Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடை

Featured Replies

 

மடை

இருவார சிறுகதை

- உமாமகேஸ்வரி

சின்னக்கா தோசைச் சட்டியைத் தேய்த்துக் கழுவி திருப்தியாக அதன் பளபளப்பைப் பார்த்துவிட்டு, கொல்லைப் புறத் தென்னை வரிகளிட்ட ஆகாயத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அப்படி என்னதான் தேடுகிறாளென்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். தென்னைக்கு உரம் வைக்க வேண்டும் என்று நினைப்பாளோ என்னவோ. ஆமாம், நாளாகிவிட்டது. இரண்டு மரங்களும் காய்க்காது மொட்டையாக நிற்கின்றன.

மேலே கருடன் பறக்கிறது போல. அக்கா ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டாள். கண்ணில் நுனி விரல்களால் கற்பூரத்தை வணங்குவது போல் ஒற்றினாள். பிறகு தன் புடவையை இறக்கிப் பாதம் வரை தழைத்தாள். ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்...’ பாடியவாறே பித்தளைக் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டாள். அப்போதும் ஆகாயத்தில் எதையோ தேடினாள். தென்னையின் நிழல் சுவரில் வரைந்த கறுப்பு வரிகள்... அவள் அதற்கு நடுவில் நின்று தன்னையும் சேர்த்துப் பார்த்தாள்.

இடுப்பில் குடம்; அவசரத்தில் பின்னாமல் தூக்கிக் கட்டிய கூந்தல்; கழுத்தில் கொஞ்சம் அகலமான முருகன் டாலர்; காதில் அகலமான தொங்கட்டான்கள்; அவற்றை லேசாக ஆட்டினாள்; நிழலும் ஆடியது. நறுவிசாகக் கட்டப்பட்ட புடவை காற்றில் விசிறிப் படபடத்தது. அழகான நிழல்தான். ‘‘ஒரு குடம் தண்ணீர் இறைக்க இம்புட்டு நேரமா?’’ உள்ளிருந்து பாமாவின் குரல் கேட்டது.
5.jpg
‘‘சின்னக்கா! என்ன பண்ற?’’ மறுபடி கூர்மையாக நிசப்தத்தில் பாயும் குரல். ‘‘வந்துட்டேன்... வந்துட்டேன்!’’ கத்தியபடியே உள்ளே நடந்தாள். குடத்தை அடுப்படி மேடையில் இறக்கி வைத்தாள். ‘‘குட்டிமா வரும் நேரமாச்சு’’ என்று பாமா கொழுக்கட்டை மாவை எடுத்து சின்னக்காவின் கையில் கொடுத்தாள். ‘‘பிசைஞ்சு உருட்டி உள்ளே தேங்காயும் சீனியும் வச்சா போதும்...’’ - பாமா ‘‘குட்டிமாவுக்கு கடலைப் பருப்பு பூரணம்தாம்மா பிடிக்கும்...’’ சின்னக்கா சொன்னாள்.

‘‘இப்போ நேரமில்லையே; தேங்காயும் சீனியும் போதும்...’’ குரல் அத்துக்கிடந்தது பாமாவுக்கு. ‘‘அது சாப்பிடாது...’’ ‘‘சாப்பிடாட்டி இருக்கட்டும். நீ அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கிற சின்னக்கா...’’ ‘‘அது இஷ்டப்பட்டதாச் செஞ்சு குடுப்போமே...’’ என்றாள் சின்னக்கா வாஞ்சையாக. பாமா ஒரு பதிலும் சொல்லவில்லை. அவள் டிவியில் ஆழ்ந்திருந்தாள். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்; பகலுக்கு ஒன்றே ஒன்று...’ என்ற பாடல் ஓடியது. உச்சுக் கொட்டிபடி சேனலை மாற்றினாள்.

‘உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்...’ மெய் மறந்தாள் அவள். ‘‘மீனா சேலை எல்லாம் அழகா இருக்குல்ல சின்னக்கா?’’ கண் கொட்டாமல் பார்த்தபடி கேட்டாள். ‘‘ஆமாமா, அது மீனாக்கு ரொம்ப நல்லாயிருக்கு...’’ என்றாள் சின்னக்கா. சின்னச் சின்னதாக மாவை எடுத்து இடது கை மையத்தில் வைத்து உருட்டினாள். உருண்டைகள் அச்சாக ஒரே மாதிரி கோலிக் குண்டின் அளவிலிருந்தன. ஒன்றுபோல ஒரு பிசிறோ, பிசகோ இல்லாமல் உருட்டி உருட்டித் தாம்பாளத்தில் குவித்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் யாரோ மரக் கதவின் திருகு தாழ்ப்பாளைத் திறக்கும் ஒலி. பள்ளிக்கூட ஷூக்களைக் கழற்றும் சத்தம். ‘‘அம்மா...’’ சிறிய ரெட்டைப் பின்னல்களைப் பின் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் ஷிவானி. அவள் முகம் லேசாக அயர்ந்திருந்தது. கைகள் அனிச்சையாகக் கழுத்துப் பட்டியை நெருடிக்கொண்டு இருந்தன; ‘‘கையை எடு ஷிவானி...’’ அம்மா சொல்வதை அவள் கேட்பதே இல்லை. இப்போது கழுத்துப் பட்டியை விரலால் பற்றியெடுத்து அதன் நுனியை வாயில் போட்டு உறிஞ்சினாள்.

‘‘ச்சீ, கடிக்காதடி. என்ன பழக்கம்... துணியைக் கடிச்சிக் கிட்டு, பச்சப் புள்ள மாதிரி...’’ அம்மா திட்டிக்கொண்டே பின்னல்களை இணைத்துக் கட்டிப் பின்புறம் கொண்டையிட்டாள். ஷிவானி அவள் தோளில் சாய்ந்து கொண்டு புடவை நுனியைச் சப்பினாள். ‘‘என்ன இது... விடு விடு...’’ அம்மா முனகிக்கொண்டே சேலையை விடுவித்துப் பட்டாசாலைக்குப் போனாள்; டி.வி.யைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.

‘‘நீயா? ஹஹ்ஹஹ்ஹா!’’ என்று அலறியது அதில் வரும் பேய்; பாமா சுவாரஸ்யமாக மடியில் குஷனை எடுத்துப் போட்டு வருடிக்கொண்டே பார்த்தாள். கொழுக்கட்டை வாசனை வீடு முழுக்க வந்தது. கொதி நீரில் மாவுருண்டைகளை சிதையாமல் பையப் போட்டு வேகவைத்த உருண்டை; சீனி, தேங்காய் போட்டு கமகமவென ஏலக்காய் மணக்க... சின்னக்கா சுடச்சுட பால் கொழுக்கட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி முந்தானையில் பதனமாகப் பொதிந்துகொண்டு வந்து ஷிவானியின் பக்கத்தில் இருந்த குட்டை மேஜையில் வைத்தாள்.

‘‘குட்டிமா கொழுக்கட்டை...’’ அவள் வாயை ஆவென்று திறந்தவாறே கலர் பென்சிலால் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். ‘‘ம்... ம்...’’ என்றாள். ‘‘கொதிக்குது, பார்த்து, சூதானமா சாப்பிடு...’’ ‘‘நீங்க ஊட்டுங்க சின்னக்கா...’’ ‘‘இரு குட்டிம்மா, வேலை நிறைய இருக்கு...’’ அவள் மஞ்சள் பென்சிலைக் காகிதத்தில் தீட்டினாள். சின்னக்கா பட்டாசாலைக்கு வெளியே இருந்த திறந்தவெளியில் மதிலோரப் படிக்கட்டுகளில் விறுவிறு என்று ஓட்டமும் நடையுமாக ஏறினாள்.

காய்ந்த உருப்படிகளை இரண்டு கைகொள்ளாமல் அள்ளிக்கொண்டு வந்தாள். ‘‘விழுந்திடாதீங்கக்கா. இப்புடி ஓடுறீங்க...’’ கீழிருந்து கத்தினாள் ஷிவானி. அவள் கை மருதாணிச் செடியை வருடிக் கொண்டிருந்தது. அவள் பிறந்த அன்றுதான் அந்தச் செடியையும் நட்டார்களாம். அது இப்போது அவளுடைய வளர்த்திதான் இருக்கும். அழகாய்ப் பச்சைப் பசேெலன்று தளதளவென்று நிற்கிறது. மெல்ல பல்கிப் பெருகி ஒரு பச்சை வெளியை உருவாக்கி வைத்திருந்தது வீட்டுக்குள்.

‘‘இன்னிக்கு என்ன டிபன் சின்னக்கா?’’ ‘‘பால் கொழுக்கட்டை; பக்கத்திலயே வச்சனே ஷிவானி... பார்த்து ஆறியிருந்தா சாப்பிடு; நாக்கைப் பொத்துக்காதே...’’ ஷிவானி கன்னத்தின் மையத்தில் சிவப்பாக முளைவிட்ட பருவைப் பார்த்தாள்; அதை விரலால் நெருடினாள்; ‘‘அதத் தொடாத... தழும்பாகும்...’’ எச்சரித்தபடியே அடுப்படிக்குள் ஓடினாள். அவள் வாய் ‘மேற்கே மேற்கே மேற்கேதான் சூரியன்கள் உதிக்கிறதே...’ என்று பாடியது.

ஒரு நிமிஷம் வாய் சும்மா இருக்காதே, எப்பப் பாரு பாட்டு, பேச்சு, கதை... ‘‘இது என்ன பாட்டு?’’ ‘‘தெரியலிங்கமா. எஃப்.எம்.மில் குட்டிமா போட்டுச்சு...’’ ‘வாவி நீரில் கமலம் போலாழ மெல்ல... ம்ம்ம்... கண்ணின் மணியே, என் தோளில் நீ...’ ‘‘அடக் கடவுளே, இது என்னவாம் பாட்டு?’’ ‘‘குட்டிமாவோட மொபைல் ரிங்டோன் இதானே.’’ ‘‘ஓ, அது வேறயா..? நீயும் உன் குட்டிம்மாவும்...’’ அம்மா அழகாக அலுத்துக்கொண்டாள்.

‘‘ஆமா, நானும் என் குட்டிம்மாவும்...’’ பெருமிதமாகச் ெசால்லிக்கொண்டே, துவைத்த உருப்படிகளை அழகாக மடித்து வைத்தாள். பால் கொழுக்கட்டை சாப்பிட்ட கிண்ணமும் ஸ்பூனும் கையில் எடுத்துக் கழுவும் தொட்டிக்கு நடக்கப் பார்த்தாள் ஷிவானி. ‘‘நீ இரு குட்டி...’’ சின்னக்கா கிண்ணத்துத் தண்ணீரில் ஷிவானியின் விரல்களை முக்கி எடுத்துக் கையோடே இருந்து டவலில் ஒற்றினாள். ஷிவானி திரும்பி உதட்டை சின்னக்காவின் புடவையில் ஒற்றி எடுத்தாள். சின்னக்கா சிரித்தாள். சாப்பிட்ட கிண்ணத்தை எடுத்தாள். ‘‘என்னடா இது..?’’ என உள்ளே போனாள்.

ஷிவானி பாத்ரூமிற்குள் போனாள், ‘மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை...’ என்றபடி. ‘‘நீயும் ஆரம்பிச்சுட்டயா...’’ என்றார் அம்மா பெருமிதம் பொங்க. சடசடவென்று திடீர்த் துளிகள்; படபடவென்று மழை இறங்கி முற்றத்தில் பெருகியது. நைட்டியோடு தலையில் சுற்றிய டவலுடன் பாத்ரூமைத் திறந்தாள் ஷிவானி. கடகடவென்று பெருஞ்சாரல் விசிறும் மழை; குளுகுளுக்கும் வான் கருணை.

‘‘யே நில்லு... நில்லு நில்லு... சொன்னாக் கேளு...’’ ஷிவானி பின்னே ஓடினாள். ‘‘குடை எடுத்துட்டு வரேன் குட்டிமா, நல்லா சளி பிடிக்கும்...’’ அவள் எங்கே கேட்கிறாள்? மழைக்குள் இறங்கி கொலுசுக் கால்களால் அலையத் தொடங்கினாள், குட்டிக் கைகளில் வானத்தைப் பிடித்தாள்; ஒரே குதூகலம்; அவள் உதட்டில் உல்லாசமான ‘லலலா, லலலா; ம்ம்; ம்ம்...’ என்று வார்த்தைகளில்லாமல் ஏதோ மெட்டு.

‘‘ஏ... வா, வா, வா, அம்மா கோபிப்பாங்க...’’ ஷிவானி காதிலேயே வாங்கக் காணோம்; குடையைத் தள்ளிவிட்டாள்; மழைக் குட்டிகளைப் பிடித்துக் கைநிறைய இவளிடம் தந்தாள். ‘‘யேயேய், பனியா இருக்கு...’’ இவள் நடுங்கிக் கையை உதறினாள். ‘‘பனி மழைடா... வேணாம், வா வா...’’ அதட்டினாள். ‘‘ம்... ஆமாம். பனி மழை...’’ அவள் கைகள் மழையைத் துழாவிக்கொண்டு முகம் ஒரு மலர் போல மேலே நிமிர்ந்து ஆகாயத்தை அருந்திக்கொண்டு... ‘‘என்னதிது, காய்ச்சல் வரும்...’’ - அம்மாவின் உரத்த குரல்.

‘‘எவ்வளவோ சொன்னாலும் கேட்க மாட்டேன்னுது...’’ ‘‘உள்ள வாயேன். அப்பா வரும் நேரம். போதும், ஒத்துக்காது...’’ கவலையான குரலை அவள் ஒதுக்கினாள். ‘‘வர்ரியா, இல்லையா... பாரு அப்பா கூப்பிடுறாரு. ஃபோன்ல. லைன்ல இருக்காரு...’’ என்று பொய்யை ஒளித்துக் கத்தினாள். ‘‘வரேன்மா. ப்ளீஸ்... கொஞ்ச நேரம்...’’ மழையைப் பிரிய மனமில்லாமல் வானம் சொட்டும் உடைகளோடு உள்ளே வந்தாள். கூந்தலைத் துண்டால் ஒற்றி எஞ்சிய துளிகளை அம்மா மீது அடித்தாள் விளையாட்டாக.

‘‘சும்மா இரு...’’ என்று அம்மா கை ஓங்கினாள். சிடுசிடுக்கும்படி முகம் சிவந்து அழகுற்றது. அம்மா சும்மாவே நல்ல நிறம். அழகு. இப்போது முகம் இன்னும் கூடக் கொஞ்சம் சிவுசிவுத்து அழகுற்றுவிட்டது. அவள் உடை மாற்ற உள்ளே போகும் மகளைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஒரு ஆழ்ந்த மௌனம் அவள் மீது படிந்தது. குன்றின் மீது சிறுகற் படிகள் பல தாண்டி நடந்து பிறகு குடைந்த பாறைக் குகைக்குள் நுழைந்ததும் இதயத்தில் கவியும் அற்புத மோனம் அது. அதை யார் முன்னும் கலைக்காமல் அம்மா பத்திரமாகப் பொத்தி வைப்பாள்; அவளே கத்திவிட்டாள். கனமான குட்டிக் கண்ணாடிக் கோலிக் குண்டுகள் போல் விழும் மழை கண்டு...
 

(அடுத்த இதழில் முடியும்)

www.kungumam.co

  • தொடங்கியவர்

மடை

- உமாமகேஸ்வரி

‘‘பார்... பார் கண்ணாடி மழை...’’ மழையின் கண்ணாடிகளை முந்தானையில் பிடிக்க ஓட்டமாக ஓடி வந்தாள் சின்னக்கா; நெற்றியில் இட்ட விபூதி குங்குமம் கரைந்தோட, நீலத் தாவணி உடலோடு ஒட்ட நின்றாள்; உள்ளிருந்து ஷிவானியும் மீண்டும் வந்துவிட்டாள்; நிலையருகே நின்று மழை பார்த்தனர் பரவசமாகி. ஒரு மூன்று நான்கு நிமிஷம்தான். சட்டென நின்று வானம் பளிச்சென்று நிம்மதி நீலம் கொண்டது; சின்னக்காவின் தாவணி நிறத்தில் நிர்மல நீலம். ‘‘ம்ம் முடிஞ்சது வா. போலாம் வா...’’முணுமுணுத்தாள் ‘‘நீதானே என் காதல் வேதம், பாதம் உன் பாதம்...’’‘‘யாருக்கா அது?’’ குறும்பான கேள்வி.‘‘யே, போடா, சும்மாடா...’’ என்று செல்லத் தட்டு தட்டினாள்.
8.jpg
அவள் தாவணி மாற்றி உள்ளே போனதும், இவள் அலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டாள். ‘‘வேணாம். இது என்னது?’’ ‘‘விளையாடுறேன் அக்கா...’’ அவள் நிமிரவேயில்லை. ‘‘வேணான்டா. வா கதை பேசலாம்; இந்த செல்போன் வெளிச்சம் கண்ணில் கருவளையம் கட்டும்...’’ அக்கா அக்கறையாய்ச் சொன்னபடியே அதை வாங்கி டிவி மேல் வைத்தாள். அவளுடைய கன்னத்தை வருடியபடியே கதை சொல்ல ஆரம்பித்தாள். ஒரு மகாராஜா, அவருடைய மகள், அவளுடைய அழகு, அவளைக் காதலிக்கும் ஓர் ஏழை இளைஞன் என்று போன கதை... யார் இதில் பாவம் என்று கேட்டது வேதாளம். ‘‘யார் பாவம் இவங்க மூணு பேரில்?’’‘‘எல்லோருமே பாவந்தான்...’’ பதில் தரக் குழம்பினாள்.

‘‘அய்யோ! பாவம் அந்த மகாராஜாதான் விக்கிரமாதித்யன் சரியாகப் பதில் தர, வேதாளம் மீண்டும் முருங்கையிலேற... கதையும் முடிஞ்சதாம்; கத்திரிக்கா காய்ச்சதாம்...’’ சிரிப்பு அள்ளியது ஷிவானியை. அவளிடம் சொல்ல ஆயிரமாயிரம் கதைகள் இருந்தன; குள்ளர்கள், அரக்கர்கள், அழகி கள், சிறுமிகள், இளவரசர்கள், பாடகர்கள், சிங்கம், முயல் குட்டிகள், பிளிறும் யானைகள், கானகங்கள் பூக்கும் கணக்கற்ற கதைகள். கேட்டுக்கொண்டே கண் கிறங்கி உறங்குவாள் ஷிவானி; அக்கா போய்விடக் கூடாது என்று தாவணி நுனியை ஆள்காட்டி விரலில் சுற்றி இருப்பாள்.

அவள் உறக்கம் கலையாமல் பையப் பதறாமல் விடுவித்துப் போவாள்; ஒரு தரம் அவள் சிணுங்கவும், அம்மா வேறொரு தாவணியைக்கையில் கொண்டு வந்தாள்; ஷிவானி பிடித்திருந்த தாவணி அவள் கையிலேயே இருக்க விட்டுவிட்டு, இவள் வேறு ஒன்றை மாற்றினாள். பள்ளிவிட்டு வருகையில் ‘‘அம்மா...’’ என்ற அழைப்பிற்குப் பதில் ‘‘சின்னக்கா...’’ என்று கத்திக் கொண்டே வந்தாள் ஷிவானி. பசித்தால் சின்னக்கா; தூக்கம் வந்தால் சின்னக்கா; தலை பின்ன சின்னக்கா... புதிய உடையில் பின்புறக் கொக்கி போடவும் அக்காதான். அம்மாவின் அழைப்பைப் புறந்தள்ளி எப்போதும் ‘அக்கா, அக்கா, அக்கா’ அம்மா தீபமேற்றி அமர்ந்து விடுவாள் கோபம் ஜொலிக்க.

அன்றைய காலை பளீரெனெப் புலர்ந்து வாசலுக்குள் வந்தது. பால்காரரின் சைக்கிள் மணி, கோலங்களில் படாமல் வைக்கப்படும் செய்தித்தாள் எனக் காலையின் இடையில் அம்மாவோடு பேசும் ஒரு பெண் குரல்; ஷிவானி கொட்டாவியோடு எழுந்தாள்; அக்கா அவளுடைய ப்ரஷ்ஷில் பற்பசையைப் பிதுக்கி வைத்திருந்தாள் தயாராக. ஷிவானி நுரை பொங்கப் பல் தேய்த்தாள்; பேச்சுத் தொடர்கிறது போல. ‘‘சின்னக்கா...’’ என்ற அவள் அழைப்பிற்குப் பதில் இல்லை; அவள் தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கினாள். இது புதிதான ஒரு பழக்கம்; எதற்கெடுத்தாலும் தோள் உயர, கைகள் விரிய, உதடு பிதுக்கும் செயல்.

‘‘சின்னக்காவுக்குக் கல்யாணம்; அவங்க அம்மாதான் வந்திருந்தாங்க...’’ அம்மா சொல்வதைக் கவனமாகத் தலையசைப்புகளோடு கேட்டுக்கொண்டாள். அம்மா கொசுவத்தைச் சரி செய்தபடியே பேசினார். சின்னக்காவை சாயங்காலம் பார்க்க முடிந்தது. வெட்கத்தில் பூரித்த கன்னங்களுடன். ‘‘ஊருக்குப் போறீங்களா?’’ ேகட்க நினைத்தவள் கேள்வியை விழுங்கினாள். ‘‘நாளை கிளம்புறேன்...’’ என்று அவளே சொன்னாள் கனவில் செருகும் கண்களோடு. ‘வசீகரா...’வும் ‘செந்தூரா...’வும் அன்று அவள் வாயிலிருந்து புறப்பட்டு வீட்டை வலம் வந்தது. பாடிக்கொண்டே தன் பையை அடுக்கித் தயாரானாள்.

பிறகு, வெகு நாட்களாயின. கதை கேட்கும் பழக்கம் மறந்தது. ‘‘நீயே உரித்துச் சாப்பிடப் பழகு...’’ அம்மா வைத்த அவித்த கடலையைச் சாப்பிடாமல் தள்ளிவைத்து, ‘‘சின்னக்கா’’ என்று மனதுக்குள் ஏங்கினாள். ‘‘சாப்பிடு நீயே, சின்னக் குழந்தையா?’’ முன்னே வைக்கப்பட்ட சாதத் தட்டை வெறுமனே பிசைந்துவிட்டு எழ யத்தனித்தவளுக்கு அம்மா அலுத்தபடி ஊட்டுவார்கள். அம்மாவோடு யாரோ பேசக் கேட்டது. பழைய குரல்தான்; எழுந்திருக்கச் சோம்பல்பட்டு கட்டிலில் கிடந்த கரடியைக் கட்டிக்கொண்டாள். ‘‘ஷிவானி...’’

‘‘என்னம்மா? தூங்குறேன்மா...’’ கூர்மையான குரலில் சொன்னாள். அவளுக்குக் கொஞ்சம் எரிச்சலாகவும் நிறைய சோம்பலாகவும் இருந்தது. மேலும், காலம் மாற்றியிருக்கக் கூடிய சின்னக்காவின் பிம்பத்தைப் பார்க்க, சந்திக்க, சற்றுப் பயமாகவும்கூட. ‘‘ஒரே ஒரு நிமிஷம் பாப்பா, கீழே வாயேன், யார் வந்திருக்காங்கன்னு பாரு...’’ அம்மாவின் கெஞ்சல் நீண்டது. ‘‘வரேன்மா...’’ சொல்லிவிட்டு தன்னைக் கண்ணாடியில் சரி பார்த்தாள். இரட்டைப் பின்னல்களில் ஒன்றை முன்னால் இடது தோளிலும் மற்றொன்றை பின் முதுகிலும் போட்டுக்கொண்டாள். அம்மாவும், சின்னக்காவும் பேசும் குரல்கள்.

‘‘நல்லபடியா அவங்க குடும்பத்திற்கேற்ற பொண்ணாக நடந்துக்க... சரியா? எப்பவும் சிரிச்ச முகத்தோட பளிச்னு குளிச்சு சேலை உடுத்தி இருக்கணும்... நீ நல்ல பொண்ணு. உனக்கு ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சொல்றேன்...’’ ‘‘சரிங்கம்மா...’’ ‘‘பண விஷயங்களை உன் மாமியார், மாமனாரிடம் விட்டுடு. நீ உனக்கு வேண்டியதை மாப்பிள்ளைகிட்ட கேட்டு வாங்கிக்க...’’ ‘‘சரிம்மா...’’அம்மாவும், சின்னக்காவும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். புதிய பளபளக்கும் செங்கல் நிறப் புடவை. கருப்பு ஜரிகை பார்டர். புடவையில் ஜிகுஜிகு ஜிகினாக்கள். கிளம்பும்போது அதிசந்தோஷமாக இது போலப் பளபளக்கும் புடவையை முதல் முறையாக உடுத்தி இருந்தாள்.

சின்னக்கா முடியை அழகாக விரித்து விட்டிருந்தாள். இப்போதும் அதே போல் விரித்த கூந்தல்தான். அதில் மல்லிகைச் சரம். எப்போதுமே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுத்தான் பவுடர் போடுவது அவள் வழக்கம். ‘‘நல்லா அடர்த்தியா ரெண்டு இஞ்ச்சிக்கு பவுடர்... அவ இஷ்டம் அவ போட்டுக்கிறா...’’ அம்மா சிரிப்பாள்சின்னக்காவின் முகத்தில் ஓர் அழகிய அயர்வு பூசியிருந்தது. ஐந்து மாதம் இருக்கலாம் அவளைப் பார்த்து. தூரத்திலிருந்தே தலையசைத்து ‘‘ஹாய், சின்னக்கா...’’ என்றபடி அம்மாவின் அருகே உட்கார்ந்து கொண்டாள்.‘‘குட்டிமா...’’ என்று எழுந்ேதாடி வந்தாள் சின்னக்கா. தன்னை அணைக்க நீண்ட அவள் கைகளை நிதானமாக விலக்கிவிட்டு தன் கையில் இருந்த அலைபேசியை ஆட்காட்டி விரலால் தட்டினாள்.

இவள் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டாள். ‘‘குட்டிமா என்னைய மறந்துட்டியா?’’ ஏங்கியிருந்தது சின்னக்காவின் குரல். ‘‘இல்லை...’’ வெற்றுத் தலையசைப்பு. ‘‘அம்மா, என் கம்ப்யூட்டர் காசு ஏத்தியாச்சா..?’’ அவள் ஹாலில் மூலையில் இருந்த கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாள். ‘‘நேத்தே போட்டாச்சுடா; சொன்னாரு கஜேந்திர மாமா...’’ ‘‘ஏன் அதில்லாம முடியாதா? எப்பப் பாரு கம்ப்யூட்டர்; அப்புறம் இந்த மொபைல். இவகூட பேசினா என்ன, உன்னைய பார்க்கத்தானே வந்திருக்கா...’’ ஷிவானி குவிந்த உதடுகளோடு தன் கம்ப்யூட்டரைத் தட்டிக்கொண்டு இருந்தாள். ‘‘வேலைதான்மா பார்க்குறேன் இதில்; என்ன பேசணும்?’’ என்றாள். விரல்கள் தட்டச்சுப் பலகையில்; கை மவுஸை நகர்த்தியபடி. கண் தன் அலைபேசி மீது.

‘‘இப்படியேதான் சதா சர்வ காலமும்...’’ - அம்மா. ‘‘அது பார்க்கட்டும்மா பார்க்கட்டும்...’’ என்றாள் சின்னக்கா பரிவோடு. ‘‘குட்டிமா, பலகாரம் ஏதாவது பண்ணட்டுமா?’’ ‘‘இப்பவெல்லாம் அவ அது ஒண்ணும் சாப்பிடறதில்லை; அவங்கப்பா வாங்கி வந்த பீட்ஸா, பர்கர் இதான்; ஃப்ரிஜ்ஜிலேயே வச்சு, வச்சு... அது நல்லதில்லனு சொன்னா... அப்ப சாண்ட்விச்... இதேதான்...’’‘‘உடம்பப் பார்த்தா நறுங்கிப் போயிருக்கா...’’ ‘‘ஆமா, ஒண்ணும் சாப்பிடறதே இல்லை...’’ ‘‘எப்பப் பார்த்தாலும் என்னை ஏதாவது சொல்லுங்க...’’ கோபம் மின்னும் முகம் ஷிவானிக்கு. ‘‘கேப்பரொட்டி போடவா செல்லம்? உளுந்த வடை?’’ பக்கத்தில் வந்து கெஞ்சினாள் சின்னக்கா.

‘‘அவிங்க எல்லாம் இப்ப கட்லெட். எங்க போனாலும் முதல்ல ஆர்டர் பண்ணுவது கட்லெட்தான். அப்புறம் ப்ளாக் கரண்டாமே அந்த ஐஸ்க்ரீம்...’’ அம்மா கோபமாகச் சொன்னாள். அவள் பேசாமல் கம்ப்யூட்டரைப் பார்த்தபடியே ‘‘ஓ... காட்!’’ என்றாள். ‘‘பார்த்தியா, இப்படியேதான்...’’ ‘‘சரி விடுங்கம்மா அவளை...’’ அடுப்படிக்குள் நுழைந்தார்கள் இருவரும். அம்மா கையில் இருந்த தேங்காய் மூடியை வாங்கி சின்னக்கா துருவ ஆரம்பித்தாள். அவள் முகத்தில் இருந்த  அயர்ச்சி புதுமணப் பெண்ணினுடையதுதான்; ஆனால், ஏதோ ஒன்று குறைகிறதே என்ன? அம்மாவுக்குப் புரியவில்லை.

‘‘என்னத்துக்குமா என்னைய அப்புடிப் பார்க்குறீக, சீல சரியாக் கட்டலையா?’’ ‘‘அதெல்லாம் ரொம்ப நல்லா கட்டியிருக்க. ஆனா... சரி சரி, வேலையப் பார்ப்போம்...’’ அவள் தேங்காயைத் துருவி முடித்து, காய்களை நறுக்கத் தொடங்கினாள். ‘‘வேல பார்க்கிறவங்க எப்பமா வருவாக?’’ ‘‘ஆடியசைஞ்சு பதினோரு மணி ஆயிடும்; ஒப்புக்கு அப்படியும் இப்படியும் லேசா செஞ்சுட்டு ஓடுறதிலேயே குறியாயிருக்கும்; எப்பப் பாரு ஓங்கி ஓங்கிப் பேசும். எனக்கு படபடனு வந்திடுது. இதில் அதோட மக ஒண்ணு வரும்; ரெண்டு பேரும் சேர்த்து தெலுங்கிலயே பேசுவாங்க. எனக்கென்னமோ என்னையத் திட்டுறாப்பில இருக்கும்...’’

‘‘நானே வரட்டுமா?’’ ‘‘எங்கிருந்து, மணிக்காரப்பட்டியில் இருந்தா...’’ ‘‘சும்மாரு, நான் சமாளிக்கிறேன்...’’ என்றபடி ‘‘குடு, நானும் நின்னுகிட்டே காய் வெட்டுறேன்...’’ ‘‘முகம் சோர்ந்திருக்கே, ஏன்?’’ அவள் புன்னகைத்து, அரிவாள் மணையைத் தூக்கி எழுந்தாள். ‘‘விசேஷமா?’’ சந்தேகமான கேள்வி. ‘‘அடிப்பாவி! முதல்லயே சொல்லக்கூடாதா, வேல செய்ய விட்டுட்டேனே...’’ ‘‘இதெல்லாம் ஒரு வேலையா, எங்க ஊரில் வயுத்தில பிள்ளையோட கள எடுப்பாக, புளித் தட்டுவாக...’’ என்றாள் சின்னக்கா; அம்மா சிரித்தாள். இப்போது அவளிடம் இருந்த குறையை அம்மா கண்டுகொண்டாள்.

‘‘என்ன இது பாட்டு கூத்து ஒண்ணியுங்காணோம். ஒரே கப்சிப்...’’ ‘‘ஆமா, அவுகளுக்கு பாட்டெல்லாம் புடிக்காது; பாடினாலும் பிடிக்காது; அதான்...’’ தலையைக் குனிந்து கொண்டாள். ஷிவானியின் காதிலும் இது விழுந்தது. அவள் கணினியை அணைத்தாள்; விரைவாக அடுப்படிக்குள் வந்தாள்; அம்மாவும், சின்னக்காவும் பட்டாசாலைக்கு நடந்தார்கள்; அவள் சின்னக்காவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள். ‘‘அதுக்குள்ளியுமா...’’  என்ற அம்மா, உள்ளே ஓடி தன் சேலை அடுக்கைத்  துழாவினாள். சின்னக்கா தயங்கினாற்போல் அவள் கையைப் பற்றிக்கொண்டாள்; மடை திறந்தாற்போல ‘‘கொழுக்கட்டை வேணுமா, புட்டு, மருதாணி வச்சுவிடவா...’’ என்று பேசினாள். அவள் சிரித்தாள் ‘களுக்’கென்று.

 

www.kungumam.co

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.