Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

வார்த்தைப்பூக்கள்


 

 

tamil-poem-world-poetry-day
 

புல் வெளியில் இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறோம்,

புற்கள் யாவிலும் வார்த்தைகள் பூத்துக்கிடக்கின்றன

எடுக்கவா...கோர்க்கவா என்பது போல்

என்னைப்பார்க்கிறாய் ,

வேண்டாம் ..,

புதுப்பூக்கள் உன் பார்வைக்கு தெரிவதில்லை ,

வாடி வதங்கிய பழைய நினைவுகளை

வார்த்தைப்பூக்களாய் தேர்வு செய்கிறாய்,

நீ அவ்வப்போது போட்ட

இப்பூக்கள் மாலையாகக் கழுத்தில் கனக்கின்றன

பார்....

என் தலை கூடக் குனிந்தே தான் போய்விட்டது,

பாரத்தால் ......

இருக்கட்டும் ......

நீ இவற்றை  மனதில் சுமந்து வேதனைப்பட்டிருப்பாய் ,

ஆனால் என்ன செய்வது ...

மீண்டும் கஷ்டப்பட்டுத் தேடி ,

பொறுக்கி எடுத்து

மனதில் பொறுத்ததியபடிதான் இருக்கிறாய்...

சிதறிய வார்த்தைகளை..

விட்டுவிடு

வார்த்தைகள் கீழேயே கிடக்கட்டும்

வாடியபடி.

- லதா ரகுநாதன்

http://www.kamadenu.in/

  • Replies 212
  • Views 55.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கலாய் கவிதைகள்!

 

 

எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p94a_1522151521.jpg

ருள்மணியை விட்டுவிட்டு.வெற்றிமணியைக் காதலித்தாள்...
மணி ட்ரான்ஸ்ஃபர்!

- கலைவாணன்


p94b_1522151536.jpg

சிரிப்பூட்டும் வாயு
நைட்ரஸ் ஆக்ஸைடு...
அப்ப...
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
ஷேல் கேஸ்...?
சரி... சரி...
இருக்கவே இருக்கு
கேஸ் ட்ரபுளுக்கு பூண்டு லேகியம்...
தண்ணியக் குடி... தண்ணியக் குடி..!

- கே.லக்‌ஷ்மணன்


p94c_1522151553.jpg

நெப்போலியனை
உள்ளே அனுப்பினால்
அரிச்சந்திரன் வெளியே வந்துவிடுவார்!

- எஸ்.ஜெயகாந்தி


p94d_1522151566.jpg

மாதக்கடைசி தேதி
வாஸ்து மீன் ஆனாலும்
வறுவலுக்கு  ஆகும்!

- ‘சீர்காழி’ வி.வெங்கட்


p94e_1522151588.jpg

ம்மா சீரியல்
அப்பா கம்ப்யூட்டர்
பெரியவன் கேம்ஸ்
சிறியவன் ரைம்ஸ் வீடியோ
பார்த்துச் சிரித்துக்கொண்டது
குடும்பப் போட்டோ

- ரா.அருண் பிரகாஷ்


p94f_1522151686.jpg

ண்ணாடி முன் நின்றபோது,
கண்ணாடி அழகாய்த் தெரிந்தது.

- வே.புனிதா வேளாங்கண்ணி


p94g_1522151699.jpg

ரத்தை வெட்டியவன் மீதும்
மழை கொட்டிக்கொண்டிருந்தது.

-  ரா.அருண் பிரகாஷ்


p94h_1522151712.jpg

னைவியிடம் இத்தனை வருடமாய் குப்பை கொட்ட இரண்டே வார்த்தைகள்
‘சரிம்மா’, ‘ஸாரிம்மா..!’
 
-  சீர்காழி வி.வெங்கட்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கால மாற்றம்

முன்பெல்லாம்
தாத்தா
இடைவிடாமல்
இருமிக்கொண்டே இருப்பார்
பாவமாய் இருக்கும்
இப்போது
அப்பா இரும
ஆரம்பித்திருக்கிறார்
பயமாய் இருக்கிறது.

- இளந்தென்றல் திரவியம்

5.jpg
நீதி


நீதிமன்ற புங்கை நிழல்
உன் நரையில் கவிழ்ந்து
மடியில் நிறைகின்றது
இம்முறையும் அழுது
தீர்த்தவளாய்
கண்ணாடியுயர்த்தி
முந்தானையில்
கண்களைத் துடைத்த
வண்ணம் வெளியேறுகிறாய்
படர்ந்திருக்கும் அந்தக்
கண்ணீரின் ஈரமோ
புங்கை நிழலில் கொஞ்சம்
மரம் விட்டு இறங்கி
உன் சேலையைப்
பற்றிக்கொண்டு
உன்னோடே
போவதாய்த் தெரிகிறது
நிழலைப் போல் இல்லைதானே
ஏழைகளுக்கான நீதி.

- நிலாகண்ணன்

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

நமக்கு ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது: மனுஷ்யபுத்திரனின் ஐபிஎல் கவிதை


 

 

manushyaputhran-poem

 

ஐபிஎல் ஆடுகளம் இதுவரை கோலாகலமாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இன்று தமிழகத்தில் அது போராட்டக்களமாக மாறியிருக்கிறது. காவிரிக்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க ஐபிஎல் அரங்கை முற்றுகையிட்டும் மைதானத்துக்குள் ஏதாவது போராட்டம் நடத்தவும் அமைப்புகள் உறுதியாக இருக்க எப்படியாவது விளையாட்டை வெற்றிகரமாக நடத்திவிட ஒருங்கிணைப்பாளர்கள் இரட்டை உறுதியுடன் இருக்கின்றனர். காவல்துறை அவர்கள் பக்கம் இருக்கிறது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியைக் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
நமக்கும் ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது என மிகவும் காட்டமாக ஒரு கவிதையை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்தக் கவிதை..

பந்தையப் பார்வையாளர்கள் 
கறுப்பு ஆடைகள் அணிய தடை
பந்தயத்திற்கு வரும் 
சாலைகளில் தடை
பாதாகைகளுக்கு தடை
கொடிகளுக்கு தடை
செல்போன்களுக்கு தடை
கார் சாவிகளுக்கு தடை

தடைகளின் பட்டியல் நீண்டது
தடைகளின் அதிகாரம் நீண்டது

தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
தண்ணீருக்குத்தடை
தண்ணீருக்குத் தடை
தண்ணீருக்குத் தடை
அதுதான் பிரச்சினை
அதற்காகத்தான் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை

பந்தய மைதானத்தின் மேல்
பறவைகள் பறக்கத்தடை
பந்தய புல்வெளியில்
வெட்டுகிளிகள் அமர தடை
காற்றுக்குத்தடை
வெளிச்சத்திற்குத் தடை

ஐந்து அடுக்குப் பாதுகாப்பில்
பந்தய குதிரைகள்
அரசனைப்போல அழைத்துச் செல்லப்படுகின்றன
அல்லது 
ஒரு பயங்கரவாதியைப்போல 
அழைத்து செல்லப்படுகின்றன

தடைகளின் கோமாளி அரசன்
வெற்றிப்புன்னகை புரிகிறான்
ஆனால் அவனது கண்களில் 
அச்சம் படர்கிறது
மைதானத்தை சூழ்ந்திருக்கும்
ஒவ்வொருவர் முகத்தையும் கண்டு
பயப்படுகிறான்
அவர்களது அடையாள அட்டையை
அச்சத்துடன் சோதிக்கிறான்
எங்கெங்கும் துப்பாகி ஏந்திய காவலர்கள்
தயாராக இருக்கும் தடிகள்
கண்ணீர் புகைக் குண்டுகள்

ஆனாலும்
அவர்களுக்கு நிம்மதியில்லை
யாராவது ஒருவன் 
யாராவது ஒருத்தி 
கருப்பு உள்ளாடையை உருவி
உயர்த்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள்
பந்தயம் ஆரம்பமாகவிருக்கிறது
உள்ளாடைகளுக்குள் கையை விட்டு
சோதிக்கிறார்கள் 
மெட்டல் டிடக்டர் மூலம்
கருப்பு உள்ளாடைகளைத்தேடுகிறார்கள்

அசம்பாவிதம் நடக்கக் கூடும்
எதிர்ப்பவர்கள் ஒரு ரகசிய திட்டத்துடன் அங்கு வரகூடும்
பாதுகாப்பு ஏற்பாடுகளை
உறுதிப்படுத்த ஒரு வழிதான் இருக்கிறது
அது 
எல்லோரையும் நிர்வாணமாக
கேலரிகளை நோக்கி அனுப்புவது 
அதற்கும் தயாராகத்தான் 
மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்
நமக்கு கேளிக்கைகள் முக்கியம்
தண்ணீரை விடவும்
தண்ணீர் பாட்டில்களை விடவும் 
நம் நிர்வாணத்தை விடவும்

பல்லாயிரக்கணக்கானோர்
நிர்வாணமாக அமர்ந்து 
ஒரு பந்தயத்தை காணும் காட்சியை
இதுவரை உலகம் கண்டதில்லை 
நிர்வாணமாக தூக்கில் தொங்கும்
விவசாயிகளின் உடல்களைத்தான்
இதுவரைக் கண்டிருக்கிறோம்
இது ஒரு அரிதினும் அரிய காட்சியாக இருக்கும்

நமக்கும் ஒரு வழிதான் இருக்கிறது

அது 
நிர்வாணமாக
மைதானத்தை நோக்கி ஓடுவது

http://www.kamadenu.in/

  • தொடங்கியவர்

அஞ்சலி

 

 
shutterstock320040041

அந்திவானுக்குக் கீழ்

படைக்குருவிகள்

அதற்கும் கீழ்

ஒட மரம்

மரத்தைச் சுற்றி

ஆடுகள்

ஆடுகளைச் சுற்றி நைலான் வலை

வலைக்குள்ளே புழுக்கைப் புழுதி

இடையன் பெருக்குகிறான்

ஆடுகளுடன் பழக்கம் பேசுகிறான்

செம்மறியாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன

வெள்ளாடுகள் கும்மரிச்சம் போடுகின்றன

தண்டனைகளை நினைவூட்டுகிறான்

எக்காளம் போடுகின்றன வெள்ளாடுகள்

இடையன் துரத்துகிறான்

மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுகின்றன

அகப்பட்ட ஆட்டுக்கு முன்னங்கால்கள்

சில ஆடுகளுக்குக் கழுத்தும் காலும்

கட்டிப்போடுகிறான்

தப்பித்த ஆடுகளை வெலத்துடன் துரத்துகிறான்

மந்தை புழுதிக் காடாகிறது

இடையனின் சட்டம் அறியாத

புத்தம் குட்டியாடொன்று

துள்ளி வலைக்கு வெளியே குதிக்கிறது

இடையனும் குதிக்கிறான்

பிடிபடுகிறது குட்டியாடு

கழுத்து நரம்புகள் தென்னித் திமிற

குரவளை நெரிந்தது

முனகல்கூட வெளிவரவில்லை

அத்துவானக் காட்டின் இந்தக் காட்சியை

கறுப்புத் துணியால் மூடுகிறது

பொழுது

- மண்குதிரை

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

p30a_1523264744.jpg

புளியம்பழ வாழ்க்கை 
                            
ஊரு சாமிக்கு விசேஷம்
சித்திரையில வரத் தவறினாலும் தவறும்,
ஹைவேஸ் புளியமரக் குத்தகைய எடுக்குற
அய்யாவுத் தாத்தாவுக்கு
சித்திரை பிறந்ததுமே
‘புளியம்பழம் உலுக்குகிற’ விசேஷம் தொடங்கிடும்.
பன்னெண்டாளுக வெச்சு புளியம்பழங்களை உலுக்குவாரு.
சலசலன்னு மண்ணாங்கட்டி மழை பொழிஞ்சாப்புல
தூரலாட்டம் விழுகிற புளியம்பழங்களை
சீல காடாத்துணி கட்டித் திரட்டுவாரு.
விழுகிற முதல் படி புளியம்பழத்தை
பத்ரகாளியாத்தாவுக்குப் புளியோதரை படைக்க
அப்பாயிகிட்ட தனியா குடுத்திடுவாரு.
விழுந்த பழத்தைத் தட்டிப்பார்த்தே
புளிப்போட அடர்த்தியைத் துல்லியமா சொல்லிடுவாரு.
பெரிய பெரியப்பா, சின்ன பெரியப்பா
ரெண்டுபேத்தையும் தூரத்துல நிறுத்தி
சிவப்புக்கொடி காட்டி வண்டிகளுக்கு வழிகாட்டச் சொல்லுவாரு.
தனலட்சுமி அத்தைக்கும்,
முத்து பெரியம்மாவுக்கும்
முருகேசன் அண்ணனுக்கும்
கீழே ஒரு பழம் விடாம கூட்டி எடுக்கிறதுதான் வேலை.
பழம் உலுக்கி முடிஞ்சதும்
வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு
தனியா ஒரு நடை நடந்து
புளியங்காய்களையும்
உடைஞ்சுபோன பிஞ்சுகளையும்
ஒண்ணுவிடாம பொறுக்கி எடுத்து
வேட்டிக்குள்ள போட்டுக்கிட்டுதான் வருவாரு.
புளியம்பழத்தைக் கொத்தோடயும்,
கிளையோடயும் புடுங்கிட்டாப்போச்சு
நாண்டுக்கிறாப்புல பேசி,
ருத்ரதாண்டவம் ஆடுற தாத்தா...
புருஷனை உதறிட்டு ஒத்தையா நின்ன
கருணாம்பிகை அக்காகூட மட்டும்
சாகறவரைக்கும்
ஒரு வார்த்தை பேசவே இல்ல!

- ஸ்ரீநிவாஸ் பிரபு

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காவிரி

கீழே வெறுமை...  
வாகன இரைச்சல்களால்
முன்பைவிட அதிகமாகவே
எதிரொலித்தது காவிரிப் பாலம்.

நீர்த்துகில்களை இழந்த
பாலத்தூண்களெல்லாம்
தன் நிர்வாணத்தை ஒருசில முட்புதர்களால்
மூடிக்கொண்டன.

அத்தூண்களின்
துகில்களெல்லாம் 
வேற்று மாநிலத் தூண்களைத் தத்தம்
இரண்டாம் உடுப்புகளாய்
அணிந்துகொண்டன.

என்றோ செத்தழுகிய
நதிப்பாம்பை இன்று வரை நோண்டித் தின்றவாறே
இருக்கும் மஞ்சள் எறும்புகள்
சாரைசாரையாய்
இங்குமங்கும் உலாவுவது
ஒரு கண்கொல்லும் காட்சி.

எதிரெதிர் படித்துறைகளில்
ஏறி இறங்கியும்,  ஆற்றின்
நீள அகலங்களில் ஓடியாடியும்
குதூகலித்தாடிய வெறுமை
கடைசியாக மூச்சிரைத்து 
ஏழைகளின் வயிற்றுப் பகுதியில் தஞ்சம் புகுந்தது.

கனத்த நெஞ்சுடன்
மணலாற்றைப் பார்க்கின்றேன்...

இரு கரைகளிலும் காய்ந்து தலை சாய்த்து
மண்டியிட்டு மன்னிப்பு கோரும் மனிதர்களைப்போல்...
கோரைப்புற்கள்.

- ஆனந்த்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

விக்ரமாதித்யன் கவிதைகள்

கவிதை: விக்ரமாதித்யன், ஓவியம்: வேலு

 

இடரினும் தளரினும்

அறியாப்பருவத்தில்
இழைத்து இழைத்துப் போட்ட கோலம்
அறிந்த பிறகு
கைக்கு வந்தது.
கோலத்தைக் கடந்துவிட்டாள்
பிராட்டி

எப்பொழுதும்

தொடங்கத் தெரிகிறது
முடிக்கத் தெரியவில்லை
ஒருபொழுதும்.
நடுவில்
நாலுபேர்
இடையே
இரண்டு பேர்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால்
பொழுதுபோவதே கொண்டாட்டம்தான்

p42a_1523272747.jpg

நிறை

எடுத்தால்
தீர்ந்துவிடும்
கொடுத்தால்
நிறைந்துவிடும்
எடுத்தும்
கொடுத்தும்.

அழை

பெண்ணே
பெண்ணே
எங்கே
இருக்கிறாய்
எப்போது புறப்பட்டு
வருவாய்
வரும்பொழுது
பௌர்ணமியாக இருக்கட்டும்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

குற்றப்பத்திரிகை

கவிதை: யவனிகா ஸ்ரீராம்

 

p38a_1523268478.jpg

மிகச்சுருக்கமாகக் கேட்கப்படுகிறது
ஒருவரியில்
உங்கள் கல்லறை வாசகம் அல்லது முழுவாழ்வின் செய்தி யாவும்.
யாரைப்பிடிக்கும் எனக் குழந்தைகளிடம் கேட்கும்போதே
பெற்றோர்கள் இறந்துவிடுகிறார்கள்.
எனது தேசம் என நெஞ்சுயர்த்திப் பெருமிதம்கொள்ளும் ஒருவர்தான்
‘ஆனால், அதில் ஒரு விஷயம்...’ என அச்சம் தெரிவிக்கிறார்.
எவ்வளவு நேசித்தேன் என்று கண்ணீர் சிந்தியவர்தான் கொலையாளியாகிவிட்டார்
துவரைப்பருப்புகள் காதலிசை கடவுளின் கடைக்கண்பார்வை
நாய் குரைக்கும் ஓலம் போன்றவை சுருக்கமானவைதாம்.
பல பக்கக் குற்றப்பத்திரிகையில் நீதிபதி
செக்ஷனுக்குள் வரும் வாக்கியங்களின் கீழ் அடிக்கோடிடுவது, மேலும்
வெகுநாள்களாய் பெண்களிடம் ஆண்கள்
`உனக்கு என்னதான்மா வேண்டும்’ எனக் கேட்பது போன்றவை
மிகச் சுருக்கமான கதறல்கள் எனலாம்.
குற்றமும் தண்டனையும் என்ற பெரும்பிரதி
வேட்டையாடுதலுக்கும் விவசாயத்துக்குமான
வெறும் சுருக்கம் என்பாரும் உண்டு.
என்ன செய்வது, பரிதாபம்தான்!
எதையும் சுருக்கமாகச் சொல்லத் திராணியற்றவர்கள் 
பலகாலம் நீளும் வரிசையில் மயங்கித் தரை விழுந்துவிடுகிறார்கள்தாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீர்ப்பிடிப்பு நிலம்

நகரமென எழுந்துகொண்டிருக்கிறது
முன்பொரு நாளின் நீர்ப்பிடிப்பு நிலம்
புதிய வீட்டை  சிரத்தையோடு வடிவமைத்துக்கொண்டிருக்கும்
பொறியாளனின் நனவில்
எழுந்து சரிகிறது அவனது கனவு வீடு
சாந்து சுமக்கும் சித்தாள் பெண்
முதல் சாமத்தில் அரங்கேறிய இரண்டாம் கலவியை நினைந்து தானே நகைக்கிறாள்
கட்டடக் காவலாளி இரவில் ‘தேன்கிண்ணம்’ கேட்கும்பொருட்டு பகலில் பண்டுவம் பார்க்கிறான் பண்பலைப் பெட்டியை
வேறிடம்  கிட்டாத இளஞ்சோடிகள்
பூசப்படாத வீட்டுக்குள் காதலிக்கச் செல்கிறார்கள்
தூக்கச்சடவில் கிடாயை நோக்கிக் கம்பெறிகிறான்
தூரத்தில் ஆடுமேய்ப்பவன் 
திருஷ்டியாய் நிற்கும் ஒற்றைப் பனையில் தொங்குகிறது தூரதேசம் போய்விட்ட தூக்கணாங்குருவியின் வீடு
சூரிய தீபம் சோர்கிற பொழுதில்
மகிழுந்துகளில் வந்திறங்கி
குத்துக்கற்களின் குறுக்கும்மறுக்குமாய் நின்று
நீளம் அகலம்  பட்டா சிட்டா
அடங்கலென நீட்டிமுழக்குவார்கள்
யானைகட்டிப் போரடித்த மூதாதையரின்
திணை திரிந்த வழித்தோன்றல்கள்.

- ஸ்ரீதர்பாரதி  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தற்கொலையாகும் திட்டுகள்...

எத்தனை முறை திட்டிவைத்தாலும்
உதிரும் முடிகளை எடுத்து குப்பையில்
போடுவதில்லை தங்கை
என் திட்டுகளைப்போலவே
அம்முடிகள் கற்றையாகத் திரண்டு
உருண்டு ஒரு மூலையில்
இறந்துவிட்ட கரப்பான்பூச்சியின்
சிதறிய உடல்
கத்தரிக்கப்பட்ட துணியிலிருந்து
விழுந்த ஓரச் சிதைவு
காய்ந்துபோன சருகுகள்
மற்றும்
மிட்டாய் சுற்றியிருந்த
கண்ணாடி உறையோடு
சுருளச் சுருளக் கிடக்கின்றது
கொஞ்சம் பலமாகக் காற்றடித்தாலும்
மூலையில் ஒரு முழத்துக்குக்
கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்
கொச்சைக் கயிற்றைக் கவ்வித்
தொங்குவதைத் தவிரவும் வேறு வழியில்லை
எடுத்துப் போடுவதற்கு.

- க.சி.அம்பிகாவர்ஷினி

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மாற்றுப்பாதை

சற்றுமுன் போயிருந்த
இறுதி ஊர்வலத்தின்
மரணத்தின் வாசம் வீசும்
பூக்கள் இறைந்து கிடக்கும்
பாதையில் பயணிக்கும்போது
மனம் சற்றே
பயணித்துப் பார்க்கிறது
தன்னையும்
ஓர் ஊர்வலத்தில் வைத்து
6.jpg
 

- ரவி கிருஷ்


ஒத்திகை

தின்று களித்துப்
பெருத்துக் கொழுத்த
கூழாங்கல்லொன்று
கொஞ்ச தூரம்
நதியின் திசையை
மாற்றிக்கொண்டிருக்கிறது.
 

- திரு வெங்கட்

http://www.kungumam.co.in/

  • தொடங்கியவர்

கோடைச் சித்திரம்

கொடுவெயிலில்
தகதகக்கும் நெடுஞ்சாலைகளெங்கும்
எழும்பும் தொடர் அலைகளோடு
ஓடத் துவங்கிவிட்டது கானல்நீர்.
பாதுகைகளற்றப் பாதங்களைப்
பார்ப்பதையும்
அரிதாக்கிவிட்டது கோடை.
கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு
வாட்டத்தோடு நிற்கின்றன மரங்கள்.
எதிர்படும் பெண்களின்
கைக்காம்புகளில் புதிதாய்
இதழ் விரிக்கத் துவங்கிவிட்டன
குடைப்பூக்கள்.
தரை வெடித்த குளத்தில்
தட்டாங்கல்லை இரையாக்கவியலாமல்
மேகங்களைச் சபித்தபடி
தேடலோடு கடக்கின்றன நாரைகள்.
கோடைச் சித்திரத்தின் ஆடை நனைத்து
சுடச்சுடச் சொட்டிக்கொண்டிருக்கிறது
புழுக்கும் வியர்வை.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

https://www.vikatan.com

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

p20a_1524462694.jpg



நூலறுந்த பட்டம்

இரை தேவையற்ற
பேச்சிழந்த பறவையொன்று
பறப்பதான பாவனையில்
அந்தரத்தில் அலைகிறது
நூலறுந்த பட்டமொன்று.
தனிமை விரும்பியின்
மோனத் தவத்தைப்போலவே
சிக்கும் தடைகளில்
சற்றே மௌனித்தமர்ந்து
பின் விடுபட்டு வேற்றிடம் ஏகுகிறது.
மேனி வண்ணங்களில்
அறுபடும்முன் சேகரித்த
சிறுவனின் நுரை ததும்பும் மகிழ்வை
என்ன செய்வதென்ற குழப்பத்தில்
பித்துப் பிடித்தாற்போல் யோசிக்கிறது.
தடுமாறும் கணமொன்றில்
விரையும் ரயிலின் மேற்கூரையில்
சாதுவாய்ச் சாய்ந்து
காற்று விரட்டும் வரை
ஓய்வெடுத்துக்கொள்கிறது.
மின்கம்பிக்கு இடம்பெயர்ந்து
படபடப்பாய் தொங்குகையில்
சிறுவனைப் பிரிந்த வேதனையில்
துடிப்பதான ஏக்கத்தை
வெளிச்சமிடுகிறது.
இறுதியில்
அரூப அழுகைக்குப் பரிகாரமாய்
நீரில் நனைந்தோ
வேலியில் கிழிந்தோ
சுயமாய்த் தண்டித்துக்கொள்கிறது.

- கண்ணன்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காத்திருப்பு

ஜன்னல் திறந்து
கம்பிகளில் முகம் அழுந்த
கதவு ஒருக்களித்து வைத்து
அணைக்கொடுத்த நாற்காலியில்
அமர்ந்தபடி
மொட்டைமாடி உலாவலில்
அவ்வப்போது எட்டிப் பார்த்து
எட்டு பேருந்து நிறுத்தம் வரை
சென்றுவிட்டு
இப்படி
யாருக்காவது ஒருநாள் காத்திருக்க வேண்டும்!

- கவிஜி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
 
 
E_1524811217.jpeg
 

நன்றி சொல்ல ஒருநாள்!

உலகிற்கு நன்றி சொல்ல
நாம் மறந்திருக்கலாம்...
ஆனால், உலகம் நமக்கு
நன்றி சொல்லும் நாளே
உழைப்பாளர் தினம்!

காடு மேடாய்
கட்டாந்தரையாய் கிடந்த நிலத்தை
பொன் விளையச் செய்த கரங்களை
பூமித்தாய் முத்தமிடும் நாளே
உழைப்பாளர் தினம்!

தறிகெட்டு ஓடிய
ஆறுகளுக்கு அணை கட்டி
வீரியம் கொண்டு
விழும் அருவிகளில்
மின்சாரம் எடுத்து
இருள் துடைத்து, ஒளிரச் செய்த
கரங்களை கவுரவிக்கும் நாளே
உழைப்பாளர் தினம்!

உப்பிட்டவரை
உள்ளளவும் நினைக்க
வியர்வை உப்பை
விதைத்த உழைப்பாளிக்கு
வெற்றியை விருதாக்கி
உலகம் எடுக்கும் விழாவே
உழைப்பாளர் தினம்!

பூமியின்
இன்றைய வளர்ச்சிக்கும்
மலர்ச்சிக்கும்
உழைப்பாளிகளின் உழைப்பே
உரமாய் இருந்திருக்கிறது
அதற்கான அங்கீகாரமே
உழைப்பாளர் தினம்!

வான் மண்டலத்தில்
கனவு காட்சிகளாய்
வலம் வந்த கோள்களுக்கு
செயற்கைக்கோள் அனுப்பிய
செயலுக்கான அடையாளம்
உழைப்பாளர் தினம்!

பணிச் சுமைக்கு மத்தியில்
நினைக்க மறந்துவிட்ட
உழைப்பாளியை
நினைவூட்ட வருகிறது
உழைப்பாளர் தினம்
இந்த நாள்...
உழைப்பாளருக்கு
நன்றி சொல்லவொரு திருநாள்!

உலகம் போற்றும்
உழைப்பாளர் தினத்தில்
வியர்வை சிந்தும் விரல்களை பிடித்து
நன்றியோடு நலம் விசாரிப்போம்...
ஏனெனில்
உழைப்பு
தனி மனித பிழைப்பிற்கான
வேலை அல்ல
தரணியின் செழிப்பிற்கான சேவை!

மீரா மணாளன், நெல்லை.

http://www.dinamalar.com

  • தொடங்கியவர்

ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டி!
 
ஏழு மலைகள் ஏழு கடல்களைத் தாண்டி
இளைப்பாறாமல் பயணித்து வந்த பறவை ஒன்று
என் வீட்டு மாடியில் வந்திறங்கியது
அதன் களைப்பு உணர்ந்த நான்
பாத்திரம் நிரம்பத் தண்ணீர் வைத்தேன்
அருந்தியது
கைப்பிடி அளவு தானியம் இட்டேன்
தின்றது
`இன்றிரவு ஓய்வெடுத்துவிட்டு நாளை போகலாமே!’ என்றேன்
விடைபெற்றுப் போகவேண்டிய
கட்டாயத்தை உணர்த்தியது
தொடர்ந்து விடைபெறும் முன்
அது இட்ட எச்சத்தில்
ஏழு கடல்கள் ஏழு மலைகளின்
உஷ்ணம் இருந்தது.


- கோவிந்த் பகவான்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மேகங்களை ரசிப்பவள்

கோடை விடுமுறையில் லாவண் குட்டி வந்திருந்தாள்
அந்தி சாயும் சாம்பல் பொழுதுகளில்
மடியில் அமர்ந்தபடி
மேகங்களை ரசிப்பது அவள் விருப்பம்
வெள்ளை வெளேர் என்றிருந்த
மேகத்தைக் காட்டி
முயல்குட்டி என்றாள்
அடர் கறுப்பில் திரண்ட மேகத்தைக் காட்டி
யானை என்றாள்
நீள்சுருள் மேகத்தைக் காட்டி
கடற்குதிரை என்றாள்
நாள்தோறும்
தேவதை, தேர், சிங்கம், முதலை, டெடிபேர் என
அறிமுகம் செய்தவள்
விடுமுறை முடிந்து புறப்பட்டாள்.
இப்போது காணும் மேகங்களில் எல்லாம்
லாவண் குட்டியின் முகமே தெரிகின்றன.


- கோவிந்த் பகவான்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெளிச்சத்தை தொலைத்தவர்கள்

மௌனத்தாலான
பூட்டால் பூட்டப்பட்டு
இறுக்கமுற்று
நிற்கிறது அந்த வீடு.
வாழ்ந்து கெட்டதற்கான
அத்துணை அறிகுறிகள்  
கொட்டிக் கிடக்கும்
அவ்வீட்டில்
எந்தவித எதிர்ப்புமின்றி  
சாவித்துவாரத்தினுள்   
நுழைந்த வெளிச்சம்
பூனையெனப் பதுங்கி
பரவவிடுகிறது தன் பார்வையை.  
காரணத்தை அறிய
பொழுதெல்லாம்
தேடிச் சலித்தபின்
சோம்பல் முறித்து
வெளியேறும் அதனிடம்
இந்த வீட்டினர்
உன்னைத்
தொலைத்ததுதான் காரணம்
என்பதை எப்படிச் சொல்லும்
அந்தப் பூட்டு.

- மகிவனி

2.jpg
குறுங் கவிதைகள்

* காலுக்கு அடியில்
கடல் அலை நழுவியதும்
மணலில் பதியும் மனம்.

* கடிகாரம் உடைந்த பிறகும்
ஓடிக்கொண்டே இருந்தது
காலம்!

- கி.ரவிக்குமார்

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

அப்பா...

அப்பா எப்போது
வெளியில் போய்
வீடு வந்தாலும்
ஆடு மாடுகள்
அத்தனையும்
பாசத்தில் கத்த ஆரம்பிக்கும்.
நாய் ஆசையோடு
வாலாட்டி வந்து அருகில் நிற்கும்.
நாங்கள் சத்தம் தவிர்த்து
வீட்டை
வலிந்து நிசப்தமாக்கிக்கொள்வோம்.


- சாமி கிரிஷ்

ரெகுலரோடு புலத்தல்

மனிதவாசம் பார்த்திராத
வனங்களுக்கு நடுவே
கூடாரம் போட்டு அதில் ஒளிந்துகொள்கிறார்கள்
 
பாராசூட்டைக் கட்டிக்கொண்டு
மலையுச்சியில் இருந்து
குதித்துவிடுகிறார்கள்

பாஷை புரியாத தேசங்களுக்கெல்லாம்
பரதேசியைப்போல சுற்றித்திரிகிறார்கள்
 
ரெகுலரிடம் இருந்து தப்பிக்க
இத்தனை பிரயத்தனங்கள் செய்தும்
தோற்றுப்போன மனிதர்கள்
திங்கள்கிழமையானதும்
ரெகுலரை மாட்டிக்கொண்டு ஆபீஸுக்குக் கிளம்புகிறார்கள்.

அவர்களின் முதுகில் `ரெகுலர்’
ஒரு சிலுவைபோல தொற்றிக்கொண்டிருக்கிறது.


- தி.விக்னேஷ்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

திணைப்பாடல் - கவிதை

 

முத்துக்குமார் இருளப்பன் - படம்: பா.காளிமுத்து

 

ன் உடல் முழுவதும்
அப்பிக் கிடக்கிறது
குறிஞ்சியின் வாசம்.

யாசகம் கேட்டுக் கையேந்தும்
பாணன் ஒருவன்
என் மதுக்குடுவையைத்
திணைப் பாடல்களால் நிரப்புகிறான்

செங்காந்தள் மலரின் இதழ்களுக்கு
என்னை முழுவதும்
ஒப்புக்கொடுத்துவிட்டேன்

98p1_1525693012.jpg

பள்ளத்தாக்கில்
மேய்ந்து கொண்டிருக்கும்
மேகங்கள் எல்லாம்
ஈரிதழ்ப்  பூவின்
சுவை அறிந்திருக்கின்றன

பெருமரங்களை ஆரத் தழுவி
முத்தங்களால் உன் பெயரைச்
செதுக்குகையில்
என் மீசையெல்லாம்
பச்சைப் பாசிகள் ஒட்டிக்கொண்டன

மலை உண்டியலில்
சூரியக்காசைச்
சேமிக்கிறது வானம்

அகண்ட புல்வெளிகளில்
வானம் பார்த்துக் கிடக்கையில்
எண்ணிய நட்சத்திரங்களெல்லாம்
ஆலங்கட்டி மழையாய்ப் பொழிகின்றன.

மலை இறங்குகையில் வரும்
குமட்டல் உணர்வை
சேகரித்த ஆலங்கட்டிகளைச்
சுவைத்து விரட்டுகிறேன்.

தலையில் உருமாவோடு
மீசையை முறுக்கி
ஒரு கையில் அரிவாள் ஏந்திய
கோட்டைமலைக் கருப்பச்சாமி
படையலை வெறித்து நோக்கும்போது அவரது உடலை
ஒரு கூடை நியூட்ரினோக்கள்
ஊடுருவிச் செல்கின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மரணத்தின் வெம்மை

கோடையின் வெம்மையில்
ஆவியாகிப்போவதில்லை
மரணத்தின் வாடை.

ஒரு விடுமுறையின்போது
பலமணிநேரம் பயணித்து
தடவிப்பார்த்த
தற்கொலை செய்துகொண்ட 
நண்பனின் விரல்கள்
விடுதியின் கடைசி நாளில்
கட்டியணைத்து
விடை கொடுத்தவை.

அழவும் அவகாசமின்றி
இறந்த இரண்டே மணி நேரத்தில் தெருவெங்கும்
தண்ணீர் தெளித்து
ஊரே வழியனுப்ப
அவசரமாய் அடக்கமானார்
உத்திரத்தன்று இறந்துபோன மாமா.

 

நேற்றைய தினசரியில்
தண்ணீர் கேட்டுப்
போராடியதாய்ச் சொல்லப்பட்ட
மக்களில் இரண்டாவது வரிசையில்
மூன்றாவதாய்
இருந்தவருக்கு
மகன்களால் கைவிடப்பட்டு
கூழ் வார்க்கும் திருவிழாவில் நெரிசலில் மூர்ச்சையாகி
இறந்த மாணிக்கம் பெரியப்பாவின் சாயல் .

உலர்ந்த காற்று உட்புக
ஆளுயரத்தில்
சாவு நிகழ்ந்த வீட்டின்
வாசலில் அலைவுறும்
மாலை வாங்கிவந்த
நெகிழிப்பையென
அலைவுறுகிறது
அகல மறுக்கும்
கோடையின் மரணங்கள்.

-  கே.ஸ்டாலின்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கடந்தகால ஒளிப்படம்

டன் படித்தவர்களோடு
எப்போதோ எடுத்துக்கொண்ட
குழு ஒளிப்படத்தை
எதேச்சையாகப் பார்க்க நேரிடுகிறது.
கணத்துளியும் தாமதியாமல்
சட்டென இறக்கை பூட்டிக்கொண்டு
கடந்தகாலம் ஏகுகிறேன் அரூபமாய்.
இன்று பூத்துக் குலுங்கும்
வாழ்வு விருட்சத்துக்கு
அன்றே விதையூன்றிய ஒருத்தியைத் தொட்டு
பிரியங்கள் வழிய
நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
அசாதாரண சந்தர்ப்பங்களை
அச்சமின்றித் துணிவோடு எதிர்கொள்ள
தன் அனுபவங்கள் வழி
ஆற்றுப்படுத்தியவளைப் பார்த்துப்
பெருமிதத்தை வெளிப்படுத்துகிறேன்.
எதற்கும் வருத்தமின்றி
எப்போதும் சிரித்து உற்சாகமூட்டியவள்
இப்போதும் புன்னகைக்கத் தூண்டுகிறாள்.
அப்போது நிழல்போல உடனிருந்து
அகால மரணமடைந்தவள்
பார்வையிலிருந்தே மறைகிறாள்
திரையிடும் கண்ணீரால்.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அழைப்புகள்

அழைப்புகள் என்றுமே
எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கும்
சில நேரங்களில் விடுபட்ட அழைப்புகள்
சில நேரங்களில் தவறிய அழைப்புகள்
பல நேரங்களில் துண்டிக்கப்பட்ட அழைப்புகள்

என்றென்றைக்கும் அழைப்புகளால்
நமக்குத் தக்கவைக்கப்படும் உணர்வுகள்
எதை நமக்கு உணர்த்துகின்றன?

முகம் மறந்து
குரல் நினைவு மட்டும்
முகம் தெரிந்து
குரலுக்காக மட்டும்

நாம் என்றுமே
ஏதோ ஓர் அழைப்புக்காகக்
காத்துக்கொண்டேதான் இருக்கிறோம்!

ஈசலுக்காக மின்கம்பிகளில்
காத்திருக்கும் டைலான்போல...

 - ஜீவா


64p1_1526378603.jpg

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சாமானியனின் அச்சம்

ஒரு தேநீர் பருகச் செல்லும் முன்பே
பாலில் கலப்படம்
தேநீர்த் தூளில் கலப்படம்
வெள்ளைச் சர்க்கரை ஆகாது
இஞ்சியைத் தோல் நீக்கி உபயோகி என
அத்தனை அச்சம் விழிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு
ஒரு தேநீர் பருகவேண்டிய நிர்பந்தம்
சாமானியனுக்கு.
ஒரு கீரைக்கட்டு வாங்கப் போகும்போதும்
இயற்கை உரம், கெமிக்கல் பூச்சிக்கொல்லி
இப்படியான அச்சம்.
அமாவாசைக்கு வேறென்ன வாங்க?
ஞாயிறுக்கும் அப்படியே...
பிராய்லர் கறி, வளர்ப்பு நாட்டுக்கோழி,
ஹைபிரிட் மீன் அச்சம்,
கார்ப்பைட் கல் மாம்பழம்
செறிவூட்டிய தக்காளி என
அச்சம்... அச்சம்...
பிறகு எதைத்தான் அச்சமின்றித் தின்பது?
ஒரு கோப்பை மது?
அங்கும் தொங்கிய பிள்ளை
பேரச்சமாய் இருக்கிறது சாமானியனுக்கு.
சாமானியனை ஏன் இப்படி
அச்சப்படுத்த வேண்டும்?
சாமானியர்கள் அச்சத்தோடு இருப்பதில்
சுழல்கிறதா இரவும் பகலும்?
யார் இரவு அது?
அங்கே அச்சமின்றி
உழைப்பதும் உறங்குவதும் யார்?

- கோகுலா

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.