Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

Featured Replies

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 50

பாப்லோவின் உறவினர்களும், சகாக்களும் மட்டுமல்ல. எஸ்கோபாரை ஆதரித்தார்கள் என்கிற காரணத்துக்காக அப்பாவி  இளைஞர்கள் பலரும் கொல்லப்பட்ட அக்கிரமத்தை அன்றைய கொலம்பிய கெட்ட போலீஸ், எவ்விதமான தயக்கமும்  இன்றி அரங்கேற்றியது.

மெதிலின் புறநகர் பகுதியான அரான்ஜுவேஸில் நடந்த சம்பவம் ஓர் உதாரணம். அங்கிருந்த குடியிருப்புப் பகுதி  ஒன்றுக்கு விலையுயர்ந்த எஸ்யூவி கார் ஒன்று திடீரென வந்தது. ஒரு பள்ளி மைதானத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டது.  இதுபோன்ற சொகுசுக் கார்களில் கார்டெல்காரர்கள்தான் வருவது வழக்கம்.
13.jpg
கண்ணாடிகள் மொத்தமும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, காருக்குள் யார் இருந்தது என்றே தெரியவில்லை. கதவைத் திறந்து  கொண்டு ஆறேழு பேர் திடீரென வெளியேறி வந்தனர். அத்தனை பேரின் கைகளிலும் மெஷின் கன் இருந்தது.நிதானமாக வந்தவர்கள் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டினர். ஒரே ஒரு கேள்விதான்.

“பாப்லோ எங்கே?”“தெரியாது...” என்று பதில் சொன்னவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்கள். இளம்  பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு பள்ளி மைதானத்தில் பாலியல்ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டனர். இளைஞர்களை  கொத்தாக இழுத்துச் சென்றார்கள்.

ஓரிரவு முழுக்க ஆயுதம் தாங்கிய போலீஸாரால் அரான்ஜுவேஸ் குடியிருப்புவாசிகள் கடுமையாக சித்திரவதை  செய்யப்பட்டனர்.விடிந்தபோது அந்தக் கார் அங்கே இல்லை.மாறாக, மைதானத்தில் ஆங்காங்கே இளைஞர்களும்,  இளம்பெண்களும் சடலங்களாக வீழ்ந்துகிடந்தனர்.இந்த சித்திரவதையில் இருந்து தப்பிய வயதான தம்பதியினர்,  தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பாப்லோ எஸ்கோபாரிடம் நேரடி வாக்குமூலமாகவே சொன்னார்கள்.
13a.jpg
அரான்ஜுவேஸ் மட்டுமல்ல, மெதிலின் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற சித்திரவதைகள் தொடர்ந்தன.டீகோ மாபாஸ் என்கிற கார்டெல் டான் ஒருவர், மெதிலின் நகரிலிருந்து பொகோடாவுக்கு வியாபார நிமித்தம் காரில்  சென்றார். மெதிலினிலிருந்தே அவரது கார் பின்தொடரப்பட்டது அவருக்குத் தெரியாது. பொகோடா நகருக்குள்  நுழைவதற்கு முன்பாக டீகோ வழிமறிக்கப்பட்டார்.

காரிலிருந்து அவரையும், அவரது மெய்க்காவலர்களையும் இழுத்துப் போட்டு போலீஸ் அடித்தது. ஒரு வேனில்  மொத்தமாக அடைக்கப்பட்டு எங்கோ இழுத்துச் செல்லப்பட்டார்கள். இன்றுவரை அவர்களது பிணம் கூட  கிடைக்கவில்லை. போலீசில் லெப்டினன்ட் பதவியில் இருந்த போராஸ் என்பவர் பாப்லோ எஸ்கோபாரின் விசுவாசியாக  இருந்தார். கார்டெல்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனம் செய்து கொண்டிருந்த கெட்ட போலீஸின் நடவடிக்கைகளை  அவர்தான் பாப்லோவுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்.

‘சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அநியாயம் செய்யும் போக்கை  சட்டரீதியாக எதிர்கொள்ளுங்கள்’ என்று பாப்லோ அவரிடம் கோரிக்கை வைத்தார். போராஸ், தன்னுடைய  மேலதிகாரிகளிடம் இந்த கெட்ட போலீஸின் நடவடிக்கைகளைப் பற்றி புகார் சொன்னார். மாகாண நீதிபதியின்  பார்வைக்கும் இந்த அநியாயங்களை ஆதாரபூர்வமாகக் கொண்டு சென்றார்.

நியாயம் கேட்டவருக்கே அநியாயம்தான் பதிலாகக் கிடைத்தது.போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதை  மருந்து கடத்துவதாகக் கூறி போராஸை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பாப்லோ, சிறையிலிருந்த  தன்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி போராஸ் தப்பிக்க வழிவகையை உருவாக்கினார். சிறையில் இருந்து தப்பிய  போராஸ், சில வாரங்கள் கழித்து நடுத்தெருவில் நாயைப் போல சுடப்பட்டு வீழ்ந்துகிடந்தார்.

போராஸுக்கு நேர்ந்த கதியைப்  பார்த்த நல்ல போலீஸ், ஊழல் அதிகாரிகளுக்கு ஊதுகோலாக மாறாவிட்டால்  தங்களுக்கும் இதே கதிதான் என்று நினைத்தார்கள். மனசாட்சி இருந்த பலரும் போலீஸ் வேலையை ராஜினாமா  செய்துவிட்டு ஊருக்குப் போய் பண்ணை வைத்து பிழைத்தார்கள்.

போலீஸ், போதை கும்பலை சமாளிக்க புதிய புதிய நடவடிக்கைகளை எடுத்தார்கள். மூன்று, நான்கு போலீஸாரை  வைத்து ஒரு ஸ்டேஷன் என்று நூற்றுக்கணக்கான ஸ்டேஷன்களை மெதிலின் நகரில் தெருவுக்குத் தெரு திறந்தார்கள்.  ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் நவீன கொலை ஆயுதங்கள் நிரம்பிக் கிடந்தன.என்ன செய்தாலும் மேலிடம்  கண்டுகொள்ளாது என்கிற நிலையில் போலீஸ்காரர்கள் தங்களுடைய மன வக்கிரங்களை பொதுமக்களிடம் காட்ட  ஆரம்பித்தார்கள்.

செக்போஸ்டுகளில் வாகனங்களை நிறுத்துவார்கள். தகுந்த பேப்பர் இல்லையென்றால் டுமீல்தான். சின்னச் சின்ன  விஷயங்களுக்குக் கூட துப்பாக்கியை நீட்ட ஆரம்பித்தார்கள். போலீஸ், தங்களை குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்றும்  என்கிற நிலை போய், போலீசிடமிருந்து தங்களை கிரிமினல்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைக்கு  வந்திருந்தார்கள் பொதுமக்கள்.

1988ஆம் ஆண்டு வாக்கில் இந்த சூழல்.வேறு வழியின்றி போலீசுடன் போர் புரிவது என்கிற நிலைக்கு பாப்லோ  எஸ்கோபார் வந்திருந்தார். பாப்லோவின் ஆட்கள் துப்பாக்கியும், வாளுமாக தெருவில் இறங்கினார்கள். கண்ணில் பட்ட  போலீஸையெல்லாம் சுட்டார்கள். வெட்டிச் சாய்த்தார்கள். சேரிகளுக்கு பாதுகாவலர்களாக நின்றார்கள். காவலர்  குடியிருப்புகள் ஒட்டுமொத்தமாக இவர்களால் வேட்டையாடப்பட்டன. கொலம்பியாவில் போலீஸுக்கே பாதுகாப்பு  தேவைப்படும் நிலை ஏற்பட்டது.

சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து அதிகாரிகளைப் போட்டுத் தள்ளிவிட்டு, அசால்ட்டாக  போய்க் கொண்டிருந்தார்கள்.போலீசைக் கொன்றவர்களுக்கு உரிய வெகுமதியை பாப்லோ அளித்தார். கொல்லப்பட்ட  போலீஸ்காரரின் பதவிக்கு ஏற்ப ஆயிரம் டாலரிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு டாலர் வரை இந்த சன்மானம்  வழங்கப்பட்டது.
13b.jpg
‘போலீசைக் கொன்றால் பணம்’ என்கிற இந்த பணக்கார விளையாட்டை விளையாட போக்கிரிகள் மட்டுமின்றி,  சாதாரண பொதுஜனங்களும் ஆர்வம் காட்டினார்கள். டிராஃபிக்கில் தங்கள் வண்டியைக் கை காட்டி நிறுத்தியவரை  கழுத்தறுத்தார்கள். போலீஸ் நிலையங்கள் மீது வெடிகுண்டு வீசினார்கள். எங்காவது தனியாக போலீஸ்காரர் சிக்கினால்  அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.

தாங்கள் செய்த இந்த சாதனைகளை அவர்கள் மறைக்க விரும்பவில்லை. மாறாக ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டி  பாப்லோவிடம் பணம் பெற்றார்கள்.ஒருகட்டத்தில், நான் இத்தனை போலீஸ்காரர்களை இன்று கொல்லப் போகிறேன்  என்று முன்பே அறிவித்துவிட்டு அட்வான்ஸ் வாங்கிச் செல்லுமளவுக்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

13c.jpg
பல்லாயிரக்கணக்கான போலீசார் பொதுமக்களாலும் போக்கிரிகளாலும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு  நிவாரணம் கொடுத்தே அரசாங்கம் திவாலாகி விடுமோ என்கிற நிலைமை.“அவர்கள் என்னை கொல்ல முயன்றார்கள். பதிலுக்கு நான் அவர்களைக் கொன்றேன்...” என்று இந்த சம்பவங்களை  ஒருமுறை நியாயப்படுத்தினார் பாப்லோ எஸ்கோபார். போதை கடத்தல்காரர்கள், பொதுமக்களை கிரிமினல்களாக  உருமாற்றிய இந்த சம்பவம் உலகில் வேறெங்கும் நடந்ததில்லை. குழம்பிப் போன கொலம்பிய அரசு, சட்டத்தின்  அடிப்படையில் யோசிக்கவில்லை. மாறாக கிரிமினல்கள் எப்படி யோசிப்பார்களோ அப்படி யோசித்தது.

கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் வேலையை கிரிமினல்களுக்கு கொடுத்தது. இந்த கிரிமினல் போலீஸ் மூர்க்கமாக  பொதுமக்கள் மீது பாய, பொதுமக்கள் இவர்கள் மீது பாய... யாருமே நகரில் உயிரோடு மிஞ்ச மாட்டார்களோ என்கிற  அளவுக்கு வன்முறை சூழல்.பாப்லோ, நாட்டின் அதிபர் சீசர் கவேரியாவுக்கு கடிதம் எழுதி, இந்த வன்முறை  வெறியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னார். ஏனெனில், இந்த விளையாட்டு ஒருகட்டத்தில் அவர் கையை  மீறிப் போய்விட்டது. அதிபரின் நிலையும் அதுவே. அவரால் கிரிமினல் போலீசாரின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த  முடியவில்லை.அரசாங்கமும், கார்டெல்களும் பரஸ்பரம் புலிவாலைப் பிடித்துவிட்டு எப்படி விடுபடுவது என்று  தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்கள்.
 

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்

http://www.kungumam.co.in

  • Replies 70
  • Views 19.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

 

 

யுவகிருஷ்ணா - 51

எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பாப்லோ எஸ்கோபாரும், அவரைச் சார்ந்தவர்களும் இடம் பெயர்ந்து கொண்டே  இருக்க வேண்டியதாயிற்று. தலைமறைவாக இருந்து கொண்டே கார்டெல்லை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார் பாப்லோ. ஆரம்பத்தில்  கொலம்பிய போலீசும், மிலிட்டரியும், பின்னர் அமெரிக்க சிஐஏவின் ஒட்டுண்ணிகளாக செயல்பட்ட சில போட்டி கார்டெல்கள், அமெரிக்காவின் டெல்டா  ஃபோர்ஸ் ஏஜெண்டுகள், பாப்லோவின் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் ஏவிவிட்ட தொழிற்முறை கொலையாளிகள் என்று அவரை வேட்டையாட  அலைந்து கொண்டிருந்தோரின் பட்டியல் பெரியது.
19.jpg
அரசியலில் ஈடுபட்ட புதிதில் பாப்லோவை ஆதரித்த ஊடகங்கள் பலவும், அமெரிக்க மிரட்டலுக்கு பயந்து அவரை உலகின் மிகக்கொடூரமான  பயங்கரவாதியாக கட்டமைக்கத் தொடங்கின. பாப்லோவை ஒழித்துவிட்டால் உலகத்தில் போதைத் தொழிலே நடக்காது என்கிற அளவுக்கு ஊடகங்கள்  ஊதிக் கொண்டிருந்தன. உலகப் பணக்காரர்களில் டாப்-10 பட்டியலில் இருப்பவர் பேய் மாதிரி அலைந்து கொண்டிருக்க வேண்டியதானது.  கொலம்பியாவில் திடீர் திடீரென்று எங்காவது தோன்றுவார். அதே வேகத்தில் காணாமல் போவார். மெதிலின் நகருக்குள் பாப்லோ வருகிறார் என்றால்  விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே தகவல் தெரியும்.

நாக்கை அறுத்தாலும் பாப்லோவை அவர்கள் காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்னுமளவுக்கு முரட்டு விசுவாசிகள் அவர்கள். பொதுவாக  கொலம்பியாவின் ஏழைகளுக்கு பாப்லோ மீது பாசம் இருந்தது. அவர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர், அரசாங்கத்துக்கே தங்கள் மீது  அக்கறை இல்லாதபோது, தங்களுக்காக வாழ்ந்தவர் என்கிற எண்ணம் வலுவாகவே இருந்தது. எனவேதான் அத்தனை ஆண்டுகளாக உலகின் நெம்பர்  ஒன் நாட்டுக்கே அவரால் ‘தண்ணீர்’ காட்ட முடிந்தது. ஒரு காலத்தில் மக்களை பாப்லோ பாதுகாத்தார். அவருடைய கடைசிக் காலம் முழுவதும்  அவரைப் பாதுகாத்தவர்கள் மக்களே.

பாப்லோவின் தலைமறைவுக் காலம் பெரும்பாலும் அவரது பண்ணை வீடுகளிலேயே அமைந்தது. காடுகளுக்கு மத்தியிலும், உயரமான மலைகளிலும்,  வயல்கள் சூழ்ந்த கிராமங்களிலும் என்று விதவிதமான லொக்கேஷன்களில் பாப்லோவுக்கு சொந்தமான சொத்துகள், கொலம்பியா முழுக்க ஏராளமாக  இருந்தன. பாப்லோ எங்கிருக்கிறார் என்பது குஸ்டாவோ உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த வெகுசிலர் எங்கிருக்கிறார்கள்  என்று கூட போலீஸால் கண்டுபிடிக்க முடியாது என்பதே பரிதாபம். யாரையாவது பாப்லோ சந்திக்க விரும்பினால் அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாக  அவருக்கு முன்பாக ‘கட்டாயப்படுத்தப்பட்டாவது’ இழுத்து வரப்படுவார்கள்.

பெரும்பாலும் இம்மாதிரி இழுத்து வரப்பட்டவர்கள் அந்நாளைய முன்னணி வக்கீல்களே. பாப்லோவுக்கு எதிரான வழக்குகளில் கண்ணில் விரல்விட்டு  ஆட்டிக் கொண்டிருந்த வக்கீல்கள் பலரும் இம்மாதிரி இழுத்து வரப்பட்டு, பாப்லோவின் கால்களில் விழுந்து, அவரது கைகளை முத்தமிட்டு  உயிர்ப்பிச்சை வாங்கிக் கொண்டு ஓடினார்கள். ‘பாப்லோவை ஒழிப்பேன்’ என கோஷம் போட்ட சில அரசியல்வாதிகளுக்கும் இதுபோல அன்பான  வரவேற்பு வழங்கப்பட்டதுண்டு. பாப்லோ எந்த அளவுக்கு உஷாராக இருந்தார் என்பதற்கு சான்று அவருடைய அம்மா. தன் மகனை அவர் சந்திக்க  விரும்பும் போதெல்லாம், ஒரு காரில் அழைத்துச் செல்லப்படுவார்.

அப்போது அவருக்கு ஒரு கருப்புக் கண்ணாடி மாட்டப்படும். அந்த கண்ணாடியை மாட்டிக் கொண்டால் எதுவுமே தெரியாது. சொந்த அம்மாகூட ஏதோ  காரணத்தால் போலீசுக்கு தன்னுடைய இருப்பிடம் குறித்த தகவலை கசியவைத்து விடலாம் என்கிற சந்தேகம் ஏனோ அவருக்கு இருந்து கொண்டே  இருந்தது. பாப்லோ, தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகன் சகிதமே ஒவ்வொரு இடத்துக்கும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார். ஒருமுறை  மகளுக்கு நல்ல காய்ச்சல். அப்போது கொலம்பியாவில் குளிர் காலம். ஒரு மலை மீதிருந்த காட்டேஜ் வீட்டில் தங்கியிருந்தார்கள்.
19a.jpg
அங்கிருந்த கனப்பு அடுப்பில் விறகுகளைப் போட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாப்லோ கிதார் இசைத்து, அவரே அருமையாகப் பாடுவார். மகள் தூங்குவதற்காக பாப்லோ பாடிக் கொண்டிருந்தார். மகள் தூங்க ஆரம்பிக்கிறாள். அடுப்பில் போடுவதற்கு விறகு  தீர்ந்துவிட்டது. அடுப்பு அணைந்துவிட்டால் மகளுக்கு குளிருமே என்று பாப்லோவுக்கு கவலை. உதவியாளரை அனுப்பி எங்காவது காய்ந்த விறகுகளை வாங்கிவரச் சொன்னார். அவன் வருவதற்குள் அணைந்துவிடுமோ என்று நினைத்தவர், சட்டென்று தன்னுடைய பையை எடுத்துக் கொட்டினார். கரன்ஸி  கட்டுகள்.

அவற்றைத் தூக்கி எந்த சலனமும் இல்லாமல் அடுப்பில் போட்டு மகளைக் குளிர்காய வைத்தார். சாம்பலான பணம், பல மில்லியன் டாலர்கள்  என்கிறார்கள்! மகள் மீது பாப்லோ கொண்ட பிரியத்துக்கு சான்றாக இந்த சம்பவத்தை இன்றும்கூட கொலம்பியாவில் சிலிர்ப்பாக சொல்லிக்  கொண்டிருப்பார்கள். மெதிலின் நகரின் ராஜாவாக ஆண்டு கொண்டிருந்த காலத்திலும் சரி. இதுபோன்ற தலைமறைவு வாழ்க்கையின் போதும் சரி,   பாப்லோ, ஒரே மாதிரியாகத்தான் இருந்தார். எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்தது.

“வரலாற்றில் எந்தவொரு டானும் வயதான காலத்தில் மரணமடைந்தது கிடையாது. ஏனெனில், அவனுக்கு வயதாக போலீசும், சட்டமும்  அனுமதிக்காது...” என்று சிரித்தவாறே சொல்வார். எப்போதுமே பாப்லோ இரவில் வெகுநேரம் விழித்திருப்பார். பிற்பகலில்தான் கண் விழிப்பார். அவரது  உயிர் நண்பன் குஸ்டாவோ இதற்கு நேரெதிர். மாலையிலேயே தூங்கி, அதிகாலையிலேயே கண் விழிப்பான். 24 மணி நேரத்தை இவர்கள் இதுமாதிரி  ‘ஷிப்ட்’ போட்டு பார்த்துக் கொண்டதாலேயே பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிந்தது.

பாப்லோவுக்கு பல் துலக்குவதில் அலாதி பிரியம். விழித்து எழுந்ததுமே பல் துலக்குவதற்கு மட்டுமே அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார்.  விலையுயர்ந்த டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ் பயன்படுத்துவார். பற்கள் பளீரென்று இருப்பதுதான் ஒரு பிசினஸ்மேனுக்கு அவசியமான தோற்றத்தைக்  கொடுக்கும் என்பார். குளித்து முடித்ததுமே பளிச்சென்று ஒரு சட்டையை எடுத்து அணிவார். ஒருநாளைக்கு ஒரு சட்டை. ஒருமுறை அணிந்த  சட்டையை மீண்டும் அணிவதில்லை. எனவே, ஆண்டுக்கு குறைந்தது 365 சட்டைகள் அவருக்கு தேவைப்பட்டன.

பாப்லோ எஸ்கோபார் அணிந்துவிட்டு கழற்றிய சட்டையை வாங்குவதற்கு கொலம்பியாவில் பெரும் போட்டா போட்டி நிலவியது. பார்ட்டிகளில் ‘இது  பாப்லோவோட சட்டை தெரியுமா?’ என்று கெத்து காட்டுவது அப்போது ஃபேஷன். சமூகத்தின் பெரிய மனிதர்கள் சிலருக்குமே கூட, பாப்லோ போட்ட  சட்டையை வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தது. பாப்லோவின் காலை உணவு பெரும்பாலும் சோள அடை, முட்டை  பொடிமாஸ், நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தக்காளி. டிபன் முடித்ததுமே பால் கலக்காத திக்கான டிகாக்ஷன் காஃபி. குடும்பத்தோடு இருக்கும்போது  பாடுவது பாப்லோவுக்கு விருப்பம் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சில நேரங்களில் பாதுகாப்புக் காரணத்துக்காக குடும்பத்தை வேறெங்காவது தனித்து தங்க வைப்பார். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தன் மனைவிக்கு  காதல் ரசம் சொட்ட கவிதைகள், மகளுக்கு ரைமிங்கான பாடல்கள் என்று எழுதி தன்னுடைய பிரத்யேக கூரியர் மூலமாக கொடுத்து அனுப்புவார்.  கவிதை எழுத மூடு வராவிட்டால் பாட்டுப் பாடி, அதை கேசட்களில் ரெக்கார்டு செய்தும் அனுப்புவதுண்டு. தலைமறைவு வாழ்க்கையில் தன்  குடும்பத்தை - குறிப்பாக மகள் மேனுவலாவை - பிரிவதுதான் பாப்லோவுக்கு துயரமாக இருந்ததே தவிர, மற்றபடி வேறெந்த புகாரும் இல்லை.

 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-52

ஒரு காலத்தில் ஓட ஓட விரட்டியவர்களை ஓடி ஒளிய வைத்தது காலம். தொடர்ந்து பல காலமாக பாப்லோவும், அவரது சகாக்களும் போலீஸுக்கும்,  ராணுவத்துக்கும் பயந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். கனல் அடுப்பில் பணத்தைப் போட்டு குளிர் காயுமளவுக்கு பாப்லோவின் செல்வம் கொட்டிக்  கிடந்தது. இருந்தும் என்ன பயன்? உயிர் பிழைக்க நாய் படாத பாடு. ஒரு காலத்தில் இவரோடு சமரசம் செய்துகொள்ள அரசாங்கமும்,  அரசியல்வாதிகளும் தேவுடு காத்திருந்தார்கள். இப்போதோ, பாப்லோ அந்த நிலையில். ‘திருப்பி அடிப்போம்’ என்றெல்லாம் வீராவேசம் பேசக் கூடிய  காலம் மலையேறிப் போனது. நாட்கள் செல்லச் செல்ல நிலைமை படுமோசம்.
19.jpg
குடும்பத்தை பாதுகாப்பாக இடப்பெயர்வு செய்துவிட்டு, நெருங்கிய சகாக்களோடு வனவாசம் கொண்டிருந்தார். பாதுகாப்புக்குக் கூட ஆட்கள் இல்லை.  “நம்முடைய பாதுகாப்புக்காக அவர்களுக்கு கணிசமாக சம்பளம் கொடுக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் - நாம் பாதுகாவலர்களுக்கு கொடுக்கும்  சம்பளத்தைவிட பன்மடங்கு பணத்தை நம் தலைக்கு விலை வைத்திருக்கிறார்கள். அந்த விலைக்கு எவனாவது ஆசைப்பட்டு விட்டால்?” என்று  ஒருமுறை சொன்னார் பாப்லோ. பாப்லோவின் தலைக்கு ஒரு கோடி டாலர் விலையை அமெரிக்க அரசு நிர்ணயித்திருந்தது.

ஒரு மனிதனை காட்டிக் கொடுக்க (இன்றைய மதிப்பில்) 70 கோடி ரூபாய் என்றால் முற்றும் துறந்த முனிவனுக்குக் கூட ஆசை வருமே? மெதிலின்  நகரில் இருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் இருந்த அமாகா என்கிற பண்ணைவீடு ஒன்றில் தன் சகோதரருடன் ஒருமுறை தங்கியிருந்தார் பாப்லோ. வீடு  இருப்பதே தெரியாத அளவுக்கு அந்த வீட்டைச் சுற்றி ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மரங்கள் வளர்ந்து காடாக உருமாறியிருந்தது.  எங்கு பார்த்தாலும்  வண்ண மலர்கள் மலர்ந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும். பாப்லோவுக்கு இந்த இடம் மிகவும் பிடித்துப் போய் விட்டது. வெளி உலகோடு  எந்தத் தொடர்புமின்றி சுமார் எட்டு மாதங்கள் இங்குதான் பாப்லோ தங்கியிருந்தார்.

வயதான தம்பதியினரான அல்பெர்ட்டினோ மற்றும் இல்டாவுக்குச் சொந்தமான பண்ணை அது. தினமும் ஷேவிங் செய்து பளிச்சென்று  தோற்றமளிக்கும் பாப்லோ, இங்கு தங்கியிருந்தபோது சேகுவேரா பாணியில் தாடி வளர்க்க ஆரம்பித்தார். கோட், சூட் என்று நாகரிக உடை  அணிவதைத்  தவிர்த்தார். அழுக்கான ஜீன்ஸ் பேண்ட், தன்னுடைய உடல்வாகுக்கு சம்பந்தமே இல்லாத அளவில் ஒரு டீசர்ட் என்று சராசரி  கொலம்பியன் தோற்றத்துக்கு உருமாறினார். வீட்டுக்கு சொந்தக்காரரான அல்பெர்ட்டினோ ஓர் ஓவியர். மெதிலின் நகரில் பெயிண்டிங் காண்ட்ராக்டும்  எடுத்துச் செய்வார்.

ஏதாவது கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்க அல்பெர்டினோ கிளம்பும்போது, பாப்லோவும் கூடவே பெயிண்ட் டப்பாவை எடுத்துக் கொண்டு  கிளம்பிவிடுவார். இதுபோல பலமுறை மெதிலின் நகருக்கு பெயிண்டர் வேடத்தில் சென்றிருக்கிறார். நகரில் யாருமே, பாப்லோவை இந்தத்  தோற்றத்தில் அடையாளம் கண்டு கொண்டதில்லை. இம்மாதிரி நகரத்துக்கு போகும்போது அரசாங்கத்தின் முக்கியப் பிரமுகர்களோடு சமரசம்  செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்தப் பயன்படுத்திக் கொண்டார். பாப்லோ, எந்தக் கதவைத் தட்டினாலும் யாரும் திறக்கத் தயாராக  இல்லாத காலம் அது. அதற்காக பாப்லோ கதவைத் தட்ட சலித்ததே இல்லை.
19a.jpg
அரசாங்கத்துடன் ஒத்துப்போக ஒரு சிறு பிடி கிடைத்தால்கூட போதுமென்று கருதிக் கொண்டிருந்தார். கணக்கு வழக்கில் இல்லாத பாப்லோவின்  பணத்தை பதுக்கி வைத்திருந்த பெருச்சாளிகள் பலரும், இவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தும்கூட தங்கள் சுயநலத்துக்காக பாப்லோவிடமிருந்து  வெகுதூரம் விலகி நின்றார்கள். ஒரு நாள் இரவு. மெதிலினிலிருந்து அமாகாவுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார் பாப்லோ. காரை  அல்பெர்ட்டினோதான் ஓட்டிவந்தார். இவர்களை போலீஸ் ரோந்து வண்டி ஒன்று பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது இவர்களுக்குத் தெரியாது. சரியாக  வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக தெருமுனையில் இவர்களது காரை மறித்து நின்றது போலீஸ் வண்டி.

காருக்குள்ளிருந்த பாப்லோ, சட்டென்று கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தயாரானார். போலீஸ் காரில் இருந்து சார்ஜெண்ட் ஒருவர் இறங்கி  வந்தார். “இந்த நேரத்துலே எங்கே போயிட்டு வர்றீங்க..?” “மெதிலினுக்கு. நான் பெயிண்டிங் காண்ட்ராக்டர். ஒரு வேலையை முடிச்சிட்டு வர்றேன்...”  “உள்ளே யாரு. பார்க்க கேடிப்பய மாதிரி இருக்கான்...” பழைய பாப்லோவாக இருந்திருந்தால், அந்த போலீஸ்காரனின் தலை மண்ணில் உருண்டிருக்கும்.  “அய்யா, நான் சார் கிட்டே அசிஸ்டெண்டா வேலை செய்யுறேங்க...” சட்டையில் பெயிண்ட் தெளிக்கப்பட்ட, முகமெல்லாம் சுண்ணாம்பு தெறித்த  பாப்லோவை, அந்த போலீஸ் பெயிண்டர் என்று நினைத்ததில் ஆச்சரியமில்லை.

“ஒண்ணுமில்லை சார். பெயிண்டருங்களாம்...” போலீஸ்காரர், காரில் இருந்த உயரதிகாரியிடம் சொல்ல, வண்டி கிளம்பியது. இது வழக்கமான  சோதனைதான். ஆனால் - மாட்டிக் கொண்டோமோ என்று பாப்லோவின் இதயம் தடதடத்து விட்டது. குமுறிக் கொண்டிருந்த உள்ளத்தோடு  வீட்டுக்குள்ளே நுழைந்தவர், எதிர்ப்பட்ட பொருட்களையெல்லாம் கோபத்தோடு காலால் எட்டி உதைத்தார். “நான் அவ்வளவுதானா? கொலம்பியாவின்  காட்ஃபாதர் செத்துவிட்டானா? போதை உலகின் பேரரசன் இப்படித்தான் சாக்கடைப் பெருச்சாளியைப் போல பயந்து பயந்து வாழ வேண்டுமா?”  சீற்றத்தோடு ஒலிக்க ஆரம்பித்த அவரது குரல், அப்படியே உடைந்தது.

குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். பதறிப்போன பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோவும், அல்பெர்ட்டினோ தம்பதியினரும் எவ்வளவோ  சமாதானப்படுத்தியும் பாப்லோவின் அழுகை நிற்கவேயில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு அடிக்கடி பாப்லோ நகரத்துக்கு செல்ல ஆரம்பித்தார்.  தன்னுடைய புது மாறுவேடத்தை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஒருமுறை போலீஸுக்கு  ஒரு அனாமதேய போன் வந்திருந்தது. மெதிலின் நகரின் பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி, குறிப்பிட்ட நேரத்தில் அங்கே  பாப்லோ எஸ்கோபார் வரவிருக்கிறார் என்கிற தகவல்தான் அது.

போலீஸ், பெரும்படையோடு அந்த நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டது. இண்டு இடுக்கு விடாமல் எல்லா இடத்தையும் சல்லடைபோட்டுத்  தேடியது. அந்த ஹோட்டலின் நான்காவது மாடி ஜன்னலுக்கு பெயிண்ட் அடித்தவாறே அத்தனை அமளி துமளியையும் ரசித்துக் கொண்டிருந்தார்  பாப்லோ. அவருக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் நிரம்பவே பிடித்து விட்டது. இதன் பிறகுதான் எந்த இடத்துக்குச் சென்றாலும் போலீஸ்  தலைமையகத்துக்கு போன் போட்டு, “அங்கே பாப்லோ இருப்பான். முடிஞ்சா அவனைப்பிடி...” என்று சொல்லுவார்.போலீஸ் சற்றும் எதிர்பாரா  வேடங்களில் அங்கே தோன்றி, தன்னை அவர்கள் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிப்பார்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா- 53

நதிக்கரைகளில் மனித குலம் நாகரிகம் அடைவதற்கு முன்பு காடுதான் அவனது வீடு. இன்றும்கூட தனக்கு ஆபத்து என்றால் மறைந்து தன் உயிர்  காத்துக்கொள்ள காடுகளுக்குத்தான் ஓடுகிறான். போதை உலகின் பேரரசன் மட்டும் விதிவிலக்கா என்ன? தென்னமெரிக்கா, அடர்ந்த காடுகளுக்கு பேர்  போனது. நாட்டில் பிரச்னை என்றால், காடுகளுக்குள் தஞ்சமடைவதுதான் அங்கே வழக்கம். அரசுக்கு எதிரானவர்கள் அத்தனை பேரும் அதனால்தான்  காடு குறித்த அறிவை முழுமையாக அடைந்திருந்தார்கள். காட்டினைத் தேடி தஞ்சமடைந்தவனைத் தேடிப் போய் வலை வீசுவது என்பது கொல்லன்  பட்டறையில் குண்டூசியைத் தேடுவது போல.
17.jpg
அடர்ந்த காடுகளில் தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறியளவிலான பண்ணை வீடுகளையும் ஆங்காங்கே அமைத்திருந்தார் பாப்லோ. ‘பேரட்’ என்று  பெயர் வைத்திருந்த பண்ணை வீடு ஒன்றினில் பாப்லோ எஸ்கோபார், அவருடைய சகோதரர் ராபர்ட்டோ, பாப்லோவின் மைத்துனன் மரியோ  ஹெனாவ், நெருங்கிய சகா ஜார்ஜ் ஓச்சா மற்றும் ஓச்சாவின் மனைவி ஆகியோர் சில காலம் தங்கியிருந்தனர். பேரட் பண்ணையில் எல்லாவிதமான  வசதிகளும் இருந்தன, சுதந்திரத்தைத் தவிர. அதிகபட்சமாக காட்டின் எல்லை வரை இவர்களது நடமாட்டம் இருக்கலாம்.

காட்டை விட்டு வெளியே வந்தால் வேட்டையாட காவல்துறையும், ராணுவமும் இரவும் பகலுமாகத் திரிந்து கொண்டிருந்தன. நாட்டில் என்ன  நடக்கிறது என்பதையே டிவி செய்திகள் வழியாகத்தான் பாப்லோ அறிந்து கொண்டிருந்தார். பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோவுக்கு இரவுநேர  பாதுகாப்புப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே, அவர் பிற்பகல் 3 மணிக்கெல்லாம் தூங்கப்போய் விடுவார். நடுநிசியில் அவர் விழித்தெழிந்த பிறகுதான்  பாப்லோ, ஓச்சா, மரியோவெல்லாம் தூங்கப் போவார்கள். பண்ணை வீட்டைச் சுற்றிலும் ஏராளமான பாதுகாவலர்களை மூன்று ஷிப்ட் பணி போட்டு  அமர்த்தியிருந்தாலும், தங்களில் யாராவது அவர்களை மேற்பார்வை செய்ய விழித்துக் கொண்டிருப்பது அவசியம் என்பது பாப்லோவின் ஏற்பாடு.

ஒருநாள் அதுபோல நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு விழித்தெழுந்த ராபர்ட்டோ, சுரத்தில்லாமல் காணப்பட்டார். அண்ணனுடைய அகத்தின் அழகை  முகத்தில் கண்டுவிட்ட பாப்லோ கேட்டார். “என்னாச்சு ராபர்ட்டோ? அண்ணியைப் பிரிஞ்சு பசலை நோய் வந்துடிச்சா?” “அதெல்லாம் ஒண்ணுமில்லை.  எனக்கென்னவோ உடனே இந்த இடத்தை நாம காலி பண்ணணும்னு தோணுது...” “ஏன்? இங்கே நல்லா வசதியாதானே இருக்கோம்? போலீஸோ  மிலிட்டரியோ இந்த இடத்துலே கால் வைக்கவே முடியாத அளவுக்கு பக்காவா செக்யூரிட்டி போட்டிருக்கோமே?” “இல்லை.
17a.jpg
இங்கே போலீஸ் வரப்போவுது…” “யார் சொன்னா? உனக்கு ஏதாவது தகவல் வந்ததா?” “இல்லை. உள்ளுணர்வு சொல்லுது…” “உளறாதே…”  “இல்லைடா தம்பி. அம்மா எப்பவுமே சொல்லும். கனவுலே பாதிரியார் வந்து எதை சொன்னாலும், அது நனவுலேயும் நடக்குமாம். என் கனவுலே ஒரு  ஃபாதர் வந்து, ‘தப்பிச்சி ஓடிடுங்க’னு திரும்பத் திரும்பச் சொன்னாரு…” பாப்லோ, வாய்விட்டுச் சிரித்ததோடு இல்லாமல் ஓச்சா மற்றும்  அங்கிருந்தவர்களிடம், “எங்க அண்ணனுக்கு கனவுலே வந்து உம்மாச்சி கண்ணைக் குத்திச்சாம்...” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தார். ஆனால் -  ராபர்ட்டோ, அங்கிருந்த ஆட்களிடம் சென்று உஷார் செய்தார்.

“அனேகமா இன்னைக்கு நைட்டு நாம இடம் மாற வேண்டியிருக்கலாம். தேவையான அளவு சாப்பாடு, உடையெல்லாம் பேக் பண்ணி ரெடியா வைங்க.  எப்போ வேணும்னாலும் நாம திடீர்னு தப்பிக்க வேண்டியிருக்கும்...” பேரட் பண்ணை, காட்டுக்கு நடுவில் மட்டுமின்றி கோகோர்னா நதியின் ஓரத்திலும்  அமைந்திருந்தது. அவர்கள் தப்பிக்க வேண்டியிருந்தால், அதற்காக படகுகளும் தயார் நிலையில் இருந்தன. காட்டைச் சுற்றியும் ஆங்காங்கே பண்ணை  வீடுகள் இருந்தன. காட்டுக்குள் போலீஸோ அல்லது அடையாளம் தெரியாத யாராவதோ நுழைவதாக இருந்தால், அந்தந்த பண்ணை வீடுகளில் இருந்து  பேரட் பண்ணைக்கு போன் செய்து எச்சரிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அன்று காலை 6 மணிக்கு போன் வந்தது. “போலீஸ் டிரக்குகள் காட்டுக்குள் நுழைகின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் கையில் ஆயுதங்களோடு  இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சப்தமும் கேட்கிறது. உடனடியாக தப்பித்துச் செல்லுங்கள்...” தொலைபேசித் தகவலைக் கேட்ட பாப்லோ  அனைவருக்கும் கேட்கும்படி எச்சரிக்கை அலாரம் அடித்தார். பண்ணை வீட்டுக்கு முன்பாக அங்கிருந்தவர்கள் அனைவரும் கூடினார்கள். “போலீஸ்..  போலீஸ்… எல்லாரும் கிளம்ப வேண்டும். அவசியமானதை மட்டும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்...” சொல்லிவிட்டு ராபர்ட்டோவை வினோதமாகப்  பார்த்தார். ‘உனக்கு எப்படி முன்னமே தெரியும்? ஒருவேளை நீதான் போலீஸுக்கு தகவல்…’ என்பது மாதிரி இருந்தது அந்தப் பார்வை.

ராபர்ட்டோ சங்கடமாக அவரை நோக்க, அதற்குள்ளாக தலைக்கு மேலே ஹெலிகாப்டர்களின் சப்தம் கேட்டது. “கொசுக்கள் ரீங்கரிக்க ஆரம்பிச்சிடிச்சி...”  என்று முணுமுணுத்தார் பாப்லோ. போலீஸையும், ராணுவத்தையும் அவர் கொசுக்கள் என்றுதான் குறிப்பிடுவார். “ஓடுங்க…” நாலாபக்கமும்  எல்லோரும் சிதறி ஓட, ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டிருந்த மெஷின்கன்கள் இலக்கில்லாமல் தோட்டாக்களைத் துப்ப ஆரம்பித்துவிட்டன.  ஆற்றுக்கு ஓடி, படகில் தப்பிக்க சந்தர்ப்பம் அமையவில்லை. இவ்வளவு விரைவாகத் தங்களை எட்டிவிடுவார்கள் என்று யாருமே கணிக்கவில்லை.  ஓடிக்கொண்டிருந்த பாப்லோவின் ஆட்களும் ஹெலிகாப்டர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.
17b.jpg
சிலர் எப்படியோ ஓடி ஆற்றுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினர். சிலர் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தனர். பாப்லோ, அவரது இரவு உடையில் இருந்தார்.  அவருடைய கால்களில் செருப்புகூட இல்லாமல் இலக்கின்றி ஓடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஹெலிகாப்டரை நோக்கி சுடவும் தவறவில்லை.  அடர்ந்த வனம் என்பதால் ஹெலிகாப்டர்களால் அங்கே தரையிறங்க முடியவில்லை. வானத்திலேயே வட்டமிட்டு பொத்தாம் பொதுவாக இலக்கின்றி  சுட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே பாப்லோ தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் இருந்தது. அதே நேரம் காட்டுக்குள் நாலாபுறமும் டிரக்  வண்டிகளில் போலீஸார் இவர்களை முற்றுகையிட ஆரம்பித்தார்கள்.

முன்பு ஒருமுறை தாங்கள் பிடிபடும் வேளை வந்துவிட்டால், அனைவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்  என்று பாப்லோ சொல்லியிருந்தார். அந்த வேளை வந்துவிட்டது என்று ஓச்சா நினைத்தார். அவர் தன்னுடைய பாயிண்ட் முப்பத்தெட்டு ரிவால்வரை  எடுத்து தலையில் வைக்க, ஓச்சாவின் மனைவி ஓவென்று கதறியழ ஆரம்பித்துவிட்டார். அவ்வளவு நெருக்கடியிலும் இதை கவனித்துவிட்ட பாப்லோ  எஸ்கோபார், பாய்ந்துவந்து ஓச்சாவைத் தடுத்தார். பளாரென்று ஓச்சாவின் கன்னத்தில் ஓர் அறை வைத்தவர், “அதற்கு இது நேரமில்லை.  இம்முறையும் நாம் தப்பிக்கிறோம்...” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

ஓச்சாவோடு பாப்லோ பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ‘ஆ’வென்ற அலறல் ஆற்றுப் பக்கமிருந்து கேட்டது. “அங்கே என் அண்ணன் ராபர்ட்டோ அல்லவா  ஓடிக் கொண்டிருந்தான்?” என்று கேட்ட பாப்லோ, உடனடியாக சப்தம் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்தார். வெட்டுண்ட மரம் போல கண் முன்  நெஞ்சு முழுக்க தோட்டாக்களை வாங்கி அவரது மைத்துனன் மரியோ ஹெனாவ் வீழ்ந்தான். ஓடிவந்து அவனைத் தூக்கி தன் மடியில்  கிடத்திக்கொண்டு வாய்விட்டு அழ ஆரம்பித்தார் பாப்லோ. அவர் அழுது அதுவரை யாரும் பார்த்ததில்லை. தங்கள் காட்ஃபாதரே அழுவதைக் கண்ட  அவருடைய பாதுகாவலர்கள் வீறுகொண்டு எழுந்து, மெஷின் கன்னால் தங்களை நோக்கி வந்தவர்கள் மீது துல்லியமான தாக்குதலைத் தொடுத்தார்கள்.

இவர்களது தாக்குதலில் ஒரு ஹெலிகாப்டரே வீழ்ந்தது. பெரும் சப்தத்தோடு வீழ்ந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து, காட்டு மரங்களையும் எரியச் செய்தது.  பாப்லோவின் இன்னொரு முகத்தை அன்றுதான் போலீஸ் கண்டது. ஓர் இராணுவத் தளபதி போல் அந்த நெருக்கடியான முற்றுகையை அவர்  எதிர்கொண்டார். கைக்குண்டுகளை குறிபார்த்து எறியும் லாகவம், துப்பாக்கித் தோட்டாக்களை வீணாக்காமல் எதிரிகளைத் துல்லியமாக போட்டுத்  தள்ளும் வீரமென்று அன்றைய நாள் போரிலும் பாப்லோவுக்குத்தான் வெற்றி. அதற்குக் கொடுத்த விலை, அவருடைய மைத்துனரின் உயிர்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-54

ஆச்சரியம். ஆனால், அதுதான் உண்மை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாப்லோவும், அவரது சகாக்களும், சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தாரும் தலைமறைவாகத்தான் திரிந்தார்கள். இந்த நெருக்கடியான சூழலிலும்கூட மெதிலின் கார்டெல் தன்னுடைய வழக்கமான போதை வியாபாரத்தை முன்பை விடவும் சிறப்பாகவே செய்து வந்தது. பாப்லோ அமைத்திருந்த விமானப்படையே இதற்குக் காரணம். தென்னமெரிக்க நாடுகளிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, ராடார் மூலமாக வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு கணிசமாக லஞ்சம் கொடுத்து வந்தார்கள்.
16.jpg
எனவே சரக்கு தேவைப்படும் இடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் சரியான நேரத்துக்கு சப்ளை செய்துகொண்டே இருக்க முடிந்தது. இறைக்கிற கிணறுதான் சுரக்கும் என்பார்கள். ஒரு பக்கம் பணம் கொட்டிக்கொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் பாப்லோ கண்ணை மூடிக்கொண்டு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தார். ஓர் அரசாங்கமே மக்களுக்குச் செய்ய முடியாத அளவுக்கு ஏராளமான நலப்பணிகளை கொலம்பியாவுக்கு அவர் செய்திருக்கிறார். எண்பதுகளின் இறுதிக்காலம்தான் பாப்லோ, மரணத்தைத் தொட்டுத் தொட்டு மீண்டு கொண்டிருந்த காலம். அவர் எங்கு தங்கினாலும் அது மிகச்சரியாக ராணுவத்துக்கு ‘போட்டு’க் கொடுக்கப்பட்டது.

கொலம்பிய ராணுவத்தின் சீருடையில் அமெரிக்காவின் சிஐஏ அனுப்பிய கொலையாளிகளே கூட பாப்லோவைக் கொல்வதற்காக அலைந்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஏனெனில் பாப்லோவின் அமெரிக்க பார்ட்னர்களாக இருந்தவர்களில் சிலர் சிஐஏவின் ஆட்கள். இந்த உண்மையை அவர் அறிவதற்குள் எல்லாமே கையை மீறிப் போய்விட்டது. கொலம்பியாவில் மற்ற கார்டெல்களைவிட பாப்லோவும், காச்சாவும் நடத்திக் கொண்டிருந்த கார்டெல்களுக்குத்தான் அதிகளவிலான நெருக்கடி. பாப்லோ போதையுலகின் பேரரசன் என்றால், காச்சாதான் இளவரசன் என்று அமெரிக்கா திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

இவர்களை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பதற்காக கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களையும், பணத்தையும் அளவில்லாமல் செலவிட்டுக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு காலி என்கிற கொலைகார கார்டெல்லையும் தன்னுடைய கைப்பாவையாக வைத்துக்கொண்டு, அவர்களையும் பாப்லோ குழுவினர் மீதான வேட்டையில் ஈடுபடுத்தியது. கார்டெல்லின் வேட்டையில் காலி யதேச்சையாக மாட்டிவிட்டான். பாப்லோவின் சகா காச்சாவின் பதினேழு வயது மகன்தான் காலி. போலீஸிடம் ஒப்படைக்கப்பட்ட அவன் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானான். இரண்டு மாதங்கள் படுமோசமாக சித்திரவதை செய்யப்பட்டவனின் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிப்படவில்லை.

அவனை ரகசியமாக ரிலீஸ் செய்தார்கள். ரிலீஸ் ஆனதிலிருந்தே, தான் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அறியாமல் காச்சாவின் மறைவிடம் நோக்கிப் போனான். காச்சாவின் கதை அதோடு முடிந்தது. டோலு என்கிற இடத்தில் காச்சா, அவருடைய மகன் மற்றும் அவனது குழுவினர் ஒட்டுமொத்த பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காச்சாவின் இறுதி ஊர்வலத்தில் இருபத்தைந்தாயிரம் பேர் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான தங்களுடைய மனக் குமுறலை வெளிக்காட்டினர். காச்சாவின் மரணம் பாப்லோவையும், அவரது குழுவினரையும் மனரீதியாக மிகவும் பாதிப்படையச் செய்தது.
16a.jpg
இந்தக் காலகட்டத்தில் பாப்லோ ஏராளமான நெருங்கிய நண்பர்களின், உறவினர்களின் மரணங்களைப் பார்த்து திக்பிரமை அடைந்த நிலையில் இருந்தார். தன்னுடைய கடந்தகால செயல்பாடுகளுக்கான தண்டனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவர் கிட்டத்தட்ட வந்திருந்தார். தன் ஒருவனுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க மற்றும் கொலம்பிய அரசுகளால் துன்புறுத்தப்படுவது அவருக்கு சகிக்க இயலாத துன்பமாக இருந்தது. தான் சரணடையத் தயார். தன் மீதான விசாரணை கொலம்பியாவிலேயே நடைபெறவேண்டும். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார். ஆனால், அமெரிக்காவுக்கு, தான் நாடு கடத்தப்படக்கூடாது என்கிற நிபந்தனையில் மட்டும் உறுதியாக இருந்தார்.

கொலம்பியா அவருடைய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளக்கூடிய நிலைமையில்தான் அமெரிக்கா உள்ளே புகுந்து ஆட்டையைக் கலைத்தது. குறிப்பாக 1987, ஜனவரி 13ம் தேதி நடந்த ஒரு சம்பவம்தான் பாப்லோவுக்கும், கொலம்பிய அரசுக்குமான நிரந்தர பகையை உறுதிப்படுத்தியது. அந்தச் சம்பவம் - மெதிலின் நகரில் பாப்லோ, தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்குமாக ஐந்து மாடிகள் கொண்ட நவீன வீடு ஒன்றை உருவாக்கி இருந்தார். ஐரோப்பிய கோட்டைகளைப் போல மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வீட்டுக்கு மொனாக்கோ என்று பெயர் வைத்திருந்தார். கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி, மொனாக்கோவின் ஒவ்வொரு அங்குலமும் இழைத்து இழைத்து செதுக்கப்பட்டிருந்தது.

கொலம்பியாவிலேயே முதன்முறையாக செக்யூரிட்டி கேமிரா அமைக்கப்பட்டிருந்த கட்டடம் இதுதான். ஒரு தளம் முழுக்க உணவகம். மறு தளம் முழுக்க பாப்லோ குடும்பத்தார் தங்கிக் கொள்ள படுக்கையறைகள். இன்னொரு தளத்தில் சிலைகள், ஓவியங்கள் என்று அரிய கலைப்பொருட்கள். மற்ற இரு தளங்களும் அலுவலகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தப்பித்துக் கொள்ள ரகசிய அறைகளும் உருவாக்கப்பட்டிருந்தன. தன் கோட்டை என்று பெருமையாக மொனாக்கோவை சொல்வார் பாப்லோ எஸ்கோபார். இந்த கோட்டையின் மீதுதான் வெடிகுண்டு வீச்சு, அந்த விடியற்காலையில் நடத்தப்பட்டது.

சக்தி வாய்ந்த அந்த குண்டுவீச்சில் மொனாக்கோ பெரிதும் சேதமானது. குண்டு வெடித்தபோது பாப்லோவின் அம்மா உட்பட அவரது குடும்பத்தார் உள்ளேதான் இருந்தார்கள். கொலம்பியாவில் முதன்முறையாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதுதான். அரசாங்கம் அதுவரை குண்டு வீசியதே இல்லை. இந்த குண்டு வீச்சு சம்பவத்தை நடத்தியவர்கள் அமெரிக்காவின் கைப்பாவை கார்டெல்லான காலி ஆட்கள்தான் என்று பாப்லோ குழுவினர் குற்றம் சாட்டினார்கள். ஏனெனில் குண்டு வெடித்தபோது பாப்லோ தங்கியிருந்த பண்ணை வீட்டுக்கு ஒரு போன் கால் வந்தது.

பாப்லோதான் ரிசீவரை எடுத்தார். “பாப்லோ...” “நான் ரோட்ரிக்ஸ், காலி கார்டெல்...” “சொல்லு...” “உன் வீட்டில் குண்டு வீசப்பட்டதாக அறிந்தேன்...” பாப்லோவுக்கே அப்போதுதான் மொனாக்கோ மீது குண்டுவீச்சு நடந்தது தெரியும். தன் உணர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தார். “நீயும் உன் குடும்பமும் நலமாக இருக்கிறீர்களா என்று விசாரிக்கத்தான் போன் செய்தேன்...” பதில் சொல்லாமல் போனை கட் செய்துவிட்டு மொனாக்கோவுக்கு ஓடினார் பாப்லோ. நல்ல வேளையாக யாருக்கும் உயிர்ச் சேதம் எதுவுமில்லை.அன்றிலிருந்துதான் உணர்ந்தார், தன்னுடைய எதிரிகள் அமெரிக்கா மற்றும் கொலம்பிய அரசுகள் மட்டுமல்ல, காலி கார்டெல்காரர்களும்தான் என்பதை.

எனினும் அரசாங்கங்களை நேரடியாக எதிர்க்க முனைந்த பாப்லோவால், முதுகில் குத்தும் இந்த கார்டெல் எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை. இவர்களோடு சேர்ந்துதான் வணிகமும் செய்ய வேண்டியிருந்தது. தன்னுடைய எதிரிகள், இவர்களுக்கும்தான் எதிரிகள். அப்படியிருந்தும் தன்னை ஒழித்துக்கட்ட இவர்கள் முனைகிறார்கள் என்றால் துரோகிகள் ஆகிவிட்டார்கள் என்று பொருள். எதிரிகளிடமாவது பேச்சுவார்த்தை நடத்தலாம். துரோகிகளிடம் அதுவும் முடியாது. பாப்லோ, தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு, துரோகிகளை புல் பூண்டு முளைக்க முடியாத அளவுக்கு வேரறுக்காததுதான். காலி கார்டெல்லைத் தொடர்ந்து, வேறு சில சில்லறை கார்டெல்காரர்களூம் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு அடிமைகளானார்கள்!
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 55

லூயிஸ் கார்லோஸ் கேலன். பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்லின் முதல் எதிரி என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர். இவர் ஒரு பத்திரிகையாளரும்கூட. மாணவப் பருவத்திலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தவர். சர்வாதிகார அரசுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார். கொலம்பியாவின் தூதராக இத்தாலியில் பணி புரிந்திருக்கிறார்.
17.jpg
எண்பதுகளில் போதை கார்டெல்கள் கொலம்பியாவை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த போக்கை கடுமையாக எதிர்த்தார். அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போதை கார்டெல் உரிமையாளர்களோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்ததை கேலனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. நாட்டின் பொருளாதாரமே போதைத் தொழிலைச் சார்ந்திருக்கிறது என்பதைவிட கேடுகெட்ட அவலம் வேறு கிடையாது என்று மக்களிடம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்தார்.

குறிப்பாக மெதிலின் கார்டெல், ஒரு ராணுவத்துக்கு இணையாக கொலம்பியாவை எதிர்த்து நின்ற காலகட்டத்தில் பாப்லோ எஸ்கோபாரை தன்னுடைய பரம வைரியாக இவர் கருதினார். கொலம்பியாவின் அதிபராகி, போதைத் தொழிலை முற்றிலுமாக ஒழிப்பேன் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தார். இவர் வேண்டுமானால் எஸ்கோபாரை எதிரியாகக் கருதியிருக்கலாம். ஆனால், எஸ்கோபார், கேலனை அணுஅணுவாக ரசித்தார்.
17a.jpg
வெளியில் பெயருக்காக எஸ்கோபாரை எதிர்த்துக் கொண்டே, திரைமறைவில் காசு வாங்கிக் கொண்டு வாலைச் சுருட்டிக்கொண்டு போகும் அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் நேருக்கு நேராக நேர்மையாக தன்னோடு மல்லுக்கட்ட நிற்கும் கேலனே மிகச்சிறந்த மனிதர் என்று அவர் மதிப்பிட்டிருந்தார். எனவேதான் 1982 வாக்கில் கேலனுடைய நியூ லிபரல் கட்சியில் சேருவதற்கு எஸ்கோபார் விருப்பம் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒன்றில், “ஒரு போதைத் தொழிலதிபர் அரசியலில் ஈடுபடுவதும், அதன் வாயிலாக ஆட்சியைக் கைப்பற்றுவதுமான நிலை ஏற்பட ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்...” என்று கர்ஜித்தார் கேலன். போதைக் கடத்தல்காரர்களைப் பிடித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் சட்டத்துக்கு கேலன் ஆதரவாக இருந்தார். எனவே, அமெரிக்க அரசும் கேலன் அதிபராவதை விரும்பியது. அவருக்காக மறைமுகமாக கொலம்பியாவில் பல்வேறு வேலைகளை அமெரிக்கா திறம்பட செய்து, கேலனுக்கான செல்வாக்கு உயர காரணமாக இருந்தது. 89ம் ஆண்டு அதிபர் தேர்தல் சமயம்.
17b.jpg
அரசியல் மேடைகளில் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்வது சகஜமாக இருந்தது. காலி கார்டெல் மற்றும் எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்களுக்கான மோதல்களில் சிக்கி உயிரிழந்த அரசியல்வாதிகள் அனேகம். எர்னஸ்டோ சாம்பர் என்கிற அதிபர் வேட்பாளர் ஒருவர் மீது ஏர்போர்ட்டில் வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலி கார்டெல்லுக்கு வேண்டியவர் என்பதால் இவரைக் கொல்வதற்காக எஸ்கோபார்தான் ஏற்பாடு செய்தார் என்று அரசாங்கமே தகவல்களைக் கசியவிட்டது.

உண்மையில் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கும் பாப்லோவுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. யார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்கிற விசாரணையை துவக்காமலேயே மெதிலின் கார்டெல்லை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார்கள். இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த சாம்பர், சில வருடங்களுக்குப் பின்னர் அதிபராகவே உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லூயிஸ் கார்லோஸ் கேலனை கொல்லுவதற்காகவும் முயற்சிகள் நடந்தன.

ஒவ்வொரு முறையும் கேலன் தப்பிக்கொள்ள, அவருடன் இருந்தவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள். இதைத் தொடர்ந்து கேலனும், அவரது குடும்பத்தாரும் தேர்தல் பிரசாரத்துக்காக பயணம் செல்வதையேகூட குறைத்துக் கொண்டார்கள். சோச்சா என்கிற நகரில் பெரிய பொதுக்கூட்டம். இதில் பேசியே ஆகவேண்டும் என்கிற நெருக்கடி கேலனுக்கு. உளவுத்துறை மூலமாக முன்கூட்டியே தகவல் வந்திருந்தது,  நவீனமான மெஷின்கன்களோடு ஹிட்மேன்கள் கேலனைக் கொல்ல அங்கே காத்திருக்கிறார்கள் என்று.

அந்தத் தகவல்களை மீறி சோச்சாவுக்குச் சென்றார் கேலன். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் முழங்கிக் கொண்டிருந்தார். “கொலம்பியாவைப் பொறுத்தவரை இனிமேல் முன்னேற்றம்தான். என்ன தேவை ஏற்பட்டாலும் சரி, நாம் ஓர் அடி கூட யாருக்காகவும் எந்த சூழலுக்காகவும் பின்னே வைக்கப் போவதில்லை...” மைக்கில் உணர்ச்சிபூர்வமாக கேலன் முழங்கிக் கொண்டிருந்தபோதே, திடீரென அவர் முன்பாகத் தோன்றிய ஆயுதம் ஏந்திய ஹிட்மேன்கள் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்கள்.

கேலனின் நெஞ்சில் பாய்ந்த குண்டு, அங்கேயே அவரது உயிரைக் குடித்தது. மேடையிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் காயமுற்றார்கள். வழக்கம்போல கொலை செய்த கொலைபாதகர்கள், எவ்வித சேதாரமுமின்றி தப்பினார்கள். அடுத்த அதிபர் என்று மக்கள் நம்பியிருந்த தலைவரான கேலன் படுகொலை செய்யப்பட்டது கொலம்பியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் கென்னடியின் கொலைக்கு நிகராக இந்தச் சம்பவம் பேசப்பட்டது.

இந்தக் கொலையிலும் பாப்லோவின் தலையைத்தான் வழக்கம்போல உருட்டினார்கள். பாப்லோவின் நெருங்கிய சகா காச்சாதான் இந்தக் கொலையின் சூத்ரதாரி என்று அரசாங்கமே குற்றம் சாட்டியது. இந்தச் சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்புதான் காச்சா சுட்டுக் கொல்லப்பட்டார். உண்மையைச் சொல்லப் போனால், பாப்லோவுக்கு மட்டுமல்ல, காலி உள்ளிட்ட அத்தனை கார்டெல்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் கேலன்.

அமெரிக்காவின் வலதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவாக இருந்த அவர், தான் ஆட்சிக்கு வந்ததுமே போதைக் கடத்தல்காரர்களை மட்டுமின்றி, கொலம்பியாவில் சிறு சிறு குழுக்களாகச் செயல்பட்டுவந்த இடதுசாரிகளை ஒட்டுமொத்தமாக ஒழிப்பேன் என்று சபதம் பூண்டிருந்தார்.

எனவே, கேலனை கொல்லுவதற்கான எண்ணம் எத்தனையோ தரப்புக்கு உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் பாப்லோவுக்கு, கேலன் குறித்த உயர்வான எண்ணம்தான் இருந்தது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாயிற்றே? கேலனின் கொலைக்கும் பாப்லோவையே சம்பந்தப்படுத்தினார்கள். இதனால் மக்கள் மத்தியில் பாப்லோவுக்கு இருந்த செல்வாக்கும், அனுதாபமும் கணிசமாக சேதாரமுற்றது.

அன்றைய இரவே தன்னுடைய, தன் சகாக்களுடைய குடும்பங்களை எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்றும் ஏற்பாடுகளைச் செய்தார் பாப்லோ. பெரிய ஆபத்து ஒன்றை தாங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை யூகித்தே இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தார். அதற்கேற்ப நாடு முழுக்க அவசரநிலை ஏற்பாடு செய்யப்பட்டு ராணுவமும், போலீஸும் வேட்டையாடத் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் கணக்கு வழக்கின்றி கைது செய்யப்பட்டனர்.

அரசு அதிகாரிகளுக்கும், ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கும் பழைய கணக்குகளை பைசல் செய்துகொள்ள இந்தச் சூழல் உதவியது. கார்டெல்காரர்களுக்கு உரிமையானவை என்று கூறி நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் டிரக்குகளைப் பறிமுதல் செய்தார்கள். சுமார் 350 சிறியவகை விமானங்கள், மற்றும் நூற்றுக்கணக்கான படகுகளுக்கும் இதே நிலைமைதான். ஐந்து டன்கள் அளவிலான கோகெயின் இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டன. கிட்டத்தட்ட பாப்லோ எஸ்கோபாரின் கோட்டைக்குள் ஓட்டை போட்டுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-56

போலீஸ் எப்போதுமே இதுபோன்ற வாய்ப்புகளுக்காகத்தான் காத்திருக்கும். கேலனின் படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை பழைய பகைகளுக்கு பழிதீர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். பல நூறு பேர் எவ்வித விசாரணைக்கும் உள்ளாகாமல் கைதாகி, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.மெக்ஸிகன் என்று பாப்லோ எஸ்கோபாரால் செல்லமாக அழைக்கப்பட்ட காச்சா என்கிற கார்டெல் முக்கிய தலைதான் கடுமையாக பாதிக்கப்பட்டது (கேலன் படுகொலை நடந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகுதான் காச்சா கொல்லப்பட்டார்). அவருடைய பண்ணை வீடுகள் அத்தனையும் போலீஸாரால் தீவைக்கப்பட்டன. அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்த அப்பாவிகள் அத்தனை பேரையும் அள்ளிக் கொண்டு போய் சித்திரவதை செய்துகொண்டிருந்தார்கள்.
16.jpg
இதில் காச்சாவின் நெருங்கிய உறவினர்களும் அடக்கம். கேலனை படுகொலை செய்த சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் காச்சா என்று போலீஸ் சொல்ல, எந்த லாஜிக்கலான கேள்விகளையும் கேட்காமல் அரசு அப்படியே நம்பியது. யாரை வேண்டுமானாலும் கைது செய்து  கொள்ளுங்கள், எப்படி வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்கிற வானளாவிய அதிகாரத்தை போலீஸுக்கும், இராணுவத்துக்கும் அரசாங்கம் கொடுத்தது. அதுதான் தவறாகப் போயிற்று. இந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு போதை சாம்ராஜ்யக் கடத்தலின் தலைவனும் கைதாகவில்லை. திமிங்கல வேட்டை என்று சொல்லி, கெண்டை மீன்களைத்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

தாங்கள் கைதாகாமல் தப்பிக்க பல கோடி டாலர்களை போலீஸுக்கும், இராணுவத்துக்கும் கார்டெல் தலைவர்கள் அள்ளி இறைத்தார்கள். போலீஸின் நடவடிக்கையை கேள்வி கேட்காமல் இருக்க அரசியல்வாதிகளுக்கும் கணிசமாக பங்கு போனது. அந்தக் காலத்தை பணி ஓய்வு பெற்ற பின்பு ஒரு போலீஸ்காரர் நினைவுகூர்ந்தார். “தினமும் காலையில் ஐந்து பைசா கூட இல்லாமல் பணிக்குப் போவேன். வீடு திரும்பும்போது ஒரு மூட்டை நிறைய பணம் இருக்கும். அவ்வளவு பணத்தை வைக்க என்னுடைய சிறிய வீட்டில் இடமேயில்லை! உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பணத்தை கத்தை கத்தையாகப் பரிசளித்தோம். நிறைய சொத்துகளை வாங்கிக் குவித்தோம்.

தினசரி சேர்ந்துகொண்டே இருந்த பணத்தை எப்படி செலவழிப்பது என்றே தெரியாமல் திண்டாடிப் போய்விட்டோம்!” நம்மூரில் ஹெட் கான்ஸ்டபிள் என்கிற அளவுக்கான பதவியில் இருந்தவர் அந்த போலீஸ்காரர். அவரே இப்படியொரு வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்றால் அதிகாரிகள் எவ்வளவு அள்ளியிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! காதில் எல்லாம் பூ சுற்றவில்லை. கொலம்பியாவில் அவ்வளவு பணம் இருந்தது. அதை செலவழிக்கத்தான் மார்க்கங்கள் இல்லாமல் இருந்தது. இது ஒரு புறம். மறுபுறம் ஒருவேளை உணவுக்காகக் கொலையே செய்யக்கூடிய அளவுக்கு வறுமை தாண்டவமாடியது. வேலைவாய்ப்பு சுத்தமாக இல்லை. வேலை என்றால் ஏதாவது போதைத் தொழிற்சாலையில் பணியாளராகச் சேரலாம்.
16a.jpg
அல்லது ஏதேனும் கார்டெல்லில் கையாளாக இருக்கலாம். இந்த வேலையில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், உயிருக்கு உத்தரவாதமில்லை. சுருக்கமாக, கொலம்பியா கொந்தளித்துக் கொண்டிருந்தது என்று நீங்கள் ஒரு வரியில் புரிந்து கொண்டால் போதும். யாருக்கும் வெட்கமில்லை. நீதி, தர்மம் போன்ற வார்த்தைகளுக்கு பொருளே இல்லை. தான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வதுதான் தர்மம் என்று கருதினார்கள். நாட்டை ஆண்டுகொண்டிருந்தவர்களில் தொடங்கி, அடிமட்ட குடிமகன் வரை இப்படியான மனநிலையில்தான் இருந்தார்கள். கொலம்பியாவின் சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்திருந்த ‘அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் சட்டம்’ மீண்டும் அமலானது.

யாரை வேண்டுமானாலும் கைது செய்து, ‘போதை முத்திரை’ குத்தி அமெரிக்கச் சிறைகளில் அடைக்கலாம் என்கிற நிலையை அன்றைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டது. அம்மாதிரி அமெரிக்காவுக்கு ஓர் ஆள் நாடு கடத்தப்பட்டாலும், ஓர் ஆளுக்கு பதிலாக பத்து நீதிபதிகளைக் கொல்வோம் என்று ஒட்டுமொத்த கார்டெல்களும் அறிவித்தன; செயலிலும் காட்டின. இதையடுத்து நீதிபதிகள் உயிரைக் காத்துக்கொள்ள தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கினார்கள். இதனால் நீதிமன்றங்கள் இயங்குவதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதெல்லாம் போதாதா, ஓர் உள்நாட்டுப் போர் நடப்பதற்கு? யார் யாரைத் தாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. மெதிலின்  காலி கார்டெல்களுக்குள்ளான உள்மோதல் ஒருபுறம்.

மறுபுறம் பணத்துக்காக வேட்டை நாய்களாகப் பாய்ந்து வந்துகொண்டிருந்தார்கள் இராணுவத்தினர். விசாரணை ஏதுமின்றி அப்பாவிகள் கொத்து கொத்தாக சிறைக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தெருவில் இறங்கி கல்லெறிய ஆரம்பித்தனர். இடதுசாரி கொரில்லாக் குழுக்களும் மக்களுக்குள் மக்களாக நின்று ஆயுதப் போரைத் தொடங்கினார்கள். கார்டெல்களின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த மெதிலின் நகரம்தான் 24 மணி நேரமும் பற்றியெரிந்துகொண்டிருந்தது. நீதிமன்றங்களுக்கு கட்டாய லீவு என்பதால் சாமானியர்களுக்குக்கூட வன்முறை எண்ணம் தலைதூக்கியது. அதை அடக்குவதற்காகக் களமிறங்கிய அரசப் படைகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டன.
16b.jpg
வங்கிகள், வணிக வளாகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இம்மாதிரி வன்முறைகளில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு என்றாலும், மொத்தப் பழியும் வழக்கம்போல பாப்லோ மீதுதான் போடப்பட்டது. ஏனெனில், மெதிலின் அவருடைய கோட்டைதானே? அமெரிக்கா, இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டது. நேரடியாக கொலம்பிய மண்ணில் தன்னுடைய இராணுவத்தைக் கால்பதிக்க வைக்க இதுதான் சந்தர்ப்பம் என்று முடிவெடுத்தது. அமெரிக்காவின் அதிரடிப்படை வீரர்கள், கொலைகார ஆயுதங்களோடு கொலம்பிய நகரங்களில் வலம் வரத் தொடங்கினார்கள். இயல்பிலேயே அமெரிக்க எதிர்ப்பு எண்ணம் கொண்ட கொலம்பியர்கள் இந்த நிலையை எதிர்த்தார்கள்.

சிறு பையன்கள் கூட அமெரிக்க ராணுவத்தினர் மீது கல்லெறிதல் மாதிரி சம்பவங்களில் ஈடுபடுவார்கள். பதிலுக்கு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடக்கும். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு போர் என்றாலே சர்க்கரைப் பொங்கல். அது என்னவோ தெரியவில்லை, வெடிகுண்டு வெடித்து மக்கள் இரத்தம் தெறிக்க, சதைத்துணுக்குகளாகச் சிதறி வீழ்வதை ரசிக்கக்கூடிய சைக்கோ மனநிலையில் அமெரிக்கா இருந்தது. கொலம்பியாவுக்குள் கால் பதித்த அமெரிக்க இராணுவம், “யார் அந்த பாப்லோ? எங்கிருப்பான் சொல்லுங்கள், சிதற அடிக்கிறோம் அவனை!” என்று கர்ஜித்துக் கொண்டிருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், பாப்லோ என்றுமே அமெரிக்காவை எதிர்த்துப் போரிட்டதில்லை.

அவர் எப்போதுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் கூடுதல் கவனம் செலுத்தினாரே தவிர, தாக்குதல்களில் அல்ல. பாப்லோ தன்னுடைய சகாக்கள் ஓச்சா, காச்சா உள்ளிட்டோரை வைத்து வெள்ளைக்கொடி காட்டினார். “நாங்கள் எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்கிறோம். போதைத்தொழில் உட்பட. இனிமேலும் கொலம்பியாவில் உயிர்கள் போகக்கூடாது. அரசியல் படுகொலைகள் நடக்கக்கூடாது. குண்டுகள் வெடிக்கக்கூடாது...” நியாயமாக கொலம்பிய அதிபர் இப்படித்தான் பேசியிருக்க வேண்டும். அவரோ, கார்டெல் ஓனர் மாதிரி பேச கார்டெல் உரிமையாளர்களோ இச்சூழலில் நாட்டின் நலம் கருதி பொறுப்பாக நடந்துகொள்ளத் தொடங்கினர். மெதிலின் நகரின் மேயர், கொலம்பிய அதிபருக்கு கடிதம் எழுதினார்.

“நீங்கள் அமைதியை நிலைநாட்டுவீர்கள் என்று மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்!” அதிபரின் பதில் ரவுடித்தனமாக வந்தது. “எங்களுக்கு இன்னமும் வேட்டை மிச்சமிருக்கிறது!” இந்தமாதிரி தற்குறித்தனமான ஆட்சிப் போக்கினால் விரக்தியடைந்துபோன பாப்லோ எஸ்கோபார் ‘லா ப்ரென்ஸா’ என்கிற செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதி, தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தினார். “எவ்வளவு இரத்தத்தை பார்த்துவிட்டோம்? இரத்தம் வழியுமென்றுதான் சொல்வார்கள். ஆறாக ஓடுவதை கொலம்பியர்கள் நாம்தான் கண்டிருக்கிறோம். அந்த துரதிருஷ்டவசமான வாய்ப்பு நம்முடைய தலைமுறைக்குத்தான் கிடைத்திருக்கிறது.

வன்முறையாளர்கள் என்று அறியப்பட்ட நாங்களே அமைதியைத்தான் விரும்புகிறோம். அதையேதான் உரத்த குரலில் வலியுறுத்துகிறோம். அமைதிக்காக நாங்கள் கொலம்பிய, அமெரிக்க அரசுகளிடம் பிச்சை கேட்காதது ஒன்றுதான் பாக்கி. அவர்கள் எங்களைப் போலவும், நாங்கள் அவர்களைப் போலவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு அருகிக்கொண்டே போகிறது. ரத்தத்துக்கு ரத்தம் என்று அரசு முடிவெடுத்துவிட்டால் யாருக்கும் வேறு மார்க்கமில்லை...”கிட்டத்தட்ட மிரட்டல் நடையில் பாப்லோ அந்தக் கட்டுரையை எழுதியபிறகு, அமெரிக்கத் தூதரகம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-57

‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று அமெரிக்கா, மற்றும் கொலம்பிய அரசுகளை பாப்லோ வெளிப்படையாக எச்சரித்தபிறகுதான், அமெரிக்கர்கள் மீதான  தாக்குதல் கொலம்பியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை விழுந்தது. நாட்டு  வெடிகுண்டு கணக்காக ஏதோ லேத் பட்டறையில் செய்யப்பட்ட அந்த ஏவுகணை, கட்டடத்தை லேசாக சேதப்படுத்தியதே தவிர, வெடிக்கவில்லை.  ஒருவேளை வெடித்திருந்தால் பெரும் நாசம் நிச்சயம். இதற்கே அமெரிக்கர்கள் உள்ளாடையில் உச்சா போனார்கள். கொலம்பியாவில் இருந்த அமெரிக்க  அதிகாரிகள் உடனடியாக தங்கள் குடும்பங்களை, தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்கள்.
17.jpg
அமெரிக்க அதிபர் புஷ் உடனடியாக அறிவித்தார். “போதை கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்கள் இதுவரை சட்டத்தை மீறிய குற்றவாளிகளாகத்தான்  கருதப்பட்டார்கள். ஏவுகணை எரிகின்ற அளவுக்கு போய்விட்ட நிலையில் அவர்களை பயங்கரவாதிகளாகத்தான் அமெரிக்கா கருதும்.  பயங்கரவாதத்தினை ஒழிக்க அமெரிக்கா எடுக்கக்கூடிய கடுமையான நடவடிக்கைகள், இனிமேல் போதைக் கடத்தல்காரர்களின் மீதும் பாயும்...” இந்த  அறிவிப்பு மூலமாக அதிபர் சூசகமாகச் சொன்னது என்னவென்றால், தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகள் கொலம்பியாவைக் கைப்பற்றி,  ‘பயங்கரவாதத்தை’ ஒழிக்கும் என்பதே.

பதறிப்போன கொலம்பிய அரசு, வழக்கம்போல ‘எல்லாத்தையும் மேலே இருப்பவன் பார்த்துப்பான்’ கணக்காக இந்த ஏவுகணைத் தாக்குதல் பழியையும்  பாப்லோ மீதே போட்டது. “வெத்துத் துப்பாக்கியல்ல மெதிலின் கார்டெல். நாங்கள் அடித்திருந்தால் அமெரிக்கத் தூதரகம் தூள் தூளாகி இருக்கும்.  இப்படி அரைகுறையாக வேலையை முடிப்பது எங்கள் பழக்கமில்லை...” என்று கர்ஜித்தார் பாப்லோ எஸ்கோபார். இதுமாதிரி பாப்லோவையும்,  அமெரிக்காவையும் சிண்டு முடியும் வேலையைச் செய்து வந்தது காலி கார்டெல் என்பதெல்லாம் பாப்லோவின் காலத்துக்குப் பிறகு தான்  வெளியுலகுக்குத் தெரியவந்தது.

ராபர்ட் முஸெல்லா என்கிற பெயரில் கொலம்பிய கார்டெல்களுக்கு அமெரிக்காவில் ஏஜென்ஸி எடுத்திருந்த அமெரிக்கரான ராபர்ட் மஸூர்தான் பல  குழப்படிகளுக்குக் காரணமே. உண்மையில் அமெரிக்காவின் சிஐஏ போலியாக உருவாக்கிய போதை ஏஜெண்ட்தான் இந்த ராபர்ட் முஸெல்லா. முள்ளை  முள்ளால் எடுப்பதைப் போல போதை கார்டெல்களுக்குள் ஒரு புல்லுருவியை நீண்டகாலத் திட்டமாக நுழைத்து, கார்டெல்களின் ஒற்றுமையைச்  சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு டானாக போட்டுத் தள்ளுவது சிஐஏவின் மாஸ்டர் பிளான். கிட்டத்தட்ட அதில் சிஐஏ வெற்றி பெற்றது  என்றேதான் சொல்ல வேண்டும்.
17a.jpg
இவ்வளவு சிக்கல்களுக்கும் மத்தியிலும் பாப்லோ உலகின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் நீடித்துக் கொண்டிருந்தார் என்பதால்தான், அவர்  இன்றுவரைக்கும் அதிசயமாகப் பார்க்கப்படக்கூடிய காட் ஃபாதர். யோசித்துப் பாருங்கள். மலையளவு பணத்தைச் சம்பாதித்து வைத்திருந்தவர், அதை  அனுபவிக்க முடியாமல் அமெரிக்காவுக்கும், கொலம்பிய ராணுவத்துக்கும் பயந்து தலைமறைவாக ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில்  தன்னைத் தவிர தனக்கு அனைவருமே எதிரிகள் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அவருக்கு நெருக்கடி முற்றியிருந்தது. ஆனால், அதெல்லாம்  வெறும் ஆரம்பம்தான்.

நவம்பர் 27, 1989. பொகோடா விமான நிலையத்துக்குள் கோட், சூட் அணிந்து பிசினஸ்மேன் தோற்றத்தில் மரியோ என்கிற இளைஞன் நுழைந்தான்.  வியர்த்துக் கொண்டிருந்த தன்னுடைய முகத்தை நிமிடத்துக்கு நான்கு முறை துடைத்துக்கொண்டே இருந்தான். பொகாடோ நகரில் இருந்து காலி  நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறினான். 15F என்கிற எண் கொண்ட இருக்கையில் அமர்ந்தான். 14F இருக்கைக்கு அடியில் தன்னுடைய லக்கேஜை  வைத்தான். விமானம் கிளம்பும் வரை அவனுடைய பதற்றம் குறையவே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே இருந்தான். இத்தனைக்கும்  அவனை யாரும் சந்தேகமாகக்கூடப் பார்க்கவில்லை. ஒருவாறாக விமானம் மேலே எழும்பியது.

பொகாடோ நகரைத் தாண்டியதுமே மரியோ எழுந்தான். அவனுடைய முகத்தில் ஒருமாதிரி இனம்புரியா பூரண நிம்மதி பரவியிருந்தது. இருக்கைக்கு  அடியில் இருந்த தன்னுடைய லக்கேஜை எடுத்தான். ஜிப்பைத் திறந்து உள்ளே எதையோ தொட்டான். பூம். விமானத்தின் வயிற்றுப் பகுதி வெடித்துச்  சிதற, தீப்பற்றிய விமானம் மலை மீது மோதியது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்ன ஆனது என்பதை உணராமலேயே உயிரிழந்தார்கள்.  அதுவரையில் கொலம்பியா சந்தித்திராத கொடூரம். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு எஸ்கோபார்தான் காரணமென்று உடனடியாகவே  அறிவிக்கப்பட்டது.
17b.jpg
அதற்கு இரண்டு காரணங்களும் முன்வைக்கப்பட்டன. ஒன்று- எஸ்கோபாரை தன்னுடைய எதிரியாக வெளிப்படையாக அறிவித்திருந்தவர் லூயிஸ்  கார்லோஸ் கேலன். அதிபர் தேர்தல் வேட்பாளரான இவர் தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய  தேர்தல் நிர்வாகியான சீஸர் கேவேரியா, பாப்லோ எஸ்கோபாருக்கு எதிராக எல்லாவிதமான உதவி களையும் அமெரிக்காவுக்கு செய்துகொண்டிருந்தார்.  சீஸர் அந்த விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தது. எனினும், கடைசி நேரத்தில் தன்னுடைய பயணத் திட்டத்தை அவர் மாற்றிக்கொண்டதால்  உயிர் தப்பினார். அந்தக் கடைசி நிமிட மாற்றத்தை அறியாமல் வெடிகுண்டு வெடித்தது என்று காரணம் சொல்லப்பட்டது.

இரண்டு-அந்தஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் மெதிலின் கார்டெல்லின் சரக்கு சுமார் முப்பதாயிரம் கிலோ கோகெயின்,  அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டது. காலி கார்டெல்லின் காட்டிக் கொடுத்தலே இதற்குக் காரணமென்று நம்பப்பட்டது. அந்த கார்டெல்லின்  முக்கியதலையின் காதலி ஒருவர், அந்த விமானத்தில் பயணித்தார். காலி கார்டெல்லை அச்சுறுத்த எஸ்கோபார் இந்த நடவடிக்கையில் இறங்கினார்  என்றும் சொல்லப்பட்டது. இதுமாதிரி நிறைய காரணங்களை ஊடகங்கள் பட்டியலிட்டன. கொலம்பியாவின் போதைத் தடுப்புப் பிரிவினரும்,  அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. போலீசாரும் தினம் தினம் புதுப்புதுக் கதைகளை ஊடகங்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

இந்த விபத்தில் இரண்டு அமெரிக்கர்கள் இறந்தார்கள் என்று காரணம் காட்டி, ஒட்டுமொத்த விசாரணை அதிகாரத்தையும் அமெரிக்கா கைப்பற்றியது.  எஸ்கோபாரையும், அவரது சகா லா கிக்காவையும் முதன்மை குற்றவாளிகள் என்று அறிவித்தது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் லா கிக்கா  கைது செய்யப்பட்டு, அமெரிக்காவில் நீதிவிசாரணை நடந்து மரணதண்டனைக்கு உள்ளானார். விமானம் வெடித்ததன் பின்னணிக் கதையாக அமெரிக்கா  சொன்னது இதுதான். மெதிலின் கார்டெல் தலைவர்கள் எஸ்கோபாரைச் சந்தித்தார்கள். சீஸர் கேவேரியாவின் பயணத் திட்டத்தை எடுத்துச் சொல்லி,  விமானத்தை குண்டு வைத்துத் தகர்க்க அனுமதி பெற்றார்கள். மூன்று வெவ்வேறு கார்களில் வெடிகுண்டின் பாகங்களை விமான நிலையத்துக்குக்  கொண்டு வந்தார்கள்.

அதை விமான நிலையத்தில் பொருத்தி ஐந்து கிலோ எடையுள்ள டைனமைட்டாக உருவாக்கினார்கள். ‘சூஸோ’ என்று கூறப்படுகிற தற்கொலைப்  படையைச் சேர்ந்த ஒருவனை மரியோ என்கிற பெயரில் அந்த விமானத்துக்குள் ஏற்றினார்கள். இந்த வெடிகுண்டைத் தயாரித்ததாக ஒருவனை  நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள் அமெரிக்க எஃப்.பி.ஐ. போலீசார். மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்களிடமிருந்து, தான் லட்சக்கணக்கில் பணம் பெற்று,  இந்த வேலையைச் செய்ய சம்மதித்ததாக அவன் சாட்சி கூறினான். இந்த சம்பவத்தையடுத்தே அமெரிக்கா தன்னுடைய அதிரகசிய உளவுப்படையான  சென்ட்ரா ஸ்பைக்கை கொலம்பியாவுக்கு அனுப்பியது. அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் வந்திறங்கிய சென்ட்ரா ஸ்பைக் பிரிவினர், சிறிய ரக  விமானங்களை கொலம்பிய நகரங்களுக்கு மேலாக ஏவி, பாப்லோ எஸ்கோபார் மீதான தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
 

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-58

சிஐஏவின் சென்ட்ரா ஸ்பைக் உளவுப்படை களமிறங்கியபிறகு முன்னெப்போதைக் காட்டிலும் படுமோசமான நெருக்கடிகளை போதை கார்டெல்கள்  எதிர்கொண்டன.

பாப்லோவுக்கு ஸ்கெட்ச் போடுவதில்தான் அவர்கள் கூடுதல் ஆர்வம் செலுத்தினார்கள். இவர் அடிக்கடி தொடர்பு கொள்ளும் பத்து பேர் யார் யாரென்று  பட்டியலிட்டார்கள். அந்த பத்து பேர் மீது இருபத்து நாலு மணி நேரமும் தீவிர கண்காணிப்பு இருந்தது. அவர்களது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது.  தாங்கள் கண்காணிக்கப் படுகிறோம் என்கிற சந்தேகம் வந்ததுமே, அவர்கள் பாப்லோ எஸ்கோபாரிடம் முறையிட்டார்கள். ஏனோ தெரியவில்லை,  பாப்லோ, இந்தப் பிரச்சினையை அவ்வளவு சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
18.jpg
எப்போதும் போல அந்த பத்து பேருக்கு தொலைபேசுவது, குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பு நிகழ்த்துவது என்று இருந்தார். இதனால், சில முறை  பாப்லோவை மிகத்துல்லியமாக சென்ட்ரா ஸ்பைக் நெருங்க முடிந்தது. நான்கைந்து சந்தர்ப்பங்களில் தப்பிய பாப்லோ, அதன் பிறகே தன்னுடைய  தொலைத்தொடர்பு முறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சந்திப்புகளைக் குறைத்துக்கொண்டார். தகவல்களை நம்பிக்கைக்குரிய கூரியர்கள்  மூலம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். சிஐஏவின் சென்ட்ரா ஸ்பைக் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு கொலம்பியா, சர்ச் ப்ளாக்  என்கிற பெயரில் ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பைத் தொடங்கியது.

இந்த அமைப்பில் நன்கு பயிற்சி பெற்ற எழுநூறுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ராணுவம் நேரடிப்  பயிற்சி வழங்கியது. மற்ற கார்டெல்காரர்களை விட்டு விட்டு பாப்லோவை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பதில்தான் சர்ச் ப்ளாக் ஆர்வம்  காட்டியது. இதையடுத்து பாப்லோவும், தன்னுடைய கார்டெல் ராணுவத்தை ஆயுதரீதியாக பலப்படுத்த ஆரம்பித்தார். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும்  இருந்து வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்டுகளை வரவழைத்தார். சர்ச் ப்ளாக் போலீஸார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடக்க ஆரம்பித்தது. கொத்து கொத்தாக  மரணிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து இந்த சர்ச் ப்ளாக் திட்டத்தையே நிறுத்திவிடும் முடிவுக்கு வந்தது கொலம்பியா. ஆனால், அமெரிக்கா விடாப்பிடியாக இந்த முயற்சியைத்  தொடரவேண்டும் என்று வற்புறுத்தியது. வேறு வழியில்லாமல் நிறைய இளைஞர்களை வேலைக்கு எடுத்து, அமெரிக்காவில் பயிற்சி கொடுத்து சர்ச்  ப்ளாக்கை பலப்படுத்தினர். பாப்லோவுக்கு கொலம்பியா பயப்படுகிறது என்று தெரிந்ததுமே, சக கார்டெல்காரர்கள் மீண்டும் எஸ்கோபாரின் தலைமையை  ஏற்றனர். கொலம்பிய நகரங்கள் எங்கும் வெடிகுண்டுகள் ஆங்காங்கே வெடித்துச் சிதற ஆரம்பித்தன. போதைக் கடத்தல்காரர்களுக்கு எதிராகத்  தீர்ப்பளித்த நீதிபதிகளின் கார்களில் டைம்பாம் பொருத்தப்பட்டு வெடித்தன.

கொலம்பிய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவாக எழுதிய ஊடகங்களின் அலுவலகங்கள் குண்டுவெடிப்பில் சிதிலமாயின. கண்ணில் தெரியும் ஒரு  போலீஸ்காரனையும் உயிரோடு விடக்கூடாது என்று கர்ஜித்தார் பாப்லோ எஸ்கோபார். போலீஸார், யூனிஃபார்மோடு தெருவில் நடமாடவே  அச்சப்பட்டனர். இதையடுத்து போலீஸ் வேலையிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் கணிசமானோர் ஓட ஆரம்பித்தனர். தங்களுக்கும் கார்டெல்  களுக்கும் இடையிலான இந்தப் போரில் பொதுமக்களை எவ்விதத்திலும் காக்க முடியாமல் அரசாங்கம் திணறியது. இருபுறமும் பாய்ந்துகொண்டிருந்த  துப்பாக்கிக் குண்டுகளில் சிக்கி உயிரை விட்ட அப்பாவிகளே ஆயிரக்கணக்கில் இருந்தனர்.

பாப்லோவின் உறவுக்காரப் பெண் ஒருத்தி, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டிருந்தாலும் அவளை  அடையாளம் கண்டுகொண்டாள் சக மாணவி ஒருத்தி. ஒருநாள் கல்லூரி உணவு விடுதியில் இவளுடைய முடியைப் பிடித்து மூர்க்கத்தனமாக அடிக்க  ஆரம்பித்தாள் அவள். தான் ஏன் தாக்கப்படுகிறோம் என்று புரியாமல், “ஏன் அடிக்கிறாய், நானென்ன தவறு செய்தேன்?” என்று பரிதாபமாகக் கேட்டாள்  இவள். “உன்னுடைய மாமன் எஸ்கோபாரின் ஆட்கள் போனவாரம் ஃபுட்பால் ஸ்டேடியத்தில் குண்டு போட்டார்களே? அதில் என்னுடைய தாத்தாவும்,  பாட்டியும் இறந்துவிட்டார்கள்.
18a.jpg
ஏற்கனவே இந்த பாழாய்ப்போன வன்முறையால் பெற்றோரை இழந்து தவிக்கும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் அவர்கள் மட்டும்தான். இப்போது  அனாதையாக என்னுடைய எதிர்காலம் என்னாகுமோ என்று பைத்தியம் பிடித்து நடுத்தெருவில் நிற்கிறேன்” என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழ  ஆரம்பித்தாள். “அழுவதை நிறுத்து. உனக்கு என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வேன். பாப்லோ, எனக்கு உறவுக்காரரே தவிர..  அவருக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் இப்போது எந்தத் தொடர்புமில்லை” என்று பதிலுக்கு இவளும் அழுதாள். இருந்தாலும் போர்க்கோலம் பூண்டு  யார் யாரையோ பிடித்து பாப்லோவை தன் சக மாணவிக்காக நியாயம் கேட்டாள்.

“கொலம்பியாவில் பிறந்ததைத் தவிர்த்து அவள் என்ன பாவம் செய்தாள்? இப்போது அனாதையாக நிற்கிறாளே?” “நடப்பது போர். தீயவர்கள்  மட்டுமின்றி நல்லவர்களும் சாகத்தான் செய்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது!” “யார் நல்லவர், யார் தீயவர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை!”  வேறு யாராவது இதுபோல எஸ்கோபார் முன்பாக நின்று பேசியிருந்தால் என்னாகியிருக்கும் என்றே சொல்ல முடியாது. சிறு பெண் என்பதால் பாப்லோ  பொறுமையாக பதிலளித்தார். “அதை வரலாறு தீர்மானிக்கும். நான் என்ன ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டுமென நான் முடிவெடுப்பதில்லை.  அமெரிக்காதான் முடிவெடுக்கிறது.

சிறு பெண்ணான உனக்கு இந்த அரசியலை எல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது!” “எப்போதுதான் இந்த இரத்த வெறியாட்டம் முடிவுக்கு  வரும்?” “நானோ, கொலம்பியாவோ இதைத் தீர்மானிக்க முடியாது. அமெரிக்காதான் மனசு வைக்க வேண்டும். நான் இன்னும் எத்தனை ஆண்டுகள்  உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நிச்சயம் எனக்குத் தெரியாது. ஆனால், இறுதி மூச்சுவரை அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவேன்!”  பாப்லோவிடம் நீதி கேட்ட அந்தப் பெண் பின்னர் சொன்னாள்.

“அன்று அவர் என் கண்களுக்கு ஒரு போராளியாகத்தான் தெரிந்தாரே தவிர, வன்முறையாளனாக அல்ல!” அமெரிக்காவாலும் நினைத்த மாதிரி  பாப்லோவை அடக்க முடியவில்லை. ஏனெனில், கொலம்பியாவின் உயர்மட்டத் துறைகளில் இருந்தவர்கள் பலரும் எஸ்கோபாரோடு பிசினஸ் ரீதியாக  பலமாக பிணைக்கப்பட்டிருந்தார்கள். கொலம்பியாவின் மேல் மட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும்தான் பாப்லோ எஸ்கோபாரை பரம எதிரியாகக்  கருதினார். அமெரிக்கா காலால் இட்ட பணியை தலையால் முடிக்க எப்போதுமே தயாராக இருந்தார். கொலம்பிய பாதுகாப்புத் துறையின் ஜெனரலாக  இருந்த மைகுவேல் மாஸாதான் அவர்.

ஒட்டுமொத்த போதை கார்டெல்களையும் புல் பூண்டு கூட முளைக்க முடியாத அளவுக்கு குழிதோண்டிப் புதைப்பேன் என்று சபதமிட்டு இரவும்,  பகலுமாக வேட்டை நாய் போல அலைந்து கொண்டிருந்தார். மனிதர், ஒன்றும் அவ்வளவு புனிதமானவரல்ல. இவரும் மறைமுகமாக போதைத் தொழில்  செய்து, கையும் களவுமாக அமெரிக்காவிடம் மாட்டியவர் தான். அமெரிக்கா சொல்படி கேட்காவிட்டால் அந்த கேஸில் எப்போது வேண்டுமானாலும்  ஆண்டுக்கணக்கில் அமெரிக்க சிறைகளில் காலம் தள்ள வேண்டுமென்ற நெருக்கடி இவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இன்னொரு முக்கியமான  விஷயம்.

மூன்று அத்தியாயங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையிலேயே அதிபர் பதவிக்கு நின்ற லூயிஸ் கார்லோஸ் கேலன் படுகொலை  செய்யப்பட்டதை வாசித்திருந்தோம், நினைவிருக்கிறதா? பாப்லோதான் கொன்றார் என்றுதான் ஊர் உலகமெல்லாம் நம்பிக் கொண்டு இருந்தது. 1889ல்  நடந்த அந்தப் படுகொலை வழக்கில் 2016ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில், 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர் யார் தெரியுமா? அப்போதைய  கொலம்பிய பாதுகாப்புத் துறை ஜெனரலாக இருந்த மைகுவேல் மாஸா. வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது.

 

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 59     

பாப்லோ எஸ்கோபாரின் ‘காட்ஃபாதர்’ வாழ்வில் மிகப்பெரிய வில்லன் யாரென்றால், கொலம்பிய பாதுகாப்புத் துறையின் ஜெனரலாக இருந்த மைகுவேல் மாஸாதான். பாப்லோவின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு அபாண்டங்களுக்கு இவரே காரணம். முக்கியமான அரசுத்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு கூலிப்படைத் தலைவன் கணக்காக பணியாற்றியிருக்கிறார். அவர் செய்த பல படுகொலைகளின் பழி பாப்லோ மீதுதான் விழுந்தது. பாப்லோ மறைந்து பல வருடங்களுக்குப் பிறகே மைகுவேல் மாஸாவின் சுயரூபம் கொலம்பியாவுக்குத் தெரியவந்தது.
21.jpg
முப்பதாண்டுகளுக்கு முன்பு முற்பகல் செய்ததற்கு சமீபத்தில்தான் பிற்பகல் விளைந்து, கொலைவழக்கு ஒன்றில் அவருக்கு முப்பதாண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அநியாயங்களையும், அட்டூழியங்களையும் செய்த மாஸாவுக்கு அமெரிக்காவின் பரிபூரண ஆசி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1989 - 90 காலக்கட்டங்களில் பாதுகாப்புத்துறை கொலம்பிய தெருக்களில் நடத்திய வெறியாட்டம் இன்றளவும் நினைவுகூறப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள் பலருமே போதை உள்ளிட்ட பல்வேறு முறைகேடான தொழில்களில் கொழித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு, அவர்கள் செய்த குற்றங்களையும் கார்டெல்கள் கணக்கில் எழுதினார் மாஸா. போதைத் தொழில் நடத்துவதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பல்லாயிரம் அப்பாவிகள் சிறைகளுக்குச் சென்றனர். அரசியல் எதிரிகள் அத்தனை பேரையும் மாஸாவை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்.

சட்டத்தின் பேரால் மாஸா செய்துகொண்டிருந்த அட்டூழியங்களை பலமுறை அரசிடம் ஆதாரபூர்வமாகக் கொண்டு சென்றார்கள் பாப்லோவின் ஆட்கள். எந்தப் பயனும் இல்லை. பாப்லோ, இதுபோல தனக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதைத் தடுக்க மாஸா ஒரு போடு போட்டார். “நான் நேர்மையான அதிகாரி. என்னை விலைக்கு வாங்க பாப்லோ எஸ்கோபார் முயற்சிக்கிறார். எவ்வளவு கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் நான் நேர்மையின் பாதையிலிருந்து தவறமாட்டேன்..!”

இந்த அறிக்கையை வாசித்து பாப்லோ, வாய்விட்டுச் சிரித்தார். “இந்த மாஸா மட்டும் நம்மளை மாதிரி கார்டெல் வெச்சி நடத்தியிருந்தான்னா, உலகத்துலேயே நம்பர் ஒன் மாஃபியாவா அவன்தான் இருந்திருப்பான்!” என்று குஸ்டாவோவிடம் சொன்னார். வாரம் தவறாமல் தன்னைக் கொல்ல பாப்லோ முயற்சிப்பதாக மாஸா குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார். அதற்கு சாட்சியங்களை உருவாக்க தன் மீது தானே பொய்யான தாக்குதல்களை நடத்திக் கொண்டார். கையிலோ, காலிலோ பொய்யாக கட்டு போட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு, பாப்லோ குழுவினர் நடத்திய தாக்குதலில் தான் மயிரிழையில் உயிர் பிழைத்ததாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
21a.jpg
கொலம்பியாவில் வெடிகுண்டு கலாசாரம் உச்சத்தில் இருந்த நேரம் அது. மாஸாவின் கார் ஒரு குண்டு வெடிப்பில் தூள்தூளானது. அதில் அவர் இல்லை. அவருடைய பாதுகாவலர்கள் ஏழு பேர் உடல் சிதறிப் போனார்கள். “பார்த்தீர்களா, பாப்லோ நிகழ்த்தும் கொடுமையை. நல்லவேளை, நான் கடைசி நிமிடத்தில் காரில் ஏறாததால் உயிர் தப்பினேன்...” என்று மாஸா முதலைக்கண்ணீர் வடிக்க, பாப்லோ டென்ஷனாக நகம் கடிக்க ஆரம்பித்தார். குஸ்டாவோவிடம் சொன்னார்.

“குண்டு வெடிச்சா எப்படி இருக்கணும்னு பார்க்குறதுக்கு நம்ம ஜெனரல் ரொம்ப ஆசைப்படுறாரு. செஞ்சி காட்டிடுவோமா?”டிசம்பர் 1989. பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகம். அக்கம் பக்கத்தில் நிறைய அரசு அலுவலகங்கள். தனியார் அலுவலகங்களும் ஏகத்துக்கும் இருந்தன. எப்போதும் ஜனநாட்டமாட்டம் கசகசவென்று இருக்கும். வாகனங்கள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்கும். பாதுகாப்புத் துறை அலுவலக வாசலில் பெரிய இரும்பு கேட் ஒன்று உண்டு.

அதன் இருபக்கமும் ஆயுதமேந்திய காவலர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தெருவில் வருவோர், போவோரைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அன்று காலை வழக்கம்போல மைகுவேல் மாஸாவின் கருப்புநிற சொகுசு கார் காம்பவுண்டுக்குள் நுழைகிறது. அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு கேட்டை மூடுவதற்கு காவலர்கள் தயாராகிறார்கள். அப்போது அலுவலகத்துக்குள் இருந்து ஒருவன் ஓடிவருகிறான். கேட்டுக்கு வெளியே வந்த அவன், நல்ல சப்தம் எழுப்பி விசில் அடிக்கிறான்.

அவனுடைய விசில் சப்தம் எழுந்த அடுத்த பத்து வினாடியில் அதிவேகத்தில் பெரிய பஸ் ஒன்று இரும்பு கேட்டை இடித்துத் தள்ளிவிட்டு வளாகத்துக்குள் நுழைகிறது. இந்த பஸ்ஸின் புயல்வேக வருகையைக் கவனித்துவிட்ட, வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் தன்னுடைய காரை எடுத்து வந்து கட்டடத்தின் வாயிலுக்கு முன்பாக நிறுத்தினார். பஸ், அந்தக் கார் மீது மோத, ‘டமால்’.

கொலம்பியாவில் அரசுக்கும், கார்டெல்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த போரில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு இதுதான். அந்த பஸ்ஸில் சுமார் 3,500 கிலோ எடையுள்ள வெடி மருந்து இருந்தது. பாதுகாப்புத் துறை கட்டடத்தின் பாதி அப்படியே சரிந்தது. ஒருவேளை அந்த போலீஸ்காரரின் கார் குறுக்கிட்டிருக்கா விட்டால் முழுக்கட்டடமும் சிதறியிருக்கும். “அந்த வளாகத்தின் நெடிய சுவர் முழுக்க, இரத்தத்தால் வர்ணம் அடிக்கப்பட்டிருந்தது...” என்று அந்த சம்பவத்தை அப்போது நேரடி ரிப்போர்ட் செய்த நாளிதழ் ஒன்று எழுதியது.

பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் என்று சுமார் 50 பேர் சம்பவ இடத்திலேயே சிதறி பலியானார்கள். எங்கும் மரண ஓலம். பல நூறு பேர் கை, கால்களை இழந்து கதறிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக போலீஸும், இராணுவமும் வந்துவிட்டது. ஆம்புலன்ஸ்களின் சைரன் சப்தம் அந்தப் பகுதியையே அலறவைத்தது. காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நகரில் இருந்த மருத்துவமனைகள் போதவில்லை. சில அரசுக் கட்டிடங்களையே தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி நிறைய பேருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள்.

நாடு முழுக்கவும் இருந்து மருத்துவர்கள் தலைநகருக்கு அவசரப் பணிகளுக்காக அழைக்கப்பட்டார்கள். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே கார்டெல் முக்கியஸ்தர்கள் எஸ்கேப் ஆக ஆரம்பித்தார்கள். பாப்லோ, அவரது குடும்பத்தையும் நெருங்கிய சகாக்களின் குடும்பத்தினரையும் உடனடியாக வேறு வேறு ரகசிய இடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார். பாதுகாப்புத் துறை கட்டடம் மீதான தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை டிவியில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பாப்லோ மட்டுமின்றி, ஒட்டுமொத்த கொலம்பியாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. யெஸ். எல்லோருக்கும் வில்லனான மைகுவேல் மாஸாவை இந்த முறையும் அதிர்ஷ்டம் கைவிடவில்லை. கட்டடத்தின் பின்பக்கமாகத்தான் அவரது அலுவலக அறை இருந்தது. அந்த அறையின் சுவர்கள் குண்டுகூட துளைக்க முடியாத வலிமையான இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தன. கட்டடத்தின் முன்பக்கம்தான் பெருமளவு சேதம் என்பதால்,

லேசான அதிர்ச்சியை மட்டுமே தன்னுடைய அறையில் உளர்ந்தார் மாஸா. சிறு கீறல் கூட இல்லாமல் வெளியே வந்து டிவிக்கு பேட்டியளித்தார். “என்னுடைய தளத்தில் நான் மட்டுமே இப்போது கடவுள் அருளால் உயிரோடு இருக்கிறேன். என் நேசத்துக்குரிய அலுவலக சகாக்கள் அத்தனை பேரையும் இழந்துவிட்டேன். இந்த பெரும் அழிவுக்குக் காரணமானவர்கள் ஒருவரைக்கூட நான் உயிரோடு விடமாட்டேன்...”
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-60

பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகத்தையே தூள் தூளாக்கி விட்டதால் பாப்லோ எஸ்கோபார், கார்டெல்களிடம், தான் இழந்த செல்வாக்கை  மீண்டும் மீட்டுவிட்டார்.
20.jpg
எனினும் கொலம்பிய அரசு முன்பைவிட மூர்க்கமான தாக்குதல்களை கார்டெல்கள் மீது கட்டவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தது. இரு தரப்பிலும்  உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கே இல்லை. இவர்களது மோதலுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமாகி காரணமேயின்றி  காலனுடைய பாசக்கயிறுக்கு ஆளான அப்பாவிகள் பல்லாயிரக் கணக்கானோர். கார்டெல்களின் துல்லியமான தாக்குதல்களில் நீதிபதிகள்,  காவல்துறையினர், அரசியல்வாதிகள் என்று கணிசமானோர் பலியானார்கள்.

1990ம் ஆண்டு கொலம்பியாவின் அதிபர் தேர்தலுக்கு நின்ற ஐந்து வேட்பாளர்களில் மூவர், தேர்தலுக்கு முன்பாகவே கொல்லப்பட்டனர் என்றால்  நிலைமை எவ்வளவு மோசமென்று புரிந்து கொள்ளலாம். அதுபோலவே கார்டெல்கள் தரப்பிலும் கணிசமான சேதாரம் இருந்தது. கார்டெல்  தலைவர்களின் நண்பர்களும், குடும்பத்தினரும் போதைத் தொழிலுக்கே சம்பந்தமில்லாதவர்களாக இருந்தாலும் பழிவாங்கும் நோக்கத்தோடு  போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ஒரு பக்கம் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொலம்பியாவின் பணக்காரக் குடும்ப உறுப்பினர்கள் சொல்லிவைத்தாற்போல  கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க லட்சங்களையும், கோடிகளையும் குவிக்க வேண்டியிருந்தது. “என்ன செய்வது? கார்டெல் என்பது சாம்ராஜ்யம்.  அதை நடத்த பெரும் பணம் தேவைப்படுகிறது. நாங்கள் பாட்டுக்கு நேர்மையாக(!) போதை மருந்து கடத்தி சம்பாதித்து, நாட்டுக்கு வருமானம் தேடிக்  கொண்டிருந்தோம். இந்த மக்கள் விரோத அரசாங்கம், அமெரிக்காவுக்காக அதைக் கட்டுப்படுத்தி எங்களை பண நெருக்கடிக்கு ஆளாக்குகிறார்கள்.

வேறு வழியில்லாமல் கடத்த வேண்டியிருக்கிறது...” என்று உருக்கமாக கார்டெல் உரிமையாளர்கள் மக்களுக்கு விளக்கம் சொன்னார்கள். ஆனால்,  பணத்துக்காக மட்டுமே கடத்தல் நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு குறித்த அதிருப்தி மக்களுக்கு ஏற்பட வேண்டும். அது கோபமாகி அரசாங்கத்தை  நோக்கித் திரும்ப வேண்டும். இதன்மூலமாக அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வெளியேற்றச் சட்டத்தை கொலம்பிய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்பதே கார்டெல்களின் நோக்கமாக இருந்தது.
20a.jpg
அரசாங்கத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பணக்காரர்கள் எந்த நிமிடத்திலும் தங்கள் குடும்பத்தில் யாராவது கடத்தப்படலாம் என்கிற  அச்சத்தோடே கொலம்பியாவில் வாழ்ந்தார்கள். சிலர், எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து செட்டில் ஆனார்கள்.  ஒருகட்டத்தில் அரசாங்கம் இறங்கிவந்து கார்டெல்காரர்களுடன் சமரசம் பேச முயற்சித்தது. கொலம்பியாவின் முன்னாள் அதிபர்கள் மூவர், அரசு  சார்பாக பாப்லோவுக்கு தூது அனுப்பினார்கள். பாப்லோ எஸ்கோபார் எதிர்பார்த்தது இதைத்தான்.

‘எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். கொலம்பிய மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக தன்னுடைய சொத்து,  சாம்ராஜ்யம் அத்தனையையும் துறக்கவும்கூட தயாராகவேதான் இருந்தார். வாழ்ந்தால் நிம்மதியாக வாழவேண்டும். இல்லையேல் சாக வேண்டும்.  இப்படி தினமும் போராடிக்கொண்டே இருக்க முடியாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. எனினும் அரசியல்வாதிகளில் சிலர் பாப்லோ  எஸ்கோபாரைக் கண்டு அச்சப்பட்டார்கள். ஒருவேளை அவர் அமைதிப் பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுவிட்டால் மக்கள் மத்தியில் ஹீரோவாகி  விடுவார்.

அதிபர் பதவிக்கு போட்டியிட்டு கொலம்பியாவைக் கைப்பற்றி விடுவார். அதற்குப் பிறகு ஆண்டவனே நினைத்தாலும் பாப்லோவை அசைக்க முடியாது  என்றெல்லாம் பயந்தார்கள். அவர்கள் அச்சப்பட்டதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. அதுநாள் வரையிலான பாப்லோவின் வரலாறு அப்படிப்பட்டது.  கல்யாண வீட்டுக்குள் விருந்தினராக நுழைந்தாலும், அவர்தான் மாப்பிள்ளையாக ஆவார் என்பது மாதிரியான யோக ஜாதகம். பாப்லோ டம்மியாக  நடத்திக் கொண்டிருந்த அரசியல் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவருடைய போதைத் தொழில் சாராமல் அவருக்குத் தொண்டர்களாக  வந்தவர்கள் ஸ்கெட்ச் போட்டு, ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது அதனால்தான்.

1940களில் கொலம்பியாவில் ஜார்ஜ் கெய்தான் என்றொரு தலைவர் இருந்தார். மக்களின் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது ஒன்றே தன்னுடைய  லட்சியமென்று பாடுபட்டுக் கொண்டிருந்தார். தனக்கு அதிபராக வாய்ப்பு கிடைத்தால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு  முக்கியத்துவம் கொடுத்து கொலம்பியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக ஆக்குவேன் என்று பிரச்சாரம் செய்தார். அவருடைய கூட்டங்களுக்கு அந்தக்  காலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருவார்களாம். 1948ல் அவருடைய அரசியல் எதிரிகளால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
 
கெய்தானைத்தான் தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி பாப்லோ சொல்லுவார். மக்களும் அவரை ஜார்ஜ் கெய்தானின் வாரிசாகவே கருதி,  பாப்லோவின் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டார்கள். எனவேதான் பாப்லோவை ஒரு வன்முறையாளனாக மட்டுமே அரசியல்வாதிகள்  திரும்பத் திரும்ப முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை பாப்லோ அரசியலில் வென்றுவிட்டால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை மிகச் சுலபமாக அத்தனை வழிமுறைகளையும் கடைப்பிடித்து உருவாக்கி விடுவார் என்று கருதினார்கள்.
20b.jpg
அதிபர் தேர்தல் பிரசாரத்தில் கொல்லப்பட்ட கேலனின்உதவி யாளரான சீசர் கேவிரியா, ஆகஸ்ட் 1990ல் புதிய அதிபராகப் பதவியேற்றார்.  “போதைத்தொழில் என்பது கொலம்பியாவுக்கு மட்டுமேயான பிரச்சினையல்ல. இன்று உலகளாவிய பிரச்சினையாக அது உருவெடுத்திருக்கிறது.  கொலம்பியாவை போதைத் தயாரிப்பு நாடாக உலக அரங்கில் கேவலமாகப் பேசுகிறார்கள். நாம் அனைவரும் இணைந்து நம் தாய்நாட்டின்  அவப்பெயரைத் துடைக்க வேண்டும்...” என்று பேசினார். ஒருவகையில் இது கார்டெல்களுக்கான க்ரீன் சிக்னலாக இருந்தது.

இவரது பதவியேற்புக்குப் பிறகு அதிகாரிகளின் கொட்டம், குறிப்பிடத்தக்க அளவுக்கு அடங்கியது. ஆனால், அடிபட்ட புலி ஒன்று மட்டும்  கர்ஜித்துக்கொண்டே இருந்தது. அது, பாதுகாப்புத் துறையின் ஜெனரலாக இருந்த மைகுவேல் மாஸா. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதிபரின்  வாக்குறுதிகளையும் மீறி, கார்டெல்கள் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கெடுபிடி குறைந்தபிறகு மெதிலின் நகரில் சுதந்திரமாகச்  சுற்றித் திரிந்துகொண்டிருந்த கார்டெல் முக்கியஸ்தர்கள் இதனால் கடுமையான அதிர்ச்சியை எதிர்கொண்டார்கள்.

அப்படித்தான் ஒருமுறை…மெதிலின் நகரில் இருந்த அந்த கச்சிதமான  மாளிகையை கமாண்டோ படையினர் சுற்றி வளைத்தார்கள். போலீஸாரின்  நடமாட்டத்தைக் கண்டதுமே உள்ளிருந்த ஆட்கள், மெஷின்கன்னோடு பாய்ந்து வந்து சண்டையிட்டார்கள். பதிலுக்குத் தாக்கிய கமாண்டோக்களின் குறி  துல்லியமாக இருந்தது. ஐந்தே நிமிடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தியவர்கள் மொத்தமாக பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது உள்ளே இருந்து  தனிமனிதனாக ஆவேசத்தோடு வெளியே வந்தார் பாப்லோவின் பால்ய நண்பரான குஸ்டாவோ.

இரு கைகளிலும் ஏந்திய துப்பாக்கிகளைக் கொண்டு சுழன்று சுழன்று சுட்டார். அந்தக் காட்சி, சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு 360 டிகிரி சுழன்று  போரிட்ட அபிமன்யூவின் மகத்தான வீரத்துக்கு இணையானது. நல்ல ஆயுதப் பயிற்சி பெற்றவரும், வீரத்தில் எவருக்கும் குறைவில்லாதவருமான  குஸ்டாவோவின் தாக்குதலில் கமாண்டோ படை நிலைகுலைந்தது. தனி மனிதரான இவரை அடக்க மேலும் படை வேண்டுமென ரேடியோ மூலமாக  போலீஸ் தலைமையகத்துக்கு தகவல் அனுப்பினார்கள்.

படை படையாக வீரர்கள் வந்து இறங்க, குஸ்டாவோவின் மரணம் உறுதியானது. ஆனால், எந்நிலையிலும், தான் உயிரோடு பிடிபட்டு விடக் கூடாது  என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஒருவேளை தனக்கு ஏதேனும் மருந்து செலுத்தி பாதி மயக்க நிலைக்குக் கொண்டு சென்று பாப்லோ குறித்த  உண்மைகளைப் பிடுங்கி விடுவார்களோ என்று அச்சம். எனவே, மரணத்தை மகிழ்வோடு எதிர்கொண்டார்.

கட்டடத்தை விட்டு வெளியே வந்து திறந்த இடத்தில் நின்றுகொண்டார். தொடர்ச்சியாகத் துப்பாக்கியை முழக்கிக்கொண்டே இருக்க, அவரை நெருங்கிப்  பிடிக்க முடியாது என்ற நிலையில் நாலா பக்கமிருந்தும் கமாண்டோக்கள் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஸ்நைப்பர் குறிபார்த்து அவரது  தலையில் தோட்டாவைச் செலுத்த, புன்னகையோடு மண்ணில் சாய்ந்தார் அந்த மாவீரர்.
 

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-61

குஸ்டாவோ கொல்லப்பட்டது கொலம்பிய வரலாற்றில் வெறும் சம்பவம் அல்ல. சரித்திரம். அன்று தொடங்கி பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின்  கார்டெல், அரசாங்கத்துக்கு எதிரான வெறியாட்டத்தை முன்பைக் காட்டிலும் முனைப்பாக ஆடத்தொடங்கியது. அரசு அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் திடீர் திடீரென கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க கற்பனைக்கும் சாத்தியமில்லாத நிபந்தனைகள்  முன்வைக்கப்பட்டன.
18.jpg
குறிப்பாக முன்னாள் அதிபர் டயானா துர்பேவின் மகள் கடத்தப்பட்டது, நாடெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. அதிபராக இருந்தவரின்  குடும்பத்தையே கொலம்பிய அரசால் பாதுகாக்க முடியாது என்கிற யதார்த்தம் அனைவரையும் சுட்டது. இனியும் பாப்லோ எஸ்கோபாரிடம் மோதுவது  என்பது, அவரவர் குடும்பத்தையே பணயம் வைப்பதற்கு சமமென்று போலீஸ் அதிகாரிகள் கருதினார்கள். திரைமறைவில் மெதிலின் கார்டெல்லோடு  ‘வியாபாரம்’ பேசினார்கள். தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ எந்தவித ஆபத்தும் வரக்கூடாது என்கிற ஒற்றை நிபந்தனையோடு, கார்டெல்  முன்வைத்த நிபந்தனைகளை ரகசியமாக ஏற்றுக் கொண்டார்கள்.

பாப்லோவின் இந்த அதிரடி கடத்தல் நடவடிக்கைகளைத் தவிர்க்க அரசியல்வாதிகளும் இறங்கி வந்தார்கள். தங்கள் உயிரையும், குடும்பத்தையும்  காத்துக்கொள்ள கோடிக்கணக்கில் கப்பமும் கட்டினார்கள். அரசியல்வாதிகளும், அதிகார மட்டமும் பாப்லோவிடம் பணிந்துகொண்டிருந்த சூழலில்  புதியதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிபர் சீஸர் கேவிரியாவும், கார்டெல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள  முடிவெடுத்தார். இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அமெரிக்க அதிகாரிகளை அவர் பொருட்படுத்தவில்லை. “போதை கார்டெல் நடத்திக்  கொண்டிருப்பவர்கள் திருந்தி வாழ, கொலம்பிய அரசு ஒரு திட்டம் அறிவிக்கிறது.

அரசிடம் சரணடையும் கடத்தல்காரர்களுக்கு குறைந்தபட்ச சிறைத்தண்டனையே கிடைக்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்கள் சிறையிலிருந்து  வெளியே வந்து மற்ற கொலம்பியக் குடிமகன்களைப் போலவே வாழலாம். அவர்கள் இதுவரை சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்வது, வேறு  புதிய வழக்குகள் போடுவது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம். இது தொடர்பான அத்தனை நடவடிக்கைகளும் மக்கள்  முன்பாக வெளிப்படையாகவே நடக்கும்...” அதிபரின் இந்த அறிவிப்பு, பெரிய கார்டெல் முதலாளிகளிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அறிவிப்பு வந்த  மூன்று வாரங்களிலேயே ஓச்சா சகோதரர்கள், தங்கள் குழுவினரோடு அரசு அதிகாரிகள் முன்பாக சரணடைந்தார்கள்.
18a.jpg
சிறப்பு நீதிமன்றம் மூலமாக விரைவான விசாரணை நடத்தி, அவர்களுக்கு சொற்பமான சிறைத்தண்டனை மட்டுமே கிடைக்க வழி செய்தார் அதிபர்.  இதைத் தொடர்ந்து மற்ற கார்டெல்களும் ஓச்சா சகோதரர்களின் வழியைப் பின்பற்றி, தங்கள் கார்டெல்களைக் கலைத்தார்கள். ஆனால், எஸ்கோபார்  மட்டும் அவசரப்படவில்லை. சிறிய மீன்களைப் போட்டு பெரிய மீனான தன்னைப் பிடிக்க அமெரிக்கா தந்திரமாகத் திட்டமிடுகிறது என்று நினைத்தார்.  தானும், தன்னுடைய குழுவினரும் சரணடைந்தால் கொலம்பியாவில் நீதிவிசாரணை நடைபெறுவதற்கு பதிலாக அமெரிக்காவிடம்  ஒப்படைக்கப்படுவோமோ என்று சந்தேகப்பட்டார்.

ஏற்கனவே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட கார்லோஸ் லேதர் என்கிற கார்டெல்காரருக்கு 135 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை  வழங்கப்பட்டிருந்த சம்பவம் வேறு அவரை பயமுறுத்திக் கொண்டே இருந்தது. “அமெரிக்காவில் சிறைக்கைதியாகக் கம்பி எண்ணுவதைக் காட்டிலும்,  சொந்த மண்ணான கொலம்பியாவின் மண்ணுக்குள் புதைந்து போவதே மேல்...” என்று அடிக்கடி அவர் சொல்லும் பஞ்ச் டயலாக்கையே அப்போதும்,  தன் கார்டெல் சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அரசாங்கம் அவசரப்படவில்லை. பாப்லோ எஸ்கோபாருடன் பேச்சுவார்த்தை நடத்த  சம்மதித்தது.

எஸ்கோபாரை நம்பவைக்க டி-20 கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடிப்பதைப் போல ஒரு அதிரடி நடவடிக்கையை  முன்னெடுத்தது. யெஸ். கொலம்பிய அரசை அச்சுறுத்திக் கொண்டிருந்த இடது கொரில்லா படையினரான எம்-19 குழுவினருக்கும் கார்டெல்களுக்குக்  கொடுத்த அதே சலுகையைக் கொடுத்தது. “ஆயுதங்களை மவுனித்துவிட்டு சரணடையுங்கள். நீங்களும் எங்களைப் போலவே மக்கள் நலனுக்காகத்தான்  பாடுபடுகிறீர்கள். ஆயுதப் புரட்சி வேண்டாம். அரசியல் புரட்சிக்கு தயாராகுங்கள். அமைதியான கொலம்பியாவை நாம் கரம் சேர்த்து அமைப்போம்.

அரசு, உங்கள் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கும்...” என்று கொரில்லாக்களுக்கு அதிபர் வைத்த உருக்கமான வேண்டுகோளுக்கு பலன் இருந்தது.  எம்-19 கொரில்லாக்கள் தங்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் செய்த குற்றம், குறைகள் அத்தனையும் மன்னிக்கப்பட்டன.  அதுநாள்வரை வன்முறைப் பாதையில் புரட்சியை உண்டாக்கிவிட முடியுமென்று செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள், ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி  மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்தார்கள். “ஆனானப்பட்ட எம்-19 கொரில்லாக்களுக்கே மன்னிப்பு வழங்கிய அரசாங்கம் நம்மை மன்னிக்காதா?”  என்று மெதிலின் கார்டெல் முக்கியத் தலைகள், பாப்லோ எஸ்கோபாரை நச்சரிக்கத் தொடங்கின.
18b.jpg
தங்கள் தளபதி குஸ்டாவோவை அநியாயமாக இழந்ததில் இருந்தே, தாங்களும் அதுபோல சுட்டுக் கொல்லப்பட்டு நடுவீதியில் பிணமாக வீழக்கூடாது  என்கிற எண்ணம் அவர்களுக்கு முளை விட்டிருந்தது. ஒருவழியாக பாப்லோ எஸ்கோபார் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார். அரசு சார்பாக தன்னோடு  யார் யார் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாப்லோவே தீர்மானித்தார். அவர் குறிப்பிட்ட நீதித்துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சியின் முக்கியப்  பொறுப்பில் இருந்தவர்களுமே பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றனர். நள்ளிரவு வேளையில் மெதிலின் கார்டெல் ஆட்கள் சன்னல்களே இல்லாத  ஒரு வேனை ஓட்டி வருவார்கள்.

அரசு சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் குழுவினர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த வேனில் ஏறியதுமே, வேன் எங்கெங்கோ சுற்றும்.  ஒருவழியாக அதிகாலையில் ஒரு பண்ணை வீட்டைச் சென்றடையும். பாப்லோவே நேரடியாகக் குழுவினரை வரவேற்று உபசரிப்பார். அடுத்த இரண்டு  மூன்று நாட்களுக்கு அவர்கள், பாப்லோவின் விருந்தினர்களாக அந்த பண்ணை வீட்டில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அரசாங்கம் தன்னிடம் என்ன  எதிர்பார்க்கிறது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பாப்லோ, தன்னால் எந்தெந்த நிபந்தனைகளை ஏற்க முடியுமென்று கறாராகப்  பேசினார். பாப்லோவின் கருத்துகளைக் கேட்டுவிட்டுத் திரும்பும் பேச்சுவார்த்தைக் குழுவினர் அதிபர் அலுவலகத்தில் கூடி விவாதிப்பார்கள்.

அடுத்த முறை பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போது பாப்லோவின் சில கோரிக்கைகளை நிராகரித்து, சில புதிய சலுகைகளை அறிவிப்பார்கள்.  இப்படியாக இரண்டு மூன்று முறை பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே பாப்லோவை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க  அமெரிக்காவின் கூலிப்படை போல இயங்கிக் கொண்டிருந்த காலி கார்டெல்லைச் சேர்ந்தவர்கள், மெதிலின் நகர் முழுவதும் வலைவீசித்  தேடிக்கொண்டிருந்தார்கள். பாப்லோவின் குடும்ப உறுப்பினர்களைக் கொன்றால், அவர்களுக்கு கணிசமாகக் கூலி வழங்கப்படும் என்றும் அமெரிக்காவின்  சிஐஏ அதிகாரிகள் ஆசை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
18c.jpg
மேலும் நேரடி நடவடிக்கையாக அமெரிக்காவின் உளவு விமானங்களும் மெதிலின் வானில் அடிக்கடி பறந்து கொண்டிருந்தன. பாப்லோ குழுவினரின்  தொலைபேசியும், அமெரிக்க உளவுத்துறையினரால் ஒட்டுக் கேட்கப்பட்டு  கொண்டிருந்தது. இதெல்லாம் அதிபரே அறியாமல் நடந்துகொண்டிருந்தவை.  மற்ற கார்டெல்களைப் பற்றி அமெரிக்காவுக்குக் கவலையில்லை. பாப்லோ எஸ்கோபாரை மட்டுமாவது அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை  வாங்கிக் கொடுக்க வேண்டும், அல்லது அவரது பிணத்தையாவது அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் அமெரிக்க அதிகாரிகள்  வெறித்தனமாக இருந்தார்கள்.

இல்லையேல் அமெரிக்காவில் தன்னுடைய இமேஜ் ஆட்டம் கண்டுவிடுமென அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கருதினார். இதற்கிடையே சர்ச்,  கொலம்பிய அரசுக்கும் பாப்லோவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவேண்டும் என்று தன்னிச்சையான சில நடவடிக்கைகளை  முன்னெடுத்தது. மத நம்பிக்கை நிரம்பியவரான பாப்லோ மீது சர்ச்சுக்கு அனுதாபம் இருந்தது. கொலம்பியாவில் புகழ்பெற்ற ஃபாதர் கார்சியா என்பவர்  அப்போது ‘கடவுளின் நிமிடங்கள்’ என்கிற டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அந்த நிகச்சியில் பலமுறை வெளிப்படையாகவே, “பாப்லோவுடன் நான்  பேச விரும்புகிறேன். அவர் சராசரி மனிதராக, இயேசு கிறிஸ்துவின் குழந்தையாக இந்த மண்ணில் வாழவேண்டும்...” என்று அறிவித்தார்.

பாப்லோ விரும்பிப் பார்க்கும் டிவி நிகழ்ச்சி இது. இம்மாதிரி பாப்லோ தொடர்பான அறிவிப்பை ஃபாதர் சொல்லும்போதெல்லாம், மறுநாள் சர்ச்சுக்கு  லம்பான தொகை உண்டியலில் விழுவது வாடிக்கை. கொலம்பியாவில் எல்லாத் தரப்புமே பாப்லோ எஸ்கோபாரின் அனுதாபிகள்தான். அவர் ஓர்  அரசியல் தலைவராகவோ, தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியாகவோ நிம்மதியான வாழ்வை எல்லோரையும் போல வாழவேண்டும் என்று  விரும்பினார்கள். வன்முறை போதுமென்ற மனநிலையில் இருந்த நாட்டின் அதிபருக்கும் அதே எண்ணம்தான் இருந்தது. காலம் கைகூடி வந்தது.  எனினும், விதி வேறு கதை எழுதத் தொடங்கியது. விதியின் விளையாட்டை யார்தான் மாற்ற முடியும்?
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-62

வன்முறை போதும் என்கிற முடிவுக்கு பாப்லோ எஸ்கோபார் ஏற்கனவே வந்துவிட்டார். அவரோடு தொடர்பில் இருந்த ஆர்ச்பிஷப்பான டேரியோ,  கொலம்பிய அதிபர் சீஸருக்கும் நெருக்கமானவர்தான். இன்னும் சொல்லப்போனால் அதிபருக்கு திருமணம் நடத்தி வைத்தவரே இந்த பிஷப்தான். பாப்லோவும் இவருடைய பேச்சைக்கேட்பார், அதிபருக்கும் அவர் குருநாதர் ஸ்தானத்தில் இருந்தார் என்பதால் பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்து  வந்தது. கார்டெல்களுக்கு மட்டுமல்ல, கொலம்பிய சர்ச்சுகளுக்கும் பாப்லோ, காட்ஃபாதராக இருந்துவந்தார்.
23.jpg
பாப்லோவின் தாயார் மத நம்பிக்கை மிகுந்தவர் என்பதால், தன்னுடைய அம்மாவை திருப்திப்படுத்தவும் சர்ச்சுகளுக்கு ஏராளமான நற்பணிகளைச்  செய்துவந்தார். சர்ச் மூலமாக ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற வசதிகளுக்கான ஏற்பாடுகளுக்கு கணிசமாக பணம் தந்துவந்தார்.  தன்னுடைய உயிருக்கே உலை வைக்கப்பட்டிருந்த நெருக்கடியான சூழல்களிலும்கூட நற்பணிகளை பாப்லோ நிறுத்தவே இல்லை. கொலம்பியா  முழுக்கவும் ஹெலிகாப்டரில் பறந்து பின்தங்கியிருந்த நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக விசிட் அடித்து, தேவையான உதவிகளைச் செய்து  கொண்டே இருந்தார்.

எல் போப்லதோ என்கிற இடத்தில் பிஷப்புடன் பாப்லோவின் சந்திப்பு நிகழ்ந்தது. தன்னுடைய நெருங்கிய சகாக்கள், மற்றும் சில உறவினர்களோடு  அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார் பாப்லோ. “ஃபாதர்! நான் சரணடைய சம்மதிக்கிறேன் என்று அதிபரிடம் கூறுங்கள். அவர் மீது மரியாதையும்,  நம்பிக்கையும் எனக்கு இருப்பதையும் தெரியப்படுத்துங்கள்” என்று பாப்லோ ஆரம்பித்தார். “மகிழ்ச்சியாக இருக்கிறது. உடனே இதற்கான ஏற்பாடுகளை  செய்கிறேன். வேறெதுவும் நீங்கள் சொல்ல வேண்டாம்.

உங்கள் பாதுகாப்புக்கு நான் உறுதி தருகிறேன்” என்று சட்டு புட்டென்று பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு கிளம்ப நினைத்த பிஷப்பின் கைகளை  இறுகப் பற்றிக்கொண்டார் பாப்லோ எஸ்கோபார். “எனக்கு கொஞ்சம் அச்சம் இருக்கிறது. மேலும், சில நிபந்தனைகளும் உண்டு. அவற்றை அரசு  அதிகாரிகளோடு என்னால் பேசவும் முடியாது. உங்களிடம் மட்டும் சொல்கிறேன். நீங்களும் யாரிடமும் சொல்லாமல், அதிபரிடம் மட்டும்  சொல்லுங்கள்…” ‘பிரச்சினை ஜவ்வு மாதிரி இன்னும் இழுக்கும் போலிருக்கிறதே?’ என்கிற எண்ணத்தோடு முன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே  பாப்லோ பட்டியலிட ஆரம்பித்த நிபந்தனைகளை கவனமாகக் கேட்க ஆரம்பித்தார் பிஷப்.

“முதலில், ஒரே ஒரு கொலம்பியன்கூட அமெரிக்கா கேட்கிறது என்கிற காரணத்துக்காக நாடு கடத்தப்படக் கூடாது. என்னுடைய மெதிலின் கார்டெல்  ஆட்கள் மட்டுமல்ல, என்னுடைய எதிரிகளான காலி கார்டெல் ஆட்களைக்கூட அமெரிக்காவுக்கு தாரை வார்க்கக் கூடாது. எங்கள் மீதான சட்ட  விசாரணை கொலம்பியாவிலேயே நடக்க வேண்டும். எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டாலும் நாங்கள் கொலம்பியாவிலேயே புதைக்கப்பட  வேண்டும்.” “அப்படியெல்லாம் ஆகாது. அவசரப்படாதே பாப்லோ…” “என்னை முழுமையாகப் பேசவிடுங்கள் ஃபாதர்.

ஏற்கனவே சரண்டர் ஆனவர்களுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அத்தண்டனை  பத்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேமாதிரியான தண்டனை எனக்கும், என்னுடைய ஆட்களுக்கும் கொடுக்கப்பட்டால்கூட ஒப்புக்  கொள்கிறேன். எனக்கு என்று பிரத்யேகமாக சலுகைகள் ஏதும் தேவையில்லை.” பிஷப், தன் கையை பாப்லோ தலையில் வைத்து ஆசீர்வதித்தார்.  “நல்லதே நடக்கும். என்னை நம்பு.” ஆனால் இதே சமயத்தில் கொலம்பியாவில் போலீஸ், முன்பைக் காட்டிலும் கூடுதலான வன்முறையை நிகழ்த்திக்  கொண்டிருந்தது.

அப்படி வன்முறையே நடக்கவில்லை என்றுதான் அதிபர் நினைத்துக் கொண்டிருந்தார். அதிபரின் அதிகாரத்தையும் தாண்டிய மறைமுக சக்திகள்  அமெரிக்க ஆதரவோடு, கொலம்பிய போலீஸைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். பாப்லோவிடமிருந்து, ‘போலீஸிடம்  மோதவேண்டாம்’ என்கிற ஒற்றைக் கட்டளை, கொலம்பியா முழுக்கப் பரவியிருந்த மெதிலின் கார்டெல் ஆட்களுக்குச் சென்றது. அவர்கள்  ஆயுதங்களை மவுனமாக்கினாலும், போலீஸாரின் துப்பாக்கிகள் தோட்டாக்களைத் துப்பிக் கொண்டுதான் இருந்தன.
23a.jpg
வேறு வழியில்லை, மீண்டும் போரைத் துவக்க வேண்டியதுதான் என்று பாப்லோ முடிவெடுத்த நிலையில், அதிபரிடமிருந்து தகவல் வந்தது. “உங்கள்  நிபந்தனைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம். சரணடைவதற்கு நாள் குறியுங்கள்.” அதிபரும், பாப்லோ எஸ்கோபாரும் டீலிங்குக்கு  வந்துவிட்டதை அறிந்த அமெரிக்கா, கொதிப்புக்கு உள்ளானது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கொலம்பியாவுக்கு அவசர அவசரமாக  வந்தார்கள். அதிபரின் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை ‘கரெக்ட்’ செய்ய முயற்சித்தார்கள். கொலம்பியாவுக்கு பல லட்சம் டாலர் கடன் வசதி,  ராணுவத்தை மேம்படுத்த இலவசமாக நவீன ஆயுதங்கள், அதிகாரிகள் மட்டத்திலிருந்தவர்களுக்கு லஞ்சம் என்றெல்லாம் என்னென்னவோ பேசிப்  பார்த்தார்கள்.

பாப்லோவை உயிருடனோ, பிணமாகவோ அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் வெறியாக இருந்தார்கள். ஏனெனில், அதுவரை  கார்டெல்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களை கொலம்பியாவில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய்  அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி சிறையில் தள்ளியிருந்தார்கள். பாப்லோவையும் அதுபோல சிறையில் தள்ளினாலோ,  கொன்றாலோதான் அமெரிக்க மக்கள் தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்,  குழந்தைத்தனமாகக் கருதினார். கொலம்பிய அதிபரோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தார்.

பாப்லோ, சரணடைய ஒப்புக்கொள்கிறார். அப்படி சரணடையும் பட்சத்தில் கொலம்பியா வன்முறைகளற்ற அமைதியான தேசமாக மாற  வாய்ப்பிருக்கிறது. அதே நேரம், பாப்லோ சரணடைந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா மும்முரமாக இருக்கிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி  பாப்லோவுடனான சமாதானத் திட்டத்தை முன்னெடுத்தால், பாப்லோ செய்துகொண்டிருந்த வன்முறையை அமெரிக்காவே செய்வதற்கும் வாய்ப்பாகும்.  அவருடைய தர்மசங்கடம் தற்காலிகமாக அகன்றது. அதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர் ஈராக் அதிபர் சதாம் உசேன்.

வளைகுடா நாடுகளில் நடந்து கொண்டிருந்த எண்ணெய் அரசியலின் விளைவாக, திடீரென்று குவைத் நாட்டினை ஆக்கிரமித்தார் சதாம் உசேன்.  இதனால் குவைத்தில் எண்ணெய் எடுத்துக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. சதாம் உசேன் மீது போர்  தொடுத்தே தீரவேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில்  ஈராக் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா அனுமதி கோரியது. உலக நாடுகள் பலவும் இரு அணிகளாகப் பிரிந்து அமெரிக்காவின் கோரிக்கை  தடுமாற்றத்தை எட்டியது.

ஐநாவில் தாக்குதலுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கொலம்பியாவிடம் அதிபர் புஷ் வேண்டிக் கொண்டார். இதுதான் நேரமென்று புரிந்துகொண்ட  கொலம்பிய அதிபர் சீஸர், “நாங்கள் ஈராக்- குவைத் விவகாரத்தில் உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்றால், கொலம்பிய போதைப்  பொருள் கடத்தல்காரர்களை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற வெளியேற்றச் சட்டத்தை காலாவதி ஆக்குங்கள்” என்று நெருக்கடி  கொடுத்தார். பூனைக்கும் காலம் வந்துவிட்டதே என்று நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டே இதற்கு அரைமனதோடு ஒப்புக்கொண்டது  அமெரிக்கா. இனி, பாப்லோ கொலம்பியாவிடம் சரணடைவதற்கு எவ்விதமான முட்டுக்கட்டையும் இல்லை. சரணடைந்தாரா?

 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 63

ஆம். காட்ஃபாதர் சரணடைந்தார்.பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு இடையிலும் பாப்லோ விவகாரத்தில் கொலம்பிய  அதிபர் சீஸர் கவேரியா, முள் மேல் விழுந்த சேலையைப் பிரித்தெடுக்கும் கவனத்தோடு ஈடுபட்டார்.அமெரிக்காவின்  வாயை சதாம் உசேன் பிரச்னையை கையிலெடுத்து அடைத்தார்.உள்ளூரில் காலி கார்டெல், போலீஸ், இராணுவம்  மற்றும் அதிகார மட்டத்தில் இருந்த பாப்லோ எதிர்ப்பாளர்களை கண்டிப்போடு ஒடுக்கினார். குறிப்பாக பாப்லோவை பரம  எதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஜெனரலாக இருந்த மாஸாவை, தண்ணீr  இல்லாத காட்டுக்கு இடம் மாற்றினார்.
17.jpg
“பாப்லோ எஸ்கோபார் சரணடைந்தால், கொலம்பியா வில் இனி குண்டுவெடிப்பே நடக்காது. ஆள் கடத்தல் அராஜகம்  அறவே ஒழியும். தேவையற்ற மரணங்களைத் தவிர்க்கலாம்...”அதிபர் சொன்னதை பெரும்பாலானோர்  மகிழ்ச்சியுடன்ஏற்றுக் கொண்டார்கள்.பல மாதங்களுக்கு நீடித்த பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு  வந்தது.தன்னுடைய இராணுவத்தையும் படிப்படியாக பாப்லோ சரணடைய வைத்தார். ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டன.  பெரும்பாலான சொத்துகளை அரசு வசம் ஒப்படைக்க சம்மதித்தார்.மெதிலின் நகரிலேயே பாதுகாப்பான ஒரு  சிறைக்கூடத்தில் பாப்லோவை வைக்க அதிபரின் ஆலோசனையின் பேரில் அரசு திட்டமிட்டது.

ஆனால், அப்படியொரு சிறைக்கூடமே இல்லை. இதற்கான செலவையும் பாப்லோவே ஏற்றுக்கொள்ள ஒப்புக்  கொண்டார்.அதாவது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு கைதி, தனக்கான சிறையை உருவாக்கிக்  கொண்டார்.மெதிலின் நகருக்கு வெளியே ஒரு மலையின் உச்சியில் இருந்த தன்னுடைய சொந்த கட்டடத்தை  சிறைச்சாலையாக பாப்லோவே மாற்றிக் கட்டினார். ‘லா கதீட்ரல்’ என்கிற பெயர் கொண்ட அந்தக் கட்டடம்  பார்வைக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கும். மறுவாழ்வு மையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கட்டடத்தைச்  சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்டது.
17a.jpg
அது பாப்லோவுக்கு சொந்தமான கட்டடம் என்பது அரசுக்கும், பாப்லோ தரப்புக்கும் மட்டும்தான் தெரியும். அவருடைய  பினாமி ஒருவரின் பெயரில் இருந்த இந்தச் சொத்து முறைப்படி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பல்வேறு  இடங்களைப் பரிசீலித்து, மிகக் கவனமாகவே தனக்கான சிறைச்சாலையாக லா கதீட்ரலை பாப்லோ தேர்ந்தெடுத்தார்.
கடல் மட்டத்திலிருந்து ஏழாயிரம் அடி உயரத்தில் இருந்த இங்கிருந்து மெதிலின் நகரை முழுமையாகப் பார்க்கலாம்.  பாப்லோவை சிறையிலேயே முடித்துவிடலாம் என்று யாராவது திட்டம் தீட்டினால்கூட மிக எளிதாக இந்த  மலையுச்சிக்கு வரமுடியாது.

ஏனெனில், மலையைச் சுற்றிலும், அரசின் பாதுகாவலர்களைத் தவிர்த்து நூற்றுக்கணக்கான தனியார் படை வீரர்கள்  ஆயுதங்களோடு இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.அவர்களுக்கு சம்பளம்?  அரசு சார்பாக பாப்லோதான் கொடுத்தார். அந்தக் காலத்து லேட்டஸ்ட் எலெக்ட்ரானிக் பாதுகாப்புக் கருவிகள் எல்லா  இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி யாரேனும் உள்ளே நுழைய முயற்சித்தால் மலையே அதிரும்வண்ணம்  அலாரம் அடிக்கும். அடர்த்தியான வனத்தைக் கடந்துதான் மலையடிவாரத்துக்கே வரமுடியும். அந்தக் காட்டில்  அந்நியர்கள் ஊடுருவினால், அவர்களைக் ‘கவனிக்க’ போதுமான ஏற்பாடுகள் தயாராகி இருந்தன. எல்லாவற்றுக்கும்  மேலாக, அந்த மலையை எப்போதும் பனி மூடியவாறே இருக்கும். எனவே, வான் மார்க்கமாகவும் தாக்குதல் நடத்துவது  சிரமம்.
17b.jpg
சிறைக்குள்ளே ‘எல்லா விதமான’ (சிற்றின்பம் உட்பட) வசதிகளும் பாப்லோவுக்கு கிடைக்கும். அவருடைய நெருங்கிய  சகாக்கள் மற்றும் சகோதரர்கள் என்று பன்னிரெண்டு பேரும் அந்த சிறையில் அவரோடு பொழுதுபோக்கலாம்.  சிறையென்று சொல்வதைவிட கூவத்தூர் ரெசார்ட் என்று லா கதீட்ரலைச் சொல்வதே சரியாக இருக்கும்!அதே நேரம்,  எல்லா போதை பிசினஸையும் நிறுத்திவிட்டதாக அரசிடம் பாப்லோ சொல்லியிருந்தாலும், மறைமுகமாக அவருடைய  பினாமிகள் கடை போட்டு கல்லா கட்டுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கச்சிதமாகவே செய்திருந்தார்.

எந்தெந்த விஷயங்களில் தன் மீதும், தன்னுடைய சகாக்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்பதைக்கூட  பாப்லோதான் தீர்மானித்தார். ஒப்புக்குச் சப்பாணியாகத்தான் இந்த சரண்டர் வைபவமே நடந்தது.ஆனால், மக்களிடம்  “கொலம்பியாவின் அமைதிக்கான விலை நான்தான். கொலம்பிய மக்களுக்காக என்னுடைய, என் தோழர்களின்  சுதந்திரத்தை தியாகம் செய்கிறேன்...” என்று உருக்கமாகப் பேசினார். பேருக்கு கொஞ்சநாள் சிறையிலிருந்துவிட்டு,  வெளியே வரும்போது கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரரான அரசியல்வாதியாக வெளிவருவது அவரது திட்டம்.
சரணடைய வேண்டிய நாளும் வந்தது.வழக்கமாக அதிகாலை வரை விழித்திருந்துவிட்டு தூங்கப் போவார் பாப்லோ.  பிற்பகலுக்கு மேல்தான் சோம்பல் முறித்து துயிலெழுவார். மாலைவரை மிகவும் மெதுவாகத்தான் காரியங்கள் நடக்கும்.  இரவு கவிழும் வேளையில்தான் பாப்லோவின் எஞ்சின் சூடு பிடிக்கும்.ஆனால், சரணடைவதாகச் சொன்ன அன்று காலை  ஏழு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார். அம்மாவுடனும், குடும்பத்தினருடனும் சேர்ந்து காலை உணவு அருந்தினார். வழக்கமாக சாப்பிடும்போது தீவிரமான சிந்தனையில்தான் இருப்பார். அன்று ஜாலியாக ஜோக்கடித்துக் கொண்டே  சாப்பிட்டார்.நேரடியாக சிறைச்சாலை வாசலுக்கே பாப்லோ செல்வது மாதிரி ஏற்பாடு. சம்பிரதாயமாக அதிபர் முன்பாக  சரணடைவது போன்ற சடங்குகள் எதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

கொலம்பியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமுமே இந்த நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா மட்டும் நரநரவென்று பல்லைக் கடித்துக் கொண்டு வேறு வழியின்றி வேடிக்கை பார்த்தது.பாப்லோவின்  சொந்த ஊரான என்விகாதோவில் இருந்த கால்பந்து மைதானத்துக்கு காரில் ஊர்வலமாகச் சென்றார். வழிநெடுக மக்கள்  சாலையின் இருபுறமும் குவிந்து, ‘பாப்லோ எஸ்கோபார் வாழ்க..! ஏழைகளின் ஏந்தலே நூறாண்டு வாழ்க!’ என  கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில ஆர்வக்கோளாறு பாப்லோ ரசிகர்கள், ஆங்காங்கே கட் அவுட்டும் வைத்து  கலக்கியிருந்தார்கள்.

ப்ளூ ஜீன்ஸ், வெள்ளை சட்டையில் சிம்பிளாக புன்னகை தவழும் முகத்தோடு மக்களைப் பார்த்து கை காட்டிக்கொண்டே  காரில் வந்தார் பாப்லோ.அவருக்காக ஹெலிகாப்டர் தயாராக இருந்தது. அதனுள் பாப்லோவின் அப்பாவும்,  பாப்லோவுக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரும் இருந்தனர். தான், திறந்த மனதோடு சரணடைவதை  பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக அந்த பத்திரிகையாளரை ஏற்பாடு செய்திருந்தார் பாப்லோ. இந்த சரணடையும்  விழாவை எதிரிகள் குலைக்கலாம் என்கிற அச்சம் நிலவிக்கொண்டுதான் இருந்தது.

எனவேதான் பாப்லோ, சிறைக்குள் நுழையும் வரை மெதிலின் நகரின் வானில் ஒரு பறவை கூட பறக்கக்கூடாது என்று  பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்டளையிட்டிருந்தார். ஹெலிகாப்டர் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த  ஹெலிபேடில் பத்திரமாகத் தரையிறங்கியது. கம்பீரமாக சிங்கம் மாதிரி வெளிவந்தார் பாப்லோ. சிறைச்சாலை  வாயிலில் இருந்த காவலரிடம் தன்னுடைய பிஸ்டலை கையளித்தார்.1991ல் பாப்லோ சரணடைந்ததைத் தொடர்ந்து,  கொலம்பியாவில் அமைதி திரும்பி விட்டது என்றுதான் அரசாங்கம், மக்கள், கார்டெல்காரர்கள் என்று அனைத்துத்  தரப்பினருமே நம்பினார்கள்.நிஜமாகவே அமைதி திரும்பியதா?
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா-64

சிங்கம் சிறைப்படலாம். ஆனால், அதன் கர்ஜனை ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். சிறைக்குள் இருந்தாலும் தன்னுடைய வழக்கமான பணிகள்  எதுவும் பாதிக்கப்படாத வகையிலான ஏற்பாடுகளை பாப்லோ எஸ்கோபார் செய்திருந்தார். அவருடைய மெதிலின் கார்டெல் வழக்கமான ஜோரில்  இயங்கிக் கொண்டிருந்தது.
23.jpg
அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் செல்ல வேண்டிய ‘சரக்கு’ பிசினஸ், தங்குதடையில்லாமல் நடந்துகொண்டிருந்தது. அரசு அதிகாரிகளுக்கும்,  அரசியல்வாதிகளுக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவையெல்லாம் தங்கு தடையின்றி முன்பைவிட கூடுதலாகவே கிடைத்துக்  கொண்டிருந்தது. தான் தங்குவதற்காக தானே உருவாக்கிய சிறையில் ஜம்மென்று ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்கோபார். அவருக்கென்று ஒரு  பெரிய அறை, அலுவலகமாக இயங்கியது. சிம்மாசனம் மாதிரி பெரிய இருக்கை.

நான்கைந்து உதவியாளர்கள், போன் என்று பக்காவான ஆபீஸ். கொலம்பிய அதிபரைப் பொறுத்தவரை பாப்லோ மீது சட்டப்படி நடவடிக்கை  எடுத்தாயிற்று; நாட்டில் அமைதியும் திரும்பிவிட்டது என்று அமெரிக்காவுக்கும், மற்றவர்களுக்கும் ‘கணக்கு’க் காட்டிவிட்டார். கொலம்பியாவில்  இருந்துதான் இன்னமும் போதை மருந்துகள் எங்கள் நாட்டுக்குள் வருகின்றன, இளைஞர்களைச் சீரழிக்கின்றன என்று அமெரிக்கா பாட்டுக்கும் ஒரு  பக்கம் கதறிக்கொண்டே இருந்தது.

அமெரிக்காவின் உருட்டல், மிரட்டலையெல்லாம் கொலம்பிய அதிபர் கவேரியா, கிஞ்சித்தும் மதிக்கவில்லை. வெளிநாட்டு  முதலீடுகளைக்கொண்டுவருவதில் அவர் மும்முரமாக இருந்தார். ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த தொழிலதிபர்களை அழைத்துவந்து, தங்கள்  நாட்டின் தெருக்களில் அமைதி திரும்பி விட்டதைச் சுட்டிக் காட்டி, ‘தொழில் தொடங்குங்கள், சலுகைகளை வாரி வழங்கு கிறோம்...’ என்று இறைஞ்சிக்  கொண்டிருந்தார். கொலம்பியாவில் இனி உள்நாட்டுப் போர் என்கிற நிலைமைக்கு வாய்ப்பேயில்லை என்று கிடைக்கும் மேடைகளில் எல்லாம்  முழங்கிக் கொண்டிருந்தார்.

அவரது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிட்டாமல் போகவில்லை. பொதுவாகவே தென்னமெரிக்க நாடுகள் இயற்கை வளம் மிக்கவை. மற்ற நாடுகளின்  வளத்தைச் சுரண்டியே தம்மை வளப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ நாடுகளுக்கு கொலம்பியாவை காணும்போதெல்லாம் நாக்கில் எச்சில்  ஊறியது. அமெரிக்க முதலாளிகளும்கூட கொலம்பியாவில் தொழில் தொடங்க ஆர்வமாகவே இருந்தார்கள். சிறையில் டெலிபோன், ஃபேக்ஸ் உள்ளிட்ட  வசதிகள் இருந்ததால் பாப்லோ, போனிலேயே ஏகத்துக்கும் டீலிங்குகளை முடித்தார்.
23a.jpg
கொலம்பிய ஏழை மக்களுக்குச் செய்ய வேண்டிய தான, தருமங்களை தொடர்ச்சி யாகச் செய்துகொண்டே இருந்தார். உதவி வேண்டும் மக்கள்,  அவருக்கு ஃபேக்ஸ் மூலமாக தங்கள் தேவையைத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். வழக்கமான வேலை நேரம் போக மீதி நேரத்தில் நிறைய  நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அரசியல் நூல்கள். வெளியே வந்தவுடனேயே அடுத்த தேர்தலிலேயே, தான் அதிபர் ஆகிவிட முடியும்  என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏனென்று தெரியவில்லை. சிறையில் இருந்தபோது சீன மொழி கற்றுக்கொள்வதில் அதிகமாக ஆர்வம்  செலுத்தினார்.

இதற்காக மெதிலின் நகரில் இருந்து ஒரு சீன வாத்தியார் லொங்கு லொங்கென்று ஓர் ஓட்டை டூவீலரில் வந்து செல்வார். மெதிலின் கார்டெல்  முக்கியஸ்தர்கள் மற்றும் பாப்லோ குறித்த வழக்குகள் குறித்து விவாதிப்பதற்காக வழக்கறிஞர்கள் குழுவினர் தினமும் வந்து செல்வார்கள். எந்த  வழக்கை எப்படி ‘முடிக்க’ வேண்டுமென்று ஆலோசனை வழங்குவதோடு, அதற்குரிய பைனான்ஸ் உள்ளிட்ட விஷயங்களையும் பாப்லோ செய்து  கொடுத்துக் கொண்டிருந்தார். இரவு நேரங்களில் பொதுவாக ஜன்னல் அருகே போய் நின்றுகொண்டு, வெளியே கவனிப்பார்.

மின்விளக்குகளால் மினுக்கிடும் நகரத்தை மணிக்கணக்கில் பார்ப்பது பாப்லோவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு ஆனது. அதுபோல அவர் ஜன்னல்  அருகே நிற்கும்போது, யாரும் எதற்காகவும் அவரைத் தொல்லைப் படுத்துவதில்லை. இதற்கிடையே காலி கார்டெல்லுக்கும், பாப்லோவுக்கும் சமரசம்  ஏற்படுத்த கொலம்பியாவின் கால்பந்து நட்சத்திரமான ஹிகூட்டா என்பவர் முயற்சித்துக் கொண்டிருந்தார். பாப்லோவின் தந்தையே நேரிடையாக காலி  கார்டெல் உரிமையாளர்களைச் சந்தித்து சமாதானம் பேசினார். எதுவும் பிரயோசனப்படவில்லை.

சிறையையே தகர்க்க ஒருமுறை காலி கார்டெல் முயற்சித்தது. ஒரு சிறிய விமானத்தில் 100 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளோடு சிறையை  மோதி வெடிக்கச் செய்ய அவர்கள் எடுத்த முயற்சி வெற்றிகரமாக மெதிலின் கார்டெல்லைச் சார்ந்தவர்களால் முறியடிக்கப்பட்டது. கொலம்பிய  ஊடகங்களில் பாப்லோ, சிறையில் ராஜவாழ்க்கை வாழ்வதாக பரபரப்பான கட்டுரைகள் எழுதப்பட்டன. டாய்லட் கூட தங்கத்திலேயே செய்யப்பட்டது  என்றெல்லாம் அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், சிறைக்கு நிறைய அழகிகள் வந்து சென்றது உண்மைதான்.
23b.jpg
சிறையிலிருந்தவாறே டிவியில் பார்க்கும் அழகிகளை எல்லாம், என்ன செலவு ஆனாலும் நேரில் அழைத்து ‘பழகிப் பார்ப்பது’ என்பது பாப்லோவின்  பொழுதுபோக்காக இருந்தது. தன்னுடன் சிறையில் இருந்த மற்ற சகாக்களும் அவரவர் முயற்சியில் அழகிகளை அழைத்து ‘பழகிப் பார்ப்பது’ குறித்தும்  அவர் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருகட்டத்தில் சிறையில் அடிக்கடி ‘நைட் பார்ட்டி’ நடக்க ஆரம்பித்தது. வெளியே என்னென்ன  வசதிகள் தங்களுக்குக் கிடைக்குமோ, அவை அனைத்தையும் தாங்கள் இருக்கும் சிறைக்கூடத்துக்கே வரவழைத்து அனுபவித்தார்கள்.

பாப்லோவின் பிரத்யேக சிறையறையில் மூன்று படுக்கைகள், குஷன் வைத்த மெத்தையோடு போடப்பட்டிருந்தன என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன். மினி பார் ஒன்றும் எப்போதும் சரக்குகள் நிரப்பப்பட்டு அவருக்காக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த கதீட்ரல் சிறையில் ஏராளமான  நிகழ்ச்சிகள் நடந்தன. உள்ளேயே சிலருக்கு திருமணம்கூட நடந்திருக்கிறது.

யாருக்காவது பிறந்தநாள் என்றால், பார்ட்டி நிச்சயம். பாப்லோ, சிறையிலிருந்தபோதுதான் தன்னுடைய 42வது பிறந்தநாளையே கொண்டாடினார்.  கொலம்பியாவின் தலைசிறந்த இசைக்குழுவினர், சிறைக்கே வந்து இவர்களுக்கென்று இசைப்பார்கள். உலகக் கோப்பைக்காக தங்களைத் தயார்  செய்துகொண்டிருந்த கொலம்பிய அணியினர், சிறைக்கு வந்து பாப்லோவிடம் ஆசி பெற்றார்கள். “உங்களுக்கும் எங்களுக்கும் மேட்ச் வெச்சுக்கலாமா?”  என்று குறும்போடு அவர்களிடம் கேட்டார்.

அவர்களும் சம்மதிக்க, ‘கொலம்பியா vs மெதிலின் கார்டெல்’ போட்டி கதீட்ரலில் இருந்த மைதானத்தில் நடந்தது. ஆரம்பத்தில் கொலம்பிய அணி 3 -  0  என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருக்க, பாப்லோவின் சகாக்கள் நடுவர்களை கண்களாலேயே மிரட்டினார்கள். போட்டி 5 - 5 என்று  டிராவில் முடிந்தது! இதையடுத்து அடிக்கடி கால்பந்து போட்டிகள் நடந்தன. நாட்டில் இருந்த பெரிய கால்பந்து கிளப் அணிகள், ‘சிவனே’யென்று வந்து  விளையாடி பாப்லோ குழுவினரிடம் ஜாலியாக தோற்றுவிட்டுச் செல்வார்கள். இந்தக் கூத்தெல்லாம் மிகச்சரியாக 396 நாட்களுக்கு நடந்தது. ஆம்.  அத்தனை நாட்கள்தான் சிங்கம், தானே விரும்பி சிறைக்குள் இருந்தது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா-65

சிறைவாழ்க்கை திடீரென சிக்கலுக்கு உள்ளானது. பாப்லோவுக்கு நிஜமாகவே சிறையில் இருந்து தப்பிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. சிறைக்குள்  அவர் பாதுகாப்பாகவேதான் இருந்தார். வசதியான வாழ்க்கை என்று சொல்ல முடியாவிட்டாலும், அது சிரமமில்லாத வாழ்க்கையாகத்தான் இருந்தது.
22.jpg
திடீரென அதிபர் கவேரியாவுக்கு ஏனோ பாப்லோ மீது கூடுதல் அழுத்தங்களைத் தரவேண்டு மென்று தோன்றியிருக்கிறது. மெதிலின் கார்டெல்லின்  எதிரி களான காலி கார்டெல்காரர்கள் வெளியே சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களது அரசியல் அல்லக்கைகளை வைத்து இந்த அழுத்தத்தைக்  கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளுக்கு காவாலிகளான காலி கார்டெல்லுடன் கள்ளக் கூட்டணி இருந்ததும் இங்கே  குறிப்பிடத்தக்கது. காலி கார்டெல்லைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு நேரடியாகவே கடிதம் எழுதினார்கள்.

கதீட்ரல் சிறைச்சாலை என்பது ஒப்புக்குச் சப்பாணி. அங்கே பாப்லோவும், அவரது குழுவினரும் சிறைவாசிகளாக அல்லாமல் கூத்தடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்று சில மீடியா செய்திகளை ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டினார்கள். மேலும், சிறைக்குள் இருந்தபடியே போதைத்  தொழிலை மெதிலின் கார்டெல் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கும் சான்றுகளை முன்வைத்தார்கள். மக்கள் மத்தியில் கொலம்பிய அதிபரும்,  பாப்லோவும் கூட்டுக் களவாணிகள் என்பதாக விஷமப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

இது அதிபர் கவேரியாவின் கண்ணியத்துக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய விஷயமாக இருந்ததால் பாப்லோ மற்றும் அவரது குழுவினரை வேறொரு  சிறைக்கு மாற்றக்கூடிய முடிவுக்கு ஜூலை 1992ல் அதிபர் வந்தார். இந்த சூழல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிற பதற்றம் ஏற்கனவே  எஸ்கோபாருக்கு இருந்து வந்தது. சிறை மாற்றம் மட்டுமின்றி தன்னையும் தன் குழுவினரையும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தி, அங்கே அமெரிக்க  சட்டவிதிகளின்படி விசாரணை நடந்து தண்டனை வழங்கப்படவும் கூடும் என்று யூகித்திருந்தார்.

எனவே, சிறையிலிருந்து தப்பி மீண்டும் வனவாசம் அல்லது வேறு பாதுகாப்பான நாடு ஒன்றுக்கு ஓட்டம் பிடிப்பது என்கிற முடிவுக்கு வந்திருந்தார்.  ஒரு நாள் காலை நான்கு லாரிகள் நிறைய ராணுவ வீரர்கள், கதீட்ரல் சிறைக்கு வந்துகொண்டிருப்பதாக ‘பட்சி’ தகவல் அனுப்பியது. அன்று பிற்பகல்  நீதித்துறையின் துணையமைச்சர் ஒருவர் சிறைக்கு வந்தார். அவருடன் சிறைத்துறை இயக்குநர் ஒருவரும், இராணுவ கர்னல் ஒருவரும் இருந்தார்கள்.  அறைகளை சோதனை போடச்சொல்லி அதிபரின் உத்தரவு என்று தகவல் சொன்னார்கள்.
22a.jpg
பாப்லோ, அவர்களிடம் வழக்கத்துக்கு மாறான அமைதியுடனேயே பேசினார். “மன்னிக்கவும். நம் அதிபர் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.  காவல்துறையினரோ, ராணுவத்தினரோ எங்கள் சிறைக்குள் புக மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். நீங்கள் சோதனை  போடவேண்டுமானால் சிறைத்துறை அதிகாரிகளை வைத்து செய்யுங்கள். இராணுவத்தையோ, காவல்துறையினரையோ இந்த சிறைச்சாலைக்குள்  நாங்கள் அனுமதிக்க முடியாது!” அமைச்சருக்கும் தர்மசங்கடம்தான். “சார், நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

இராணுவ வீரர்கள் சோதனையிடப் போகிறார்கள் என்கிற தகவல் நாடு முழுக்க பரவிவிட்டது. அவர்கள் சோதனையிடாமல் சென்றால் உங்களுக்கும்  பிரச்னை, எங்களுக்கும் பிரச்னை!” கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் இரு தரப்பும் ஒரு முடிவுக்கு வந்தது.  “இராணுவத்தினர் சோதனையிட நாங்கள் சம்மதிக்கிறோம். ஆனால், அவர்கள் ஆயுதங்களை சிறைச்சாலைக்கு வெளியேவே வைத்துவிட்டு  நிராயுதபாணிகளாகத்தான் உள்ளே வரவேண்டும். உள்ளே ஏதாவது எங்களை செய்ய நினைத்தால், ஒரு இராணுவ வீரன் கூட உயிரோடு வெளியே  வரமாட்டான்!” பாப்லோ சொன்ன இந்த தீர்வினை, இராணுவ கர்னல் ஏற்றுக் கொள்ளவில்லை.

“சிறையில் இருக்கும் ஒரு கிரிமினல், பிரசித்தி பெற்ற கொலம்பிய இராணுவத்துக்கு ஆணையிடுவதா?” என்று சீறினார். மாலை வரை பிரச்னைக்கு  முடிவே வரவில்லை. “நாளையும் வருவோம்...” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். பாப்லோ, நேரடியாக அதிபரிடம் போனில் பேச முயற்சித்தார்.  அதிபரோ, இந்த சங்கடத்தை தவிர்ப்பதற்காக போனையே எடுக்கவில்லை. சிறையிலிருந்து தப்பித்தே ஆகவேண்டிய நெருக்கடி வந்து விட்டது என்பதை  பாப்லோ உணர்ந்தார். ஏற்கனவே, தப்பிக்க வேண்டிய அவசியம் நேரிட்டால் என்னென்ன வழிவகைகள் என்பதையெல்லாம் யோசித்தே வைத்திருந்தார்.

அதற்கு வாகாக ஓரிடத்தில் மின்வேலியை, ஓர் ஆள் புகுந்து வெளியே போகுமளவுக்கு வெட்டியெடுத்திருந்தார்கள். தன் ஆட்களை அழைத்து பாப்லோ  பேசினார். “ஒன்று, நாம் தப்பித்து வெளியேறிவிடுவோம். அல்லது அனைவருமே வீரமரணம் எய்து வோம்...” அன்றிரவு சந்தடி அடங்கிய பிறகு  அனைவரும் மீண்டும் கூடினார்கள். வெளியே அடைமழை பெய்ய ஆரம்பித்ததால், கும்மிருட்டான சூழல் உருவாகியிருந்தது வசதியாக இருந்தது.  ஒருவர் பின் ஒருவராக ஐந்து நிமிட இடைவெளியில் பூனை நடை நடந்து, மின்வேலி சிதைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தார்கள்.
22b.jpg
முதலில் கிளம்பியவர் பாப்லோ எஸ்கோபார். எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு கடைசியாகத்தான் பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோ வந்தார்.  எல்லோரும் வந்து சேர்ந்ததுமே மலையில் இருந்து சந்தடி செய்யாமல் வரிசையாக இறங்கத் தொடங்கினார்கள். அதிகாலை 2 மணி என்பதால்,  காவலர்கள் நின்றுகொண்டே தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். மழையில் மலைப்பாதை சொதசொதத்துப் போயிருந்தது. எனவே ஒருவர் கையை  ஒருவர் பற்றியவாறு கவனமாக நடந்தார்கள். இரண்டு மணி நேர நடைக்குப் பிறகு மலையடிவாரத்தை எட்டியிருந்தார்கள்.

இப்போது மழையும் நின்றிருந்தது. சிறை வாசலில் கண்காணிப்பில் இருந்தவர்கள், அங்கிருந்து இவர்களைக் காண முடியும் என்கிற வாய்ப்பு இருந்தது.  மேலும், அங்கிருந்தே சுடமுடியும் என்கிற ஆபத்தும் இருந்தது. எனினும், தப்பித்து வந்த ஏழு பேருமே இராணுவ சீருடை போன்ற வண்ணத்தில் ஆடை  அணிந்திருந்தார்கள். எனவே, தூரத்தில் இருந்து பார்த்தாலும் இராணுவ வீரர்கள் ரோந்து வருகிறார்கள் என்றுதான் கருதுவார்கள். அங்கிருந்து மேலும்  மூன்று மணி நேர நடையில் அருகிலிருந்த சிறுநகரமான எல் சாலதோவுக்கு வந்து சேர்ந்தார்கள். இப்போது நன்கு விடிந்து விட்டது.

அந்த நகரம் உறக்கத்தில் இருந்து எழுந்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. சேறும், சகதியுமான உடையுடன் சாலையில் குழுவாக நடந்து  கொண்டிருந்த இவர்கள் யாருடைய கவனத்தையும் குறிப்பாக ஈர்க்கவில்லை. ஓராண்டுக்கும் மேலான சிறைவாசத்தில் பாப்லோவின் தோற்றமே  ஒட்டுமொத்தமாக மாறிப்போயிருந்தது. எனவே, அவரை பொதுமக்கள் யாரும் சுலபமாக அடையாளம் கண்டிருக்க முடியாது. கொலம்பியாவில்  பாப்லோவுக்கு கிளைகள் இல்லாத நகரமே இல்லை. அங்கேயும் மெமோ என்கிற டீலர் இருந்தார்.

அவருடைய பண்ணை வீட்டுக்குத்தான் இவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கே ரேடியோவை வைத்து செய்திகள் கேட்டார்கள். சிறைச்சாலை மீது  தாக்குதல் நடத்தி பாப்லோ குழுவினரை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று அதிபர் ஆணையிட்டிருக்கிறாராம். அதைத் தொடர்ந்து ஆரவாரமாக  இராணுவத்தினர் துப்பாக்கிகளை முழங்கியபடியே சிறைக்குள் சென்றிருக்கிறார்கள். போட்டது போட்டபடி இருக்க, பாப்லோ & கோ மட்டும் கம்பி  நீட்டிவிட்டதை உணராமல் ஒவ்வொரு அறையாகப் போய் சோதனை செய்துகொண்டிருந்தார்கள்.

பாப்லோ தப்பித்து விட்டார் என்கிற செய்தி அதிபரைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும். கதீட்ரல் சிறைச்சாலையை நோக்கி ஏகத்துக்கும்  ஹெலிகாப்டர்கள் கிளம்பி வந்தன. எல் சாலதோ நகரின் தெருவெங்கும் இராணுவ வீரர்களின் பூட்ஸ் புழுதியைக் கிளப்பியது. இங்கேயே இருந்தால்  சுலபமாக மாட்டிக் கொள்வோம் என்கிற விபரீதம் பாப்லோவுக்குப் புரிந்தது.

 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 66

எல் சாலதோ நகரில் இருந்த சிறு பண்ணை வீட்டில் பாப்லோ குழுவினர் பதுங்கிக் கிடக்க, கதீட்ரல் சிறை அமைந்திருந்த மலை மற்றும் மலையடிவார குடியிருப்புகள் மொத்தத்தையும் சல்லடை போட்டுத் தேட இராணுவம் தயாரானது .சிறைக்குள் இருந்து தப்பித்து விட்டாலும், இன்னமும் தாங்கள் பாதுகாப்பான இடத்தில் அடைக்கலமாகவில்லை என்கிற ஆபத்து பாப்லோ எஸ்கோபாருக்குப் புரிந்திருந்தது. அரசாங்கத்தோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட முடிவெடுத்தார். ரேடியோ போன் மூலமாக தனக்கு நன்கு பழக்கமான பத்திரிகையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். இவரது காதில் எந்த செய்தியைப் போட்டாலும், அதை உலகறியச் செய்துவிடுவார் என்பது அவருக்குத் தெரியும்.
19.jpg
“நானும், என் குழுவினரும் கதீட்ரல் சிறையில் நாங்களே உருவாக்கி வைத்திருக்கும் குகை ஒன்றில் பாதுகாப்பாகத் தங்கியிருக்கிறோம். இங்கே ஒரு மாத காலத்துக்குத் தேவையான உணவு இருக்கிறது. நாங்கள் சரணடைவதற்கு முன்பாக அரசாங்கம் எங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு நேர்மையாக நடந்துகொள்வதாக வாக்களித்தால்தான் இந்தக் குகையிலிருந்து வெளிவருவோம்!” உடனடியாக அந்தப் பத்திரிகையாளர், இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலமாக டமாரமடிக்க, அரசு இயந்திரம் மொத்தமும் கதீட்ரல் சிறை நோக்கிக் கிளம்பியது. சிறை மற்றும் மலைப்பகுதி முழுக்க பொக்லைன் போன்ற இயந்திரங்களை வரவழைத்து, மண்ணைத் தோண்டி குகை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க மெனக்கெட்டார்கள்.

இராணுவமும் இந்தத் தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டதால், பாப்லோ குழுவினர் பதுங்கியிருந்த எல் சாலதோ பகுதியில் கெடுபிடி குறை
வாகவே இருந்தது. ஆனால், நாடு முழுக்க மக்களிடம் பதற்றம் ஏற்பட்டிருந்தது. பாப்லோவையும், அவரது நண்பர்களையும் கொன்றுவிட்டு அரசு நாடகமாடுகிறது என்கிற தகவல் அவர்கள் மத்தியில் பரவியதால், அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். இதற்கிடையே பாப்லோவின் எதிரிகளும் புதிய வதந்திகளை உருவாக்கினார்கள். தப்பிச் சென்ற பாப்லோ, கொலம்பியாவின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி நாட்டையே தீக்கிரையாக்கப் போகிறார் என்று கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினார்கள்.

நாட்டின் அதிபர், பாதுகாப்புத்துறை அமைச்சர், முக்கியமான அரசு அதிகாரிகள்... என மொத்தப் பேரையும் போட்டுத் தள்ள பாப்லோ, கில்லிங் புரொஃபஷனல்களான அசாசின்களிடம் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார் என்கிற தகவலும் அதிகார மட்டத்தை அதிரச் செய்து கொண்டிருந்தது. அமெரிக்க ஊடகங்களும் நீலிக்கண்ணீர் வடித்தன. கொலம்பியாவையும், அதன் மக்களையும் காப்பதற்கு அமெரிக்க இராணுவம் உடனடியாகக் கிளம்ப வேண்டும், பாப்லோ குழுவினரைப் பிடித்து கொலம்பியாவில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் அமெரிக்க டிவி, ரேடியோ, பத்திரிகைகள் ஓலமிட ஆரம்பித்தன.

கொலம்பிய அதிபர் கவேரியா ரேடியோவில் பேசி நிலைமையைத் தெளிவுபடுத்தினார். “பாப்லோ இன்னமும் முழுமையாகத் தப்பவில்லை. இரவுக்குள் அவரைப் பிடித்துவிடுவோம். மக்கள் அச்சமடைய வேண்டாம்...” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். இந்த அமளிதுமளியைப் பயன்படுத்தி வேறு பாதுகாப்பான இடத்துக்கு நகர பாப்லோ முயற்சித்தார். நகரில் இருந்து சப்தமில்லாமல் வெளியேறுவதே மலையை தலைமுடியால் கட்டி இழுக்கும் செயல் என்பது அவருக்குப் புரிந்தது. எல்லா வாகனங்களும் நகர எல்லையில் சோதனை போடப்பட்டுக் கொண்டிருந்தன.
19a.jpg
எல் சாலதோவில் இருந்து வெளியேறி, அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் சந்தடியில்லாமல் அடங்கிக் கிடந்த வேறொரு பண்ணை வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். அந்த பண்ணை வீட்டில் பாப்லோ குழுவினர் பாதுகாப்பாக தப்பிச் செல்வதற்குத் தேவையான வாகனங்களும், ஆயுதங்களும் ஏற்கனவே தயாராக இருந்தன. இருள் கவிந்ததும் ஏழு பேரும் ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு நடக்கத் தொடங்கினர். சாலையை விட்டு விலகி மரங்களுக்குள் பதுங்கிப் பதுங்கி பூனை நடை நடந்தனர். இராணுத்தினர் ரோந்து வரக்கூடிய சூழல்களில் புதர் மறைவு களில் பதுங்கினார்கள். வழியில் இருந்த ஒரு பண்ணை வீட்டைத் தாண்டிச் செல்கையில் எதிர்பாராத திடீர் விபரீதம்.

அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் தன் பாதுகாப்புக்காக வளர்த்துக் கொண்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள், அந்நியர்களைக் கண்டதுமே ஆங்காரமாகப் பாய்ந்து வந்தது. அனைவரின் கையில்  துப்பாக்கி இருந்தாலும், நாய்களிடமிருந்து தப்பிக்க சுடுவது முட்டாள்தனம். துப்பாக்கிச் சப்தம் கேட்ட அடுத்த சில நிமிடங்களில் நகரில் சல்லடை போட்டு இவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் இராணுவ வீரர்கள் மொத்தமாக இங்கே வந்து குவிந்து விடுவார்கள். வேறென்னதான் செய்ய? வெறிநாய்களோடு மல்லுக் கட்டத் தொடங்கினார்கள். நாய்கள் சிலரைக் கடித்துக் குதறி சதையைப் பிய்த்தெறிந்தது. கொலம்பியா, அமெரிக்கா இரு நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் மாவீரர்கள் போயும் போயும் இந்த நாய்களோடு மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாய்களோடு எப்படி சமாதானமாவது என்று இவர்களுக்கும் புரியவில்லை. கிடைத்த வேட்டையை விட்டுவிடக் கூடாது என்று நாய்களும் வெறியோடு இருந்தன. கொஞ்சம் தாமதமாக கடைசியாக நடந்து வந்துகொண்டிருந்த பாப்லோ, இந்தக் கூத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார். தன் பாக்கெட்டில் இருந்த சில பிஸ்கட் துண்டுகளைத் தூக்கிப் போட நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு அவருக்கு அருகில் வந்தன. பொதுவாக எவ்வளவு வெறிபிடித்த நாயாக இருந்தாலும் பாப்லோவிடம் பூனை போல அடங்கிவிடும். ஐந்து நாய்களும் அதிசயம் போல பாப்லோவிடம் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தன. மற்றவர்கள் நைஸாக ஒருவர் பின் ஒருவராக நாய்க்கடியால் ஏற்பட்ட ரத்தக் காயங்களோடு நடையைக் கட்ட ஆரம்பித்தனர்.
போய்ச் சேரவேண்டிய இடத்துக்குச் சேர்ந்து, அங்கிருந்த வாகனங்களில் ஏறித் தப்பினர்.

கதீட்ரல் சிறையிருந்த மலையில் குகை என்று இவர்கள் கிளப்பிவிட்டதெல்லாம் பொய் என்பதை உணர, அரசுக்கும் இராணுவத்துக்கும் இரண்டு நாள் பிடித்தது. அதற்குள்ளாக பாப்லோவும், அவரது குழுவினரும் திசைக்கு ஒருவராகப் பறந்து விட்டார்கள். கொலம்பிய அதிபருக்குத்தான் தர்மசங்கடம். இவரை துப்புக் கெட்டவர் என்று அமெரிக்கா நேரடியாகவே குற்றம் சாட்டியது.

அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது, மீண்டும் கொலம்பியாவில் வன்முறை வெறியாட்டம் நடக்கும். அரசுக்கும், பாப்லோவுக்கும் தொடங்கப் போகும் போரில் மீண்டும் பல்லாயிரம் அப்பாவி கொலம்பியர்கள் உயிரிழப்பார்கள் என்றெல்லாம் ஊடகங்கள், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொண்டிருந்தார்கள். அதிபரோ கிட்டத்தட்ட தினமும் ரேடியோவில் பேசி, நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்று மக்களை அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்.

முன்பு எப்போதைக் காட்டிலும் பாப்லோவின் மீதான தேடுதல் வேட்டை மிகவும் முனைப்பாக நடந்துகொண்டிருந்தது. அவர் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கூட விடவில்லை. எல்லோரும் கண்காணிப்புக்கு உள்ளானார்கள். சிலரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பாப்லோவை காட்டிக் கொடுக்கச் சொல்லி மிருகத்தனமாக அடித்தார்கள். எல்லாவற்றையும் பாப்லோ பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திடீரென ரேடியோவில் பேசினார்.

“கொலம்பியாவின் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில் இருந்து பாப்லோ பேசுகிறேன். இன்னமும் எனக்கு கொலம்பிய அதிபர் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் சமாதானத்தைத்தான் விரும்புகிறேன். அவரும் அதைத்தான் விரும்புவார் என்று நினைக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் சரணடையத் தயார். ஆனால், கதீட்ரல் சிறையில்தான் சிறையிருப்பேன். அதிபர் முன்பு எங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படிதான் அவர் நடந்துகொள்ள வேண்டும்!” பாப்லோவின் இந்த வாதத்துக்கு மக்கள் தங்கள் பெரும்பான்மை ஆதரவை அளித்தார்கள். அரசோடு பாப்லோ தரப்பு வழக்கறிஞர்களும், சர்ச் ஃபாதர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள்.

எனினும், இம்முறை அரசுத் தரப்பு பாப்லோ பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க விரும்பியது. அதாவது அவரைக் கொன்று விடுவது என்றே முடிவெடுத்து விட்டார்கள். எஃப்.பி.ஐ., சிஐஏ, டெல்டா ஃபோர்ஸ், சென்ட்ரா ஸ்பைக், சர்ச் பிளாக்கில் தொடங்கி இராணுவம் வரை அமெரிக்க அரசின் அத்தனை படைகளும் பாப்லோ என்கிற தனி ஒருவனைப் போட்டுத்தள்ள கொலம்பியாவுக்குள் நுழைந்தது.

இம்முறை அமெரிக்கா நுழைய, கொலம்பிய அதிபர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அது மட்டுமின்றி, மெதிலின் கார்டெல்லின் எதிரிகளான காலி, பாப்லோவால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து ஒரு குழுவென்று உள்ளூர் எதிரிகளும் வேட்டையில் இறங்கினார்கள். பாப்லோவைப் பற்றிய சின்ன துப்பு கொடுத்தால்கூட அவர்களை பல்லாயிரக்கணக்கான டாலர்களில் குளிப்பாட்டுவதாக அமெரிக்கா வாக்கு கொடுத்திருந்தது. ஒற்றை மனிதனுக்கு எதிராக அதுநாள் வரையில் உலகில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் வேட்டை இதுதான்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா - 67

கொலம்பிய அரசோடு சமரசம் செய்துகொள்ள பாப்லோ எஸ்கோபார் தயாராகத்தான் இருந்தார்.ஆனால், இம்முறை அதிபர் கவேரியா, இப்பிரச்னையை வேரோடு பிடுங்கியெறிய முடிவெடுத்து விட்டார். அவரே அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காகவே காத்திருந்த அமெரிக்கா, தங்கள் இராணுவத்தின் பிரத்யேக சிறப்புப் பிரிவான டெல்டா ஃபோர்ஸை கொலம்பியாவுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் வேறு வேட்டை அமைப்புகளாக சென்ட்ரா ஸ்பைக் மற்றும் சர்ச் பிளாக் பிரிவினரும் கொலம்பிய காடுகளுக்குள் நுழைந்து வேட்டையை நடத்தினர்.
26.jpg
அமெரிக்கா தவிர்த்து கொலம்பியாவின் இராணுவம், போலீஸ் மற்றும் உளவுத்துறையினரும் களமிறங்கினர். மெதிலின் கார்டெல்லின் பரம எதிரிகளான காலி  கார்டெல்லும் இவர்களோடு கைகோர்த்தது.அதுமட்டுமின்றி இம்முறை பாப்லோ, இதுவரையில் சந்திக்காத புதுமையான எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ‘லாஸ் பெப்ஸ்’ என்கிற பெயரில் இறங்கிய இந்த ஆயுதப் படையினர், பாப்லோவால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள். அவரால் உயிரிழந்தவர்கள்,  வாழ்விழந்தவர்கள் மற்றும் அக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து, ‘பாப்லோவைக் கொல்லுவோம்’ என்கிற ஒற்றை லட்சியத்துக்காக என்ன  வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள்.

காஸ்தானோ சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்தான் இந்த பாதிக்கப்பட்டோரின் அணிக்குத் தலைமை தாங்கினார்கள்.இந்த வேட்டைக் கும்பல்களில் பெரும்பாலானவை தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் தேடுதல் வேட்டைக்கு இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளும் பணரீதியாகவும், ஆட்களை வழங்கியும் உதவின. ஏனெனில், அந்த நாடுகளும்கூட பாப்லோவின் போதைத் தொழிலால் பாதிக்கப்பட்டவையாக இருந்தன.

இத்தனை நாடுகள், இத்தனை அமைப்புகள் இணைந்தும் பாப்லோவை நெருங்கவே முடியவில்லை. ஏனெனில், அவர்கள் இவரைத் தேடிக்கொண்டிருந்தது கொலம்பிய வனங்களில். நூற்றுக் கணக்கானோர் வேட்டை நாய்களோடு அடர்ந்த காடுகளுக்குள் நுழைந்து பாப்லோவைத் தேடும் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் பலர் இராணுவ உடையிலும், சிலர் சிவிலியன் உடையிலும் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் மெஷின்கன், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. நீண்ட வாளால் இருவர் புல் புதர்களை வெட்டிக்கொண்டே வர, இந்த வேட்டைக் கும்பல் ஆங்காரத்தோடு காட்டுக்குள் பாய்ந்து தேடிக்கொண்டிருந்தது.
26a.jpg
ஆனால், பாப்லோவோ, எதிரி யின் கோட்டையின் மையத்திலேயே வீற்றிருந்தார். மெதிலின் நகரின் மையத்தில் ஒரு நவீன அப்பார்ட்மெண்டின் பதினான்காவது  மாடியில் அவர் பதுங்கியிருப்பார் என்று இவர்கள் யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.பாப்லோ, தாடி வளர்த்திருந்தார். சிறைக்குள் இருந்தபோது வளர்த்திருந்த பெரிய மீசையை கத்தரித்திருந்தார். பெரிய குளிர்க் கண்ணாடி அணிய ஆரம்பித்தார். வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காக ஒரு விக் அணிந்தார்.

இதனால், பாப்லோவின் தோற்றமே வித்தியாசமாக மாறிப் போயிருந்தது.பாப்லோவின் சகோதரர் மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய ஓரிரு சகாக்களைத் தவிர்த்து அவரை வேறு யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசுடன் புதிய சமரசத் திட்டம் போடும்வரை இப்படியே மறைந்து வாழவே இவர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.அவரவர் குடும்பத்தையோ, நண்பர்களையோ போனில் தொடர்பு கொள்வது ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே, நலம் விசாரித்தோ மற்ற தேவைகளுக்காகவோ கடிதங்கள் மட்டுமே எழுதுவார்கள். கடிதத்தை சம்பந்தப்பட்டவர் வாசித்து முடித்ததும் எரித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு.எனினும் இரவு வேளைகளில் மாறுவேடத்தில் நகர்வலம் வருவது பாப்லோவின் வழக்கமாக இருந்தது. இதில் கிடைத்த ஒரு திரில்லை அவர் ரசித்தார். ஒருமுறை வேண்டுமென்றே அதிபர் மாளிகையின் வாயிலில் இருந்த பாதுகாவலனிடம் போய் சிகரெட்டுக்கு நெருப்பு கேட்டார். இதுபோல வேண்டுமென்றே  காவல்துறை தலைமையகம் பக்கமாக போய் சுற்றுவார். தன்னை வேட்டையாடத் திரிந்து கொண்டிருக்கும் காவலர்களிடம் போய் பேச்சுக் கொடுப்பார். யாருமே பாப்லோவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

“நம்முடைய அஜாக்கிரதையாலோ அல்லது நமக்குள் யாரேனும் துரோகம் செய்தாலோ அல்லது நாமாக அவர்களிடம் சிக்கினால்தான் உண்டு. சத்தியமாக  சொல்கிறேன். அவர்களால் நம்மைப் பிடிக்க முடியாது...” என்று அடிக்கடி தன்னுடைய சகாக்களிடம் உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார்.அப்போது மெதிலின் நகர் முழுக்க பெரும்பாலும் பாப்லோவின் டாக்ஸிகள்தான் ஓடிக்கொண்டிருந்தன. இந்த கார்களில் ஆண்டெனா வைத்து ஒருவிதமான மொபைல் நெட்வொர்க்கில் போன்கள் இயங்கிக் கொண்டிருந்தன. நகர்வலத்தின் போது இதுபோல ஏதாவது காரில் ஏறி, போனில் பேசவேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்.அதுமாதிரி ஒருமுறை காரில் போனில் பேசிக்கொண்டே போனபோது, துப்பாக்கி முனையில் ஒருவன் நிறுத்தினான். பாப்லோவும், காரை ஓட்டிக் கொண்டிருந்த அவரது பாதுகாவலரும் கைகளைத் தூக்கியபடியே இறங்கினார்கள்.துப்பாக்கியை நீட்டியவன், ஒரு சாதாரண வழிப்பறிக் கொள்ளையன். இவர்கள் அணிந்திருந்த விலையுயர்ந்த வாட்ச், செயின் உள்ளிட்டவைகளைப் பிடுங்கிக் கொண்டு, காரையும் எடுத்துக் கொண்டு தப்பினான்.
பாப்லோ, கிண்டலாகச் சிரித்துக் கொண்டே கூறினார்.

“அமெரிக்காவாலேயே என்னை மடக்க முடியவில்லை. சாதாரண வழிப்பறிக் கொள்ளையன் மறித்து விட்டான்!”எனினும் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை கொஞ்சம் சீரியஸாகவே போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட பாப்லோவை நெருக்கத்தில் வந்து சிலமுறை கோட்டை விட்டார்கள் எதிரி கள். ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் அவர் தப்பி, உயிர் பிழைக்க வேண்டியிருந்தது.‘லாஸ் பெப்ஸ்’ அமைப்பினர்தான் இதற்குக் காரணம். ஏனெனில், இவர்கள் பாப்லோவின் முன்னாள் கையாட்கள். பாப்லோவின் நகர்வுகளை ஓரளவுக்கு துல்லியமாக இவர்களால் யூகிக்க முடிந்தது. போதாக்குறைக்கு பாப்லோவின் அமெரிக்க பார்ட்னர்களாக இருந்த பலரும் சிஐஏ-வின் கையாட்களாக மாறிப் போனார்கள். தங்களைக் காத்துக் கொள்ள பாப்லோவை பலியிட முக்கியமான தகவல்களை அவர்கள் சிஐஏவிடம் வெளியிடத் தொடங்கினார்கள்.

எத்தனை காலத்துக்குத்தான் பொறுமையாக இருப்பது?மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்கள் பாப்லோ எஸ்கோபாரைத் திருப்பியடிக்க வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.ஒருவழியாக அவரும் போரிடத் தொடங்கினார்.சில காலத்துக்கு அமைதியாக இருந்த கொலம்பியா, மீண்டும் வன்முறையாளர்களின் வேட்டைக்காடானது. அரசின் முக்கிய தலைகள் திடீர் திடீரென கடத்தப்பட்டார்கள். காவல் நிலையங்கள் தீக்கிரையாயின.பாப்லோவின் ஆட்களை வீழ்த்த முடியாத அரசுத் தரப்பு, அவருக்கு ஆதரவாக இருந்த அப்பாவி மக்களைக் கொல்ல ஆரம்பித்தது. இது நேரிடையான போலீஸ், ராணுவத் தாக்குதலாக இல்லாமல் ‘லாஸ் பெப்ஸ்’ போன்ற அல்லக்கை அமைப்புகளின் பயங்கரவாதத் தாக்குதலாக அமைந்தது. மக்களின் அன்றாட வாழ்வு, கேள்விக்குரியதானது. வீட்டைவிட்டு தெருவில் கால் வைப்பவர், திரும்ப வீடு திரும்புவது என்பது நிச்சயமல்ல என்கிற நிலை ஏற்பட்டது.

பாப்லோவின் ஆடிட்டர்கள், அக்கவுண்டண்டுகள் என்று தொழில்ரீதியாக அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். குறிப்பாக  மெதிலின் கார்டெல் வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகிக் கொண்டிருந்த வழக்கறிஞர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழவேண்டியதானது.மெதிலின் நகரின் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு பிணங்களாவது கண்கள் வெறித்த நிலையில் வீழ்ந்திருக்கும். பாப்லோவின் சகோதரர்  ராபர்ட்டோவின் பந்தயக் குதிரையைக்கூட சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் வெறியர்கள்.இதனால் பாப்லோவின் பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. ஒரு காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்களோடு, கம்பீரமாக நகர்வலம் வந்தவர், இப்போது ஓரிருவரோடு மறைந்து மறைந்து நகர்ந்துகொண்டிருந்தார்.

ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பர் ஒருவரோடு பாப்லோ, செஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க திடீரென ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. பாப்லோவுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர், வெலவெலத்துப் போனார். அவரை அமைதிப்படுத்திய பாப்லோ, விளையாட்டைத் தொடர்ந்தார்.ராணுவத்தினர் கதவை தடதடவென்று தட்டினர்.பாப்லோவே போய்த்தான் கதவைத் திறந்தார். கெளபாய் தொப்பியும், தாடியுமாக பாப்லோவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.“இங்கே, பாப்லோ எஸ்கோபாரின் நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். யாராவது பார்த்தீர்களா?” கதவைத் தட்டிய ராணுவ வீரர் கேட்டார்.பாப்லோ, சிரித்துக்கொண்டே சொன்னார். “உங்களுடைய சேவையில் பாப்லோ எஸ்கோபாரிடமிருந்து நாங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறோம்!”
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

காட்ஃபாதா் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 68

“கவலையே படாதீர்கள். பாப்லோ எங்கிருந்தாலும் அவனை உயிருடனோ, பிணமாகவோ நிச்சயம் கொலம்பிய ராணுவம் பிடித்தே தீரும்!” அந்த இளம் ராணுவ வீரன், தான் பதில் சொல்லிக் கொண்டிருப்பதே பாப்லோவிடம்தான் என்பதை அறியாமல் சொன்னான்! வெடித்துச் சிரித்த பாப்லோ, அவனுக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்தார். அந்த ராணுவ வீரனைப் போலவே ஆயிரக்கணக்கானோர் இரவும் பகலுமாக பாப்லோவைப் பிடிப்பது என்கிற ஒற்றை நோக்கத்துக்காக பசி, தூக்கம் மறந்து அலைந்து கொண்டிருந்தார்கள்.
23.jpg
மெதிலின் உள்ளிட்ட எல்லா பெரிய நகரங்களிலும் ஒவ்வொரு வீடும் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் சென்ட்ரா ஸ்பைக், சர்ச் பிளாக் மற்றும் டெல்டா ஃபோர்ஸ் போன்ற அமைப்புகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்துத் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக் கேட்டு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தன. குறிப்பாக பாப்லோவின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய சகாக்களின் தொலைபேசிப் பேச்சுகள் 24 மணி நேரமும் பதிவாகிக் கொண்டே இருந்தன. இதற்கிடையே அமெரிக்காவுக்கு ‘சரக்கு’ அனுப்புவதில் பாப்லோவுக்கும் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருந்தது. அவருடைய அமெரிக்க டீலர்கள் பலரும் சிஐஏவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருந்தனர்.

போதைத்தொழில் என்றாலே அது பாப்லோ எஸ்கோபார்தான் என்கிற முத்திரையை அமெரிக்கா அழுத்தமாகக் குத்தியிருந்தது. அவரை முடித்துவிட்டால் உலகில் போதைத்தொழிலே இருக்காது என்று பிரச்சாரம் செய்து வந்தது. அனைவரும் வேறு வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்கிற விரக்தியான முடிவினை பாப்லோ எடுத்தார். முதற்கட்டமாக குடும்ப உறுப்பினர்களை ஹெலிகாப்டர் ஒன்றில் அனுப்பி வைக்கும் முயற்சியை மேற்கொண்டார். அனைவரும் ஏறி பயணத்துக்குத் தயாரான நிலையில் திடீரென்று ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
23a.jpg
எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று யாருக்குமே புரியவில்லை. பைலட்டின் சமயோசிதமான செயல்பாடுகளால் பாப்லோ குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பினர். பின்னர் வேறு வேறு ஏற்பாடுகள் மூலமாக அர்ஜெண்டினா, சிலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்பட்டனர். நிலைமையை இப்படியே நீடிக்க விடுவதில் பாப்லோவுக்கு உடன்பாடு இல்லை. கொலம்பிய அதிபரும் வன்முறையைக் கைவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மீண்டும் சரணடைவது, சிறையில் இருந்தபடியே பேச்சுவார்த்தையைத் தொடர்வது என்கிற கடினமான முடிவுக்கு பாப்லோ வரவேண்டியிருந்தது. முதற்கட்டமாக தன்னுடைய சகோதரர் ராபர்ட்டோ எஸ்கோபாரை சரணடைய வைத்தார் பாப்லோ. இந்த முடிவு அரசுக்கு தெரிவிக்கப்பட்டபோது, “நல்லது. உங்களுக்குரிய மரியாதையோடு நடத்துவோம்...” என்றனர். ஆனால், அரசின் வாக்குறுதியை நம்பி 1992 அக்டோபரில் சரணடைந்த ராபர்ட்டோ, சிறையில் நாய் மாதிரி நடத்தப்பட்டார்.

சரணடைவதற்கு அரசுடன் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன. சாதாரண பிக்பாக்கெட் திருடனுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் கூட பாப்லோவின் சகோதரருக்கு வழங்கப்படவில்லை. சிறைக்காவலர்களில் சிலர் பாப்லோவின் ஆதரவாளர்கள். அவர்கள் மூலமாக பாப்லோவிடம் பேசி, தன்னுடைய பரிதாபகரமான நிலைமையைச் சொல்லி அழுதார் ராபர்ட்டோ. கொதித்துப் போன பாப்லோ, நாடு முழுக்க இருந்த தன் ஆதரவாளர்களை மேலும் வன்முறைக் குத் தூண்டினார். படிப்படியான சரணடைதல் நடவடிக்கை மூலமாக அமைதி திரும்புமென்று கருதியவர்கள், நிலைமை மேலும் மோசமாவதைக் கண்டு அரசாங்கத்தையும், பாப்லோவையும் சபிக்க ஆரம்பித்தனர்.

கொலம்பிய ஊடகங்கள் பாப்லோவை மாயாவி போல சித்தரிக்கத் தொடங்கினர். ‘கால்பந்துப் போட்டியை பாப்லோ ரசித்துக் கொண்டிருந்தார்’ என்று புகைப்படத்தோடு திடீரென தலைப்புச் செய்தி வரும். இராணுவத்தின், போலீஸின் கண்ணில் படாத பாப்லோ, பத்திரிகையாளர்களின் கேமராவுக்கு மட்டும் எப்படி சிக்குகிறார் என்று அரசு குழம்பிப் போகும். வேறு வேறு இடங்களில் வேறு வேறு வேடங்களில் பாப்லோவைப் பார்த்ததாக பலரும் சொல்லத் தொடங்கினார்கள்.

தன்னைத் தேடிக் கொண்டிருந்தவர்களை குழப்ப பாப்லோவே இப்படிப்பட்ட செய்திகளைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார். வேட்டையர்கள் சற்றும் எதிர்பாராத இடங்களில் அவர் சுதந்திரமாக உலவிக் கொண்டுதான் இருந்தார். இதெல்லாம் நடந்து பல ஆண்டுகள் கழித்து ஒரு வயதான டாக்ஸி டிரைவர், பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் சுவாரஸ்யமானது. “என் காரில் நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஏறினார். சாதாரணமாகப் பேச்சைத் தொடங்கிய அவர் நாட்டு நடப்புகளையும், மக்களின் எண்ணங்களையும் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

அரசாங்கம், மக்களின் நலனைப் பேணுவதைவிட பாப்லோவைப் பிடிப்பதில்தான் மும்முரமாக இருக்கிறார்கள். விலைவாசி விண்ணுக்கு ஏறிவிட்டது. சாதாரண மனிதர்கள் பிழைக்கவே வழியில்லை. இந்தக் காரை வாங்கிய கடனைக் கூட நான் செத்தபிறகும் என்னுடைய மகன்களால் அடைக்க முடியாது. ஒவ்வொரு கொலம்பியனுமே கடன் தொல்லை தாங்காமல் தூக்கில் தொங்கக்கூடிய நிலைமை விரைவில் வருமென்று புலம்பினேன்.

டாக்ஸியில் இருந்து இறங்கும்போது, அந்த நடுத்தர மனிதர் என் முகவரியைக் கேட்டு வாங்கிச் சென்றார். மறுநாள் காலை, நான் சற்றும் எதிர்பாராத வகையில் பெரும் பணம் அடங்கிய பை ஒன்று என் வீட்டு வாசலில் கிடந்தது. ‘எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு, நிம்மதியாக வாழுங்கள். ஒரே ஒரு கொலம்பியன் கூட வாழ வக்கில்லை என்று தூக்கில் தொங்கக் கூடாது - அன்புடன் பாப்லோ!’ என்கிற கடிதம் அந்தப் பைக்குள் இருந்தது. என் காரில் பயணித்த பயணி பாப்லோதான் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்...” என்று அந்த டாக்ஸி டிரைவர் பேட்டி கொடுத்தபோது, பாப்லோ மறைந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன.

அவ்வளவு இக்கட்டான சூழலிலும் கூட கொலம்பியர்கள் மீது பாப்லோ வைத்திருந்த நேசத்தை எண்ணி மக்கள் கண்ணீர் வடித்தார்கள். அந்தக் காலக்கட்டங்களில் பாப்லோ, தன் நண்பர்களின் ஆடம்பரமான வீடுகளிலோ, பண்ணைகளிலோ தங்குவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார். தன்னிடம் பணிபுரிந்த கடைநிலை ஊழியர்களின் குடியிருப்புகளில்தான் பாதுகாப்பாக உணர்ந்தார். ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பாப்லோவைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அவர் சேரிகளிலோ, சிறிய குடிசை வீடுகளிலோ இருப்பார் என்று கற்பனையிலும் கூடக் கருதியதில்லை.

அதுபோல ஒரு நண்பரின் வீட்டில் பாப்லோ தங்கியிருந்தபோது, டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மடியில் நண்பரின் ஏழு வயது மகள் அமர்ந்திருந்தாள். டிவி செய்திகளில் பாப்லோவின் புகைப்படம் காட்டப்பட்டு, இவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்கிறார்கள். அந்தக் குழந்தை பாப்லோவிடம், “அங்கிள், உங்களை மாதிரியே யாரோ ஒருத்தரை டிவியில் காட்டுறாங்க. அவரை போலீஸ் தேடிக்கிட்டிருக்காம்!” என்றாள். குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியபடியே கேட்டார்.

“அந்தாளை போலீஸ் பிடிச்சிடுமா?” “போலீஸ் ஆச்சே, கண்டிப்பா பிடிச்சிடும்!”பாப்லோவின் முகம் சட்டென்று இருளடைந்தது. இராணுவம் அவரை மிகவும் நெருக்கமாக நெருங்கி கோட்டை விட்ட சம்பவங்களும் பலமுறை நடந்தன. ஒருமுறை அதுபோல ‘ஜஸ்ட் மிஸ்’ஸாகி தப்பி, காட்டில் பாப்லோவும், அவரது பாதுகாவலர் ஒருவரும் ஓடிக் கொண்டிருந்தனர். பாப்லோ சீரியஸாக ஒரு பாக்கெட் ரேடியாவை தன்னுடைய காதுகளில் பொத்திக்கொண்டே ஓடிக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படையினர் அந்தக் காட்டைச் சுற்றி வளைத்து சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் ஒரு புதர் மறைவில் இருக்க, சில மீட்டர் தொலைவில் படையினர் வந்துகொண்டிருந்தனர். பாப்லோ பாதுகாவலரிடம் மெதுவாக, அதே நேரம் சந்தோஷம் தொனிக்கும் குரலில் சொன்னார். “மெதிலின் ஒரு கோல் போட்டுடிச்சி!”உயிரைக்கையில் பிடித்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நேரத்திலும் இந்த மனிதர், கால்பந்து வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று அந்த பாதுகாவலர் ஆச்சரியமடைந்தார். பாப்லோவின் முகத்தில் அந்த இக்கட்டான சூழலிலும் தென்பட்ட குதூகலத்தைக் கண்டு பாதுகாவலரின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

காட்ஃபாதா் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா - 69

அது 1993ஆம் ஆண்டின் பிற்பாதி. எல்லாம் வல்ல பாப்லோ எஸ்கோபாரே, தன்னைக் காத்துக்கொள்ள தடுமாறிக் கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அவர் தனிமைப்பட்டிருந்த காலம் அது.தன்னுடைய குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.  கொலம்பியா முழுக்கவே தொலைபேசி அழைப்புகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மொபைல் போனில் பேசி முடித்த  அடுத்த சில நிமிடங்களிலேயே, இடத்தை சரியாகக் கண்டுபிடித்து கமாண்டோ படை சுற்றி வளைத்து நிற்கும்.பாப்லோவின் சகாக்கள்  பெரும்பாலும் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டு விட்டார்கள். மீதியிருந்த சிலரும் சிறையில் இருந்தனர். பல்லாயிரம் கோடி ரூபாய்  பணத்தை ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தார். இன்னமும் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் அவரது பெயர் நீடித்துக்  கொண்டிருந்தது.
22.jpg
ஆனால், அந்தப் பணத்தை பாப்லோவால் பயன்படுத்த முடியாத அளவுக்கு நெருக்கடி. ஆற்றிலே அவ்வளவு நீர் ஓடினாலும், அள்ளிக்கூடக்  குடிக்க முடியாத அவஸ்தை.இனியும் அரசோடு ஓர் ஒப்பந்தத்துக்கு வருவதற்கான வாய்ப்பு துளி கூட இல்லை என்பதை பாப்லோ  உணர்ந்தார். மெதிலின் நகர் முழுக்கவும் வலைவீசி கொலம்பியா, அமெரிக்கா இரு நாடுகளோடு இணைந்து அவரது எதிரிகளும் தேடிக்  கொண்டிருந்தனர்.பாப்லோவின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓர் நட்சத்திர விடுதியில் அரசாங்கத்தால் தங்கவைக்கப்பட்டு கைதிகளாக  மாறிப்போயிருந்தார்கள். தன்னை விலையாகக் கொடுத்து, அவர்களையாவது மீட்க முடியுமா என்று ஒரு சராசரி குடும்பத் தலைவனாக  அவர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.“நிபந்தனை விதிக்கக்கூடிய இடத்தில் நீங்கள் இல்லை. முதலில் சரணடையுங்கள். பிறகு, மற்ற  விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம்...” என்று கொலம்பிய அதிபர் கறாராகச் சொல்லிவிட்டார்.

ஒருவேளை சரணடைந்தாலும், தன் குடும்பத்தின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்குமா என்கிற சந்தேகம் பாப்லோவுக்கு  இருந்து வந்தது.அரசாங்கத்தோடும், எதிரிகளோடும் போரிட்டு மடிவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதை உணர்ந்தார். தான், ஒரு  போதைக் கடத்தல்காரனாக இருப்பதால்தான் கேள்வி வரைமுறையின்றி தன்னை அரசாங்கம் வேட்டையாடுகிறது, எனவே, மக்களுக்கான  போராளியாகத் தன்னை மாற்றிக்கொண்டால், சேகுவேராவைப் போன்று பெயரெடுக்கலாம்; தன் மீது கைவைக்க அமெரிக்காவே அஞ்சும்  என்றும் திட்டமிட்டார்.‘அமெரிக்க அரசின் அடிவருடியாக மாறி, மக்களை அலைக்கழிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்  கொலம்பியாவுக்கு எதிராகப் போரிடுவோம்...’ என்று திடீரென முழங்கினார். போர் உத்தியாக, சேகுவேரா பாணியில் ஒரு கொரில்லா  இயக்கத்தைக் கட்டமைத்தார். இந்த அமைப்புக்கு Antioquia Rebelde என்று பெயர். இந்த இயக்கத்தின் மூலமாக இளைஞர்களை ஒன்று  சேர்த்து அரசுக்கு எதிரான கலகங்களை நடத்தி, தன்னை புரட்சி கரமான தோழராக நிலைநிறுத்திக் கொள்வதே அவரது திட்டம்.
22a.jpg
‘‘ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அலை அலையாக எங்கள் கொரில்லாக்கள் போரிடுவார்கள்...’’ என்று வீரமுழக்கமிட்டார்.“நாம் சுதந்திரமான  கொலம்பியாவை நிறுவ இருக்கிறோம். அந்த நாட்டில் அமெரிக்காவின் தலையீடு கொஞ்சம்கூட இருக்காது. நம் சுதந்திர நாட்டில் வறுமை  என்கிற சொல்லுக்கே அர்த்தமில்லை. அந்த நாட்டின் அதிபராக, மக்களை பொன்னுலகில் வாழவைப்பேன்...” என்று வாக்குறுதி அளித்தார்  பாப்லோ எஸ்கோபார்.“இப்படிப்பட்ட கிரிமினல் இயக்கங்கள் அரசியலில் ஈடுபடுவதை, கொலம்பிய அரசு விரும்பவில்லை...” என்று  ஆரம்பத்திலேயே கொலம்பிய அதிபர் இந்த முயற்சியைக் கிள்ளியெறிய முனைந்தார்.

யாரெல்லாம் எஸ்கோபாரின் பின்னால் அணிசேருகிறார்கள் என்பதை உளவுத்துறையினர் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக்  கடுமையான மிரட்டல்கள் தரப்பட்டன.பாப்லோ அப்போது மெதிலின் நகரின் கால்பந்து மைதானம் ஒன்றை ஒட்டியிருந்த ஒரு  மிகச்சாதாரணமான அபார்ட்மென்டில் தங்கியிருந்தார். டாக்ஸிகளில் பயணிக்கும்போது மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துவார்.  இதனால் எந்த இடத்திலிருந்து பேசுகிறோம் என்கிற சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தப்பிக்க முடியும்.பாப்லோவுக்கு கூட மாட  ஒத்தாசையாக இருந்தவர் லிமோன் என்கிற வயதானவர். இவர்தான் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். வெளியே  அழைத்துச் செல்வதில் தொடங்கி, அத்தனை ஏற்பாடுகளையும் லிமோன்தான் செய்துவந்தார்.
22b.jpg
அடிப்படையில் லிமோன் ஒரு மாந்திரீகர். ஸ்பானிய மொழியில் அடிக்கடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருப்பார். பில்லி, சூனியம்,  பேய் ஓட்டுதல் போன்ற விஷயங்களில் அவர் கில்லாடி. பாப்லோ, ஒவ்வொரு செயலைச் செய்யத் தொடங்கும்போதும் நேரம், காலம்  பார்த்து சகுனம் சொல்லிக் கொண்டிருப்பார். தேவையான பரிகாரங்களையும்சொல்வார். பாப்லோவுக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு  இல்லை. அவர் லிமோனை சீரியஸாகவும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், லிமோன் மனம் புண்படக்கூடாது என்பதில் மட்டும்  கொஞ்சம் கவனமாகவே இருப்பார்.

1993, நவம்பர் மாதத்தின் கடைசி நாள்.பாப்லோ, நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். கருவண்டு ஒன்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்து,  ரீங்கரித்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.முதலில் பாப்லோ அந்தவண்டினைத் துரத்த கையை இப்படியும் அப்படியுமாக  அசைத்தார். வண்டோ கொஞ்சமும் அசராமல் பாப்லோவின் முகத்தையே சுற்றிவர ஆரம்பித்தது.உடனே பேப்பரை நான்காக மடித்து  வண்டினை வேட்டையாட எழுந்தார். இவருடைய தாக்குதலில் இருந்து லாவகமாக வண்டு தப்பித்துக்கொண்டே இருந்தது.ஒரு சாதாரண  வண்டு, காட்ஃபாதர் பாப்லோவை அலைக்கழிப்பதா என்று சிரித்தவாறே எழுந்தார். வண்டை விரட்டத் தொடங்கினார். சிறுவயதில் பட்டாம்  பூச்சிகளை வேட்டையாடிய நினைவுகள் பாப்லோவுக்கு வந்தது. அந்நிமிடங்களில் சிறுவனின் குதூகலத்துடன் அவர்  செயல்பட்டார்.சமையலறைக்குள் இருந்து இந்த கூத்தினைக் கண்ட லிமோனின் முகம் இருளடைந்தது.

“உங்களைக் கருவண்டு சுற்றி வருவது சரியல்ல. இது துரதிருஷ்டத்துக்கான அடையாளம்...” என்று முணுமுணுத்தார்.பாப்லோ,  வழக்கம்போல லிமோனைக் கண்டு சிரித்தார். “உங்களுக்கு எல்லாத்துக்கும் ஏதோ ஒண்ணு சொல்லிக்கிட்டே இருக்கணும்...”மறுநாள் தான்  பாப்லோவின் நாற்பத்தி நான்காவது பிறந்தநாள்.முந்தைய ஆண்டுகளில் எல்லாம் திருவிழா மாதிரி, மெதிலின் நகரம் அல்லோல  கல்லோலப் படும். இப்போதோ பாப்லோ, எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத பராரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, அவருடைய குடும்பத்தாரின் வாழ்த்து மட்டும் கடிதவடிவில் வந்து சேர்ந்திருந்தது.“நீங்கள் எங்களுடன் இப்போது இல்லை. ஆனால், எப்போதுமே உங்கள் இதயத்தில் நாங்கள் இருப்போம்...”நெகிழ்ந்து போனார் பாப்லோ.  அந்தக் கடிதத்தில் லிப்ஸ்டிக் வாயிலாக முத்தம் வைத்து அனுப்பியிருந்தார் அவரது மனைவி.அன்றிரவு, சிறிய அளவில் லிமோன் மற்றும்  லுஸ்மிலா என்கிற உறவுக்காரப் பெண்ணுடன் தன் பர்த்டே பார்ட்டியை சந்தோஷமாக ஷாம்பெயின் மது அருந்திக் கொண்டாடினார்.  நான்காவது ஒரு கிளாஸை டேபிளில் வைத்து, அதில் கொஞ்சமாக மதுவை ஊற்றினார் பாப்லோ.

“இது யாருக்கு?” என்று கேட்டார் லுஸ்மிலா.“என்னுடைய குடும்பத்துக்கு...” சொல்லும்போதே பாப்லோவின் கண்களில் கண்ணீர்.மூவரும் ‘சியர்ஸ்’ சொல்லி தங்கள் கைகளில் இருந்த கிளாஸ்களை மோதவிட்டனர். அப்போது சட்டென லிமோனின் கைகளில் இருந்த  கிளாஸ் மட்டும் நழுவிக் கீழே விழுந்தது.“ஏதோ மோசமா ஒரு சம்பவம் நடக்கப் போவுது. இது அதுக்கான முன்னெச்சரிக்கை...” என்றார்  லிமோன்.“நாம ஒண்ணும் இன்னைக்கு நைட்டே செத்துடப் போறதில்லை. வேற கிளாஸ் எடுத்து சரக்கை ஊத்திக் கொண்டாடுங்க  லிமோன்...” என்றார் எஸ்கோபார்.லிமோனின் அச்சம் அர்த்தம் நிறைந்தது. மறுநாள் அவர் அச்சப்பட்ட சம்பவம் நிகழ்ந்தே விட்டது.
 

(அடுத்த இதழில்
மிரட்டல் ஓயும்)
ஓவியம் : அரஸ்

http://www.kungumam.co.in

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா - 70

இறுதி அத்தியாயம்.ஆம். இத்தொடரின் முதல் அத்தியாயம் நினைவில் இருக்கிறதா?இறுதி அத்தியாயமும் அதுவேதான்.முதல் அத்தியாயத்தின் கடைசி  சில பத்திகள் மட்டும் உங்கள் நினைவுறுத்தலுக்காக…மார்ட்டின் கவலையாக, பிணமாகக் கிடந்தவர்களின் உடலைப் புரட்டி முகங்களைப்  பார்த்துக்கொண்டே வந்தார்.“நோ. அவன் தப்பிச்சிட்டான்னு நெனைக்கிறேன்...” இரண்டு கைகளையும் தலையில் வைத்தவாறு அப்படியே சோபாவில்  சாய்ந்தார்.முதல் தளத்திலிருந்து உற்சாகக்குரல் கேட்டது.“சார், இது பாப்லோ!”வெளிர்நீல ப்ளூ ஜீன்ஸ், கருநீல டீஷர்ட் அணிந்திருந்த அந்தப்  பிணத்தைத் திருப்பிப் போட்டார். கனமான தொப்பை. தாடி மறைத்திருந்த முகத்தை உற்று நோக்கினார்.யெஸ். அவரேதான். தி கிரேட் காட்ஃபாதர்.
29.jpg
கோகைன் மன்னன். குற்றவியல் சக்கரவர்த்தி. அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டிய அசால்ட்டு தாதா. போதை உலகின் பேரரசன். தி ஒன் அண்ட்  ஒன்லி, பாப்லோ எமிலோ எஸ்கோபார் கேவிரியா.அந்த நாள், டிசம்பர் 2, 1993.முந்தைய நாள்தான் தன்னுடைய 44வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியிருந்தார் எஸ்கோபார்.“ஜெய் கொலம்பியா! எஸ்கோபாரை நாம போட்டுட்டோம்...” காவல் தலைவர் மார்ட்டின் உற்சாகமாகப்  பெருங்குரல் எடுத்து கத்தினார்.காட்ஃபாதரின் இறுதிநாள் குறித்து போலீஸ் சொல்லும் கதை இதுதான்.பிறந்தநாள் என்பதால் நல்ல நிறை போதையில்  இரவு அப்பார்ட்மெண்டுக்கு வந்த பாப்லோ எஸ்கோபார், தன்னுடைய நண்பர்கள் சிலரோடு போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்மெதிலின் நகர் முழுக்கவே தொலைபேசி பேச்சுகள் அப்போது ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாப்லோ அன்று கொஞ்சம் அசட்டையாக  இருந்துவிட்டதால் மாட்டிக் கொண்டார்.
29a.jpg
உண்மையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. போலீஸ் என்ன சொல்லுகிறதோ, அதைத்தான் அரசாங்கம் மக்களிடம்  சொல்லும். அரசாங்கங்கள் சொல்லுவதுதான் வரலாறு.“பாப்லோ எஸ்கோபாரை உயிரோடு பிடிக்கத்தான் நினைத்தோம். ஆனால், அவருடன்  இருந்தவர்கள் எங்களிடம் சரணடைய விரும்பாததால்  சுட ஆரம்பித்தார்கள். வேறு வழியின்றி நாங்களும் சுட்டோம்...” என்றுதான் போலீஸ் கதை  விடுகிறது.ஆனால், இறுதி நாட்களில் அரசாங்கத்தோடு சமரசம் செய்துகொண்டு சரணடைய பாப்லோ எவ்வளவு முயற்சித்தார் என்பது, அந்தப்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த சிலருக்குத்தான் தெரியும். அந்த சிலரும் கூட அரசாங்கம் மீது இருந்த அச்சத்தால் அப்போது வாய் மூடி  மவுனியாகி விட்டார்கள். வெகுகாலத்துக்குப் பிறகே, ஓரிரு உண்மைகள் வெளியாகின. காலம் கடந்து சொல்லப்படும் உண்மைகள், பொய்களைவிட  மோசமானது.

பாப்லோவின் உடலை அடையாளம் காட்ட அவரது தாயாரும், சகோதரியும் சம்பவ இடத்துக்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் உறுதி  செய்தபிறகே பாப்லோவின் மரணம் அதிகாரபூர்வமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.பாப்லோ, தன்னுடைய மரணத்தை ஓரிரு நாள் முன்கூட்டியே  அறிந்திருந்தார் என்றும் சொல்கிறார்கள். எனவேதான், இறப்பதற்கு முந்தைய நாள், தன்னுடைய மகளுக்கு ஒலிப்பதிவு செய்திருந்த கேசட் ஒன்றை  அனுப்பியிருந்தார்.அதில், “கடவுள் என்னை விரும்புகிறார். எனவே, கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு சென்று வாழலாம் என்று நினைக்கிறேன்.  சமூகத்துக்கு நல்ல பெண்ணாக இரு. உன் தாய்க்கு நல்ல மகளாக இரு. எதைப்பற்றியும் எவரைப் பற்றியும் கவலைப்படாதே. நான் சொர்க்கத்தில்  இருந்து உன்னை ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பேன்...” என்று உருக்கமாகச் சொல்லியிருந்தார்.
29b.jpg
இந்த கேசட்டை அவரது மகள் கேட்கும்போது, பாப்லோ உயிரோடு இல்லையென்பது குறிப்பிடத்தக்கதுஅன்றைய தினம் பாப்லோ எஸ்கோபாரின் மகன்  ஜுவான் பாப்லோ, அரசாங்கம் மீது கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தான். “என் தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர்கள் அத்தனை  பேரையும் தேடித்தேடி பழிவாங்குவேன்...” என்று ஆவேசமாக வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தான்.சிறையில் இருந்த பாப்லோவின் சகோதரர்  ராபர்ட்டோ மற்றும் மெதிலின் கார்டெல்லின் முக்கியஸ்தர்கள் சிலர் ஜுவானைத் தொடர்பு கொண்டு, இந்த சபதத்துக்காக கண்டித்தார்கள். அவனை  ஆசுவாசப்படுத்தியவர்கள் உடனடியாக அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரச் சொன்னார்கள்.

மறுநாள் சுமார் இருபத்தைந்தாயிரம் மக்கள் பங்கேற்க, கொலம்பியாவின் ராபின்ஹுட் பாப்லோ எஸ்கோபாரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதி  ஊர்வலத்தின்போது ஆறு பாடல்களைப் பாடும் சடங்கு கொலம்பியாவில் உண்டு. தன்னுடைய மரணத்துக்கு யார் யார் பாடவேண்டும் என்பதையும்  ஏற்கனவே பாப்லோ சொல்லியிருந்தார்.டிசம்பர் 3, 1993 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக பாப்லோவின் மரணத்தை  உலகத்துக்கு அறிவித்திருந்தது.“பாப்லோ எஸ்கோபார், கொலம்பிய சேரிகளில் உருவாகி உலகின் மிகக் கொடூரமான கொலைகாரனாகவும், போதை  சாம்ராஜ்யத்தின் அதிபதியாகவும் திகழ்ந்தவன் கொல்லப்பட்டான். இனி போதைத் தொழில் ஒழியும்...”அமெரிக்காவின் குரலையேதான் ஊடகங்களும்  ஒலித்தன.
29c.jpg
ஆனால், பாப்லோவின் மரணத்தால் போதைத் தொழில் ஓய்ந்துவிட்டதா என்ன?இன்றும் கூட கோகைன் உற்பத்தியில் நம்பர் ஒன் நாடு  கொலம்பியாதான். அதுபோலவே கோகைன் பயன்பாட்டில் நம்பர் ஒன் நாடாக விளங்குவதும் அதே அமெரிக்காதான். பதினைந்துக்கும் மேற்பட்ட  ஆயுதம் தாங்கிய அமைப்புகள் இன்றும் போதைத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.பாப்லோவை ஒழிக்க ஒட்டுண்ணிகளாக  அரசாங்கத்தோடும், அமெரிக்காவோடும் இணைந்து செயல்பட்ட காலி கார்டெல் உள்ளிட்ட காவாலி அமைப்புகள், எஸ்கோபாரின் மரணத்துக்குப் பிறகு  மென்மேலும் வளர்ந்தன. அவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் கொலம்பியா திணறியது. எஸ்கோபார் ஒருவரைத் தீர்த்துவிட்டால் நாடு  சுபீட்சமாகிவிடும் என்று அலறிக் கொண்டிருந்த அரசாங்கம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்த சில்லறை கார்டெல்களை எதிர்
கொண்டது.
29d.jpg
பாப்லோவின் மீது அவர் வாழ்நாளின் போது அமெரிக்கா மற்றும் கொலம்பிய அரசுகளால் சாட்டப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பலவும்  பின்னாளில் டுபாக்கூர் என்பது நீதிமன்ற விசாரணைகளில் அம்பலமானது. பாப்லோ எஸ்கோபார் ஒன்றும் உத்தமரல்ல என்றாலும், இவர்கள்  கட்டமைத்தது மாதிரி அயோக்கியரல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதுபாப்லோ வசித்த பண்ணை வீடுகள், நேபோலிஸ் தீவு சாம்ராஜ்யம்  ஆகியவை தீம் பார்க் போல அமைக்கப்பட்டு, இன்று தினமும் ஆயிரக்கணக்கானோர் அவற்றைக் கண்டுவிட்டுச் செல்கிறார்கள்.பாப்லோ மறைந்து  இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவர் குறித்து இன்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள், நூல்கள், டிவி தொடர்கள், சினிமாக்கள் தொடர்ந்து  எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை கொலம்பியர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்பவர்கள் ஆவலோடு வாசிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.அமெரிக்கா எதைச் சொன்னாலும் அது ‘டூப்’பாகத்தான் இருக்கும்; அமெரிக்கா எவரை எதிர்த்தாலும் அவர் நல்லவராகத் தான் இருப்பார் என்று  அமெரிக்காவின் மீது உலக மக்களுக்கு அப்படியொரு நம்பிக்கை.
 

(மிரட்டல் ஓய்ந்தது)

http://www.kungumam.co.in

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.