Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பல்கலை’ஞர் கருணாநிதி

Featured Replies

'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர்

 
 

karuniews1_16299.jpg

1. பத்திரிகையாளர்

பள்ளி மாணவராக இருந்தபோதே பத்திரிகையாளர் அவதாரம் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சொல்லப்போனால், அதுதான் அவருடைய நீண்டநெடிய அடையாளமும்கூட.  15 வயதில் `முரசொலி' இதழைத் தொடங்கினார். அப்படிப் பார்த்தால், சுமார் 80 ஆண்டுப் பயணம் அவருடைய பத்திரிகை ஆசிரியர் பணி. பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவர், 60 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர் என ஏற்பதையெல்லாம்  சாதனைகளாக நிகழ்த்திக்காட்டியவர். அவருடைய பத்திரிகை ஆசிரியர் பயணம், நீண்டநெடிய தூரங்களைக் கடந்தது. கருணாநிதி - தயாளு அம்மாள் திருமணப் பத்திரிகையில், `மு.கருணாநிதி முரசொலி ஆசிரியர்' என்றே பதித்திருந்தார். முத்தாரம், வண்ணத்திரை, குங்குமம் இதழ்களில் பணிபுரிந்த காலங்களில், அவரை தினமும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என அரசியலில் அவர் பொறுப்புகள் மாறும். ஆனால், 'முரசொலியி'ல் அவர் பத்திரிகை ஆசிரியராக, தினமும் அலுவலகத்துக்கு வந்து செல்வது மட்டும் மாறவே இல்லை.

கருணாநிதி


கடிதம் எழுதுவார். வரைந்து தரும் கார்ட்டூனில் திருத்தம் சொல்வார். முந்தைய நாள் வந்த எழுத்துப் பிழைகளுக்காகப் பிழைதிருத்துநர்களை அழைத்துக் கண்டிப்பார்.  முதுமை காரணமாக, கண்டிப்பது என்பது ஒருகட்டத்தில் அவரால் முடியவில்லை. கையில் ஒரு ஸ்கேல் வைத்திருப்பார். பிழைதிருத்தத்தில் பிழை செய்தவர், கையை நீட்டவேண்டும். செல்லமாக ஓர் அடி கொடுப்பார். இது சில நாள்கள் நடந்தது. அதன் பிறகு, அவர் எழுதிக்கொண்டிருக்கும் பேனாவைத் தவறு செய்தவர்களின் சட்டையை நோக்கி உதறுவார். அதுதான் தண்டனை. பிழைசெய்தவர்களோ அதைப் பெருமையாக வந்து மற்றவர்களிடம் காட்டுவார்கள். மோதிரக் கையால் குட்டு வாங்கியதுபோல.

ஒரு கட்சி ஏடு... அதற்கு அவர் செலுத்தும் கவனம் ஆச்சர்யமானதுதான். சில நேரங்களில் அவசரத்துக்கு அவரே கார்ட்டூன் வரைந்த காலங்களும் உண்டு. கார்ட்டூன் நன்றாக இல்லை என அவருடைய நண்பர்கள் சுட்டிக்காட்ட, `இனி என் வாழ்வில் ஒருபோதும் கார்ட்டூன் வரைய மாட்டேன்' என்று அறிவித்த 'வரலாறும்' உண்டு.

மாற்றுக்கட்சிக்காரர்களின் கருத்துகளுக்கு மறுப்பு சொல்வதற்காகவும் அறிக்கை வெளியிடுவதற்காகவும் இதற்கு முன் வந்த அரசு ஆணைகள், தலைவர்கள் சொன்ன கருத்துகள் போன்றவற்றை அந்த அறிக்கை வந்த காலகட்டத்தைச் சொல்லி தேடி எடுக்கச் சொல்வார். பெரும்பாலும் அந்தச் செய்தி வெளியான நாளையே நினைவு வைத்துச் சொல்வார். நான் பணியாற்றிய காலகட்டத்தில் குணசேகரன் என்கிற நூலகர் அங்கே இருந்தார். 'எப்படித்தான் தலைவர் நினைவுவைத்திருக்கிறாரோ?' என அவர் பிரமிப்பார். சில நேரங்களில் அந்தச் செய்தி வெளியான மாதத்தைக் குறிப்பிடுவார். எப்படி இருப்பினும் அவர்  தமிழக அரசியலின் ஒரு கூகிள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சில சமயங்களில் முரசொலி எட்டுப் பக்க ஏடாக இருக்கும். சில நாள்களிலோ ஆறு பக்க ஏடு. `உடன்பிறப்பே' எனத் தொடங்கும் அவருடைய கடிதத்துக்காக அந்த நாளில் அவருக்கு மூன்றாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. அது முழுத் தகுதி வாய்ந்த சன்மானம்தான். அவர் கடிதம் எழுதும் நாளில் உடன்பிறப்புகள் நாளிதழ் வாங்குவது அதிகமாகவே இருக்கும். கடிதம் இல்லாத நாளில்  முதல் பக்கத்தில் அவருடைய பேச்சு இடம்பெறும். சமயங்களில் உடன்பிறப்புக்கான கடிதம், கருணாநிதியின் பேச்சு இரண்டும்கூட இடம்பெறும். அப்போதெல்லாம் 'முரசொலி' வாங்கும்  உடன்பிறப்புகளின் உற்சாகம் இரட்டிப்பாகிவிடும்.

 

கருணாநிதி

அவர் எழுதித்தரும் கடிதமோ, கேள்வி-பதிலோ கம்போஸிங் பணிக்காக வரும். அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து. ஒவ்வோர் எழுத்தையும் வரைகிறாரோ என ஆச்சர்யமாக இருக்கும். நூறு பக்கங்கள் எழுதினாலும் அதே எழுத்துதான். கிறுக்கித்தரும் வழக்கம் இல்லை. சட்டசபைக்குச் செல்லவேண்டியதோ, கவியரங்கத்துக்குச் செல்லவேண்டியதோ, மாநாடுகளை ஒருங்கிணைக்கவேண்டியதோ, வழக்குகளுக்காக நீதிமன்றம் செல்லவேண்டியதோ, திரைக்கதை எழுதவேண்டியதோ அவருக்கு நெருக்கடியாக இருக்கும். ஆனாலும் அவர் உடன்பிறப்புகளுக்காக கரிகாலன் பதில்கள் வழங்குவதையோ, கடிதம் எழுதுவதையோ நிறுத்தியதில்லை.
தன்னை `பத்திரிகையாளர்' என முழுமையாக நம்புகிற ஒருவரால்தான் அப்படி ஓய்வில்லாமல் எழுத முடியும்.

http://www.vikatan.com/news/tamilnadu/90770-kalaignar-karunanidhi---mini-series.html

  • தொடங்கியவர்

’கலைஞர்’ எனப் பெயர் சூட்டியது நாடகக் கொட்டாய் எலெக்ட்ரீஷியனா? - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 2

 

கருணாநிதி

 

2. நாடகக் கலைஞர்

குங்குமம் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம். வயதான ஒரு மனிதர், காவலாளியிடம் `கலைஞரைப் பார்க்க வேண்டும்' என மன்றாடிக்கொண்டிருந்தார். காவலாளிக்கு அவரை எப்படி டீல் செய்வது எனத் தெரியவில்லை. அது கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரம் என்பதால், கெடுபிடி அதிகம் இருந்தது. இதுபோன்ற நேரங்களில் கொஞ்சம் காதுகொடுத்து கேட்பவன் என்ற ரீதியில் அவரை என்னுடைய அறைக்கு அனுப்பிவைத்தார் காவலாளி.

அவர் கலைஞரை `அது' என்றே அழைத்தார். அப்போதே அவரை ஆபத்தானவராக நினைக்கும் எண்ணம் போய்விட்டது.
அவர் பேசுவதை ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கருணாநிதி

''என் பேர் பாஸ்கருங்க. ராதா அண்ணன்கிட்ட  எலெக்ட்ரீஷியனா வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். அப்பல்லாம் திருச்சியில் அதிகமா நாடகம் போடுவாங்க. ஒரு பக்கம் அண்ணாவின் நாடகம் நடக்கும். இன்னொரு பக்கம் கலைஞரின் நாடகம் நடக்கும். அண்ணாவின் நாடகம் போடுறவங்க, அறிஞர் அண்ணாவின் `நீதிதேவன் மயக்கம்'னு விளம்பரப்படுத்துவாங்க. ராதா அண்ணன், கலைஞரின் நாடகத்தைப் போடுவாங்க. மு.கருணாநிதியின் 'தூக்குமேடை'னு மொட்டையா போட்டுவுட்டுவாங்க. ராதா அண்ணன்கிட்ட போய் `அண்ணாவுக்கு `அறிஞர் அண்ணா'னு போடுற மாதிரி, கருணாநிதிக்கு `கலைஞர் கருணாநிதி'னு போட்டா நல்லாருக்கும்ணே'ன்னு சொன்னேன். ராதா அண்ணன் சிரிச்சுக்கிட்டே `சரிடா'ன்னார். அன்றைக்கு நடந்த நாடகத்துக்கு போர்டு வைக்கும்போது, நான்தான் என் கையால 'கலைஞரின் தூக்குமேடை'ன்னு எழுதிப் போட்டேன். ராதா அண்ணனும் `கலைஞர் கருணாநிதி'ன்னு மேடையில அறிவிச்சார்'' என்று பேசிக்கொண்டே போனார். ராதா அண்ணன் எதற்கெல்லாம் கோபப்படுவார்; எப்படி எல்லாம் சிரமப்பட்டு நாடகம் நடத்தினார் என்றெல்லாம் அவருடைய பேச்சு இருந்தது.

`உலகத் தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயராக மாறிப்போயிருக்கும் `கலைஞர்' என்ற பெயரைச் சூட்டியவர், இந்த பாஸ்கர் என்ற நாடகக் கொட்டாய் எலெக்ட்ரீஷியனா?' அது எனக்கு பிரமிப்பாக இருந்தது. கலைஞரின் உதவியாளர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, `கலைஞரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?' எனக் கேட்டேன். அவர் போய் கலைஞரிடம் சொல்லத் தயங்கினார். சிறிது நேரத்தில் கலைஞர் புறப்பட்டுவிட்டார். பாஸ்கர், 'கலைஞர் என்னை அடையாளம் கண்டுகொண்டால், காரை நிறுத்திப் பேசுவார்' எனச் சொன்னார். கருணாநிதியின் பார்வையில் அந்த பாஸ்கர் படுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட்டம் கும்பிடு போட்டுக்கொண்டிருந்தது. கலைஞரின் கார் கேட்டைத் தாண்டி போனதும் அந்த பாஸ்கர் கேட்டார், ''அது போறது சொந்த காரா... கவர்ன்மென்ட் காரா?''

''சொந்த கார்தான்'' என்றேன்.

''சொந்தமாவே வாங்கிடுச்சா?'' என்றார் பெருமையாக.

கருணாநிதி

கருணாநிதி குறித்து அவர் மனதிலிருந்த பிம்பம் எனக்குப் புரிந்தது. மேடைப் பேச்சு, நாடகம் என்றிருந்த அவருடைய இளமைக்காலப் போராட்டத்தை நேரில் பார்த்த சாட்சியாக அவர் தெரிந்தார். கருணாநிதி எழுதிய பல நாடகங்களில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். பக்கம் பக்கமாக அடுக்குமொழி வசனங்கள் அணிவகுக்கும். திராவிடர் கழகக் கொள்கைகளில் வாழைப்பழத்தில் ஊசி செருகினாற்போல் இருக்கும். 'துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தை... அரசனை மட்டும் அல்ல; ஆண்டவனையும் எதிர்க்கத் துணிந்துவிட்டார்கள் மக்கள்' என்றெல்லாம் வசனம் அனல் பறக்கும்.

அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் பற்றிய விமர்சனம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கைக்கு எதிர்ப்பு, பெண் சுதந்திரம் எல்லாவற்றையும் வரிசைப்படுத்திவிட்டு, அதற்கு நடுவே ஒரு கதையையும் சொல்லும் சாதுர்யம் அது. சாக்ரடீஸ் நாடகம், சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சுவை எல்லாம் இழையோடும்.

 

வெள்ளிக்கிழமை, தூக்குமேடை, சிலப்பதிகாரம், உதயசூரியன், மணிமகுடம், நச்சுக்கோப்பை போன்றவை கருணாநிதி எழுதிய நாடகங்கள். இவற்றில் சில, திரைப்படங்களாகவும் வெளிவந்தன. தி.மு.க-வின் பிரசாரம் எங்கெல்லாம் பலிக்குமோ அங்கெல்லாம் கருணாநிதியின் அஸ்திரங்கள் செயல்பட்டன. மேடைப்பேச்சு, சினிமா, இலக்கியம்போல மேடை நாடகத்திலும் அவருடைய பங்களிப்பு செறிவாகவே இருந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/90910-kalaignar-karunanidhi-mini-series-part-2.html

  • தொடங்கியவர்
 

தீப்பொறி தெறிக்க வசனங்களில் புது ரத்தம் பாய்ச்சிய கருணாநிதி! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 3

 
 

கருணாநிதி

 

தமிழ் சினிமாவுக்குப் புதுத் தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை, கலைஞருக்கு உண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என மணிப்பிரவாளம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!’ என்றது கலைஞரின் தமிழ். ‘நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி  65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது.

கருணாநிதி

அந்த நீதிமன்றக் காட்சியில், சிவாஜி ஆவேசமாகப் பேசும்போது ஒரு வழக்குரைஞர் குறுக்குக் கேள்வி கேட்க எழுவார். சிவாஜியோ அவர் பேசுவதற்கு இடம் தராமல்,  ‘‘உனக்கேன் அவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?’’ என்பார். `என்ன இப்படி ஒரு வழக்குரைஞரைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே... கோர்ட்டில் அப்படிக் கேட்க முடியுமா,  அது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாதா?' என்றெல்லாம் பல எண்ணங்கள் ஒரு விநாடி நமக்குள் ஓடும். ஆனால், சிவாஜி அந்த வாக்கியத்தை இப்படி முடிப்பார், ‘‘என்று கேட்பீர்கள். என் சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல!’’ என அந்த வசனத்தின் ஒவ்வொரு வரியும் தீப்பொறியாகத் தெறிக்கும். ஆகாரத்துக்காக அழுக்கை உண்பது என்ன மாதிரியான சுயநலம்? ஆடம்பரமான ஒன்றை அனுபவித்தாலும் அதனால் பொதுமக்களுக்கு நன்மையே கிடைத்தது எனச் சொல்லாமல், எவ்வளவு ஜாக்கிரதையாக வார்த்தையைப் பிரயோகித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஒருமுறை நடிகர் கமல்ஹாசனைப் பேட்டி கண்டபோது, ஒரு தகவலைச் சொன்னார். ‘‘மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில், கலைஞர் வசனம் எழுதிய காகிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனம் மட்டும் எழுதவில்லை; வசனப் பக்கங்களின் ஓரத்தில் அந்தக் காட்சிக்கு எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்பதையும் எழுதியிருந்தார். அப்போதுதான் அவருக்குள் ஒளிந்திருக்கும் இயக்குநர் எனக்குத் தெரிந்தார்’’ என்றார் நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன். தான் செய்யும் பணிகளில் அதிகபட்ச கவனம் அவருக்கு இருந்தது என்பதற்குச் சான்று இது.

கருணாநிதி

கருணாநிதி போகிற போக்கில் சில திருத்தங்களைச் செய்ததைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள்.

பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...

‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது,

நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’

``தெய்வம் எங்கே சென்றுவிட்டது எனக் கடவுளையே கேள்வி கேட்கும் பாடலை நான் பாட மாட்டேன்'' எனச் சொல்லிவிட்டார். விஷயம் கலைஞரிடம் வந்தது. ஒரு விநாடி யோசித்தார். ‘‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’’ என மாற்றினார். `தெய்வம் வந்துவிட்டது' எனச் சொன்னதில் சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி. கண்ணகியை `தெய்வம்' எனச் சொல்லிவிட்டதில் கலைஞருக்கும் மகிழ்ச்சி. இதுதான் சாதுர்யம்.

‘எங்கள் தங்கம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதினார். பாடலின் முதல் வரி... ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என எழுதியிருந்தார்.

கலைஞர் முதல் வரியைப் பார்த்தார். ``அடுத்த வரி?'' என்றார்.

``இனிமேல்தான் எழுத வேண்டும்'' என்றார் வாலி.

‘‘ ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ எனப் போடுங்கள்’’ என்றார் கலைஞர். அது கலைஞரின் தயாரிப்பு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆர் தம் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கால்ஷீட் கொடுத்ததற்கு நன்றி சொன்னது மாதிரியும் அந்த வரிகள் அமைந்தன.

74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர், பாடல் எழுதுவதிலும் குறைவைக்கவில்லை. பூம்புகார் படத்தில் அவர் எழுதிய பாடல் இது:

‘வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்கவொண்ணா வேதம்

வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம்...

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்... அதில்

வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்

வருமுன் காப்பவன்தான் அறிவாளி - அது

வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி...

துடுப்புகள் இல்லா படகு

அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..

தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்

அந்தப் படகின் நிலை போல ஆகும்’’ என கோவலனுக்கு அறிவுரை சொல்வதுபோல அமைந்திருக்கும்.

 

சினிமாவே தன் பணி என வாழ்ந்தவர்களுக்கும் மேலாகவே திரைத் துறையில் பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி என்பதுதான் தமிழ் சினிமா சொல்லும் செய்தி!

http://www.vikatan.com/news/coverstory/90946-kalaignar-karunanidhi-mini-series-part-3.html

  • தொடங்கியவர்

கருணாநிதி, எழுத்துகளால் ஆனவர்! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 4

 
 

கருணாநிதி

 

வ்வளவு பேசினாரோ, அவ்வளவு எழுதினார். `ரோமாபுரி பாண்டியன்', `தென்பாண்டிச் சிங்கம்', `பொன்னர் சங்கர்', `பாயும்புலி பண்டாரக வன்னியன்', `துள்ளி வருகுது வேள்' எனச் சரித்திர நாவல்களின் பட்டியல் ஒரு பக்கம். கவியரங்கக் கவிதைகள் மற்றொரு பக்கம். `வெள்ளிக்கிழமை', `ஒரே ரத்தம்', `தூக்குமேடை' எனச் சமூகக் கதைகளின் பட்டியல் வேறொரு பக்கம். சிறுகதைகளின் அணிவகுப்பு மேலுமொரு பக்கம். `திருக்குறள் உரை', `தொல்காப்பிய உரை', `தாய் காவியம்' என விளக்கவுரை எழுதிய நூல்கள் ஒரு பக்கம். இப்படி பக்கம் பக்கமாகச் சொல்லவேண்டிய கலைஞரின் பக்கங்கள் எண்ணற்றவை. திரைக்கதை வசனங்கள், நாடகங்கள், கடிதங்கள், கேள்வி-பதில்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்தவற்றைச் சேர்த்தால், இந்த மனிதர் பிறந்ததிலிருந்து எழுதிக்கொண்டேதான் இருந்திருப்பார் என இவரை அறியாதவர்கள் நினைக்கக்கூடும். சுமார் 70 ஆண்டுகளாக அரசியல் கட்சியில் இருப்பவர். ஒரு நாளும் இடைவிடாமல் மேடைகளில்  பேசிவந்தவர். தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்தவர். 50 ஆண்டுகளாக ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவர் என்று அடுக்கிக்கொண்டுபோனால், இவரை அறியாதவர்கள் நம்பாமல்போவதற்கும் வாய்ப்பு அதிகம்.
இவருக்கு மட்டும் ஒருநாள் என்பது 48 மணி நேரமாகவோ, 72 மணி நேரமாகவோ இயற்கை ஏதேனும் சலுகை வழங்கியிருக்குமோ?

இலக்கியம்


சரித்திரக் கதை எழுதுவது சாதாரணம் அல்ல. அந்த நாளில் பயன்படுத்திய உடை, உணவு, போர்க்கருவிகள், பயணிக்கும் முறை, மன்னர்கள், புலவர்கள் பெயர்கள், மொழிப் பிரயோகம், கால வித்தியாசம், தூர வித்தியாசம் அனைத்தும் மனதுக்குள் இருக்க வேண்டும். இலங்கை மீது போரிட்டான் என்றால்,  படைக்கருவிகளை எப்படிக் கொண்டுசென்றான், உணவுக்கு என்ன வழி செய்தான், வீரர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்பட்டன, எதற்காகப் போரிட்டான் என, கதையைப் பின்னிக்கொண்டுபோக வேண்டும். தரவுகள் முக்கியம். ஆனால், அது கட்டுரையாக அமைந்துவிடக் கூடாது. பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் யவனர்களோடு எந்த மாதிரியான வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர், எப்படி ஏற்றுமதி செய்யப்பட்டது, எப்படி மொழிகளைப் புரிந்துகொண்டனர், எவ்வளவு நாள்கள் பயணித்தனர்? கப்பலைச் செலுத்துபவனின் அறிவு, நாவாய், பாய்மரம், படகு ஆகியவற்றுக்கான வித்தியாசங்கள் என நுணுக்கமாக அறிந்திருக்க வேண்டும். கலைஞர் அந்த மாதிரியான விவரங்களுக்கு நேரம் செலவழிப்பதையும், அதற்கான வல்லுநர்களிடம் பேசி விளங்கிக்கொள்வதையும் நான் அறிவேன். `முரசொலி' நண்பர்கள் சிலரும் அதைப் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் நேரம் அவருக்கு ஒத்துழைத்ததா... நேரத்துக்கு அவர் ஒத்துழைத்தாரா என்ற ஆச்சர்யம்தான் அந்தச் சரித்திரக் கதைகளைவிடவும் முக்கியம் என நினைக்கிறேன்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு கலைஞர் எழுதிய உரை, அவருடைய கொள்கை சார்ந்தது.

இலக்கியம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
என்ற குறளுக்கு,
 
தன்னைவிட   அறிவில்  மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி
நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால்
என்ன பயன்? ஒன்றுமில்லை.
என்றும்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
என்ற குறளுக்கு,
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
என்றும் உரை எழுதியிருப்பது கலைஞர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் குறளின் பொருளையும் குறைக்காமல் செய்திருக்கும் மொழி நயம்.

 

குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு சிறுகதை எழுதி விளக்கியது, குறள்மீது அவருக்கு இருந்த ஈர்ப்பை விளக்கும். அரசு சார்பில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துக்குக் `குறளகம்' எனப் பெயர் வைத்திருப்பதும் அந்த ஈர்ப்புக்கு இன்னோர் அடையாளம்.
கல்வி நிறுவனத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு, கலைஞர் சிறந்த உதாரணம். பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் கலைஞர். அவருடன் தி.மு.க-வில் பங்காற்றிய நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றோர் எம்.ஏ படித்தவர்கள், தமிழறிஞர்கள். ஆனால், எழுதும் ஆர்வத்தோடு ஒப்பிட்டால், கலைஞரிடம் நெருங்க முடியாத தூரத்தில் இருந்தனர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதலாம், சிலப்பதிகாரத்தை நாடகமாக்கலாம் என இவர்தான் நினைத்தார்.
`நெஞ்சுக்கு நீதி' என, தன் வாழ்க்கையைத் தானே பதிவுசெய்ய நினைத்து, அதிலும் ஐந்து பாகங்களை எழுதி முடித்துவிட்டார்.
கலைஞர், எழுத்துகளால் ஆனவர்!

http://www.vikatan.com/news/tamilnadu/91080-kalaignar-karunanidhi-mini-series-part-4.html

  • கருத்துக்கள உறவுகள்

18835628_1927302924215612_86388675839881

  • தொடங்கியவர்

விமர்சனங்களை தகர்க்கும் வித்தைக்காரர்! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 5

 
 

கருணாநிதி

 

20-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்து, 21-ம் நூற்றாண்டிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் கலைஞர் கருணாநிதி.

சாதனை நாயகராக வளரும்போது வசைகளும் உடன் வளரும். அவர்மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார்களும், விசாரணைகளும், கைது நடவடிக்கைகளும்கூட சாதனை படைத்தவைதான். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நாள்முதல் அவற்றுக்கும் பஞ்சமில்லை. இவரைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த எம்.ஜி.ஆர் மீதும் ஜெயலலிதா மீதும் அத்தகைய ஊழல் புகார்கள் வாசிக்கப்பட்டன. ஆனால், பொதுவெளியில் கருணாநிதிதான் ஊழல் செய்வதில் முக்கியமானவர் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அதற்குக் காரணம், அவர்கள் இருவரையும்போல மூன்று மடங்கு... நான்கு மடங்கு காலம் அரசியல் வாழ்வில் இருப்பவர் கருணாநிதி. புகார்களும் அதற்கான சதவிகிதத்தோடுதான் இருக்கும் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், அந்த இருவரையும் தாண்டி கொள்கைக் கோட்பாட்டு ரீதியில் எதிரிகள் இவருக்கு பல மடங்கு அதிகம். புகார்களைத் தொடர்ந்து நினைவுபடுத்தவும் மிகைப்படுத்தவும்கூட எதிர் தரப்பினருக்கு அதிக நோக்கம் இருந்தது.

கருணாநிதி

`திராவிட ஆட்சிகள்' எனக் குறை கூறுவோர், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அதிக காலம் ஆட்சியில் இருந்தது, அ.தி.மு.க-தான். இலவசங்களை வழங்கி ஆட்சிப் பொறுப்பை திசை திருப்பியதும் திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகிப்போனவர்களும் அ.தி.மு.க-வினர்தான். 

ஆட்சியில் இல்லாத நிலையிலும் அரசியல் நடத்துவதும் கட்சியைக் கட்டிக்காப்பதும் கலைஞருக்கு இருந்த சவால்கள். `முரசொலி'யில் எழுதும் கடிதங்களை வைத்தே, 13 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத நிலையிலும் உடன்பிறப்புகளை உடன் தொடரவைத்தார். 

சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாகச் செல்லுபடி ஆக்கியது, அனைவரும் அர்ச்சகராகும் உரிமை கோரியது... எனச் சட்டத்துக்கு உட்பட்டுப் போராடவேண்டிய கடமைகள் அவருக்கு இருந்தன. ‘தமிழ்நாடு இலவசக் காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநிலப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஐ.டி துறையை, மாநிலத்தில் வரவேற்கும்விதமாக, அவருடைய பதவி காலத்தில் தரமணியில் `டைடல் மென்பொருள் பூங்கா'வை உருவாக்கினார். இணைய மாநாடு நடத்தினார்.

கருணாநிதி

திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார். அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் குமரியில் அமைத்த சிலை, வரலாற்றுச் சின்னமாக தென் திசையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. சிலப்பதிகார நினைவாக பூம்புகாரைப் புதுப்பித்தவர். குடிசை மாற்றுவாரியம், கை ரிக்‌ஷா ஒழிப்பு, கண்ணொளி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் ஏழை எளியவர்கள் பயனடைந்தனர். மாநில சுயாட்சிக் கொள்கை, இவருடைய மகத்தான முழக்கமாக இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எமெர்ஜென்சி அறிவித்தபோது, இந்தியாவில் அதை எதிர்த்து அறிக்கைவிடுத்த முதல் முதலமைச்சர் கலைஞர்தான். மிசா காலத்தில், தி.மு.க தலைவர்கள் உள்பட பல தொண்டர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

1970-ம் ஆண்டில் பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987-ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 2010-ம் ஆண்டுக்கான  ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை எழுதும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்தார். ஒரகடத்தில்,  புதிய டிராக்டர் உற்பத்திசெய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்றவை இவருக்குப் பெருமை சேர்த்த திட்டங்கள்.

‘உன் மீது அடித்த வெயில்

பசிபிக் கடல் மீது அடித்திருந்தால்

பாதி கடல் 

காணாமல்போயிருக்கும்’

 

என, கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இது கவிநயத்துக்காகச் சொல்லப்பட்டதுதான். ஆனால், இதில் உண்மையில்லாமல் இல்லை!

http://www.vikatan.com/news/tamilnadu/91214-kalaignar-karunanidhi-mini-series-part-5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.