Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#LIVE - தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Featured Replies

#LIVE - தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

dmk-stalin-made-executive-head_10229.jpg

 

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் விதி 18ல் மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.கவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தரப்பட்டது. செயல் தலைவரான ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். துரைமுருகனின் உரையைக் கேட்ட ஸ்டாலினும் கண்ணீர் விட்டார்.

'தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  சூழல்தான் என்னை செயல்தலைவராக ஆக்கியுள்ளது' என ஸ்டாலின் உரையாற்றினார்.  மேலும் அவர் பேசுகையில், 'எல்லா பொறுப்புகளுக்கு விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்டேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் தலைவர் உடல்நலம் குன்றி இருக்கும் பொழுது இந்த பதவியை ஏற்றுக் கொள்வதில் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த பொறுப்பினை சிறப்பாக ஏற்று செயல்படுவேன்.

nsdsd0114a_10418.jpg



பள்ளிப் பருவத்தில் இருந்தே திமுகவில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. செயல் தலைவர் என்பதை பதவியாக கருதவில்லை, பொறுப்பாக கருதுகிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

----------------------

அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்தப் பொதுக்குழுவால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நந்தனம், தேனாம்பேட்டையில் கடும் வாகன நெரிசல்.

dmk-general-body-meet-traffic-chennai

படங்கள்: பா.காளிமுத்து

http://www.vikatan.com/news/politics/76795-dmks-stalin-made-as-partys-executive-chief.art

  • தொடங்கியவர்

திமுக பொதுக்குழு - கருணாநிதி பங்கேற்கவில்லை! மு.க.ஸ்டாலின் செயல் தலைவரானார்!

nsdsd0114_09350.jpg

இன்று தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் பொதுக்குழு நடந்து வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க-வின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

பல முக்கிய முடிவுகள் குறித்து இந்த பொதுக்குழு கூறப்படும் என்று தகவல்கள் வந்த நிலையில், தி.மு.க-வின் தலைவர் மு.கருணாநிதி இதில் பங்கேற்ப் போவதில்லை என்று கூறப்பட்டது. முதன்முறையாக, தி.மு.க தலைவர் கருணாநிதி இல்லாமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. கருணாநிதி இல்லாத காரணத்தால், தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு நடந்து வருகிறது. 

nsdsd0114a_09173.jpg

இந்த பொதுக்குழுவில், திமுக-வின் பொருளாளர் ஸ்டாலின், அக்கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ.ராமசாமி, கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மு.க.ஸ்டாலின் செயல் தலைவரானார்!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

திமுக தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு வழங்கப்படும்!

திமுக-வின் பொருளாளராகவும் மு.க.ஸ்டாலின் நீடிப்பார்.

பொதுச் செயலாளர் க.அன்பழகன் தீர்மானத்தை முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார்

திமுக சட்ட விதி 18ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

மு.க.ஸ்டாலின் கண்ணீர்!

திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பேச்சை கேட்டு மு.க.ஸ்டாலின் கண்ணீர்!

http://www.vikatan.com/news/tamilnadu/76792-dmk-general-body-meeting-karunanithi-unlikely-to-attend.art

  • தொடங்கியவர்

நாலு பேரும் தி.மு.க. பொதுக்குழுவும்!

தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவருக்கான அத்தனை அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்குத் தரப்பட்டுள்ளது. நாட்டுல என்ன நடந்தாலும் சோசியல் மீடியாவுல கம்பு சுத்துறதுதானே உலக வழக்கம். இதைப்பற்றியும் இந்நேரத்துக்கு நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருக்கணும்ல, அதான் இது!.

திமுக பொதுக்குழு மேடையில் துரைமுருகன், அன்பழகன் மற்றும் ஸ்டாலின்

'பரிதி' கதிரவன் :

தி.மு.க. செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வானதிற்கு முதலில் வாழ்த்துகள். மற்ற கட்சிகளில் உள்ளதுபோல் ஸ்டாலின் இந்தப் பதவியை ஒரேநாளில் அடைந்துவிடவில்லை. கடைநிலைத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, படிப்படியாகத் தன்னை அரசியலில் உயர்த்தியிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருக்கும் இந்நேரத்தில், கட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஸ்டாலின்தான் சரியான தேர்வு. இனி சசிகலா Vs ஸ்டாலின் என்ற போட்டிதான் சரியாக இருக்கும்.

'தாமரை'ப்பாண்டி : 

இவ்வளவு நாளா கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல்தானே இருந்தாரு. அப்போவெல்லாம் இல்லாம இப்போ செயல் தலைவராக ஸ்டாலினை நியமனம் செய்திருக்கிறதுக்குக் காரணம், கருணாநிதி இப்போ செயல்படாத தலைவராக இருக்கிறதை உணர்ந்தனாலேயா அல்லது சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஆனதால் அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா என்கிற மனப்பான்மையினாலா? 

அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கின ஐந்து வருடத்திற்குள் பொதுச் செயலாளர் ஆக முடியாதுன்னு சொன்னாங்க. விதிகளையெல்லாம் தளர்த்தி பொதுச் செயலாளர் ஆகிட்டாங்க. இப்போ தி.மு.க-விலேயும் விதி 18 -ல் திருத்தம் செஞ்சுட்டு ஸ்டாலினை செயல் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்காங்க. தமிழகத்தில் இப்போதெல்லாம் என்ன நடக்குதுன்னே மக்களால் யூகிக்க முடியலை. கட்சிகளுக்குள்ளேயே இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது மக்களின் பிரச்னைகளை இந்தத் திராவிடக் கட்சிகள் எப்படித் தீர்க்கும்? செயல்படும் தலைவர் என்றால் பிரதமர் மோடியைப் போல எந்த முடிவுகளையும் திட்டவட்டமாக எடுப்பவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை!

ஆன்லைன் அரவிந்த்சாமி :

அப்படி இப்படி எப்படி அப்படின்னு கடைசியா எப்படியோ தி.மு.க-வோட பொதுக்குழுவைக் கூட்டிட்டாங்க. கோஹ்லி இல்லாத டெஸ்ட் மேட்ச் கணக்கா முதல் தடவையா கலைஞர் இல்லாமலே பொதுக்குழுவைக் கூட்டி இருக்காங்களாம். ஸ்டாலின் கண்ணீரோட பதவி ஏற்றதுதான் இந்தக் கூட்டத்துல முக்கியமான கட்டம். தலைவர் தெரியும், துணைத்தலைவர் தெரியும் அதென்ன பாஸ் செயல் தலைவர்னு கேட்டா பெருசா வித்தியாசம்லாம் எதுவும் இல்லைனு சொல்றாங்க.

தலைவருக்கும், செயல் தலைவருக்கும் இடையில ஒரு மெல்லிசான கோடுதான் இருக்கு `எல்லா அதிகாரமும் கையில் இருந்தா அவர் தலைவர், அதிகாரம் எல்லாமும் கையில் இருந்தா அவர் செயல் தலைவர்`,  எதுனா புரியுதா..?. அதான் ப்ரோ தி.மு.க. ஆனாலும் சின்ன வயசுல இருந்து தி.மு.க-விற்காக உழைச்சு இப்போ செயல் தலைவர் ஆகியிருக்கும் ஸ்டாலினுக்கு எத்தனை லைக்ஸ் கொடுப்பீங்க ஃப்ரெண்ட்ஸ். என்னதான் இருந்தாலும் ஸ்டாலின் ப்ரோ நீங்க தலைவர் ஆகுங்க, செயல் தலைவர் ஆகுங்க, தேனாம்பேட்டைல எங்களுக்கு டிராஃபிக்கை கிளியர் பண்ணிவிடுங்க, ஆங்.

நடுசென்டர் நாகராஜன் :

 

ஸ்டாலினைத் தி.மு.க-வின் செயல்தலைவராக அறிவிச்சுருக்காங்களாம். இருக்கிற பெரிய போஸ்டிங்க்ல எதையுமே கொடுக்கக் கூடாதுனு புதுசா ஒரு பெரிய போஸ்டிங் ஒன்னை உருவாக்கி அதைக் கொடுக்கிற நூதனமான ட்ரிக்லாம் தி.மு.க-வுக்கு மட்டுதான் வரும். ஆமா அது என்ன 'செயல் தலைவர்'? ஆல்ரெடி ஸ்டாலின் அந்த வேலையைத்தானே ஊர் ஊரா சுற்றி செஞ்சிக்கிட்டு இருந்தாரு.. இல்லையா?

http://www.vikatan.com/news/politics/76817-satire-article-about-mk-stalin-elected-as-dmk-executive-president.art

  • தொடங்கியவர்

செயல் தலைவர்... தி.மு.க பாரம்பரியத்தில் முதல்முறை!

ஸ்டாலின் - பொதுக்குழு

திராவிட முன்னேற்றக் கழகம்.... தி.மு.க. செயல்தலைவராக சென்னையில் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். மாபெரும் திராவிட பாரம்பரிய அரசியல் இயக்கமான தி.மு.க-வை, ஈ.வெ.ராமசாமி பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராஜன், மதியழகன், ஈ.வி.கே. சம்பத் ஆகிய ஐம்பெரும் தலைவர்கள் உருவாக்கினர். திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் தி.மு.க-வை இவர்கள் தோற்றுவித்தனர்.

அதே நாளில், சென்னை ஜார்ஜ்டவுனில் பவளக்காரத் தெருவில் நடைபெற்ற முன்னணி தலைவர்களின் கூட்டத்தில், தி.மு.க. உதயமானது. மறுநாள் 1949-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, தி.மு.க-வின் முதல் பொதுச் செயலாளராக சி.என். அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. கறுப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடியும் தேர்வு செய்யப்பட்டது.

"தி.மு.க-வில் தலைவர் பதவிக்கான நாற்காலி எப்போதும் காலியாகவே இருக்கும். அது, தந்தை பெரியாருக்கானது" என்று அண்ணா அப்போது  தெரிவித்தார். அதன் காரணமாகவே அண்ணா, தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். கட்சியில் அவைத்தலைவர் பதவி மட்டுமே உண்டு. 1967-ம் ஆண்டில், அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று, 1969-ல் அவர் மறையும் வரை தி.மு.க-வில் தலைவர் பதவி என்பது கிடையாது. 

இதேபோல், தி.மு.க-வில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வை உருவாக்கிய போதும் தலைவர் பதவி இருந்ததில்லை. அவைத் தலைவர் பதவி மட்டுமே உண்டு. எம்.ஜி.ஆரும் அண்ணா வழியில், கட்சித் தலைவர் பதவியை காலியாகவே வைத்தார். 
 
அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க-வின் தலைவரானார். கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நாவலர் நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னரே தி.மு.க-வில் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. 

1972-ல் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் உருவாக்கிய போது, நெடுஞ்செழியன் தி.மு.க-வில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தார். அப்போது முதல், தி.மு.க. பொதுச் செயலாளராக பேராசிரியர் க. அன்பழகன் இருந்து வருகிறார்.

1969-ம் ஆண்டு அண்ணா மறைவைத் தொடர்ந்து, தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற மு.கருணாநிதி, ஏறக்குறைய 48 ஆண்டுகள், அதாவது, சுமார் அரை நூற்றாண்டு காலம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 5 முறை தமிழக முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்திக்காதவர் கருணாநிதி. 

இந்த நிலையில்தான், தனது 94-வது வயதில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அண்மையில் இரண்டுமுறை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். தற்போது, கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியால், சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் பங்கேற்க முடியவில்லை.

இத்தனை ஆண்டுகால தி.மு.க வரலாற்றிலும், கட்சியின் தலைவராக 48 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வரும் நிலையிலும், கருணாநிதி தலைமை ஏற்காமல் நடைபெற்ற தி.மு.க-வின் முதல் பொதுக்குழு இதுவாகும்.

தி.மு.க தலைவராக, முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டவர் கருணாநிதி. 1996-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சுமார் 18 ஆண்டுகள், மத்திய அரசை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவராக இருந்தவர்.
 
இந்த நிலையில்தான், கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினை தி.மு.க தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் பரவலாக எழுந்தது. ஏற்கனவே 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016-ம் ஆண்டு (கடந்த மே மாதம்) முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினின் பங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு அமைந்த நிலையில், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் வரை ஸ்டாலின் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்தார். என்றாலும் ஸ்டாலினை தி.மு.க தலைவராக நியமிப்பதில், அவரது சகோதரரும், கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், அதிருப்தி தெரிவித்தனர். எனினும், அந்த எதிர்ப்புகளை எல்லாம் கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதி சாதுர்யமாகக் கையாண்டு, கடந்த மாதத்தில் அழகிரி, ஸ்டாலின் இருவரையும் ஒன்றாக அழைத்துப் பேசியதுடன் சமரசம் செய்த நிகழ்வு நடந்தது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு கருணாநிதி அளித்திருந்த ஒரு பேட்டியில், 'ஸ்டாலின் என் அரசியல் வாரிசு' என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

இதையடுத்து, தி.மு.க-வில் விரைவில் மு.க. ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. அந்த எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது.

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பொருளாளர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 

முன்னதாக, கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்படுவதாக, தி.மு.க. சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்தார். செயல் தலைவர் பதவி என்பது, தி.மு.க தலைவர் பதவிக்கு இணையானது என்றும், தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல்தலைவருக்கு உண்டு என்றும் அவர் பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தார், 

இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன், செயல் தலைவராக ஸ்டாலினை நியமனம் செய்யும் அறிவிப்பை முன் மொழிந்தார். முதன்மைச் செயலாளர் துரை முருகன், அந்த அறிவிப்பை வழிமொழிய, ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. செயல் தலைவராக நியமிக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலினின் செயல்பாடுகளை புகழ்ந்து துரைமுருகன் ரையாற்றினார். துரைமுருகனின் உரையை மிகுந்த நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த ஸ்டாலின் கண்ணீர்மல்க ஏற்றுக்கொண்டார். 

'தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  அத்தகைய சூழல்தான் என்னை செயல் தலைவராக ஆக்கியுள்ளது' என ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார். தி.மு.க-வில் 'எல்லா பொறுப்புகளும் விதிப்படியே தேர்வு செய்யப்படுகின்றன. அதேபோர் நானும் அனைத்துப் பொறுப்புகளிலும் கட்சியின் விதிப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டேன். மற்ற பதவிகளில் எல்லாம் எனது பணியை மகிழ்வுடன் ஆற்றிய போதிலும், கட்சித் தலைவர் உடல்நலம் குன்றி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது சற்று வருத்தமாகத்தான் உள்ளது" என்றார் ஸ்டாலின்.

தி.மு.க தோற்றுவிக்கப்பட்டு. இத்தனை ஆண்டுகளில் செயல் தலைவர் என்ற பதவி இதுவரை இல்லாதது. இப்போதுதான் முதல்முறையாக செயல்தலைவர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அதற்காக கட்சியின் விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, ஸ்டாலின் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். 

அண்ணா மறைந்ததும், தி.மு.க-வின் தலைவர் பதவியை கருணாநிதி ஏற்றது போன்று, தற்போது கருணாநிதி உடல்நலம் குன்றியுள்ள நிலையில், அவரது பதவிக்கு இடையூறு செய்யாமல், புதிதாக செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என ஏராளமான ஆட்சிப் பொறுப்புகளையும், இளைஞர் அணி செயலாளர், பொருளாளர் என தி.மு.க-வில் பொறுப்புகளையும் வகித்து வந்துள்ள மு.க. ஸ்டாலின், தற்போது கட்சியின் தலைவர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரம் கொண்ட, செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதுவரை ஸ்டாலின் வகித்த பதவிகளில் எல்லாம், அவர் தனக்கான இடத்தை தனிமைப்படுத்தி, செம்மையுடன் நிறைவேற்றினாரோ, அதேபோல், செயல் தலைவராகவும் ஸ்டாலின் செவ்வனே செயலாற்றுவோர் என்று நம்புவோம்!

http://www.vikatan.com/news/coverstory/76818-working-president-a-new-post-in-dmk.art

  • தொடங்கியவர்

உறுப்பினர் முதல் செயல் தலைவர் வரை: மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை

  •  

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் கடந்துவந்த அரசியல் பயணம் பல சவால்களும் சோதனைகளும் நிறைந்தவை.

திமுகவின் செயல் தலைவராக மு. க. ஸ்டாலின் தேர்வு: திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு
 திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

திமுகவின் முதல் செயல் தலைவர்

இதற்கு முன்பு, திமுகவில் செயல் பதவி இல்லாத நிலையில், அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1970-களில், மிசா அவசரச் சட்ட காலத்தில் சிறை சென்ற ஸ்டாலின், தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் செயல் தலைவராக தற்போது ஆகியுள்ள நிலையில், அவர் இதுவரை திமுகவில் பல பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சி மேயராகவும், தமிழக அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மு. க. ஸ்டாலின் பதவி வகித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மு. க. ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மு. க. ஸ்டாலின்

பள்ளிப் பருவத்திலேயே அரசியல் பணி

  • தனது பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்டிய மு.க. ஸ்டாலின், தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். அப்பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார்.
  • 1970-களில் திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாமன்ற பிரதிநிதியாகவும் இருந்த மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்கவும், கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
  • பின்னர், 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார்.
  • ஆரம்பத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் செயல்பட்ட மு.க. ஸ்டாலின் , பின்னர் நீண்ட காலமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 1984-இல் மு.க. ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
திமுகவில் பல பதவிகளை வகித்த ஸ்டாலின்  திமுகவில் பல பதவிகளை வகித்த ஸ்டாலின்

பொருளாளராக நியமனம்

  • சிறிது காலம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், 2008-இல் திமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார்

மு. க. ஸ்டாலின் கண்ட தேர்தல் களங்கள்

  • கடந்த 1984-ஆம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கிய மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
  • அதன் பின்னர், 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
  • 2011-ஆம் ஆண்டிலும், கடந்த ஆண்டு ( 2016) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மு. க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆறு முறை சட்டமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் ஆறு முறை சட்டமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின்

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்

  • தற்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக மு. க. ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

சென்னை மாநகர மேயர்

  • நீண்ட இடைவெளிக்கு பிறகு, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவின் சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தார்.
  • கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் இருந்த போது, சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
  • 2001-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்த 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற சட்டத்தால் தனது மேயர் பதவியை துறந்து, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தொடர்ந்தார்.
  • 2006-ஆம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை அவர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் மு. க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் மு. க. ஸ்டாலின்

முதல் துணை முதல்வர்

  • கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை மு.க. ஸ்டாலின் வகித்தார்.
  • கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுகவின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ததிலும், பல வேட்பளார்களை முடிவு செய்ததிலும் ஸ்டாலின் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது.

நமக்கு நாமே சுற்றுப்பயணம்

  • 2015-ஆம் ஆண்டு 'நமக்கு நாமே' என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு. க. ஸ்டாலின்  நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு. க. ஸ்டாலின்

மு. க. அழகிரியுடன் கருத்து வேறுபாடு

  • மு. க. ஸ்டாலினுக்கும், அவருடைய சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் தென் மண்டல செயலாளருமான மு. க. அழகிரிக்கும் பலத்த கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், கடந்த காலங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது மு. க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 2001-ஆம் ஆண்டில், சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி,சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

http://www.bbc.com/tamil/india-38504471

  • தொடங்கியவர்

இளைஞர் தி.மு.க முதல் செயல் தலைவர் வரை...! மு.க. ஸ்டாலினின் பயணம்

ஸ்டாலின் கருணாநிதி அன்பழகன்

சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் செயல் தலைவராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். செயல் தலைவராக தற்போதுதான் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியின் தலைவர் போலவே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கருணாநிதியின் மகன் என்பதைத் தாண்டி, கட்சியில் அவர் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளார். 1966-ல் இளைஞர் தி.மு.க-வை ஆரம்பித்து அரசியலில் குதித்த ஸ்டாலின், 2017-ம் ஆண்டு தி.மு.கவின் செயல் தலைவராகியிருக்கிறார். ஸ்டாலினின் ஆரம்பகால அரசியல் முதல் தற்போது செயல் தலைவராக உயர்ந்திருப்பது வரை ஆண்டுவாரியாக அவரது செயல்பாடுகள்...

*1966-ம் ஆண்டு, தி.மு.க தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள சென்னை கோபாலபுரம் பகுதியில் சில இளைஞர்கள் ஒன்றுகூடி இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை ஆரம்பிக்கின்றனர். இளைஞரான மு.க ஸ்டாலின்தான் இந்த அமைப்பை உருவாக்கி, வழிகாட்டியாக இருந்துள்ளார்.. ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடுவதுதான் இளைஞர் தி.மு.க-வின் லட்சியமாக இருந்துள்ளது.

*1968-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு அண்ணாவையே அழைக்க முடிவு செய்தார் ஸ்டாலின். அப்போது, தமிழக முதல்வராக இருந்த அண்ணா, உடல்நலம் குன்றியிருந்தார். இருந்தாலும், விழாவுக்கு வர அண்ணா ஒப்புக் கொண்டார். இதுவே ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பமாக இருந்தது. ஆனால், சிகிச்சைக்காக அண்ணா அமெரிக்கா சென்று விட்டதால் அந்த விழா அப்போது நடக்கவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் அவரது பிறந்தநாள் விழாவை இளைஞர் தி.மு.க தொடர்ந்து கொண்டாடியது.

*1969-ம் ஆண்டு அண்ணா மணிவிழாவை ஸ்டாலின்  நடத்தி அரசியலில் அறிமுகமானார். 1971 சட்டமன்ற தேர்தலில் காமராஜரும், ராஜாஜியும் ஒரே அணியாக இருந்து, தி.மு.க-வை எதிர்த்தார்கள். அந்தத் தேர்தலில் சைதை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கு ஆதரவாக, வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார் ஸ்டாலின். அப்போதுதான் அவர் மக்கள் மத்தியில் முதல் முதலில் அறிமுகமானார்.

ஸ்டாலின் கருணாநிதி அன்பழகன்

*1975-ம் ஆண்டு டிசம்பரில், தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், 1976-ம் ஆண்டு தி.மு.கவின் முன்னணி தலைவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களில் 23 வயதான ஸ்டாலினும் ஒருவர். அந்த நேரத்தில், அவருக்குத் திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகியிருந்தது.

*1983-ம் ஆண்டு தி.மு.க-வின் இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் தேர்ந்து எடுக்கப்பட்டார். வெண் சீருடை, கறுப்பு சிவப்பு கழுத்து பட்டை, சிவப்பு தொப்பி என இளைஞர் அணியின் தோற்றமே புதுமையாக இருந்தது. மாவட்டத்துக்கு ஒரு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர், 500 இளைஞர்கள் கொண்ட படை என கட்சிக்குள் புது ரத்தத்தை புகுத்தினார் ஸ்டாலின்.

*1984-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைத்தது. ஆனால், அங்கு அவர் தோல்வியைத் தழுவினார். 

*1989-ம் ஆண்டு அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன்மூலம் முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 

*1996-2001 வரை சென்னை மாநகர மேயராக ஸ்டாலின் பணியாற்றினார். மக்களால் தேர்தேடுக்கப்பட்ட முதல் சென்னை மேயர் என்ற பெருமை ஸ்டாலினுக்குக் கிடைத்தது. அதுவரை, மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தேடுக்கும் முறை இருந்தது. 

*2001-ம் ஆண்டு ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 'ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது' என்று அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்ததால், மேயர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஸ்டாலின் கருணாநிதி அன்பழகன்

*2003-ல் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*2006-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்த நிலையில், முதல் முறையாக ஸ்டாலின்  உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.

*2008-ம் ஆண்டு தி.மு.கவின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டு தமிழக முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினார். 2011-ம் ஆண்டுவரை இப்பதவியை ஸ்டாலின் வகித்தார்.

*2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

*2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்.

 

*தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குன்றியுள்ள நிலையில், கட்சியின் செயல்தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.தி.மு.கவில் செயல் தலைவர் என்ற பதவி இதுவரை இல்லாதது. இப்போதுதான் முதல்முறையாக  செயல்தலைவர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டு ஸ்டாலின் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76851-from-youth-wing-to-working-president--journey-of-mk-stalin.art

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவின் செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை.

C1TfnJoWgAA1jKR.jpg

திமுக பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்..!

தம்பி வா தலைமையேற்க வா கழகப் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் .....tw_blush:

 

 

  • தொடங்கியவர்

ஸ்டாலினின் 50 ஆண்டு அரசியல் பயணத்தை 45 நொடிகளில் தெரிந்து கொள்ளுங்கள்! #Infograph

1966-ம் ஆண்டில் தி.மு.கவிக்கு ஆதரவாக சிறிய இளைஞர் குழுவை தொடங்கிய ஸ்டாலின் பயணம், இன்று தி.மு.கவின் செயல் தலைவர் என்ற அளவிற்கு வந்து நிற்கிறது.  இடைப்பட்ட இந்த  ஐந்து தசாப்தங்களில் அவர் என்னென்ன பதவிகளையெல்லாம் வகித்தார் என்பதை விளக்கும் infograph இது!

 

ஸ்டாலின்

http://www.vikatan.com/news/tamilnadu/76880-dmk-working-president-stalins-political-travel-in-single-picture-infograph.art

  • தொடங்கியவர்

மகிழ்ச்சி! மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்!

திமுக-வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

dsc_1386_10106.jpg

 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 'திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் கொள்கை அளவில் ஒத்துப்போகும் கட்சி. ஸ்டாலின் செயல் தலைவரானது மகிழ்ச்சியளிக்கிறது' எனக்கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/76911-thirumavalavan-wishes-to-mkstalin.art

  • தொடங்கியவர்

'அண்ணா' வகிக்காத தி.மு.க. தலைவர் பதவி கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

b1_12550.jpg

தி.மு.க.வில் கருணாநிதியைத் தாண்டி, இப்போது ஸ்டாலினிசம் உருவாகி இருக்கிறது. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். 63 வயதான ஸ்டாலின் தனது இளைஞர் அணிச் செயலாளர் பதவியை துறக்க பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வில் படிப்படியாக வளர்ந்தவர் தான் ஸ்டாலின். ஆனால் அவர் இந்த உச்சத்தை தொட எடுத்துக்கொண்ட காலம் நிச்சயம் அதிகம்.

கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின்தான் என்பது நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும், ஸ்டாலினின் கைக்கு பதவி கிடைக்க இத்தனை ஆண்டுகள் பிடித்தது. ஆனால் அண்ணாவுக்கு பின்னர் தி.மு.க.வின் தலைமை பொறுப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. கருணாநிதிக்கு மேல் மூத்த முக்கிய தலைவர்கள் இருந்த போதும். பதவி கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது? சொல்லப்போனால் அண்ணாவே தி.மு.க.வின் தலைவராக இருக்கவில்லை. பொதுச்செயலாளராகத்தான் இருந்தார். அண்ணாவே வகிக்காத தலைவர் பதவி, கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

b3_12455.jpg

பெரியார் - மணியம்மை திருமணத்தால்  திராவிடர் கழகம் இரண்டாக உடைந்த காலகட்டம் அது. திராவிடர் கழகத்தை கைப்பற்ற வேண்டும் என மூத்த தலைவர்கள் அண்ணாவிடம் வலியுறுத்தினார்கள். அதனை ஏற்க மறுத்த அண்ணா புது கட்சி துவங்க முடிவு செய்தார். 1949 செப்டம்பர் 17 கூடிய கூட்டத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ‘‘திராவிட முன்னேற்ற கழகம்‘‘ என்ற புதிய கட்சியினை அண்ணா துவக்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணா தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையில் ராபின்சன் பூங்காவில் அன்றைய தினம் நடந்த துவக்க விழா பொதுக் கூட்டத்தில் கொட்டும் மழைக்கு இடையே வார்த்தை மழையாக உரையாற்றினார் அண்ணா. அவர் தனது உரையில் ‘‘அன்றும் இன்றும் என்றும் பெரியார்தான் என் தலைவர். அதனாலேயே தி.மு.கழகத்துக்கு ‘தலைவர்’ என யாரையும் தேர்வு செய்யவில்லை. தலைவர் நாற்காலியை பெரியாருக்காக காலியாகவே வைத்திருக்கிறோம். இருதய பூர்வமான தலைவர், இருதயத்தில் குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது வழிகாட்டிய தலைவர் பெரியார். அவர் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, தலைமை நாற்காலியை அவருக்காக காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்தில் நாற்காலியில் வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நாங்களோ அல்லது நானோ அமர விரும்பவில்லை’’ என பேசினார்.

b5_12078.jpgஅண்ணா தனது தலைவரான பெரியாருக்கு என ஒதுக்கி வைத்திருந்த, தானோ, தன்னுடன் வந்த தலைவர்களோ அமர மாட்டோம் என உறுதியேற்றிருந்த அந்த ‘தலைவர்’ நாற்காலி கலைஞரின் கைக்கு போன நிகழ்வு அண்ணாவின் மறைவுக்கு பின்தான் நடந்தேறியது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி அண்ணாவின் தலைமையில் எழுந்த தி.மு.க.விடம் 1967-ல் ஆட்சி கட்டிலை ஒப்படைத்தது. காங்கிரஸ் அமைச்சரான பூவராகவனை தவிர முதல்வராக இருந்த பக்தவச்சலம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்வியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் தப்பவில்லை.

மக்களின் எழுச்சியால் வென்ற அண்ணா 1967 மார்ச் 6-ல் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்று முழுதாக 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில் அண்ணாவின் இதய துடிப்பு முழுமையாக நின்று போனது. இதனால் அண்ணா வகித்த முதல்வர் பதவிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். புதிய முதல்வராக நெடுஞ்செழியன்தான் வருவார் என நினைத்து கொண்டிருந்த போது, கருணாநிதியே, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது தி.மு.க.வின் திருப்பு முனை ஆனது.

யார் அடுத்த முதல்வர் என எல்லோரும் எதிர்பார்த்தபோது கருணாநிதியின் பெயர் அடிபட்டது. அவருக்கு ஆதரவும்  இருந்தது. இதையடுத்து, முதல்வர் போட்டியிலிருந்து விலகிக் கொண்ட நெடுஞ்செழியன் தனக்கு மந்திரி பதவியும் வேண்டாம் என மறுத்து விட்டார். இதனால் 1969 பிப்ரவரி 10-ல் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மந்திரி சபையில் நெடுஞ்செழியனைத் தவிர அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

b2_12361.jpg

அப்போது ‘‘மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். நெடுஞ்செழியனை மந்திரி சபையில் சேர்க்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அவர் எந்த இலாகாவையும் எடுத்துக் கொள்ளலாம்’’ என கருணாநிதி தெரிவித்தார். அப்போது அமைச்சர் பொறுப்பினை ஏற்க  முழுமையாக மறுத்த நெடுஞ்செழியன் அடுத்த 6 மாதத்தில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அதற்கு காரணமாக அமைந்தது கட்சி பொதுச் செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தல்தான்.

அண்ணாவின் மறைவுக்குப்பின் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து வந்த நெடுஞ்செழியன் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். முதல்வராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால் மோதல் ஏற்பட வழி வகுக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். இதனால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட கருணாநிதியை வலியுறுத்தினர். இதனை எதிர்பார்க்காத நெடுஞ்செழியன் தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார். இதற்கு பதில் அறிக்கை கொடுத்த கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடாமல் அமைச்சர் பதவியை ஏற்று கொள்ளுங்கள்’’ என கேட்டிருந்தார்.

b4_12527.jpg

இந்த அறிக்கை போருக்கு இடையில் உருவானது ஒரு சமரச திட்டம். அதன் படி இதுவரை தி.மு.க.வில் இருந்து வந்த ‘அவைத்தலைவர்’ என்ற பதவியை ‘தலைவர்’ என மாற்றுவது எனவும், கட்சியின் முக்கிய பணிகளை தலைவரும் பொதுச் செயலாளரும் கலந்து பேசி முடிவு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டு, கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த சமரச திட்டத்தின் விளைவாகவே அண்ணாவால் பெரியாருக்காக காலியாக வைக்கப்பட்டிருந்த ‘தலைவர்’ நாற்காலி கருணாநிதியின் கைகளுக்குள் சென்றது. பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன் தேர்வானார்.

சுமார் 48 ஆண்டு காலமாக கலைஞரின் கைகளுக்குள் கட்சியின் கடிவாளமாக இருந்து வந்தது தலைவர் நாற்காலி. அவரின் வயது முதிர்வு காரணமாக தற்போது ‘செயல் தலைவர்’ நாற்காலியாக உருமாறி ஸ்டாலின் வசம் சென்றுள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/76929-reason-behind-karunanidhi-elected-as-dmk-president.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.