Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் சொந்தம்?

Featured Replies

யார் சொந்தம்?

மாசிமாதப் பனிக்குளிரின் பிடியில் சிக்கி ஊரே நடுங்கிக் கொண்டிருக்கிறது. உடம்பை உதற வைக்கின்ற, மூக்கில் நீர் சிந்த வைக்கின்ற, பற்களை ரைப் அடிக்க வைக்கின்ற அந்தக் குளிருக்குள்ளும் எங்கோ ஒரு கோடியிலிருந்து தன்னுடைய 'கடமையைச்' செய்துகொண்டிருந்த சேவலொன்று நான்கு தடவைகள் கூவி ஓய்கின்றது.

அவசரமாகப் படுக்கையை விட்டு எழுந்த தர்சன் பாயிலே ஆங்காங்கே தலைகாட்டியிருக்கின்ற சிலும்பல்கள் மேலும் பெரிதாகிவிடாதவாறு அவதானமாகச் சுருட்டி அசவிலே வைத்துவிட்டு கொல்லைப் புறத்தை நோக்கி நடக்கிறான்.

முற்றத்திலே தெருநாயொன்று தன்னுடைய உடம்பை வளைத்து கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறது.

இந்தப் பனிக்குளிருக்கு நன்றாகக் கம்பளியால் போர்த்துக் கொண்டு படுத்துக் கிடக்க தர்சனுக்கும் விருப்பந்தான். ஆனால் வயது முதிர்ந்த நோயாளியான தாயின் மருத்துவச் செலவிற்கும் வயிற்றுப்பாட்டிற்கும் பணம் வேண்டுமே. ஆக அந்த நாயைப் பார்த்து ஏக்கம் கலந்த பெருமூச்சொன்றை விட்டவனாக கொல்லைப் புறத்தை நோக்கி நடக்கிறான்.

வேப்பமரத்தின் தடியொன்றை முறித்து நன்றாகப் பற்களால் சப்பி பிரஸ்ஸாக மாற்றி பற்களைத் துலக்கியவாறே சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறான் தர்சன்.

வாலிபப் பருவத்தைக் கூடத் தாண்டாவிட்டாலும் இந்தக் குறுகிய காலத்திற்குள் சந்தித்துவிட்ட வாழ்க்கையின் மேடு பள்ளங்கள், திருப்பங்கள், சரிவுகள் போன்றவற்றால் தடுமாறித் திசை தெரியாமல் பயணஞ் செய்து கொண்டிருப்பவனுக்கு சிந்திப்பதற்கா விடயமில்லை?

அருகிலிருந்த பூவர மரத்திலிருந்து ‘கா கா’ என்று கரைந்து கொண்டிருந்த காகத்தைத் தன் கையிலிருந்த துவாயினால் துரத்திய போது பாட்டியார் அடிக்கடி சொல்லும்.

'காகங் கரைந்தால் யாராவது வீட்டுக்கு வருவினம். அல்லது யாராவது நல்ல சனத்தின்ரை நட்புக் கிடைக்கும்”

என் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றது.

தர்சனுக்கு இந்த மூடநம்பிக்கைகளிலெல்லாம் நம்பிக்கையில்லாவிட்டாலும் எங்கே அப்படியொரு நல்ல நட்புக் கிடைக்காதா என்ற நப்பாசையும் மனத்தின் ஒரு மூலையிலே துளிர்விடத்தான் செய்கிறது. மனிதத்தையே துலைத்து விட்டு போலி முகங்களுடன் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களையே பார்த்துப் பார்த்துச் சலித்து விட்டவனிடம் அப்படியொரு ஆதங்கம் ஏற்படுவது இயல்பு தானே.

முகங்காலைக் கழுவிக்கொண்டு வந்தவன் முதல் நாள் புகைக்கிடங்கில் பழுக்கப் போட்டு எடுத்து வைத்த வாழைக்குலைகளைச் சைக்கிள் கரியரில் கட்டிக் கொண்டு திருநெல்வேலிச் சந்தையை நோக்கி விரைகிறான்.

அந்தச் சைக்கிளிற்கு மட்டும் வாயிருந்தால்

'ஏனப்பா ஒரு வண்டியிலே ஏற்றவேண்டிய பாரத்தை என்மீது ஏற்றியிருக்கிறாயே? இது நியாயமா? அடுக்குமா? '

என்று அவனைக் கேள்வி மேல் கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கும்.

வாயில்லாத காரணத்தால் தமிழ் அரசியல்வாதிகள் விடுகின்ற கண்டன அறிக்கைகளைப்போல கிறீச்.. கிறீச் என்ற சத்தத்தை மட்டும் தனது எதிர்ப்பாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.

"நல்லா நேரம் பொயிட்டுது. கெதிப்பண்ண வேணும்"

என்று நினைத்தவனாய் சைக்கிளின் வேகத்தை அதிகரிக்கிறான். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? அவனுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத, தேய்ந்த நிலையிலிருந்த பின் டயர் டமார் என்ற சத்தத்துடன் தனக்குள்ளிருந்த காற்றிற்குச் சுதந்திரம் கொடுத்து விடுகிறது. இனி என்ன செய்வது? அந்த நேரத்தில் வீதியில் ஆட்டோக்களைக் காண்பதும் அரிது. வேறு வழியின்றி சைக்கிளைத் தள்ளியபடியே மிகுதி இரண்டு மைல்களைக் கடக்கத் தொடங்குகிறான்.

சற்றுத் தூரத்திலிருந்து மாமனார் மயில்வாகனம் மோட்டார் சைக்கிளிலே வந்து கொண்டிருக்கிறார்.

அவரைக் கண்டதும் ஆபத்தாந்தவனைக் கண்டது போன்ற உணர்வோ தனக்கு உதவி கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போ தர்சனுக்கு ஏற்படவில்லை. அத்தகைய எதிர்பார்ப்புக்களை எல்லாம் அவர் தவிடுபொடியாக்கி பலகாலமாகிவிட்டது.

தர்சனின் அருகில் தன்னுடைய மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைத்தவாறே

"ஏன் தம்பி, என்ன நடந்தது?"

ஆர்வமாய் விசாரிக்கிறார்.

"ரயர் வெடிச்சுப் போச்சுது. இந்த நேரத்திலை சைக்கிள் கடைகளும் திறக்காது தானே. அதுதான் தள்ளிக் கொண்டு நடக்கிறன்."

"இதென்ன ரயரைப் பாத்தால் டியூப் மாதிரிக் கிடக்குது. வெடிக்காமல் என்ன செய்யும். ரயரை மாத்தியிருக்கலாமே?"

'கீதாஉபதேசம்' செய்கிறார் மயில்வாகனம்.

குற்றம் கண்டுபிடிப்பதிலும் விமர்சிப்பதிலும் உலகத்தில் நம்மவரை வெல்வதற்கு இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும்.

"சரி சரி எனக்கு நேரம் போட்டுது. நான் வாறன்."

தன்னுடைய கடமையை முடித்துக் கொண்ட திருப்தியுடன் கிளம்பிச் செல்கிறார்.

பாரத்தைத் தள்ளிக் கொண்டு நடப்பதால் ஏற்பட்டிருந்த களைப்புடன் மயில்வாகனத்தின் வார்த்தைகளால் தோன்றிய எரிச்சலும் சேர்ந்து கொள்ள அவன் சைக்கிளை முன்னோக்கித் தள்ளிக் கொண்டிருந்தாலும் எண்ண ஓட்டமோ இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருந்தது

தர்சனின் தந்தை பரமசிவம் கொழும்பிலிருந்த பிரபலமான சரஸ்வதி அச்சகத்தின் உரிமையாளர். பெரும் பணக்காரர். புணம் மட்டுமன்றி குணமும் அவரிடம் நிறைந்திருந்தது. இல்லாதவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே. அன்னியருக்கே அள்ளிக் கொடுத்தவர் தன் சுற்றத்தை எப்படிக் கவனித்திருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புரமசிவத்தின் மனைவியின் தம்பியான மயில்வாகனம் அன்றாடப் பாட்டிற்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு வியாபார நிலையத்தை ஆரம்பித்துக் கொடுத்தது மட்டுமன்றி வியாபாரம் சம்பந்தமான அரிச்சுவடியையும் கற்றுக் கொடுத்து மெல்ல வளர்த்து விட்டார்.

விடுமுறை நாட்களிலே பரமசிவத்தின் வீட்டிலே சுற்றங்களும் நட்புகளும் கூடி ஒரே கலகலப்பாக இருக்கும். காய்த்த மரத்தைச் சுற்றிப் பறவைகளும் விலங்குகளும் கூடியிருப்பது இயல்புதானே.

வுhழ்க்கைச் சக்கரம் என்று ஒரே மாதிரி இருப்பதில்லையே. புரமசிவத்தின் இறங்குமுகமும் ஜுலைக் கலவரரூபத்திலே ஆரம்பமானது. தன் கடும் உழைப்பினால் பல்லாண்டு காலமாகக் கஸ்டப்பட்டு சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் அக்கினிக்குப் பலிகொடுத்து ‘அகதி’ என்ற பட்டத்தை மட்டும் சுமந்து கொண்டு குடும்பத்துடன் ஒரு பாடசாலையில் தஞ்சம் புகுந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்தடைகிறார்.

மயில்வாகனத்தினதும் மற்றும் பல உறவினர்களதும் கடைகள் வீடுகள் என்பன வெளிநாட்டுத் தூதராலயங்களுக்குப் பக்கத்தில் அமைந்திருந்ததால் தப்பி விடுகின்றன. அவர்களும் தங்கள் சொத்துகளை விற்றுப் பணமாக்கிக் கொண்டு வந்து அந்த முதலின் துணையுடன் புதிய வியாபார முயற்சிகளையும் ஆரம்பித்து விடுகின்றனர்.

ஆனால் அனைத்தையும் இழந்து விட்ட பரமசிவம் என்ன செய்வார்? தான் வளர்த்து விட்ட உறவுகள் உதவி செய்யும் என்று எண்ணி நாட்களைக் கடத்தியவர் அந்த நம்பிக்கை தளர்ந்து போக வெட்கத்தை விட்டு உதவி கேட்டு நேரடியாகவே அவர்களிடம் சென்று விட்டார். ஆனால் அவர்களோ ஏறி வந்த ஏணியை மறந்து பஞ்சப் பாட்டுப் பாடி அனுப்பி விடுகின்றனர்.

‘பணமுள்ள போது உறவுகள் உன்னை அறிகிறார்கள். பணமில்லாத போது உறவுகளை நீ அறிகிறாய்’

என்ற தத்துவம் பரமசிவத்திற்கு இப்பொழுது தான் விளங்குகிறது.

‘ஒரு மனிதனால் அவ்வளவு இலகுவாகத் தன் பழைய வாழ்க்கையை மறந்து விட முடியுமா? செய்நன்றி மறவாமை பற்றித் திருக்குறளும் புராணங்களும் பெரியவர்களும் சொல்வது எழுதுவது எல்லாம் ஏட்டளவில் தானா? சரி அதுதான் இருக்கட்டும். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களே? கூடப்பிறந்த தமக்கையின் குடும்பம் இப்படி அல்லாடுவது தெரிந்தும் உதவி செய்யத் தோன்றாத இவர்களெல்லாம் மனிதப் பிறவிகள் தானா?’

இப்படிப் பலப்பல கேள்விகள் அவர் மனதைத் துளைக்கிறது. இயற்கையிலேயே மென்மையான உள்ளங்கொண்டவரை தொடர்ச்சியாக விழுந்த அடிகள் இதய நோயாளியாக்கி நிரந்தரமாகவே தூங்க வைத்து விடுகிறது.

பதினாறே வயது நிரம்பிய தர்சனின் தோள்களின் மீது குடும்பப் பொறுப்பெனும் சுமை ஏறிக் குந்திக் கொள்ள வயிற்றுப் பிழைப்புக்காக மாணவன் தர்சன் ‘பழயாவாரி’ தர்சனாக மாறுகிறான்.

பாரமேற்றப்பட்ட வண்டியைத் தள்ளிக் கொண்டு அரைமைல் கூட நகர்ந்திருக்கமாட்டான். அவனுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. அவன் காலம் காலமாக இந்தத் தொழிலைச் செய்து உரமேறிய உடம்பைக் கொண்டவன் அல்லவே.

வுpயர்வையால் தோய்ந்தபடி நடந்து கொண்டிருந்தவனை வீட்டு முற்றத்தைக் கூட்டிக் கொண்டு நின்ற ஒரு வயோதிபத் தாய் கண்டு விட்டார். சைக்கிளின் பின் சில்லையும் அவனது முகத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த வியர்வையையும் கண்ட அந்தத் தாய்க்கு எல்லாமே புரிந்து விட்டது.

“ஏன் தம்பி சைக்கிளுக்குக் காத்துப் பொயிட்டுதோ?”

“ஓம் அம்மா”

“சந்தைக்கு இன்னும் ஒரு மைலுக்கு மேலை போக வேணுமே. எப்படிப் போகப் போறியள்?”

“என்ன செய்யிறது? தள்ளிக் கொண்டு தான் போக வேணும்”

“அவ்வளவு தூரம் தள்ளிக் கொண்டு பொகேலாது. இப்பவே நல்லாக் களைச்சுப் போட்டீங்கள். முதலிலை உள்ளுக்கு வந்து கொஞ்சம் ஆறுங்கோ பாப்பம்”

நடந்து வந்த களைப்புத் தீர அவனுக்கும் எங்காவது உட்கார வேண்டும் போலிருக்கிறது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய் மரமொன்றுடன் சாத்தி விட்டு உள்ளே போய்க் கதிரையில் உட்காருகிறான். சிறது நேரத்தில் தேநீருடன் வந்த அந்தத்தாய்

“நல்லாக் களைச்சுப் போட்டீங்கள், இநதாங்கோ” அன்புடன் தேநீரை நீட்டுகிறாள்.

“உங்களுக்குத்தந்து விடுறதுக்கு சைக்கிளும் இல்லை. இஞ்சை ஆர் சைக்கிள் ஓட இருக்கினம். கொஞ்சம் இருங்கோ நான் பக்கத்து வீட்டிலை கேட்டுப்பாக்கிறன்.”

சொன்னவாறே புறப்பட எழுந்தவரைத் தடுத்து

“இல்லையம்மா, நான் ஒரு ஓட்டோவைப் பிடிச்சுக் கொண்டுபோறன்.”

சொல்லிபடியே வீதியில் போய்க் கொண்டிருந்த ஆட்டோவை மறித்து குலைகளை ஏற்றிக் கொண்டு சந்தையை நோக்கிச் செல்கிறான்.

வழமைக்கு மாறாக வியாபாரம் அமோகமாகவே நடக்கிறது. பகலுக்குள்ளாக வாழைக்குலைகள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. நல்லவர்களின் பார்வை பட்டதுமே காரியங்கள் நல்லபடி நடக்கத் தொடங்கி விடுகின்றனவோ?

புணத்தை மடித்துப் பர்சினுள் வைத்தவனாக அந்தத் தாய்pன் வீட்டை சென்றடைகிறான்.

“என்ன வேளையோடை திரும்பிட்டியள்”

“ஓம் அம்மா இண்டைக்கு யாவாரம் நல்ல ச+டு. குலையெல்லாம் கெதியா முடிஞ்சுது.”

“அவசரமில்லாட்டிக் கொஞ்சம் இருங்கோவன் கதைப்பம்”

அவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அருகிலிருந்த கதிரையில அமர்ந்து கொள்கிறான்.

தன்னைப் பற்றி விசாரித்தவரிடம் திரைப்படக் கதைபோல திருப்பங்களும் சோகங்களும் படிப்பினைகளும் நிறைந்த தனனுடைய வாழ்க்கைக் கதையினை ஆதியோடந்தமாக ஒப்புவிக்கிறான். யுhவற்றையும்; சொல்லி முடித்து விட்டதால் இலேசாகி விட்ட மனத்துடன் அந்தத் தாயை நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து விடுகிறான்.

அந்தத் தாயின் கண்கள் குளமாகியிருந்தன.

இங்கே வார்த்தைகளால் வர்ணித்த சம்பவங்கள் அனைத்தையும் நேரிடையாகக் கண்டும் கேட்டும் கல்நெஞ்சர்களாய் இருந்து விட்ட உறவுகளையே பார்த்துப் பழகியவனுக்கு தன் கதையைக் கேட்டதற்கே கண்கலங்கி நிற்கின்ற ‘யாரோ’ ஒரு பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா?

தர்சனின் நிலையை நன்குணர்ந்த அவர் தன் வீட்டோடு சேர்ந்திருந்த கடையை எடுத்து நடத்தும்படி கூறி அதற்கான முதலையும் கொடுக்க முன்வருகிறார். இயல்பாகவே அந்நியரிடம் உதவி பெற்று;க கொள்ள விரும்பாத தர்சனால் அந்தத் தாயின் உதவியை மறுக்க முடியவில்லை.

காலச் சக்கரம் உருண்டோடுகிறது. நல்ல மனதுடன் கிடைத்த உதவியால் ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ தர்சனின் கடை கிடுகிடுவென்று வளர்கிறது.

அற்றகுளத்தில் அறுநீர்ப்பறவையாய்ப் பறந்திருந்த உறவுகள் மெல்லத்தலைகாட்டத் தொடங்கிருந்தன அதிலும் மூன்று பெண்பிள்ளைகளுக்குத் தகப்பனான மயி;லவாகனம் அடிக்கடி வந்து போகதட தொடங்கியிருந்ததுடன் அவரது கவனம் தர்சனின் சாதகத்தின் பாலும் திரும்பியிருந்தது.

இந்த நிலையில் தான் தர்சன் புதிதாகக் கட்டியிருந்த கடைத்தொகுதியின் திறப்பு விழாவும் வந்து சேருகிறது.

மயில்வாகனம் தானாக வலிந்து காரியங்கள ஆற்றிக் கொண்டிருக்கிறார். வேட்டியும் சேர்ட்டும் வியர்வையில் நனைந்திருந்ததைக் கவனிக்க எங்கே அவருக்கு நேரம்.

“மயில்வாகனம் அண்ணை, ஆற்றையோ கடைக்கு நீங்கள் ஏன் இந்த வயது போன நேரத்திலை ஓடியாடிக் கஸ்டப்படுறியள்?”

கடந்த கால சம்பவங்களை நன்கறிந்த வம்பளம்பி ஒருவர் மயில்வாகனத்தின் வாயைக் கிளறுகிறார்.

“என்ன ஆற்றையோ கடையோ? இவன் என்ரை மருமகன் பெடியனடா”

‘என்ரை’ என்ற வார்த்தை சற்று அழுத்தமாகவே வருகிறது.

“நல்ல நேரந் தொடங்கிட்டுது. கடையைத் திறக்கலாமே”

குருக்களின் குரலைக் கேட்டதும் சால்வையைச் சரிப்படுத்திக் கொண்டு தர்சனைக் கண்களால் துளாவுகிறார் மயில்வாகனம்.

அவனோ அந்தத் தாயின் கைகளைப் பிடித்து அழைத்து வந்து அவர் கைகளினால் கடையைத் திறப்பிக்கிறான்.

ஓட்டிற்குள் தலையை இழுத்துக் கொண்ட ஆமையாய் மயில்வாகனம்.

அருகேயிருந்த தேநீர்க் கடையிலிருந்து

“சொந்தக் காரன் யார் சொந்தக் காரன்

உறவுகளாலே வருபவனல்ல சொந்தக்காரன் - தன்

உயரைக் கொடுக்கும் நண்பன் கூடச் சொந்தக் காரன்”

என்ற பாடல் வரிகள் காற்றில் கலந்து கொண்டிருக்கிறது…..

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

மன்னிக்கவும்

Edited by Manivasahan

என்ன அங்கிள் இது சிறுகதையா? தொடர்கதையாஅ?? மிகுதி வாசிக்கும் ஆவலில்...

  • தொடங்கியவர்

சிறுகதை தான் பிள்ளை.

நேரமின்மையால் கொஞ்சம் கொஞ்சமாக ரைப் பண்ணிக் கொண்டிருக்கிறன். பொறுமையா வாசியுங்கோ!

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் வணக்கம்,

சிறுகதையைத் தொடங்கிப் போட்டு அரைகுறையா விட்டிட்டுப் போனதுக்கு முதலிலை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. சரி, முழுசா எழுதி முடிச்சிட்டன். எப்படியிருக்கெண்டும் (கதை மாதிரி இருக்கோ)மறக்காமல் சொல்லுங்கோ

அன்புடன்

மணிவாசகன்

அங்கிள் அருமையான யதார்த்தமான கதை. பாராட்டுக்கள்.

உண்மைதான் சில உறவுகள் பணம் இருந்தால்தான் பக்கத்தில நிப்பினம். இல்லாட்டி ஏன் எண்டும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டினம்.

பணமுள்ளபோது உறவுகள் உன்னை அறிகிறார்கள். இல்லாதபோது உறவுகளை நீயறிகிறாய். சூசூசூசூப்பர் தத்துவம்

நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

கதையை வாசித்ததுடன் நிறுத்திவிடாது தங்கள் கருத்துக்களையும் பதிந்த ரசிகை, ஓவியன் ஆகியோருக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.