Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்து வீட்டுத் திட்டத்தில் மறைமுக நிகழ்ச்சிநிரல்

Featured Replies

பொருத்து வீட்டுத் திட்டத்தில் மறைமுக நிகழ்ச்சிநிரல்
 

புலனாய்வு

- நிர்மலா கன்னங்கர

பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக, பிரான்ஸ் நிறுவனமொன்றுக்கு, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்துக்குப் பின்னால், மறைமுக நிகழ்ச்சிநிரல் ஒன்று காணப்படுகிறது என்ற ஊகம், பரந்தளவில் ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில், போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள இந்தப் பொருத்து வீடுகள், அதிக செலவில், குறைந்த தரமுடைய பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளன என்ற கரிசனையும் ஏற்பட்டுள்ளது.

குறைந்த செலவுடைய, செங்கற்களாலும் சீமெந்தாலும் கட்டப்படும் வீடுகளை விடுத்து, மோசமான காற்றோட்டம் கொண்ட இந்தப் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, எதற்காக இத்தனை “ஆர்வத்தை” வெளிப்படுத்துகிறது எனக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பொதுப்பணிப் பொறியியலாளரும் பட்டயக் கட்டடப் பொறியியலாளருமான பேராசிரியர் பிரியன் டயஸ், பொதுப்பணிப் பொறியியலாளரும் பட்டயப் பொறியியலாளருமான கலாநிதி ரங்கிக ஹல்வதுர, பட்டயக் கட்டடக் கலைஞரான  வருண டி சில்வா ஆகியோரால், மாதிரி வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் ஆரம்பநிலை அறிக்கைகளின்படி, கூரைகளுக்கு இடையிலும் கதவுகளுக்கு இடையிலும் ஜன்னல்களுக்கு இடையிலும் வலைத்தட்டுகள் காணப்படாத நிலையில், பொருத்து வீடுகளில் போதியளவு காற்றோட்டம் இருக்காது என்ற பொதுவான முடிவுக்கு வரப்பட்டுள்ளது. 

வெப்பமான காற்றை வெளியேற்றுவதற்கு அனுமதிப்பதில்லை என்ற அடிப்படையில், இந்தப் பொருத்து வீடுகள், வெப்பமான காலநிலை கொண்ட பகுதிகளுக்கு பொருந்தாது என, அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலதிகமாக, குளிரான காலநிலை கொண்ட இடங்களுக்கோ அல்லது வெப்பமான காலநிலையில் வளி பதனப்படுத்தி பொருத்தப்படுவதற்கோ, இவ்வீடுகள் பொருத்தமானவை என்றும், அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து, 2015ஆம் ஆண்டு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன. முப்பத்தைந்துக்கும் மேற்பட்டோர், விலைக்கூற்றுகளைச் சமர்ப்பித்தனர்.

ஆனால், அரசாங்கத்தால் கோரப்பட்ட மிகப்பெரிய விலை-கேட்புப் பிணைமுறி காரணமாக, இரண்டு தரப்புகள் மாத்திரமே, அவற்றை வழங்கக்கூடியவாறு அமைந்தன.

பிரான்ஸைச் சேர்ந்த ஆர்செலர்மிட்டல், இந்தியாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனமான ஈ.பி.ஐ-ஓ.சி.பி.எல் கொன்சோர்ட்டியம் ஆகியனவே அந்த இரண்டு தரப்புகளுமாகும்.

முன்வந்த ஏனைய தரப்புகள் அனைத்தும் தமது விண்ணப்பங்களை வாபஸ் பெற்று, பிரான்ஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக, அனைத்து ஆவணப் பணிகளையும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளராக அப்போது இருந்தவர் செய்தார் என, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

கேள்விப்பத்திரங்கள் சமர்ப்பிப்பு

ஆரம்பத்தில், 65,000 வீடுகளை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன. அதற்கான விலை-கேட்புப் பிணைமுறியாக, 650 மில்லியன் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான மிகப்பெரிய தொகை காரணமாக, 2 நிறுவனங்களைத் தவிர ஏனைய அனைத்துத் தரப்பினரும், தமது விண்ணப்பங்களை வாபஸ் பெற்றனர்.

பின்னர், வீடுகளின் எண்ணிக்கை 6,000ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறைந்த விலை-கேட்புப் பிணைமுறித் தொகையுடன், புதிய கேள்விப்பத்திரங்களுக்குக் கோருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அமைச்சிடம் கோரினார்.

ஆர்வமுள்ள ஏராளமான தரப்புகள், குறைந்த செலவுடைய, செங்கல்லாலும் சீமெந்தினாலும் ஆன வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தயாராக இருந்த நிலையிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், எவ்விதப் பயனும் கிட்டவில்லை.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, தனது உள்ளூர் ஏற்பாட்டியல் பங்காளியாக, ஆர்செலொர்மிட்டல் நிறுவனத்தையே தெரிவுசெய்தது. இந்த நிறுவனம், அமைச்சருக்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது.

ஆன்செலொர்மிட்டல் நிறுவனத்தை விடக் குறைவான தொகைக்குக் கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்த இரண்டாவது நிறுவனமான ஈ.பி.ஐ-ஓ.சி.பி.எல் கொன்சோர்ட்டியம் நிறுவனமும், அமைச்சின் அதிகாரிகளுக்கு மாத்திரமே புலப்படுகின்ற சில காரணங்களுக்காக, தமது கேள்விப்பத்திரத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிறுவனம், தேவையான நிதியியல் வசதிகளை அளிக்கத் தவறிவிட்டன என, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

உயர் அழுத்தம்

நம்பத்தகுந்த தகவல் மூலங்களின்படி, நிராகரிக்கப்பட்ட இந்திய கூட்டு நிறுவனத்தின் உள்ளூர்ப் பங்காளர், அமைச்சர் தயா கமகேயுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால், அந்த நிறுவனம் மீது முன்வைக்கப்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாக, இச்செயற்றிட்டத்திலிருந்து அவர்கள் பின்வாங்க வேண்டியேற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. “கமகேயின் குடும்பம், எந்தளவுக்குச் செல்வந்தக் குடும்பம் என்பதை அறியும் போது, இவ்விடயத்தில் அமைச்சின் கருத்தை, எவரும் நம்பவில்லை.

விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர், பிரதமரின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோரடங்கிய அமைச்சரவை பொருளாதாரக் குழுவே, ஆரம்பத்தில் 65,000ஆகக் காணப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை, 6,000 பொருத்து வீடுகளென 2016இல் மாற்றியது” என, தம்மை அடையாளங்காட்ட விரும்பாத தகவல் மூலங்கள் தெரிவித்தன.

குறித்த இந்திய நிறுவனம், எதற்காக இதிலிருந்து விலகியது என அறிந்து கொள்வதற்காக, அமைச்சர் தயா கமகேயைத் தொடர்புகொண்ட போது, அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க, அமைச்சர் மறுத்துவிட்டார். ஆனால், அந்த நிறுவனம், தன்னால் உரிமைப்படுத்தப்படவில்லை எனவும், தனது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயே உரிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவையின் பொருளாதாரச் செயற்குழு, வீடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முடிவெடுத்த பின்னர், புதிதாகக் கேள்விப் பத்திரங்கள் கோரப்படாமைக்குக் காரணங்கள் என வினவியபோது, சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலனுக்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என, தகவல்கள் மூலங்கள் குறிப்பிட்டன.

நிபுணர் குழு

இந்நிலையில் பொறியியல், கட்டடக்கலை, திட்டமிடல், சமுதாய வீடமைப்பு, நிதியியல், பொருளாதாரம், சட்டம், சமுதாய ஒழுங்குபடுத்தல், செயற்றிட்ட முகாமைத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவ அறிவைக் கொண்ட, யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள தனிநபர்களின் குழுவொன்று, முன்மொழியப்பட்டுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு மாற்றீடான முன்மொழிவொன்றை, மே 19, 2015இல், அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம் கையளித்தது. உத்தியோகபூர்வமான நிதியியல் முன்மொழிவு, விரிவான அமுல்படுத்தல் முறைமை ஆகியவற்றுடன், அம்முன்மொழிவைச் சமர்ப்பிக்குமாறு கோரினார்.

“கேட்டுக்கொண்டதன்படி, உத்தியோகபூர்வமான நிதியியல் முன்மொழிவோடு, அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்தோம். இதற்கு, அமைச்சர் சமரவிக்கிரமவும் (பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர்) சரித்த ரத்வத்தயும், தமது பரிந்துரைகளை வழங்கினர். ஆனால் பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இன்னொரு செயற்குழுவால், எமது முன்மொழிவுகள் ஏதோவொரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டு, 6,000 பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது” என, வடக்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான நியாந்தினி கதிர்காமர் தெரிவித்தார்.

நியாந்தினியின் கருத்துப்படி, போதுமான காற்றோட்டம் இன்மை, மேற்பூச்சுக் காணப்படுகின்றபோது கூட உருக்கு அரிப்படைதல், போதுமான கூரைத் தாங்குதல் இன்மை, போதுமான அத்திபாரம் இன்மை, அடுப்பங்கரையும் புகைக்கூண்டும் இன்மை ஆகியன, பொருத்து வீடுகளின் பிரதான பிரதிகூலங்களாக உள்ளன.

“ஓட்டு வீடுகளையும் கதவுகளில் வலைத்தட்டுகளையும் கொண்டு கட்டப்படும் செங்கல் வீடுகள், வெப்பமான காற்று வெளியேற அனுமதிக்கின்றன. ஆனால் உருக்கு வீடுகளில், வலைத்தட்டுகள் இல்லை.

இவை, குளிரான காலநிலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட வீடுகள் ஆகும். ஒப்பந்தகாரருக்கு வழங்குவதற்காக, வெளிநாட்டுக் கடனொன்றைப் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என நாம் அறிகிறோம்.

நிதியமைச்சால் கூறப்படுவது போல, வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள் காரணமாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டால், இன்னொரு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதன் மூலமாக, பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்.

எங்களுடைய முன்மொழிவு, உள்ளூர் நிதியியல் வாய்ப்பைக் கொண்டிருந்தது. முன்னணி உள்ளூர் முதலீட்டு வங்கியிடமிருந்து, உத்தியோகபூர்வமான முன்மொழிவையும் சமர்ப்பித்திருந்தோம்.

“உள்ளூரில் நிர்மாணிக்கப்படும் செங்கல் வீடுகள், வேலைவாய்ப்பை வழங்குவதோடு, உள்ளூர்த் தொழிற்சந்தையை ஊக்கப்படுத்துவதோடு, பொருளாதாரத்துக்கும் பலனளிக்கும் என்ற நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருத்து வீடுகளை, அரசாங்கம் ஏன் தெரிவுசெய்ய வேண்டும்? 6,000 உருக்கு வீடுகளுக்காக அரசாங்கம் செலவிடப்போகும் பணத்தில், 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படலாம்.

புனர்வாழ்வு மற்றும் வீடமைப்பு அமைச்சால், வடக்கு, கிழக்கில் கடந்தாண்டு, ஒரு வீட்டுக்கு 850,000 ரூபாய் என்ற அடிப்படையில், 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. 

அப்படியாயின், ஒரு வீட்டுக்காக மேலதிகமாக 650,000 ரூபாய் செலவிடுவதற்கான தேவை என்ன? அந்த வீடு, நிலைத்திருக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, அதைப் பெறக்கூடியவர்கள், அதை விரும்பாத போதிலும், வேறு வழிகளின்றி அதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையே காணப்படுகிறது” என்று, நியாந்தினி தெரிவித்தார்.

காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருத்து வீட்டு மாதிரிகளில் இரண்டு வீடுகளுக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்த நியாந்தினி, அவற்றில் ஒன்றுக்குத் தளவாடங்கள் காணப்பட்டன எனவும், மற்றையதில் தளவாடங்கள் இருந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“முழுமையாகத் தளவாடமிடப்பட்ட உருக்கு வீடு, 2.1 மில்லியன் ரூபாய் அளவில் செலவாகுமெனவும், தளவாடமில்லாத வீடு, 1.5 மில்லியன் ரூபாய் அளவில் செலவாகுமெனவும் அரசாங்கம் கூறுகின்ற போதிலும், தளவாடமிடப்பட்ட வீட்டில், பிளாஸ்டிக் தளவாடங்களே காணப்பட்டன.

தளவாடமிடப்பட்ட வீடுகளில் காணப்படும் தளவாடங்களும் ஏனைய கருவிகளும், தரத்தில் குறைந்தவையாகக் காணப்படும் நிலையில், அவற்றுக்கு 600,000 ரூபாய்க்கும் மேற்பட்டளவு பணம் செலவாகாது” என்று, நியாந்தினி தெரிவித்தார்.
நெருங்கியவர்

தனியான ஒரு பல்தேசிய நிறுவனமான ஆர்செலொர்மிட்டல் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான முடிவுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனத்தின் உள்ளூர் முகவர் அமைப்பின் பணிப்பாளர்,  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் மாத்திரமல்லாமல், மேலும் பல முக்கியமான அமைச்சர்களுக்கும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நெருக்கமான ஒருவர் என்பதாலேயே, குறித்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

“ரவி வெத்தசிங்க என அழைக்கப்படும் ரவீந்திர புத்ததாச வெட்டசிங்க, அரசாங்கத்திலுள்ள பலமான சில அமைச்சர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கிறாரெனக் கூறப்படுகிறது.

கேள்விக்குட்படுத்தப்படக்கூடிய கடந்த காலத்தைக் கொண்ட வெத்தசிங்கவுக்கு எதிராக, குற்றவியல் நம்பிக்கை மீறல் ஒன்று, சுங்கம் சம்பந்தமானது ஒன்று ஆகியன உட்பட, 3 வழக்குகள் அவர் மீது காணப்படுகின்றன.

இவ்வாறான சர்ச்சைக்குரிய கடந்தகாலத்தை அவர் கொண்டிருப்பதன் காரணமாக, திட்டமிடப்பட்டுள்ள 6,000 பொருத்து வீடுகள், தரங்குறைந்தவையாக இருக்குமென, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் சில ஊழியர்கள் கவலையடைகின்றனர்” என, தகவல் மூலங்கள் தெரிவித்தன.

நீதிமன்ற ஆவணங்கள்

சரக்குப் போக்குவரத்து, சரக்கை விடுவித்தல், போக்குவரத்து, வேலைத்திட்டத்துக்கான ஆட்சேர்ப்பு, உள்ளூர்ப் பொருட்களை விநியோகித்தல், உப ஒப்பந்தக்காரர்களைத் தெரிவுசெய்தல், பொருத்து வீட்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்த மேற்பார்வை ஆகியவற்றைக் கையாளும் குறித்த ஏற்பாட்டியல் நிறுவனம்,குமார்கா பொறியியல் மற்றும் முகாமைத்துவ (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் (நிறுவனப் பதிவு இலக்கம்: பி.வி 109103) ஆகும்.

மேலதிக நிறுவனப் பதிவாளரால் உறுதிப்படுத்தப்பட்ட, நிறுவனப் பதிவாளர் ஆவணம், இப்பத்திரிகையிடம் உள்ளது. மே 26, 2017இல் பெறப்பட்ட இந்த ஆவணம், நிறுவனத்தின் முகவரியையும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் காட்டுகிறது. இதன்படி, நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகளில் வழங்கப்பட்ட மேற்படி தகவல்கள், சரியான முறையில் இல்லை என்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

அத்தோடு ரவி வெத்தசிங்க, கடந்த ஆட்சிக் காலத்தின் போது வெளிநாட்டில் வாழ்ந்தார் எனவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே நாட்டுக்குத் திரும்பினார் எனவும் காட்டும் நீதிமன்ற ஆவணங்களையும், இப்பத்திரிகை கொண்டுள்ளது.

“2001 முதல் 2004 வரை நீடித்த முன்னை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வெரஹெர, கெப்பெட்டிபொல, கஹகொல ஆகிய இடங்களில் காணப்பட்ட பணிமனைகளின் பொறுப்பாளராக இவர் இருந்தார். சுமார் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான 143 இ.போ.ச பஸ்களை ஒப்படைக்காமை குறித்தும், இந்தப் பணிமனைகளில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவற்றை ஊழியர்களுக்குச் செலுத்தாமை குறித்தும் (வழக்கு இல.: 5647/05) வழக்குகள் காணப்படுகின்றன. முதலாவது வழக்கு (HC 3604/2007) கொழும்பு மேல் நீதிமன்றத்திலும், இரண்டாவது வழக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்திலும் காணப்படுகின்றன. அவர் இல்லாத நிலையிலேயே வழக்குகள் நடைபெறுகின்றன. அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணைகளை, நீதிமன்றம் ஏற்கெனவே விடுத்திருந்தது” என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடியாணை வாபஸ்

தகவல்களின்படி, கட்டுப்படுத்தப்பட்ட பொருளான பித்தளைச் சீவல்களை, பிளாஸ்டிக் உடைகொழுவிகள் எனத் தெரிவித்து ஏற்றுமதி செய்து, இலங்கைச் சுங்கத்துக்கு 176 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

“மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு வழக்கில், தனது சேவைபெறுநர், இலங்கைக்கு மீளவும் வருவதற்குத் தயாராக இருக்கிறார் என, வெத்தசிங்கவின் சட்டத்தரணி, நீதிமன்றத்துக்கு அறிவித்தார். வெத்தசிங்க மீதான பிடியாணை, வாபஸ் பெறப்பட வேண்டுமென அவர் கோரினார். அவர் மீதான பிடியாணையை, மேல் நீதிமன்றம் வாபஸ் பெற்ற போதிலும், நீதிமன்றில் அவர் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டுமென வழங்கப்பட்ட திகதிக்குச் சில தினங்கள் முன்பாக, நாட்டை விட்டுத் தப்பியோட முயன்றபோது, 5647/05 என்ற வழக்கின் பிடியாணையின் கீழ், விமான நிலையத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்குப் பிணை வழங்குவதற்கு, மேல் நீதிமன்றம் மறுத்தது.

“பாரதுரமான நோயொன்றால் அவர் அவதியுறுகிறார் எனத் தெரிவித்து, நீதிமன்றத்தைத் தவறான வழிநடத்தக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படுகின்ற போதிலும், அவ்வாறான பாரதுரமான நோயெதுவும் கிடையாது எனவும், சந்தேகநபருக்கு உடனடியாக மருந்து வழங்குவதற்கான தேவை கிடையாது எனவும், கொழும்பின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன், ஏப்ரல் 28, 2015இல், நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

“பின்னர், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், குற்றப் புலனாய்வுப் பிரிவில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ், வெத்தசிங்கவுக்குப் பிணை வழங்கப்பட்டது” என்று, தகவல் மூலங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை, தனக்கு உடல்நலமில்லை எனத் தெரிவித்து, சுங்கம் தொடர்பான விசாரணையிலிருந்தும், வெத்தசிங்க தப்பித்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

“பித்தளைச் சீவல், கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என்பதால், அவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை இருந்தால், ஏற்றுமதிக் கட்டுப்பாட்டை அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருக்க வேண்டிய தேவை காணப்படுவதோடு, சரக்குத் தொகுதியின் பெறுமதியின் 50 சதவீதத்தை, செஸ் வரியாகவும் செலுத்த வேண்டும். பித்தளைச் சீவலை ஏற்றுமதி செய்வதற்கு, கைதிலிருந்து தப்பித்து, அப்போது சிங்கப்பூரில் காணப்பட்ட வெத்தசிங்க, உள்ளூரிலுள்ள தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பயன்படுத்தி, பிரபலமான ஒரு நிறுவனம் மூலம், பிளாஸ்டிக் பொருட்கள் எனத் தெரிவித்து, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்தார். இந்த மோசடியை, சுங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, அவ்வாறான 8 கொள்கலன்கள், ஏற்கெனவே சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டன. இரண்டு கொள்கலன்கள், பஹ்ரைனுக்கும் ஹொங் கொக்கும் அனுப்பப்படவிருந்தன.

“பிளாஸ்டிங் உடை கொழுவிகள் என, இலங்கையில் அவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், சிங்கப்பூர் ஆவணங்களில் அவை, பித்தளைச் சீவல்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. சுங்கத்துக்கு, எவ்வளவு தொகையை, வெத்தசிங்க மோசடி செய்துள்ளார் எனக் கணிக்கப்பட்ட போது, 176 மில்லியன் ரூபாய் எனக் கணிப்பிடப்பட்டது. இந்தத் தொகையைச் செலுத்துமாறு, இது தொடர்பாக விசாரணை செய்த குழுவால், வெத்தசிங்கவுக்கு உத்தரவிடப்பட்டது. சந்தேகநபர், இதற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்று, வழக்கை மீண்டும் விசாரணை செய்யக் கோரினார். சுங்கத் திணைக்கள அதிகாரிகள், அதற்கு தயாராக, தேவையான ஆவணங்களுடன் காணப்படுகின்றனர்” என, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

“சுங்கத் தீர்வையைத் தவிர்ப்பதற்காக, தேவையான வேலைத்திட்டத்தோடு சம்பந்தப்படாத பொருட்கள், நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை இடம்பெற்றிருந்தது. 6,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்துக்கான கேள்விப்பத்திரங்களை மீளக் கோருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை நிராகரித்ததோடு, சிவில் சமூகத்தினரால் வழங்கப்பட்டு, அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவையும் நிராகரித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, குற்றஞ்சாட்டப்படும் சந்தேகத்துக்கிடமான நடத்தை காரணமாக, நிதியியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த உள்ளூர் ஏற்பாட்டியல் நிறுவனத்துக்கு, உதவ விரும்புகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என, தகவல் மூலங்கள் குற்றஞ்சாட்டின.

தொடர்புகொள்ளப்பட்ட போது, இந்த ஊடகவியலாளரைச் சந்திப்பதற்குப் பொருத்தமான நேரத்தையும் இடத்தையும் தருவதாக, ரவி வெத்தசிங்க வாக்குறுதியளித்த போதிலும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடிந்திருக்கவில்லை. கடந்த வாரம், அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் நாட்டுக்கு வெளியே இருக்கிறார் என, அவரது அதிகாரிகளுள் ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சர் மறுக்கிறார்

எனினும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை, அவரது அமைச்சில் வைத்து, சில வாரங்களுக்கு முன் நாம் சந்தித்தோம். அப்போது, இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். “சுற்றுச்சூழலுக்கு நேயமான வேலைத்திட்டமாக அமையவுள்ள திட்டத்துக்காக, பிரான்ஸ் நிறுவனத்துடன், ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவுள்ளோம். வீடுகளை நிர்மாணிப்பதற்கு மணலையும் மரப்பலகைகளையும் வாங்க வேண்டிய தேவையிருக்காது என்பதால், சுற்றுச்சூழலை எம்மால் பாதுகாக்க முடியும். அரச கொள்முதல் வழிகாட்டுதலைப் பின்பற்றிய நாங்கள், உலகிலுள்ள மிகச்சிறந்த நிறுவனத்தைத் தெரிவுசெய்துள்ளோம். புதிதாக முளைத்த நிறுவனமொன்றுக்கு, நாங்கள் ஒப்பந்தத்தை வழங்கப்போவதில்லை. நாட்டின் நிதியியல் நிலையைக் கருத்திற்கொண்டு, 65,000 வீடுகள் திட்டத்துக்கு நாங்கள் செல்லவில்லை. இந்த வீடுகள், சிறப்பான களஞ்சிய அறை, நீர் வசதியுடன் கூடிய மலசலகூடங்களைக் கொண்டிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

6,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு, பல நிறுவனங்கள் முன்வந்த நிலையில், புதிதாக ஏன் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவில்லை எனக் கேட்டபோது, ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆர்செலொர்மிட்டல் நிறுவனத்தின் உள்ளூர் முகவர், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் பணியாற்றும் போது, ஒழுங்கற்ற கடந்தகாலத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அம்முகவர் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது எனக் கேட்டபோது, இந்தச் செயற்றிட்டத்தில், மறைவான நிகழ்ச்சிநிரல் எதுவும் கிடையாது என, அமைச்சர் குறிப்பிட்டார்.

“உள்ளூர், வெளிநாட்டு ஊடகங்களின் வாயிலாகவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வாயிலாகவும், கேள்விப்பத்திரங்களுக்குக் கோரிக்கை விடுத்தோம். 35 நிறுவனங்களிடமிருந்து விருப்பு வெளியான நிலையில், அவர்களது நிதியியல் கொள்ளவைக் கருத்திற்கொண்டு, 15 நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அவற்றில் 13 நிறுவனங்கள், மீளளிக்கப்படாத வைப்பை மேற்கொண்டதோடு, 8 நிறுவனங்கள், தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தன. 

“எட்டு நிறுவனங்களையும், அமைச்சரவையால் அமைக்கப்பட்ட பேரம்பேசல் செயற்குழுவும் செயற்றிட்டச் செயற்குழுவும் ஆராய்ந்த பின்னர், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கேள்விப்பத்திரப் பிணைகளைச் சமர்ப்பித்த இரண்டு நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அவற்றில், ஆர்செலொர்மிட்டல் நிறுவனம் மாத்திரம், உறுதிப்படுத்தப்பட்ட முழுமையான நிதியியல் வசதிகளை வழங்கியது.

வெற்றிபெற்ற ஒப்பந்தக் கோரிக்கையாளருக்கு, இத்திட்டத்தை வழங்குவதற்கான திட்டங்கள், தற்போது காணப்படுகின்றன” என்று, அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், வெத்தசிங்கவுடன், அமைச்சருக்குக் காணப்படும் நட்புக் குறித்துக் கேட்டபோது, அமைச்சர் அதை விரும்பியிருக்கவில்லை. வெத்தசிங்க, அமைச்சரின் அலுவலகத்திலேயே எப்போதும் காணப்படுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. “இந்த வெத்தசிங்க யாரென்று எனக்குத் தெரியாது.அலுவலக வேலைகளுக்காக, எனது அலுவலகத்துக்கு வந்திருக்கலாம். ஆனால், தனிப்பட்டரீதியில் சந்திப்பதற்காக, ஒவ்வொரு நாளும் அவர் வரவில்லை” என, அமைச்சர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொருத்து-வீட்டுத்-திட்டத்தில்-மறைமுக-நிகழ்ச்சிநிரல்/91-205655

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.