Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணக்கு

Featured Replies

பிணக்கு - ஜெயகாந்தன்

 

மெட்டியின் சப்தம் டக்டக்கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார்.

கையில் பால் தம்பளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கை அறைக்குள் நுழைவது தெரிந்தது. தன் மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழந்தது.

கிழவருக்குக் கொஞ்சம் குறும்பு அதிகம் தான்!

கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின்தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். ‘கிரீச்’சென்ற ஒலியுடன் கதவு மூடியதும், மேலே செல்ல முடியாமல் அவரது பார்வை கதவில் முட்டிக் கொண்டது.

மூடிய கதவின் மீது ஒரு பெண் உருவம், சித்திரம் போல் தெரிந்தது. வயசு பதினாறுதான் இருக்கும்.

மழுங்கச் சீவிப் பின்னிய சிகையில் உச்சி வில்லை; தளர்ந்து துவளும் ஜடையில் திருகு வில்லை. நெற்றியில் முத்துச் சுடரை அள்ளி விசிறும் சுட்டியும், பவழ உதடுகளுக்கு மேல் ஊசலாடும் புல்லாக்கும், முழங்கை வரை இறங்கிய ரவிக்கையோடு, சரசரக்கும் சரிகை, நிறைந்த பட்டுப்புடவை கோலமாக, கருமை படர்ந்து மின்னிய புருவக் கொடிகளின் கீழாய், மை தீட்டிப் பளபளக்கும் பெரிய விழிகள் மருண்டு நோக்க, இளமையும் மருட்சியும் கலந்து இழையும் வாளிப்போடும், வனப்போடும் நாணமும் நடுக்கமுமாய் நிற்கும் அந்தப் பெண்…

ஆமாம், தர்மாம்பாள் ஆச்சியின் வாலைப் பருவத் தோற்றந்தான்.

அது, அந்த உருவம், மூடிய கதவிலிருந்து இறங்கி அவரை நோக்கி வந்தது. வெட்கம், பயம், துடிப்பு, காமம், வெறி, சபலம், பவ்யம், பக்தி, அன்பு – இத்தனையும் ஓர் அழகு வடிவம் பெற்று நகர்ந்து வருகிறது…கைலாசம் தாவி அணைக்கப் பார்க்கிறார்.

சமையல் அறை வேலையெல்லாம் முடித்துக் கொண்டு கூடத்துக்கு வந்த தர்மாம்பாள் பேரப் பிள்ளைகளின் அருகே பாயை விரித்தாள்.

அருகே ஆளரவம் கேட்கவே நினைவு கலைந்த பிள்ளை மனைவியைப் பார்த்தார்.

தலை ஒரு பக்கம், கால் ஒரு பக்கமாகப் போட்டபடி, உறங்கும் பெரிய பையனைப் புரட்டிச் சரியாகக் கிடத்தினாள்.

பிள்ளையோ, லெச்சணமோ, பகலெல்லாம் கெடந்து ஆடு ஆடுன்னு ஆடறது. ராவுலே அடிச்சுப் போட்டாப்பலே பெரக்கனையே இல்லாம தூங்கறது. அடாடா…என்னா ஆட்டம்! என்னா குதிப்பு!’ என்று அலுத்துக் கொண்டே பேரனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

ஏசு புத்திரன் கண்ணனின் சீமந்தப் புத்திரனல்லவா?

‘வயசு எட்டு ஆகுது. வயசுக்குத் தக்க வளத்தியா இருக்கு? சோறே திங்க மாட்டேங்கறான்’ என்று கவலையுடன் பெருமூச்சு விட்டாள் தர்மாம்பாள்.

இளையவள் விஜயா நான்கு வயதுச் சிறுமி. எல்லாம் பாட்டியின் வளர்ப்புத்தான். பாயை விட்டுத் தரையில் உருண்டு கிடந்தாள். அவளையும் இழுத்துப் பாயில் கிடத்தினாள்.

..ஹ்ம்..பாட்டி…’ என்று சிணுங்கினாள் குழந்தை.

‘ஒண்ணுமில்லேடி கண்ணு! தரையிலே கெடக்கியே! உம், தூங்கு…’ என்று முதுகில் தட்டிக் கொடுத்தாள்.

கைலாசம், தனது பசுமை மிக்க வாலிபப் பிராய நினைவுகளில் மனசை மேய விட்டவராய் மெளனமாய் அமர்ந்திருந்தார்.

‘நீங்க ஏன் இன்னும் குந்தி இருக்கீங்க? உங்களுக்கும் ஒரு தாடாட்டு பாடணுமா? பாலைக்குடிச்சிட்டுப் படுக்கக் கூடாதா? கொண்டு வந்து வச்சி எத்தினி நாழி ஆவுது? ஆறிப் போயிருக்கும்’ என்று சொல்லிக் கொண்டே கலைந்து கிடந்த அவரது படுக்கையை ஒழுங்கு படுத்தினாள்.

‘கொஞ்சம் ஒன் கையாலே அந்தத் தம்ளரை எடுத்துக் கொடு.’

பால் தம்ளரை வாங்கும் போது அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

IMG_20160101_160113936.jpg 

‘ஆமா, படுத்துத் தூங்குடாங்கறியே, எந்தச் சிறுக்கி மவ எனக்கு வெத்தலை இடிச்சுக் கொடுத்தா?’ என்று அவள் கையை விடாமல், சிரித்துக் கொண்டே கேட்டார்.

’சிரிப்புக்குக் கொறைச்சலில்லே! பிள்ளை இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளி வெளையாடினானாம். கையை விடுங்க!’

‘யாருடி கெழவன்? நானா?’ என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.

‘இல்லே! இப்பத்தான் பதினேழு முடிஞ்சி பதினெட்டு நடக்கு…பொண்ணு ஒண்ணு பாக்கவா?’

‘ஐய, என்ன இது?’

-மறுபடியும் சிரிப்புத்தான். கிழவர் பொல்லாதவர்.

பாலைக் குடித்த பிறகு உடல் முழுவதும் வேர்த்தது. துண்டால் உடலைத் துடைத்துக் கொண்டு, ‘உஸ்! அப்பா, ஒரே புழுக்கம்! முத்தத்திலே பாயை விரி. நா வெத்திலை செல்லத்தை எடுத்திட்டு வாரேன்’ என்று எழுந்தார்.

தர்மாம்பாள் பாயைச் சுருட்டி கொண்டு கூடத்து விளக்கை அணைத்தாள். முற்றத்தில் பளீரென்று நிலா வெளிச்சம் வீசிய பாகத்தில் பாயை உதறி விரித்தாள்.

‘உஸ் அம்மாடி! என்னமா காத்து வருது!’ என்று காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்தாள்.

மேலாக்கை எடுத்து முன் கையிலும் கழுத்திலும் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டாள்.

கைலாசம் பிள்ளை மனைவியின் அருகே அமர்ந்து நிலவெரிக்கும் வான் வெளியை வெறித்துப் பார்த்தார்.

ஆகாய வெளியில் கவிந்து மிதந்து செல்லும் மேகத் திரள்கள் நிலவில் அருகே வரும்போது ஒளி மயமாகவும் விலகிச் செல்கையில் கரிய நிழல் படலங்களாகவும் மாறி மாறி வர்ணஜாலம் புரிந்தன.

இந்த நிலவொளியில்…ஆம். இதே நிலவு தான் – காலம் எத்தனையானாலும் நிலவு ஒன்றுதானே – இந்த நிலவில், பாட்டியின் மடியில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டு பால் சோறு உண்ட பருவம் முதல், தனக்கு வாய்த்த அருமை மனைவி தர்மாம்பாளின் மடியில் தலை சாய்த்து இன்பக் கனவுகளில் மயங்கியபடியே தாம்பூலம் வாங்கிக் கொண்டதெல்லாம்…

அந்த நிகழ்ச்சிகளெல்லாம் நிலவில் படிந்த மேகங்கள் ஒளி பெறுவது போன்று நினைவில் கவிந்து ஒளி பெற்று ஜ்வலித்தது. பிறகு விலகி ஒளி குறைந்து, ஒளி இழந்த கரிய இரு நிழலாய் மாறி நகர்ந்தன.

மேகம் எங்கே? எங்கோ இருக்கும். நிலவு எங்கே?

 

நினைத்தால் தான் நினைவா? நினைக்காத போது நினைவுகள் எங்கு இருக்கின்றன? நினைவு ஏன் பிறக்கிறது? எப்படி பிறக்கிறது? நினைவு! அப்படியென்றால்? நினைப்பதெல்லாம் நடப்பதில்லையா? நினைப்பு என்பது முழுக்கவும் மெய்யா? பொய்யை, ஆசைகளை, அர்த்தமற்ற கற்பனைகளை, நினைத்து நினைத்து நினைவு என்ற நினைப்பிலேயே நிசமாவதில்லையா?

‘டொடக்…டொடக்! தர்மாம்பாளின் கையிலிருந்த பாக்குவெட்டி இரவின் நிசப்தத்தில் பாக்கை வெட்டித் தள்ளும் ஒலி…

கைலாசம் தன் மனைவியைக் காணும் போது தன்னையும் கண்டார்.

தர்மாம்பாள் உள்ளங்கையில் வைத்திருந்த வெற்றிலையில் உறைந்து போயிருந்த சுண்ணாம்பைச் சுரண்டி வைத்துத் திரட்டி, பாக்கையும் சேர்த்து இரும்புரலில் இட்டு ‘டொக் டொக்’ என்று இடிக்க ஆரம்பித்தாள்.’

கைலாசத்தின் நாவு பற்கள் இருந்த இடத்தை துழாவின.

உம்! எனக்கு எப்பவுமே பல்லு கொஞ்சம் பெலகீனந்தான்.

உடம்பை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டார். முண்டாவையும் புஜங்களையும் திருகி, கைகளை உதறிச் சொடக்கு விட்டுக் கொண்டார். ரோமம் செறிந்த நெஞ்சிலும் புஜங்களிலும் சருமம் சற்றுத் தளர்ந்திருந்தாலும் தசை மடிப்புகள் உருண்டு தெரிந்தன.

கைலாசம் உண்மையிலேயே திடகாத்திரமான மனிதர்தான். உடம்பில் அசுர வலு இருந்த காலமும் உண்டு. இப்பொழுது நிச்சயம் ஆள்வலு உண்டு.

போன வருஷம் தான் சஷ்டியப்த பூர்த்தி. தர்மாம்பாளுக்கு ஐம்பதுக்கும் அறுபதுக்குள்.

அவளுக்கு மூங்கில் குச்சு போல் நல்ல வலுவான உடம்பு தான். மெலிவாக இருந்தாலும் உடலில் உரம் உண்டு. இல்லாவிடில் ஏறத்தாழ இருபத்தைந்து வருஷமாக அந்த உடம்புக்கு ஈடு கொடுக்க முடியுமா?

கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரிசித்தது.

‘என்ன? கொஞ்சுறீங்க! வெத்தலை போட்டுக்கிட்டு படுங்க’ என்று இடித்து, நசுக்கிய வெற்றிலைச் சாந்தை அவரது உள்ளங் கையில் வைத்தாள். மீதியை வாயிலிட்டுக் குழப்பி, ஒதுக்கிக் கொண்டாள்.

தர்மாம்பாளுக்குப் பற்கள் இருக்கின்றன என்றாலும் புருஷனுக்காக இடிப்பதில் மீத்துத் தானும் போட்டுக் கொள்வதில் ஒரு திருப்தி. ஆறு வருடமாய் இப்படித்தான்.

அந்தத் தம்பதிகளிடையே ஒரு மனத்தாங்கல் கூட இதுவரை நிகழ்ந்ததில்லை. ஒரு சச்சரவு என்பது இல்லை. ‘சீ, எட்டி நில்’ என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும். அவர் நாவு தாங்காது.

சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கையை கழித்துவிட்டார்கள். கழித்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா? இதுவரை வாழ்வை அப்படித்தான் கழித்தார்கள்.

நிலவு இருண்டது. எங்கும் ஒரே நிசப்தம். கூடத்தில் படுத்திருந்த முத்து தூக்கத்தில் ஏதோ முனகியவாறே உருண்டான்.

அறைக்குள்ளிருந்து வளையல் கலகலப்பும் கட்டிலின் கிரீச்சொலியும், பெண்ணின் முணு முணுப்பும்.

எங்கோ ஒரு பறவை சிறகுகளைப் படபடவென்று சிலுப்பிக் கொள்ளும் சப்தம். அதைத் தொடர்ந்து வெள்வால் ஒன்று முற்றத்தில் தெளிந்த வான் வெளியில் குறுக்காகப் பறந்தோடியது.

முற்றத்தில் ஒரு பகுதி இருண்டிருந்தது. நிலவு எதிர்ச்சரக்க கூரைக்கும் கீழே இறங்கிவிட்டது. அவர்கள் படுத்திருந்த இடத்தில் நிழலின் இருள் நிலவொளிக்குத் திரையிட்டிருந்தது.

தர்மாம்பாள் தொண்டைக்குள் ‘களகள’வென்று இளமை திரும்பை திரும்பிவிட்டது மாதிரி, சப்தமில்லாமல் சிரித்தாள்.

கிழவரின் அகண்ட மார்பில் அவள் முகம் மறைந்தது. பொன் காப்பிட்ட அவளது இரு கரங்களும் கிழவரின் முதுகில் பிரகாசித்தன.

இருளோ நிலவோ, இரவோ, பகலோ, இளமையோ முதுமையோ, எல்லாவற்றையும் கடந்தது நானே இன்பம்!

ஆம்; அது – இன்பம் மனசில் இருப்பது. இருந்தால் எந்த நிலைக்கும், எந்தக் காலத்துக்கும், யாருக்கும் அது ஏற்றதாகத்தான் இருக்கும். தர்மாம்பாளும் கைலாசமும் மனசில் குறைவற்ற இன்பம் உடையவர்கள். வயசைப் பற்றி என்ன?

‘டொக்…டொக்!’

கைலாசம், நிலா வெளிச்சத்தில் பாயை இழுத்துப் போட்டுக் கொண்டு இரும்புரலில் வெற்றிலை இடிக்கிறார். அருகே தர்மாம்பாள் படுத்திருக்கிறாள். தூக்கம்? அரைத் தூக்கம். மயக்கம் தான்!

‘நீங்க இன்னம் படுக்கலியா?’

‘உம், நீ வெத்திலை போடுறியா?’

‘உம். அந்தத் தூணோரம் செம்பிலே தண்ணி வச்சேன். கொஞ்சம் கொண்ணாந்து தாரிங்களா? நாக்கை வரட்டுது’ என்று தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

’எனக்கும் குடிக்கணும்’ என்றவாறு எழுந்து சென்று செம்பை எடுத்துத் தண்ணீரைக் குடித்து விட்டுக் கொண்டு வந்தார் கைலாசம்.

அவர் வரும்போது நிலவொளியில் அந்தத் திடகாத்திரமான உருவத்தைக் கண்ட தர்மாம்பாளின் மனம் வாலிபக் கோலம் பூண்டு அந்த அழகில் லயித்துக் கிறங்கி வசமிழந்து சொக்கியது.

அவர் அவள் அருகே வந்து அமர்ந்தார். தாகம் தீரத் தண்ணீர் குடித்த தர்மாம்பாள் ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் மேல் சாய்ந்தாள். வலுமிக்க அவரது கரத்தை இலேசாக வருடினாள். அவளுக்கே சிரிப்பு வந்தது. சிரித்தாள்.

‘என்னடி சிரிக்கறே?’

‘ஒண்ணுமில்லே; இந்தத் கெழங்க அடிக்கிற கூத்தை யாராவது பார்த்தா சிரிப்பாங்களேன்னு நெனைச்சேன்.’

அவர் கண்டிப்பது போல் அவள் தலையில் தட்டினார். ‘யாருடி கெழம்?’

கிழவர் சிரித்தார்! அவளும் சிரித்தாள்!

தர்மாம்பாள் எழுந்து உட்கார்ந்து இன்னொரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டாள். அவள் பார்வை கவிழ்ந்தே இருந்தது.

முதலிரவில் இல்லாத வெட்கமும் நாணமும் அவள் உடம்பையெல்லாம் பிடுங்கித் தின்றன!

கிழவர் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவள் விழிகளை உயர்த்திப் பார்த்தாள். அவர் அவள் விழிகளுக்குள்ளே பார்த்தவாறு சிரித்தார்.

‘சே! நீங்க ரொம்ப மோசம்!’ என்று வெட்கத்துடன், கண்டிக்கும்குரலில் சிணுங்கினாள் தர்மாம்பாள். அனுபவித்த சந்தோஷத்தால் காரணமற்று சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது. கிழவருக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

அவளிடம் ஏதாவது வேடிக்கை பேசி விளையாடத் தோன்றியது அவருக்கு.

உள்ளங்கையில் புகையிலையை வைத்துக் கசக்கியபடி தனக்குள் மெள்ளச் சிரித்துக் கொண்டே, ‘அந்தக் காலத்திலே நான் அடிச்ச கூத்தெல்லாம் ஒனக்கெங்கே தெரிஞ்சிருக்க போவுது’ என்று சொல்லி விட்டுத் தலையை அண்ணாந்து புகையிலையை வாயில் போட்டுக்கொண்டார்.

‘ஏன் சீமைக்கா போயிருந்தீங்க?’

‘தர்மு, உனக்குத் தெரியாது. நீ எப்பவும் குழந்தைதான். ஒன் கிட்டே அப்போ நா சொன்னதே இல்லெ. இப்ப சொன்னா என்ன?’

 

கிழவர் கொஞ்சம் நகர்ந்து சென்று சாக்கடையில் எச்சில் துப்பிவிட்டு வந்தார்.

‘நம்ம சந்திதித் தெரு கோமதி இருந்தாளே, ஞாபகம் இருக்கா?’

கால்களில் சதங்கை கொஞ்ச, கருநாகம் போன்ற பின்னல் நெளிந்து திரும்பி வாலடித்துச் சுழல, கண்களும் அதரங்களும் கதை சொல்ல, இவர்க்கும் எனக்கும் ஒரு வழக்கிருக்கு…என்ற நாட்டியக் கோலத்துடன் முத்திரை பாவம் காட்டி, சதிராடி நிற்கும் ஒரு தங்கப் பதுமை போன்ற கோமதியின் உருவம் தர்மாம்பாளின் நினைவில் வந்து நின்றது. ஒருகணம் மையல்காட்டி மறையாமல் நிலைத்து நின்றது.

‘என்ன, ஞாபகம் இருக்கா? அந்தக் காலத்திலே அவளுக்குச் சரியா எவ இருந்தா? என்ன இருந்தாலும் தாசின்னா தாசிதான். அவளுகளை மாதிரி சந்தோஷம் குடுக்க வீட்டுப் பொம்பளைங்களாலே ஆகுமா?’

‘உம்!’ தர்மாம்பாளின் கண்கள் கிழவரின் முகத்தை அர்த்தத்தோடு வெறித்தன.

மனம்?

‘ஓஹோ! அந்தக் காலத்திலே அவ நாட்டியம்னா பரந்து பரந்து ஓடுவாரே; அதுதானா? என்று பற்பல நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தது மனம்.

கிழவர் குறும்பும் குஷியுமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்.

‘என்னை ஒரு தடவை நீலகிரிக்கு மாத்தியிருந்தாங்களே ஞாபகம் இருக்கா? கண்ணன் அப்ப வயத்திலே ஏழு மாசம், இல்லையா?’

‘உம்-’ தர்மாம்பாளின் விழிகள் வெறீத்துச் சுழன்றன. ‘இது சத்தியம் இது சத்தியம்!’ என்று அவளுள் ஏதோ ஒரு குரல் எழுந்தது.

‘அப்போ தனியா போனேன்னா நெனைச்சிட்டிருக்கே? போடி பைத்தியக்காரி! அந்தக் கோமதிதான் என் கூட வந்தா. அவ ஒடம்பு சிலை கணக்காக இல்லே இருக்கும்! உம். அவ என்ன சொன்னா தெரியுமா கடைசியிலே? ‘ கிழவர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார்.

‘நானும் இது வரைக்கும் எத்தினியோ பேரைப் பார்த்திருக்கேன். ஆம்பிள்ளைன்னா நீங்கதான்னா’ கிழவர் மறுபடியும் சிரித்தார்.

அது என்ன சிரிப்பு? பொய்ச் சிரிப்பா, மெய்ச் சிரிப்பா?

தர்மாம்பாளின் நெஞ்சில் ஆத்திரமும், துரோகம் இழைக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட – ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்தன.

‘நெசந்தானா?’

‘பின்னே, பொய்யா? அதுக்கென்ன இப்போ? எப்பவோ நடந்தது தானே?’

அடப்பாவி, கிழவா! பொய்யோ மெய்யோ அவள் திருப்திக்காகவாவது மாற்றிச் சொல்லலக் கூடாதா?

தர்மாம்பாள் கிழவிதான். கிழவி பெண்ணில்லையா?

‘துரோகி, துரோகி!’ என்று அவள் இருதயம் துடித்தது. ஆமாம். அது உண்மைதான். பொய்யில்லை. ஏனோ அவள் மனம் அதை நம்பி விட்டது. பொய்யாக இருக்குமோவென்று சந்தேகிக்கக் கூட இல்லை. அதெல்லாம் தாம்பத்திய ரகசியம்.

விருட்டென்று எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று கூடத்து இருளில் வீழ்ந்தாள் தர்மாம்பாள்.

‘அடடே! தர்மு, கோவிச்சுக்கிட்டியா? பைத்தியக்காரி! பைத்தியக்காரி’ என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே பாயில் துண்டை விரித்துப்படுத்தார் கைலாசம் பிள்ளை.

விளையாட்டா? அது என்ன விளையாட்டோ? கிழவரின் நாக்கில் சனியல்லவா விளையாடி இருக்கிறது.

மணி பன்னிரண்டு அடித்தது. கிழவர் தூங்கிப் போனார். தர்மாம்பாள் தூங்கவில்லை.

மறு நாள்.

IMG_20160101_160140396.jpg 

மறுநாள் என்ன, மறுநாளிலிருந்து வாழ்நாள் வரை…

அவருக்கு அவள் தன் கையால் காப்பி கொடுப்பதில்லை. பல் துலக்க, குளிக்க வெந்நீர் கொடுப்பதில்லை. முதுகு தேய்ப்பதில்லை. சோறு படைப்பதில்லை. வெற்றிலை பாக்கு இடித்துக் கொடுப்பதில்லை.

பாவம் கிழவர்! அனாதை சிசுவைப் போல தவித்தார்.

அவளைப் பொறுத்தவரை கைலாசம் என்றொரு பிறவியேயில்லாத மாதிரி, அப்படி ஒருவருடன் தான் வாழ்க்கைப் படாதது மாதிரி நடந்து கொண்டாள். அவருடனும் அவள் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

மகனும் மருமகளும் துருவித் துருவி அவளை விசாரித்தனர்.

மெளனம்தான்.

கிழவர்? அவர் வாயைத் திறந்து என்னவென்று சொல்வார்?

மெளனம்தான்.

அன்றிரவு விஜயா கேட்டாள்: ‘பாட்டி நீ தாத்தாவோட டூவா?’ அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

’ஏன் தாத்தா, பாட்டி உன்னோட பேச மாட்டேங்குது? நீ அடிச்சியா?’ என்று கிழவரை நச்சரித்தான் முத்து. கிழவரால் பொறுக்க முடியவில்லை. ‘என்னடி தர்மு? நான் விளையாட்டுக்கு, பொய்தான் சொன்னேன். என்னை உனக்குத் தெரியாதா? உனக்கு நான் துரோகம் செஞ்சிருப்பேன்னு நீ நெனைக்கிறியா? இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்தும் என்னை நீ தெரிஞ்சிக்கலையா? தர்மு! தர்மு…’

‘சீ! வாழ்ந்தேனா? ஐயோ, என் வாழ்வே! வாழ்ந்ததாக நெனைச்சி ஏமாந்து போனேன்!’

இதைக் கூட வெளியில் சொல்லவில்லை. குழந்தைகள் தூங்கிவிட்டன.

அவர் தானாகவே அன்று வெற்றிலை இடித்துப் போட்டுக் கொண்டார்.

‘தர்மு! என்னை நீ நம்ப மாட்டியா?’ அவர் கை அவளை தலையை வருடியது.

அடிபட்ட மிருகம் போல் உசுப்பிக் கொண்டு நகர்ந்த அவள் உடம்பு துடித்துப் பதைத்தது.

‘சீ! என்று அருவருப்புடன் உறுமி பின், ‘தொட்டீங்கன்னா, கூச்சல் போட்டு சிரிக்க அடிச்சிடுவேன்.’

அவளுக்கு மூச்சு இளைத்தது. உடல் முழுவதும் வேர்த்து நடுங்கியது. மறுபடி அவரிடம் அவள் பேசியது அதுவே முதல் தடவை. அவரும் திகைத்துப் போனார்.

கிழவர் மனம் குமுறி எழுந்து நடந்தார்.

என்னை, என்னை சந்தேகிக்கிறாளே, என்று நினைத்த போது மனசில் என்னவோ அடைத்து கண்கள் கலங்கின.

 

‘போறா, நல்ல கதி போக மாட்டா’ மனம் சபித்தது.

யாருமற்ற, நாதியற்ற, அநாதை போலத் தெரு திண்ணையில் வெறும் பாயில் படுத்துக் கொண்டார்.

தர்மாம்பாளைக் கைப் பிடித்தது முதல் அன்று தான் முதன் முறையாக அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

விதி! விதி! என்ற முனகல்!

விதிக்கு வேளை வந்து விட்டது.

இரவு மணி எட்டு. தெரு வாசற்படியில் கார் நிற்கிறது.

கூடத்து அறையில் தர்மாம்பாள் படுக்கையில் கிடக்கிறாள். அவளைச் சுற்றிப் பேரனும் பேத்தியும் மகனும் மருமகளும் நிற்கின்றனர். டாக்டர் ஊசி போடுகிறார்.

தெருவில் திண்ணை ஓரத்தில் நிற்கும் கைலாசம் பிள்ளை பதைக்கும் மனத்தோடு ஜன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்க்கிறார்.

உள்ளே செல்ல அவருக்கு அனுமதி இல்லை.

டாக்டர் வெளியே வருகிறார். கண்ணன் பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் பின்னே வருகிறான்.

‘டாக்டர்! என் உயிர் பொழைக்குமா?’ என்ற கைலாசம் பிள்ளையின் குரல் டாக்டரின் வழியில் குறுக்கிட்டு விழுந்து மறிக்கிறது.

டாக்டர் பதில் கூறாமல் தலையை குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார்.

கிழவர் தன்னை மீறி வந்த ஆவேசத்துடன் உள்ளே ஓடுகிறார்.

‘தர்மு! தர்மு! என்னை விட்டுப் போயிடாதேடி, தர்மு!’

நீட்டி விரைத்துக் கொண்டு கட்டிலில் கிடக்கும் தர்மாம்பாளின் உடலில், அங்கங்களில் அசைவில்லை. உணர்வில்லை.

உயிர்…?

நெற்றியில் ஒரு ஈ பறந்துவந்து உட்காருகிறது. நெற்றீச் சருமம் புருவ விளிம்பு நெளிகிறது.

கண்கள் அகல விரித்து ஒருமுறை சுழல்கின்றன.

கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருக தம்பளிரில் இருந்த பாலைத் தாயின் வாயில் வார்க்கிறான் கண்ணன்.

‘யாரு,கண்ணா? பாலில் தாண்ட உறவு இருக்கு, அந்த உறவு ரத்தாயிடும்!’

அதோ சரஸா இப்போது பால் வார்க்கிறாள்.

‘ரெண்டு கொழந்தையையும் வச்சுக்கிட்டுத் தவிப்பியேடி, கண்ணே!

பேரன் முத்து, ‘பாட்டி பாட்டி’ என்று சிணுங்கியபடியே பாலை ஊற்றுகிறான்.

முத்துவை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடிப்பது போல்கண்கள் பிரகாசிக்கின்றன.

பயந்து, ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் விஜியின் கரங்கள் பாட்டியின் உதடுகளுக்கிடையில் பால் வார்க்கும் போது –

அதில் தனி இன்பமா? .. முகத்தில் அபூர்வக் களை வீசுகிறது. ’மடக் மடக்’ கென்று பால் உள்ளே இறங்குகிறது.

மேல் துண்டில் முகத்தை மூடிக் கொண்டு,உடல் பதறிக் குலுங்க வந்து நிற்கிறார் கைலாசம்.

இந்த நிலையிலாவது தன்னை மன்னிக்க மாட்டாளா? என்ற தவிப்பு.

அவர் கைகள் பால் தம்ளரை எடுக்கும் போது நடுங்குகின்றன.

‘தர்மு! தர்மு! என்னைப் பார்க்க மாட்டாயா?’

‘யாரது?’ அவள் விழிகள் வெறித்துச் சுழல்கின்றன.

தாளாத சோகத்தில் துடிக்கும் உதடுகளில்,கண்ணீருடன் புன்சிரிப்பையும் வரவழைத்துக் கொண்டு பால் தம்ளரை அவள் உதட்டில் பொருத்துகிறார் கைலாசம்.

பற்களைக் கிட்டிக் கொண்டு வலிப்பு கண்டது போல் முகத்தை வெட்டி இழுத்துக் கொண்ட தர்மாம்பாளின் முகம் தோளில் சரிகிறது.

கடை வாயில் பால் வழிகிறது!

‘ஐயோ மாமி!’ என்று சரஸாவின் குரல் வெடிக்கிறது.

‘அம்மா! பாட்டீ! ஹூம்..’ முத்து தாயைக்கட்டிக் கொண்டு அழுகிறான். விஜி ஒன்றும் புரியாமல் விழிக்கிறாள். கண்ணன் தலையைக் குனிந்து கொண்டு கண்ணீர் வடிக்கிறான்.

கிழவர் நிமிர்ந்து நிற்கிறார். அவர் முகம் புடைத்து கண்களில் கண்ணீரும் கோபமும் குழம்ப, செக்கச் சிவந்து ஜ்வலிக்கிறது.

கைலாசம் கிழவர்தான்; என்றாலும் ஆண் அல்லவா?

‘இவளுக்கு என் கையாலே கொள்ளி கூட வைக்கமாட்டேன்’. கையிலிருந்த பால் தம்ளரை வீசி எறிந்துவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறார்.

முற்றத்து நிலவில் பால் தம்ளர் கணகணவென்று ஒலித்து உருண்டு கிடக்கிறது.

அன்று, அந்த கடைசி இரவில், அவர்கள் படுத்திருந்த இடத்தில் கொட்டிக் கிடந்த பாலில் நிலவின் கிரணங்கள் ஒளி வீசிச் சிரித்தன.

ஆம், அதே நிலவுதான்;

(தினமணி கதிர் 13.12.1968 இதழில் வெளியான சிறுகதை)

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.