Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்

Featured Replies

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்

 

கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.

கத்தாரை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?படத்தின் காப்புரிமைAFP

ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை.

எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்?

எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்

மக்கள் தொகையில் அதிகப்படியாக ஆண்கள்:

2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர்.

இந்த அதிகபட்ச சமச்சீரின்மைக்கு காரணம், கத்தார் மக்கள் தொகையில் எழுந்த திடீர் எழுச்சியாகும். கத்தாரில் அதிகப்படியான குடியேறிகள், அதுவும் அதிகபட்சமாக இளம் ஆண்கள் உள்ளனர்.

கத்தாரில் வேலைவாய்ப்புகளில் உத்தரவாதம் இருப்பதால் சமீப வருடங்களாக மக்கள் அதிகமாக கத்தாருக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே 2003 ஆம் ஆண்டில் 7 லட்சமாக இருந்த மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு 2.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கத்தாரை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?படத்தின் காப்புரிமைAFP

கத்தாரில் பெண் குடியேறிகளும் இருக்கிறார்கள்; ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கான கட்டட வேலைகளில் ஈடுபடுவதற்காக அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் கத்தாருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் உலகமுழுவதிலிருந்து குறிப்பாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறார்கள். இஸ்லாம் மற்றும் கிறித்துவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்துக்கள் உள்ளனர்.

வேலைக்கான உத்தரவாதம் மற்றும் நல்ல எதிர்காலம் இருப்பினும் வேலைக்காக வந்தவர்கள் மோசமான நிலைகளில் பணிபுரிய வற்புறுத்தப்படுவதாகவும் அதில் பாதிக்கும் அதிகமானோர் நாட்டைச் சுற்றியுள்ள தொழிலாளர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கத்தார் தங்களது பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உறுதியளித்த போதிலும், பணியாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தலை சந்திப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

லண்டனில் மிகப்பெரிய சொத்துகளின் உரிமையாளர்கள்?

கடந்த பத்து வருடங்களில், லண்டனில் இடங்கள் வாங்குவதில் கத்தார் அதிக கவனம் காட்டி வருகிறது.

லண்டனின் வானுயர்ந்த கட்டங்களான ஷராட், ஹாரட்ஸ், செல்சீ பராக்ஸ், ஒலிம்பிக் கிராமம் மற்றும் கேனரி வார்ஃப் ஆகிய கட்டங்கள் கத்தாருக்கு சொந்தமானதாக உள்ளது.

கத்தாரை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?படத்தின் காப்புரிமைPA

கத்தார், 35 பில்லியன் டாலரிலிருந்து 40 பில்லியன் டாலர் வரையில் பிரிட்டனில் முதலீடு செய்துள்ளதாக நாட்டின் நிதியமைச்சர் அல் ஷரீஃப் அல் எமாடி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 3 அல்லது 5 வருடங்களில் மேலும் 5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகவும் எமாடி தெரிவித்தார்.

கலைகளுக்கு முக்கியத்துவம்

கத்தார் ஒரு பழமைவாத நாடாகக் கருதப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக பல கண்காட்சிகளுக்கு நிதி ஆதரவு வழங்கியுள்ளது. அதில் 2013ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் சர்ச்சைக்குரிய கலைஞரான டேமியன் ஹேர்ட்ஸின் பழைய கலைப் படைப்புகளின் முதல் கண்காட்சியை நடத்தியது.

அதே சமயத்தில் கத்தார் அரசரின் சகோதரி மற்றும் கத்தார் அருங்காட்சியகத்தின் தலைவருமான ஷேக்கா-அல் -மயசா -பிண்ட் -ஹமத் பின் -காலிஃபா -அல் -தனி `ஆர்ட் ரெவ்யூ` என்ற இதழ் வெளியிட்ட சக்தி வாயந்த 100 கலைப் பிரமுகர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.

மேலும் இந்த கலைப் படைப்புகளை வாங்கி சேகரிக்க, அவர் 1 பில்லியன் டாலர் செலவிடுகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு, டோஹாவில் இஸ்லாமிய கலைகளின் அருங்காட்சியகத்தை பெருமையுடன் திறந்து வைத்தது கத்தார்.

மூன்று கண்டங்கள் மற்றும் 1400 வருடங்கள் பழமையான, உலகில் உள்ள முக்கிய இஸ்லாமிய கலை பொருட்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

23 அடி வெண்கல கரடி பொம்மை ( டெட்டி பேர்)

கத்தாருக்கு கலையில் அதிக நாட்டமிருந்த போதிலும், அருங்காட்சியகத்தில் மட்டுமின்றி அது பொது இடங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டோஹாவில் உள்ள ஹமத் சர்வதேச விமான நிலையத்தில், சென்ற எவரும் அங்கு விமான நிலையத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் 23 அடி மஞ்சள் நிற டெட்டி பேரை ( கரடி பொம்மை) கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

கத்தாரை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

20 டன் எடையுள்ள வெண்கலத்தாலான அந்த பொம்மை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உர்ஸ் பிஷர் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது.

ஹமத் விமான நிலையத்தின் அதிகாரபூர்வ குறிப்புப்படி, அந்த கரடி பொம்மை விளையாட்டுத்தனத்தை சுட்டுக் காட்டுவதாகவும், அதை கண்டால் மனிதர்களுக்கு தங்களின் குழந்தைப்பருவம் அல்லது தங்களின் இல்லத்தில் உள்ள சிறப்பான பொருட்களின் நினைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விளையாட்டு பொம்மை, 2011 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஏலம் ஒன்றில் 6.8 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்கப்பட்டது.

பணக்காரர்கள் வாழும் நாடு?

ஒரு சிறிய நாடு எவ்வாறு இவ்வளவு செலவுகளை செய்ய முடியும்?

அதற்கு காரணம் அதன் எண்ணெய், வாயு வளம் மற்றும் சில நல்ல முதலீடுகள் ஆகும்.

உலகிலேயே அதிகமான உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தை கொண்ட நாடு கத்தாராகும்.

2016 ஆம் ஆண்டு கத்தாரின் உள்நாட்டு உற்பத்தி விகிதம், 1,29,700 டாலர்களாக இருந்தது என சி.ஐ.ஏவின் உலக நாடுகளின் குறிப்புகள் அடங்கிய தகவல் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சோமாலியாவின் தனி நபருக்கான உள்நாட்டு உற்பத்தி வெறும் 400 டாலர்களாக உள்ளது.

இருப்பினும் கத்தாரின் வளங்கள் சமத்துவமானதாக இல்லை. முன்னாள் அரசரான ஷேக்-ஹமத்-பின்-காலிஃபா-அல்-தனியின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர்களாக இருந்த போதிலும் அங்கு குடிபெயர்ந்தர்களை பிபிசி நேர்காணல் செய்த போது அவர்கள் மாதம் வெறும் 350 டாலர்கள் மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்தனர்.

http://www.bbc.com/tamil/global-40177822

  • தொடங்கியவர்

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்! #MustKnow

 
 
 

கத்தார்

ரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன் முறித்துள்ளன... வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன. கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளன. அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கத்தாரின் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு அதிகமிருக்கிறது.

அந்தத் தேசத்தின் பிரச்னை... அதுசம்பந்தமான நமக்குள்ள சந்தேகங்கள் குறித்த விளக்கம்தான் கீழே உள்ள 12 கேள்வி பதில்கள்... 

ஏன் திடீரென்று கத்தார் தேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது... அரபு தேசங்கள் தங்கள் ராஜதந்திர உறவுகளை ஏன் முறித்துக்கொண்டன...?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோமானால், இது திடீரென்று முளைத்த பிரச்னை அல்ல... 2014 ஆம் ஆண்டு முதலே கத்தார் தேசத்தை, வளைகுடா ஆலோசனை சபை (Gulf Cooperaion Council) சந்தேகக் கண்ணோடுதான் அணுகிவந்தது. அது, கத்தார் நம்மோடு கைகுலுக்கிக்கொண்டே, ஈரான், ஹமாஸுடன் கைகுலுக்குவதாகச் சந்தேகித்தது. அப்போதே, கத்தாரை எச்சரித்தது. ஆனால், இப்போது எழுந்துள்ள பிரச்னைக்குக் காரணமாகக் கூறப்படுவது கத்தார் இளவரசர் ஷேக் தமீமின் உரை. 

அண்மையில் நடந்த ராணுவ பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய ஷேக் தமீம், “ஈரான், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் ஹமாஸுடன் நாம் இணக்கம் பாராட்ட வேண்டும்” என்று பேசியதாக, கத்தார் தேசத்துக்குச் சொந்தமான கத்தார் செய்தி நிறுவனத்தின் இணையதளம், சமூக ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்துதான் பல தேசங்கள் தங்கள் ராஜாங்க உறவுகளை முறித்துள்ளன. 

ஹூம்...  வளைகுடா ஆலோசனை சபை என்றால் என்ன...?

வளைகுடா ஆலோசனை சபை என்பது அரசியல், பொருளாதாரக் கூட்டமைப்பு. இது, 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. இதில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் உள்ளன. 

அந்த அமைப்பிலுள்ள எந்தெந்த தேசங்கள் கத்தாருடனான உறவை முறித்துள்ளன..? 


பஹ்ரைன்தான் முதலில் தன் உறவை முறித்தது. அதைத் தொடர்ந்து பத்து நிமிட இடைவெளியில் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து, மாலத்தீவு என அடுத்தடுத்து தனது உறவை முறித்துக்கொண்டன. சில நாள்களுக்குப் பின் ஜோர்டானும் தன் உறவை முறித்துக்கொண்டது. 

சரி... ஷேக் தமீம் அப்படிப் பேசியது உண்மையா... அவர் ஹமாஸுடன் இணக்கம் பாராட்ட வேண்டுமென்றா பேசினார்...?

'இல்லை' என்கிறது கத்தார். அந்தச் செய்தி தங்கள் ஊடகத்தில் வந்த சில நிமிடங்களிலேயே இதை மறுத்துவிட்டது. தங்கள் இணையதளம்... சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் ஹேக்கர்ஸால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியது. இதுகுறித்து விசாரித்த அமெரிக்காவின் FBI-யும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. FBI அமைப்பு, கத்தாரின் செய்தி இணையதளத்தை ஹேக் செய்தது ரஷ்யர்கள் என்கிறது. ரஷ்ய அரசு இதை மறுத்துவிட்டது. ரஷ்ய அரசுக்கும் இந்தச் செயலுக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டது.

ஹமாஸ்... தெரிகிறது. அது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) என்றால் என்ன... அதை இஸ்லாமிய நாடுகளே வெறுக்க என்ன காரணம்...?


இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) 1928 ஆம் ஆண்டு எகிப்து இஸ்லாமிய அறிஞர் ஹசன் - அல்- பானாவால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது தொடக்கத்தில் அறக்காரியங்களில் ஈடுபட்டுவந்தது. அப்துல் நாசருடன் இணைந்து எகிப்தில் பிரிட்டன் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், முடியாட்சிக்கு எதிராகவும் போர் செய்தது. நாசரை அந்தத் தேசத்தின் அதிபராக அமரவைத்ததில் இந்த அமைப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆனால், நாசர் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தழுவியது இந்த அமைப்புக்குப் பிடிக்கவில்லை. அது விரும்பியது இஸ்லாமிய தேசத்தை. இதனால், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முன்னணித் தலைவர் சையத், நாசரை படுகொலை செய்யத் திட்டமிட்டார்.. ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சையத் கைதுசெய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். 

இந்த அமைப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்ப்பதாகவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வந்ததையடுத்து பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, சவுதி, சிரியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்துள்ளன. 

ரஷ்யா இந்த அமைப்பைத் தடை செய்ததற்கும்... கத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்ததில் ரஷ்யா பெயர் அடிபடுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா...?

இருக்கலாம்... கத்தார் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதி, கத்தாரைத் தனிமைப்படுத்தக்கூட இதுபோலச் செய்திருக்கலாம். இந்த விவகாரத்தில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. கத்தார், பாலஸ்தீனத்துக்கும் ஹமாஸுக்கும் உதவி செய்வதாக இஸ்ரேல் நினைக்கிறது. அதனால், இஸ்ரேல் - சவுதி கூட்டணி தந்திரவேலைதான் இது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. 

ஹூம்... கத்தார் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இதை வளைகுடா ஆலோசனை சபையில் விழுந்த விரிசலாகக் கருதலாமா...?
அப்படிக் கருத முடியாது. கத்தாரைத் தவிர, அனைத்து நாடுகளும் இணக்கமாகத்தான் இருக்கின்றன. குவைத் இந்த விவகாரத்தில் பிற நாடுகளைச் சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது. 

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன...?

'கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், கத்தாரைக் கடுமையான வார்த்தைகளால் தாக்கி இருக்கிறார். ''அடிப்படைவாதிகளுக்குக் கத்தார் பொருளாதார உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்'' எனக் கடுமையான சொற்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். கத்தாரின் மிகப்பெரிய ராணுவ விமானத் தளமான அல்-உதய்த் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. புவியியல்ரீதியாகக் கத்தார், அமெரிக்காவுக்கு மிக முக்கியமான நாடு. அதனால், அமெரிக்கா எந்தக் கடுமையான நிலைப்பாடும் எடுக்காது என்றுதான் தோன்றுகிறது. 

அல்-ஜசீரா தலைமை அலுவலகம்கத்தார் விவகாரத்தில் அல்-ஜசீராவை முடக்க வேண்டும் என்ற குரலும் கேட்கிறதே...?

ஆம். அதை முன்வைப்பது சவுதிதான். நேற்று இரவு பத்து மணிக்கு (இந்திய நேரத்தில்) தங்கள் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டது. அல்-ஜசீரா... தொடந்து சிரியாவின் அவலங்களையும், அரேபிய ஆட்சியாளர்களின் முடியாட்சி அட்டூழியங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. இது, சவுதிக்குச் செளகர்யமான ஒன்று... அதனால், இந்தப் பிரச்னையில் அல்-ஜசீராவையும் முடக்கப் பார்ப்பதாகத்தான் தெரிகிறது. 

சரி... அங்குள்ள மக்களின் நிலை என்ன... குறிப்பாக இந்தியர்களின் நிலை... உணவுத் தட்டுப்பாடு என்றெல்லாம் செய்தி வருகிறதே...?

கத்தார் தனது உணவுத் தேவைக்காகப் பெரும்பாலும் அண்டை நாடுகளைத்தான் நம்பி இருக்கிறது. எல்லைகள் சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் உணவுக்காகப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, உணவுகளை அதிக அளவில் சேகரித்துவைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஆட்சியாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள். 

கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர்எந்தெந்த நாடுகள் கத்தாருடன் உறவில் இருக்கின்றன...?

பஹ்ரைன், எகிப்து, சவுதி, மாலத்தீவு, அமீரகம், லிபிய கலிஃபா ஹஃப்தார் அரசாங்கம் மற்றும் யேமனைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கத்தாருடன் உறவில்தான் இருக்கின்றன. 94 தூதுக்குழுக்கள் கத்தாரில் இயங்கி வருகின்றன. 34 நாடுகளின் தூதரக அலுவலகங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கின்றன. 

எப்போது இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்...?

 

இந்தப் பிரச்னையில் எங்கள் பிழை எதுவுமில்லை. நாங்கள் சரணடைய மாட்டோம் என்று கத்தார் கூறிவிட்டது. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் முகமதுபின் அப்துல் ரகுமான், “நாங்கள் எதற்காகவும், யாருக்காகவும் எங்கள் வெளியுறவுக் கொள்கைகளையும், தேசத்தின் இறையாண்மையையும் விட்டுத் தரமாட்டோம். சர்வதேசச் சமூகம் எங்களுடன் இருக்கிறது. அது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உதவும்” என்று கூறியுள்ளார். இதனிடையே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது. இப்படியானச் சூழலில் இந்தப் பிரச்னை உடனே முடியும் என்று தோன்றவில்லை. 

http://www.vikatan.com/news/coverstory/91788-all-about-qatar-gulf-crisis-in-12-questions-and-answers-mustknow.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.