Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரில் தான் ரட்ணம் கழகம் சம்பியன் கிண்ணத்தை முதலில் பெற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[11 - February - 2007] [Font Size - A - A - A]

-ரட்ணம் கழகத் தலைவர் கேளி சில்வேரா

"எமது" ரட்ணம் கழகம் 1950 ஆம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1967 ஆம் ஆண்டு, அகில இலங்கை ரீதியில் கழகங்களிடையே யாழ். நகரில் நடாத்தப்பட்ட சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் தான் எமது கழகம் முதலாவது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் பின்பு தான் 1968 ஆம் ஆண்டு இலங்கை உதைப்பந்தாட்ட கட்டுப்பாட்டுச் சபை அகில இலங்கை ரீதியில் இளைஞர் அணியிகளிடையே நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் "மீரா" சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினோம்".

இவ்வாறு இன்று அகில இலங்கை ரீதியில் முன்னிலை கழகமாகத் திகழும் ரட்ணம் கழகத்தின் தலைவர் கேளி சில்வேரா தெரிவித்தார். இவர் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் மேலும் கூறியதாவது;

"1967 ஆம் ஆண்டு யாழ்ப்பாண உதைபந்தாட்டச் சங்கம், லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன், அகில இலங்கை ரீதியில் லயன்ஸ் வெற்றிக் கேடயத்துக்காக, நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட நொக்கவுட் போட்டியில், எங்கள் கழகம் உட்பட திருமலை, மட்டுநகர், மன்னார், இராணுவம், கடற்படை, யாழ்ப்பாணம் ஆகிய தெரிவு அணிகள் பங்குபற்றின.

எமது கழகத்தின் ஸ்தாபகரும் எனது மாமனாருமான லோரன்ஸ் பெர்னாண்டோ தான் அப்போது எமது அணியை யாழ் நகருக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுவனாக இருந்த நான் யாழ் நகரை பார்க்க ஆசைப்படுவதாக எனது மாமாவிடம் தெரிவித்த போது, அவர் என்னையும் யாழ். நகருக்கு அழைத்துச் சென்றார்.

மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட இப்போட்டியை தினமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், தென் பகுதியில் இருந்து சென்ற அணிகளின் வீரர்களின் ஆட்டத்திறனுக்கு பலத்த கரகோஷம் செய்து உட்சாகப்படுத்திய காட்சி என்னை மிகவும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

மேற்படி, போட்டியின் இறுதி ஆட்டத்தில் எமது ரட்ணம் கழகமும் கடற்படை அணியும் போட்டியிட்டன. இப்போட்டியின் இறுதியில் எமது கழகம் 2-0 கோல்களினால் வெற்றிபெற்று லயன்ஸ் சம்பியன் கேடயத்தை கைப்பற்றியது. இப்போட்டிக்கு மத்தியஸ்தம் வகித்த அப்போதைய யாழ். உதைபந்தாட்டச் சங்கத்தின் செயலாளர் காலஞ்சென்ற ஈ.கே. குமரையாவுக்கும் இந்த நொக்கவுட் போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்தமைக்காக, லயன்ஸ் கழகத்தினரினால் விசேட பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

யாழ் நகரில் நாம் அடைந்த இந்த முதலாவது வெற்றிதான் எமது ரட்ணம் கழகத்துக்கு ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும்.

கேள்வி: இதன் பின்பு உங்கள் ரட்ணம் கழகம், இதுவரை ஏற்படுத்திய சாதனைகளை சுருக்கமாக கூறமுடியுமா?

பதில்: 1968 ஆம் ஆண்டு "மீரா" கிண்ணத்தை கைப்பற்றிய பின்பு, 1977/78 ஆம் ஆண்டுகளில், எப்.ஏ. கிண்ண சம்பியன் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றோம். 1980 ஆம் ஆண்டு சில்வர் கிண்ணம், மேயர் கிண்ணம், அப்துல் ரகுமான் கிண்ணம், ஹுசெயின் கிண்ணம், பண்டாரநாயக்க ஞாபகார்த்த கிண்ணம் ஆகியவற்றை கைப்பற்றினோம்.

1981 ஆம் ஆண்டு கொழும்பு உதைபந்தாட்ட லீக் நடத்திய "சுப்பர் லீக்" சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினோம். 1985 ஆம் ஆண்டு கொழும்பு உதைபந்தாட்ட லீக், கொழும்பு சிற்றி லீக் ஆகியன நடாத்திய போட்டிகளில் சம்பியன் கிண்ணங்களைக் கைப்பற்றினோம்.

1987 ஆம் ஆண்டு எமது கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமான லோறன்ஸ் பெர்னாண்டோ காலமானதும் கழகத்தின் தலைவர் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன்.

1988 ஆம் ஆண்டு கொழும்பு உதைபந்தாட்ட லீக் நடாத்திய லோறன்ஸ் பெர்னாண்டோ ஞாபகார்த்த கிண்ணப் போட்டியிலும், எமது கழகமே சம்பியனானது. 1990 ஆம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய "பிறிஸ்டல்" சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினோம். 1991 ஆம் ஆண்டு இதே போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றோம். 1993 ஆம் ஆண்டும் இதே போட்டியில் மீண்டும் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினோம்.

1998 ஆம் ஆண்டு, மேயர் கிண்ணம், பிறிஸ்டல் கிண்ணம், சுப்பர் லீக் கிண்ணம் ஆகிய மூன்று கிண்ணங்களையும் கைப்பற்றினோம். 2000 ஆம் ஆண்டு எப்.ஏ. கிண்ணத்தை முதன்முறையாக கைப்பற்றினோம். பிறிமியர் லீக் கிண்ணப் போட்டி கடந்த 4 வருடங்களாக இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. கடந்த 3 வருடங்களாக இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்குபற்றிய எமது கழகத்துக்கு 2 ஆம் இடம் தான் கிடைத்தது. இம்முறை இப்போட்டியில் எங்கள் கழகம் சம்பியன் கிண்ணத்தை கைபற்றியுள்ளது.

இதேபோல், 2000 ஆம் ஆண்டு முதல் தடவையாக எமது கழகம் எப்.ஏ. கிண்ணத்தை கைப்பற்றியது. இதன்பின்பு கடந்த 3 வருடங்களாக எமது கழகம் தான் எப்.ஏ. கிண்ணத்தை தொடர்ச்சியாக கைப்பற்றி வருகின்றது. நடைபெற இருக்கும் "சம்பியன் - சம்பியன்" கிண்ண இறுதி ஆட்டத்துக்கும் எமது கழகம் தற்போது தெரிவாகியுள்ளது.

கேள்வி: உங்களுடைய கழகம் இதுவரை வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகள் ஏதாவதிலாவது பங்குபற்றியுள்ளதா?

பதில்: ஆம், எங்கள் கழகம் இதுவரை 3 வெளிநாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளது. முதலாவதாக 1994 ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கொத்தா நகரில் நடைபெற்ற 14 ஆவது ஆசிய உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியுள்ளோம். 1995 ஆம் ஆண்டு மாலைதீவில் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்குபற்றியுள்ளோம். 2000 ஆம் ஆண்டும் மீண்டும் மாலைதீவில் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்குபற்றியுள்ளோம். 2006 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு சென்றோம். இவ்வருடம் எங்கள் கழகம் பாகிஸ்தான் செல்லவுள்ளது. ஏ.எப்.ஸி. தலைவர் கிண்ணப் போட்டி பாகிஸ்தான் லாகூர் நகரில் மே மாதம் 17 ஆம் திகதியில் இருந்து 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கேள்வி: உங்கள் கழகத்தின் இந்த பெரிய வளர்ச்சிக்கு வீரர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

பதில்: ஆரம்பகாலத்தில் எங்கள் கழகத்தின் வளர்ச்சிக்கு வெளி மாவட்ட் வீரர்களே பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளார்கள். குறிப்பாக, யாழ்ப்பாண வீரர்களான அப்பையா, ஜேக்கப், கோல்காப்பு வீரர் முனாஸ், எம்.பிரான்ஸிஸ் ஆகிய வீரர்கள் எமது கழகத்தில் அங்கம் வகித்து சிறப்பாக விளையாடியுள்ளார்கள். இவ்வீரர்கள் அனைவரும் இலங்கை தெரிவு அணியில் அங்கம் வகித்துள்ளார்கள். குறிப்பாக, எம்.பிரான்ஸிஸ் வீரர் இலங்கை அணிக்கு பல வருடங்கள் தலைமைதாங்கி விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி: உங்கள் கழக வீரர்களுக்கு மாதாந்தம் ஏதாவது பண உதவி செய்கின்றீர்களா?

பதில்: எங்கள் கழகத்தில் கிட்டத்தட்ட 50 விளையாட்டு வீரர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். இதில் சிறந்த 20 வீரர்கள் தான் எமது முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்கள். ஏனைய வீரர்கள் 2 ஆம் தரப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் மாதாந்தம் ஒரு தொகைப் பணத்தை நாம் ஊதியமாக வழங்கி வருகின்றோம். இதற்காக எமது கழகம் மாதாந்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை செலவு செய்து வருகின்றது.

கேள்வி: இதற்கான பணம் எவ்வாறு கிடைக்கின்றது?

பதில்: எங்களுடைய கழகத்தின் ஆதரவாளர்கள் எங்களுக்கு உதவி செய்கின்றார்கள். இதேநேரம், நானும் ஒரு தொகை பணத்தை எனது தொழில் ரீதியில் மிச்சப்படுத்திக் கழகத்தின் வளர்ச்சிக்காக செலவு செய்கின்றேன். இதேபோல், இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுத்தலைவர் மணிலால் பெர்னாண்டோவும் எமது கழகத்தின் வளர்ச்சிக்காக பண உதவிகளைச் செய்து வருகின்றார்.

கேள்வி: மணிலால் பெர்னாண்டோ ஏன் தனிப்பட்ட ரீதியில், உங்கள் கழகத்துக்கு பண உதவிகளைச் செய்கின்றார்?

பதில்: இது ஒரு தவறான கேள்வி. மணிலால் பெர்னாண்டோ எங்கள் கழகத்துக்கு மட்டுமல்ல, சிறப்பாக விளையாடும் அனைத்துக் கழகங்களுக்கும் லீக்குகளுக்கும் பெருமளவு உதவிகளைச் செய்து வருகின்றார். சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனம் (FIFA) ஆசிய உதைபந்தாட்டச் சம்மேளனம் (AFC) ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் உதைபந்தாட்ட அபிவிருத்திக்கான பணத்தை, இலங்கையில் உள்ள 42 உதைபந்தாட்ட லீக்குகளின் அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவுசெய்து வருகின்றார்.

இதேநேரம், கடல்கோளால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை பலகோடி ரூபா செலவில் புனரமைத்துக் கொடுக்கின்றார். மாவட்ட மட்டத்தில் மன்னாருக்கு சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், காலி, மாத்தறை, பகுதிகளிலும் சிறந்த மைதானங்களை அமைக்கும் வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்.

கேள்வி: இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் புதிய தலைவர் பதவிக்கு தாங்கள் தெரிவு செய்யப்படலாம் என்று செய்திகள் அடிபடுகின்றது உண்மையா?

பதில்: உத்தியோகப் பற்றற்ற முறையில் தலைவர் பதவிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருப்பது என்பது உண்மைதான். ஆனாலும், மார்ச் மாதம் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் தான் அது உறுதி செய்யப்பட வேண்டும்.

கேள்வி: தலைவர் பதவிக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டதும் உங்களுடைய முதல் நடவடிக்கை எதுவாக இருக்கும்?

பதில்: இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தில் தற்போது 42 லீக்குகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றின் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதே எனது முதல் நடவடிக்கையாகும். இந்த லீக்குகளுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இதேநேரம், லீக்குகளும் உதைபந்தாட்ட முன்னேற்றத்துக்கான தங்களது ஆவலை வெளிப்படுத்த வேண்டும். பெயரளவில் லீக்குகள் இயங்குவதாகக் காண்பித்துக் கொண்டு, உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்துவதோ, அகில இலங்கை ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதோ கிடையாது. இவ்வாறான லீக்குகளை சிறப்பாக செயல்பட வைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன்.

கேள்வி: இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும் போட்டிகள், நிர்வாக சபைக் கூட்டங்களில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இயங்கும் உதைபந்தாட்ட லீக்குகள் பங்குபற்றாவிட்டால், அவர்களின் அங்கத்துவம் ரத்துச் செய்யப்படுமா?

பதில்: இன்றைய நாட்டின் நிலைமை காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் காரணமாகவும், குறிப்பாக, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கிளிநொச்சி லீக்குகளின் பிரதிநிதிகளோ, அணிகளோ கொழும்புக்கு வரமுடியவில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இதனால், இவ்வாறான் லீக்குகளின் அங்கத்துவத்தை ஒருபோதும் ரத்துச் செய்வதில்லை என்று இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாக சபைக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

ஆனாலும், மட்டுநகர், அம்பாறை, திருமலை, மன்னார் ஆகிய உதைபந்தாட்ட லீக்குகளின் அணிகள் கொழும்பு வந்து பாடசாலை போட்டிகள் உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இவ்வாறு வரும் அணிகளுக்கு, போக்குவரத்து செலவுகள், உணவு, தங்குமிட வசதிகள் அனைத்தையும், மணிலால் பெர்னாண்டோ வழங்கி வருகின்றார்.

கேள்வி: இலங்கை உதைபந்தாட்ட சிரேஷ்ட அணியில், உங்கள் ரட்ணம் கழக வீரர்கள் எத்தனை பேர் அங்கம் வகிக்கின்றார்கள்?

பதில்: எமது கழக வீரர்கள் 7 பேர் தற்போது, இலங்கை சிரேஷ்ட உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கின்றார்கள்.

w3.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.