Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸா முதல் முள்ளிவாய்க்கால் வரை... கருணாநிதியின் காலக்கண்ணாடி!

Featured Replies

மிஸா முதல் முள்ளிவாய்க்கால் வரை... கருணாநிதியின் காலக்கண்ணாடி!

 
 

கருணாநிதியுடன்  ஸ்டாலின்

நான் சென்னைக்கு மாற்றலாகியிருந்த 2015-ம் ஆண்டு. அது அவரின் 92-வது பிறந்தநாள். கோபாலபுரம் வீட்டின் முன் அதிகாலையிலேயே திரளானோர் கூடியிருக்க, மஞ்சள் நிற நைந்து போன சேலையில், கையில் கசங்கிய சுருக்கு பையோடு, ஒரு முதிய பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அவருக்கு எப்படியும் 85 வயதிருக்கும். அவர் கண்களின் தவிப்பும், எதிர்பார்ப்பும் என்னை ஏதோ செய்ய, நெருங்கி சென்று பேசினேன். ‘நான் தூத்துக்குடியில் இருந்து வாரேன். சின்ன வயசா இருக்குறப்போ இருந்தே அவர் பேச்சை கேட்டுட்டு வாரேன். என் பொழப்புக்கு பிரச்னையில்லை. ஊருல ரோட்டோர இட்லி கடை வச்சிருக்கேன். இன்னைக்கு தலைவரோடு பிறந்தநாளில்ல. அதான் ஊருல சாமிகிட்ட வேண்டிகிட்டு, பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. ஆனாலும் எங்க நம்பிக்கை. நமக்காக உழைக்கிறாரு. அவரு நல்லாருக்கனுமில்லை’ என்றபடியே அவரை காண அந்தக் கூட்ட நெரிசலில் வீட்டுக்குள் நுழைய முற்பட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரால் இவர் நேரடியாக பலன் பெற்றுள்ளாரா? பதவி பெற்றுள்ளாரா? எதுவுமே இல்லை. ஆனாலும் அவரைக் காண வேண்டும் என்று தொலைதூரத்திலிருந்து பயணிக்க செய்தது எது? முகநூலில் வாழ்த்துகளைப் பகிரும் கணிப்பொறி காலத்தில், முகம் பார்த்து வாழ்த்துச் சொல்ல, வந்த இப்படிப்பட்டவர்களின் அன்புதான் அவரின் 60 ஆண்டுகாலத் தேர்தல் அரசியல் வாழ்வின் அச்சாணியாக இருந்து, அவரின் அரசியல் சக்கரத்தைச் சுழலச் செய்கிறது.

ஆம், இன்று அரசியல் வாழ்வில் வைர விழா கொண்டாடும் கலைஞர் மு. கருணாநிதி குறித்தே நான் பேசுகிறேன். தி.மு.க எனும் மூன்றெழுத்தின் மந்திரச் சொல்-‘க.மு.க’. திராவிடர் கழகத்திலிருந்து, சாதி, சமய மறுப்பாளராக, பகுத்தறிவாளராக பயணத்தைத் தொடங்கியவர், தி.மு.க எனும் ரதத்தில் ஏறி, 1957-ல் குளித்தலையில் முதல்முறையாக வென்று சட்டமன்றத்துக்குள் நுழைகிறார். அவரின், குளித்தலை டூ திருவாரூர் என்ற 60 ஆண்டு காலப் பயணம், தமிழ்நாட்டு அரசியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகக் காட்சி தருகிறது. தமது சிறு பிராயத்திலிருந்தே பொது வாழ்வில் நுழைந்தாலும், தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்தே தவிர்க்க முடியாத சக்தியாகவும், அகில இந்திய அளவில் அரசியல் போக்குகளைத் தீர்மானிக்கும் ஆளுமையாகவும் மிளிர்ந்தார். இன்று வைரவிழாவைச் சந்திக்கும் அவரின் பயணத்தின் முதல் 30 ஆண்டின் தொடக்கம், என்பது இளம் பட்டாளத்துக்கே உரிய வீரியத்தோடு காணப்படுகிறது.கருணாநிதி

தோழர் கருணாநிதி:

ஆன்மீக பாடல்களால் நிரம்பியிருந்த தமிழ் சினிமா ஊடகத்தை, தமது வசன காவியங்களால் நிரப்பினார். அன்றிலிருந்து இன்றுவரையிலும் சினிமாவில் கால் பதிக்க விரும்புகின்றவர்களைத் தேர்ச்சி செய்ய, தயாரிப்பாளர்கள், கருணாநிதியின் பராசக்தி வசனத்தை பேச வைப்பார்கள். பிற்காலத்தில், நடிகர் ரஜினிகாந்த் கூட, ‘கருணாநிதியின் வசனத்தை ஒருமுறையாவது நானும் பேச வேண்டும்’ என கேட்டு வாங்கி ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ஒரு காட்சியில் பேசியதாகச் சொல்வார்கள். சினிமாவை ஒரு பிரசார ஆயுதமாகக் கொண்டு, அரசியல் படிக்கட்டில் வேகமாக முன்னேறினார் கருணாநிதி. தேசியத்தை காங்கிரசும், வர்க்க அரசியலை கம்யூனிஸ்ட்டுகளும் முன் வைக்க, ‘தமிழ், தமிழர் அடையாளத்துடன் வெளிப்படும் ‘திராவிடம்’ எனும் பண்பாட்டு அரசியலை முன் வைத்தது தி.மு.க. எழுத்து, தெருக்கூத்து, நாடகம், சினிமா எனும் கலை வடிவங்கள் மூலம் இண்டு, இடுக்கில்லாமல், திராவிடத்தை, தமிழ்நாடு எங்கும் கொண்டு சென்றனர். இதில் முதன்மையான பாத்திரம் வகித்தார் கருணாநிதி. அப்போது 40 க்கும் மேற்பட்ட ஏடுகள் தி.மு.க வின் பிரசார பீரங்கிகளாக முழங்கியது. முரசொலி மூலம் தமது எழுத்துகளை கொள்கை சார்ந்த குத்தீட்டியாகத் தீட்டினார். கிராமம் , கிராமமாக பயணித்தார். சின்னச் சின்னதாக கீற்றுக் கொட்டகை அமைத்து, அதை படிப்பு வட்டமாக மாற்றினார்.

அப்போதைய காங்கிரஸ், பணக்காரார்களால் நிரம்பியிருந்ததால் பெரும் பெரும் ஹோட்டல்கள், மாளிகைகள் அவர்களின் அரசியல் அரங்கமாக காட்சிப்பட, எளிய மனிதர்கள் குழுமும் தேநீர் கடை, முடி திருத்தும் நிலையம், சலவை தொழில் நிலையங்களில் தி.மு.க அரசியலை முன் வைத்தார் கருணாநிதி. இன்றைய காலம் போன்று பவர் பாய்ன்ட் பிரசாரமெல்லாம் கிடையாது. மின்சாரம் இல்லாத காலத்தில் அரசமரத்தடியிலும், வீட்டுத் திண்ணைகளிலும் அமர்ந்து அரசியல் பேசினார் கருணாநிதி. மாட்டு வண்டிகளின் மூலம் துண்டறிக்கைகளை கிராம முச்சந்திகளில் வீசிவிட்டுச் செல்வார்கள். அதை ஊரில் படித்த தி.மு.க இளைஞர், ஏனைய மக்களுக்கு விளக்குவார். 1953 ஜூலை 15-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில், 15 பேருடன் வடநாட்டுப் பெயரான டால்மியாபுரத்தை நீக்கிவிட்டு ‘கல்லக்குடி’ என்ற தமிழ் பெயரை ஒட்டியபடியே சென்றார் கருணாநிதி. ரெயில்நிலையத்துக்குள் நுழைந்து ஒட்டியவர், எதிரே வந்த ரெயிலை நிறுத்தத் தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடினார். கருணாநிதியை நெருங்கி வந்து நின்றது ரெயில். இப்படி, எதையும் துணிச்சலாக எதிர்கொள்வது, கொள்கைப்பிடிப்போடு பிரசார வலம் வருவது கருணாநிதியின் சிறப்பியல்பு. அதற்குப் பலனாக குளித்தலையில் வாய்ப்பளித்தார் அண்ணா. ஆழமான அரசியல் கோட்பாட்டை கவர்ச்சிகரமான பிரசார நேர்த்தியின் மூலம் முன் வைப்பது கருணாநிதியின் சிறப்பு. இந்தியாவா? ‘இந்தி’-யாவா? என்ற இவரின் முழக்கம், 1965 மொழிப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.  தி.மு.க ஆட்சிக்கு அதுவும் வழிகோலியது.

அண்ணாவுடன் கருணாநிதி

முதல்வர் கருணாநிதி:

1969 அண்ணா மறைவுக்குப்பிறகு முதல்வராக உயர்ந்தார் கருணாநிதி. அப்போது, அதுவரை நிலவி வந்த கை ரிக்ஷாவை ஒழித்தார். தனியார் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன், திருவள்ளுவர் ஆகியோர் பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் முயற்சியில் ஈடுபட்டார். தொழிலாளர் தினமான மே 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்தார். அந்தக் காலக்கட்டம், கருணாநிதியின் செயல்பாடுகள் திராவிடர் கழகக் கொள்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக, வெளிப்பட்டதாக அப்போதைய பத்திரிகைகள் எழுதின. தொடர்ந்து, சுதந்திர தினமன்று, கோட்டையில் தேசியக் கொடியை, மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி, மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையைப் பெற்றுத் தந்தார். ஏழை, எளிய மக்களுக்கான தொகுப்பு வீடுகள், தமிழ் வழி மாணவர்களுக்கு முன்னுரிமை என்று இடதுசாரி கண்ணோட்டத்தோடு திட்டங்களை அணுகினார்.

கருணாநிதி

கருணாநிதி சந்தித்த முதல் போர்:

காங்கிரஸ் எதிர்ப்பு காலக்கட்டத்தில் அண்ணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணாநிதி, தாம் தலைமை பொறுப்பேற்ற பின் இரண்டு முக்கிய போர்களைச் சந்தித்தார். அது, தி.மு.க-வை ரொம்பவே புரட்டிப்போட்டது. ஒன்று-‘மிசா’, மற்றொன்று எம்.ஜி.ஆர் உருவாக்கிய ‘அ.தி.மு.க’. நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்த இந்திராகாந்தி, மிசாவை ஆதரிக்காவிட்டாலும், எதிர்க்கக்கூடாது என்று தூது அனுப்பினார். ஆனால் கருணாநிதியோ, அடுத்தநாளே, ‘நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கடற்கரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இதனால் கடும் சிதைவை சந்தித்தது தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்தடுத்து ‘மிசா’ சட்டத்தால் தி.மு.க வினர் கைது செய்யப்படுகின்றனர். சிறை, பல்வேறு கொடூரங்களை நிகழ்த்த, மு.க ஸ்டாலினை காப்பாற்ற, தான் அடிவாங்கி உயிர் துறந்தார் சிட்டிபாபு. மறுபுறம், எம்.ஜி.ஆர் எமர்ஜென்சிக்கு ஆதரவான போக்கைக் கையாண்டார். தி.மு.க வின் மீது 54 ஊழல் புகார்களை சர்க்காரியா கமிசன் விசாரித்தது. புகார் அளித்த எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர், ‘ஆதாரங்கள் இல்லை கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே புகார் அளித்தோம்’ என்றனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது, இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு கொண்டு வந்த அவரின் திட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்ற பிரசாரத்தை முன்வைத்தார் கருணாநிதி. அதற்கு பலனாக 1980 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 38-ல் தி.மு.க கூட்டணி வென்றது. ‘வீழ்த்தப்படக்கூடியவரே எம்.ஜி.ஆர்’ என நிரூபித்தாலும் எம்.ஜி.ஆர் இருந்தவரை சட்டமன்றத்தில், தி.மு.க-வால், வெல்ல முடியவில்லை. எனவே, தி.மு.க தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க, தொடர்ந்து முரசொலியில் கடிதம் எழுதினார் கருணாநிதி. அந்த எழுத்துகளில் தெறித்த அனலில், சூடேறினர் உடன்பிறப்புகள். மீண்டும் கிராமங்களில் பயணித்தார். கட்சியின் உறுதித்தன்மை குலையாமல் இருக்க, இளம் பட்டாளங்களுக்கு முழு வாய்ப்புகள் வழங்கினார். அப்படி உருவானவர்களே தூத்துக்குடி பெரியசாமி, வீரபாண்டியார் போன்றோர்.

கருணாநிதி பேரணி

இரண்டாம் முப்பதாண்டு 1987-2017:

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு , 1989-ல் கருணாநிதி மீண்டும் முதல்வராக, அவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. கருணாநிதியின் 13 ஆண்டுகால எதிர்கட்சி அவதாரம், அவரை ஓர் போராளியாக அந்தக் காலகட்ட இளைஞர்களிடம் வெளிக்காட்டியது. கூடுதலாக அவர் கருத்துகளைத் தாங்கிய திரைப்பட வசனங்கள், இளம் கூட்டத்தை உற்சாகப்படுத்தியது. ‘பாலைவன ரோஜாக்கள்’-லில் பத்திரிகையாளர் சத்யராஜ் மூலம் வெளிப்பட்ட ‘கோழையின் கிரீடத்தில் வைரமாக மின்னுவதை விட, வீரனின் காலுக்கு செருப்பாக இருந்துவிடுவேன்’ என்பது போன்ற வசனங்கள் இளைஞர்களை ஆகர்சித்தன. அவரின் ‘மனோகரா, பொறுத்தது போதும் பொங்கியெழு’ என்ற வசனம் பள்ளி, கல்லூரி நாடகங்களில் தெறிக்கும். ‘காட்டில் புலி மானை வேட்டையாடும் நாட்டில் மான் புலியை வேட்டையாடும்’ என்று கருணாநிதியின் காதல் வசனங்களை தமது கவிதையாக எழுதி, காதலியிடம் கொடுத்த சக நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். அந்தக் காலகட்ட இளைஞர்கள் தமது காதலை வெல்ல எழுத்து, படைப்பாற்றலை ஓர் கருவியாகப் பயன்படுத்த, கருணாநிதி ஓர் உந்துசக்தியாக இருந்தார். ஒருபக்கம் புரட்சிகரமாகவும், மறுபக்கம் அழகியலோடும் என ‘அகநானூறு, புறநாநூறாக’ காட்சியளித்தார் கருணாநிதி.

கருணாநிதி

தமிழின தலைவர் அடையாளம்:

இந்திய அமைதிப்படை, ஈழ தமிழர்களைக் கொன்றுகுவித்ததை ஒலிபரப்பிய தொலைக்காட்சி பெட்டியை உடைத்தார் கருணாநிதி. 1989-ல், முதல்வராக இருந்தும், சென்னையில் வந்து இறங்கிய அமைதிப்படையை, கருணாநிதி வரவேற்கச் செல்லவில்லை. இவையெல்லாம் ‘தமிழினத் தலைவர்’ என்ற உயர்ந்த அடையாளத்தை அந்தக் காலகட்ட மாணவ சமூகத்தினரிடையே உருவாக்கியது. இந்நிலையில் ராஜிவ்காந்தி மரணம், மீண்டும் தி.மு.க-வைப் புரட்டிப்போட்டது. அவரின் அரசியல் பயணத்தில் எதிர்முகாமில் இப்போது ஜெயலலிதா. கும்பகோண மகாமக மரணம், சொத்துக் குவிப்பு, சொகுசு திருமணம் என்று ஜெயலலிதாவுக்கு எதிரான அனைத்தையும் மக்கள் மன்றத்தில் முன் வைத்துப் பரவலாக்கினார். அதேநேரம், எதிர்கொள்கை உடையவரைக் கால சூழலுக்கேற்ப தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது இவரின் இயல்பு. அந்தவகையில், ஜெ மீது கடும் அதிருப்தியில் இருந்த சோ மூலம் ரஜினியின் வாய்சை தமது பக்கம் திருப்பினார். ராஜாஜியின் ஆதரவோடு காங்கிரசை வீழ்த்திய அண்ணாவின் 'டேக்டிஸ்' இது. கருணாநிதி- மூப்பனார் கூட்டணி அமைந்தது.

கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

‘ஜெயலலிதா, மீண்டும் வென்றால் தமிழ்நாட்டு மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்ற ரஜினியின் வாய்ஸ், தி.மு.க கூட்டணிக்கு வாக்குகளாக மாறியது. 1996 தேர்தலில், ஜெயலலிதாவை அதிகம் அறிமுகமில்லாத சுகவனம் மூலம் வீழ்த்தினார். யானை காதில் புகுந்த எறும்பு என்றும் இதை வர்ணித்தார். 2006-ல் விவசாயக் கடன் தள்ளுபடி எனும் தேர்தல் அறிக்கை மூலம் வென்றவர், அதன்படி கடன்களைத் தள்ளுபடி செய்தார். கூட்டணிக்குள் பா.ம.க ராமதாஸ் குடைச்சல் கொடுத்தபோது, ‘எதிர்க்கட்சியாக செயல்படுங்கள். எதிரிக்கட்சியாக செயல்படவேண்டாம்’ என்றார்.  ‘மைனாரிட்டி தி.மு.க’ என ஜெயலலிதா விமர்சித்தாலும் முழுமையாக ஐந்தாண்டு ஆட்சியை நிர்வகித்தார். தேசிய அரசியலில் வி.பி சிங் மூலம் பெரும் கூட்டணி அமைத்து, பல மாற்றங்களுக்கு அடிக்கோலிட்டவர் கருணாநிதி. தமது பக்குவமான அணுகுமுறை, அனுசரித்து போகும்தன்மை மூலம் கூட்டணி கப்பலுக்கு எப்போதும் கேப்டனாக மின்னினார் கருணாநிதி.

கருணாநிதி பிரசாரம்

கருணாநிதி மீது விழுந்த கறை:

மிசாவால் மிக கொடூரமான ஒடுக்குமுறைக்கு உள்ளான தி.மு.க, அதை ஏவிய இந்திராவின் காங்கிரசிடம் கூட்டணி வைத்தது, இன்றளவும் அரசியல் சமரசமாக கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. ‘நேருவின் மகளே வா’ என்ற அவரின் சொற்றொடர்களை உடன்பிறப்புகளே ரசிக்கவில்லை. ‘விஞ்ஞானரீதியில் ஊழல் புரிந்துள்ளனர்’ என சர்க்காரியா கமிஷன் அளித்த அறிக்கை, இன்றுவரை தி.மு.க மீது வீசப்படும் ஆயுதமாகப் பயன்பட்டு, 2 ஜி வழக்கு வரை தொடர்கிறது. ‘காவிமய எதிர்ப்பு’அரசியல் கொண்ட  ‘திராவிட கொள்கை ஆட்சி’ என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கருணாநிதி, தமிழ்நாட்டில் இரண்டாவதாக பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்தார். தமிழ்நாட்டில் பி.ஜே.பி விரிவடைந்ததற்கான முதல் காரணம் ஜெயலலிதா என்றால், இரண்டாவது காரணமாக இருந்தவர் கருணாநிதி.

பிற்பாடு, ‘வாஜ்பாய் நல்லவர், அவரைப் பார்த்து ஏமாந்துவிட்டேன்’ என கருணாநிதி கூறினாலும், அது கொள்கை தடம்பிறழாகவே பார்க்கப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானார். ‘வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது’ என்று முழங்குவதும், பிற்பாடு, வடக்கோடு கூட்டணி அமைத்துக்கொண்டு அமைதியாவதுமான அணுகுமுறையை, ஆட்சியைக் காப்பாற்றத் துடிக்கும் அரசியல் சந்தர்ப்பவாதமாக இப்போதைய காலகட்டத்தின் இளைஞர்கள் பார்க்கத் தொடங்கினர். 2009-ல் முள்ளிவாய்க்கால் போர் உக்கிரமான தருணத்தில் தடுக்க எடுத்த முயற்சிகளில் சுணக்கம், பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்தது போன்றவை காங்கிரசைக் காப்பாற்றும் ஒன்றாகப் பார்க்கப்பட்டு, கருணாநிதியின் ‘தமிழின தலைவர்’ கிரீடத்தை மண்ணில் சரித்தது. போர் நிறுத்தத்துக்கான அவரின் உண்ணாவிரதமும் மக்களிடம் எடுபடவில்லை. ‘குடும்ப அரசியல்’ விமர்சனத்துக்கு உள்ளானது. என இவையெல்லாம் இன்று வரையிலும் கருணாநிதி மீது அழுந்தப்படிந்துள்ள விமர்சனக் கறைகளாகும்.

கருப்பு சட்டை கருணாநிதி

மீண்டும் ‘கறுப்புச் சட்டை’ கருணாநிதி:

பொதுவாக ‘ஆட்சியதிகாரத்தில் இருந்தால் கேப்பிடலிஸ்ட், எதிர்கட்சியாக இருந்தால் கம்யூனிஸ்ட்’ என கருணாநிதி குறித்து வேடிக்கையாகக் கூறுவார்கள். அந்தளவுக்கு நாள்தோறும் மக்கள் பிரச்னைக்களுக்காக அறிக்கை, போராட்டம் என்று தன்னைப் போராட்ட களத்தோடு பொருத்திக்கொள்வார் கருணாநிதி. ‘ தோல்விக்குப் பிறகு ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் முடங்கிவிடுவதும், தேர்தல் நெருங்கும்போது மக்களைச் சந்திப்பதும் அவர் இயல்பு. தோல்வியடைந்த அடுத்த நாளில் இருந்தே மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பது, அறிக்கை கொடுப்பதுதான் எங்கள் தலைவரின் இயல்பு’ என எப்போதுமே தி.மு.க-வினர்  கருணாநிதி பற்றி  சிலாகிப்பது வழக்கம். நவீன கால வளர்ச்சிக்கேற்ப தன்னைப் பொருத்திக்கொண்டு, ட்விட்டர், முகநூல் என்றும் இன்றைய கால அரசியலோடு தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தமது தலைமை பாத்திரத்தின் வலிமையை உணர்த்துகிறார்.  2014-ல், ஐ.நா சபையில் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புச் சட்டை தாங்கிய கருணாநிதி, தொடர்ந்து  ‘கல்வியில் காவிமயம்’ எதிர்ப்பு, ‘ஆரியத்தை விரட்டுவோம், சமஸ்கிருதத்தைத் துரத்துவோம்’ என முழுக்க முழுக்க மத்திய பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராக இயங்கத் தொடங்கினார். தமது இளம் வயதில் ‘ஆரிய எதிர்ப்பு’ என்ற கோட்பாட்டோடு அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், இன்று உடல்நிலை தளர்ந்து வீல்சேரில் பயணித்தும், தமது பேச்சு, எழுத்து, பொதுக்கூட்ட உரை என எங்கும் பி.ஜே,பி அட்டாக்குடன் கூடிய திராவிட அரசியலை முன் வைத்துத் தொடர்கிறார். தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் பயணத்தைத் தொடங்குவது என்பது மஞ்சள் துண்டை, ‘கறுப்புச் சட்டை கருணாநிதி’-யாக காட்சிப்படுத்துகிறது. அதேநேரம் ஐவர் குழுவிலேயே இடம் பெறாத தன்னை தி.மு.க-வின் முகமாக மாற்றிக்கொண்டவர், அதன் அரசியல் சூட்சமத்தை உருவாக்கியதாலோ என்னவோ, தமது ‘தலைமை நாற்காலி’-யை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை.

டிவிட்டரில்  கருணாநிதி

 

அவருக்கு எளிதில் எதுவும் வந்துவிடவில்லை. இரண்டு முறை ஆட்சி கலைப்பு, 13 ஆண்டுகால எதிர்க்கட்சி வனவாசம், கணிசமான மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ பிரிவு என ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததே அவரின் அரசியல் கிராப். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்தக் காலக்கட்டத்திலும், தமிழ்நாட்டு அரசியல் சக்கரத்தை தன்னை ஆதரித்தோ, எதிர்த்தோ மட்டுமே சுழலச் செய்யும்படி பார்த்துக்கொண்ட சாமர்த்தியசாலி. 5 முறை முதல்வராகவும், 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்ட சாதனைக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. கட்சி, ஆட்சியதிகாரத்தை இழந்தபோதும், இவர் போட்டியிட்ட தொகுதிகளில் இவரே வெற்றி வாகை சூடியுள்ளார். மக்கள் தி.மு.க- வை புறக்கணித்திருந்தாலும் கருணாநிதியை என்றும் புறக்கணித்ததில்லை என்பதையே இது காட்டுகிறது. இன்று, உடல்நிலையின் காரணமாக தமது சிந்தனைக்கு ஒய்வு கொடுத்திருந்தாலும், அவர் குறித்த சிந்தனைகள் இந்த மண்ணின் சுவாசங்களில் படர்ந்தபடியே இருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரைபடத்தில் கருணாநிதி தவிர்க்க முடியாத ஆயுள் ரேகை.

http://www.vikatan.com/news/coverstory/88159-from-misa-to-mullivaikkal-60-years-life-of-karunanidhi.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.