Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடிகள் (34) கடந்தும் ஆட்டம் ஆடும் இனப்பிணக்கும் சந்தேக சகதிக்குள் சிக்குண்ட கூட்டமைப்பும்

Featured Replies

ஆடிகள் (34) கடந்தும் ஆட்டம் ஆடும் இனப்பிணக்கும் சந்தேக சகதிக்குள் சிக்குண்ட கூட்டமைப்பும்
 

இலங்கையில் தமிழர் வரலாற்றில் ஜூலை, என்றுமே ஒரு கறை படிந்த மாதம் எனலாம்.

34 (1983) வருடங்களுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் தெற்கு மற்றும் மலையகம் எங்கும் இனவாதத் தீ, பெருமெடுப்பில், ஆட்சியாளர்களால், நன்கு திட்டமிட்டு மூட்டப்பட்டது.   

அந்தத்தீ எங்கும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்பாவித் தமிழ் மக்கள், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர்; உயிருடன் நெருப்பில் போடப்பட்டனர்; பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் அதன் பின்னர், மே 2009 வரை இடம்பெற்ற அனைத்து விடயங்களும் நாம் அறிந்தவையே.   

தற்போது, ஒரு ஜூலை மாதத்தில், வரலாறு மீண்டும் திரும்பி உள்ளது. நம் தாய் நாடு, நீண்ட கொடிய, வக்கிர யுத்தத்தைக் கண்ட நாடு. அதிலிருந்து பல படிப்பினைகளைக் கற்றிருக்க வேண்டும். பல அனுபவங்களை அறிந்திருக்க வேண்டும். சில பிழையான முடிவுகளே அனுபவங்களைத் தருகின்றன. அவ்வாறான அனுபவங்களே அறிவுள்ள, ஆற்றலுள்ள ஆசான். ஆனால், தற்போது நடைபெறும் சம்பவங்கள், நாடு வழமைபோலப் பாதைமாறிப் பயனிக்க ஆரம்பித்து விட்டது போலவே படம் போட்டு காட்டுகிறது.   

வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்போமானால், இலங்கை என்பது பல அரசுகளை உள்ளடக்கிய தீவாகவே காணப்பட்டது. “இலங்கை என்பது ஒரு நாடு அல்ல”, இவ்வாறு 1926 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கூறியிருக்கிறார்.   

ஆனால், சரியாக ஐம்பது வருடங்களுக்குப் பின்னர், 1976 ஆம் ஆண்டு அதே யாழ்ப்பாணத்தில் (பண்ணாகம்), தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமே (வட்டுக்கோட்டைப் பிரகடனம்), தனிநாட்டுக் கோரிக்கை ஆகும். அதுகூட, அவ்வாறு கூறிய பண்டாரநாயக்கவின் மனைவி சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.   

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை என்பது, ஒரு சில வருடங்களில் மேற்கொண்ட முடிவு அல்ல. மாறாக ஐம்பது வருட அவல வாழ்வு, அடிமை வாழ்வு, எல்லை தாண்டிய சிங்கள அரசாங்கங்களின் தொல்லை, நிலப்பறிப்பு, மொழி உரிமை மதிக்கப்படாமை, பொருளாதார அழிப்பு, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கபட நாடகம், தீர்வுத் திட்டங்களில் தீர்த்துக் கட்டுதல் போக்கு எனத் தொடர்ந்த, ஒட்டுமொத்தத் தோல்விகளின் விளைவே எனலாம்.   

இவ்வாறாகத் தமிழர்களின் படிப்படியான தொடர் வீழ்ச்சிக்கு, சிங்கள இனவாதத்துடன் மதவாதமும் இரண்டறக் கலந்து, எழுச்சி பெற்றதே காரணம் என அனைவரும் அறிவர்.   
இந்நிலையில், தற்போது வரவிருக்கும் அரசமைப்பில் இலங்கைத் தீவின் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய பல விடயங்கள், வெற்றிடமாகவே உள்ளன. 

அதாவது, வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இல்லையாம்; ஒற்றையாட்சி என்ற சொற்பதம் மாற்றம் அடையாதாம்; பௌத்த மகா சங்கத்தினர் அரசமைப்பு மாற்றத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.   

“மகாநாயக்கர்களின் முடிவுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதேனும் செய்வதில் அர்த்தமில்லை. மாறாக சங்க பீடங்களின் முடிவை ஏற்பதாக கூட்டமைப்பு அறிவிக்க வேண்டும்” என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா கூறியுள்ளார்.   

மறுவடிவில் கூறுவதாயின், சங்க பீடங்களின் கோரிக்கையை ஏற்குமாறு, தமிழ் மக்களுக்கு டிலான் அறிவுரை செய்துள்ளார். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, தமிழ் மக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்ட, தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அவர்கள், தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள்.  

இது வெறுமனே தனி ஒரு டிலானின் கருத்து அல்ல. மாறாகக் கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதிகளின் கூட்டான கருத்து என்று கூடக் கூறலாம். இலங்கைத் தீவில் துளிர் விடும் அமைதியை, மீண்டும் வளரும் மதவாதம் கருகச் செய்து விடுமோ எனத் தமிழ் மக்கள் ஐயம் கொள்ளத் தொடங்கி விட்டனர்.   

சிறிய விடயமான, பொருத்து வீட்டுக்கு எதிராகவே தமிழர்கள் நீதிமன்றப்படி ஏற வேண்டிய நிலையில், இருளில் இருக்கும் எமக்கு நீதியான அரசியல் வெளிச்சத்தை தருவார்களா என்ற சந்தேகம், தமிழ் மக்கள் மனதில் குடி கொள்ள ஆரம்பித்து விட்டது.   

கடந்த பல தசாப்தங்களாக, தமிழ் மக்கள் தமது விடுதலை வேண்டி இழந்தவற்றை சொல்லில் சொல்லி முடிக்க முடியாது; எழுத்தில் எழுதி வடிக்க முடியாது. அந்தளவுக்கு இழப்புகள், துயரங்கள், வேதனைகளை அனுபவித்து விட்டார்கள்.   

 இதை ஏன் இன்னமும் சிங்கள மக்கள், சிங்கள ஊடகங்கள், சிங்கள அரசியல்வாதிகள், சிங்களப் பௌத்த துறவிகள் கண்டு கொள்ள மறுக்கின்றனர். பூனை எலியைப் பிடிக்கத் துரத்தும்போது, பூனையை விட எலி வேகமாக ஓடும். ஏனெனில், எலி தனது இருப்பை (வாழ்வை) பாதுகாக்கவே, உயிரைப் பணயம் வைத்து ஓடுகின்றது. எலியின் நிலையிலேயே தமிழ் மக்களது வாழ்வும் உள்ளது.   

ஒருவரிடம் யாசகம் கேட்பது போல, இன்னும் எவ்வளவு காலம் கை ஏந்துவது? அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் வெறுமையால், தமிழ் மக்களது வாழ்வில் எவ்வளவு காலம் பொறுமை காப்பது? எவ்வளவு காலம் வறுமையில் வாடுவது? வானம் அழுதால் மட்டுமே பூமி சிரிக்கும்; அதேபோல ஓர் இனம் அழ, மற்ற இனம் சிரிக்கும் நிலை மாற வேண்டும். மாற்றுவார்களா?  

அடுத்து, நடப்பு ஜூலை மாதத்தில் நடைபெற்ற மற்றொரு சங்கதி, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் கிளிநொச்சி வருகை ஆகும். அவர் வெறுமனே தமது கட்சி அலுவலகத்துக்கு மட்டும் வந்திருந்தால் அது புதியது அல்ல. ஆனால், அண்ணளவாக கால் ஆண்டு கடந்து, இரவு பகலாக, உறவுகளை நினைத்து, நொந்து கதறும் இடத்துக்கு வந்துள்ளார். ஆம்! கிளிநொச்சி கந்தசுவாமி சந்நிதி வந்தார்.   

அங்கு உள்ளம் முழுவதும் வெள்ளமாகச் சோகத்துடன், அழுது புலம்பல் செய்தவர்களை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். அவர்களது அழு குரல்களையும் மன்றாட்டங்களையும் செவி மடுத்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், தான் வருங்காலங்களில் அரசாங்கத்துடன் மிகக் கடுமையாக நடந்து கொள்ள உள்ளதாக வலிந்து கூறினார்.   

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சித் தலைவர், வருங்காலத்தில் கடுமையாகக் கதைத்தாலும் மென்மையாகக் கதைத்தாலும் ஒன்றே என்றாயிற்று. 

நடப்பு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியதாக கூட்டமைப்பு மார் தட்டினாலும் தமிழர்களது மீட்சியில் பார் போற்றக் கூடிய வகையில் எதைத் தமிழ் இனம் கண்டது?   
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளில் கலந்து கொண்டால், தெற்கு கொந்தளிக்கும் கொக்கரிக்கும்; சமாதான முயற்சிகளுக்கு பங்கம் ஏற்படும் என்றார்கள். 

ஆனால், தற்போது அரசமைப்பை மாற்ற மாட்டோம்; ஒற்றை ஆட்சியை நீக்க மாட்டோம் என ஒற்றை வரியில் தெற்கு கூறுகின்றது. ஆக, இவர்கள் எவ்வாறெல்லாம் பழுத்த அரசியல்வாதியாக தமது நன்னடத்தையைக் கொழும்புக்குக் காட்டினாலும், அவர்களது மேலாண்மைவாத சிந்தனையில் இன்னமும் மாற்றம் வரவில்லை.   

தற்போது மாற்றுத் தலைமை தொடர்பான கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை மாற்றான் மனப்பான்மையுடன் தமிழரசுக் கட்சி நடத்தியதாலேயே, இவ்வாறு சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என, ஏன் இவர்கள் இன்னமும் உணரவில்லை? நான்கு கட்சிகளுக்கிடையில் தராசு சமமாக நின்றிருப்பின், வெடிப்புகளும் பூசல்களும் ஏற்பட்டிருக்காது.  

சம்பந்தன், கடந்த 16 வருடங்களாகக் கூட்டமைப்புக்குள் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வெளிப்படையாகவே கூறியுள்ளார்.   

இந்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் பாறிக்கிடக்கும் செல்வாக்கைத் தூக்கி விடவே சம்பந்தன் ஐயா, கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு வந்ததாக தமிழ் மக்கள் ஊகிப்பதில் தவறுகள் இல்லை. மேலும், அங்கு கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளைவிட, கூட்டமைப்புக்குள் ஒற்றுமையே முக்கியம் எனக் கூறியுள்ளார்.

ஏனெனில் பதிவு நடவடிக்கைகளுக்குச் சென்றால், தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை முற்றுகைக்குள் வைத்திருக்க முடியாத நிலை தோன்றும். தமிழரசுக் கட்சியின் மேலாண்மையை, நிலைநிறுத்த முயற்சி செய்து, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் மேலாண்மையை, இழக்கும் நிலையைத் தலைமை ஏற்படுத்தக் கூடாது.   

போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகள், ஒற்றுமை களைந்து தமக்குள் களமாடுகையில் போரைப் பரிசாகத் தந்தவர்கள் ஒற்றுமையாக, ஒன்றுகூடித் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவேண்டும் என, எப்படிக் கேட்கலாம்? இந்தியாவின் செல்வாக்கு மிக்க பெரிய கட்சிகளில் ஒன்றாகிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் பிளவுண்டுவிட்டது.   

அதேபோல, இலங்கையில் முக்கிய பெரிய கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விரோத சக்திகள் பிரித்து விடுவதற்கு முயல்கின்றனவோ எனத் தமிழர்கள் ஐயப்படுகின்றனர்.  சிங்களத் தலைமைகள், தமிழ்த் தலைமைகளைப் பிளவுபடுத்தி, பல கூறாக்கி, சிதைத்து, அழித்து, ஒழித்துக்கட்டி விடுவதையே வரலாறாக நாம் கண்டுள்ளோம். ஆம்! வரலாறு ஒரு வழிகாட்டி. 

ஆகவே, சம்பந்தன் ஐயா, தமிழரசுக் கட்சிக்குள் சிக்காமல் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் தலைவனாக எழுச்சி பெற்று, வலம் வந்து தமிழ் மக்களுக்கு பலம் சேர்த்தால், தமிழ் இனம் வளம் பெறும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆடிகள்-34-கடந்தும்-ஆட்டம்-ஆடும்-இனப்பிணக்கும்-சந்தேக-சகதிக்குள்-சிக்குண்ட-கூட்டமைப்பும்/91-201308

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.