Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கழுதைப்புலி அரசியல் – கிரிஷாந்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைப்புலி அரசியல் – கிரிஷாந்

June 15, 2017
iyangara-nesan-filannnnnnnnnnnnnnnnnnnnn

ஓர் ஆளுமை சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் மாற்றத்தையே அவரை அளவிடுவதற்கான அளவுகோலாகக் கொள்ளமுடியும். மதிப்பீடுகளற்றுப் போன ஒரு சமூகமாக மாறியிருக்கும் நாம் எல்லாவற்றையும் வாய் பார்த்துவிட்டு நகர்ந்துகொண்டிருக்கிறோம். அரசியல்வாதியாக ஒருவர் வருவதற்கு முன் ஒரு வாழ்க்கையிருக்கிறது. அந்த வாழ்க்கையில் அவர் என்னவாக இருந்தார், எப்படி நடந்து கொண்டார், எவற்றை உருவாக்கினார் என்பது பிற்கால அவரது அரசியல் பயணத்தில் செல்வாக்குச் செலுத்தும். இந்தப் பத்தியை அமைச்சர் ஐங்கரநேசனின் ஆளுமை தொடர்பிலும் அவர் தொடர்பான விமர்சனங்களை நாம் எவ்வாறு உரையாடப்போகிறோம் என்பது தொடர்பிலும் ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்ளவும் தொகுக்கிறேன்.

ஐங்கரநேசன் மேல் ஊழல் வழக்குகளோடு சேர்த்து அதிகார துஷ்பிரயோகம் என்பது வரை நிறைய குற்றங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதலமைச்சாரால் ஒழுங்குபடுத்தப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி அவர் குற்றவாளியாகவே குறிப்பிடப்படுகின்றார். தற்போது வடக்குமாகாணசபை பெரும் அல்லோல கல்லோலப்பட்டுப்போயிருக்கிறது. முதலைச்சர் பதவியிலிருந்து விக்கினேஸ்வரனை நீக்கப்படக்கூடிய அளவுக்கு விஷயம் வீங்கி வெடித்திருக்கிறது. இது ஒருவகையில் விக்கினேஸ்வரனுக்கான கண்ணி தான். அதற்கு அவருக்கு நெருக்கமான ஐங்கரநேசனைக் குறிவைப்பது ஒரு விதத் தந்திரம். அதைத் தான் கழுதைப்புலிகள் செய்துகொண்டிருக்கின்றன.

முதலில் ஐங்கரநேசன் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியைப் பார்ப்போம். சூழலியல் மாணவனாக, ஆசிரியராக, இதழியலாளராக, செயற்பாட்டாளராக ஐங்கரநேசன் இந்த சமூகத்தின் ஒரு ஆளுமை பொருந்திய சக்தி. அவர் சார்ந்திருந்த ‘தேனீக்கள்’ என்ற அமைப்பு யுத்த காலங்களில் ஏராளம் உதவிகளை மக்களுக்குச் செய்திருக்கிறது. ‘நங்கூரம்’ என்ற இதழ் ஆயிரக்கணக்கான மாணவர் மத்தியில் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கை, மரநடுகைக்கென்றொரு மாதத்தை அறிவித்து அது தொடர்பிலான தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்தமை, விவாசாயிகளையும் வீட்டுத் தோட்டம் செய்பவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு பாராட்டு விழாக்களையும் கௌரவத்தினையும் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொடுத்தமை, ‘அம்மாச்சி’ என்ற உணவகத்தினை நிறுவி அதன் மூலம் உள்ளூர் உணவுகளையும் பெண்களுக்கான சுயநம்பிக்கையையும் உருவாக்கியமை, இதன் ஊடாக ஏராளமானவர்கள் இன்றும் நல்ல சாப்பாடு சாப்பிடக் காரணமாயிருப்பமை, மரபுரிமைகள் சார்ந்தும் சூழலியல் சார்ந்தும் பொருட்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை, தொண்டைமானாறு நீரேரியை நன்னீர் நீர்த்தேக்கமாக்கும் முயற்சி, வருடந்தோறும் பனைவளக் கண்காட்சியும் பனை வளம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்கள், நல்லூர் திருவிழாக் காலங்களில் விவாசாயக் கண்காட்சி, அதனுடன் தொடர்புடைய மலிவு விலையில் நூல் விற்பனை, புதிய விவசாய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருத்தல், உள்ளூர் உணவுகளுக்கான கண்காட்சிகளை நடத்த ஆரம்பித்திருப்பமை, “ஏழாவது ஊழி” என்ற சூழலியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளமை என்று அவர் நேரடியாக தேர்தல் அரசியலில் ஈடுபட்ட பின்னரும் அதற்கு முன்னரும் ஏராளமான பொது வேலைகளை முன்னின்று நடத்திய ஆளுமை. சமகாலத்தைய ஈழத் தமிழ் அரசியலில் இவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்த, அடிமட்டத்திலிருந்து செயற்பாடுகளினூடாக வளர்ச்சி பெற்று வந்த வேறெந்த அரசியல் தலைமையும் இல்லை.

19198472_1325546614166357_1088211516_n-119184169_1325546627499689_2056722490_n-1

இன்றளவும் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அவரை சந்தித்து உரையாடமுடியும். இவரளவுக்கு நெருக்கமாக மக்களுடன் உரையாடும் தலைமைகள் குறைவு, மேலும் இவரளவுக்கு தற்போது உலகம் எதிர்கொண்டுகொண்டிருக்கும் மிகக் கடுமையான சூழலியல் சார் பிரச்சினைகள் தொடர்பாக ஆழமான அறிவையும் அதற்கான தெளிவான பார்வையையும் கொண்ட இன்னொரு தலைமை அரசியல் அரங்கில் இல்லை. சூழலியலையும் தேசியத்தையும் ஒருங்கே பேசக்கூடிய ஓர் அரசியல் தலைமை தமிழ் மக்களுக்குத் தேவை. அரசியல்வாதிகளின் வகிபாகம் என்பது வெறுமே ஆயிரம் பிரச்சனைகளைக் கதைகளாகக் கதைத்துக்கொண்டிருப்பதில்லை. மேலே நாம் அடையாளம் கண்ட பண்புகளைக் கொண்ட ஒரு தலைமையால் தான் கனவுகளை காண முடியும். தனது காலத்திற்கு தேவையென்று தான் கருதும் விடயங்களை துணிவாகவும் திடமாகவும் நடைமுறைப்படுத்த முடியும். உதாரணத்திற்கு எந்தக் கடையிலுமே சாப்பிட முடியாமல் விழுங்கித் தொலைக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கான உணவுத் தேவைகளை சூழலியல் சார்ந்த அக்கறையுடனும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான கனவுடனும் தீர்வுசெய்யும் நோக்கத்தின் விளைவுதான் ‘அம்மாச்சி’. அம்மாச்சி போன்ற பயன்மதிப்பும் பல்வேறு பரிணாமங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான வேறொரு நடவடிக்கைகளையும் வேறெந்த சமகால அரசியல் தலைமைகளும் முன்வைக்கவில்லை. சமூகத்திற்கான தனது கனவையும் நடைமுறையையும் இணைத்து யார் ஒருவர் புதிதாக ஒன்றை சமூகத்தில் உருவாக்குகிறாரோ அது மிக முக்கியமான ஒரு நகர்வு; அதனைச் செய்பவரே சமூகத்திற்கான தலைமை. மற்றவர்களெல்லாம் அவர்களுக்கானதை கதைத்துக்கொண்டிருக்கும் போது நிலைத்து நின்று சமூக மாற்றத்தை உருவாக்கும் வகைமாதிரியை அவர் சமூகத்தில் உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கார்த்திகை மாதமும் ‘மரநடுகை ‘ மாதமாக அறிவித்து அதை நடைமுறைப்பபடுத்துவதென்பது இனிவரப்போகும் அரசியல்வாதிகளுக்கும் தலைமுறைகளுக்கும் ஒரு செய்தி.

ஐங்கரநேசனின் நிர்வாகத் திறன் என்பதை முன்வைத்து இந்தப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணத்தைப் பார்த்தால், நிர்வாக ரீதியில் ஐங்கரநேசனின் பலவீனங்கள் சமூகத்தை பாதிக்குமொன்றாக மாறிவிடக் கூடும். அதேவேளை அவை நிவர்த்தி செய்யப்பட முடியாதவையல்ல. பொதுவாழ்வில் யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எனக்கும் கூட அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

ஆனால் இவ்வளவு பணிகளையும், இதை விட அதிகமானவற்றையும் செய்திருக்கும் ஐங்கரநேசன் தொடர்பில் நாம் ஒரு விவாதத்தை உருவாக்கும்போதும் விமர்சனத்தை வைக்கும்போதும் எளிமையான தர்க்க விளையாட்டுகளின் மூலம் மதிப்பிட முடியாது. அவரது மொத்தவாழ்வில் அவர் செய்தவற்றினையும் சேர்த்தே அவர் பற்றிய மதிப்பீடு அமையவேண்டும். அறமும் ஒரு அளவுகோல்தான். இங்கு ஐங்கரநேசனையோ அல்லது விக்கினேஸ்வரனையோ குறிவைக்கும் தரப்புக்களின் அரசியல் வெளிப்படையானது. இந்த நாடகத்தினை நாம் வெறுமனே வாய் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. அப்படி நாம் இருப்போமென்றால், சமூகத்திற்காக உழைத்து அதற்காக தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்து அதன் மூலமாக அரசியலில் உருவாகி வரும் ஆளுமைகளை நாம் முழுவதும் சோர்வடையச் செய்துவிடுவோம். அது சுயநலம் வாய்ந்த அரசியல் கும்பல்களை கொண்டாட வைக்குமொரு செய்தி. நாம் அப்படியிருக்கக்கூடாது. அரசியலில் மதிப்பீடுகளுடன் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். இவரை விமர்சிப்பவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதற்காக அரசியலை செய்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஐங்கரநேசன் போன்றவர்கள் எப்பொழுதும் ஆபத்தானவர்களே. அவர்கள் கழுதைப்புலிகள்; புலிகள் அல்ல. கழுதைப்புலிகளை நாம் கழுதைப்புலிகள் என்று தான் அழைக்க முடியும். சோம்பேறிகளின் அரசியல் என்பது கழுதைப்புலி அரசியல் தான். அதனை நாம் ஆதரிக்க முடியாது. அதனை நாம் உரக்க வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு குறித்த விசாரணைக்குழு “பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவர் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களில் தலையிடுவதை விசாரணைக்குழு சட்டபூர்வமற்றதென நிறுவ முயன்றுள்ளது” என்பதன் உள்நோக்கத்தைப் பார்க்கவேண்டும். ஒருவர் எல்லையை மீறி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தான் அறத்தின் அடிப்படையில் குற்றமே தவிர, நன்மை செய்வது அல்ல. இது போன்ற அடிப்படை அறமற்ற கும்பல்களுக்கு மத்தியில் மக்கள் தாம் நம்பும் அறத்தை மதிப்பீடுகளுடன் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த மதிப்பீடுகளுக்காக போராடவேண்டும்.

15094974_1516419938374398_24585010021007

நாளைய தலைமுறைக்கு நாம் அரசியல்வாதி எவ்வாறு இருக்கவேண்டுமென்று சொல்வதற்கும் குறைந்தபட்சம் எது போன்ற வேலைகள் இந்த சமூகத்திற்கும் உலகத்திற்கும் முக்கியமானதென்று சொல்வதற்கும் ஒரு அமைச்சராவது இருக்கவேண்டாமா?

(இதன் தொடர்ச்சி நாளை தொடரும்)

– கிரிஷாந்

http://www.quicknewstamil.com/2017/06/15/கழுதைப்புலிஅரசியல்/

அரசியல் பழகு – கிரிஷாந்

June 16, 2017
fgfxb.jpg?resize=696%2C365

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கான ஆதரவுக் குரல்கள் எழுச்சிபெற ஆரம்பித்திருக்கும் பின்னணியில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் முன்னாலும் அதன் பின்னர் விக்னேஸ்வரனின் வீட்டிலும் திரண்ட ஐநூறுக்கும் அதிகமான இளைஞர்களின் ஒருங்கிணைவென்பது யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் அரங்கில் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. ஒரு ஜனவசியம் மிக்க அரசியல் தலைமையின் பேரில் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கொள்கையின் பேரில் திரண்டிருக்கும் இந்த சக்தி ஓர் அலையாக மாற்றம் பெறுமா? விக்னேஸ்வரன் இன்னொரு அரசியல் குழுவின் தலைமையாக மாறுவாரா? அவ்வாறு அவர் மாறுவது தமிழ்மக்கள் மத்தியில் விக்னேஸ்வரன் மீதான அபிமானத்தை எவ்விதம் பாதிக்கும்?

%E0%AE%9A%E0%AE%BF..%E0%AE%B5%E0%AE%BF.%

முதலமைச்சரின் விசாரணைக்குழு அறிக்கையின் பின்னரான முடிவுகளை நாம் அறிவோம். தமது அமைச்சர்களை பதவிகளை தியாகம் செய்யச் சொல்லியிருக்கிறார். அவர்களும் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கை. இதை விட அதிகபட்சமான சினிமாத்தனமான முடிவுகளையோ அல்லது பின்னடிப்புக்களையோ அவர் செய்திருந்தால் அது அவரது ஆளுமை ஏற்படுத்தியிருக்கும் விம்பத்திற்கு பொருந்தாத ஒன்று. நீதியை அறிந்த ஒருவர், அதைக் கறாராகக் கடைப்பிடிப்பவர் என்ற மனப்பிம்பம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. இளைஞர்கள் நேர்மையான, அறத்தின் பக்கம் நின்று பேசும் முதல்வரை, தமது கனவாகக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்களது கனவை ஈடுசெய்யும் தலைமையாக விக்னேஸ்வரன் இருக்கின்றார். அதிகபட்சம் தாம் விரும்பும் உண்மையைப் பேசும் ஒருவராக தமிழ்மக்கள் அவரை மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பின்னனியில் விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லப் பிரேரணையை அதைக் கொண்டு வந்த தரப்புக்கள்  மீள எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றே தோன்றுகிறது. விக்னேஸ்வரனுக்கெதிராகக் கைநீட்டும் எவருக்கும் விக்னேஸ்வரன் அளவுக்கு ஜனவசியமோ கருத்துக்களை வெளிப்படுத்தும் நிதானமோ இல்லை. இந்த நிதானமான முதியவரின் குரலுக்கு ஒரு அலையை வீச வைக்கும் சக்தியிருக்கிறதென்றே அவதானிக்க முடிகிறது.

19148982_470361643307587_219942950580375

விக்னேஸ்வரன் இன்னொரு அரசியல் குழுவிற்கு தலைமையேற்கச் செல்வாரா? விக்னேஸ்வரன் தமிழ்மக்கள் பேரவையினூடாக தனது இன்னொரு அரசியல் பிரவேசத்தை நிகழ்த்துவாராயின் ஒப்பீட்டளவில் அது விக்னேஸ்வரனை விட மக்கள் பேரவையில் உள்ள பிற அரசியல் குழுக்களுக்கே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும். அது விக்னேஸ்வரனின் ஜனவசியத்தை, ஒளியை தங்கள் தரப்புடன் இணைத்துக்கொள்வதன் ஊடாக தமது தரப்பை வலிமைப்படுத்திக்கொள்ளவே உதவும். ஆனால் அதனைப் பயன்படுத்தி பொருட்படுத்தக் கூடிய மாற்றங்களை இவர்கள் ஏற்படுத்துவார்களா?  அல்லது இன்னொரு தெரிவாக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக மாறுவாராயிருந்தால் இப்பொழுது நிலவும் எதிர்ப்புகளை எவ்விதம் சமாளித்து தனக்கு வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நடந்துகொள்ளப் போகிறார்? அதற்கான வாய்ப்பிருக்கிறதா?

விக்னேஸ்வரன் எடுக்கப்போகும் தேர்வு சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் நிச்சயம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் ஏற்படவேசெய்யும்.  ஆனாலும் அது அது எவ்விதத்திலும் அவரது அரசியல் மதிப்பை மாற்றப் போவதில்லை. அரசியலில் தந்திரம் முக்கியமானதென்றாலும் மக்கள் தந்திரத்தை விட அறத்தின் பக்கமே நிற்பார்கள். அதுவே மக்களின் அளவுகோலாக இருக்கும். அந்தளவுக்கு விக்னேஸ்வரன் மக்கள்மயப்பட்டிருக்கிறார்.

19149368_10207279328940435_4961282877031

இதனோடு இணைத்து விக்னேஸ்வரனின் நிர்வாகத்திறமைகள் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் நாம் பொருட்படுத்த வேண்டும். அது விக்னேஸ்வரனை தலைமையாகக் கொண்டாடும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ‘நல்லவர்’ என்ற பண்பு மட்டும் ஒரு அரசியல் தலைமைக்குப் போதாது. தமிழ் மக்களின் இழப்பென்பது பெரியது. இவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்த ஒரு மக்கள் தொகுதிக்குத் தலைமை தாங்கும் ஒருவர் மக்களுடன் நெருக்கமானவராக மட்டும் இருப்பது போதாது, பல்வேறு பண்புகளுடன் இருக்கும் அரசியல் தரப்புக்களுடன் பேரங்களைச் செய்பவராகவும் அரசியல் விவகாரங்களை கையாளக் கூடியவராகவும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

தமது இரு அமைச்சர்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் எடுத்திருக்கும் முடிவென்பது மக்கள் மத்தியில் அவருக்கு அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அவரளவில், அவரது மதிப்பீட்டின் அடிப்படையில் அந்த அமைச்சர்களின் அரசியல் இருப்பென்பது மனதளவில் அவருக்கு வலிமையைக் கொடுப்பதாகவே இருந்தது.   இந்த நெருக்கடியான நிலையில் முதலமைச்சரின் பக்கத்திலேயே அதிகளவு நியாயம் இருப்பதாகப்படுகிறது. அவரின் பக்கமே நாம் குரல் கொடுக்கவேண்டும், அதேவேளை அவரது குரலை செயலுக்குப்போகும் ஒன்றாக மாற்றவேண்டும். வெறுமனே உரையாற்றும் ஒருவராகவே அவர் தனது காலத்தைக் கழித்துவிட நாம் அனுமதிக்கமுடியாது. ஆனால் அரசியல் விருப்பு மிக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டிய காலம்.

தமிழ் மக்களுக்கு ஜனநாயக அரசியலென்பது  நீண்ட இடைவெளிக்குப் பின் நடைமுறையிலிருப்பது, அதன் ஜனநாயகப் பண்புகளை பயிற்சி செய்வதற்கு

சிறிது காலமெடுக்கும், இந்தக் காலத்தில் நிகழக் கூடிய மாற்றங்கள் என்பன கூடிய பட்ஷம் ஜனநாயக முறைப்பட்டதாகவும்  அரசியலை தேர்தலைத் தாண்டி விளங்கிக் கொள்ள வேண்டிய பங்கேற்க கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும். இந்த ஏழு வருடங்களில் அதிக பட்ஷம் உணர்வெழுச்சியான விடயங்களுக்காகவே இளைஞர்களும் மக்களும் தெருவிலிறங்கியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் விளைவுகளில் அந்த வகையான போராட்டங்களே முதலில் தோன்றும். ஆனால்  அது வளர்ச்சிப்போக்கைக் கொண்டிருக்க வேண்டும். உணர்வெழுச்சியிலிருந்து அரசியலை ஒரு அறிவுபூர்வமான துறையாகக் கையாளப் பழக வேண்டும். இப்பொழுது இரண்டு கட்டுரைகளிலும் நாம் விவாதித்த ஆளுமைகளின் தன்மைகளில் போதாமை உள்ளது. விமர்சனங்கள் உண்டு. ஆனால் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நாம் இந்தப் பக்கத்தில் நிற்க வேண்டுமென்று தீர்மானம் செய்ய வேண்டும். மேலும் இங்குள்ள சிவில் சமூகங்களும் கல்வி நிலையங்களும் சுய சார்புள்ள பிரச்சினைகளோடு பொது அரசியலில் உள்ள விடயங்களை உள்வாங்கி மக்களை அரசியல் அறிவுள்ள தொகுதியாக மாற்ற வேண்டும். அரசியல் உணர்வுள்ள தொகுப்பாக இருக்கின்ற தமிழ்மக்களை அரசியல் அறிவுள்ள தொகுதியாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் இளைஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு புத்திஜீவிகளுக்கும் உள்ள பொறுப்பு. அரசியலை ஒரு மக்கள் தொகுதியின் அறிவாக மாற்றுவதற்கு பெரும் உழைப்புத் தேவை. பரந்துபட்ட வாசிப்புள்ள ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற வேண்டும். அன்றாட பத்திரிக்கைச் செய்திகளை வைத்து கணிக்கும் அரசியலைத்  தாண்டி அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியலிலும் சமூகத்திலும் அக்கறையுள்ளவர்கள் இனியும் அரசியலை ஓட்டுப்போடுவதுடன் மாத்திரம் நகர்ந்து செல்லும் ஒரு சடங்காக தொடர முடியாது. குறிப்பாக இது தமிழ் இளைஞர்கள் அரசியல் பழகவேண்டிய காலம்.

– கிரிஷாந்

http://www.quicknewstamil.com/2017/06/16/arasiyal-palagu-by-kirishanth/

இணைப்புக்கு நன்றி கிருபன்

 

  • 4 weeks later...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.