Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் போரின் வீர மரபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[05 - February - 2007] [Font Size - A - A - A]

18,19 ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு - நிசாம் , மருது- தொண்டைமான் என தியாகத்தையும் , துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.

எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமுலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாகச் சித்ததரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே `விடுதலையைக்' காணுழ்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள்.

உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக்கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளை திருப்திப்படுத்திய பிரிட்டிஷார் அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20 ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.

இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்தி தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885 இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுகளின் நலனை மட்டுமன்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந் து ஆதாயமடையவிரும்பிய அனைந்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்த தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.

இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய இலட்சோப இலட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.

` வன்முறைப்பாதையா, அகிம்சைப்பாதையா' எனப் போராட்ட வழிமுறைகளில் தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொதுநோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு, உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20 ஆம் நூற்றாண்டில் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.

1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு' இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் தொடக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக பொலிஸின் தாக்குதல்களுக்கு எதிர்த்தாக்குதல் கொடுக்கத் தொடங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன் அரசு அவரை கைது செய்து விடும் . பிறகு, சென்டிமென்ட் அலை' அடிக்கத் தொடங்கி இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் இலட்சியமாகிவிடும். இது தான் தியாக வேட மணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.

இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப்போராட்ட அரங்கினுள் நுழைகிறது.

" .. நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு: சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான் " - சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18, 19 ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக்கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.

தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப்போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.

பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்கு மேடையேறிய வீரராக மட்டும் சித்திரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும் இலட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.

பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?

1919 இல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப் படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்கு பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.

1921 இல் காந்தி `ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் - தொழிலாளர்கள் - அரசு ஊழியர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

1922 பெப். 5 ஆம் திகதி உ.பி.யில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா பொலிஸ் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரஸுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின்மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.

தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது தொடக்கத்திலேயே விமர்சனம் கொண்டிருந்த பக்த்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புக்களின் தொடர்பு கிடைக்கப்பெற்றனர். 1924 இன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.

இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்ட் 9 ஆந் திகதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேயே அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.

இந்தத் தேக்க நிலையில், 1926 இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் `நவஜவான் பாரத் சபா ' எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.

1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில் , ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பக்த்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.

1925 இலிருந்து1927 க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917 இன் ரகசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துகளையும், இதர ஜரோப்பியக் கருத்துகளையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் தொங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதில் முன்னணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை `நான் நாத்திகன்' ஏன்? எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.

அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்போழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது.சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால் கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்தியமென்று தோன்றியது..எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒரு நாள் வரக்கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாகும். "கற்றுணர்" எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது..

நான் கற்றுணரத் தொடங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் தொடங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த இலட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.

-தொடரும்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.