Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருநாள் தொடரை வசப்படுத்துமா இலங்கை?

Featured Replies

ஒருநாள் தொடரை வசப்படுத்துமா இலங்கை?

 

ஒருநாள் தொடரை வசப்படுத்துமா இலங்கை?

 

 
 
ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மைதானத்தில் இன்று இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இடம்பெறுகின்றது.

இதில், சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை முன்னதாக இடம்பெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளிலும் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு நாள் தொடர் தற்போது சமநிலையில் உள்ளது.

இதற்கமைய, தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=93178

Sri Lanka 47/3 (13.5 ov)

  • தொடங்கியவர்

தொடரை வெல்லுமா இலங்கை : சிம்பாப்வேக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்­தா­வதும் கடை­சி­யு­மான சர்வதேச ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 204 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

crik.jpg

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் 5வது போட்டி இன்று ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்று வருகின்றது. சிம்பாப்வே அணிக்கெதிரான 5வது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

http://www.virakesari.lk/article/21722

Sri Lanka 203/8 (50.0 ov)
Zimbabwe 102/1 (16.0 ov)
Zimbabwe require another 102 runs with 9 wickets and 34.0 overs remaining
  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்டது சிம்பாப்வே

 

 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்டது சிம்பாப்வே
 

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை சிம்பாப்வே அணி 3 இற்கு 2 எனும் கணக்கில் கைப்பற்றியது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற ஜந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியதன் மூலம் சிம்பாப்வே இந்த தொடர் வெற்றியை பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றை சிம்பாப்வே வெற்றிக் கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

http://newsfirst.lk/tamil/2017/07/இலங்கைக்கு-எதிரான-ஒருநா-2/

  • தொடங்கியவர்
இலங்கைக்கு அதிர்ச்சி; தொடரை வென்றது சிம்பாப்வே

image_02d2a19bc0.jpg

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, சிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளது. தீர்மானமிக்க 5ஆவது போட்டி நேற்று இடம்பெற்ற போது, இலங்கை அணியை அதிர்ச்சிகரமாகத் தோற்கடித்த சிம்பாப்வே, தொடரைக் கைப்பற்றியது.

ஏற்கெனவே 2-2 என தொடர் நிலைமை காணப்பட்ட நிலையில், முக்கியமான இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியை, சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர் வென்றார். கடந்த 8 போட்டிகளாக, நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்த அவர், முக்கியமான இந்தப் போட்டியில் வெற்றிபெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், பின்னர் 3 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களுடனும், பின்னர் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களுடனும் ஓரளவு பலமாகக் காணப்பட்டது. ஆனால் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. 9ஆவது விக்கெட்டுக்காக, பிரிக்கப்படாத 50 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, முதலாவது விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது. பின்னர், ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், பின்னர் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால் 8ஆவது விக்கெட்டுக்காக, பிரிக்கப்படாத 29 ஓட்டங்கள் பகிரப்பட்டு, வெற்றி பெறப்பட்டது.

சிம்பாப்வேயின் இந்தத் தொடர் வெற்றி, இலங்கைக்கெதிராக அந்நாடு பெறும் முதலாவது தொடர் வெற்றியாகும். அத்தோடு, டெஸ்ட் விளையாடும் நாடுகளில் பங்களாதேஷ் தவிர்ந்த ஏனைய நாடுகளுககு எதிராக, அந்நாடு பெற்ற 2ஆவது தொடர் வெற்றியாகும். அத்தோடு, தமது நாட்டுக்கு வெளியே, அந்நாடு கடந்த 8 ஆண்டுகளில் கைப்பற்றும் முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.

இந்தத் தொடரில், 5 போட்டிகளிலும், இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

இலங்கை: 203/8 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: அசேல குணரட்ன 59 (81), தனுஷ்க குணதிலக 52 (86) ஓட்டங்கள். பந்துவீச்சு: சீகன்டர் ராஸா 3/21, கிறேம் கிறீமர் 2/23)

மே.தீவுகள்: 204/7 (38.1 ஓவ.) (துடுப்பாட்டம்: ஹமில்ட்டன் மஸகட்ஸா 73 (86), சொலமன் மையர் 43 (32), தரிசாய் முசகன்டா 37 (49), சீகன்டர் ராஸா ஆ.இ 27 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 4/47, லசித் மலிங்க 2/44)

தொடர் முடிவு: சிம்பாப்வே 3-2

போட்டியின் நாயகன்: சீகன்டர் ராஸா

தொடரின் நாயகன்: ஹமில்டன் மஸகட்ஸா

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்கு-அதிர்ச்சி-தொடரை-வென்றது-சிம்பாப்வே/44-200307

  • தொடங்கியவர்

எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணம் இது : மெதிவ்ஸ்

Angelo-Mathews-press-con1-696x464.jpg
elite-davis-cup-2017-728.jpg

ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்வியானது, தனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணங்களில் ஒன்று என இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடந்த ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய, தரவரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணி, இலங்கை மண்ணில் தனது முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியையும் சுவீகரித்தது.

கடைசியாக ஜிம்பாப்வே அணி வெளிநாட்டு மண்ணில் 2009 ஆம் ஆண்டிலேயே இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் வென்றிருந்தது. கென்யாவுக்கு எதிரான அந்த போட்டியை ஜிம்பாப்வே 5-0 என வென்றது.  

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த மெதிவ்ஸ், இது எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணங்களில் ஒன்று. இதனை ஏற்பதற்கு கடினமாக உள்ளது. நாணய சுழற்சி தொடக்கம் ஆடுகளத்தை தவறாக கருதுவது வரை எல்லாம் எமக்கு எதிராக இருந்தது. ஆட்ட முடிவில் அவர்களை வீழ்த்த நாம் சிறந்த நிலையில் இல்லை என்பதால் எந்த நியாயங்களும் கூற முடியாது. அவர்கள் சிறந்த முறையில் ஆடினார்கள்” என்று கூறினார்.

இலங்கை அணியின் அண்மைய தோல்விகளை கொண்டு மெதிவ்சின் தலைமைப் பதவி குறித்து ரசிகர்களிடம் பரந்த அளவிலாக கருத்துகள் எழுந்துள்ளன. எனினும் 30 வயதான மெதிவ்ஸ் தோல்விக்கு பின்னர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து தெரிவிக்கும்போது, “நான் எது பற்றியும் இப்போது நினைக்கவில்லை. இன்னும் கால அவகாசம் உள்ளது. நான் இன்னும் சற்று சிந்தித்து, தேர்வாளர்களுடன் கலந்துரையாடுவேன்! நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றார்.

இலங்கை அணி தனது ஆட்ட திறமையில் சீரற்ற தன்மையை வெளிக்காட்டி வருவதே மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை பங்களாதேஷுக்கு எதிரான தொடரை சமன் செய்ததோடு ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவை வீழ்த்தியது.  இவ்வாறான ஒரு நிலையில் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயிடம் தொடர் தோல்வியை பெற்றுள்ளது. இதுவே இலங்கை அணி மூன்று வகை போட்டிகளிலும் ஐ.சி.சி தரவரிசையில் பின்தள்ளப்பட காரணமாகும் (டெஸ்டில் 7 ஆவது இடம், ஒருநாள் போட்டியில் 8 ஆவது இடம், T-20 யில் 8 ஆவது இடம்).

“நாம் ஸ்திரமாக இல்லை. நாம் சிறப்பாக சோபிக்கும் அணியாக வந்து பின்னர் முழுமையாக தோற்றுவிட்டு, மீண்டும் சிறப்பாக சோபிக்கிறோம். தரவரிசைகள் எமது மனதில் இருந்தபோதும் நாம் சிறப்பாக விளையாட வேண்டும். நாம் ஸ்திரமாக இல்லை.” என்று மெதிவ்ஸ் மேலும் குறிப்பிட்டார்.

சுழற்பந்துக்கு அதிக சாதகம் கொண்ட ஆடுகளத்தில் இலங்கை அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. நுவன் குலசேகர 3 ஓவர்கள் மாத்திரமே வீசினார். லக்ஷான் சன்தகன் விளையாடி இருந்தால் இலங்கை அணியின் ஓட்டத்தை பாதுகாக்க அகில தனன்ஜயவுக்கு உதவியாக இருந்திருக்கும்.

இது குறித்து தெரிவித்த அணித் தலைவர், ‘அடுத்த சுழற்பந்து வீச்சாளருடன் (சன்தகன்) விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. கடைசிப் போட்டியில் கூட சுழற்பந்துக்கு சாதகமாக இருந்த போதும் எமது சுழற்பந்து வீச்சாளர்கள் சோபிக்கவில்லை. இன்று அகில தனன்ஜய சிறப்பாக விளையாடியதாக நான் கருதுகிறேன். ஆடுகளத்தை தவறாக கணித்தது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதோடு நாணய சுழற்சியும் தீர்க்கமானதாக இருந்ததுஎன்றார்.

ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் தோற்ற அணி ஒன்றினால் வீழ்த்தப்பட்டிருக்கும் இலங்கை, தற்போது தனது மோசமான ஆட்டத்திறனை நோக்கி செல்கிறது. ஜிம்பாப்வேயிடம் 2-3 என தோற்கும் முன் கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவிடம் 1-4 என்ற கணக்கில் வீழ்ந்த இலங்கை, இந்த ஆண்டு மார்ச்சில் பங்களாதேஷுடனான போட்டியை 1-1 என சமநிலையில் முடித்தது.  

இவ்வாறான ஒரு நிலையிலேயே இலங்கை அடுத்து பலம் மிக்க இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மெதிவ்ஸ், ‘நாம் அதிகம் முன்னேற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. இந்திய தொடர் இதனை விடவும் கடினமாக இருக்கும். குறுகிய காலத்திற்குள் எமது பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். ஒரே அணியாக பயிற்சியில் கடுமையாக உழைத்த போதும் ஆடுகளத்தில் அது பயன்தரவில்லைஎன்று குறிப்பிட்டார்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இலங்கையை அதிரடியாக வென்ற ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வரலாறு இதுதான்! #ZIMvsSL

 
 

டைசியாக ஜிம்பாப்வே அணி மற்ற நாடுகளுக்குச் சென்று விளையாடி, தொடரைக் கைப்பற்றி கோப்பையை முத்தமிட்ட நிகழ்வு 2009-ல் நடந்தது. ஜிம்பாப்வே கைப்பற்றிய அந்தக் கோப்பை டெஸ்ட் அங்கீகாரம் பெறாத கென்யா அணிக்கு எதிராக என்பதால்... குதித்துக் கொண்டாட வேண்டிய வெற்றியாக அதைக் கருத முடியாது. அதற்குப் பிறகு மற்ற நாடுகளுக்குச் சென்று விளையாடிய எந்த ஒருநாள் போட்டித் தொடரையும் ஜிம்பாப்வே கைப்பற்றியதில்லை. அந்த மொத்த ஏக்கத்தையும் இலங்கைக்கு எதிராக நடந்துமுடிந்த ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மிக மிகக் கடினமான சூழலைக் கொடுத்து 3-2 என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெற்றிகரமாக வீழ்த்தி சாதித்தியிருக்கிறது ஜிம்பாப்வே. இலங்கைக்கு இது பெரும் சரிவா எனத் தெரியாது... ஆனால், பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கவனம் பெறாமல் இருந்த ஜிம்பாப்வே அணிக்கு இது எவர்கிரீன் வெற்றி! 

1980-களில் ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தனது முதல் கோப்பையை முத்தமிட எடுத்துக்கொண்ட காலம் 13 ஆண்டுகள். 1996-ல் இங்கிலாந்து அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட... அந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி. பிறகு தொடர் தோல்விகள், அவ்வப்போது நடக்கும் ஆச்சரிய வெற்றிகள்... இதுதான் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நிலை. 2010-க்குப் பிறகு ஜிம்பாப்வே கைப்பற்றிய தொடர்கள் அயர்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிக்கு எதிராக மட்டும்தான். இலங்கை என்ற கிரிக்கெட்டின் முன்னாள் உலக சாம்பினைச் சந்திக்கும் முன்புகூட, ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஒரு தோல்வி, நெதர்லாந்து அணிக்கு எதிராக ஒரு தோல்வி... என கிரிக்கெட்டில் எல்.கே.ஜி படிக்கும் அணிகளோடு தோல்வியைச் சந்தித்த அணி ஜிம்பாப்வே. ஆனால், இத்தொடரின் வெற்றி ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அபரிமிதமான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில்... ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் கதை, ஒரு காலக்கொடுமை!

1997 இங்கிலாந்து - ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர்

ஒரு நாட்டின் தேசிய விளையாட்டு அணி ஒன்றில் அரசியல் நுழைந்தால், அந்த அணி எந்தளவுக்கு பலவீனம் அடையும், அணி வீரர்கள் எந்தளவுக்கு மன உலைச்சலைச் சந்திப்பார்கள் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இருந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி. இந்தியாவை கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் உள்ளே நுழைந்து ஆட்சி செய்ததைப்போல, 'பிரிட்டிஷ் சவுத் ஆப்பிரிக்கா கம்பெனி' என்ற பெயரில் துண்டைப் போட்டது இங்கிலாந்து. நிலங்களை அபகரிப்பது, ஆட்சி அதிகாரத்தில் படர்வது என மெல்ல தனது வேலைகளைக் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில்தான் கிரிக்கெட்டும் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகம் ஆகிறது. 'ஜிம்பாப்வே' என்ற தனி நாடாக இல்லாத அந்தக் காலத்தில் தெற்கு ரொடீசியா, வடக்கு ரொடீசியா, நியாசலாந்து ஆகியவை ஒரே கூட்டமைப்பாக இயங்கி, பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமையாக இருந்தார்கள். நாட்டின் பெரும்பான்மை சொத்துகள், சிறுபான்மையினரான பிரிட்டிஷ்காரர்கள் அபகரித்துகொள்ள, அந்நாட்டின் குடிமக்கள் கூலி வேலைக்குச் சென்று பிழைத்தார்கள். ஆட்சியைக் கைப்பற்றி, நில புலன்களை அபகரித்ததோடு பிரிட்டிஷ்காரர்கள் நிற்காமல், 'கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடையாது', 'காவல்துறை, ராணுவத்தில் இடம் கிடையாது' என்றெல்லாம் உத்தரவுபோட, கறுப்பர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.  வடக்கு ரொடீசியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தது பிரிட்டிஷ் அரசு. அது, 'ஜாம்பியா' என்ற தனிநாடு ஆனது. 

ராபர்ட் முகாபே - ஜிம்பாப்வே அதிபர்

தெற்கு ரொடீசியாவும் சுதந்திரம் கேட்டது. கூடவே, 'கறுப்பர்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் வேண்டும்' என்றது. இல்லையென்று பிரிட்டிஷ் அரசு மறுக்க, தாங்களாகவே சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டு தங்கள் நாட்டிற்கு 'ரொடீசியா' எனப் பெயர் வைத்துக்கொண்டார்கள். ஆங்கிலேயர்களுடனான 'கறுப்பு - வெள்ளை' நிறவெறி யுத்தம் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடும் அளவுக்குத் தீவிரம் ஆனது. ஒருவழியாக கறுப்பினத்தவர்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 1980-ல் ராபர்ட் முகாபே பிரதமர் ஆனார். முகாபே மற்றும் அவருடன் இணைந்து சுதந்திரத்திற்காகப் போராடிய நுகோமோ என்பவருக்கும் முட்டல், மோதல்கள் தொடர... 1987-ஆம் ஆண்டில் ரொடீசியாவின் அதிபர் ஆன ராபர்ட் முகாபே, 'ரொடீசியா'வை 'ஜிம்பாப்வே' ஆக்கினார். இன்றுவரை... இவர்தான் ஜிம்பாப்வே நாட்டின் அதிபராகத் தொடர்கிறார்.  இது ஜிம்பாப்வே நாட்டின் சுருக்கமான வரலாறு. 

வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு, கறுப்பினத்தைச் சேர்ந்தவரான முகாபே அதிபர் ஆனாலும், அவருடைய அடாவடி நடவடிக்கைகளால் சக கறுப்பின மக்களே பாதிக்கப்படத் தொடங்கினர். கிரிக்கெட் அணி நிர்வாகம் மீதும் அவரது அடாவடி நடவடிக்கைகள் எதிரொலித்தது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஜிம்பாப்வே அணி, இந்தியா வென்ற 1983-ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிகெட் தொடரில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றது. தொடரில்   கடைசி இடத்தைப் பிடித்தாலும், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒரு வெற்றியைச் சுவைத்தது ஜிம்பாப்வே. வறுமையில் வாடிய ஜிம்பாப்வே கறுப்பினத்தவர்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இருந்தாலும், அதற்கான நேரத்தைச் செலவிட அவர்கள் தயாராக இல்லை. 1992-ஆம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஜிம்பாப்வே அணியில் இடம்பெற்ற அனைவருமே வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிறந்த உதாரணம். வெள்ளையர்களுக்கு எதிரான செயல்கள், வெள்ளையர்களின் நிலங்களைக் கைப்பற்றுதல், ஊழல்... என ஊறிப்போயிருந்த ராபர்ட் முகாபேயின் அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்தார்கள். ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் கறுப்பின வீரர்கள் இடம்பெறவேண்டும் என விரும்பியது ராபர்ட் முகாபேவின் 'இனவெறி' அரசியல். பதட்டமான சூழலிலேயே நாடு இருக்க... கிரிக்கெட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும்?

2017 ஜிம்பாப்வே - இலங்கை கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட் மீது அரசியல் நிழல் படர்வதை சகித்துக்கொள்ளாத ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு எதிர்வினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டத்தொடங்கினார்கள். ஜிம்பாப்வே அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரும், 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி முதல்முறையாக 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு முக்கியமான பங்களிப்பைக் கொடுத்தவருமான நீல் ஜான்சன், ஜிம்பாப்வே நாட்டின் அரசியல் பிரச்னைகள், குறைந்த ஊதியம் போன்ற காரணங்களுக்காக ஜிம்பாப்வே அணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.  2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நமீபியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஜிம்பாப்வே வீரர்கள் ஆன்டி ஃபிளவரும், ஹென்றி ஒலங்காவும் பத்திரிகையாளர்கள் முன்பு, 'ஜிம்பாப்வேயில் நடக்கும் மனித உரிமை மீறல்களை, இனவெறி நிலையைச் சகித்துக்கொண்டு இருக்கமுடியவில்லை!' என அறிக்கை கொடுத்துவிட்டு, முகாபேயின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தோள்பட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு விளையாடினார்கள். வெள்ளையின மற்றும் கறுப்பின வீரர்கள் இருவரும் இணைந்து எதிர்த்தது ஆச்சரியம் என்றால், தங்கள் நாட்டின் ஆட்சியை எதித்த கறுப்பின வீரர் ஒலங்காதான், ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்த முதல் கறுப்பின வீரர் என்பது மற்றொரு ஆச்சரியம். ஆன்டி ஃபிளவர் ஓய்வு பெறும்படி நிர்பந்திக்கப்பட்டார், ஒலங்காவைக் கைது செய்ய உத்தரவிட, நாட்டை விட்டுத் தப்பியோடினார். நிறவெறி, அரசியல் உள்நோக்கம், ஊதியப் பிரச்னை... என ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தின்மீது விதவிதமான கரங்கள் இறுக்கிப் பிடிக்க... ஒவ்வொரு வீரராக வெளியேறத் தொடங்கினார்கள்.

2004-ல் 'தரமற்ற வீரர்கள் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்', 'ஊதியப் பிரச்னை' எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி, பத்துக்கும் அதிகமான வெள்ளையின வீரர்கள் விலகிக்கொள்ள... ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஜிம்பாப்வே மீது கடும் கோபம் கொண்டதோடு, 'ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்' என்ற கோரிக்கையை ஐ.சி.சிக்கு வைத்தது. அந்த துயரம் ஜிம்பாப்வே அணிக்கு நடக்கவில்லை என்றாலும், சர்வதேச கிரிக்கெட் மேடையில் ஜிம்பாப்வே அணி தலைகுனிந்து நின்றது.  தங்களது அணி இருண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதை உணர்ந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வெள்ளையின வீரர்கள் சமாதானம் ஆனார்கள். ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் இனவெறி அரசியல் நீடிக்கிறதா என்பதை ஆராய்ந்த ஐ.சி.சி குழு ஒன்று 'அப்படி எதுவும் இல்லை' என அறிக்கை தந்தது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

பலமுனைத் தாக்குதலில் நசுங்கிச் சிதைந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட். விளைவு? மோசமான தொடர் தோல்விகள், ஊதியப் பிரச்னையால் நாடு பெயர்வது, போதிய வசதிகள் இல்லாமல் பயிற்சி எடுப்பது... என 'அய்யோ பாவம்' நிலையில் இருந்தனர் ஜிம்பாப்வே வீரர்கள். சிறந்த வீரராகவும், சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருந்த ஹீத் ஸ்ட்ரீக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு, 19 வயது முழுமை பெறாத தைபு என்ற கறுப்பின வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தகுதி இல்லாத பல வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவதற்கு, வெள்ளையின - கறுப்பின வீரர்கள் இருவருமே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டைப் புரிந்துகொண்ட தைபு கேப்டனாக இருந்த சில காலங்களிலேயே விலகினார். 'சம்பளம் முறையாகக் கொடுக்காததால், பொருளாதார ரீதியான பாதிப்பு ஆளாகியிருக்கிறேன்' என அறிவித்துவிட்டு, இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் விளையாடக் கிளம்பினார், ஜிம்பாப்வே அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரன்டன் டெய்லர். 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2017

இப்படியாக, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் மிக மோசமான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான், ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் கொஞ்சம் கீழிறங்கி அணியின் நலனுக்காக யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கிய மாற்றமாக, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகத்தின் நிதித்துறையில் பணியாற்றிய ஃபைசல் ஹூசைன் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிம்பாப்வே அணியை மற்ற அணிகளோடு அதிகளவில் விளையாடச் செய்வது, மற்ற அணிகளை ஜிம்பாப்வே நாட்டிற்கு அழைத்து வருவது ஆகியவற்றை அதிகப்படுத்தினால் ஜிம்பாப்வேயின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற முடிவோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அவர். தவிர, கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் ஹீத் ஸ்டீரிக் தேர்வு செய்யப்பட்டது, பந்து வீச்சு பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளராக ஜொலித்த மகாயா நிடினி தேர்ந்தெடுக்கப்பட்டது, சுழற்பந்து வீச்சாளர் கிரீமி கிரீமர் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது... என புத்தம் புது மாற்றங்களோடு கடந்த சில மாதங்களாக விளையாடி வருகிறது. ஹாமில்டன் மசகட்சா, எர்வின், சாலமன் மிர், சிக்கந்தர் ராசா, கிரீமர், சடாரா, மசகன்டா, மூர்... என அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்த கலவையாக இருக்கிறது ஜிம்பாப்வே அணி. 2016-ஆம் ஆண்டில் மொத்தம் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில்  மூன்றில் மட்டுமே வெற்றி கண்ட ஜிம்பாப்வே அணி, இந்த ஆண்டில் இதுவரை விளையாடியிருக்கும் 12 ஒருநாள் போட்டிகளில் 6  வெற்றிகளைப் பதிவு செய்திருப்பதோடு, அதில் ஒரு சாதனைத் தொடரையும் கைப்பற்றியிருப்பது ஆரோக்கியமான வளர்ச்சியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் பயணித்துக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. 

 

ஜிம்பாப்வே என்ற பெயருக்கு அந்நாட்டின் 'சோனா' மொழியில் 'கல்வீடு' என்று பொருளாம். இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருக்கும் இந்தக் கல்வீட்டின் கதாநாயகர்களை நாமும் வாழ்த்துவோமே!

http://www.vikatan.com/news/sports/95027-zimbabwe-cricket-teams-historic-win-against-srilanka-zimvssl.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.