Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests

Featured Replies

இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests

 

India vs Australia

டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த  திக் திக் டெஸ்ட் போட்டிகள், சிறந்த போட்டிகள் போன்றவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 

10. ராஜ்காட் டெஸ்ட் - இந்தியா VS இங்கிலாந்து :-

வங்கதேசத்தில் அடி வாங்கிய கையோடு இந்தியா வந்திருந்தது இங்கிலாந்து. 'இந்தியாவில் மிக மோசமான தோல்விகளை சந்திக்க நேரிடலாம்' என இங்கிலாந்து முன்னணி வீரர்கள் அந்த அணிக்கு  அச்சுறுத்தல் அறிக்கைகளை பார்சல் செய்தனர். "இது வழக்கமான இங்கிலாந்து அணி கிடையாது, இந்தியாவுக்கு இது வழக்கமான ஹோம் சீரிஸ் கிடையாது, இந்தியா போராடவேண்டியதிருக்கும்" என இன்னொரு பக்கம் கிரிக்கெட் நிபுணர்கள் இந்திய அணிக்கு கிலி காட்டிக் கொண்டிருந்தனர். 

கடந்த முறை இங்கிலாந்துக்குச் சென்ற போது அவர்கள் நம்மை பிரித்து மேய்ந்தார்கள், இந்தியாவுக்கு வந்தபோதும் தொடரை வென்று பெப்பே காட்டிவிட்டு போனார்கள், எனவே இது இந்திய அணிக்கு முக்கியமான தொடர் என்ற கவனம் இந்திய வீரர்களிடம் இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் படுமோசமான ஆட்டத்தை சந்தித்த கோலி, அந்த அவப்பெயரை மாற்ற வேண்டும் என  வெறியுடன் இருந்தார். அந்த நாளும் வந்தது. ஆம் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது.  டாஸ் ஜெயித்தது இங்கிலாந்து. இந்திய ரசிகர்கள் கன்னத்தில் கை வைத்தனர். பத்தாயிரம் ரன்கள் எடுத்த பெருமையோடு, கேப்டனாக களமிறங்கிய குக் உடன், 19 வயது நாயகன் ஹஸீப் ஹமீத் களமிறங்கினார். 

India Vs England

அருமையான லைன் அண்ட் லென்த்தில், குக்கின் பேட்டில் பட்டு அவுட்சைடு எட்ஜ் ஆகும் வகையில் ஒரு பந்தை  வீசி இங்கிலாந்தை வரவேற்றார்  ஷமி. சுதாரித்தார் குக். மூன்றாவது பந்தில் ரஹானே ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட மைதானத்தில் ரசிகர்கள் உச் கொட்ட ஆரம்பித்தார்கள். பிட்ச் பேட்டிங்குக்கு ஓரளவு சாதகமாக இருந்தது; பந்துகள் திரும்பவும் இல்லை; ஸ்விங் ஆகவும் இல்லை; இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பொறுமையாக  ரன் சேர்த்தனர். ரூட், மொயின் அலி, ஸ்டோக்ஸ் என மூன்று பேர் சதமடித்தார்கள். கடந்த  மூன்றாண்டுகளாக இந்திய மண்ணில் முன்னூறு அடிப்பதற்கே எதிரணிகள் திக்கித்திணறிய  நிலையில் இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸிலேயே 537 ரன்கள் குவித்தது. பதிலடியாக, முரளி விஜய், புஜாரா ஆகியோரின்  சதங்களோடு 488 ரன் எடுத்தது இந்தியா. அடுத்த இன்னிங்ஸில் குக் சதமடிக்க 260/3 என டிக்ளர் செய்தது இங்கிலாந்து. இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 310 ரன்கள். 71/4 என்ற நிலையில்  இருந்து அடுத்த இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது இந்தியா.  

விராட் கோலி, ஜடேஜா யாராவது ஒருவரின் விக்கெட்டை எடுத்தாலும் மேட்ச்சை  ஜெயித்து விடலாம் என  எண்ணினார் குக். ஆனால் கோலியின் பக்குவத்துக்கு முன்பும், ஜடேஜாவின் கேஷுவல் இன்னிங்ஸ் முன்பும் இங்கிலாந்து பவுலர்கள் பாச்சா பலிக்கவில்லை. இந்திய மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடருக்கு பிறகு முதன் முதலாக ஐந்து  நாள் மேட்ச் நடந்தும் போட்டி டிரா ஆனது. இது வேற லெவல் டெஸ்ட் தொடர்  என அறிமுகம் பெற்றது.மறக்க முடியுமா இந்த மேட்ச்சை?

9. ஜோஹன்னஸ்பார்க் டெஸ்ட் (இங்கிலாந்து vs தென்ஆப்பிரிக்கா)

 நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென் ஆப்பிரிக்கா வந்திருந்தது இங்கிலாந்து அணி. கடந்த ஆண்டு நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 14-ம் தேதி வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. தென்னாப்பிரிக்க 313  ரன்னும், ரூட் சதத்தால் இங்கிலாந்து 323  ரன்னும் குவித்தன. மூன்றாவது இன்னிங்ஸில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது.

Eng Vs SA

ஸ்டூவர்ட் பிராட் தனது வாழ்நாளின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பிராடின் பவுன்சர்களுக்கும், ஸ்விங்குக்கும் விடை தெரியாமல் நின்றனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். அம்லா, டிவில்லியர்ஸ், டு பிளசிஸ் என சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களே தாக்குப்பிடிக்க முடியாமல்  வந்த வேகத்தில் விக்கெட்டை கொடுத்துவிட்டுச் பெவிலியனுக்குத் திரும்பினர். அந்த அணியில் அதிகபட்ச  ரன் எடுத்தவரே ரபாடா தான். எவ்வளவு தெரியுமா? 16 ரன்கள். வெறும் 83 ரன்னுக்கு சொந்த மண்ணில் ஆல் அவுட் ஆகி அவமானப்பட்டது தென் ஆப்பிரிக்கா. 12 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்தது ஆறு விக்கெட்டைச் சாய்த்தார் பிராட். மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிக்குத் தேவையான ரன்னைச் சேர்த்து தொடரை ஜெயித்து தம்ஸ் அப் காட்டியது இங்கிலாந்து. அயல் மண்ணில், அதுவம் டெஸ்ட் போட்டிகளில் வலிமை மிக்க தென்னாப்பிரிக்காவை ஜெயித்ததில்  இங்கிலாந்தே ஹேப்பி அண்ணாச்சி ஆனது. மறக்க முடியுமா இந்த மேட்ச்சை?

8. செயின்ட் லூசியா டெஸ்ட் (இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ்): -

கோலி தலைமையில்  ஆசிய கண்டத்துக்கு அப்பால் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் டெஸ்ட் தொடர் அது. வெஸ்ட் இண்டீஸ் அணியோ டி-20 உலகக் கோப்பையை வென்ற தெம்பில், மீண்டும் கிரிக்கெட் ஜாம்பவானாக உருவாக, இந்த டெஸ்ட் தொடரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா  ஜெயிக்க, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. மூன்றாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது. 126/5 என இந்தியா மோசமான நிலையில் இருந்தபோது அஷ்வினும், சாஹாவும் நாங்க இருக்கிறோம் எனச் சொல்லி நீண்ட நெடிய அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார்கள். கோலியையும், ரஹானேவையும், ரோஹித்தையும் எளிதாகச்  சாய்த்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் இவர்கள் இருவரையும் பிரிப்பதற்குள் படாதபாடு பட்டார்கள். பவுன்ஸர்கள் வீசினார்கள்; யார்க்கரில் அச்சுறுத்தினார்கள்; சூழல் வலை அமைத்தார்கள்: ஆனால் எதிலும் சிக்காமல் சிறப்பாக ஆடி செஞ்சுரி போட்டது இந்த இணை. 353  ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது இந்திய அணி. 

IND vs WI

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் பிடித்தது, மூன்றாவது நாள் மழையால் கைவிடப்பட்டது. டெஸ்ட் டிராவை நோக்கி நகரப்போகிறது என எல்லோரும் நம்ப ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் புவனேஷ்வர் குமார் , “எனது ஸ்விங்குகளுக்கு பதில் சொல்லிவிட்டு டிராவை பற்றி யோசியுங்கள்”  என சொல்லாமல் சொன்னார். அகப்பட்டது வெஸ்ட் இண்டீஸ். 225 ரன்னில் இன்னிங்ஸை இழந்தது. ரஹானேவின் 78  ரன் உதவியுடன் 217/7 என்ற நிலையில் டிக்ளர் செய்தது இந்தியா. வெறும் 108 ரன்னில் கடைசி இன்னிங்ஸில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். அயல் மண்ணில் கோஹ்லி தலைமையில் இந்தியா  பெற்ற இரண்டாவது தொடர் வெற்றி இது. அது மட்டுமல்ல, கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக   வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று அபார சாதனை படைத்தது இந்தியா. மறக்க முடியுமா இந்த மேட்ச்சை? 

7. சிட்டகாங் டெஸ்ட் (இங்கிலாந்து VS  வங்கதேசம்) 

நியூஸிலாந்து வந்தது.. தோற்றது! பாகிஸ்தான் வந்தது ...தோற்றது! இந்தியா முரண்டு பிடித்தது ...கடைசியில்  தோற்றது! தென் ஆப்பிரிக்கா போராடியது.. தோற்றது! ஜிம்பாப்வே வந்தது சரணடைந்தது! ஆப்கானிஸ்தான் கிலி தந்தது.. எனினும் தோற்றது! 

இந்தப்பூனைக்கு யார் தான் மணி கட்டுவது, அத்தனை பெரிய நாடுகளுமே வங்கதேச மண்ணில் தோல்வியைச் சந்திக்கின்றனவே.. என்ன தான் காரணம்? என வங்கதேசத்தை பார்த்து மிரட்சியில் இருந்தனர் எதிரணி வீரர்கள். இப்படியொரு சூழ்நிலையில் தான் வங்கதேசம் வந்து ஒருநாள் தொடரை வென்று ஜம்மென  ஆசிய துணைகண்டத் தொடருக்குத் தயாரானது இங்கிலாந்து. 

அடுத்தது டெஸ்ட் போட்டி. டெஸ்டில் இங்கிலாந்து வலுவான அணி. வங்கதேசம் எளிதில் சரணடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு வலிமையையும் திரட்டி ஆட  ரெடியாக இருந்தது வங்கதேசம். டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து. வங்கதேசம் 248 ரன்கள் மட்டுமே எடுக்க.. முதல் இன்னிங்ஸில் கிடைத்த 45 ரன்கள் முன்னிலையும் சேர்த்து, 285 ரன்னை வங்கதேசத்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. 

Ban VS ENG

108/5 என சரிந்தபோதும் அணியை இழுத்துப் பிடித்தார்கள் முஷ்பிகுர் ரஹீமும், சபீர் ரஹ்மானும். எனினும் நான்காவது நாள் இறுதியில் 11 ரன்கள் இடைவேளையில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம். கடைசி நாள் இங்கிலாந்தின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவை; வங்கதேசமோ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைச் சுவைக்க 33 ரன்கள் எடுக்க வேண்டும், கையில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்  சபீர் ரஹ்மானின் துணை இருக்கிறது என்ற நிலை. முதன் முறையாக வங்கதேசம் விளையாடிய டெஸ்ட் போட்டிக்கு பெரும் ஆதரவு குவிந்தது. ரசிகர்கள் மைதானங்களில் நிறைந்தார்கள். 

ஐந்தாவது நாள்  ஆட்டம் ஆரம்பித்தது. பிராட் வீசிய முதல் ஓவரில் மூன்று  ரன் வந்தது. இன்னும் 29 ரன் மட்டுமே கமான்... கமான் என வங்கதேச  ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஸ்டோக்சின் அடுத்த ஓவரிலேயே ஐந்து ரன்னை எடுத்தது. இன்னும் 24 ரன்கள் தான் வெற்றிக்கு தேவை  என்ற நிலை ஏற்பட பரபரப்பு தொற்றியது. புது பந்தை கையில் எடுத்தது இங்கிலாந்து. பிராட் பந்தை வீச அந்த ஓவரில்  இரண்டு  ரன் வந்தது. வெறும் 22 ரன்கள் தான் தேவை: நிமிர்ந்து உட்கார்ந்தார்கள் வங்கதேச  ரசிகர்கள். ஸ்டோக்ஸ் அடுத்த ஓவரை வீச ரெடியானார்.  தஜுல் இஸ்லாமுக்கு பந்து வீசிவிட்டு எல்.பி.டபிள்யூ என கத்தினார் ஸ்டோக்ஸ். அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. டி.ஆர்.எஸ் உதவியை நாடினார் குக். பலன் இங்கிலாந்துக்கு கிடைக்க, ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது வங்கதேசம். அடுத்த பந்தில்  ரன் இல்லை. அதற்கடுத்த பந்தில் மீண்டும் எல்.பி.டபிள்யூ  என கத்தினார் ஸ்டோக்ஸ். இந்த முறை அம்பயர் அவுட் தந்தார். பேட்டிங் முனையில் இருந்த ஷபியுல்  ரிவ்யூ கோரினார். இந்த முறையும் பலன் இங்கிலாந்துக்கே கிடைத்தது. நெருங்கி வந்து தோல்வியைச் சந்தித்த ஏமாற்றத்தில் நொறுங்கியது வங்கதேசம்.மறக்க முடியுமா இந்த மேட்ச்சை? 

6. கல்லீ டெஸ்ட் (இலங்கை VS ஆஸ்திரேலியா) 

ஆஸ்திரேலியா அப்போது டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணி. இலங்கையோ பரிதாப நிலையில் இருந்தது. இந்நிலையில் தான் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஆஸ்திரேலியா. நான்கரை ஆண்டுகளாக ஆசிய கண்டத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றதே இல்லை என்ற மோசமான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, இந்த தொடரில் இலங்கையை நசுக்கலாம்  என்ற எண்ணத்துடன் வந்திருந்தது. 

galle test

முதல் டெஸ்ட் போட்டியில் மரண அடி கொடுத்திருந்தது இலங்கை. அதில் இருந்து சுதாரிப்பதற்குள் இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஜெயித்தது  இலங்கை. இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆஸ்திரேலியா எடுத்த ரன்கள் (106 +183) 289 மட்டும் தான். ஒரு இன்னிங்ஸில் 33 ஓவரிலும், இன்னொரு இன்னிங்ஸில் 50 ஓவரில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருந்தது, திலுவான் பெரேராவின் பத்து விக்கெட் டெஸ்ட் போட்டியில் கேவலமான தோல்வியைச் சந்தித்து கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய தலைகுனிவைச் சந்தித்தது ஆஸ்திரேலியா. 229  ரன் வித்தியாசத்தில்  மேட்ச்சையும் ஜெயித்து, 2-0 என தொடரையும் இலங்கை ஜெயித்தபோதுதான் தனது கேப்டன் வாழ்க்கையின் தேனிலவுக் காலம் முடிவடைந்திருந்ததை கேப்டன் ஸ்மித் உணரத் தொடங்கினார். மறக்க முடியுமா இந்த மேட்ச்சை?

5.  லார்ட்ஸ் டெஸ்ட் (இங்கிலாந்து VS பாகிஸ்தான்) 

"என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இது தான் சிறந்த வெற்றி. இது தான் சிறந்த மேட்ச். இந்த மேட்சில் பங்கேற்றதற்காக பெருமைப்படுகிறேன், இந்த மேட்சில் கேப்டன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன், இந்த மேட்சில் சதமடித்தவன் என்ற முறையில் நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன்" -  லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு  இப்படிச் சொன்னார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக். 

lords test

ஸ்விங் ஆடுகளங்களில் முகமது ஆமீரின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பதால் பிரத்யேக பயிற்சிகளைச் செய்து வைத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு  தயாரானது இங்கிலாந்து. ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இங்கிலாந்து மண்ணில், அதுவும் தங்களையே கதறடிப்பார் என கனவிலும் இங்கிலாந்து நினைத்துப் பார்த்திருக்காது.  மிஸ்பா உல் ஹக், ஆசாத்  ஷபிக் இருவரும் சிறப்பாக ஆட, கவுரமான ஸ்கோரை  குவித்தது பாகிஸ்தான். 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 207 ரன்னுக்குள் அடங்கியது இங்கிலாந்து.(6+4) 10 விக்கெட்டுகளை கைப்பற்றி லார்ட்ஸில் மேன் ஆப் தி மேட்ச் விருது வாங்கினார் யாசிர் ஷா. வெற்றியுடன் இங்கிலாந்து தொடரை ஆரம்பித்திருந்தது  பாகிஸ்தான். மறக்க முடியுமா இந்த மேட்ச்சை?

4. சென்னை டெஸ்ட் (இந்தியா VS இங்கிலாந்து) 

சென்னை  டெஸ்ட் என்றாலே வரலாற்றில் இடம்பெறும்  முக்கியமான போட்டியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 2008 க்கு பிறகு ஆஸ்திரேலிய  டெஸ்ட் மட்டும் தான் சென்னை மண்ணில் நடந்தது. இதன் பின்னர் கடந்த  எட்டரை ஆண்டுகளில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி  சமீபத்தில் நடந்து முடிந்ததுதான்.  டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது இங்கிலாந்து. பிட்சில் பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை, ஆனால் கொஞ்சம் ஸ்லோ பிட்ச் தான். நிலைத்து நின்று ஆடினால் பெரிய ரன்களை குவிக்க முடியும் என்பதை இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் காட்டியது. 

karun nair, chennai test

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரூட் ஏமாற்றியது, சத்தமில்லாமல் சதமடித்த மொயின் அலி,  எட்டாவது விக்கெட்டுக்கு  107 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதங்கள் கண்ட  இங்கிலாந்து பவுலர்கள் ரஷீத் மற்றும் டாவ்சன், விக்கெட்டுகளை அள்ளுவார் என  எதிர்ப்பார்க்கப் பட்ட அஷ்வின் ஒரு விக்கெட்டில் திருப்திப்பட்டது,  இந்தியாவின் இன்னிங்ஸில் ராகுல் 199 ரன்னில் எதிர்பாராமல் அவுட் ஆனது, கருண் நாயர் அசர வைக்கும் முச்சதம் அடித்தது, இந்தியா 759  ரன் எடுத்து வரலாறு படைத்தது,  கடைசி நாளில் கடைசி இரண்டு செஷன்களில் விக்கெட் வேட்டை நடத்திய ஜடேஜாவால் போட்டியின் முடிவு மாறியது என எல்லாமே யாருமே எதிர்ப்பார்க்காத,  கணிக்காத முடிவுகள் தான். ஆகவே, மறக்க முடியுமா இந்த மேட்ச்சை?

3. பிரிஸ்பேன் டெஸ்ட் (பாக் VS ஆஸி)

பகலிரவுப் போட்டியாக நடந்த டெஸ்ட் இது.  தொடரின் முதல் டெஸ்ட் போட்டியே  பகலிரவாக நடத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு  மனரீதியாக கடும் சவால் தரமுடியும் என திட்டமிட்டிருந்தது ஆஸ்திரரேலியா. ஏனெனில் இலங்கை டெஸ்ட் தொடர் தோல்வியும், தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் அடைந்த தோல்வியும் ஆஸ்திரேலிய அணியை கடுமையாக பாதித்திருந்தன. 

முதல் நாள் முழுவதும் விளையாடி, இரண்டாவது நாளின் பகல் பொழுதில் முழுமையாக பேட்டிங் பிடித்து 429 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது ஆஸ்திரேலியா. கப்பாவில் இரவு நேரத்தில் பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகும் என்பதால் பாகிஸ்தான் கதையை எளிதாக முடித்துவிடலாம் என திட்டம் போட்டது ஆஸ்திரேலியா. அதை கச்சிதமாக செயல்படுத்தினர் ஸ்டார்க், ஹாஸில்வுட், பேர்ட் கூட்டணி. வெறும் 67/8 என்ற நிலையில் இருந்து ஒருவழியாக 142 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது பாக்.  பாலோ ஆன் தராமல் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி வெறும் 39 ஓவர்களில் 202 ரன்களை குவித்து, மூன்றாவது நாள் இரவும் பாகிஸ்தானையே பேட்டிங் பிடிக்க வைத்தது ஆஸ்திரேலியா. 

இந்த முறை சுதாரித்தது பாகிஸ்தான். முதல் இன்னிங்ஸில் அவ்வளவு  மோசமாக விளையாடிய அணியா இது என அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு மறுநாளே பேட்டிங்கில் அவ்வளவு மாற்றங்கள் தெரிந்தன. விக்கெட்டை விடாமல் உடும்புப்பிடி ஆட்டம் காட்டியது  பாகிஸ்தான்.  490 ரன் எடுத்தால் வெற்றி  என்ற நிலையில், பொறுப்பாக பொறுமையாக ஆடினார் பாக் பேட்ஸ்மேன்கள். அசார் அலி, யூனிஸ்கான் அரை சதங்கள் கடந்தனர். 220/6 என்ற நிலையில் ஷஃபிக்கும், முகமது ஆமீரும் செமத்தியான இன்னிங்ஸ் ஆடினார்கள். அமீர் பயப்படாமல் ஸ்டார்க்கின் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். டிராவுக்காக ஆடும் ஆட்டம், தோல்வியைத் தவிர்க்க ஆடும் ஆட்டம் என்பதை மாற்றி இது பாகிஸ்தான் வெற்றிக்காக ஆடும் ஆட்டம் என ஆஸ்திரேலியாவுக்கு புரிய வைத்தார்கள் ஆமீரும், ஷஃபிக்கும். 48 ரன்னில் ஆமீர் அவுட் ஆகும்போது அணியின் ஸ்கோர் 312/ 7. அடுத்தபடியாக வஹாப் ரியாஸ் ஷஃபிக்குடன் இணைந்து சிறப்பாக ஆடினார். ரியாஸ் அவுட்டாகும் போது ஸ்கோர் 378/8.  வெற்றிக்கு இன்னும் நூறு ரன்களுக்கு மேல் தேவை என்பதால் ஆஸ்திரேலியா எப்படியும் ஜெயித்து விடலாம் என நினைத்தது. ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யாசிர் ஷா, ஷஃபிக் இணை ஆஸ்திரேலியாவை சோதித்தது.  ரன்களை ஒன்றிரண்டாக ஓடி ஓடிச் சேர்ந்தது; பவுண்டரிகள் அடித்துச் சேர்த்தது; பதற்றமடைந்தது ஆஸ்திரேலியா. 

 

 

நான்காவது இன்னிங்ஸில் நானூறு ரன்களை கடந்து வேகமாக பல சாதனைகளை உடைத்துத் தள்ளி முன்னேறியது பாகிஸ்தான். தேரோட்டியாக  பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி பயணிக்கவைத்தார் ஷஃபீக். சதம் கடந்து சாதனை புரிந்தார். மேட்ச் மெல்ல மெல்ல பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. ஒரு திங்களின் காலையில் ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாடும் வேலைக்குச் செல்லாமல் டிவி முன்னர் அமர்ந்து பிரார்தித்தவாறு இருந்தது, உலகம் முழுவதும் அன்றைய தினம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடக்கபோகும் மிகப்பெரிய சேஸிங்கை கொண்டாடத் தயாரானார்கள். அந்த சமயத்தில் புது பந்தை கையில் எடுத்தது ஆஸ்திரேலியா. ஸ்டார்க்கை பந்து வீச அழைத்தார் ஸ்மித். தான் ஏன் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை உலகுக்கு பறைசாற்றும் விதமாக நல்ல லைன் அண்ட் லெந்தில் ஒரு பவுன்சர் வீசினார்  ஸ்டார்க். சமாளிக்கவே முடியாத அந்த பந்தில் அவுட் ஆனார் ஷஃபிக். அவரின் கனவுச் சத இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்த மூன்று  பந்துகள் இடைவெளிக்குப் பிறகு  மிக மோசமான முறையில் ரன் அவுட் ஆனார்  யாசிர் ஷா.  450 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, எப்போதும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாகத் தான் விளையாடுவோம் என மீண்டும் நிரூபித்தது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவை  அரளவைத்த இந்த மேட்சை மறக்க முடியுமா? 

2. ஹோபர்ட் டெஸ்ட் :- 

கடந்த நவம்பரில்  ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது தென் ஆப்பிரிக்கா. முதல் டெஸ்டில்  தென் ஆப்பிரிக்கா ஜெயித்தது . இரண்டாவது டெஸ்ட் ஹோபர்ட்டில் நடந்தது.  ஆஸியை அதன் மண்ணில் முதல் இன்னிங்ஸில் வெறும் 85  ரன்களுக்குள் சுருட்டி எறிந்தனர் பிலாந்தர், அபாட், ரபடா ஆகிய மும்மூர்த்திகள். சொந்த மண்ணில், முதல் நாளில் 32.5 ஓவர்களில் அத்தனை விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக நின்றது ஆஸ்திரேலியா. இதையடுத்தது தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸை தொடங்கியது. 46/3, 76/4, 132/5 என அந்த அணியும் தடுமாறியது. எனினும் டீ காக்கின் பயமற்ற ஒரு அதிரடியான சதமும், தெம்பா பவுமாவின் பொறுப்பான இன்னிங்ஸும் அணி 326 ரன்களை குவிக்க உதவின.  இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் சொதப்பி 79/2 என்ற நிலையில் இருந்து 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. 

hobart test

இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் மேட்ச்சை ஜெயித்தது மட்டுமின்றி 2-0 என தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது தென் ஆப்பிரிக்கா. கடந்த 23 வருடங்களில் முதன் முறையாக சொந்த மண்ணில் எதிராணியிடம் ஹாட்ரிக் டெஸ்ட் தொடரை இழந்தது ஆஸ்திரேலியா. இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக  அடுத்தடுத்து டெஸ்ட் தோல்விகள் அடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த ஆண்டு அதிகம் விமர்சிக்கப்பட்ட அணியாக மாறியது ஆஸ்திரேலியா. ஆக, மறக்க முடியுமா இந்த மேட்சை?   

1. டாக்கா டெஸ்ட் (இங்கிலாந்து vs வங்கதேசம்)

முதல் டெஸ்ட் போட்டியில், கடைசி நேர தவறுகளால் மேட்ச்சை தோற்றதால், இந்த மேட்ச்சில் கூடுதல் கவனத்தோடு ஆடியது வங்கதேசம். தமீம்  இக்பால்  சதமடிக்க முதல் இன்னிங்ஸில் 220 ரன்கள் குவித்தது வங்கதேசம். இங்கிலாந்து அணியில் ரூட்டைத் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் ஒழுங்காக ஆட வில்லை, கீழ் வரிசை வீரர்கள் பொறுமைக்காட்டி ரன்கள் சேர்த்தால், 244  ரன் குவித்தது இங்கிலாந்து. மெஹந்திஹசன் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்ட்

இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் குவித்தது  வங்கதேசம். இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 273 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன. கேப்டன் குக்கும், பென் டக்ட்டும் பொறுமையாக ஆடி அரைசதம் எடுத்த நிலையில் முதல் விக்கெட் நூறாவது ரன்னில் தான் விழுந்தது. அதன் பின்னர் மெஹந்தி ஹசன், ஷகிப் அல் ஹசன் இருவரும் விக்கெட் வேட்டையைத் தொடங்கினார்கள்.  சீட்டுக்கட்டை போல விக்கெட்டுகள் சரிய வெறும் 164 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. கடைசி பத்து விக்கெட்டுகளை 22 ஓவர்களில் வெறும் 65 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து.

 இதையடுத்து முதன் முறையாக   டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்தை டெஸ்ட் போட்டியில்  வீழ்த்தியது வங்கதேசம். கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்ளும், நூறாண்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வரும் இங்கிலாந்தை, வங்கதேசம் வீழ்த்தியதில் நாடே கோலாகலம் பூண்டது. உலகக் கோப்பையை வென்றதற்கு நிகரான கொண்டாட்டங்கள் கொடிகட்டிப் பறந்தன. நிச்சயம் இந்தாண்டின் ஆகச் சிறந்த டெஸ்ட் போட்டி இது. இந்த மேட்சை இங்கிலாந்து மறந்தே ஆக வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்நாளும் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். நாமும் தான்.

ஆரோக்கியமான போட்டிகள்... அதிர்ச்சி முடிவுகள் ஆகியவற்றைத் தந்த டெஸ்ட் போட்டிகளைப் பற்றிப் பார்த்தோம், அடுத்ததாக தில்... திரில்... திரி  கொளுத்திய, 2016 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டிகளைப்பற்றிப் பார்ப்போம். 

http://www.vikatan.com/news/coverstory/75753-top-10-test-matches-of-2016-top10tests.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.