Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது?

Featured Replies

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்:-

கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா? என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அந்த உரை முன்வைக்கிறது. நமது காலத்தில் அரசியல்வாதிகள் பலருடைய உரைகளிலும் காணப்படாத தெளிவு அந்த உரையில் உண்டு.

மேற்படி இருவருடைய உரைகளின் பிரகாரம் தமிழ் மக்கள் பேரவையானது தான் முன் வைத்த தீர்வுத்திட்ட முன்வரைவை மீள வலியுறுத்தி நிற்கிறது. அதன்படி ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு கூட்டாட்சி முறைமையைக் கொண்டதாக அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிட முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையையும் கைவிட முடியாது. வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட முடியாது. இதுதான் தீர்வு பொறுத்து தமிழ் மக்கள் பேரவையின் ஆகப்பிந்திய நிலைப்பாடு. அதன் இணைத் தலைவர் என்ற வகையில் விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் அதுவே.

ஆனால் சம்பந்தர், சுமந்திரன் நிலைப்பாடும் அதுதானா? யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால இறுதியறிக்கை வரும் 8ம்திகதி சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது சமர்ப்பிக்கப்படுமா? இல்லையா? என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் எப்படிப்பட்ட ஒரு தீர்வு இருக்கக்கூடும் என்று யாப்புருவாக்க உப குழுக்களின் தலைவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன். தனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்று கூறிய அவர் அமைச்சர் மனோ கணேசனிடம் அல்லது ஏனைய சிங்களத் தலைவர்களிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார். முதலில் இடைக்கால அறிக்கை 35 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இப்பொழுது அது 25 பக்கங்களைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. அதில் எந்த எந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு பக்கங்கள் குறைக்கப்பட்டன? ஏன் அப்பகுதிகள் நீக்கப்பட்டன? போன்ற கேள்விகளுக்கு தமிழ்த்தரப்பிலிருந்து வெளிப்படையான பதில்களைப் பெற முடியவில்லை. சில சமயம் சர்ச்சைக்குரிய உபகுழு அறிக்கைகளும் உட்பட பொதுக்கருத்தை எட்ட முடியாதுள்ள விவகாரங்கள் பின்னிணைப்பாக சேர்க்கப்படலாம் என்ற ஓர் ஊகமும் உண்டு

.
எதுவாயினும் ஓர் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்படுமாக இருந்தால் அதில் முன்மொழியப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நிச்சயமாக விக்கினேஸ்வரனும், தமிழ் மக்கள் பேரவையும் கோரிநிற்கும் ஒரு தீர்வாக அமையப்போவதில்லை. அண்மை மாதங்களாக சம்பந்தரும், சுமந்திரனும் தெரிவித்து வரும் கருத்துக்களின்படியும் சித்தார்த்தனைப் போன்ற உபகுழுத் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களின் படியும் மனோ கணேசன் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும் நிமால் சிறீபாலடி சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும் முன்மொழியப்படும் தீர்வானது சிங்கள பௌத்த இனவாதிகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமையப்போவதில்லை. சம்பந்தரின் வழிவரைபடத்தின்படியும் அப்படி அமைய முடியாது. ஏனெனில் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு தீர்வை எதிர்பார்க்கவும் முடியாது.

ஆயின் அப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்மொழியப்படுமிடத்து விக்கினேஸ்வரனும், மக்கள் பேரவையும் எப்படிப்பட்ட முடிவை எடுப்பர்?. கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதைப் போல பேரவையின் தீர்வு முன்மொழிவை மக்கள் மயப்படுத்தும் ஒரு நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கக்கூடும். அதன் மூலம் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைத் திரட்டி உத்தேச தீர்வுத்திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களை தயார்படுத்தப் போகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அண்மை வாரங்களாக கஜேந்திரகுமார் அணியும் அதைத்தான் செய்து வருகிறது. இப்படியெல்லாம் மக்களைத் தயார்படுத்தினால் யாப்புருவாக்கத்திற்கான ஒரு மக்கள் வாக்கெடுப்பின் போது தமிழ் மக்களை அந்த யாப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்க வேண்டியிருக்கும். பேரவையும், விக்கினேஸ்வரனும் அப்படியொரு முடிவை எடுப்பார்களா?

அவ்வாறு அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை நிராகரித்தால் அடுத்த கட்டம் என்ன? பேரவை முன் வைக்கும் ஒரு தீர்வுத்திட்டத்தை போராடிப் பெறுவதற்கான ஒரு மக்கள் மைய அரசியல் வேலைத் திட்டம் எதுவும் பேரவையிடம் உண்டா? விக்கினேஸ்வரனிடம் உண்டா?

இக்கேள்வியை இப்பொழுது மாற்று அணியை உருவாக்க விளையும் எல்லாத் தலைவர்களிடமும் கேட்கலாம். இக் கேள்விக்கான விடையைக் கண்டு பிடித்தால் ஒரு மாற்று அணிக்குரிய பிரயோகப் பொறிமுறை கிடைத்து விடும். அப்படியொரு பிரயோகப் பொறிமுறை கிடைத்து விட்டால் ஒரு மாற்று அணி எனப்படுவது வெறுமனே தேர்தல் கூட்டு அல்லவென்பது தெளிவாகி விடும். அது ஒரு தேர்தல் கூட்டு அல்ல என்பது தெளிவாகி விட்டால் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர தயங்கும் ஒரு நிலைமை இருக்காது. ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட ஆளுமைகளை நோக்கி காத்திருக்கும் நிலைமைகளும் இருக்காது.

ஒரு மாற்று அணிக்குரிய இலக்கு எதுவென்பதில் தமிழ் மக்கள் பேரவையும் உட்பட அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிடமும் ஒரு தெளிவாக விளக்கம் இருக்கிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் அந்தக் கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய பொறிமுறை எது என்பதுதான்.ஒரு மாற்றுச்சிந்தனை எது என்பதுதான்.

மாக்ஸியம் ஒரு கோட்பாடாகவே முதலில் கருக்கொண்டது. கார்ல் மாக்ஸின் முதலாவது அகிலம் எனப்படுவது அக் கோட்பாட்டை ஒரு செய்முறையாக வளர்த்தெடுக்கும் நோக்கிலானது. எனினும் மாக்ஸியத்தை ஒரு கட்சித் தத்துவமாகவும் பிரயோக அரசியல்த் தத்துவமாகவும் வளர்த்தெடுத்த பெருமை லெனினுக்கே சேரும் என்று கூறப்படுவது உண்டு. ஒரு சித்தாந்தத்தை அல்லது உன்னதமான ஓர் இலட்சியத்தை செய்முறை அரசியலாக மாற்றுவதற்கு பேராளுமை மிக்க தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அகிம்சைக் கோட்பாடானது அதன் தொடக்கத்தில் புத்த பகவானிடம் ஓர் ஆன்மீகச் செயல்வழியாகவே காணப்பட்டது. மகாத்மா காந்திதான் அதை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றினார். அதை அவர் தென்னாபிரிக்காவிலேயே முதலில் பரிசோதித்தார். அப்பரிசோதனைகளின் போது அவருக்கும் ரஷ;ய எழுத்தாளரான ரோல்ஸ்ரோயிற்கும் இடையிலான இடையூடாட்டங்கள் முக்கியமானவை.

ரோல்ஸ்ரோய் ஒரு மங்கோலியப் பிக்குவிடமிருந்து அகிம்ஸா மார்க்கத்தை கற்றுக் கொண்டதாகத் தெரிய வருகிறது. ரோல்ஸ்ரோயும் காந்தியைப் போல தனது வாழ்வின் பிற்பகுதியை ஒரு சுய சோதனையாக மாற்றிக் கொண்டவர்.இப்பரிசோதனைகளில் கிறீஸ்தவத்தின் செல்வாக்கும் உண்டு. பௌத்தத்தின் செல்வாக்கும் உண்டு. காந்தி தென்னாபிரிக்காவில் சிறுகளத்தில் சோதித்த அரசியல் செயல்வழியை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெருங்களத்தில் பெருந்திரள் அரசியல் செயல்வழியாகப் பரிசோதித்தார்.

காந்தி 20ம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் பரிசோதித்தவற்றைத்தான் மண்டேலா தென்னாபிரிக்காவில் 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பரிசோதித்தார். காந்தியைப் போல மண்டேலா தொடக்கத்தில் ஓர் அறநெறிக் கோட்பாட்டாளனாக இருக்கவில்லை. அதிகபட்சம் அவர் ஓர் ஆயுதப் போராளியாகவே காணப்பட்டார். அவரிடம் தொடக்க காலங்களில் இடது சாரிச் சாய்வே காணப்பட்டது. எனினும் கால்நூற்றாண்டுகால சிறைவாழ்வின் ஊடாக அவர் காந்தியத்தின் அடுத்த கட்ட உதாரணமாக மேலெழுந்தததாக ஓர் அவதானிப்பு உண்டு. ஆயுதப் போராட்டத்திலிருந்து அகிம்சா மார்க்கத்தை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டங்கள் மண்டேலாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உண்டு. அதே சமயம் மண்டேலாவை அவருடைய காலத்தின் பூகோள அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக கெடுபிடிப் போரின் முடிவையடுத்து ஏற்பட்ட ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கிய மாற்றங்களின் விளைவாகவும் அவரை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட உதாரணங்களின் பின்னணயில் வைத்துப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாற்று அரசியல் செயல்வழி எனப்படுவது பிரதானமாக மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முதலாவது நாடாளுமன்ற அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கூடாக இரண்டாவது மக்கள் மைய செயற்பாட்டு அரசியல், மூன்றாவது பிராந்திய மற்றும் பூகோள மட்டத்தில் செய்யப்பட வேண்டிய ராஜதந்திர அரசியல். இம்மூன்று தளங்களைக் குறித்தும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட பேராளுமைகளால்தான் ஒரு மாற்று அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். மாற்று அரசியல் எனப்படுவது வெறுமனே ஒரு தேர்தல் கூட்டு அல்ல. எனினும் தேர்தல் மூலம் ஓர் அதிகார மூலத்தை (pழறநச ளழரசஉந)ஸ்தாபிக்க முடியுமென்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.

ஜனநாயகப் பரப்பில் ஒரு மாற்று ஓட்டம் எனப்படுவது ஒரு மக்கள் சமூகத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் பெலப்படுத்துகிறது. ஒரு பிரதான நீரோட்டத்திற்கு எதிராhனதாகவோ அல்லது பிரதான நீரோட்டத்தின் போதாமைகள் காரணமாகவோ மாற்று ஓட்டம் உற்பத்தியாகிறது. பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் பிரதான நீரோட்டம் எனப்படுவது பெருந்திரள் மக்களுக்குரியதாகவும் மாற்று ஓட்டம் எனப்படுவது சிறுதிரள் மக்களுக்குரியதாகவும் காணப்படுகிறது. இலட்சியவாதிகளும் கோட்பாட்டாளர்களும், நீதிமான்களும், தூய்மைவாதிகளும் பெரும்பாலும் மாற்று அணியைச் சேர்ந்தவர்களே. ஊரோடு ஒத்தோட மறுப்பவர்களும் மாற்று அணிக்குரியவர்களே. ‘ஜனரஞ்சகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை’ என்று நம்புவோரும் மாற்று ஓட்டத்திற்கு உரியவர்களே. கலை இலக்கிய சினிமாப் பரப்புக்களில் மாற்று ஓட்டம் எனப்படுவது பெரும்பாலும் சிற்றோட்டம்தான். அது ஜனரஞ்சகத்தோடு அதிகம் ஒத்துப்போவதில்லை. ஊடகப்பரப்பிலும் மாற்று ஊடகம் எனப்படுவது பிரதான நீரோட்டத்தோடு அதிகம் பொருந்தி வருவதில்லை. இப் பூமியிலே தோன்றிய பெரும்பாலான மகத்தான சிந்தனையாளர்களும், சிந்தனைகளும் படைப்பாளிகளும், புரட்சியாளர்களும் தொடக்கத்தில் மாற்று அணிக்குள்ளிருந்து வந்தவர்களே.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மிதவாத அரசியலிலும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. ஆயுதப் போராட்டத்தின் போதும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. இப்பொழுது ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னராக ஒரு மிதவாத காலகட்டம். இங்கு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் சிறு குழாத்தினரே. அவர்களுடைய சந்திப்புக்களும் சில நூறு பேர்களுக்குள் நடப்பவைதான். வரலாற்றில் எல்லா மாற்று அணிகளும் இப்படித்தான் தொடங்குகின்றன. எல்லாப் பெரு நதிகளும் ஒரு துளி நீரிலிருந்தே தொடங்குகின்றன. கலீல்ஜிப்ரான் தனது ‘முறிந்த சிறகுகள்’ என்ற நூலில் குறிப்பிடுவது போல ‘இந்தப் பூமியிலுள்ள எந்த ஓரழகும் எந்த ஓருன்னதமும் மனிதர்களின் ஒரு யோசனை அல்லது ஓருணர்ச்சியிலிருந்து படைக்கப்பட்டவைதான்’

எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் மத்தியிலுள்ள பிரதான சவால் அந்த மாற்று அணி கனவுகளை நோக்கி யதார்த்தத்தை எப்படி வளைக்கப் போகிறது?என்பதே.அதை எப்படி மக்கள் மயப்படுத்தப்போகிறது என்பதே? அதை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் எப்படி ஓர் அதிகார மூலமாக மேலெழப்போகிறது?என்பதே. அப்படியொருஅதிகார மூலம் மேலெழும் போது மேற்சொன்ன மூன்று தளங்களைக் குறித்தும் முழுமையான ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட தலைமைகள் மேலெழுவார்கள்.

சம்பந்தர் நம்புகிறார். கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைத்தெடுப்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு என்று. பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்திற்கூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதென்றால் அப்படித்தான் சிந்திக்க வேண்டியிருக்கும். மாறாக நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மைய அரசியலைக் குறித்தும், ராஜதந்திரப் போரைக் குறித்தும் சரியான தரிசனங்கள் இருக்குமானால் வேறு விதமாகச் சிந்திக்க முடியும். எனினும் இப்பொழுது அதிகார மூலமாகக் காணப்படுவது சம்பந்தர், சுமந்திரன் அணிதான். மாற்று அணி ஒரு சிற்றோட்டமாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அதிகார மூலத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்திகளையும், கோபத்தையும் ஒரு மக்கள் சக்தியாக திரட்டவல்ல பொறிமுறைகளை மாற்று அணியானது இனிமேல்தான் கண்டு பிடிக்கவேண்டியுள்ளது. ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் வரையிலும் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட நபர்களுக்காக காத்திருக்கும் வரையிலும் ஒரு மாற்று அணியானது அதன் சரியான பொருளில் மேலெழப் போவதில்லை. மாறாக சம்பந்தர், சுமந்திரன் அணிக்கு எதிராக அழுத்தக் குழுக்களாக அவை சுருங்கிவிடும் ஆபத்துக்களே உண்டு.

கடந்த எட்டாண்டு காலம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரத்தை இழந்து செல்லும் ஒரு காலகட்டமாக இருக்கலாம். அதே சமயம் போலிகளையும், பொய்த் தேசியவாதிகளையும் நடிப்புச் சுதேசிகளையும் தோலுரித்துக் காட்டிய ஒரு காலகட்டம் இதுவெனலாம். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஒரு காலகட்டம் எனப்படுவது மிகவும் கலங்கலான ஒரு காலகட்டமாகும். இனவாதம் மனித முகமூடியோடு தனது நிகழ்ச்சி நிரலை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு காலகட்டமாகும். ஒரு புறம் இலட்சியவாதிகள் சிறுதிரள் அரசியலை முன்னெடுத்துக்கொண்டிருக்க இன்னொரு புறம் காரியவாதிகள் பெருந்திரள் அரசியலில் அதிகார மூலங்களை ஸ்தாபித்துக் கொண்டே போகிறார்கள். ஒரு பலஸ்தீன விமர்சகர் தனது மக்களைப் பற்றிக் கூறியது இங்கு தமிழ் மக்களுக்கும் பொருந்தும். ‘நாங்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்பதைக் குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்களோ (யூதர்கள்) அப்பத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ‘;

http://globaltamilnews.net/archives/35639

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.