Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கே இருக்கிறாய் கேத்தரின்? 

Featured Replies

*****************மானசீகன்****************

 

 நான் முதன்முதலாக சர்ச்சுக்குப் போனது ஒரு காதல் விவகாரமாகத்தான்.என்னுடைய நண்பன் மணிகண்டன் ஒரு கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தான். அவள் பெயர் கேத்தரின். பேரழகி, தேவதை என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை குறைப்பிரசவ வார்த்தைகள்.  அவள் முகபாவனைகளும், உடலசைவும், உடைகளின் சரசரப்பும் யாரும் அறியாத  ஒரு மலரின் வாசனையை இந்த மண்ணில் பரப்பிக் கொண்டிருந்தன.. எல்லாவற்றையும் விட  அவள் அழகாகப் பாடுவாள். மைக் முன்பாக அவளைப் பார்க்கையில் , ஒரு நீர்வீழ்ச்சி காலத்தின் கட்டளையால் உறைந்து நிற்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் எஸ். ஜானகியின் பாடல்கள்.அவள் குரலில் எப்போதும்  ஒரு மென்சோகம் இழையோடும். எதிர்பாராத தருணங்களில்  அதுவே ஒரு சிறுத்தையாக உருமாறி நம்மைத் தாக்க வரும். அவள் பாடலைக் கேட்க நேர்கிற  எவருக்கும் கண்களைத் துடைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. படு கெத்தாக  இளையராஜாவையே கிண்டலடிக்கும் மிலிட்டரி ரிடர்ன் நவநீதன் அண்ணன் கூட ஒரு தடவை கண்கலங்கி விட்டு 'தாயோழி மக,  இவளக் கொல்லனும்டா'என்றார்.குளம் முழுவதும் சலனங்களைப் பரப்பி விட்டு அமைதியாக  அமிழும் கருங்கல்லைப் போல் அவள் எந்த முகபாவமும் காட்டாமல் அத்தனை கண்ணீரையும் கடந்து போவாள். 

 

மணிகண்டனுக்கு அப்பா இல்லை. அம்மாதான் எல்லாம் .அவன் வீட்டுக்கு நாங்கள் சென்ற போதெல்லாம் ஊட்டி விடப்படுகின்ற வாயுடனோ, மடியில் கிடந்து கதை பேசும் கோலத்துடனோதான் எங்களை வரவேற்றிருக்கிறான். அவனுக்கு நன்றாக சமைக்க வரும். ஒரு நாள் கோழிக்குழம்பு சமைத்து எடுத்து வந்திருந்தான். அந்த வாசத்தில் வர்கீஸ் வாத்தியாரே உள்ளே வந்து விட்டார். சற்றுக் கூச்சத்தோடு டிபன் பாக்ஸ் மூடியில் வாங்கிச் சாப்பிட்டு விட்டு 'கொள்ளாம்டே! எனக்க பொண்ணு மக்க கிடையாது பாத்துக்கோ. இல்லன்னா உன்ன வீட்டோட மருமனாக்கிடுவேன், கேட்டியா 'எச்சில் கையோடு அவன் தலை தடவிச் சென்றார். அவனுக்கு சமையல் தெரியாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சர்யம்.நாங்கள் Nss கேம்ப் போயிருந்த போது அவன் போர்வைக்குப் பதிலாக  ஒரு சேலையைக் கொண்டு வந்திருந்தான். அம்மா சேலயாம். ரவுன்டஸ் வந்த பால்சாமி வாத்தியார் 'பால்குடி மறந்துட்டியா? இல்லையாடா? 'என்று சொல்ல  ஒரே சிரிப்பு. அவர் நகர்ந்தவுடன் மாரிச்சாமி அவன் காதில் போய் கிசுகிசுத்தான். 'மாப்ள,  இந்தாளு ஒரு காமக்கொடூரன்.நீ சேலைய போட்டு படுத்திருக்க, எதுக்கும் சூதானமா இரு '.அந்த  இரவில் பால்சாமி சார் தொந்தரவு செய்தாரோ இல்லையோ, அவனை அம்மாவின் நினைவுகள் தொந்தரவு செய்திருக்க வேண்டும். இடையில் எனக்கு விழிப்பு வந்து பார்த்த போது அவன் ஒரு போட்டாவை கையில் வைத்தபடி அமர்ந்திருந்தான். 

 

மணிகண்டனுக்குள் காதல் உருவான நிமிடத்தில், நான் பக்கத்தில்தான் இருந்தேன். நியாயமாகப் பார்த்தால் அது காதல் மலர்வதற்கு எவ்வித சாத்தியங்களுமற்ற ஓர் தருணம். ஒரு வாரத்திற்கு முன்புதான் மணிகண்டனின் அம்மா செத்துப் போயிருந்தார். சாதாரண தெருச்சண்டை கொஞ்சம் நீண்ட போது, யாரோ ஒருத்தி அவன் சித்தப்பாவோடு இணைத்துப் பேசியிருக்கிறாள்.அந்த வார்த்தை காதில் விழுந்த  அடுத்த நிமிடம் வாயைப் பொத்தி அழுதபடி உள்ளே ஓடியிருக்கிறார். கதவை உடைத்து எல்லோரும் உள்ளே போன போது நாக்கு வெளியே தள்ளியபடி வேறு யாரோவாகி தொங்கிக் கொண்டிருந்தாராம்.எல்லோரும் மணிகண்டனை பார்த்துக் கொண்டும், கட்டிக் கொண்டும் சற்று மிகையாகவே அழுதார்கள். அவன் மீண்டும், மீண்டும் ஒரே வார்த்தையை மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தான். 'சொல்லாம போயிட்டியே சுமிம்மா 'என்பதை மட்டுமே அவன் சுடுகாட்டை விட்டு வந்த பிறகும் சொல்லிக் கொண்டிருந்தான். ஊரே அவனுக்காக பரிதாபப்பட்டு விட்டு நல்லபடியாய் சாப்பிட்டுத் தூங்கியது

 

ஒரு வாரம் கழித்து  வந்த போது,காலம் ஒரு மிஷினாக  உருமாறி சாறெடுத்துத் துப்பிய சக்கை போல  இருந்தான் .பெரும்பாலும் வெறித்த பார்வை, சில தலையாட்டல்கள். அவ்வளவுதான். அவன் மீண்டு வந்த மறுநாள் கல்லூரியில் inter college  meet. பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு. பாட்டுப் போட்டியில் கேத்தரின் கடைசியாகத்தான் பாடினாள். 'உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார் 'என்ற பல்லவிக்கு முன்னால் அவள் இழுத்த  ஹம்மிங்கிலேயே ஒட்டு மொத்தக் கூட்டமும் ஒரு நாய்க்குட்டியாகச் சுருண்டு அவள் காலடியில் படுத்து விட்டது. 'தேவனென்றால்

தேவனல்ல தரை மேல் உந்தன் ஜனனம் ' என்ற வரியில் அவள் பிரபஞ்சத்தையே தன் குரலில் வைத்துத் தூறிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் மணிகண்டனைப் பார்த்தேன். அடக்க முடியாமல் அவன் குமுறிக் கொண்டிருந்தான்.கேத்தரினை ,அவள் பாடலை அவன் இதுவரை பெரிதாகக் கண்டு கொண்டதில்லை.சில்லறைகளை மீதம் வைக்காமல் உதிர்க்கும் உண்டியலென  அவன் முதுகு குலுங்கிக் கொண்டிருந்தது. பாடல் முடிந்ததும் உறைந்து கிடந்த சபை நடுவே ஒரு பித்தனைப் போல் 'சுமிம்மா சுமிம்மா 'என்று புலம்பியபடி அவளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். ஆசிரியர்கள் சிலரும் அவனை கவனிக்க  ஆரம்பித்தனர். விபரீதத்தை உணர்ந்து மேடை வரை சென்று விட்ட வனை கிட்டதட்ட  இழுத்து வந்தோம். 

 

மறுநாளே கேத்தரின் என்னைத் தேடி வந்தாள்.  எந்தத் தனித்திறனும் இல்லாமல் தன் அம்மாவின் மரணம் வழியாக மணிகண்டன் பிரபலமடைந்திருந்தான். நேற்றைய சம்பவத்தை யாரோ அவள் காதில் ஓதியிருக்க வேண்டும். மணியை விட  அவன் அம்மா குறித்தே அதிகம் விசாரித்தாள். 'நாளைக்குச் சாயங்காலம்  அவனை ஒங்க வீட்டு மொட்டை மாடிக்கு கூட்டிட்டு வந்துரு, எனக்கு.  அவன்ட்ட பேசனும் 'என்றாள். கேத்தரின் எனக்குப் பக்கத்து வீடு.இரண்டு வீட்டு மொட்டை மாடிகளும் நட்பு நாடுகளின் நேசத்தோடு கட்டப்பட்டிருந்தன.  அந்தச் சுவரைத் தாண்டுவதென்பது எந்த சாகசப் பட்டியலிலும் இடம் பிடிக்க முடியாத சிறு செயல் அவ்வளவே. இருந்தும், கேத்தரினை நான் மாடியில் பார்த்ததில்லை. எப்போதாவது போட்டிகளில் பார்த்தால் சிரிப்பாள். பக்கத்து வீட்டிலேயே ஒரு தேவதை இருந்தும் என் நாட்கள் கருப்பு, வெள்ளையாக நகர்ந்தது கண்டிப்பாக முன்ஜென்மப் பாவமாகவே இருக்கக் கூடும். 

 

அன்று மாலை வெள்ளை கவுனில் துடைத்து விட்ட நிலா போல் மேலேறி வந்தாள். மணிகண்டனை மன்றாடி அழைத்து வந்திருந்தேன். அவளைப் பார்த்த  உடனே 'ஸாரி, தெரியாம ...'தலை குனிந்து கொண்டான். அதற்குப் பிறகு அவள் மட்டும்தான் பேசினாள். பேசிக் கொண்டேயிருந்தாள்.ஒரு நீண்ட சாரலின் சாட்சியாக நாங்கள் இருவரும் எஞ்சியிருந்தோம். 'ஆமா, எதுக்கு சுமிம்மா சுமிம்மான்னு பினாத்திக்கிட்டு என்கிட்ட வந்த? சாருக்கு கிஸ் மூடோ? 'பளீரெனக் கேட்டாள். மணிகண்டன் வெட்கத்தைக் கையில் பிடித்தபடி ஓடி விட்டான். இப்படித்தான் அவர்களிருவரும் 'ஐ லவ் யூ 'சொல்லிக் கொள்ளாமலே காதலர்களானார்கள். 

 

எப்போது சந்தித்தாலும் அவள்தான் பேசுவாள். அவர்கள் எதிர்காலம் பற்றி, அதிகாலை வந்த கனவு, நேற்று விழுந்த பல்லி, பாத்ரூம் குழாய் உடைந்தது, பத்து வருஷத்துக்கு முன்னால் தலையில் அடிபட்டது, மூன்று வயசில் போட்ட கவுன் ,அந்த மூன்று நாட்கள், முதலிரவு பிளான் இப்படி சகலமும். நான்  என் காதுகளை அங்கே விட்டு விட்டு தள்ளி நின்றிருப்பேன். காதல் பெருக்கெடுத்து விட்டால் பாட  ஆரம்பித்து விடுவாள். டூயட் என்றால் நானும் சேர்ந்து பாடுவேன். மணிக்குப் பாட வராது.அவன் மனதிலிருப்பதை நாங்களிருவரும் எழுத்துக் கூட்டிப் படிப்பதான தொனியில் பரபிரம்மம் போல் எங்களையே பார்த்துக் கொண்டிருப்பான்.  அவள் ,கொஞ்சலில், முத்தத்தில் என்று எதிலுமே குறை வைக்க மாட்டாள். நம்மாள் எப்போதாவது 'சுமிம்மா 'என்று நெகிழ்வதோடு சரி.தனியாக  இருக்கும் போது' சுமிம்மா =கேத்தரின் 'என்று ஸ்ரீராம ஜெயம் போல் தீவிரமாக  எழுதிக் கொண்டிருப்பான். ஆனால்,  அதைக்கூட அவளிடம் காட்ட மாட்டான். ஒரே ஒருதடவை கோழிக்குழம்பு சமைத்து எடுத்து வந்தான். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒரு புகைப்படக்காரனைப் போல் விதவிதமான கோணங்களில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

விதி அவன் வாழ்க்கையில்  இரண்டாவது தடவையாகவும் மூர்க்கமாக விளையாடியது. ஒரு நாள் ரமேஷ்  அவனிடம் விளையாட்டாக ' ஒங்க மேட்டர் தெரிஞ்சு கேத்ரினுக்கு மாப்ளை பாத்துட்டாங்க,  அடுத்த வாரம் கல்யாணம் 'என்று திரி கொளுத்திப் போட்டிருக்கிறான்.அப்படியே நேராய் சர்ச்சுக்குள் போனவன் மெழுகுவர்த்திகளோடு தானும் ஒன்றாய் மாறி கரைந்திருக்கிறான். யாரோ உள்ளுக்குள் வந்தவுடன் அவசரமாய் வெளியேறியவன் 'சுமிம்மா கேத்தரினும் போயிட்டா 'என்று புலம்பியபடி ரோட்டில் ஓடியிருக்கிறான். அவனை  அடித்துப் போட்ட பேருந்திலும் உள்ளே மேரி மாதா படம் இருந்திருக்கிறது. நாங்கள் போன போது எல்லாம் முடிந்திருந்தது. அவன் உதடுகள் அசைவது போலவும், 'சுமிம்மா 'என்று சொல்வது போலவும் எனக்குள் ஒரு பிரமை ஓடியது. மணிகண்டன் என்பவன் வெறும் சாம்பல்தானா? என்பதை நம்ப முடியாமல் சுருளியிலிருந்து திரும்பி வந்தேன். வாசலில் கேத்தரின், அதற்குப் பிறகு இன்றுதான் பார்க்கிறேன். முகம் அதிகாலை வானம் போல் சலனமில்லாமல் இருந்தது. அழுததற்கான  எந்தத் தடயங்களும் அதில் இல்லை. எனக்குள் கோபமோ, அல்லது வேறு ஒன்றோ எட்டிப் பார்த்தது. 'சாயங்காலம் மொட்டை மாடிக்கு வந்துடு '-உள்ளே போய் விட்டாள். 

 

அதே வெள்ளை கவுன். நான் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். என்னைக் கையமர்த்தி விட்டுப் பாட  ஆரம்பித்து விட்டாள். 'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் '.சத்தியமாகச் சொல்கிறேன். உலகம் தோன்றிய அல்லது அழியப் போகிற நிமிடம் இப்படித்தான் இருக்கும்.  அந்த நிமிடத்தில் நான் அழுதேன்  என்று கூடச் சொல்ல முடியாது. முலை மறுக்கப்பட்ட சிசுவைப் போல் கேவினேன். அவள் பாட பாடத்தான் எனக்குப் புரிந்தது. இது என் கையில் திணிக்கப்பட்ட பொறுப்பு என்று. உன்னளவுக்கு பாட முடியாத நான் எப்படி இதை மணியிடம் சேர்ப்பேன்?.அநாதை சிசுவொன்றைக் கண்டெடுத்த பதட்டத்தோடு கண்ணீர் வழிந்தது.  இரண்டாவது சரணத்தின் இறுதியில் அவள் குரல் உடைந்து அழத் தொடங்கினாள். ஆம், முதன்முறையாக பாடும் போது அவள் அழுகிறாள். எல்லோரையும் இளக வைத்த ராகம் முதன்முறையாக மனம் கசிந்து நிர்வாணமாக நிற்கிறது. கிரீச்செனறு அணில் கத்துவது போல் கதற  ஆரம்பித்தாள். நான் பல்லவியைப் பாட  ஆரம்பித்தேன். யாரோ முட்டுக் கொடுத்த சக்கரம் போல் என் குரல் நகரத் தொடங்கியது. இதுவரை நானே கேட்காத  என் குரல். இளையராஜாவை அந்த மொட்டை மாடிக்கு தரதரவென்று இழுத்து வந்து நாங்கள் ரெண்டு பேருமாய் மாறி மாறி அறைய வேண்டுமென்று தோன்றியது. முகத்தை துடைத்து விட்டு எழுந்து 'தேங்க்ஸ் 'என்றாள். மீண்டும் அந்த நிச்சலனமான முகம். அதுதான் நான் அவளிடமிருந்து கடைசியாகக் கேட்ட வார்த்தை. இரவே காலி செய்து போய் விட்டதாக மறுநாள் வீட்டில் பேசிக்கொண்டார்கள்.

 

அதற்குப் பிறகு  அந்தப் பாடலை ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன் ஒவ்வொரு தடவையும் கடும் பிரயத்தனத்தோடு பாடிப் பார்க்கிறேன். அந்தக் குரலும், குழைவும் அதற்குப் பிறகு கை கூடவே இல்லை. 

 

வேறு  எதற்காக இல்லாவிட்டாலும்,  இந்தப் பாடலுக்காக கேட்கிறேன். 

எங்கே இருக்கிறாய் கேத்தரின்? 

 

(மீள் பதிவு)

source -Facebook 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.