Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாளி 

 
”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி.

ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார்.

பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும் அவங்களுக்கும் இடையில!....இருக்குன்னு முழுசா நம்புனீருன்னா, திரை விலகிடும்” என்றார். 

ஆட்டோ ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லையில் இருக்கும் காலனிப் பகுதி கண்ணிற்குத் தெரிந்தது. ராமசாமிக்கு பேயோட்டியுடன் ஊருக்குள் நுழைவது அவமானமாகவே இருந்தது. வம்பு நாத்திகம் பேசுவதில் வல்லவரான ராமசாமியே, தன் வீட்டிற்கு பேயோட்டியை அழைத்து வருகிறார் என்றால் ஊர்வாய் சும்மா இருக்குமா என்ன? ஆனாலும் மானத்தை பாசம் வென்றிருந்தது.

ஊருக்குள் நுழைந்த ஆட்டோவை டீக்கடை சீனி பார்த்தான். ஒரு கிண்டலான பார்வை போல் ராமசாமிக்குத் தெரிந்தது, பிரமையோ என்ற யோசனையை ஆட்டோ டிரைவரின் குரல் உடைத்தது.

“எப்படிப் போறது?”

“வடக்கே...கடைசில ஒரு கிணறு இருக்கும். அதுகிட்டே.”

வடக்கே திரும்பியதுமே ஒரு விக்கல் ஒலி கேட்கத்துவங்கியது. ஒலி என்று சொல்வதைவிட சத்தம் என்று சொல்லிவிடலாம். ‘ஏ...க்....ஏ....க்’ என ஒரு இழுவையான விக்கல் சத்தம், அந்த வடக்குத் தெருவையே நிறைத்திருந்தது. 

“என்ன இது?” என்று கேட்டார் பேயோட்டி.

“எம்பொண்ணு தான்”என்று சொல்லும்போதே குரல் கம்மியது ராமசாமிக்கு.

வீட்டை நெருங்க நெருங்க, விக்கல் ஒலியின் சத்தம் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்தது.

ஆட்டோ நின்றதும், பேயோட்டி தன் பையுடன் இறங்கினார். அதில் இருந்த சவுக்கைப் பார்த்ததும், ராமசாமி மனம் துணுக்குற்றது.

“அடிப்பீங்களா?” என்றார்.

“இல்லை”

பொய் சொல்கிறாரோ என்று யோசனை எழுந்தாலும், அதில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தார் ராமசாமி.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். தெருவை விட வீட்டின் உள்ளே அனலாக தகித்தது. கூடத்தின் நடுவே விக்கியபடியே கற்பகம் படுத்திருந்தாள்.

“பேசறதே இல்லையா?” என்று அமர்ந்தபடியே கேட்டார் பேயோட்டி.

“இல்லை..ஒரே விக்கல் தான்”

உடுக்கை, சவுக்கு, விபூதிப்பொட்டலம் என பூஜை சாமான்களை ஹாலில் பரப்பிய பேயோட்டி, தன் குலதெய்வத்தை வேண்டியபடியே பூஜையை ஆரம்பித்தார்.

”அப்பா அய்யனாரப்பா..உம்பிள்ளை ஒரு காரியத்தில் இறங்கறேன். இது நல்லபடியா முடியவும், இது என் குலத்தை பாதிக்காம இருக்கவும் அருள் செய்யப்பா” என்று சொல்லி உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்.

கற்பகத்தை கூர்மையாகப் பார்த்தபடியே உடுக்கையை வேகமாக அடித்தார். விக்கல் சத்தத்தை உடுக்கை ஒலி மிஞ்சியது. பக்கத்தில் அமர்ந்திருந்த ராமசாமிக்கு புல்லரித்தது. நரம்புகளின் வழியே ஊடுருவி, அடிமனது வரை உடுக்கை ஒலி பரவி, உலுப்புவது போல் இருந்தது. 

பேயோட்டி ஒரு வார்த்தைகூட பேசாமல், நிலைத்த பார்வையுடன் தொடர்ந்து உடுக்கை அடித்தபடியே இருந்தார். விக்கியபடியே கிடந்த கற்பகத்தின் உடல் முறுக்கேறியது.

“ட்டேய்ய்ய்ய்ய்” என்று ஒரு அலறல் அவளிடமிருந்து எழுந்தது.

பேயோட்டி விடாமல் உடுக்கையை அடித்தபடியே இருந்தார். 

விக்கல் நின்றது. ஆனால் கொடூரமான குரலில் விட்டத்தைப் பார்த்தபடியே புரியாத மொழியில் கற்பகம் கத்த ஆரம்பித்தாள்.

“ய்யேஊஷ்கப்பத்தட்டாஆ...ஏய்”

உடுக்கை ஒலி தொடர்ந்தது.

“டேய்....நிறுத்துடா”என்றபடியே எழுந்து அமர்ந்தாள் கற்பகம். 

வயது வந்த பெண். மெல்லிய உடல். ஆனால் தலைவிரிகோலமாக, விறைத்தபடி அமர்ந்திருந்தாள். அவள் கண்ணில் இருந்த உக்கிரத்தை ராமசாமியால் தாங்கமுடியவில்லை. கண்ணீர்விட்டபடியே, மகளைப் பார்த்தாள்.

பேயோட்டி உடுக்கையை கீழே வைத்துவிட்டு, சவுக்கை கையில் எடுத்தார்.

”வெளியே போடா..உன் குடும்பத்தையே நாசமாக்கிடுவேன். போயிடு” என்று கத்தினாள் கற்பகம்.

சவுக்கைப் பார்த்த ராமசாமி, பேயோட்டியை கையெடுத்துக் கும்பிட்டார். சவுக்கை கீழே வைத்த பேயோட்டி, மீண்டும் உடுக்கையை எடுத்தார்.

“வேண்டாம்” என்று அலறினாள் கற்பகம்.

உடுக்கையில் இரண்டுமுறை ஒலி எழுப்பிய பேயோட்டி “அப்போ உன் பூர்வீகத்தைச் சொல்லு” என்றார்.

கற்பகம் முடிக்குள் முகத்தைப் புதைத்தவளாக, மவுனமாக அமர்ந்திருந்தாள்.

விபூதியை அள்ளி அவள் மேல் வீசினார் பேயோட்டி. தொடர்ந்து உடுக்கை ஒலிக்கத் துவங்கியது. 

“சொல்றேன்..சொல்றேன்” என்று கதறினாள் கற்பகம்.

உடுக்கையை நிறுத்திய பேயோட்டி “சொல்லு” என்றார்.

“நான்....மாகாளி”

அதைக் கேட்ட ராமசாமி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார். வீட்டின் வெளியே கூடிருந்த கூட்டத்திலும் சலசலப்பு எழுந்தது.

பேயோட்டி அவளைப் பார்த்து “மாகாளியா? யார் நீ?” என்றார்.

ஒரு பெரும்சிரிப்பு அவளிடம் இருந்து வெளிப்பட்டது.

“என் ஊருக்கே வந்து, என்னையே யாருன்னு கேட்கிறியா? அவனைக் கேளு. சொல்வான்” என்று ராமசாமியைக் கைகாட்டினாள் கற்பகம்.
 
“மாகாளி..எங்க ஊர் பெரிய வீட்டுப் பொண்ணு” என்றபடியே ராமசாமி மாகாளியின் கதையை பேயோட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார்.

’நல்ல உயரம். உழைத்துத் திரண்ட ஓங்குதாங்கான உடம்பு. மாநிறம். அழகி. ஆனாலும் ஆளுமையான தோற்றம். களத்தில் கிடக்கும் நெல்மூட்டையை ஒற்றை ஆளாக தூக்கி, டிராக்டரில் போடும் வலிமை ‘ என மாகாளியைப் பார்த்து ஊர்வியக்க காரணங்கள் பல உண்டு. காளியம்மாள் தான் அவள் பெயர். பள்ளியில் படிக்கும்போது இனிஷியலுடன் மா.காளியம்மாள் என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே மாகாளியாக ஆகிப்போனது. 

“இப்போத்தான் என் பேர் முழுமை அடைஞ்சா மாதிரி இருக்கு” என்று சொல்லிச் சிரிப்பாள் மாகாளி.

ஏகப்பட்ட சொத்துக்களுடன், ஒரே ஒரு தம்பியுடன் வளர்ந்த அவளை மணப்பதற்கு சுற்று வட்டாரத்தில் போட்டி பலமாக இருந்தது. அப்படி வந்த ஒரு மாப்பிள்ளைக்கு, கோலகலமாக வாக்கப்பட்டுப் போனவள், ஆறே மாதத்தில் புருசனை முழுங்கியவளாக திரும்பி வந்தாள். குடிகாரன், ஹார்ட் அட்டாக் என்று என்னென்னவோ காரணங்கள் பேசப்பட்டாலும், உண்மையை மாகாளி மட்டுமே அறிவாள்.


அடுத்த ஒரே மாதத்தில் பழைய கம்பீரத்துடன் அவள் அன்றாட வேலைகளில் மூழ்கினாள். அப்போது தான் அவள் தம்பி பாண்டிக்கு ஒரு விஷயம் உறுத்தியது. அது, முனுசாமி எனும் முனியன்.

முனியன் அந்த ஊர் சலவைத் தொழிலாளி. மாகாளியுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவன். ஆனாலும் ‘தாயீ’ எனும் சொல்லுக்கு மறுசொல் பேசாதவன். 

அந்த முனியனை அக்கா தனிமையில் சந்திப்பதை விரைவிலேயே பாண்டி கண்டுகொண்டான். இது கல்யாணத்திற்கு முன்பிருந்தே நடப்பதா அல்லது தற்போது ஆரம்பித்த விஷயமா என்று அவனுக்குத் தெரியவில்லை. அக்காவிடம் கேட்கும் தைரியமும் அவனுக்கு இல்லை. அவனுக்கு மட்டுமல்ல, ஊரில் இருக்கும் யாருக்குமே இதுபற்றி அவளிடம் பேசும் தைரியம் கிடையாது. ஆனாலும் அரசல் புரசலாக பேச்சு ஊருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது’ என்றும் ‘இருக்குமோ’ என்றும் ஊர் குழம்பித் தவித்தது.

முனியன் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்ததும் புரளிக்கு வலு சேர்த்தது. ஆனால் அவனுடன் மாகாளி ஓடிவிடுவாள் எனும் எண்ணம் ஒருதுளிகூட, பாண்டிக்கோ ஊருக்கோ இல்லை. ஊருக்கு நடுவே வீற்றிருக்கும் அம்மன் சிலை போல, மாகாளி அந்த ஊரில் வலுவாக வேரூன்றி இருப்பதை எல்லோராலும் உணர முடிந்தது. முனியனும் அவன் அம்மாவும் வழக்கம்போல் ஊருக்குள் துணியெடுப்பது, துவைப்பது, இழவு வீடுகளில் ஈமச்சடங்குகள் செய்வது என எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மாகாளியின் அந்தரங்கத்தை ஊரே மதித்து ஒதுங்கி நடந்தது ஆச்சரியம் தான். எல்லாமே சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், ஒரு சின்ன தெருச்சண்டையுடன் அந்த கொடூரநாள் விடிந்தது. 

இரண்டு பெண்களுக்கு இடையே ஆரம்பித்த சண்டை, இரு குடும்பங்களுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்தது. கெட்ட நேரம், பாண்டியை அங்கே கூட்டிச்சென்றது. பெரிய வீட்டுப் பிள்ளை எனும் தோரணையுடன் பாண்டி சமாதானம் செய்ய இறங்கினான். ஆனாலும் அந்த இரு குடும்பத்து ஆண்களும் பெண்களும் கோபம் குறையாமல் கத்திக்கொண்டிருந்தார்கள். 

பாண்டி யாரையும் சுடுசொல் பேசாத சாந்தசொரூபி. இந்த மாதிரி தெருச்சண்டைகளுக்குப் பழக்கமில்லாதவன். வெறுத்துப்போனவனாக ”ஏன்யா..ஒரே ஜாதிக்குள்ளயே இப்படி அடிச்சுக்கிட்டா எப்படிய்யா? அடுத்த ஜாதிக்காரன் பார்த்தால் என்ன நினைப்பான்? நம்மளை மதிப்பானா?” என்றான்.

சண்டையின் உக்கிரத்தில் இருந்த பெண்ணொருத்தி ”உன் அக்காவைப் பார்த்தால் மட்டும் நம்மளை மதிப்பானுகளா? அக்காவை வண்ணாக்குடியில மேய விட்டுட்டு, வந்துட்டாரு இங்க பஞ்சாயத்துக்கு” என்று பாண்டியைப் பார்த்து கத்தினாள்.

பாண்டிக்கு கோபம் தலைக்கேறியது. கோபம் தாங்காமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. வேகமாக வீடு நோக்கி நடந்தான். வம்ச, வம்சமாக இந்த ஊர் தன் குடும்பத்தைப் பார்த்து ஒரு சொல் பேசியதில்லை. இன்று ஊருக்கு மத்தியில் வைத்து செருப்பால் அடித்தது போல் ஒரு கேள்வி. மிகுந்த கோபத்துடன் வீட்டை நெருங்கினான்.

திண்ணையில் அமர்ந்திருந்த மாகாளி, அரிசி புடைத்துக்கொண்டிருந்தாள். வேகமாக வரும் தம்பியை அவள் பார்த்தாள். அவள் எதிரே வந்து நின்றவன், நடுங்கும் கைகளால் நிலைக்கட்டையைப் பிடித்தபடி மூச்சுவாங்க நின்றான். அவன் கையில் நிலையில் சொருகி வைத்திருந்த அரிவாள் தென்பட்டது. உட்கார்ந்திருந்த மாகாளி அவனை நிமிர்ந்து பார்த்து ”என்னடா?”என்றாள். அவள் கழுத்து தெரிந்தது.

அரிவாளை உருவியவன், அவள் கழுத்தில் இறக்கினான். 

ஒரு நொடி தான். அவள் திண்ணையில் இருந்து உருண்டு கீழே விழுந்தாள். அரிவாள் அவன் கையில் ரத்தக்கறையுடன் இருந்தது. அவன் திரும்பி, அரிவாளுடன் படியில் உட்கார்ந்துகொண்டான். அவன் காலடியில் மாகாளி கிடந்தாள். ரத்தம் பீறிட்டு அடிக்க, விக்கல் சத்தம் அவளிடமிருந்து வெளிப்பட்டது. கொஞ்ச நேரம் விக்கியபடியே உடல் துடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விக்கலும் துடிப்பும் அடங்கியது.

வி..க்...வி...க்.

கற்பகம் மீண்டும் விக்கல் எடுக்க ஆரம்பித்தாள்.

“அவளுக்கு தண்ணி கொடும்” என்றார் பேயோட்டி. ஒரு சொம்பு நீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

“இப்போ இவ தம்பி எங்கே?” என்றார் பேயோட்டி.

“அவனும் அன்னைக்கே தூக்குல தொங்கிட்டான்” என்றார் ராமசாமி.

பேயோட்டி கற்பகம் பக்கம் திரும்பினார். “அம்மா, இது ஊர்க்குத்தமா, உன் தம்பி குத்தமா இல்லே சாமிக்குத்தமான்னு தெரியலை. ஆனா இந்த சின்னப்பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு? இதை ஏன் படுத்தறே? உன்னை சாந்தப்படுத்த, நாங்க என்ன செய்யணும்னு சொல்லு. செய்யறோம்” என்றார்.

“எனக்கு முனியனைப் பார்க்கணும்” என்றாள் அவள்.
 
தெருவில் கூடியிருந்த ஊர் விலகி வழிவிட, காலனியில் இருந்த முனியனை அழைத்துக்கொண்டு வந்தார் ராமசாமி. கண்ணில் நீர் வழிய, கையெடுத்துக் கும்பிட்டபடியே முனியன் நடந்துவந்தான். வீட்டின் உள்ளே நுழைந்த முனியனை கற்பகம் பார்த்தாள். சட்டென்று விழிவிரித்து “முன்னு” என்றாள்.

அவளின் குரலும் ‘ன்’னில் இருந்த அழுத்தமும் வந்திருப்பது யார் என்று முனியனுக்கு விளங்க வைத்தது. பதின்ம வயதுப்பெண்ணின் உடம்பில் இருந்து வரும் மாகாளியின் குரலைக்கேட்டு திகைத்து நின்றான்.

மீண்டும் அவள் “முன்னு..நான் தான் முன்னு” என்றாள். குரல் இளகியிருந்தது.

பேயோட்டி முனியனிடம் ‘பேசு’ என்று சைகை காட்டினார்.

“தாயீ” என்றான் முனியன்.

அவள் முகம் மலர்ந்தது. உடனே முகம் சுருங்கி “நான் வந்தேன் முன்னு. உன்கிட்டே வந்தேன் முன்னு” என்றாள்.

“தெரியும் தாயீ”

“நீ என்னை பார்க்கலை”

“இல்லை தாயீ..எனக்குத் தெரியும். நீங்க போகட்டும்னு தான் இருந்தேன்.”

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த அவள் “உன்னை விட்டுப் போவனா?” என்று சொல்லிவிட்டு, அவன் கைகளைப் பிடித்து முத்தமிட்டாள்.

முனியன் பதறி விலகினான்.

“தாயீ..இது தப்பு தாயி..இப்போ சின்னப்பொண்ணு உடம்புல வந்திருக்கீக..இதெல்லாம் அந்த பொண்ணு வாழ்க்கையை பாதிக்கும். வேண்டாம் தாயி. போயிருங்க” என்று கையெடுத்து கும்பிட்டான் முனியன்.

அவள் கண்கலங்கி “உன்கூட இருக்கணும்” என்றாள்.

“எனக்கு மட்டும் உங்க நினைப்பு இல்லையா தாயி? என்னைப் பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தணுமேன்னு பொறுத்துக்கிடக்கேன். இல்லேன்னா, நானும் அறுத்திட்டு செத்திருக்க மாட்டேனா? கொஞ்சநாள் பொறுங்க தாயி. வந்திடுவேன்” என்றபடியே அழுதான் முனியன்.

அவளும் அவனை ஏக்கமாகப் பார்த்தபடியே அழுதாள்.

“இங்க இருக்காதீங்க தாயி..போயிடுங்க. நான் இனிமே யார் கூப்பிட்டாலும் இங்க வரமாட்டேன். இங்க இருக்காதீங்க, போயிடுங்க” என்று சொல்லிவிட்டு, திரும்பிப்பாராமல் முனியன் வெளியேறினான்.

“முன்னு...முன்னு” என்று கத்திய கற்பகம் மயங்கிச் சரிந்தாள்.

மறுநாள் விடிகாலையில் யாரோ எழுப்பியது போல் திடுக்கிட்டு விழித்தார் ராமசாமி. யாரும் இல்லை. அவருக்கு முனியனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ‘எவ்வளவு பெரிய மனுஷத்தன்மையுடன் நடந்துக்கிட்டான்’ என்று வியந்தார். அவனைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் போல் தோன்ற, காலனி நோக்கிப் புறப்பட்டார். 

அவன் வீட்டின் வெளியே நின்று ‘முனியா’ என்று கூப்பிட்டார். பதில் ஏதும் வரவில்லை. கதவில் கை வைத்தார். திறந்துகொண்டது. உள்ளே முனியனும் அவன் அம்மாவும் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் ‘முனியா’ என்றார். பதில் இல்லை.

உள்ளே போய் அவனை உலுப்பினார். உடம்பில் உயிர் இல்லை. அவன் அம்மாவையும் அவனையும் மாறி, மாறிப் பார்த்தார். இருவர் உடலிலும் சிறு கீறல்கூட இல்லாமல் உயிர் பிரிந்திருந்தது. அவர் அமைதியாக, அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

http://sengovi.blogspot.ca/2016/09/blog-post_30.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.