கட்டுக்கோப்பாக கடைபிடிப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான், அதில் மறைந்து இருக்கும் ஆச்சரியம் புரியும்.  

karunanidhi_dhayalu_14143.png

எதையும் தாங்கும் இதயம்!

கருணாநிதியின் ஆஸ்தான மருத்துவர்களில் ஒருவர். அவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதனுக்கு வயதான காலத்தில் இதயம், கிட்னி, சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால்தான் பிரச்னைகள் உருவாகும். கருணாநிதிக்கு இந்த 4 பிரச்னைகளும் இல்லை என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இருதயத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையில், எதையும் தாங்கும் இதயம்தான் அவருடையது. அதனால்தான், தனது செல்லமகள் கனிமொழி கைது செய்யப்பட்டபோது, “இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்ன கருணாநிதி, “ஒரு மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ... அப்படி இருக்கிறது என்று உடையாமல் பதில் சொன்னார். அவருடைய சிறுநீரகங்கள் இப்போதும் நன்றாகச் செயல்படுகின்றன. அவருக்கு சர்க்கரை நோய் கிடையாது. ரத்தக் கொதிப்பும் கிடையாது. 

32 வயதில் ஹார்ட் அட்டாக், 35 வயதில் பி.பி., சுகர் என்று கேள்விப்பட்ட இன்றைய தலைமுறைக்கு இது மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கும் விஷயம்தான். இத்தனைக்கும் கருணாநிதி எம்.ஜி.ஆரைப்போல் கடுமையான உடற்பயிற்சிகள் செய்தவரில்லை. ஆனால், அப்படி உடற்பயிற்சி செய்த எம்.ஜி.ஆருக்கே உடல் ஆரோக்கியம் விஷயத்தில் கருணாநிதிக்கு கிடைத்த வரம் வாய்க்கவில்லை. கருணாநிதியின் இந்த உடல் ஆரோக்கியத்துக்கு, அவருக்கு இயற்கை கொடுத்த கொடை என்றே சொல்லலாம். எப்போதுமே அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். 15 வயதில் தொடங்கி 44 வயதுவரை அவர் கூட்டங்களுக்காக போகாத ஊர்கள் இல்லை. நடக்காத தொலைவு இல்லை. அந்த ஊர்களில் கிடைத்த சாதரண உணவுகள், சாதரண தண்ணீருக்கு கருணாநிதியின் உடல் ஏற்றுக்கொள்ளும். இது கருணாநிதியின் சமகாலத்தவர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், கண்ணதாசனுக்கு வாய்க்காதது. அவர்கள் திரைத் துறையில் கோலேச்சத் தொடங்கிய பிறகு, ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். கருணாநிதி அதில் கொஞ்சம் தள்ளியே இருந்தார்.  

kalaignar_MGRR_14048.jpg

கடுமையான கட்டுப்பாடு! அதீத முன்ஜாக்கிரதை உணர்வு!

இயற்கையாக கருணாநிதிக்கு அமைந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, அவர் கடைபிடித்த கடுமையான சில கட்டுப்பாடுகளும் இயல்பாக அவருக்கு வாய்த்த முன்ஜாக்கிரதை உணர்வும், அவரை 93 வயதில்  உற்சாகமாக வைத்ததற்கு முக்கிய காரணங்கள். ஒரு காலத்தில், புகை, மதுப் பழக்கங்கள் கருணாநிதிக்கும் இருந்தன. இதுபோன்ற கேளிக்கைகளில், கவிஞர் கண்ணதாசனின் கூட்டாளியாக இருந்தவர்தான் கருணாநிதி. இதை கருணாநிதியே கண்ணதாசனின் பிறந்தநாள் விழா மேடையில் பேசி உள்ளார். அதுபோல், இரவு முழுவதும் கண்விழித்து சீட்டாடும் பழக்கமும் கருணாநிதிக்கு பால்ய காலத்தில் இருந்துள்ளது. ஆனால், பொறுப்புகள் கூடக்கூட அவர் அதுபோன்ற விஷயங்களில் ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, இதுபோன்ற பழக்கங்களில் இருந்து கருணாநிதி தன்னை விடுவித்துக் கொண்டார். 

‘டயட்’ என்ற வார்த்தை கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் பிரபலமானது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே அதைக் கடைபிடித்தவர் கருணாநிதி. அவர் 44 வயதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனாதுமே, தனது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டார். காலை சரியான நேரத்திற்கு உணவு, 11 மணிக்கு பழச்சாறு, மதியம் 1.30 மணிக்குள் மதிய உணவு, 3 மணிக்கு குட்டித் தூக்கம், 5 மணிக்கு சிற்றுண்டி என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 9 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவார்.

அசைவம் சாப்பிடாத அசைவர் கருணாநிதி!

கருணாநிதி அசைவம் விரும்பி. ஆனால், அவர் மாமிசம் சாப்பிடுவதில்லை. அவருக்கு ஆட்டுக்கறி குழம்பு பிடித்தமானது. ஆனால், அதில் உள்ள கறித்துண்டுகளை எடுத்துக்கொள்ளமாட்டார். கோழிக்கறி அறவே கிடையாது. ஆனால், மீன் நிறைய சாப்பிடுவார். இப்போதும் அவருக்கு மீன் சமைத்து முட்களை நீக்கி அடிக்கடி பரிமாறுவார்கள். அதை விரும்பி சாப்பிடுவார். கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார். முட்டை சாப்பிடுவார். ஆனால், அதில் மஞ்சள் கருவை தவிர்த்துவிடுவார். தாளிக்காத குழம்பு, சட்னிதான் பல காலமாக அவர் சாப்பிடுகிறார். எந்த நிலையிலும், இந்த வழக்கங்களில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. ஆனால், இப்படி இருந்தபோதும், அவருக்கு வயிற்றில் குடல் புண் பிரச்னை  ஏற்பட்டது. உடனடியாக தேசிகாச்சாரியாரை நியமித்து, பிரத்யோகமாக யோகா கற்றுக் கொண்டார். தான் விரும்பியது இல்லை என்றாலும் கவலைப்படமாட்டார். இருப்பதை, தனக்கு தகுந்ததாக மாற்றிக் கொள்வார் கருணாநிதி. 

KALAIGAR_GOPALAPURAM_14293.jpg

ஆர்வம்... ஆர்வம்... ஆர்வம்...

93 வயதில் உடல் தளர்ந்த நிலையிலும், கருணாநிதியை உற்சாகமாக வைத்திருந்தது, அவருடைய ஆர்வம்தான். “இப்போதும் தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தான் உழைக்க வேண்டும்” என்ற கருணாநிதியின் பிடிவாதம் கொஞ்சம்கூட தளரவில்லை. 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், ஸ்டாலினின் லகான் இன்னும்  கருணாநிதியின் கைகளில்தான் இருக்கிறது. கருணாநிதியை மிஞ்சி ஸ்டாலினால், இப்போதுவரை எதையும் சாதித்துவிட முடியவில்லை. இப்போதும்கூட ஸ்டாலினுக்கு ஒவ்வொருநாளும் கருணாநிதி செக் வைத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக, காலையில் மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியாக எதையாவது ஒரு கருத்தைத் தெரிவிப்பார். அது செய்திகளில் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை மங்க வைக்கும் வகையில், அதற்கு நேர் மாறாக அல்லது அதைவிட முக்கியமான ஒரு விவகாரத்தை கையில் எடுத்து, கருணாநிதி அறிக்கை விடுவார். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், ஓ.பி.எஸ்-யிடம் முதலமைச்சர் இலாகாக்களை ஒப்படைத்தது பாராட்டத்தக்கது. நான் அதை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். ஆனால், சிறிது நேரத்தில், கருணாநிதியிடம் இருந்து அறிக்கை வந்தது, “இது தாமதமான நடவடிக்கை. இந்த நடவடிக்கை முதலமைச்சரின் ஒப்புதலுடன்தான் நடைபெற்றதா? என்று அறிக்கை கொடுத்தார். அவ்வளவுதான், ஸ்டாலின் பேட்டி பின்னால் போனது. கருணாநிதி அறிக்கை தலைப்புச் செய்தியானது. தனக்குப்பின் கட்சியைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்... அறிவாலயத்தை நிர்வாகிக்க, நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி ஒருபோதும் தன் வேலைகளில் சுணக்கம் காட்டியதே இல்லை. 

பேஸ்புக், ட்வீட்டர்...

இவ்வளவு வேலைகளுக்கு இடையில் தன்னுடைய முகநூல் பக்கத்தையும் அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் பக்கங்களை நவீன் என்பவர் நிர்வகிக்கிறார். ஆனால், அதில் கருணாநிதியின் பதிவுகளுக்கு லைக்குகள் குறைந்தால், என்னய்யா... லைக் எல்லாம் குறையுது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். எது டிரெண்டிங் செய்தி என்பது வரை அப்டேட் செய்து கொள்வார். 

KARUNA_BOOKS_14177.jpg

ஏனென்றால்... அவர் கருணாநிதி!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான், கருணாநிதி கொஞ்சம் சொகுசு வாழ்க்கைக்குப் பழகினார். அப்போதுதான் அவருக்கும் சிறுசிறு பிரச்னைகள் வர ஆரம்பித்தன. எண்ணெய் பலகாரம் சாப்பிட்டால் மயக்கம் வர ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக கூட்டங்களில் பல மணிநேரம் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பேசியதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. 2000-ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பேனா பிடித்து எழுதுவதை நிறுத்திவிட்டார். காரணம், தோள்பட்டையிலும் கைகளிலும் வலி வரத் தொடங்கியது. அதன்பிறகு, இப்போதுவரை அவர் ‘டிக்டேட்’ செய்ய செய்ய உதவியாளர்கள் எழுதுகின்றனர். உடலின் எடையை தாங்கும் சக்தியை கால் மூட்டுகள் இழந்தன. உடனே, அதில் கௌரவம் பார்க்காமல், தனக்கு ஏற்றார்போல, சக்கர நாற்காலியை வடிவமைத்துக் கொண்டார். அதில் வலம்வந்து உழைத்துக் கொண்டிருந்தவரை, 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்வி மிகவும் பாதித்தது. அந்த வருத்தம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில் தன்னால் பழையபடி உழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது. இப்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு தன்னைப்போல சாமர்த்தியம் இல்லையே என்ற வேதனையும் இருந்தது. இந்த நிலையில்தான், அவர் மேற்கொள்ளும் பிசியோதெரபி சிகிச்சைக்காக தேய்க்கப்படும் எண்ணெய் அவர் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தியது. அதில் உருவான கொப்புளங்களால், அவர் தான் வாழ்நாளில் இருந்திடாத அளவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக கோபாலபுரத்தில் முடங்க வேண்டியதானது. இந்தப் பிரச்னையில் இருந்து அவர் மீண்டபிறகும், அவர் ஒய்வுக்குப் போய்விடமாட்டார். அப்போதும், உற்சாகமாக உழைக்கவே பிரயத்தனப்பட்டுக்கு கொண்டிருப்பார். ஏனென்றால், அவர் கருணாநிதி.

http://www.vikatan.com/news/coverstory/73993-passion-hard-work-and-enthusiasm-he-is-karunanidhi.art

  • தொடங்கியவர்

சீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி!

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்துக்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த நினைவாற்றலுடன் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் மிகுந்த அக்கறையும் எச்சரிக்கை உணர்வும் கொண்டவர் கருணாநிதி.

மன வலிமை மிக்கவர்..

'நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக உயரம் தாண்ட முடியும்' என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும். பல்வேறு போராட்டகளில் சிறை சென்ற போதிலும், தேர்தலில் தி.மு.க பல சறுக்கல்களை எதிர்கொண்ட போதிலும், அவற்றையெல்லாம் கண்டு, துவண்டுபோகாமல் இருப்பதற்கு  அவருடைய மனவலிமைதான் முக்கியக் காரணம்.

february-26-1973-cm-karunanidhi-presents

ஒரு மனிதன் மனதை வலிமையாக வைத்துக் கொண்டால் மட்டுமே, உடல்நிலையை சீராக வைத்திருக்க முடியும். மன வலிமையோடு, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் கருணாநிதி. அடுத்தது அவரது எழுத்துத் திறமை. அவரை என்றும் மனவலிமையாடு வைத்திருக்கும் மந்திரம் என்று கூட அவரது எழுத்தைச் சொல்லலாம். வந்த எதிர்க் கணைகளை எல்லாம் தனது பேனா வலிமையால் தகர்த்தெறிந்தவர். பராசக்தி படத்தில் தொடங்கி, நெஞ்சுக்கு நீதி, தற்போதைய ராமானுஜர் வரை, அவருடைய படைப்புகள், அனுபவங்களும், இலக்கியமும் கலந்ததாகவே அமைந்திருக்கும். 

 

http___photolibrary_09558.jpg

விறால் மீனை விரும்பி சாப்பிடுவார்!

கருணாநிதிக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். "வயதிற்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டவர். எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடியவர். காலையில் இட்லியும் மதியம் சாம்பார் சாதமும், காய்கறியும், கீரையும், மாலையில் தோசை போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை பழக்கப்படுத்திக் கொண்டார். ஆப்பிள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். ஆரம்பத்தில் மாமிச உணவுகளைச் சாப்பிட்டபோது விறால் மீனை மிகவும் அதிகம் விரும்பிச் சாப்பிட்டுள்ளார். முதுமைக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு உணவை எடுத்துக் கொள்வார். அறிவாலயத்துக்கு அருகே உள்ள ஆனந்த பவன் ஓட்டலில் போண்டாவை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அறிவாலயத்தில் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நேரத்தில், இரவு தோசை வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார். வீட்டில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சில நேரத்தில்  சாப்பிட்டு விடுவார். வயதுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கு வந்து விட்டார். மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்வார். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாக உணவு எடுத்துக் கொள்ள தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்" என்று தெரிவிக்கின்றனர்.

உடலைப் பாதுகாப்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்படக் கூடியவர்!

கருணாநிதி தனது உடல்நிலையில் சிறிய சோர்வு ஏற்பட்டாலே உடனடியாக  தெரிவித்து, அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வார். தன்னுடைய உடலுக்கு என்னதேவை என்பதை முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கக் கூடியவர். நன்றாகப் படிக்கும் திறனாளி. 1971-ல் மெரினா கடற்கரையில் அன்பில், கருணானந்தம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது லேசாக அவருக்கு தலைவலி உடனடியாக டைகர் பாம் கேட்டு தேய்த்துக் கொண்டாராம்.

http___photolibrary.vikatan.com_images_g

"கருணாநிதியை முழுமையாக கவனித்துக் கொள்ளும் மருத்துவர் கோபால், கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கக் கூடியவர். ஆரம்பகாலத்தில் கருணாநிதிக்கு, மோகன்தாஸ், பத்ரிநாத் (சங்கர நேத்ராயலா), மார்த்தாண்டம் (ராமசந்திரா) ஜம்பு, ஆறுமுகம் போன்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இன்றுவரை அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்போ அல்லது ரத்த அழுத்தமோ கிடையாது. முதுமை காரணமாகவே உடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. விரைவில் கருணாநிதி வீடுதிரும்புவார்" என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள்.

உடற்பயிற்சி - யோகா !

"உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் நடைபயிற்சி முக்கியமானது என்று எண்ணுபவர் கருணாநிதி22-1434948017-karuna-stalin34-600_12278.. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். முன்பெல்லாம் நாய் குட்டியுடன் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வார். பொன்.முத்துராமலிங்கம், அன்பில்  தர்மலிங்கம், தயாளு அம்மாள் ஆகியோருடன் செல்வார். பிற்காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் 3 அல்லது 4 முறை சுற்றி வருவார். சுமார் ஒருமணி நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளக்கூடியவர். முதுகுவலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் நடைபயிற்சி செல்வது நின்று விட்டது" என்றனர் அவர்கள்.

ஒருமுறை கருணாநிதி, தன்னுடைய உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டதோடு. சர்வதேச யோகா தினம் தொடர்பாக கேள்வி- பதிலாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். "யோகாவை பெரிதும் விரும்புபவன்தான் நான்! இன்னும் சொல்லப் போனால் ஒருகாலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன்தான். யோகக் கலையில் வல்லுநரான தேசிகாச்சாரியிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்தான்" என்று தெரிவித்திருந்தார்.

அவருக்கு நெருங்கியவர் சொன்ன தகவல். "கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார். தஞ்சாவூரில் அறை தயாராக இருந்தும் அங்கு செல்லாமல் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். பின்னர் அறைக்கு வந்தவர் உணவை முடித்து விட்டு மீண்டும் கிளம்பலாம் என்று மிக உற்சாகமாகக் கூறினார். அப்போதுதான் தலைவர் வந்த செய்தியை தயார் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பயணக் களைப்பு எங்களை வாட்டிக் கொண்டிருந்தபோதும், அவர் மட்டும் உற்சாகமாகக் காணப்பட்டார். அதற்குக் காரணம் அவர் மேற்கொண்ட பயிற்சி முறையும் உணவும் தான்" என்று அதிசயத்துடன் குறிப்பிட்டார்.

நினைவாற்றல் திறன் மிக்கவர்  !

நேரத்தை மிகச் சரியாக பின்பற்றக் கூடியவர். குறித்த நேரத்துக்குத் தொண்டர்களை பார்ப்பது, தலைமைச் செயலகத்துக்கு  குறித்த நேரத்துக்குச் செல்வது என நேரந்தவறாமையை கடைபிடிக்கக் கூடியவர். எந்த ஊருக்குச் சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றாலும் சரி, கடந்தமுறை, தான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றல் கொண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர் கருணாநிதி.

பொதுவாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாகச் செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டு பக்கமுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்குத் தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஒருமுறை தெரிவித்தார். 93 வயதிலும், "ராமானுஜர் தொடரின் சில கருத்துகளை இவ்வாறு மாற்றுங்கள்" என்று கூறி. இயக்குநரை அசத்தி விட்டார் தலைவர் என்றார் அவருடன் நெருங்கிப் பழகியவர்.

http://www.vikatan.com/news/coverstory/74033-food-habit-and-fitness-help-karunanidhi-to-lead-a-political-life-beyond-40yrs.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.