Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்கள்!

சிறீ லங்கா நீதி விசாரணை நடைமுறை! 17 members have voted

  1. 1. நீங்கள் சிறீலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தால் உங்களை பொலிஸ் அல்லது இராணுவம் பிடித்த தினத்திலிருந்து வழக்கில் நிரபராதி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும்வரை எவ்வளவு கால இடைவெளி எடுத்துள்ளது? நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பிடித்து அடைக்கப்பட்டிருந்தால் ஆகக்கூடிய கால அளவு எடுத்த சம்பவத்தை வாக்களிப்பிற்கு தெரிவுசெய்யவும்!

    • 0 தொடக்கம் 6 மாதங்கள்
      11
    • 01 வருடம்
      0
    • 02 வருடங்கள்
      0
    • 03 வருடங்கள்
      1
    • 04 வருடங்கள்
      1
    • 05 வருடங்கள்
      0
    • 05 வருடங்களிற்கு மேல்
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

மாப்பிள்ளை உங்களை போல ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கை சிறைகளில் காரணமில்லாம சித்திரவதைபட்டு இருக்கிறார்கள் . உங்க கதையை கேட்க மனது கனக்கிறது. இந்த அனுபவம் இல்லாத ஆக்களும் இதைப்பற்றி அறிய வேண்டும் கந்தப்பு சொன்ன மாதிரி நீங்கள் பத்திரிகையில் எழுதி அனுப்புங்கோ

உங்கள் அனுபவங்களை தொடர்ந்து தாருங்கோ.

Edited by Rasikai

  • 2 weeks later...
  • Replies 103
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எல்லோரும் வெளியில் இறக்கப்பட்டு, சிறைச்சாலையின் வெளியில் பாடசாலை அஞ்சல் ஓட்டப்போட்டியில் ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குந்த வைக்கப்படுவது போல், நிலத்தில் இருக்க வைக்கப்பட்டோம். சிறைக் கதவு திறப்பதற்கு நீண்ட நேரம் சென்றது. நாம் பொறுமையாக சுமார் 20, 25 நிமிடங்கள் நிலத்தில் குந்தி காத்திருந்தோம். இறுதியாக சிறைக்கதவு திறக்கப்பட்டு நாம் உள்ளே எங்கோ ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு வைத்து எம்மிடம் இருந்த ஆபரணங்கள், மணிக்கூடு போனற விலையுயர்ந்த பொருட்கள் கழற்றி எடுக்கப்பட்டு காவாலாளிகளால் வாங்கப்பட்டு, கடதாசியிலும் அவற்றின் விபரம் பதியப்பட்டது. எம்முடன் வந்த சிங்களக் கைதிகள் ஆளாளுக்கு தமது சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோல் தம்பாட்டிற்கு கிடு,கிடுவென்று உள்ளே எங்கோ சென்றுவிட்டார்கள். போகும் போது நான் முன்பு குறிப்பிட்ட வயது போன சிங்களக் கைதி எனது முதுகில் தட்டி ஒன்றுக்கும் பயப்படவேண்டாம் என்று கொச்சைத் தமிழில் சொல்லி, சிங்கள சிறைக்காவலாளி ஒருவனிடமும் என்னைக் காட்டி ஏதோ சொல்லிவிட்டு தனது வீட்டு அறைக்கு போவது போல் போய்விட்டான். அவர்கள் சிறையினுள் வாழ்வதை விரும்பியிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், நாம் இனி நமக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற விடயம் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முளுசிக் கொண்டு நின்றோம்...

இப்போது வெள்ளை உடை அணிந்த காவலாளிகள் வந்து நாம் போக வேண்டிய இடம் "பி வார்ட்" என்று கூறி அங்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். மேலும், இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் சிறைக்கூடத்தினுள் கொண்டுவரப்பட்டதும் எமது கைவிலங்குகள், கால்விலங்குகள் கழற்றப்பட்டு சுதந்திரமாக விடப்பட்டோம். இப்போது நாம் "பி வார்ட்" இன் வாசலில் காத்திருந்தோம். பசி வயிற்றைக் கிண்டியது.

இத்தருணத்தில் இந்தப் "பி வார்ட்" ஐ பற்றி கொஞ்சம் விளக்கம் தருவது நல்லது. இது சுமார் 30 மீற்றர் நீளமும், சுமார் 10 மீற்றர் அகலமும் கொண்டது என நினைக்கின்றேன். ஓடுகளால் வேயப்பட்ட, யன்னல்கள் அற்ற, ஆனால், சுமார் முக்கால்ச்சுவர் உயரத்தில் இருந்து இருமருங்கும், நீளப்பாட்டுக்கு இரும்புக்கம்பி யன்னலை (கிளிக்கூண்டு போல்) கொண்டது. ஒன்று அல்லது இரண்டு சிறிய மலசலகூடங்களை கொண்டது. இதன் வாயிலின் பக்கத்தில் பெரிய தண்ணீர்த் தொட்டி இருக்கின்றது. கைதிகள் இந்த மண்டபத்தின் இருமருங்கும் நீளப்பாட்டுக்கு சுவர்ப்பக்கமாக ஏழு, ஏழு பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குரூப் லீடர் இருந்தான். ஒவ்வொரு குழுவுக்குமான பொறுப்பாளனாக இவன் இருந்தான். ஒவ்வொரு குரூப்பிற்கும் அவர்கள் மண்டபத்தில் படுப்பதற்கும், இருப்பதற்கும் எவ்வளவு பகுதியைப் பயன்படுத்தலாம் என்று எல்லைகள் இருந்தது. மண்டபத்தில் நீளப்பாட்டுக்கு தூண்கள் இருந்தது. எனவே, இரு தூண்களிற்கு இடைப்பட்ட தூரம் ஒரு குரூப்பிற்கு உரிய வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்தது. ஏழு பேர் கொண்ட குரூப்பிற்கு தலைவனாக இருப்பவன் தனக்கு கீழ் உள்ள கைதிகளின் மண்டபத்தில் ஏற்படும் நலன்களைக் கவனிப்பவனாக இருந்தான்.

கீழே, "பி வார்ட்" இன் சிறிய விளக்கப்படத்தை பார்க்கவும்.... என்னால் இப்போது நினைவுபடுத்தக்கூடிய விபரங்களை தருகின்றேன்...

pwardle7.jpg

தொடரும்....

Edited by மாப்பிளை

மாப்பிளை,

சிங்களம் தமிழர்களுக்கு இழைத்த இழைத்துக்கொண்டிருக்கின்ற கொடுமைகளை வெளிப்டுத்துபவர்கள் மிகக் குறைவு. உங்களுக்கு நடந்த துயரத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி, blog ஒன்றின் மூலம் ஸ்ரீலங்காவின் கோர முகத்தை உலக நாடுகளுக்குக் காண்பிக்கலாம் என்பது எனது வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

லிசானின் சொல்வது போல ஆங்கிலத்திலும் வலைப்பின்னல் அமைப்பது நல்லது. தமிழ்மணத்திலும் தமிழில் உங்கள் வலைப்பின்னலினை அமைத்து இணைத்தால் தமிழக உறவுகளும் வாசிப்பார்கள்

படிக்க படிக்க மரணத்தின் வாசல் சிறையோ என ஐயம் எழுகிறது. :angry: :angry:

தமிழர் சமுதயம் ஓங்கி எழ வேண்டும்.

அதன் வேகத்தில் அகிலமெல்லாம் அதிரவேண்டும்.

:angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று hன் இவ்வாக்கத்தை பார்த்தேன்...இங்குள்ள ஒரு பெரிய புள்ளி சொன்ன விசயங்களு;

உண்டு..ஆனால் அவர் இதுவரை அதை இங்கு சொல்லவில்லை ஏன்...,, சில விடயங்களை தங்கள் பாதுகாப்பிற்க்கு அஞ்சி வெளியிடவில்லை போல்....தொடரு;

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிறிது நேரத்தில் 'பி' வார்ட்டின் கதவு திறந்தது. நாங்கள் ஒருவர் பின் ஒருவராக வாசலில் அணிவகுத்து நிற்குமாறு கூறப்பட்டோம், பின் மெதுவாக எமது அணி உள்ளே முன்னேறத் தொடங்கியது. உள்ளே நாங்கள் வருவதை அறிந்த சிங்களக் கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சத்தங்கள், கூச்சல்கள் போட்டபடி 'பி' வார்ட்டின் உள்வாசலில் ஆரவாரத்துடன் கூடிவிட்டார்கள். நாங்கள் நடுக்கத்துடன் உள்ளே சென்றோம். நாம் அனைவரும் உள்ளே வந்ததும் 'பி' வார்ட்டின் இரும்புக் கதவு மூடப்பட்டுவிட்டது. இப்போது எமக்கு எதுவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. எம்மை எவ்வாறு கவனிக்க வேண்டும், எம்மை என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானம் எடுப்பவர்களாக கொடூரமான குற்றங்கள் செய்த சிங்களக் கைதிகளே இருந்த்தார்கள். 'பி' வார்ட்டின் வாசலில் போலிசு காவலும் இல்லை.

இப்போது எம்மை ஒவ்வொருவராக 'பி' வார்ட்டின் வார்டன் ஆன சிங்களக்கைதி ஒருவன் விசாரிக்கத்தொடங்கினான். கொழும்பு பாதாள உலகத்தை சேர்ந்த இவன் சுமார் ஏழு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டிருப்பதாக வேறு ஒரு சிங்களக் கைதி பின்பு எனக்கு சொன்னான். இந்த வார்டனிற்கு பொடிகார்ட்டாக (மெய்ப் பாதுகாப்பாளர்கள்) இவனைப் போல் குற்றம் செய்த சுமார் ஆறு சிங்களக் கைதிகள் இருந்தார்கள். இந்த வார்டனிற்கு அப்போது சுமார் 25 வயது இருக்கும். அவனது மெய்ப்பாதுகாவலர்கள் சுமார் 16 - 25 வயதிற்குட்ட இளைஞர்களாக இருந்தார்கள். வார்டன் எம்மை விசாரணை செய்த அதேவேளை அவனது மெய்ப்பாதுகாவலர்களும் மற்றைய சுமார் நூறு கைதிகளும் எம்மை தனித் தனியே சிறு குழுக்களாக சூழ்ந்து விசாரணை செய்யத் தொடங்கினார்கள்.

இங்கு, பகிடி என்னவென்றால் இந்தச் சிங்களக் கைதிகள் களவு, பாலியல் வல்லுறவு, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களை செய்த பெரிய குற்றவாளிகள், ஆனால், நாமோ ஒரு அப்பாவிகள்! முதலில் சிறீ லங்கா போலிசு, பின் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் விசாரணைகளை சந்தித்த நாம் இப்போது சிங்களக் கைதிகளின் விசாரணையையும் முகம் கொடுத்து அவர்கள் கேட்கும் கேள்விகளிற்கு பதில் கூறவேண்டி இருந்தது.

புலிகளுடன் எமக்கு ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என கேட்கப்பட்டோம். புலிகளில் நாம் இப்போது அல்லது முன்பு உறுப்பினர்களாக இருந்தோமா என கேட்கப்பட்டோம். இதைவிட, எம்மை ஒவ்வொருவராக உடற்சோதனை செய்து எமது உடலில் போராளிகள் இராணுவத்துடன் போரிடும் போது ஏற்படக்கூடிய விழுப்புண் அடையாளங்கள் இருக்கின்றனாவா என பரிசோதித்தார்கள். எமது உள்ளங்கைகளை அழுத்தி நாம் ஆயுதங்கள் பாவித்திருக்க கூடுமா எனவும் ஆராய்ந்தார்கள். எம்மை வெருட்டவும் செய்தார்கள். எம்மில் சிலருக்கு சலார், புலார் என்று விசாரணை செய்யும் போது அடிகளும் விழுந்தது. இறுதியில் சுமார் 15 நிமிடங்களின் பின் சிங்களக் கைதிகளின் விசாரணைகள் முடிவுக்குவந்தது. நாம் பல சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, நான் ஏற்கனவே கூறிய ஏழு பேர் கொண்ட குழுக்களில் சேர்க்கப்பட்டோம். இங்கு குழுக்களில் சேர்க்கப்படும் போது எந்தக் குழுவில் ஏழு பேருக்கு குறைவான உறுப்பினர்கள் இருக்கின்றார்களோ, அவ்வாறு இடவசதி உள்ள குழுக்களில் மட்டுமே நாம் சேர்க்கப்பட்டோம். ஆனால், 'பி' வார்ட் ஏற்கனவே கைதிகளின் கூட்டத்தினால் நிரம்பி வழிந்ததால் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட 18 தமிழ் கைதிகளில் இரண்டு பேருக்கு ஒரு குழுவிலும் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், இவ்விரண்டு தமிழ்க் கைதிகளும் சொல்லொணாத் துன்பங்களிற்கு ஆனார்கள். இவர்கள் மண்டபத்தில் ஆட்கள் போகும் நடைபாதையிலேயே படுத்து உறங்க வேண்டி இருந்தது. இதைவிட, இவர்களது நலங்களை கவனிக்கவென்றோ அல்லது இவர்களிற்கு ஏதாவது உதவிசெய்வதற்கென்றோ ஒருவரும் இருக்கவில்லை.

இங்கு எம்மை தமது குழுக்களில் சேர்க்கும் போது குழுத் தலைவர்கள், எம்மை ஒவ்வொருவராக தோற்றங்களை பார்த்து, விசாரணை செய்து தாம் விரும்பினால் மட்டுமே அவர்களது குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அதாவது இண்டர்வியூ மாதிரி என சொல்லலாம். இந்த குழுத் தலைவர்களை ஒன்றிணைத்து, ஆலோசனைகள் சொல்லும் வேலையை வார்டன் செய்து கொண்டிருந்தான். நானும் ஒரு குழுவில் ஒருமாதிரி சேர்த்துக் கொள்ளப்பட்டேன். இறுதியில், எமது குழுத் தலைவன் எம்மை 'பி' வார்ட்டில் தனது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கூட்டிச் சென்றான். எம்மில் நான்கு தமிழர் இருந்தோம், ஏற்கனவே எமது குழுத் தலைவனையும், வேறு இரு சிங்களக் கைதிகளையும் சேர்த்து மொத்தமாக ஏழு பேர் இந்த குழுவில் இருந்தோம். இப்போது எமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கோயில் மடத்தில் இருப்பது போல் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தோம். மண்டபத்தினுள் மிகவும் மங்கிய வெளிச்சத்தில் ஓரிரு மின்குமிழ்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

தொடரும்....

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போதே அடுத்து என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒருவாறாக நாம் இறுதியில் சிறையினுள் கொண்டுவந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டோம். பழைய கைதிகள் விடுதலைபெற்று சிறையைவிட்டு செல்லும்போது அவர்கள் தமது உடமைகளை - துவாய், சாரம், சேட், படுக்கைவிரிப்பு போன்றவற்றை தொடர்ந்து சிறைவாசம் அனுபவிப்பவர்களிற்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு போவார்கள். அவ்வாறு முன்பு பலர் பாவித்த பல சாரங்களை நிலத்துக்கு பாயாக போடப்பட்டுருந்தது. எமது குழுத் தலைவனே இவ்வாறு நாம் வீட்டில் படுக்கும்போது கட்டிலில் பெட்சீட், தலையணை போட்டு செட் பண்ணுவதுபோல் எமது ஏரியாவை அனைவரும் படுக்கும்வகையில் ஒழுங்குபடுத்தி இருந்தான். எல்லோரையும் அவன் படுக்குமாறு சொன்னான். படுக்கும்போது உருளுவதற்கோ அல்லது கையைக் காலைத் திருப்புவதற்கோ இடம் போதாது. செத்தபிணங்கள் சவப்பெட்டியினுள் கிடப்பது போல் நாம் எல்லோரும் அருகருகாக நேர்கோட்டில் படுக்க வேண்டி இருந்தது.

நாம் படுத்துள்ள இடம் மிகவும் நாற்றம் அடித்தது. கழிவுக் கால்வாய்கள் - காண் - உள்ள இடத்தில் அடிக்கும் கெட்டவாடை நாம் படுத்துள்ள இடத்தில் வீசியது. எனக்கு அங்கு படுத்திருக்கும்போது மலசலகூடத்தினுள் பாயைவிரித்து படுத்தால் எப்படி இருக்குமோ அவ்வாறான உணர்வு தோன்றியது. வேறு வழியில்லை. ஆளையாள் முறைத்துப்பார்த்துவிட்டு கூரையைப் நோக்கியபடி படுத்துவிட்டோம். நீண்ட பிரயாணம், அலைச்சல்கள், மன உலைச்சல்கள் காரணமாக மிகக் கேவலமான அந்த இடத்திலும் உடனடியாகவே கண்ணைமூடியதும் தூக்கம் வந்துவிட்டது. நாம் நன்றாக ஆழ்ந்ததூக்கத்திற்கு சென்றதும் திடீரென ஒரு பெரிய ஒலி கேட்டு திடுக்கிட்டு எழும்பினோம்.(இந்த ஒலி மணியோசையா அல்லது விசில் சத்தமா என்று இப்போது எனக்கு நினைவில்லை) எழும்பிப்பார்த்த போது அந்த நடுச்சாமத்தில் சிறைக்கூடம் முழுவதுமே விழித்து இருந்தது. எம்மை உடனடியாக எழும்பி லைன் அப் செய்யுமாறு கூறப்பட்டது. எனக்கு என்ன நடக்கின்றது, ஏன் எல்லோரும் லைன் அப் செய்ய வேண்டும் என்று விளங்கவில்லை. உடனடியாக லைனில் (வரிசை) வந்து நிற்காதவர்களிற்கு கொட்டாந்தடியால் மிகக் கடுமையாக அடிவிழுந்தது. அடியின் பயம் காரணமாக ஒரு நிமிடத்தினுள்ளேயே அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நின்றுவிட்டார்கள்.

வார்டின் கையில் ஒரு பெரிய புத்தகத்துடன் நின்றான். நான்கு, ஐந்து போலிஸ்காரரும் ஆயுதங்களுடன் உள்ளே வந்து இருந்தார்கள். இப்போது ஒவ்வொருவரினதும் மண்டையில் தட்டியபடி மிக விரைவாக சிங்களத்தில் நம்பர் சொல்லிக்கொண்டு கைதிகளின் தொகையை ஒருவன் கணக்கெடுத்தான். பின் ஒவ்வொருவராக பாடசாலையில் ஆசிரியருக்கு உள்ளேன் ஐயா என்று கூறுவது போல் இங்கு எமது பெயர் கூப்பிடப்பட்டது. பெயர் கூப்பிடப்படும்போது அந்தந்த பெயர்களிற்குரியவர்கள் தமது கைதி இலக்கத்தை உரத்துக்கூறினார்கள். புதிதாக வந்த எமது பெயர்கள் கூப்பிடப்பட்ட போது எமது கைதி இலக்கங்கள் என்ன என்று எங்களுக்கு கூறப்பட்டு, அடுத்தமுறை எமது பெயர் அழைக்கப்படும்போது நாமும் எமது கைதி இலக்கத்தை கூறக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் பொல்லினால் அடிவாங்கவேண்டி வரும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டோம். எனக்கு சிங்களம் அப்போது தெரியாது, எனக்கு எனது கைதி இலக்கத்தை சிங்களத்தில் எப்படி சொல்வது என்று ஒருவன் எனக்கு கூறினான். நானும் பயத்தில் அதை சிங்களத்தில் மனப்பாடம் செய்துவைத்தேன். தமது கைதி இலக்கங்களை மறந்த சில சிங்களவர்களிற்கு பொல்லினால் கடுமையான அடிகொடுக்கப்பட்டது. இறுதியில் "பி" வார்ட்டினுள் இருந்த கைதிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியபின் போலீசுகாரர் வெளியேறிவிட்டார்கள். கைதிகள் அனைவரும் திரும்பவும் தத்தம் இடங்களிற்கு படுக்கச் சென்றார்கள். இப்படி நடுராத்திரியில் அடிக்கடி கைதிகளை எண்ணும் நடவடிக்கை நடைபெறும் என்பதை எமது குழுத் தலைவன் எமக்கு விளங்கப்படுத்தினான். அவன் சிங்களத்தில் கதைத்தாலும் சிறிதளவு கொச்சைத்தமிழில் கதைத்தான். அவன் நீண்டகாலமாக அடிக்கடி சிறையினுள் இருப்பதால், சிறைக்கு அடிக்கடி வரும் எம்மைப் போன்றவர்களிடம் இருந்துதான் தமிழ் கற்றதாக அவன் எமக்கு சொன்னான். அவன் சிங்களத்தில் கூறியவற்றை எம்மில் உள்ள சிலர் எமக்கு தமிழில் மொழிபெயர்த்து சொன்னார்கள். இவ்வாறு இரவில் கைதிகளின் தூக்கத்தை கலைத்து கணக்கெடுப்பது கைதிகள் சிறையைவிட்டு களவாக ஓடிவிடாதிருக்க செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தாலும் இந்த நடைமுறை மிருகத்தனமான முறையில் பிரயோகிக்கப்பட்டதால் இது மிகத்திட்டமிடப்பட்ட ஒரு உளவியல் சித்திரவதையாகவே எனக்கு தெரிந்தது. இதை எப்படி விளங்கப்படுத்தலாம் என்றால் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது உங்கள் மீது ஐஸ்-குளிர்தண்ணீரை கொண்டுவந்து கொட்டினால் உங்களுக்கு எப்படி விசர் வருமோ இதைவிட பன்மடங்கு அதிகமான துன்பமாக இருந்தது. இதை நேரில் அனுபவித்தாலே இதன் கொடுமையை புரிந்துகொள்ளமுடியும்.

தொடரும்...

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ்கள சகோதரன் செய்த குற்றம் என்ன? தமிழனாக , ஈழத்தில் பிறந்ததுதான் குற்றமா?. சிட்னியில் சிலர் சிங்களவனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே, வீணான சண்டை என்றும் சொல்கிறார்கள். சில கேடு கெட்ட தமிழர்கள் சிங்களவனோடு சேர்ந்து கொண்டு தமிழனைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த யாழ்களச் சகோதரனுக்கு நடந்த கதி நாளை அவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்துக்கோ அல்லது உறவினர்களுக்கோ நிச்சயமாக நடக்க இருக்கிறது.

  • தொடங்கியவர்

இவ்வளவு நேரமும் கதையில் வந்த சம்பவங்களை ஒரு ஒழுங்குமுறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக எழுதி இருந்தேன். இனி சிறையைவிட்டு வெளியேறும்வரை நான் கூறப்போகும் விடயங்கள் அவை நடைபெற்ற நாட்களின், காலத்தின் வரிசைக்கிரமத்தில் எழுதப்படவில்லை. ஏனெனில், வரிசைக்கிரமம், ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற சம்பவங்கள் எனக்கு மறந்துவிட்டது. எனவே, இப்போது என்னால் நினைவுபடுத்தக்கூடியவற்றை வெறும் சம்பவங்களாகவும், வர்ணனையாகவும் எழுதுகின்றேன்.

சிறையினுள் காலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் வெறுந்தேத்தண்ணியும் தொட்டுக் குடிக்க சீனியும் தரப்படும். எமது குழுத் தலைவன் போய் வாங்கிவந்து எமக்கு பகிர்ந்து தருவான். அதற்கு அவன் பாவிக்கும் பாத்திரங்களை பார்ப்பதற்கு நாய் பூனைக்கு நாம் வீட்டில் சாப்பாடு போடும் கிண்ணங்கள் போல இருக்கும்.

தேத்தண்ணி தரப்படும் அதேநேரத்தில் பாணும், மாசிக் கருவாட்டு சம்பலும் தரப்படும். நான் அப்போது மாமிசம் சாப்பிடுவதில்லை. அப்படி பழக்கமும் இருக்கவில்லை. ஆனால், பசி காரணமாக அவற்றை, கிடைப்பவற்றை உண்ண வேண்டி இருந்தது. பாணின் தோற்றம் நாம் வழமையாக ஊரில் வாங்கும் கடைப் பாணில் இருந்து சற்று வித்தியாசமானது. அதாவது ஒரு இறாத்தல் பாணை சரிசமமான நான்கு துண்டுகளாகப் பிரிக்கக்கூடியவகையில் வெளித்தோற்றத்தில் அடையாளம் போடப்பட்டிருக்கும். அந்த அடையாளம் போடப்பட்ட பகுதியூடாக கையால் பிய்க்கும் போது பாண் கால் இறாத்தல் பகுதிகளாக பிய்படும். ஒருவருக்கு காலை உணவாக கால் இறாத்தல் பாண் மட்டுமே வழங்கப்படும்.

பிறகு மதிய உணவு சுமார் பகல் ஒரு மணியளவில் வழங்கப்படும். இதற்கு நாம் நாய், பூனைக்கு சாப்பாடு கொடுக்கும் தட்டுக்கள் போன்ற நாற்றம் மிக்க தட்டுக்களையும், கிண்ணங்களையும் (ஊரில் உள்ள சிரட்டை இதைவிட திறம் என்று கூறலாம்) தூக்கிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கவேண்டும். முதலில் இவ்வாறான நாற்றம் மிகுந்த தட்டுக்கள் கிடைப்பதே பெரிய விடயம். ஏதோ எமது குழுத் தலைவனின் முயற்சிகாரணமாக எமக்கு ஆளுக்கொரு தட்டு கிடைத்துவிட்டது.

மத்தியானச் சாப்பாட்டில் சோறும், வேறு ஒரு கறியும், ஒரு அவித்த முட்டையும் தரப்படும். இரவுச் சாப்பாடு தரப்படுவதில்லை. எனவே, பலர் மத்தியானச் சோற்றை மிச்சம் பிடித்து, சேமித்து வைத்து இரவில் சாப்பிடுவார்கள். ஆனால், எமது மிஞ்சிய அந்த எச்சில் சோற்றையும் சிலவேளைகளில் நாம் அசட்டையாக இருக்கும் நேரத்தில் வேறு யாராவது களவெடுத்து சாப்பிட்டுவிடுவார்கள்.

நான் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு, இரவுக்காக வைத்திருந்த மிகுதி எச்சில் சோற்றை பல தடவைகள் என்னுடன் இருந்த சிங்களக் கைதி ஒருவனுக்கு கொடுத்திருந்தேன். அவனால் பசியை தாங்க முடியாது. வாய் திறந்து எனது மிச்ச சோற்றை தருமாறு கேட்பான். பாவம் என்று கொடுத்துவிடுவேன். கொடுத்ததுதான் தாமதம் அவுக் அவுக் என்று சில நொடிகளில் அவ்வளவு சோற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவான். இந்தக்கேவலத்தை பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கும். அதாவது வீட்டில் கட்டி வைத்திருக்கும் நாயிற்கு சாப்பாடு போடும் போது அது எவ்வளவு ஆரவாரம் செய்து, அந்தரப்பட்டு விரைவாக பசியில் உணவை உண்கின்றதோ, சரியாக அந்த நிலமையே எமக்கும்!

சிறையில் வேறுபகுதிகளில் இருந்த கைதிகளிற்கு எமக்கு தரப்பட்டதை விட சிறந்த உணவு வழங்கப்பட்டது. அவற்றை அப்போது நாம் பசியில் நாய்களைப்போல், வீணீர் வடித்தபடி, வாய் பார்த்துக் கொண்டு இருந்தோம். உணவு சமைப்பது, பரிமாறுவது எல்லாம் சிறையில் இருந்த கைதிகளே. சில வேளை எம்மைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரும் உறவினர்கள் உணவுப்பண்டங்கள் தரும்போது நாம் எல்லோரும் அவற்றை பிரித்து, பகிர்ந்து உண்போம். சிறையில் தரப்படும் சோற்றினுள் தாராளமாக வஞ்சகமின்றி கற்கள் இருக்கும். இதைவிட, வரிசையில் நிற்கும்போது நெரிசல்பட்டால்(தள்ளுப்படல்) அல்லது வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் குண்டாந்தடியால் தாராளமாக அடியும் நடக்கும். ஆனால், சாப்பாட்டுக்கு சண்டைபிடித்து அடிவாங்குபவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்களாகவே இருந்தனர். சில வேளைகளில் சோறு மிஞ்சி விட்டால் பின்னேரம் நான்கு மணியளவில் எஞ்சி இருப்பவற்றை அதிட்டம் அடித்து அந்தநேரம் அந்தவிடத்தில் நிற்கும் கைதிகளிற்கு கொடுப்பார்கள்.

ஆனால், சிறைவார்டின், மற்றும் அவனது மெய்ப்பாதுகாவலர்கள் (அவனது வால்கள்) மிகவும் உயர்ந்தவகையான உணவுகளை (சாப்பாட்டு கடையில் கிடைக்கும் புரியாணி போன்ற உணவுகளை) உண்பார்கள். இவர்களிற்கு தினமும் தாராளமாக உணவுகள், குடிபானம், சிகரெட்டு, மற்றும் இதர தேவைகள் சிறையில் இருக்கும் போலிசார் மூலம் எமது "பி" வார்ட்டில் இருந்த பின்பக்க சிறிய யன்னல் ஒன்றின் மூலமாக கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் பாதாள உலக கோஸ்டியை சேர்ந்தவர்கள். எனவே அவர்களது சகல தேவைகளும் கச்சிதமான முறையில் சிறைக்கு வெளியில் இருந்து பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. மேலும், இவர்கள் படுக்கும் மெத்தைகள், தலையணைகள், போர்வைகள், உடுத்தும் உடுதுணிகள் மிகவும் விலை உயர்ந்தவை. இவை எல்லாம் இரகசியமான முறையில் இவர்களிற்காக உள்ளே கொண்டுவரப்பட்டு இவர்கள் ராஜாக்கள் போல உள்ளே இந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். வார்டின், மற்றும் அவனது வால்கள் பெரும்பாலும் அழகிய வண்ணங்களில் ரனிங் சோர்ட்சும், ஆமர்கட் பெனியனுமே போடுவார்கள்.

தொடரும்...

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் வேறுபகுதிகளில் இருந்த கைதிகளிற்கு எமக்கு தரப்பட்டதை விட சிறந்த உணவு வழங்கப்பட்டது.

அச்சிறைவாசிகளுக்கு ஏன் சிறந்த உணவுகள் வழங்கப்படுகிறது?. அவர்கள் எப்படியான குற்றங்கள் செய்தவர்கள்?.

ஏனென்றால் உங்களுடன் இருந்த சிங்களக் கைதிகளுக்கும் உங்களுக்கு வழங்கப்பட்ட உணவே கொடுக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

இல்லை.. அவர்கள் மிகவும் பாரிய குற்றங்கள் செய்திருந்தார்கள்.. சிலர் வெளிநாட்டுக் கைதிகள்.. போதைவஸ்து, மற்றும் கற்பளிப்பு குற்றங்களிற்காக உள்ளே வந்ததாக அறிந்தோம்..

அட மாப்பி இன்றைக்கு இப்ப தான் பார்த்தேன் இது அடுத்த சீரியலா

  • தொடங்கியவர்

காலை சுமார் எட்டு மணியளவில் “பி” வார்ட்டின் பெரிய இரும்புக்கதவு திறக்கப்படும். உள்ளே உள்ள கைதிகள் இரும்புக்கதவு மாலை சுமார் நான்கு முப்பது அளவில் மூடப்படும்வரை வெளியில் நிற்கமுடியும். சிறைச்சாலையின் மற்றைய பகுதிகளிற்கு சுதந்திரமாக நடந்துதிரிய முடியும் எனவும் நினைக்கின்றேன். சிறைச்சாலையினுள் ஒரு நூலகமும், இந்துக்கோயிலும் இருப்பதாகவும் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவதாகவும் ஒரு சிங்களக்கைதி சொல்லி இருந்தான். ஆனால் நான் எம்மவர்களுடன் மட்டும் சேர்ந்து திரிந்ததால் எனக்கு அங்கு போவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எம்மவர்கள் பதினெட்டுபேரும் தனியாகப் பிரிந்து ஒரு ஒதுக்குப்புறமாக மரநிழல் ஒன்றின் கீழ்ப்போய் இருந்து அங்கிருந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். ஒவ்வொருத்தரும் தங்கள் கவலைகளை மற்றவர்களிற்கு சொல்லி பரிமாறிக்கொள்வோம்.

“பி” வாட்டினுள் நடக்கும் கூத்துகளை சொல்லுகின்றேன். கேளுங்கள்… இதன் உள்ளே இருக்கும் போது பெரிய குசினியுள் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். ஏனென்றால் சிங்கிளக் கைதிகள் சிறிய, சிறிய குழுக்களாகச் சேர்ந்து குடு (போதை – கஞ்சா, அபின் போன்றவை)அடித்துக்கொண்டு இருப்பார்கள். இதன்போது மிகுந்த நாற்றமும், புகையும் ஏற்படும். இதனால் வார்ட் முழுவதும் வீட்டில் சாம்பிராணி புகை காட்டும் போது வருவது போல் ஒரே புகை மண்டலமாக இருக்கும். இவர்கள் டின் பிஸ் (அடைக்கப்பட்ட மீன் ரின்) பேணி போன்ற தோற்றமுடைய பேணிகளினுள் எதையோ ஊற்றி எரிப்பார்கள் (கற்பூரம் கொளுத்துவது போல்). பின் அதனுள் நுகர்ந்து போதையில் இருப்பார்கள். அவர்கள் எப்படி குடு அடிக்கின்றார்கள் என்பதை மிக அருகாக அவதானிக்க விரும்பவில்லை. ஆனால், இதன்போது வரும் நாற்றம் தாங்க முடியாது. சிலர் படுக்கை, சாப்பாட்டு நேரம் தவிர மிகுதி நேரம் அனைத்தும் இவ்வாறு புகைகிளப்பி குடுஅடித்துக்கொண்டே இருப்பார்கள்.

இதைவிட, உள்ளே அனைவரும் புகைக்கும் சுருட்டு போன்ற ஒரு பிரபலமான பதார்த்தம் உள்ளது. இதை புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள அனைத்துக் கைதிகளும் தங்கள் கைகளினாலேயே செய்து சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதாவது ஒரு கடதாசியை சிறிய துண்டாக கிழித்து பின் அதை சுமார் மூன்று அங்குல நீளமுள்ள குழாய் போல உருட்டி (சுருட்டி) அதனுள் புகையிலைத் தூளை போட்டு அடைத்துவிடுவார்கள். பின் படுக்கை, சாப்பாடு தவிர்ந்த மற்றைய நேரங்களில் தாம் செய்த சிகரெட் போன்ற பொருளைப் பற்றவைத்து புகைத்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கான தூள், மற்றும் குடு போன்றவை போலிசார் மூலம் வார்ட்டின் பின்புறம் இருந்த சிறிய யன்னல் ஊடாக காசுக்கு விற்கப்பட்டு வந்தது. அதாவது இதை வார்டினுள் உள்ள ஒரு முகவருக்கு முதலில் விற்கப்படும். முகவர் மற்றையவர்களிற்கு அவற்றை சில்லறையாக விற்பார். சிறையினுள் பெரும்பாலும் எல்லோரும் ஏதோ ஒருவிதமாக இவ்வாறு தமது குடு, புகைத்தல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக காசு வைத்திருந்தார்கள். இந்தக்காசு இவர்களிற்கு எம்மைப்போன்ற தமிழ்க்கைதிகள் மூலமும் கிடைத்திருந்தது. சிங்களக்கைதிகள் எப்போது பார்த்தாலும் தமிழ்க்கைதிகளை காசுகேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். சிறையினுள் எமக்கு ஏதாவது பிரச்சனைகள் வராமல் தாம் பாதுகாப்பு தருவோம் என்றும், அடுத்தமுறை திரும்பவும் பிடிபட்டு இந்தச் சிறையினுள் வந்தால் எம்மை நன்றாகக் கவனிப்போம் என்றும், சிங்கிளக்கைதிகள் எமக்கு கூறி எம்மிடம் அதற்காக காசு தருமாறு தொல்லைப்படுத்தி வந்தார்கள்.

சிறையினுள் வியாபாரமும் நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் சிங்கிளக் கைதிகளிடமிருந்து பொருட்களை, சேவைகளை பெற்றுக்கொள்ளும் நுகர்வோராக தமிழ்க்கைதிகளே இருந்தார்கள். எமக்கு பாவிப்பதற்கு தேவையான தண்ணீர், பற்பசை, போர்ப்பதற்கு தேவையான பழைய போர்வை, பழைய சாரம், பழையை துவாய், பிஸ்கட் பெட்டிகள், குளிர்பானம் போன்றவை விற்கப்பட்டது. இந்தப் பொருட்கள் எல்லாம் சிங்கிளவர்களிற்கு பின்யன்னல் வழியாக வேறு முகவர்கள் மூலம் கிடைத்திருந்தது.

வார்ட்டினுள் அடிக்கடி சிங்கிளக்கைதிகளிடையே சண்டைகள் ஏற்படும். பெரும்பாலும் ஒருவனது பொருளை இன்னொருவன் களவெடுப்பதனாலேயே இந்தப் பிரச்சனை ஆரம்பிக்கும். இறுதியில் வார்டின் வந்து இருவருக்கும் குண்டாந்தடியால் அடிபோட்டு பிரச்சனையை தீர்த்துவைப்பான். அடிவாங்கும் சிங்களவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். மிருகத்தனமான முறையில் வார்டின் அவர்கள் மீது பொல்லினால் உடம்பு முழுவதும் விளாசி அடிப்பான்.

தொடரும்….

  • தொடங்கியவர்

தமிழ் கைதிகள் எதிர்கொள்ளும் இன்னொரு துன்பம் உறவினர் வருகை. உறவினர் வந்தாலும் எமக்கு தொல்லை, வராவிட்டாலும் தொல்லை. உறவினர்கள் வந்தால், அதுபற்றி அறிந்த போலிசும், சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளிடம், உறவினர்களிடம் கேட்டு தமக்கு காசு வேண்டித் தருமாறு சொல்லி தொந்தரவு கொடுப்பார்கள். எம்மைப் பார்க்க உறவினர்கள் வந்தால் ஒரு போலிசுகாரன் அல்லது சிங்களக் கைதி மூலம் எம்மை யாரோ உறவினர் பார்க்க வந்துள்ளார்கள் எனக்கூறி அறிவித்தல் வரும். இவ்வாறு எம்மைச் சந்திக்க யாரோ வந்துள்ளார்கள் என்பதை அறிந்தவுடன் சிங்களக்கைதிகளும், போலிசும் எம்மிடம் வந்து நாயாய் வழிவார்கள். அவர்கள் வாயில் இருந்து எச்சில் ஆறாகப் பாயும். தமக்கு உறவினர்களிடம் கேட்டு காசு கட்டாயம் வாங்கித் தரும்படி கட்டாயப்படுத்துவார்கள். அப்படிச்செய்தால் எம்மை தாம் சிறையில் நன்றாகக் கவனிப்போம் என்று பசப்பு வார்த்தைகள் கூறுவார்கள். தமிழ்க் கைதிகள் பயத்தில் இவர்கள் கேட்டபடி உறவினர்களிடம் காசு வாங்கி கொடுத்துவிடுவார்கள். ஆகக்குறைந்தது ஐம்பது ரூபாயாவது வாங்கிக் கொடுப்பார்கள். காசை கொடுக்கும்போது சிறைவார்டன் மற்றும் சிறையில் கொஞ்சம் அதிகாரம் உடையவர்களிடமே கொடுப்பார்கள். இதன்மூலம் தமது பிரச்சனைகள் சிறையில் ஓரளவுக்காவது குறையும் என்ற எதிர்பார்ப்பே இதற்கான காரணம். மேலும், உறவினர்கள் எமது தேவைக்கு களவாக பணம் தருவதை சிங்களக்கைதிகள் அல்லது போலிசு கண்டுவிட்டால் அதைத் தட்டிப்பறித்து எடுத்து விடுவார்கள். சிறைக்கைதிகளிற்கு உறவினர்கள் பணம் கொடுப்பது சிறை விதிகளிற்கு முரணானது என நினைக்கின்றேன். பலதடவைகள் தமிழ்க் கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் அவர்களிற்கு பணம் கொடுத்தபோது அவற்றை கண்முன்னாலேயே சிங்களவர்கள் தமது சொந்தத்தேவைக்காக பறித்து எடுத்தார்கள். எம்முடன் இருந்த ஒரு தமிழ்க்கைதி உறவினர் ஒருவரிடம் நைசாகப் பணத்தைப் பெற்று, தனது செருப்பினுள் ஒளித்துக் கொண்டுவந்தபோதும், மோப்பம் பிடித்த ஒரு சிங்களக்கைதி அவர் காலினுள் ஒளித்துக் கொண்டுவந்த நூறு ரூபாயைப் பறித்துவிட்டான். இவ்வாறு எமது காசு பறிக்கப்பட்டாலும், அல்லது எமக்கு ஏதாவது தீங்கு இழைக்கபட்டாலும் நாம் பயத்தில் ஒருவரிடமும் முறையிடுவதில்லை. மேலும், அவ்வாறு யாரிடமாவது முறையிட முடியுமா என்றும் எமக்கு தெரிந்திருக்கவில்லை.

உறவினர்களுடன் கதைக்கும் போது ஒரு அறையினுள் கொண்டுபோய் விடப்படுவோம். இந்த அறை சிறை வாயிலிற்கு அருகில் உள்ளது. இதில் நீளமான ஒரு பெரிய மேசை உள்ளது. இந்த மேசையில் எதிர்ப்புறம் உறவினர்களும், இன்னொரு புறம் நாமும் இருப்போம். போலீஸ்காரர் எம்மை அவதானித்துக் கொண்டிருப்பார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் கதைப்பதற்கு அனுமதிக்கப்படும். உறவினர்கள் எம்மைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதிலேயே பெரும்பாலும் இந்த ஐந்து நிமிடங்களும் கழிந்துவிடும். சிலவேளைகளில், உறவினர்களுடன் கையாலாகாத வழக்கறிஞர்களும் வருவார்கள்.

உறவினர்கள் எம்மைப்பார்க்க வந்தால் எமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். யாரோ சிறைக்கு வெளியில் இருந்து எம்மை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி எடுக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்படும். சிலருக்கு அவர்களை பார்க்க ஒருவருமே வருவதில்லை. சிலருக்கு உறவினர்கள் தம்மை பார்க்கவருவது பிடிக்காது. இப்படி வெவ்வேறு விதமான மனநிலைகளில், சூழ்நிலைகளில் நாம் இருந்தோம். ஆனால், உறவினர்கள் வரும்போது கொண்டுவரும் சாப்பாடு, மற்றும் உடுதுணி போன்றவை எமக்கு பேருதவி புரிந்தது. உறவினர்கள் எம்மைக் கண்டு சென்றதும் சிறையில் உள்ள பல சிங்களக்கைதிகள், மற்றும் போலிசுகாரர் எம்மிடம் வந்து தமக்கு காசு தருமாறு கேட்டு திரும்பவும் தொந்தரவு தருவார்கள். இதனால், எம்மில் சிலர் உறவினர்களிடம் இனி தம்மைப் பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி அனுப்புவார்கள். உறவினர்கள் உணவுப் பண்டங்கள் ஏதாவது தந்தால் நாம் அவற்றை பிரித்து பங்குபோட்டு உண்போம். சிலவேளைகளில் மற்றவர்களை உறவினர்கள் பார்க்கவரும்போது, ஆனால் எம்மைப் பார்க்க ஒருவரும் வராவிட்டால், எமக்கு பெருங் கவலையாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். எம்மில் சிலர் தம்மை தினமும் யாராவது பார்க்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உணவும் உண்ணாது காத்துக்கிடப்பார்கள்.

இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கின்றது... உடனடியாக சொல்ல முடியவில்லை... மெல்ல, மெல்ல கூறுகின்றேன். உங்கள் பொறுமைக்கு நன்றி...

தொடரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட மாப்பி இன்றைக்கு இப்ப தான் பார்த்தேன் இது அடுத்த சீரியலா

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது உறவினர் ஒருவர் 1990 களில் வந்தாறுமூலை என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தார்... கைது செய்யப்படும் போது வயது 45 இருக்கும்.. இன்று வரை ஒரு தகவலும் இல்லை.... அவருடன் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிந்தோம்...

  • தொடங்கியவர்

காலையில் எமக்கு நான்கு பேருக்கென பயன்படுத்துவதற்கு ஒரு கலன் தண்ணீர் தரப்படும். அதைவைத்து அன்றைய பொழுதை நான்கு பேரும் சமாளிக்க வேண்டியதுதான். நாங்கள் ஒவ்வொருவரும் வாயை கொப்பளித்து, முகத்தை சாதுவாக தண்ணீரில் நனைக்க மாத்திரமே இந்த தண்ணீர் போதும். மற்றைய சிங்கள கைதிகளிடம் பற்பொடி கொஞ்சம் கடனாக வாங்கி பல் மினுக்குவோம். காசு கொடுத்தால் தேவையான அளவு தண்ணீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. குளிக்கவும் முடிந்தது. ஆனால், சிறையினுள் எவராவது குளித்ததை நான் காணவில்லை. சிலவேளைகளில் சிறைவார்டன், மற்றும் அவனது வால்கள் தமது அதிகாரத்தை பாவித்து வீட்டில் தாராளமாக தண்ணீரில் அள்ளி குளிப்பது போல் குளிப்பார்கள். "பி" வார்ட்டினுள் உள்ள தண்னீர் தொட்டிக்கு சிங்களக் கைதிகள் தண்ணீரை வேறு எங்கோ அள்ளிக்கொண்டுவந்து (தயிர் முட்டியை தடியில் இருபுறமும் கட்டி தோளில் வைத்து தூக்கிவருவது போல்) தண்ணீர் தொட்டியை நிரப்புவார்கள். தண்ணீர் தொட்டி நிரப்பும் வேலை தினமும் காலை நடைபெறும். ஆனால், எங்களுக்கு தண்ணீர்தான் கிடைக்கவில்லை.

இனி மலசலகூடத்தை பார்த்தால், இப்போதும் நினைக்கவே வாந்தி வருகின்றது. முதலில் மலசல கூடத்தினுள்ளேயே போகமுடியாது. அதன் வாசலிலேயே மனிதக் கழிவுகள் கழிக்கப்பட்டிருக்கும். கழிகள் மலசலகூட நிலம் எங்கெனும் பரவி அகோரமாகக் காணப்படும். நாற்றம் தாங்க முடியாது. நாமும் நிலத்தில் முழுக்காலையும் பதிக்காது குதிக்காலில் எட்டி நின்று வஞ்சகமில்லாமல் எமது பங்கிற்கு கழிவை தள்ளிவிடுவோம். எமக்கு காலிற்கு போடுவதற்கு செருப்பும் இல்லை. விலங்குகள் எம்மைவிட சுத்தமாக இருந்திருக்கும் என்று கூறலாம். மலசலகூடம் ஏன் ஒழுங்காக துப்பரவு செய்யப்படுவதில்லை என்று தெரியாது. "பி" வார்ட்டினுள் இருந்தது தவிர, நாங்கள் வார்ட்டிற்கு வெளியில் நிற்கும் நேரங்களில் கழிவகற்ற வசதியாக வேறு ஏதாவது மலசலகூடங்கள் சிறையினுள் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் மலசலம் கழிப்பதை இயலுமானளவு நாங்கள் தவிர்த்து வந்தோம்.

சிறையினுள் வார்டன் ராசா மாதிரி இருப்பான். அவனைச் சுற்றி அவனது வால்கள் நிற்பார்கள். வார்டன் உயர்தரமான மெத்தையின் மீதே ஏறி இருப்பான். படுப்பதும் அதில்தான். ஏதாவது பிரச்சனை என்றால் மற்றவர்கள் அவன் மெத்தையில் படுத்து இருக்கும் இடத்திற்கு சென்று முறையிட வேண்டும். வால்கள் அமைச்சரவை போல் செயற்படுவார்கள். குறுக்கு விசாரண நடத்துவதும் வால்கள் தான். அரசன் தீர்ப்பை மாத்திரம் கூறுவான். வார்டன் படுத்து இருக்கும் போது நான்கு பேர் அவனுக்கு உடம்பு பிடித்துக்கொண்டு இருப்பார்கள். வலது கையை மசாஜ் செய்ய ஒருவன், வலது காலை மசாஜ் செய்ய ஒருவன், இடது கையை மசாஜ் செய்ய ஒருவன், இடது காலை மசாஜ் செய்ய ஒருவன்... இவ்வாறு அரசனுக்கு மந்திரிகள் சேவகம் செய்வார்கள். அரசன் ஆணையிடும் போது மந்திரிகள் பாட்டுப்பாடி அரசனை மகிழ்விக்கவும் செய்வார்கள். வார்டின் படுக்கும் இடத்திற்கு அருகாக அவனது வால்கள் தவிர்ந்த வேறு கைதிகள் அணுக முடியாது. மற்றவர்கள் அவன் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தள்ளியே இருக்கவேண்டும் என்பது அவனது ஆணை.

தொடரும்....

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

சில நாட்களில் நாம் சிறைக்கூடத்தின் இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது அங்க அடையாளங்கள் பதியப்பட்டன. கை, கால்களில் இருக்கும் மச்சம் மற்றும், காயங்கள் காரணமாக வந்த அடையாளங்கள் பதியப்பட்டன. இதன்போது அங்கு ஒரு தமிழ் போலிஸ் அதிகாரியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். முதலில் சிங்களத்தில் பேச்சுத்தந்த அவர் இறுதியில் ஒரு தமிழரென அறிந்துகொண்டோம். குறிப்பிட்ட அதிகாரி நல்லவர் போல் தோற்றமளித்தார். எம்முடன் உரையாடத்தொடங்கி சிறிது நேரத்தின் பின் சரளமாக ஒவ்வொருவராக விசாரித்து உரையாடினார். எமது நிலமைகளைக் கேட்டு மிகவும் கவலைப்பட்டார். தமக்கு நாம் ஒரு குற்றங்களும் செய்யவில்லை என்று மிக நன்றாகத் தெரியும் என்றும் கூறினார். தாம் மேலிடத்திற்கு குற்றம் ஒன்றும் செய்யாத அப்பாவி தமிழ் இளைஞர்களை இங்கு அனுப்பவேண்டாம் என்று பலதடவைகள் கூறியும், அவர்கள் தொடர்ந்தும் அப்பாவி தமிழ் இளைஞர்களை பிடித்து இங்கு அனுப்புகின்றார்கள் எனக்குறைகூறிக் கொண்டார். இவரது பேச்சைக் கேட்ட எமக்கு சிறிதளவு ஆறுதலாக இருந்தது. சில மணிநேரங்களில் எமது அடையாளங்கள், மற்றும் வயது, பால், அப்பா, அம்மா பெயர்கள், ஊர், விலாசம், பிடிக்கப்பட்ட காரணம் என ஒரு நீண்ட பட்டியல் கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் நிரப்பப்பட்டபின் நாம் எமது வார்ட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டோம்.

எம்முடன் பிடிபட்ட பலரில் ஒருவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த துணிவுமிக்க இளைஞர். அவருக்கு அப்போது சுமார் முப்பது வயது இருக்கும். மற்றவர்கள் போல் அல்லாது சிறிது வித்தியாசமாக இருந்தார். பல தடவைகள் சிறைவார்டனிற்கு பல விசயங்களில் அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நாமும் இதைப் பெரிதாகக் கணக்கில் எடுக்கவில்லை. ஆனால், அன்று இவர் வார்டனுடன் எக்கச்சக்கமாக வாக்குவாதப்பட்டு கொழுவிவிட்டார். நிலமை மோசமாகிவிட்டது. இறுதியில் வார்டனுடன் "பி" வார்டினுள் அடிபாடு செய்வதற்கு தயாராகிவிட்டார். வார்டும் வெளிவாயில் கதவு மூடப்பட்டுவிட்டது. ஆபத்திற்கு நாம் வெளியில் ஓட முடியாது. போலிசு பாதுக்காப்பும் எமக்கு இல்லை. சிங்களக்கைதிகள் எம்மைத் தாக்கினால் எம்மை நாம் பாதுகாப்பது தவிர வேறு ஆயுதமோ அல்லது உதவியோ ஒன்றும் எம்மிடம் இல்லை. இந்நிலையில் சண்டை முற்றிவிட்டது. நாம் கை, கால் நடுங்க என்ன நடக்கப்போகின்றதோ எனப் பயந்துகொண்டிருந்தோம். ஆனால், குறிப்பிட்ட தமிழ் இளைஞர் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக்கைதிகள் சுற்றிநிற்க வார்டனுடன் பயமின்றி வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருந்தார். நாம் சற்று தள்ளி நின்று நடப்பதை அவதானித்துக் கொண்டு இருந்தோம். இறுதியில் வார்டன் தன்னுடன் நேரடிச் சண்டைக்கு வருமாறு குறிப்பிட்ட தமிழ் இளைஞருக்கு அழைப்புவிடுத்தான். அவரும் உடனே பயமின்றி சாரத்தை மடித்து கொடுக்கு கட்டியபின், நிலை எடுத்து நேரடிச் சண்டைக்கு தயாரானான். வார்டன், சண்டையின்போது அவருக்கு கை, கால்கள் உடைக்கப்படும், இரத்தம் கொட்டும், சிலவேளைகளில் அவரது உயிருக்குகூட ஆபத்து வரும் என வெருட்டினான். ஆனால், அவரோ அவன் கூறிய அதே பதிலை திருப்பி அவனுக்கு கூறி, தான் எதற்கும் தயார் எனச் சொல்லியபடி வார்டனை அடிப்பதற்க்காக நெருங்கிச் சென்றார். இதனால் சிறையில் பதற்றம் கூடிவிட்டது. அனைத்து சிங்களக்கைதிகளும் இருவரையும் சுற்றுநின்று என்ன நடக்கப்போகின்றது எனப் பார்த்துக் கொண்டிருந்தனர். பலருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஒருவருக்கும் வார்டனுடன் அடிபடுவதற்கு துணிவு வராது. வார்டனின் வால்களும் இப்போது குறிப்பிட்ட தமிழ் இளைஞனை பார்த்து பயந்தபடி தள்ளி நின்றார்கள். வார்டன் சண்டையை ஆரம்பிப்பதற்கு ஒன்று, இரண்டு, மூன்று என உரக்கக்கூறிவிட்டு இறுதியில் திடீரென தமிழ் இளைஞனின் காலில் விழுந்து அட்டாங்க நமஸ்காரம் செய்து, தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். கொச்சைத் தமிழில் கதைத்தான். அண்ணே நான் உங்களுடன் அடிபடவில்லை என்று கூறினான். இதனால் எல்லோருக்கும் பேராச்சரியம் தோன்றியது. இனி குறிப்பிட்ட தமிழ் இளைஞரை தான் ஒன்றும் கேட்கமாட்டேன் என்றும், அவருக்கு சிறையினுள் சகல சுதந்திரங்களும் வழங்கப்படும் என்றும், தாம் இருவரும் இனி நண்பர்கள் என்றும் அனைவரினதும் முன்னிலையில் வார்டன் அறிவித்தான். அடுத்தநாள் குறிப்பிட்ட தமிழ் இளைஞர் எம்முடன் கதைத்தபோது தான் ஏன் அப்படி செய்தேன் என்று சொன்னார். தான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னை தேவையில்லாமல் சிறையில் அடைத்துவைத்துள்ளார்கள் என்றும், ஆனால் தான் சிறைக்குவந்தபின் ஒன்றுக்கும் இப்போது பயப்படவில்லை என்றும் கூறினார்.

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை உங்களை போல ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கை சிறைகளில் காரணமில்லாம சித்திரவதைபட்டு இருக்கிறார்கள் . உங்க கதையை கேட்க மனது கனக்கிறது. இந்த அனுபவம் இல்லாத ஆக்களும் இதைப்பற்றி அறிய வேண்டும் கந்தப்பு சொன்ன மாதிரி நீங்கள் பத்திரிகையில் எழுதி அனுப்புங்கோ

உங்கள் அனுபவங்களை தொடர்ந்து தாருங்கோ.

உங்களின் தாயகப் பறவை இதழிலும் வெளியிடலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், உங்களுக்கு நீதிமன்றத்தில் எவ்வளவு காலம் சிறைவாசம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது?. கொழும்பில் இருக்கும் உங்களைக் கண்டு கொள்ளாமல் விட்ட தெரிந்தவர்கள் சிறைக்கு வந்து உங்களைச் சந்தித்தார்களா? .வேறு தெரிந்தவர்கள் கைதிகளைப் பார்க்கும் நேரத்தில் உங்களைப் பார்க்க வந்தார்களா?.

தமிழ்க் கைதிகளிடம் இருக்கும் பணத்தினை காவல்துறையினரும், சிங்களக் கைதிகளும் நச்சரித்து வாங்குகிறார்கள் என்று சொல்லி இருந்தீர்கள். அவர்களுக்கு கொடுத்த பின் மீதமுள்ள பணத்தினை பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா?

சில நாட்கள் குளிக்காமல் விட்டாலும் சொறி சிரங்கு போன்ற நோய்கள் வரச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் இக்கைதிகள் பல நாட்களாக குளிக்க முடியாமல் இருப்பதினால் ... நினைத்துக்கூடப் பார்க்கமுடியாமல் இருக்கிறது. மேற்கு நாடுகளில் மிருகங்கள், பறவைகளுக்கு சித்தரவாதை செய்வதைத் தடுக்கிறது. ஆனால் இங்கே தமிழர்கள் செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைப் படுகிறார்கள்.

வட்டுக்கோட்டையச் சேர்ந்த இளைஞரைப்பற்றி சொல்லியிருந்தீர்கள். வாசிக்கும் போது, தேவையில்லாமல் இவர் சண்டை போட்டு அடிவாங்கப் போகப்போகிறரோ, பிறகு காவல்துறையினராலும் தாக்கப்படப் போவார் என நினைத்து கவலைப்பட்டேன். வார்டன் காலில் விழுந்ததினை வாசிக்க வடிவேலுவின் நகைச்சுவை போல இருந்தது. பிறகு இவருக்கு சிறையில் நல்ல மரியாதை கிடைத்ததா?. தமிழ்க் கைதிகள் போராளிகளாக இருந்தால் பயத்தின் காரணமாக சிங்களக் கைதிகள் அவர்களை மரியாதையுடன் நடாத்துவதாக கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்

நீங்கள் கேட்ட சில கேள்விகளிற்கு சுருக்கமான பதில்களை தருகின்றேன். விரிவாக தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றேன்...

நீதிமன்றத்தில் எவ்வளவு காலம் சிறைவாசம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது?

நாங்கள் சந்தேகத்தின் பேரில் ரிமாண்டில் வைக்கப்பட்டு இருந்தோம்.

கொழும்பில் இருக்கும் உங்களைக் கண்டு கொள்ளாமல் விட்ட தெரிந்தவர்கள் சிறைக்கு வந்து உங்களைச் சந்தித்தார்களா?

ஒருவரும் வரவில்லை. அப்போது வெறும் முதலைக்கண்ணீர் வடித்தார்கள். ஆனால் நான் இவர்களை இப்போது மன்னித்துவிட்டேன். இவர்களில் பலர் வெளிநாடு வரும்போது Airport இல் போய் இவர்களை Pick Up செய்வது தொடக்கம் காரில் நாட்டைச் சுற்றிக்காட்டுவது வரை பல உதவிகளைச் செய்து வருகின்றேன்.

வேறு தெரிந்தவர்கள் கைதிகளைப் பார்க்கும் நேரத்தில் உங்களைப் பார்க்க வந்தார்களா?

குறிப்பிட்ட ஒரு கைதியை மட்டுமே சிறைக்கு வரும் ஒரு விருந்தினர் பார்க்க முடியும்.

தமிழ்க் கைதிகளிடம் இருக்கும் பணத்தினை காவல்துறையினரும், சிங்களக் கைதிகளும் நச்சரித்து வாங்குகிறார்கள் என்று சொல்லி இருந்தீர்கள். அவர்களுக்கு கொடுத்த பின் மீதமுள்ள பணத்தினை பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா?

இல்லை. எமது புத்தியை, சமயோசிதத்தை பாவித்தால் ஒழிய காசை கையில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது.

சில நாட்கள் குளிக்காமல் விட்டாலும் சொறி சிரங்கு போன்ற நோய்கள் வரச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் இக்கைதிகள் பல நாட்களாக குளிக்க முடியாமல் இருப்பதினால் ... நினைத்துக்கூடப் பார்க்கமுடியாமல் இருக்கிறது. மேற்கு நாடுகளில் மிருகங்கள், பறவைகளுக்கு சித்தரவாதை செய்வதைத் தடுக்கிறது. ஆனால் இங்கே தமிழர்கள் செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைப் படுகிறார்கள்.

நான் சிறையில் இருந்தபோது எனது முகுகில் தோன்றிய கறுப்பு நிறமான பருக்கள் இன்றும் உள்ளது. ஆனால், இப்போது நன்றாகக் குறைந்துவிட்டது. முன்பு முதுகு பார்ப்பதற்கு படுகேவலமாக இருந்தது.

வட்டுக்கோட்டையச் சேர்ந்த இளைஞரைப்பற்றி சொல்லியிருந்தீர்கள். வாசிக்கும் போது, தேவையில்லாமல் இவர் சண்டை போட்டு அடிவாங்கப் போகப்போகிறரோ, பிறகு காவல்துறையினராலும் தாக்கப்படப் போவார் என நினைத்து கவலைப்பட்டேன். வார்டன் காலில் விழுந்ததினை வாசிக்க வடிவேலுவின் நகைச்சுவை போல இருந்தது. பிறகு இவருக்கு சிறையில் நல்ல மரியாதை கிடைத்ததா?. தமிழ்க் கைதிகள் போராளிகளாக இருந்தால் பயத்தின் காரணமாக சிங்களக் கைதிகள் அவர்களை மரியாதையுடன் நடாத்துவதாக கேள்விப்பட்டேன்.

உண்மையில் அவர் சிலவேளைகளில் கராட்டி போன்றவை பழகிய, Professional ஆகஅடிபாடு செய்வதில் திறமைசாலியாக இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் வரவில்லை. அப்போது வெறும் முதலைக்கண்ணீர் வடித்தார்கள். ஆனால் நான் இவர்களை இப்போது மன்னித்துவிட்டேன். இவர்களில் பலர் வெளிநாடு வரும்போது Airport இல் போய் இவர்களை Pick Up செய்வது தொடக்கம் காரில் நாட்டைச் சுற்றிக்காட்டுவது வரை பல உதவிகளைச் செய்து வருகின்றேன்.

எனக்கு ஒரு திருக்குறள் யாபகத்தில் வருகிறது.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

  • 1 month later...
  • தொடங்கியவர்

கிழமை நாட்களில் (வேலை நாட்களில்) தினமும் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் எமது வார்ட்டினுள் நுழையும் பொலிசார் அன்றைய தினம் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பெயர்ப்பட்டியலை வாசிப்பார்கள். பிணைமூலம் விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்ப்பட்டியலும் இந்த நேரத்தில் வாசிக்கப்படும். இதனால், நாங்கள் கிழமை நாட்களில் தினமும் எமது பெயர்கள் வாசிக்கப்படுகின்றதா என்பதை அறிய அதிகாலையில் ஆவலுடன் காத்திருப்போம்.

பெயர்ப் பட்டியலில் தமது பெயர் வந்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள். அவர்களிற்கு வார்ட்டினுள் உள்ள நீர்த்தொட்டியில் முகம் கழுவுவதற்கு சிறப்பு தண்ணீர் சலுகை உண்டு. ஏனெனில், வார்டனின் முன் அனுமதியின்றி எல்லாரும் தண்ணீர் தொட்டியில் போய் தண்ணீர் எடுக்கமுடியாது. முகம் கழுவியதும் தம்மிடம் உள்ளதில் ஓரளவு அழகான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். சிலர் மற்றவர்களிடம் ஆடைகளை இரவல் வாங்கி அணிவார்கள். சிறையினுள் காசுப் புழக்கம் உடையவர்கள் (பாதாளக் கோஸ்டி) முகச்சவரம் எல்லாம் எடுத்து, அழகிய ஆடைகளை அணிந்து கொள்வார்கள். சில வேளைகளில் பெரிய உத்தியோகத்தர்கள் மாதிரி டை கூட கட்டிக்கொள்வார்கள்.

சுமார் ஆறு மணியளவில் இவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். மற்றவர்கள் இவர்களை ஆ வென்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள். எமக்கு இவர்கள் போல் நாம் எப்போது வெளியில் கூட்டிச் செல்லபடுவோம் என்று மனதில் ஏக்கமாக இருக்கும். பிணையில் செல்பவர்கள் மற்றைய கைதிகளை கட்டித் தழுவி பிரியாவிடை சொல்லிச் செல்வார்கள். சிலர் தமது வீட்டு முகவரிகளை கொடுத்து வெளியில் செல்லும் கைதிகளிடம் உதவிகள் கேட்பார்கள்.

எம்முடன் இருந்த சில தமிழ்க்கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருந்தார்கள். இவர்கள் பிணைமூலம் வெளியில் வரமுடியாமைக்கான காரணம், இவர்களிற்காக வெளியில் இருந்து செயற்படக்கூடிய ஒரு நபர் இல்லாமை. அதாவது ஒருவரை பிணையில் எடுப்பது என்றால் ஒரு வழக்கறிஞர் வேண்டும். அவருக்கு அப்போது சுமார் 5000 ரூபாய்கள் காசு கொடுக்க வேண்டும். மேலும் தொடர்பு முகவரிகள், மற்றும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் என்று யாராவது இருக்கவேண்டும். இவை இல்லாத நிலையில் ஒருவர் நீதிமன்றத்தினால் வழக்கில் குற்றவாளி இல்லை என்று அறிவிக்கப்படும்வரை சிறையைவிட்டு வெளியில் வரமுடியாது.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், ஒரு தமிழர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டால் அவர் நிரபராதி என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத நிலையில் அல்லது குற்றச்சாட்டுக்கள் பொலிசாரினால் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில், நீதி மன்றத்தினால் விடுவிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது ஆறு மாதங்கள் தொடக்கம் முன்று வருடங்கள் வரையாகும். சிலருக்கு இந்த கால எல்லை 5, 7 வருடங்களாகக் கூட இருக்கும். இந்தக் காரணத்தால் தமிழரைப் பொருத்தவரை பிணை - Bail என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

எனினும், ஏழ்மையில் உள்ள மற்றும் உறவினர்கள், அறிந்தவர்களுடன் வெளித் தொடர்புகள் அற்ற தமிழ் கைதிகள் பிணை மூலம் வெளியில் வரமுடியாமல் இருப்பதால் அவர்கள் பல வருடங்களாக சிறையினுள் இருந்து தவிக்க வேண்டி இருக்கின்றது. அவர்களிற்காக பரிந்து பேசுவதற்கோ அல்லது அவர்களிற்காக காசு கொடுத்து அவர்களை வெளியில் எடுப்பதற்கோ ஒருவரும் இல்லை. இந்த இக்கட்டான நிலமையில் உள்ள ஒரு தமிழ்க்கைதி எங்கள் "பி வார்ட்டில்" இருந்தார். அவரைப் பார்க்க கவலையாக இருந்தது. எம்மால் அவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் சிறைவாழ்க்கை பழகிவிட்டதால், மிருகங்கள் போல் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் மெளனமாக எதுவித எதிர்ப்பையும் காட்டாது தனது வாழ்க்கையை கழித்து வந்தார்.

தொடரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.