Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணப்பொழுதில் அழிந்தது தென்னிலங்கை 200 இற்கும் அதிகமானோர் பலி, 7 இலட்சம் பேர் பாதிப்பு ஆயிரம் பேர் முகாம்களில்

Featured Replies

கணப்பொழுதில் அழிந்தது தென்னிலங்கை

 

200 இற்கும் அதிகமானோர் பலி, 7 இலட்சம் பேர் பாதிப்பு ஆயிரம் பேர் முகாம்களில்

 

எந்தவொரு மனித செயற்பாட்டிற்கும் பாதுகாப்பு மற்றும் முன்னாயத்தம் உண்டு. ஆனால் இயற்கையின் சீற்றத்துக்கும் அதனால் ஏற்படும் அனர்த்தத்தையும் எந்த வழிகளிலும் மனிதர்களினால் கட்டுப்படுத்த முடியாது. மனித சக்தியை மிஞ்சிய இயற்கையின் பலத்தின் முன்னால் மனிதர்களாகிய நாங்கள் அடிபணித்தாக வேண்டும் என்பதே நியதியாகும். உலகில் ஆண்டு தோறும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. சூறாவளிகள், கடும் மழை, வெள்ளம், கடும் வரட்சி, மண்சரிவு என பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் மக்களை அழிவுகளுக்கு உள்ளாக்கிவிடுகின்றன. அதன் அழிவுகள் மிகவும் மோசமான பெறுபேறுகளை வெளியேற்றி வருகின்றது.

கடந்த ஆண்டுகளிலும் இவ்வாறான அனர்த்தங்கள் மூலம் மக்கள் பலர் அழிவுகளை சந்தித்தமை எம்மால் மறக்க முடியாது. அவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அடுத்த முறை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி கடந்து சென்ற போதிலும் மீண்டும் மீண்டும் அழிவுகளில் சிக்குண்டு மக்கள் மாண்டுபோனது மாத்திரமே நடந்துள்ளது. கடந்த மாதம் இறுதியில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக அப்பகுதி மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டது.

இலங்கையில் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட அதி பயங்கரமான மூன்று அழிவுகளில் ஒன்றாக இந்த சம்பவம் பதிவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1978ஆம் ஆண்டு இலங்கையில் கனமழை பெய்தது. இதனால் பாரிய அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் பின்னர் 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக 250க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பல கோடி சொத்துக்கள் அழிந்தன. அதன் பின்னர் மிகவும் மோசமான அழிவாக இந்த சம்பவம் பதியப்பட்டுள்ளது.

இந்த மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 200க்கும் அதிகமான பொதுமக்கள் இதுவரையில் உயிரிழந்துள்ள நிலையில் பலநூறு பேர் காணாமல் போயும் அதிக காயங்களை சந்தித்தும் உள்ளனர். அதேபோல் இப்போது வரையில் தென்னிலங்கையில் சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதிகளவிலான பாதிப்புக்களை களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்கள் சந்தித்துள்ளதுடன் ஏனைய பகுதிகளான காலி, ஹம்பாந்தோட்டை, கேகாலை பகுதிகளும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் களுத்துறை மாவட்டம் முக்கியமான ஒன்றாகும். மாத்தறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்ட பிரதான மாவட்டமாக இருந்தாலும் களுத்துறை, இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களும் பாரிய அளவிலான அழிவுகளை சந்தித்துள்ளன.

இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டத்தின் களுகங்கையை அண்மித்த பகுதியில் வெள்ளம் குறைவடைந்துள்ள போதும் கிரியெல்ல, அயகம போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 45 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், இதுவரையிலும் 11 ஆயிரத்து 173 குடும்பங்களை சேர்ந்த 47 ஆயிரத்து 684 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் அதிகளவு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரையில் 85 பேரின் சடலங்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ளதாக கருதப்படும் மேலும் 26 பேரை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, கலவான போன்ற பகுதிகளில் பாரிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அப்பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

களுத்துறை

களுத்துறை மாவட்டத்தில் 40 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 பேரின் சடலங்களை மீட்டுள்ள நிலையில் 52 பேரை தொடர்ந்தும் தேடி வருகின்றனர். 3399 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 689 நபர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வடிந்தோடியுள்ள நிலையில் சில பகுதிகளில் நீர் மட்டம் ஐந்து அடி அளவில் தேங்கி நிற்கின்றது.

 

 

 

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தின் நிலைமைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் துப்புரவு பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்திய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 864 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 82 ஆயிரத்து 711 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல்போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் முப்படையினரும் நிருவாகிகளும் செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களில் 2910 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 277 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்கள், அவர்கள் இழந்தவை, அழிந்தவை என மக்களின் மனநிலைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று முகாம்களில் தங்கியுள்ளனர். உறவுகளை இழந்தும், சொத்துக்களை இழந்தும் தவித்து வரும் மக்களை சந்திக்கவும் அவர்களின் துயரங்களை வெளிப்படுத்தவும் மனிதாபிமான பயணத்தில் நாமும் செயற்பட்டோம். இந்நிலையில் களுத்துறை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் அந்த மக்களையும் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களையும் சந்திக்க முடிந்தது .

களுத்துறையில் முகாம்களுக்குள் மக்கள் முடக்கம் 

 நாகொடை பிரதேசத்தில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தமது கருத்துக்களை இவ்வாறு முன்வைத்தனர், நான் சமன் குமார, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் நூறு குடும்பங்களை சேர்ந்த மக்கள் இந்த முகாமில் எங்களுடன் உள்ளனர். நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வெள்ளம் எம்மை சூழ்ந்துவிட்டது. எமது வீடுகளை நாம் முற்றாக இழந்துள்ளோம். அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள எம்மால் என்ன செய்வது என்பது தெரியாதுள்ளது. எமக்கு உணவுகளும் சில அடிப்படை தேவை பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் எம்மால் சமாளிக்க முடியாதுள்ளது. இந்த நிலைமைக்கு நாம் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் எமது நிலைமையை உணர்ந்து அரசாங்கம் உதவி புரிய வேண்டும். நாங்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற மறுக்கவில்லை, எமக்கு வாழக்கூடிய வகையில் வேறு பாதுகாப்பான இடங்கள் தருவதாக கூறும் எவரும் அதை செய்யவில்லை. நாம் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றோம். ஆகவே எமது இடங்களை, நிலங்களை, சொத்துக்களை எல்லாம் விட்டு வெளியேற முடியாது. அரசாங்கமும் அதிகாரிகளும் எமது வாழ்க்கையை சாதாரண நிலைமைக்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தனது நிலைமையை தெரிவித்தார்.

களுத்துறை தொடன்கொடை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதி விகாரை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அவர்களையும் சந்திக்க முடிந்தது. இந்த விகாரையில் அடைக்கலம் தேடியுள்ள நிறோமினி எனும் பெண் கூறுகையில், இரவு பெய்த கனமழை காரணமாக தொடங்கொட பன்சலை மண்டபத்திற்கு நாம் வந்துவிட்டோம். எனது சகோதரர் வேறு பகுதியில் உள்ளார். அவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த போதும் அவரை தொடர்புகொள்ள முடியாது போய்விட்டது. எனது மூத்த மகன் அவர்களை அழைத்துவர சென்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றுடன் நான்கு நாட்களாகியும் அவர்களை காணவில்லை. இராணுவம் மூலம் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர். எனினும் எம் குடும்பத்தினர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எமது மகனையும் இழந்து வீட்டையும் இழந்து வேதனையில் உள்ளேன் என அவர் தனது வேதனையை தெரிவித்தார்.

விகாரையில் தங்கியுள்ள சந்துன் குமார என நபர் கூறுகையில், அதிகாலை கனமழை பெய்த நிலையில் எதிர்பாராத விதமாக நீர் மட்டம் கூடியது. அப்போதே அக்வேல்கொட மலையில் இருந்த பாரிய கல் கனம் தாங்காது கிராமத்தை நோக்கி வீழ்ந்துள்ளது. நாம் குறித்த கிராமத்தில் கல் வீழ்ந்த பகுதிக்கு எதிர்ப்புறம் வாழ்கின்றோம். ஆகவே உடனடியாக இடத்தை விட்டு வெளியேறிவிட்டோம். எனினும் இந்த பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் வாழ்ந்தனர். அவர்கள் என்னவானார்கள் என அறியமுடியவில்லை. ஒருசிலரை சடலமாக மீட்டுள்ளனர். ஆனால் ஏனையவர்கள் என்னவானார்கள் என தெரியவில்லை. குழந்தைகள், பெண்கள் என அனைவரும் புதையுண்டுள்ளதாக கருதுகின்றோம் என குறிப்பிட்டார்.

 இந்த முகாமில் உள்ள பாடசாலை மாணவி குமாரிணி தனது நிலைமையை இவ்வாறு தெரிவித்தார், எமது கிராமத்தில் (புளத்சிங்கள) அறுபது குடும்பங்கள் அளவில் வசித்து வருகின்றோம். வெள்ளம் மற்றும் மண்சரிவு இரண்டும் ஏற்பட்ட நிலையில் நாங்கள் எந்த திசையில் ஓடுவது என தெரியவில்லை. நாங்கள் பார்த்துகொண்டு இருந்த வேளையிலேயே எங்கள் கண்முன்னே பல குடும்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். எமது உறவினர் ஒருவரும் அதில் சிக்கிக்கொண்டார். அதேபோல் எமது கிராமத்தின் ஏனைய பகுதிகளிலும் பொதுமக்கள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். சிலர் மண்ணில் புதையுண்டுள்ளனர். 40 சடலங்கள் அளவில் எடுக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சிலர் புதையுண்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது. கண்ணிமைக்கும் நொடியில் இவை நடந்துவிட்டது.

எங்களால் எவரையும் காப்பாற்றவும் முடியவில்லை. அருகில் இருந்த ஒரு சிலரை மாத்திரம் இறுக்கிப்பிடித்துக் கொண்டு வேறு திசையை நோக்கி ஓடினோம். காலையில் பாதுகாப்பு படைகளை கொண்டு இந்த இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு அமையவே எங்களுக்கும் உண்மையான தகவல்கள் கிடைக்கின்றது. நிவாரணங்கள் கிடைத்தாலும் எமது உறவுகள், நபர்கள், அயல் வீட்டார் என பலர் எங்கள் கண்முன்னே இறந்துள்ளனர். அதை தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

 களுத்துறை மாவட்டத்தில் இவ்வாறு சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது வேதனைகளை பகிர்ந்துகொண்டனர். கண்முன்னே தமது உறவுகள் வெள்ளத்தில் அடித்துப்போவதையும், தாம் வசித்த வீடுகள் அழிக்கப்படுவதையும் சொத்துக்களை விட்டுவிட்டு உயிரை மட்டும் காப்பாற்றிக்கொண்டு இடம்பெயர்ந்த இந்த மக்களின் அவலங்களை எம்மால் கண்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் கண்ணீரில் அம்மக்களின் வேதனைகள் என்னவென்பது புரிந்தது. இதே நிலையில்தான் இரத்தினபுரி மக்களும் உள்ளனர். இரத்தினபுரி வெள்ளப்பெருக்கில் மூழ்கியும், மண்சரிவில் புதைந்தும் ஒரு சுடுகாட்டை உருவாக்கியிருந்தது. இந்த அனர்த்தத்தில் அதிகளவிலான உயிர்களை காவுகொண்ட பகுதியாக இரத்தினபுரி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 85 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் 20 குடும்பங்கள் வசித்துவந்த பகுதியில் பாரிய கற்பாறை சரிந்து விழுந்ததில் 15 வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்டன. இதில் 30 பேர் மண்ணில் புதையுண்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நிவித்திகல பிரதேச சபை மண்டபத்தில் அடைக்கலப்படுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளில் ஒருவரான சகுந்தலா கூறுகையில், தொடர்ச்சியாக கனமழை பெய்த நிலையில் நாம் எனது 9 வயது மகனை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு எனது சகோதரியின் வீட்டுக்கு சென்றேன். நான் வெளியில் செல்லும்போது பாரிய சத்தம் ஒன்று கேட்டதுடன் மிகப்பெரிய கல் ஒன்று எமது பகுதியை நோக்கி நகர்வதை என்னால் அவதானிக்க முடிந்தது.

சில வீடுகளை தகர்த்துக்கொண்டு எம்மை நோக்கி வந்ததை நான் பார்த்தேன். மகனை காப்பாற்ற ஓடினேன்.ஆனால் அதற்குள் பாறை வீட்டின் மேல் விழுந்துவிட்டது. என்னை சிலர் பிடித்து இழுத்து மற்ற திசையில் வீசிவிட்டனர். மூன்று நாட்களின் பின்னர் அகழ்வுகளை மேற்கொண்டபோது மகனின் சடலத்தையும் எடுத்தனர். எனது மகனை போல பலர் இவ்வாறு புதையுண்டனர்.என்னால் இந்த சம்பவத்தை நினைத்து பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் தனது கதையை தெரிவித்தார்.

அதேபோல் கலவான பகுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பலர் இறந்து போனார்கள். பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களில் சிலர் கூறுகையில், எங்களுக்கான சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் எவையும் போதுமான வகையில் கிடைக்கவில்லை. நாங்கள் வீடுகளை இழந்து இப்படி அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளோம். எம்மை பார்க்கவோ எமது துயரங்களை ஆராயவோ என நேரம் ஒதுக்கவில்லை. இராணுவம் மூலம் உணவுகள் வருகின்றது, சிலர் வந்து நிவாரணங்களாக சிலவற்றை தந்துவிட்டு போனார்கள். நாங்கள் எப்போது வீடு திரும்புவோம் என்பது தெரியவில்லை.

பெண்களும் சிறுவர்களும் உள்ள இந்த முகாமில் பாதுகாப்பான இடங்கள் இல்லை. மலசலகூடம் கூட ஒழுங்காக இல்லை. சிரமமாக உள்ளது. குடிநீர் இல்லை. போத்தல் தண்ணீரில் அனைத்தையும் சமாளிக்க வேண்டிய நிலைமை உள்ளது.அதிகாரிகளிடம் நீங்கள் இந்த தகவலை கொண்டுசேர்க்க வேண்டும். எமக்கும் நிவாரணங்கள் கிடைக்கும் உதவிகளை செய்ய வேண்டும். எமது வீடுகள் மற்றும் சொத்துக்கள் என்னவானது என எங்களுக்கு தெரியவில்லை. ஆகவே மீண்டும் அவற்றை பெற்றுத்தர வேண்டும் என தமது கஷ்டங்களை தெரிவித்தனர்.

இவ்வாறு பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை நாம் சந்தித்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்துகொள்ள முடிந்தது. சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்பதையே மக்கள் அதிகமாக தெரிவித்தனர். அதேபோல் அடிபப்டை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அனர்த்தத்தில் சிக்குண்ட மக்களை காப்பாற்றுவதில் பாதுகாப்பு படையினருடன் பொதுமக்கள் இணைந்து மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எமது மக்கள் மனிதாபிமானவர்கள் என்பதை உணர்த்தியுள்ளனர். நாட்டில் சகல பகுதிகளில் இருந்தும் மக்கள் தமது உதவிக் கரங்களை நீட்டியிருந்ததை மறுக்கவே முடியாது. ஆனால் அந்த பொருட்கள் சரியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக சென்றடைந்ததா என்பதில் சந்தேகம் உள்ளது. அனைவராலும் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலைமை இருந்தது. நீரில் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் உயரமான இடங்களில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையில் அவர்களிடம் நிவாரணங்களை கொண்டுசெல்ல முடியாதிருந்தது.

ஆகவே இப்போது நிலைமைகள் வழமைக்கு திரும்பி மக்கள் அனைவரையும் முகாம்களில் தங்கவைக்கும் சூழல் உள்ளது. இப்போது சகல மக்களுக்குமான நிவாரணங்களையும் மருத்துவ உதவிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் தமக்கான பிரச்சினைகளை சரியாக முன்வைத்து தமக்கான பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். விரைவில் நிலைமைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் என எதிர்பாக்கப்படுகின்றது.

ஆனால் இனியாவது அனர்த்தங்களில் இழப்புகளை குறைக்கும் வழிமுறைகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது ஒருபுறம் இருக்கையில் மக்கள் மிகவும் அவதானத்துடனும் அதேபோல் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களை காப்பாற்றுவதும் சூழலை பாதுகாப்பதும் அனைத்து மக்களின் கடமையாகும். இயற்கையை வெற்றிகொள்ள முடியாது என்பதை இவ்வாறான சம்பவங்கள் மேலும் மேலும் உணர்த்தி வரும் நிலையில் மக்கள் மாற்றம் காணவேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.