Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலி: ஓநாய் அழுத கதை

Featured Replies

மாலி: ஓநாய் அழுத கதை
 

டு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது.

image_9be4c55e24.jpg

ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம்.

அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை. 

அண்மையில் பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இமானுவேல் மக்ரோன், தனது பதவியேற்ற முதல் வாரத்திலேயே, மேற்கு ஆபிரிக்க நாடான மாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

பிரான்ஸின் அயலுறவுக் கொள்கை, வர்த்தகம், அரசியல் கூட்டுறவு போன்றவற்றில் முக்கியத்துவம் மிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை விட்டுவிட்டு, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலி நாட்டுக்கு விஜயம் செய்தமை, சில முக்கிய செய்திகளைச் சொல்கிறது. 

தனது மாலி விஜயத்தின் போது அவர், அந்நாட்டின் தலைநகர் பமுக்குவுக்கோ அல்லது ஜனாதிபதி மாளிகைக்கோ நாடாளுமன்றுக்கோ விஜயம் செய்யவில்லை. மாறாக, 1,700 பிரெஞ்சுப் படைகள் நிலைகொண்டுள்ள மாலியில் உள்ள காவோ படைத்தளத்துக்கு விஜயம் செய்தார். 

பிரெஞ்சுப் படைகளுக்கு, மாலியில் என்ன வேலை? 

அனைத்து வழிகளிலும் நிலத்தால் சூழப்பட்ட ஆபிரிக்காவின் நிலப்பரப்பு அடிப்படையில் மாலி, எட்டாவது பெரிய நாடாகும். மாலியின் வடக்கே அல்ஜீரியா; கிழக்கே நைஜர்; தெற்கே புர்கீனா ஃபாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்; தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மற்றும் மொரிட்டானியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

14.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டின் வடபகுதி, சஹாரா பாலைவனத்தை உள்ளடக்குகிறது. 90 சதவீதமான மக்கள், முஸ்லிம்கள்; அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். 

உலகின் வறுமையான நாடுகளில் ஒன்றான மாலியின் மீது, பிரான்ஸுக்கு என்ன அக்கறை என்று நீங்கள் நினைக்கக் கூடும். “தகவல்களில் தான் தரித்திரம் ஒளிந்திருக்கிறது” என்றோர் ஆங்கிலச் சொல்லடுக்கு உண்டு.

image_96575ed3bd.jpg

அதைப் போலத்தான் மாலியின் கதையும். தங்கத்தை ஏற்றுமதி செய்யும் ஆபிரிக்க நாடுகளில், மூன்றாமிடத்தில் மாலி உள்ளது. (முதலாவது தென்னாபிரிக்கா, இரண்டாவது கானா).

இதன் பிரதான ஏற்றுமதிப் பொருள், பருத்தி. அதைத் தவிர பொஸ்பேட், தாதுஉப்புகள், கஓலினைட் (வெண்களிமண்), சுண்ணாம்புக்கல் போன்ற இயற்கை வளங்களையும், பெருமளவில் உடைய நாடாகும். இவற்றைவிட யுரேனியம், மேற்கு ஆபிரிக்காவில் அதிகளவு கிடைக்கிறது. பிரான்ஸ் தனது அணுவாயுதத் தேவைகளுக்கு, பெருமளவில் இதை நம்பியுள்ளது. 

புகழ்பெற்ற மேற்கு ஆபிரிக்க சாம்ராச்சியங்களில் ஒன்றான மாலி சாம்ராச்சியத்தால் ஆளப்பட்ட மாலியின் பெரும்பகுதியானது, 1905ஆம் ஆண்டு, பிரெஞ்சுக் கொலனியாகி, “பிரெஞ்சுச் சூடான்” என அழைக்கப்பட்டது.

1960ஆம் ஆண்டு, பிரான்ஸிடமிருந்து மாலி விடுதலையடைந்த போதும், தொடர்ந்தும் பிரான்ஸின் கைப்பாவை அரசாங்கங்களே இருந்தன. அவ்வாறு உருவான சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்தி உருவான மக்களாட்சிகள், சதிப்புரட்சிகள் மூலம் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டன. இவ்வாறாக பிரான்ஸ், எதுவித சிக்கலுமின்றி, இயற்கை வளங்களைத் தொடர்ந்து சுரண்டுவது உறுதிப்படுத்தப்பட்டது. 

1990களின் தொடக்க காலத்தில், மாலியின் வடபகுதியிலுள்ள அசாவத் பிராந்தியத்தின் நாடோடிகளான துவாரக் இனக்குழுவினர், மாலி அரசிடமிருந்து விடுதலை கோரி, “அசாவத் தேசிய விடுதலை இயக்கத்தின்” தலைமையில் போராடத் தொடங்கினர். 

இவர்களுக்கு எதிராக மாலி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் விளைவால், துவாரக் இனக்குழுப் போராளிகள், லிபியாவில் தஞ்சமடைந்தனர். அங்கு அவர்கள், லிபிய ஆட்சியாளர் முஹம்மர் கடாஃபியின் ஆதரவைப் பெற்று, லிபியாவின் முறைசாராப் படைகளாகச் செயற்பட்டனர்.

2011ஆம் ஆண்டு, ஆட்சியை விட்டு கடாஃபி அகற்றப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னணியில், கடாஃபியின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் செயற்பாடுகள் முனைப்படைந்தன.

இதனால் அச்சமடைந்த அசாவத் இயக்கத்தினர், ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மாலிக்குத் திரும்பினர். மாலியின் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போரிடுவதற்கான சரியான வாய்ப்பாக, இதை அவர்கள் கருதினர். இவ்விடத்தில் துவாரக் இனக்குழுவினர் பற்றி நோக்குவது பொருத்தம். 

துவாரக் இனக்குழுவினர் வடக்கு மாலி, வடக்கு நைஜர், தெற்கு அல்ஜீரியா, தெற்கு லிபியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களாவர். அவர்களைப் பொறுத்தவரை, மேற்படி பகுதிகளை உள்ளடக்கிய சஹாரா பகுதியில், எதுவித தடைகளின்றிப் பயணம் செய்யவும் பயிர் செய்யவுமான பாரம்பரிய நிலஞ்சார் உரிமையையே வேண்டினர்.

ஆனால் அவர்களுக்கு எதிராக, முதலில் பிரெஞ்சுக் கொலனியாதிக்கவாதிகளாலும் சுதந்திரத்துக்கு பின்னர் தொடர்ச்சியான மாலி அரசாங்கங்களாலும், அவர்களது உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தன.

இதற்கு எதிராக, 1960இல் மாலி சுதந்திரமடைந்ததுடன் இணைந்ததாக, அவர்களது முதலாவது கிளர்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 1990களில், அவர்களது இரண்டாவது கிளர்ச்சி நடந்தது. 2006ஆம் ஆண்டு, இராணுவத்துக்கெதிரான வன்முறைகளுடன், மூன்றாவது கிளர்ச்சி நடந்தது. இவை மூன்றும் வெற்றியளிக்கவில்லை. 

இப்பின்புலத்தில், ஆயுதங்களுடன் மீண்ட துவாரக் இனக்குழுப் போராளிகள், தங்களது வாழ்விடமான வடக்கு மாலியை மீட்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்காலப்பகுதியில், ஆபிரிக்காவில் காலூன்றத் தொடங்கிய அல்கொய்தா இயக்கத்தினர், துவாரக் போராளிகளுக்கு ஆதரவாகப் போரிடத் தொடங்கினர். இதன் விளைவால், மாலி அரசாங்கத்துக்கெதிரான போராட்டம், 2012 ஜனவரியில், முழுமையான உள்நாட்டு யுத்தமாக மாற்றமடைந்தது. 2012 ஏப்ரலில், வடக்கு மாலியை, போராளிகள் முழுமையாகக் கைப்பற்றினர்.      

இதைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த அல்கொய்தாவினர், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இது, துவாரக் இனக்குழுவினருக்கு உவப்பானதான அமையவில்லை. 

இதற்கான பிரதான காரணம், அவர்களுக்கிடையிலான மதப்பிரிவுசார் வேறுபாடுகளாகும். 

துவாரக் இனக்குழுவினர், சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். அல்கொய்தா, வஹாபிஸ மார்க்கத்தைப் பின்பற்றுகிறது. கடுமையான ஷரியா சட்டங்கள், வஹாபிஸ மார்க்கத்தின் அடிப்படையிலானவை.  துவாரக் இனக்குழுவினரிடையே, வஹாபி மார்க்கத்தைத் திணித்து, தமது கட்டுப்பாட்டில் வைக்க அல்கொய்தா முனைந்தது. 

இதனால், 2012 ஜூன் மாதத்தில், அசாவத் தேசிய விடுதலை இயக்கத்துக்கும் இஸ்லாமியத் ஆயுதக் குழுக்களுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்து, ஆயுத மோதல்களாக மாற்றம் பெற்றது.

இஸ்லாமிய ஆயுததாரிகள், அசாவத் இயக்கப் போராளிகளை விரட்டியடித்துவிட்டு, அசாவத் பிராந்தியத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்சிபுரியத் தொடங்கினர். அதேவேளை, சுஃபி மரபிலான பண்பாட்டுச் சின்னங்களையும், யுனெஸ்கோவின் பாரம்பரிய வரலாற்று சின்னமாகவுள்ள மசூதியையும், சுஃபி ஞானியின் நினைவுச் சின்னத்தையும் சிதைத்து, நாசமாக்கி எரித்தனர்.

இதன்விளைவால் கடுமையான ஷரியா சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை, அல்கொய்தா, வடக்கு மாலியில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. 

வடக்கு மாலியில், அல்கொய்தாவின் அதிகாரமானது, இருவகையான எதிர்வினைகளுக்கு வழிவகுத்தது. முதலாவது, அல்கொய்தா அமைப்பு, மேற்கு ஆபிரிக்காவில் வலுவான பிரசன்னத்தை உருவாக்குவதற்காக வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுத்தது.

அவ்வகையில், மேற்கு ஆபிரிக்காவில் அல்கொய்தாவின் பிரதான தளமாக, வடக்கு மாலி மாற்றமடைந்தது. இரண்டாவது அல்கொய்தா ஆயுததாரிகளைக் காரணங்காட்டி “பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின்” ஒரு பகுதியாக இதை அடையாளங்காட்டி, மாலியில் சர்வதேசத் தலையீட்டுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது.

இந்நிலைமையானது மாலியில் தலையிடுவதற்கான பொருத்தமான தருணத்தை பிரான்ஸுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மாலியில் இராணுவத் தலையீடொன்றைச் செய்வதன் மூலம், மூன்று விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள, பிரான்ஸ் விளைந்தது.

முதலாவது, மேற்கு ஆபிரிக்காவில் வலுவான இராணுவப் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், பிராந்தியத்தின் முக்கியமான அரங்காடியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதோடு கொலனியாதிக்கவாதியாக, தனது வகிபாகத்தை மீள உணர்த்துவதுமாகும். 

இரண்டாவது, வடக்கு மாலி, பிராந்திய ரீதியில் மூலோபாயமான பகுதியாகும். ஒருபுறம் அல்ஜீரியா, நைஜர், மொரிட்டானியா, லிபியா, மேற்கு சஹாரா ஆகிய நாடுகளைக் கட்டுப்படுத்தவதற்கான பிரதானமாக தளமாக, வடக்கு மாலி அமைந்திருக்கிறது.

மறுபுறம், வடக்கு மாலியிலேயே யுரேனியம் இருக்கிறது. உலகின் மூன்றாவது அதிகூடிய யுரேனியம், மாலியில் இருப்பதாக அறியப்படுகிறது. அதில் பெரும்பகுதி, வடக்கு மாலியிலேயே உள்ளது.

எனவே வடக்கு மாலியின் கட்டுப்பாட்டை இழப்பது, பிரான்ஸைப் பொறுத்தவரை நினைத்துக் கூடப் பார்க்கவியலாது. எனவே வடக்கு மாலி, நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள் தேவை.
மூன்றாவது, இப்பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு, கொலனியாதிக்க சக்திகளுக்குப் பாரிய சவாலாக உள்ளது. குறிப்பாக, மாலியில் சீனாவின் உட்கட்டமைப்பு உதவிகள், பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

சீனா கட்டுவதற்குத் திட்டமிட்ட டவோசா அணைக்கட்டும் நீர்மின் நிலையமும், வடக்கு மாலியில் அமைந்துள்ளன. எனவே வடக்கு மாலியை மீட்பதன் ஊடு, சீனாவின் திட்டத்தில் மண் விழுத்தலாம் என்பது பிரான்ஸின் கணிப்பு.

2013 ஜனவரியில் பிரான்ஸ், நேரடியான இராணுவத் தலையீட்டின் மூலம் வடக்கு மாலி நோக்கிப் போர் தொடுத்தது. இது சேர்வல் நடவடிக்கை (Operation Serval) என அழைக்கப்பட்டது. இதில், 4,000 பிரெஞ்சு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் விளைவால், ஆயுததாரிகளிடமிருந்து, வடக்கு மாலி மீட்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பிரான்ஸ் படைகள், அங்கு நிலைகொண்டுள்ளன. இப்படைகளைச் சந்திக்கவே, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், மாலிக்குச் சென்றார்.

அவர் தனது பதவிக் காலத்தில், பிரான்ஸின் உயிர்நாடியான பிரெஞ்சு இராணுவத்துக்கே முதலிடம் கொடுக்க விரும்புவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பிரான்ஸ் எப்போதும் முன்னிற்கும் என்றும் தெரிவித்தார்.

இவை, பொருளாதார ரீதியாக தீர்வுகளைத் தேடவியலாத நிலையில் அச்சமும் பதற்றமும் முழுமையடைந்திருக்கும் பிரான்ஸில் தேசியவாத உணர்வுகளைக் கிளறிவிடவும், பயங்கரவாதம் என்பதே பெரும் பிரச்சினை போன்றதொரு தோற்றமயக்கத்தையும் உருவாக்குவதனூடும், தனது பயணத்தை மக்ரோன் நகர்த்துகிறார். 

ஆபிரிக்காவில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்குக்கு எதிரான மேற்குலகின் இணைந்த காய் நகர்த்தலில், பிரான்ஸ் தனது பங்களிப்பை வழங்குகிறது. தனது முன்னாள் கொலனிகளை சீனாவிடம் இழந்துவிடாமல் தக்கவைக்க, அரும்பாடு படவேண்டியிருக்கிறது.

ஏனெனில் ஆயுததாரிகளை வடக்கு மாலியில் இருந்து வெளியேற்றுவதற்கான சேர்வல் நடவடிக்கை, 2014இல் முடிவடைந்த நிலையில், பிரெஞ்சுப் படைகள் அங்கிருந்து வெளியேறவில்லை. 

மாறாக தனது முன்னாள் கொலனிகளான மாலி, சாட், நைஜர், புர்கீனா ஃபாசோ மற்றும் மொரிட்டானியா ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பதாகையின் கீழ் “பார்க்கேன் நடவடிக்கை” (Operation Barkhane) இடம்பெற்று வருகிறது. 

பிரான்ஸின் மாலி மீதான அக்கறை, மாலி மக்கள் மீதானதல்ல. ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டதொரு நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்டோர், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள் என்பதன் பொருள், விளங்கக் கடினமானதல்ல. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாலி--ஓநாய்-அழுத-கதை/91-197793

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.