Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம்

Featured Replies

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம்

ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்பிபிசி முன்னாள் செய்தியாளர்
 

காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-வது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் முதல் பாகம் இது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெல்லிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே இருப்பதென்னவோ விமானப் பயணத்தில் விரைந்து கடந்துவிடக்கூடிய 700 கி.மீ. தொலைவுதான். ஆனால் இரு நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே நேரடி விமானச்சேவை கிடையாது. 70 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பதற்றத்தின் விளைவு இதற்கு காரணம்.

line break

ஆகஸ்ட் 1947 இல் இந்திய பிரிவினை

• நவீன காலத்தின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்று; போர், பஞ்சம் அல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே பெரிய மக்கள் இடப்பெயர்வு.

• இந்தியா, பாகிஸ்தான் என புதிதாக இரண்டு சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன.

• ஏறக்குறைய 12 மில்லியன் மக்கள் அகதிகள் ஆனார்கள்.

• இரு தரப்பிலும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர்.

line break

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் வெளிபடும் ஒரு தளம் கிரிக்கெட். இரு நாடுகளும் சமீபத்தில் சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டியில் மோதினாலும், போட்டி நடந்த இடம் லண்டன்.

இரு நாடுகளும் இணைந்து தங்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. இரு நாடுகளின் பண்பாடும், வரலாறும் பொதுவானதாக இருந்தாலும், எதிர்த் தரப்பினராகக்கூட இல்லை, எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றன.

விடுதலைபெற்றதில் இருந்து இரு நாடுகளும் மூன்றுமுறை போரிட்டுள்ளன. 1999-ல் இரு நாட்டு ராணுவங்களும் மோதியபோது, முறைப்படியான போர் அறிவிப்பு செய்யப்படவில்லை என்பதால் சிலர் நான்குமுறை போர் நடந்ததாக சொல்வதுண்டு.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதெற்கு ஆசிய மண்ணில் இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகின்றன.

உலகில் நீண்டகாலமாக நிலவும் புவிசார் அரசியல் பிளவுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையில் நிலவும் இறுக்கமும் ஒன்று. இந்த இறுக்கமே இரு நாடுகளையும் தங்களுக்கென அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தூண்டின. இந்த மோதல், பிராந்திய சர்ச்சை என்ற வரையறையைத் தாண்டி பெரிய ஆபத்துகளை உள்ளடக்கியது.

பிரிவினையின் தாக்கம்:

தனது மிகப்பெரிய குடியேற்ற நாடான இந்தியா மீதான ஆளுகையை 15 ஆகஸ்ட், 1947 அன்று கைவிட்ட பிரிட்டன், பலமாத இழுபறிக்குப் பிறகு நாட்டை இரண்டாகப் பிரிக்க ஒப்புக்கொண்டது. இந்துக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியா, முஸ்லிம்களுக்குப் பாதகமாக இருக்கும் என்ற கவலையை எதிர்கொள்ளும் விதமாக, முதலில் முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

பஞ்சாப், வங்காளம் ஆகிய இருபெரும் மாகாணங்களின் பிரிவினையும் இதில் உள்ளடங்கியது. புதிய சர்வதேச எல்லை எங்கே அமையும் என்ற விவரம் விடுதலைக்குப் பிறகு இரண்டு நாள் கழித்தே வெளியிடப்பட்டது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜவகர்லால் நேரு (இடது), இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் (மத்தியில்) மற்றும் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா (வலது) ஆகியோர் பிரிவினை குறித்து 1947-இல் விவாதிக்கின்றனர்.

நவீன காலத்தின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்றும், போர், பஞ்சம் அல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே பெரிய மக்கள் இடப் பெயர்வும் இதனால் நடந்தது. மிகச்சரியான எண்ணிக்கையை யாராலும் மதிப்பிடமுடியவில்லை. ஆனால் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு இடம் பெயர விரும்பிய 12 மில்லியன் மக்கள் அகதிகளானது, சரித்திரத்தின் சோகம்.

இரு தரப்பிலும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் எதிர் மதத்தைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டனர். குறிப்பாக பஞ்சாபில், பல தலைமுறைகளாக சேர்ந்து வாழ்ந்துவந்த, ஒரே மொழியைப் பேசிய இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே பிளவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் சீக்கியர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர்ந்தனர்.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வு

போர்க்களத்தையும், மோதும் ராணுவங்களையும் கொண்டிருந்த உள்நாட்டுப் போரல்ல இது என்றாலும், நடைபெற்ற வன்முறைகள் தற்செயலானவையல்ல. பல்வேறு தரப்பின் ஆயுதக் குழுக்களும், கும்பல்களும் எதிர்தரப்புக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டன. சக மனிதர்களை, விரோதிகளாக்கியது பிரிவினை.

காயங்கள் புரையோடி வடுக்களாகின; ஆனால் யாரும் பொறுப்பாக்கப்படவில்லை, எந்தவித சமாதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நடந்த சம்பவங்கள் பற்றிய விவரங்களும், பதிவுகளும் மெளனத்தில் புதைந்து, சொல்லப்படாத கதைகளாக அமிழ்ந்துபோயின.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption7 ஆகஸ்டு 1947 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் செல்லும் ரயிலில் ஏறும் இஸ்லாமியப் பெண்கள்.

நடந்த பயங்கரங்களைப் பதிவு செய்யும் முயற்சிகளில் இலக்கியமும் சினிமாவும் வழிகண்டன. பிரிவினையின் அரசியல் குறித்தே வரலாற்று ஆசிரியர்களின் கவனம் குவிந்தது. இந்த மாபெரும் பிளவின் அனுபவங்கள், மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களை நோக்கி அவர்களின் கவனம் திரும்ப நீண்டகாலம் பிடித்தது.

சம்பவங்களின் நேரடி சாட்சிகள் பெரும்பாலோர் இறந்துவிட்ட நிலையில் வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சிகள், கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியிருக்கிறது. இறந்தவர்களுக்கு பெரியளவிலான நினைவுச் சின்னங்களும் இல்லை. பிரிவினைக்கான நினைவுச் சின்னம் ஒன்று இந்தியப் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் 2016-ல்தான் அமைக்கப்பட்டது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமார்ச் 1947-இல் அமிர்தசரஸ் நகரைப் பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பிய இஸ்லாமியர்கள் மற்றும் அந்நகரை இந்தியாவிலேயே தக்க வைத்துக்கொள்ள விரும்பிய இந்துக்கள் மற்றும் சீக்கியர் ஆகியோரிடையே கடும் மோதல்கள் நடந்தன

பிரிவினை, இந்தியா பாகிஸ்தானிடையே நச்சைக் கலந்தது; தெற்காசிய புவிஅரசியல் ஒட்டுமொத்தமாக சிதைந்துப்போனது. பிரிவினையின்போது, மொத்தம் 2000கி.மீ பரப்பளவைக் கொண்ட இரண்டு பகுதிகளாக இருந்த பாகிஸ்தான், 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானதும் எல்லைகள் சுருங்கிப்போயின. 1947இல் சுதந்திரத்தின்போது, பிரிவினையால் இரண்டாக துண்டாடப்பட்டு, இந்தியா பாகிஸ்தான் என பிரிந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மீண்டும் இரண்டானது.

சுதந்திரத்திற்கான ஏற்பாட்டின்போது, இமாலயத்தின் அடிவாரத்தில் இருந்த காஷ்மீரின் அரசர் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தார். இந்து அரசர் இந்தியாவுடன் இணைய முடிவை எடுக்க, ஆனால் மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருந்ததால், சுதந்திரமடைந்த சில மாதங்களில் காஷ்மீர் மீதான உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை எழுந்தது. சிக்கலான மோதல்கள் தீர்க்கப்படாத நிலையில், காஷ்மீர் பிரச்சனையே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளிடையே பிணக்குக்கு பிரதான காரணமானது. இதர பிரச்சனைகள் பின்தங்கிப்போயின.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரிவினைக்கு முன்பு கொல்கத்தாவில் (கல்கத்தா) 1946-ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்

காஷ்மீர்: இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவது ஏன்?

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும் நிலையில், பலூசிஸ்தான் போன்ற பகுதிகளில் பிரிவினைவாதக் குழுக்களுடன் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

இருநாட்டு அரசியல் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, உறவுகளில் திருப்புமுனை தோன்றும் என்ற நம்பிக்கை எழும். ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு என்பது கானல்நீராகவே இருக்கின்றது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரு நாடுகளும் முழுமையாக சொந்தம் கொண்டாடினாலும், பகுதி அளவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையை வாழும் காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு போர்களில் ஈடுபட்டுள்ளன.

அண்டை நாடான பாகிஸ்தானைவிட, தொலைதூரத்தில் உள்ள நைஜீரியா, பெல்ஜியம், தென்னாஃபிரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இணக்கமான உறவு உள்ளது. இந்தியாவின் பிரம்மாண்டமான ஹிந்தி-மொழி திரைப்படத் துறை, பாலிவுட் என்ற பெயரில் பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கிறது. பாகிஸ்தானின் தொலைக்காட்சித் தொடர்கள் இந்தியாவில் விருப்பத்துடன் பார்க்கப்படுகின்றன. எதுஎப்படியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார இணைப்புகள் பலவீனமாக உள்ளன; உறவுகள் பாதிப்படைந்துள்ளன.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் அட்டாரி-வாகா எல்லைப் பகுதி, இருபகுதிகளிலும் பலரை ஈர்ப்பதாக உள்ளது. நீண்ட எல்லைப்பகுதியை கொண்டுள்ள இரு நாடுகளும் சில எல்லை கடப்பு வழிகளையே கொண்டுள்ளது.

பாகிஸ்தானில், ராணுவமும், உளவுப் பிரிவும் அதிக அதிகாரமும் சக்தியும் பெற்று விளங்குவதும், அங்கு ராணுவ ஆட்சி பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்துள்ளதும் கவனத்தில் கொள்ளக்கூடியது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லையில் தினசரி நிகழும் இரு நாட்டுக் கொடிகளும் இறக்கப்படும் நிகழ்வு இரு தரப்பிலிருந்தும் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது

தனது மிகப்பெரிய அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து ராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தானில் பலர் கருதுவதால், அங்கு ஆயுதப்படைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, ஜனநாயகப் பாதையில் செல்வதில் சுணக்க நிலை காணப்படுகிறது.

பாகிஸ்தானின் 200 மில்லியன் மக்கள்த்தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். இந்தியாவின் 1,300 மில்லியன் குடிமக்களில் ஏழில் ஒரு பங்கு இஸ்லாம் மதத்தினர்.

2050களில் இந்தோனேஷியாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தியா முன்னேறிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்திலும், பிற துறைகளிலும் இஸ்லாம் சமூகத்தினரின் பங்கு குறைவாகவே இருக்கிறது.

பிரிவினை நிகழ்ந்த 70 ஆண்டுகள் குறித்து பிபிசியின் ஆய்வுபடத்தின் காப்புரிமைREUTERS Image captionதங்கள் நாட்டின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் தங்கள் நாட்டைப் பற்றி பெருமிதம் கொண்டுள்ளனர் என்பதோடு, தேசபக்தி என்பது இரு நாட்டு மக்களிடையே சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது அது ஆக்ரோஷமாக வெளிப்படும். ஆனால் இரு நாடுகளுமே 70 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த துயரத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை.

அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது யார்? பாகிஸ்தான் வலுவாக வெற்றியடைந்தது.

இந்தியாவில் பலர் இந்தத் தோல்வியை இயல்பானதாக எடுத்துக்கொண்டாலும், சமூக ஊடகங்களும், சில இந்திய செய்தி ஊடகங்களும் சீற்றத்தை வெளிப்படுத்தின. தோல்வியானது பழைய துயரத்தின் எச்சங்களை நினைவூட்டி, மிகவும் வேதனையான முடிவைத் தருவதாக பலர் கருதுகின்றனர்.

('எ மிஷன் இன் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்)

http://www.bbc.com/tamil/india-40780347

  • தொடங்கியவர்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: Image captionபாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி

காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் இரண்டாம் பாகம் இது.

சுதந்திரம் என்பது மகிழ்வான நினைவாக இருந்தாலும், சந்தோசமாக கொண்டாடப்பட்டாலும், பிரிவினை என்பது நினைத்த மாத்திரத்திலேயே வருத்தத்தை கொடுப்பது. இது 70 வருடங்கள் பழமையான கதை என்றாலும் பிரிவினை இன்றும் வேதனையை ஏற்படுத்துவது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவு வரலாற்றின் சில முக்கிய துளிகள் இவை.

  • 1885 டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் இருபது ஆண்டுகளில் முதன்முறையாக விடுதலை வேண்டும் என்று கோரிக்கையைவிட, பிரிட்டன் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது தொடர்பாக வலுவாக முன்வைக்கப்பட்டது.
  • 1905இல் வங்கப்பிரிவினைக்கு பிறகு, அரசியல்ரீதியிலான மாற்றங்கள் தேவை என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலுவாக முன்வைத்தது. அத்துடன் முழுமையான சுதந்திரம் தேவை என்ற குரலும் ஓங்கி ஒலித்தது.
  • 1906இல், 'இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக' முஸ்லிம் லீக் உருவானது.
  • இந்து - முஸ்லிம் மக்களிடையேயான பதற்றங்களை தீர்ப்பதற்காக 1938 பிப்ரவரியில் மகாத்மா காந்திக்கும், முகம்மது அலி ஜின்னாவுக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை ஜூலையில் தோல்வியடைந்தது. 'முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை' விசாரிக்க குழு ஒன்றை முஸ்லிம் லீக் அமைத்தது.
  • பாகிஸ்தான் உருவாவதற்கான பிள்ளையார் சுழி 1940 -ஆம் ஆண்டு மார்ச் 23இல் போடப்பட்டது. அன்றைய தினம்தான் லாகூரில் முஸ்லிம் லீக், 'பாகிஸ்தான் தீர்மானம்' என்பதை முன்மொழிந்தது. இதன்படி, முழுமையான சுதந்திரமான நாடு முஸ்லிம்களுக்கு தேவை என்று வெளிப்படையாக கோரப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: Image captionபிரிட்டன் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது என்பது காங்கிரஸின் முக்கிய கோரிக்கையாக இருந்தது
  • பிரிட்டன் வைஸ்ராய் லினிலிதோகோ 1940இல், 'ஆகஸ்ட் முன்மொழிவு' என்ற திட்டத்தை முன்வைத்தார். அதில், வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய போர் பிரதிநிதி ஆலோசனைக் குழுவிற்கு இந்திய பிரதிநிதிகளை நியமிப்பது உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. காங்கிரசும், முஸ்லிம் லீகும் 'ஆகஸ்ட் பிரேரணையை' ஒட்டு மொத்தமாக நிராகரித்தன. அக்டோபர் 17 இல் காங்கிரஸ், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.
  • பிரிட்டன் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், பிரச்சனைகளை தீர்க்க முயன்றார். 1942 -ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதியன்று, இங்கிலாந்தின் பிரபல சோசலிச தலைவரான சர் ஸ்டீஃபர்ட் கிரிப்ஸ், அரசியல் சீர்திருத்த யோசனைகளுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார் என்று சர்ச்சில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 

  • 1942, மார்ச் 22-23இல் டெல்லி வந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மார்ச் 30ஆம் தேதியன்று கிரிப்ஸ் தனது திட்டத்தை வெளியிட்டார்.
  • கிரிப்ஸ் குழுவின் திட்டத்தை இந்தியத் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.
  • 1942இல் மகாத்மா காந்தி தலைமையில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டது.
  • 1944, செப்டம்பர் மாதத்தில் மகாத்மா காந்தியும், ஜின்னாவும் பாகிஸ்தான் கோரிக்கை பற்றி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இருவரிடையேயும் இதுதொடர்பாக ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவின.
  • பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை:
  • 1946இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த பிரிட்டனால் அனுப்பப்பட்ட அமைச்சர்களின் தூதுக்குழுவில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டன.
  • கலகங்கள் வன்முறையாக உருவெடுத்து 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 இருந்து 18க்கு இடைப்பட்ட காலத்திற்குள் கலவரப் படுகொலைகளாக மாறின. 'கொல்கத்தா பெருங்கொலைகள்' (Great Calcutta Killings) என்று சரித்திரத்தில் பதிந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட நான்காயிரம் மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த கலவரங்கள் கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்தில் இருந்து பிஹார் வரை பரவியது.
  • ஜனவரி 29இல் முஸ்லிம் லீக் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையை புறக்கணிப்பதாக அறிவித்தது, பிப்ரவரி மாதத்தில் பஞ்சாபிலும் வகுப்புவாத வன்முறைகள் தொடங்கின.
  • 1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக பிரிட்டன் பிரதமமந்திரி க்ளேமெண்ட் எட்லி அறிவித்தார். லார்ட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயாக பதவியில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: Image captionஇந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது
  • மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராயாகவும், இந்திய கவர்னர் ஜெனரலாகவும் பதவியேற்றார்.
  • ஏப்ரல் 15 ஆம் தேதியன்று, பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும், வன்முறையை கைவிடவேண்டும் என்று காந்தியும் ஜின்னாவும் கோரிக்கை வைத்தனர்.
  • ஜூன் இரண்டாம் தேதியன்று, பிரிவினை திட்டத்தை மவுண்ட்பேட்டன், இந்தியத் தலைவர்களிடம் முன்வைத்தார். அடுத்த நாள், நேரு, ஜின்னா மற்றும் சீக்கிய சமுதாய பிரதிநிதி பல்தேவ் சிங் ஆகியோர் ஆல் இந்திய ரேடியோவில் பிரிவினைத் திட்டம் பற்றி நாட்டு மக்களிடம் எடுத்துரைத்தனர்.
  • இறுதியில் பாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை Image captionபாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது
  • 1947, ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகார பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.
  • ஏறக்குறைய ஒன்றேகால் கோடி மக்கள், நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துக்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 5 முதல் 10 லட்சம் மக்கள் வன்முறைகளில் இறந்திருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரித்திரத்தின் பக்கங்களில் இதுபோன்ற கொடூரமான, சோகமான நிகழ்வுகள் வேறு எதுவும் இருக்கமுடியாது.
  • பிரிவினை, ஒரு புதிய நாட்டை மட்டும் உருவாக்கவில்லை, வன்முறை எழுப்பிய கொடூர நினைவுகள், கோபத்தையும் கையறுநிலையையும் ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையில் எழுப்பப்பட்ட எல்லைக்கோடு, மக்களிடையே ஆறாத் துயரத்தின் நினைவலைகளை எழுப்பும் ஒரு அதிர்வலையாகவே இருக்கிறது. பிரிவினையின் மன வேதனைகளுக்கு மருந்திடுவது என்பது சாத்தியமானதில்லை.

 

http://www.bbc.com/tamil/india-40810651

  • தொடங்கியவர்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்

 
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் மூன்றாம் பாகம் இது.

சரித்திரம், உலகம் மற்றும் நாட்டுநடப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை தருபவை பத்திரிகைகள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை, அதன் விளைவுகளை, தாக்கத்தை தெரிந்துக்கொள்ள அன்றைய பத்திரிக்கைகள் இன்றைக்கும் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.

அக்காலக்கட்டத்தில் டெல்லியில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ்களான 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' மற்றும் 'டான்' ஆகியவற்றில் வெளியான செய்திகள் மூலமாக பிரிவினையை பற்றிய பிபிசியின் மூன்றாம் பாகத்தில் ஆராய்வோம்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், பிர்லா குழுமத்தின் பத்திரிகை. மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியிடன் சுமூகமான உறவு கொண்டிருந்தது. டான் பத்திரிகையின் நிறுவனர் காயத்-இ-ஆஜம் மொஹம்மத் அலி ஜின்னா, அதன் ஆசிரியர் அல்தாஃப் ஹுசைன் ஆவர்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY Image captionஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி
  • சுதந்திரத்தின்போது, 22 சுதேசி அரசுகள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின. இது, பிரிட்டன் அரசின் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் அளித்த ஒரு மதிய உணவில் முடிவானது.
  • அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சுதேசி அரசுகள் இந்திய ஒன்றியத்துடன் ஒன்றுவதே நல்லது என்று ஆலோசனை நல்கியிருந்தார் மவுண்ட்பேட்டன். அந்த அறிவுறுத்தலில் எச்சரிக்கைத் தொனியும் கலந்திருந்தது. பரோடா, பிகானீர், பட்டியாலா, குவாலியர், ஜோத்புர், நவான்கர் போன்ற சுதேசி அரசுகள் இவற்றில் முக்கியமானவை.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY
  • இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது, ஆனால் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்றைக்குமே விடுதலை கிடைக்காது என்று எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்ட பாத்ஷாஹ் கான், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களின் முன்னிலையில் வெளிப்படையாக முழங்கினார். எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் மேல் பாகிஸ்தான் திணிக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தார்கள்.
  • முதன்முதலாக காஷ்மீர் பயணமாக ராவல்பிண்டியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற மகாத்மா காந்தியை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். காந்திக்கு ஜெ, அப்துல்லாவுக்கு ஜெ என்ற முழக்கங்களையும் மக்கள் எழுப்பினார்கள். காந்தியை சந்திக்க, காஷ்மீர் பிரதமமந்திரி ராம்சந்த்ர காக் தன்னுடைய இரண்டு பிரதிநிதிகளை அனுப்பினார். காந்தியின் காரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் கொடி பொருத்தப்பட்டிருந்தது.
  • ஜூலை 31 அன்று லாகூரில் ஃப்ரண்டியர் மெயிலில் குண்டு வைத்து தகர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்த்து. அந்த ரயிலில் மகாத்மா காந்தி பயணம் செய்துக் கொண்டிருந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY
  • இந்திய ராணுவத்தின் முதல் தலைமையகமாக செங்கோட்டை இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
  • ரஷ்யாவிற்கான இந்திய தூதராக விஜயலஷ்மி பண்டிட் நியமிக்கப்பட்டார். அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாஸ்கோ செய்தது. அது ரஷ்ய தரப்பில் இருந்து இந்தியாவிற்கான நேர்மறையான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY Image captionடான், 2 ஆகஸ்டு 1947 அன்று வெளியிட்ட செய்தி
  • பதான்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை ஆப்கானிஸ்தான் முன்வைத்தது. 'நமது ஆப்கான் சகோதரர்களின் நலனுக்காக பண்டிட் நேரு, மகாத்மா காந்தி ஜின்னா ஆகியோரை சமாதானப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று ஆப்கானிஸ்தான் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
  • இந்திய அரசு, ஒரு அரசிதழ் அறிவிப்பின் மூலம் ஆகஸ்ட் 15 ,16 என இரு நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்த்து.
  • அனைத்திந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் லியாகத் அலி கான், கடந்த துன்பமான நினைவுகளை புதைத்துவிடவேண்டும் என்று முறையிட்டார். 'இரு நாட்டு அரசுகளும், அரசியல் தலைவர்களும் நல்ல அண்டைநாடுகளாக, நம்பிக்கை கொண்ட உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.
  • பிரிட்டன் ராணுவத்தின் முதல் குழு ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று இந்தியாவில் இருந்து வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY
  • பஞ்சாப் எல்லை ஆணையத்தின் குழு, லாகூரில் இருந்து சிம்லா சென்றடைந்தது. சிம்லாவில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சர் சிரில் ரெட்கிளிஃபும் இடம் பெற்றிருந்தார்.
  • ஹோஷியார்பூர் இனவாத வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். மூன்று நாட்களாக தொடர்ந்த பதற்றம், நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. அம்ரித்சர், கல்கத்தா, லாகூரில் இருந்தும் இதே போன்ற செய்திகள் வெளியாகின.
  • நேருவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட கிருஷ்ண மேனன், பிரிட்டனின் உயர்நிலை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

http://www.bbc.com/tamil/india-40816611

  • தொடங்கியவர்

'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?

 
'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY

தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் நான்காம் பாகம் இது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஏறக்குறைய நாளிதழ்கள் அனைத்திலும் பாகப்பிரிவினை பற்றிய செய்திகள் வெளியாகின.

1947 ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள், லாகூரில் இருந்து வெளியாகும் 'ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ்' சிந்துப் பகுதியில் வறட்சி என்பதை பெரிய செய்தியாக இருந்தது.

டெல்லியில் இருந்து வெளியாகும் 'த ஹிந்துஸ்தான் டைம்ஸ் வீக்லி' நாளிதழில், ராயல் இண்டியன் விமானப்படை, மத அடிப்படையில் பிரிக்கப்படுவதை கட்டமிட்டுச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

டெல்லியில் இருந்து வெளியாகும் 'த ஹிந்துஸ்தான் டைம்ஸ் வீக்லி' நாளிதழ், லாகூரில் இருந்து வெளியாகும் 'ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ்' ஆகியவை 1947 ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று வெளியிட்ட செய்திகளை பார்ப்போம்.மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு இரண்டாக பிரிக்கப்படும் நிலையில், மற்றொரு புறம் பாகப் பிரிவினைகளும், சொத்துகளையும் பிரிக்கப்படவேண்டியிருந்தது.

'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

  • ராயல் இண்டியன் ஏர்ஃபோர்ஸ் பிரிக்கப்படுகிறது. போர்ப்படை பிரிவுகளில் பத்தில் எட்டு இந்தியாவுக்கும், இரண்டு பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்படுகிறது.  வான்படையில் பணிபுரியும் இந்து மற்றும் இஸ்லாமிய வீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.
  • காங்கிரசால் மட்டுமே நாட்டை மீண்டும் இணைக்கமுடியும் என்று  ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் காங்கிரஸ் பொதுச் செயலர் ஷங்கர் ராவ் தேவ் கூறியிருந்தார்.
  • டாக்டர் ஷ்யாமாபிரசாத் முகர்ஜி, இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருக்க ஒப்புக்கொண்டார்.  இந்த முடிவை, வினாயக் தாமோதர் சாவர்கருடன் கலந்தாலோசித்த பிறகே அவர் ஒப்புக்கொண்டார்.
  • இந்திய அரசின் நிதி அமைச்சராக ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் பதவிவகிப்பார்.
'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY
  • ஆகஸ்ட் இரண்டாம் தேதி மதியம், நேரு, மவுண்ட் பேட்டனை சந்தித்தார்.  ஜின்னா, லியாகத் அலி செளத்ரியும் மவுண்ட் பேட்டனை சந்தித்தனர்.
  • மத்திய அமைச்சரவையில் மூன்று ஹரிஜன் அமைச்சர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
  • இந்தியாவுக்கு அதன் உரிமைகள் கொடுக்கப்படுவது பற்றி லண்டனில் ஆலோசனை நடத்தப்பட்டது.  போரினால் பிரிட்டன் சீர்குலைந்துள்ளது. இதுபோன்ற சமயத்தில் தனது பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளிவருவதே அதற்கு முக்கியம் என்று தெரிவித்த ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக பேரசிரியர் ஆர்.எஃப் ஹைரோட், இந்தியாவிற்கு அதன் பணத்தை திரும்பக்கொடுப்பது பற்றி இப்போது நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று தெரிவித்தார்.
'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY

த இஸ்டர்ன் டைம்ஸ்

  • பிரிவினைக்கு பிறகு, புதுதில்லியில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருகை தொடங்கியது.
  • பிரிட்டன் அரசின் அனுமதிக்கு பிறகு ஹைதராபாத் நிஜாமின் ஆணையின் பேரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.  அதில், பிரிட்டன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹைதராபாத் பிராந்தியத்தில் இருக்கும் ரயில்வே நிலங்கள், இனிமேல் நிஜாமின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
  • ஹைதராபாத் இந்தியாவுடன் இணையாது.  வானொலி ஒலிபரப்பில் பேசிய நிஜாம், சுதந்திரமடைந்த பிறகும், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் ஹைதராபாத் உறவுடன் இருக்க விரும்புவதாக அறிவித்தார்.
'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY
  • சிந்து பகுதியில் வறட்சி.  சிந்து பாலைவனப்பகுதியில் மழை இல்லாமல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இரண்டு லட்சம் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர்.
  • அமிர்தசரஸில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், 80 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானுக்கு நிதி அளிக்குமாறு அனைத்து முஸ்லிம்களிடமும் செய்தித்தாளின் ஆசிரியரின் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?படத்தின் காப்புரிமைBRITISH LIBRARY
  •  

http://www.bbc.com/tamil/india-40837145

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்குக் கிடைத்த கிராமம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதால் எழுந்த கொந்தளிப்பு

p05bg2dz.jpg
 
சுதந்திர இந்தியாவின் எல்லைக் கோடுகளை வகுத்த சிரில் ராட்கிளிஃப்

பிரிவினை எப்படி நடைபெறுவது? அதாவது எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும்? எவை புதிய நாட்டில் இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு. வீடோ, நாடோ பாகப்பிரிவினை, சொத்துப் பிரிவினை என்பது சற்று சிக்கலானது தானே?

ஒன்றாய் இருந்ததை இரண்டாய் பிரித்து எல்லைக் கோடுகளை வரையறுக்கும் பொறுப்பு சிரில் ராட்க்ளிஃப் என்ற பிரிட்டிஷ் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லைகளை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிரில் ராட்க்ளிஃப், வரைபடத்தில் பஞ்சாபின் எல்லைகளை நிர்ணயித்துவிட்டார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு வைஸ்ராய் மவுண்ட்பேட்டன், அவரை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

बाउंडरी कमीशन के सदस्य Image captionஎல்லை ஆணைக்குழு உறுப்பினர்கள்

உணவு மேசையில் இருவருக்கும் இடையில் பஞ்சாபின் எல்லை வரையறை குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. அது, பஞ்சாபின் பல இடங்களின் விதியை மாற்றியது.

உணவு மேசையில் மாறிய இடங்களில் ஃபிரோஜ்புரும் ஒன்று.

சிரில் ராட்க்ளிஃபின் அந்தரங்கச் செயலாளர் கிறிஸ்டோஃபர் போமெளண்ட் 1992இல் 'த டெலிகிராஃப்' பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் காணக்கிடைத்தது. அதில், ராட்க்ளிஃப் மற்றும் மவுண்ட்பேட்டனுக்கு இடையிலான இந்த விவாதம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

भारत पाक बँटवारा

கிறிஸ்டோஃபர் போமெளண்ட்டின் கருத்துப்படி, ராட்க்ளிஃப் உருவாக்கிய வரைபடத்தில் இருந்த ஃபிரோஜ்புர் பாகிஸ்தானில் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், மவுண்ட்பேட்டனின் அறிவுறுத்தலின்படி, ஃபிரோஜ்புர் இந்தியாவிற்குள் வருமாறு எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன..

தனது தந்தை மெளண்ட் பேட்டனை வெறுத்தார் என்று கிறிஸ்டோஃபர் போமெளண்ட்டின் மகன் ராபர்ட் போமெளண்ட் பிபிசியிடம் தெரிவித்தார். பஞ்சாபில் நடைபெற்ற படுகொலைகளுக்கு மவுண்ட்பேட்டனே பொறுப்பேற்கவேண்டும் என்று கிறிஸ்டோஃபர் கருதியதாக ராபர்ட் கூறுகிறார்.

रोबर्ट बोमौंट Image captionராபர்ட் போமெளண்ட்

பிபிசியிடம் பேசிய ராபர்ட் போமெளண்ட், "பிரிவினையின்போது, எல்லைகளை மாற்றச் சொன்னதில் என் தந்தைக்கு வருத்தம் ஏற்பட்டது. ஏனெனில், எல்லைகள் பற்றிய முடிவு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது. அது பற்றிய ஆவணங்கள் அனைத்தும் பஞ்சாபின் இடைக்கால ஆளுநர் சர் ஜேன்கின்ஸிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லை எங்கே உருவாகப்போகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது".

"மவுண்ட்பேட்டன், நேருவின் விருப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் அடிபணிந்தார். இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிவினையின் தாக்கம் மோசமானதாக இருக்கும் என்று என் தந்தை உணர்ந்திருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் எல்லைகளை மாற்றியதும் நிலைமை படுமோசமானது" என்று தெரிவித்தார்.

இந்த மாறுதல், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பணயம் வைத்தது. இந்த சோகத்தை கண்ணால் கண்ட இருவர் தங்கள் அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்துக் கொண்டனர்.

मीना बीबी Image captionமீனா பீபீ

நூறு வயதாகும் மீனா பீபீ, பிரிவினைக்கு முன் ஃபிரோஜ்புரில் வசித்தவர். தனது ஊரை விட்டு, எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்பது பிரிவினைக்கு முதல் நாள்தான் அவருக்கு தெரியவந்தது.

தற்போது பாகிஸ்தானின் புரேவாலா கிராமத்தில் வசிக்கும் மீனா பீபீ, பிரிவினையின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் தனது குடும்பத்தின் 19 பேரை இழந்திருக்கிறார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்முன் நடந்த அந்த கொடூரச் சம்பவங்களை இன்றும் அவரால் மறக்கமுடியவில்லை.

கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எல்லை தாண்டி, புதிதாக உருவான பாகிஸ்தானில் காலடி எடுத்துவைத்தார் மீனா பீபீ.

पाकिस्तान के बुरेवाला गांव में रहती हैं मीना बीबी

'போட்டது போட்டபடியே விட்டுவிட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்தோம். என் பெற்றோர்களை குசூரில் சந்தித்தோம். என் தந்தையிடம் அணிவதற்கு மேலாடைகூட இல்லை. என்னிடம் இருந்த குர்த்தாவில் ஒன்றை அவருக்கு கொடுத்தேன். அதிர்ஷ்டவசமாக என்னிடம் ஒரு பெட்டி நிறைய துணி இருந்தது. தேவைப்பட்டவர்களுக்கு நான் கொடுத்தேன்'.

புரேவாலாவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்திய கிராமம் ஃபிரோஜ்புரில் 84 ஆண்டுகளாக வசிக்கிறார் ராம்பால் ஷோரி.

13-14 வயதில் இருந்து இங்கு வசிக்கும் ராம்பால், ஹிந்துவாக இருப்பதால் அவர் தனது கிராமத்தையோ, தாயகத்தையோ விட்டு வெளியேறவில்லை. ஆனால் அறிந்தவர்களையும், தெரிந்தவர்களையும் இழந்த வலி இன்றும் அவரை வாட்டுகிறது.

84 सालों से फिरोज़पुर में बसे राम पाल शोरी Image caption84 ஆண்டுகளாக ஃபிரோஜ்புரில் வசிக்கும் ராம்பால் ஷோரி

தனது நண்பர்களில் பலரின் நிலை என்ன என்பது தனக்கு இதுவரை தெரியவில்லை என்று அவர் வருத்தப்படுகிறார்.

ஷோரியின் இஸ்லாமிய நண்பர் அப்துல் மஜீத். ''தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு, இந்துக்களைப் போன்று உடையணிந்து இங்கிருந்து கிளம்பினார். தலையை மொட்டையடித்துக் கொண்டார் என்றும் சிலர் கூறினார்கள்.''

फिरोज़पुर रेलवे स्टेशन Image captionஃபிரோஜ்புர் ரயில் நிலையம்

மீனா பீபீயைப் போன்று ராம்பால் ஷோரியும் பிரிவினையின் கோரத்தை, அது கொடுத்த துன்பத்தை மறக்கமுடியாமல் தவிக்கிறார். 70 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைப் பருவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

"லாகூரில் இருந்து வந்த ரயிலில் காயமடைந்தவர்கள் நிரம்பியிருப்பார்கள். சிலருடைய கைகள் வெட்டப்பட்டிருக்கும், சிலரின் தலையில் காயம்பட்டிருக்கும், மோசமான நிலையில் மக்கள் வந்து குவிந்ததை பார்த்திருக்கிறேன். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றும்."

சிரில் ரட்க்ளிஃபும், மவுண்ட்பேட்டனும் எல்லையில் ஏற்படுத்திய ஒரு சிறிய மாற்றம், மீனா பீபீ, ராம்பால் ஷோரி என இருவரின் வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை, தலைவிதியை மாற்றியது. அதன் வலி எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் பகிரப்படுகிறது, உணரப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india-40838734

  • தொடங்கியவர்

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்

 

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் தற்போது நெருங்குகிறது.

அருங்காட்சியக நிறுவகர்களில் ஒருவர் மல்லிகா அஹ்லுவாலியாபடத்தின் காப்புரிமைSHIB SHANKAR CHATTERJEE/BBC Image captionஅருங்காட்சியக நிறுவகர்களில் ஒருவர் மல்லிகா அஹ்லுவாலியா

இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் ஆறாம் பாகம் இது.

அமிர்தசரஸின் அழகான டவுன் ஹால், கடந்துபோன நினைவுகளின் சாட்சியாக திகழ்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் அடிமைப்பட்டு கிடந்த நினைவுகளின் சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறது.

70 ஆண்டுகளுக்கு முன்பு காலணி நாடான இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்த ஆங்கிலேயர்கள், பாகிஸ்தான் என்ற மற்றொரு தேசத்தையும் உருவாக்கி, பாகப்பிரிவினை செய்தார்கள்.

பாகப்பிரிவினை, வன்முறையைத் தூண்டி ரத்த ஆற்றை ஓடவிட்டது. சகோதரர்களாக ஒரே குடும்பமாக இருந்தவர்கள், எதிரிகளாகி அடித்துக் கொண்டார்கள்.

இந்த டவுன் ஹாலில் அமைந்திருக்கும் 'பிரிவினை அருங்காட்சியகம்' பழைய வடுக்களை கிளறி, புதிய வலியை கொடுக்கிறது.

ஆனால், இதர அருங்காட்சியகங்களில் இருந்து வேறுபடும் இது, பிரிவினையை அண்மையில் இருந்து பார்த்தவர்களின் குரலை, அந்த நினைவுகளை பாதுகாத்து வைத்திருக்கிறது.

'20-25 ஆண்டுகள் வரை கலவரங்களே கனவாக வந்தன'

அமிர்தசரஸின் டவுன் ஹாலில் இருக்கும் பிரிவினை அருங்காட்சியகம்படத்தின் காப்புரிமைSHIB SHANKAR CHATTERJEE/BBC Image captionஅமிர்தசரஸின் டவுன் ஹாலில் இருக்கும் பிரிவினை அருங்காட்சியகம்

பிரபல பாடகர் குல்ஜார் தனது மனப்பதிவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். "அன்று கோகுலாஷ்டமி நாள், பஞ்சாபிகளின் குடியிருப்புகளுக்கு சென்று நாங்கள் அடைக்கலம் புகுந்தோம். அந்த கால நினைவுகள், கண்களில் அப்படியே உறைந்து போய்விட்டன."

"ஏறக்குறைய, 20-25 ஆண்டுகள் தூங்கவிடாமல் துரத்திய அந்த கனவுகள் அலைகழிக்கும். அந்த நாள் நிகழ்ச்சிகள் தொடருமோ என்ற அச்சம் மனதை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது" என்று தெரிவித்தார்.

"எழுத்தினால், மனதின் ரணத்தை வெளியேற்றி மருந்திட்டேன். இல்லாவிட்டால், நான் என்னவாகியிருப்பேன் என்று சொல்லமுடியாது" என்று சொல்லி வருத்தப்படுகிறார் குல்ஜார்.

சுதந்திரம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகே இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதிதான் அறிவிக்கப்பட்டது என்பது சிலருக்கே நினைவில் இருக்கும்.

குல்ஜாரின் குடும்பம் பஞ்சாபின் பஸ்தியில் அடைக்கலம் புகுந்தார்கள்படத்தின் காப்புரிமைPTI Image captionகுல்ஜாரின் குடும்பம் பஞ்சாபின் பஸ்தியில் அடைக்கலம் புகுந்தார்கள்

பெண்களின் நினைவாக உருவாக்கப்பட்ட கிணறு

எல்லைகள் வெளியிடப்பட்ட பிறகு இடம்பெயர நினைத்த மக்களில் லட்சகணக்கானோர் வீடுகளை, உயிரை, வாழ்க்கையை, வாழ்வாதாரங்களை இழந்தார்கள்.

அருங்காட்சியகத்தின் நிறுவனர்களில் ஒருவரான மல்லிகா அஹ்லுவாலியா சொல்கிறார், 'இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என அனைத்துத் தரப்பினரும் துன்பங்களை அனுபவித்தனர்'.

இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர்

 

 

'முத்தரப்பினரும் பாதிக்கப்பட்டதை காட்ட முயற்சித்திருக்கிறோம். துன்பத்தை மட்டுமல்லாமல், பிரிவினையின் நேர்மறை கோணத்தையும் காட்ட விரும்புகிறோம்.'

'மற்றவர்களுக்கு உதவி செய்தவர்களையும் முன்னிலைப்படுத்தும் உதாரணங்களையும் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளையும், சம்பவங்களையும் மக்களுக்கு சொல்வது அவசியம்.'

அருங்காட்சியகத்தின் ஒரு பெரிய அறையின் நடுவில் ஒரு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டபோது, சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக, கிணறுகளில் விழுந்து உயிர் மாய்த்துக் கொண்ட பெண்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட கிணறு இது.

பிரிவினை அருங்காட்சியகத்தில் இருக்கும் கிணறுபடத்தின் காப்புரிமைSHIB SHANKAR CHATTERJEE/BBC Image captionபிரிவினை அருங்காட்சியகத்தில் இருக்கும் கிணறு

'மனதை மகிழ்விக்கும் கதைகளும் உண்டு'

"பிரிவினை பற்றிய எண்ணிலடங்கா துன்ப நினைவுகள் நம்மிடம் இருந்தாலும், மனதை நெகிழச்செய்யும், மகிழச்செய்யும் கதைகளும் இருக்கின்றன".

"பிரிந்த காதலர்கள் எப்படி சேர்ந்தனர் என்ற கதையும் உண்டு… ஆனால், அந்தக் கதையை கேட்க நேரடியாக அருங்காட்சியகத்திற்கு வாருங்கள்" என்கிறார் மல்லிகா.

ஒரு அறையின் மூலையில், மகனுக்காக தந்தை எழுதிய கடிதம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. "நிலைமை மோசமாகிவிட்டது, இங்கிருந்து வெளியேற முடியுமா என்று தெரியவில்லை. உன்னை மீண்டும் பார்ப்பேனா என்பதும் தெரியவில்லை" என்று கடிதம் மூலம் இறுதி எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தந்தை.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய கடிதங்கள்படத்தின் காப்புரிமைSHIB SHANKAR CHATTERJEE/BBC Image captionஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய கடிதங்கள்

பிரிவினையின் சாட்சியாக இருந்த தலைமுறையினர் அருகிவிட்டனர். ஆனால், அவர்களின் வேதனையான நினைவுகளும் அருகிவிடுமா? அடுத்த தலைமுறைக்கு பிரிவினை பற்றிய தகவல்கள் தெரியாமல் போய்விடுமோ?

ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருபவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் சரித்திரங்கள் சரிந்து போகாது.

அருங்காட்சியகத்தில் பல அரிய பொருட்கள் உள்ளனபடத்தின் காப்புரிமைSHIB SHANKAR CHATTERJEE/BBC Image captionஅருங்காட்சியகத்தில் பல அரிய பொருட்கள் உள்ளன

சரித்திரமும் உண்டு, பாடமும் உண்டு

வரலாற்றில் ஈடுபாடு கொண்ட ரோஷன் கூறுகிறார், "இந்த அருங்காட்சியகம், இதுவரை அடைபட்டுக் கிடந்த புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது".

"ஆசிரியர்களிடம் பெரியவர்களிடம் இருந்து கதைகளை கேட்டிருக்கிறோம். இங்கு வந்தால் செவிவழிக் கதைகளை உணரமுடியும். நிலைமை எப்போதும் எப்படியும் மாறலாம், இயல்பு நிலைமை கட்டுப்பாட்டை மீறலாம் என்ற பாடத்தை கற்றுக்கொள்ளலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாடம் கற்றுத் தரும் அருங்காட்சியகம் இது என்கிறார் ரோஷன்படத்தின் காப்புரிமைSHIB SHANKAR CHATTERJEE/BBC Image captionபாடம் கற்றுத் தரும் அருங்காட்சியகம் இது என்கிறார் ரோஷன்

இந்த அருங்காட்சியகம் பல்வேறு கோணங்களை காட்டுகிறது. இங்கு சரித்திரம், பாடம், படிப்பினை, வலி-வேதனை மட்டுமல்ல, காதலும் நெகிழ்வும் உண்டு.

http://www.bbc.com/tamil/india-40861635

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.